பகுதி பதிநான்கு : வேட்டைவழிகள் – 3
அஸ்தினபுரியின் அரசப்பேரவை பெரும்பாலும் அரசரின் பிறந்தநாளான மார்கழி இருள்நிலவு நாளில்தான் கூடும். அதைத்தவிர அரச முடிசூட்டுவிழா, இளவரசுப்பட்டமேற்பு விழா போன்ற விழாக்களை ஒட்டியும் பேரவை கூட முரசறிவிப்பு நிகழ்வதுண்டு. ஆகவே பேரவைக்கூட்ட அறிவிப்பு வந்ததுமே அஸ்தினபுரியின் மக்கள் பரபரப்பு கொண்டனர். கூடங்களிலும் சாலைமுனைகளிலும் சந்தைகளிலும் அதைப்பற்றிய பேச்சுகளே ஒலித்துக்கொண்டிருந்தன.
சகுனி அவரது ஒற்றர்கள் வழியாக அந்தப் பேச்சை வழிநடத்தினார். பாஞ்சால இளவரசியை மகதமன்னன் மணம்செய்து கொள்ளப்போவதாக முதலில் செய்தி பரவியது. எதிர்ச்செய்திக்கே உரிய விரைவுடன் அது நகரை மூடிக்கொண்டது. பதற்றமும் கொந்தளிப்புமாக மக்கள் கூச்சலிட்டனர். “அஸ்தினபுரி அழிந்தது” என்றார் ஒரு பெரியவர். “என்ன செய்கிறார்கள் இளவரசர்கள் இங்கே? ஆயிரம்கால் மண்டபத் தூண்கள் போல அரண்மனை நிறைந்து நின்றிருக்கிறார்களே? செல்லவேண்டியதுதானே? அங்கேபோய் மண்டை உடைந்து இறந்தால்கூட அதில் ஒரு மதிப்பு இருந்திருக்குமே?” என்று கொந்தளித்தார்.
“அவர்கள் என்ன செய்வார்கள்? இன்று அஸ்தினபுரியில் அவர்களின் இடம் என்ன? தாசிமைந்தர்களின் இடம். எந்த முகத்துடன் சென்று பாஞ்சாலனிடம் பெண் கேட்பார்கள்?” என்று சொன்னவன் சகுனியின் ஒற்றன். “பெண் கேட்டுச்சென்றபோது நாங்கள் சூதர்களுக்கு பெண்கொடுப்பதில்லை என்று பாஞ்சாலன் சொல்லிவிட்டானாமே” என்றவனும் ஒற்றனே. கொதிப்புடன் கூட்டத்தை விலக்கி முன்னால் வந்து “அப்படியா சொன்னான்? அஸ்தினபுரியின் இளவரசனை நோக்கி அப்படி சொன்னான் என்றால் அவன் யார்? எப்படி அவன் துணிந்தான்?” என்றார் இன்னொரு முதியவர்.
மதியத்திற்குள் பாஞ்சாலம் அஸ்தினபுரியை அவமதித்துவிட்டது என்றும், அவமதிப்பதற்காகவே மகதத்துக்கு பெண்கொடுத்தது என்றும், பாஞ்சால இளவரசியை அடைந்த மகத மன்னன் பெரும்படையுடன் அஸ்தினபுரியை வெல்ல வரப்போகிறான் என்றும் செய்திகள் பெருகின. ஒவ்வொருவரும் அதில் ஒரு கதையை சேர்த்தனர். கதைகளின் தொடர்ச்சியாக கதைகளை உருவாக்குவது மக்களுக்கு எளிதாக இருந்தது. பின்னர் கதைகளை உருவாக்குவதற்கான ஓர் அச்சு அவர்களுக்குக் கிடைத்தது
சகுனியின் மந்தண அறையில் அமர்ந்து “நாமே இச்செய்தியை பரப்பவில்லை என்றால் பாண்டவர்களைப்பற்றிய நற்செய்தி ஏதோ வந்துள்ளது என்ற கணிப்பே முதலில் எழும். அப்படி செய்தி ஏதும் வரவில்லை என்ற உண்மை தெரிந்ததும் ஏமாற்றம் மேலெழும். அந்த ஏமாற்றம் கௌரவர் மீதான சினமாக ஆகும்” என்றார் கணிகர். “வதந்திகள் காட்டுத்தீ போல. மிக வல்லமை வாய்ந்த படைக்கலம் அது, காற்றை அறிந்தவனுக்கு.”
மறுநாள் மகதன் பாஞ்சாலியை மணக்கவில்லை, சுயம்வர அறிவிப்புதான் வெளியாகியிருக்கிறது என்ற செய்தி பரவியது. அது அனைவரையும் ஆறுதல்படுத்தியதென்பதனால் முந்தைய செய்தியைவிட விரைவாக பரவியது. “ஆனால் சுயம்வரத்தில் பாஞ்சாலியை மகதன் மணப்பது உறுதி” என்றான் வணிகனாக வந்த ஒற்றன். “ஏனென்றால் நம் இளவரசர் பட்டம் சூட்டப்பட்டவர் அல்ல. அவரை பாஞ்சாலன் அவையிலேயே அமரச்செய்ய மாட்டான். அவரில்லை என்றால் அவையில் வெல்லமுடியாத கதாயுதம் ஏந்தி நிற்பவன் ஜராசந்தனே. அவன் பாஞ்சாலியை மணப்பான்.”
“நம் இளவரசர் ஏன் பட்டம் சூடக்கூடாது? தடுப்பது யார்?” என்றான் ஒருவன். “பிதாமகர் பீஷ்மர் விரும்பவில்லை என்று பேசிக்கொள்கிறார்கள்” என்றான் ஒரு படைவீரன். “ஏன்?” படைவீரன் அக்கறையற்ற பாவனையில் “அவர் விதுரரின் பேச்சையே கேட்கிறார். விதுரர் இளவரசர் முடிசூடக்கூடாதென்று விழைகிறார்” என்றான். நாலைந்து பேர் அவனைச்சுற்றி கூடிவிட்டனர். “ஏன்?” என்று ஒருவர் கேட்டார். “மூடர்களாக இருக்கிறீர்களே. மகதன் எப்படி பாஞ்சாலியை அடைய முடியும்? அவனை ஒரே அடியில் வீழ்த்தி வெல்ல யாதவகிருஷ்ணனால் முடியும். இன்று பாரதவர்ஷத்தில் பாஞ்சாலியை வெல்லும் திறனுடைய வீரன் அவனே.”
“ஆனால் அவன் ஷத்ரியனல்ல. அவன் யாதவன்” என்றான் ஒருவன். ”யாராக இருந்தால் என்ன? பாரதவர்ஷத்தை ஆளும் வல்லமை கொண்டிருந்தால் துருபதன் பெண்ணைக்கொடுப்பான்” என்றான் ஒருவன். “அதற்கு ஷத்ரியர் ஒப்பவேண்டும்” என்றான் இன்னொருவன். “அவையில் அனைவரையும் அவன் வெல்வான் என்றால் அவன் பெண்ணை பைசாசிக முறைப்படி தூக்கிக்கொண்டு செல்லமுடியுமே!” > “ஆம் அதற்கு வாய்ப்பிருக்கிறது” என்றனர் சிலர்.
“இங்கே அரசமைந்தர் என்ன செய்கிறார்கள்? உடனே படைகொண்டு கிளம்பவேண்டியதுதானே” “எப்படிக் கிளம்ப முடியும்? அரசரின் ஒப்புதல் வேண்டாமா?’ “ஏன்? அரசர் ஏன் ஒப்பவில்லை” ‘அரசர் ஒப்பவேண்டுமென்றால் விதுரர் ஒப்பவேண்டும்” ‘விதுரருக்கு இதில் என்ன?” “விதுரர் யாதவகுலத்து பெண்ணை மணந்தவர். அவரை நாம் எப்படி குறைசொல்ல முடியும்?” என்றபின் ஒற்றன் மேலே பேசாமல் கிளம்பிச்சென்றுவிட்டான். சிலநாழிகைக்குள் அஸ்தினபுரியே விதுரர்தான் அனைத்தையும் நிகழ்த்துகிறார் என்று பேசத்தொடங்கியது. விதவிதமான சதிவேலைகள் விரித்துரைக்கப்பட்டன.
“தேவகனின் தூதுடன் அவன் வந்தது முதலில் விதுரரின் மனைவி சுருதையை பார்க்கவே. மறுநாள்தான் அவன் யாதவ அரசி குந்தியையே சந்தித்திருக்கிறான்” என்றான் ஒருவன். “இது ஒரு மாபெரும் சதித்திட்டம். அஸ்தினபுரியை ஒதுக்கிவிட்டு யாதவப்பேரரசு ஒன்றை அமைக்கும் வேலை தொடங்கி எட்டாண்டுகள் கடந்துவிட்டன” என்றான் ஒரு குதிரைக்காரன். “அஸ்தினபுரி இப்போதே தோற்றுவிட்டது. நம் மைந்தர்கள் துவாரகைக்கு கப்பம் கொடுப்பார்கள். இங்குள்ள யாதவர்கள் அவர்களை அடேய் என்று அழைத்து சாட்டையாலடிப்பார்கள்.”
சதித்திட்டங்களைப் பற்றி பேசுவது அனைவருக்கும் பிடித்திருந்தது. அவர்கள் எந்த அளவுக்கு அதிகாரத்தை விட்டு வெளியே எளிய மனிதர்களாக இருந்தார்களோ அந்த அளவுக்கு மாபெரும் சதித்திட்டங்களை கற்பனை செய்தார்கள். சிக்கலான சதித்திட்டங்களை சொல்பவர் நுண்ணறிவுடையவராக, பிறர் அறியாததை அறிந்தவராக தோன்றினார். ஆகவே ஒருவர் ஒரு சதித்திட்டத்தை விளக்கி முடித்ததுமே முகத்தை தீவிரமாக்கிக்கொண்டு மெல்லியகுரலில் “ சரியாகச் சொன்னீர்கள் ,ஆனால் அதில் ஒரு சின்ன செய்தியை சேர்க்க விரும்புகிறேன்” என்று இன்னொருவர் இன்னொரு சதித்திட்டத்தை சேர்க்கத் தொடங்கினார்.
சதிவலை விரிந்தபடியே சென்றது. விதுரர் கிருஷ்ணனின் ஆதரவாளராக அமைந்து அஸ்தினபுரியை அவனை நோக்கி நடத்திச்செல்வதாக அவர்கள் சொன்னார்கள். “அஸ்தினபுரி யானை. அதைவைத்து கல்லெடுக்கச்செய்து அவன் தன் அரசை கட்டுகிறான்.“ அஸ்தினபுரியின் படைகளைக் கொண்டு யாதவன் மதுராவையும் கூர்ஜரத்தையும் வென்றான் என்றார்கள். “நம் களஞ்சியத்தில் மிகப்பெரிய துளை இருக்கிறது. அந்தத் துளை துவாரகையில் திறக்கிறது. சிந்தித்துப்பாருங்கள். வெறும் யாதவன், தோற்று நகரை விட்டு ஓடிச்சென்றவன், எப்படி இத்தனை குறுகிய காலத்தில் பாரதவர்ஷத்தின் மாபெரும் நகரம் ஒன்றை நிறுவினான்?”
“சென்ற பதினைந்தாண்டுகளில் அஸ்தினபுரியில் ஏதேனும் புதிதாக கட்டப்பட்டிருக்கிறதா? ஒரு காவல்கூடமாவது? ஏன்? ஏனென்றால் அஸ்தினபுரி துவாரகையை கட்டிக்கொண்டிருந்தது. கண்ணிழந்த அரசனின் முகத்துக்குக் கீழே நாடு திருடு போய்க்கொண்டிருந்தது.” ஒரு நச்சுச்சுழல் போல அந்த ஐயம் பெருகியது. ஒவ்வொரு ஐயமும் முதலில் முன்வைக்கப்படுகையில் திகைக்க வைப்பதாகவும் நீதியுணர்ச்சியை சீண்டி “சேச்சே, என்ன பேச்சு இது? விதுரர் இல்லையேல் இந்த நாடே இல்லை” என்று எவரையும் சொல்லவைப்பதாகவும் இருந்தது. ஆனால் மீண்டும் ஒருமுறை அதைக் கேட்டதும் “ஆம், அதில் உண்மை இருக்கலாம். நாம் என்ன கண்டோம்? நாம் எளிய குடிகள். நமக்கு சொல்லப்பட்டதை நம்பக்கூடிய நிலையில் இருப்பவர்கள்” என்றனர்.
அதிகாரத்தில் இருப்பவர்கள் போகங்களில் திளைக்கிறார்கள் என்று அவர்கள் நம்பினர். அந்த போகங்களை அவர்கள் தங்கள் பகற்கனவுகளால் நுரைத்து நுரைத்து பெருக்கிக் கொண்டனர். ஆகவே அவர்களனைவர் மேலும் பொறாமை கொண்டு வெறுத்தனர். அவ்வெறுப்பைக் கொண்டு அவர்களை புரிந்துகொள்ள முயன்றனர். “அரசனை அணுகுவதென்றால் என்ன? அவன் விரும்பும் அனைத்தையும் செய்வதுதானே? அதைச்செய்பவன் எதற்கும் துணிந்தவனாகவே இருப்பான். தேவை என்றால் அரசனையும் அழிப்பான். நாம் அவன் நமக்குக் காட்டும் முகத்தைத்தான் நம்புகிறோம். ஒருவன் நாற்பதாண்டுகாலமாக அரண்மனையின் பூனையாக சுற்றிவருகிறான் என்பதே சொல்கிறதே அவன் யார் என்று” என்றார் ஒரு கிழவர். அவரை சூழ்ந்திருந்தவர்கள் தலையசைத்தனர்.
மீளமீளச் சொல்லப்பட்டவை சலித்தபோது மேலும் பெரிய கதைகள் கிளம்பின. “பார்த்தனும் பாண்டவர்களும் கொல்லப்பட்டனர். அது சதி. அதைச்செய்தவர் யார்?” என்றார் ஒருவர். அனைவரும் அவரை நோக்கினர். அவர் நான்குபக்கமும் நோக்கியபின் “சொல்லுங்கள்! ஒரு கொலை நிகழ்ந்தால் அதில் நலன் பெறுபவர் அல்லவா முதலில் ஐயப்படவேண்டியவர். இன்று பாண்டவர்கள் இருந்திருந்தால் தருமர் அரசனாகியிருப்பார். அவர் நூலறிந்தவர். அறம் உணர்ந்தவர். அவருக்கு அமைச்சரின் சொற்களை நம்பி ஆட்சி செய்யவேண்டிய தேவை இல்லை” என்றார்.
“ஆனால் இன்று? விழியிழந்த அரசருக்கு அரண்மனைக்குள்ளேயே நடமாட ஐந்துபேர் தேவை. அவரை அமரச்செய்து ஆட்சி செய்வது யார்?” மூச்சொலிகள் மெல்ல எழுந்தன. “ஆனால்…” என ஒருவர் கமறும் தொண்டையுடன் சொல்லி “அப்படி சிந்தித்தால்…” என்றார். “நான் சொல்கிறேன் ஏன் என்று. அன்று தருமர் முடிசூடியிருந்தால் முதலில் என்னசெய்வார்? கருவூலக் கணக்கை கேட்பார். அப்படி கேட்டிருந்தால் துவாரகையின் மேல் ஒரு கல் ஏறி அமர்ந்திருக்காது….” என்றார்.
“சிந்தித்துப்பாருங்கள். விதுரரின் இரு மைந்தர்களும் எங்கிருக்கிறார்கள்? எங்கே? சொல்லுங்கள்!” என்று அவர் கேட்க மெல்லிய குரலில் ஒருவர் “துவாரகையில்…” என்றார். “அப்படியென்றால் அனைவருக்கும் அனைத்தும் தெரிந்திருக்கிறது. தெரிந்தே புறக்கணிக்கிறீர்கள்” என்று சொல்லி அவர் சிரித்தார். ”இனிமேலாவது புரிந்துகொள்ளுங்கள். உங்கள் குழந்தைகள் யாதவர்களின் நுகம் சுமக்கவேண்டுமா என்று முடிவெடுங்கள்.”
குலத்தலைவர்கள் நகருள் நுழைந்தபோது வீரர்கள் வழியாக அப்பேச்சு அவர்கள் காதுகளையும் அடைந்தது. திகைத்து முகம் சுளித்து “என்ன இது வீண்பேச்சு?” என்றனர். ஆனால் அப்படி ஓர் உணர்வு மக்களிடமிருப்பதே அவர்களை கட்டுப்படுத்தியது. அவர்கள் ஒவ்வொருவராக நகர் நுழைய நுழைய மக்கள் அவர்களை சாலைகளிலேயே மறித்து கூச்சலிட்டனர். ”பாஞ்சால இளவரசி வேண்டும். அஸ்தினபுரி படை கொண்டு செல்லட்டும். நாங்களும் உயிர்கொடுக்கிறோம். பாஞ்சால இளவரசி இன்றி எவரும் நகர்நுழையவேண்டியதில்லை” என்று கூவினர்.
“என்ன நடக்கிறது இங்கே?” குகர் குடித்தலைவர் மாத்ரர் கேட்டார். “மக்கள் வெறிகொண்டிருக்கிறார்கள்” என்றான் அவரது மைந்தன் சித்தன். ஒரு முதியவர் கைக்கோலைதூக்கி “குடித்தலைவர்களே, கேளுங்கள்! யாதவன் பாஞ்சாலியை அடைந்தான் என்றால் அதன்பின் நாங்கள் உயிர்வாழ்வதில் பொருளில்லை. இந்தக் கோட்டைமேல் ஏறி குதித்து இறப்போம்!. அஸ்தினபுரியை அசுரக்குருதிகொண்ட ஜராசந்தன் கைப்பற்றுவதைக் காண நாங்கள் உயிருடன் இருக்கமாட்டோம்” என்று குரல் உடைய கூவினார்.
மக்களின் வெறி ஏறி வரும்தோறும் யாதவர்கள் அஞ்சினர். தொடக்கத்தில் யாதவகிருஷ்ணனுக்காக வாதிட்டனர். ஆனால் உணர்ச்சிகளின் விரைவு அவர்களை அச்சுறுத்தியது. எவரும் எதையும் கேட்கும் நிலையில் இல்லை. தாங்கள் நம்புவதை பிறர் உடைத்துவிடக்கூடாதே என்ற கொதிப்புடன் இருந்தனர். ஆகவே வாதங்களில் மூன்றாவது வரியிலேயே வசை எழுந்தது. பிறர் சொற்களைக் கேட்காமல் கூச்சலிட்டனர். வாதங்களில் ஒற்றை வரியை பிடித்துக்கொண்டு திரித்துப் பொருள்கொண்டு இளக்காரம் செய்தனர். தனிப்பட்டமுறையில் வசைபாடினர்.
யாதவர்கள் மெல்ல அமைதியானார்கள். அது மேலும் அவர்கள் மேல் சினம் கொள்ளச்செய்தது. “அத்தனைபேருக்கும் அனைத்தும் தெரிந்திருக்கிறது, பார்த்தீர்களா? அவர்களிடமிருக்கும் அந்த அமைதியை காணுங்கள். அவர்கள் குற்றவுணர்ச்சி கொள்கிறார்கள். நாம் அனைத்தையும் புரிந்துகொண்டதைக் கண்டு அவர்கள் அஞ்சுகிறார்கள். அஸ்தினபுரிமேல் யாதவனின் படைகள் எழும் நேரம்கூட இவர்களுக்குத் தெரிந்திருக்கும்…”
“ஒற்றர்கள். நம் கோட்டைகளில் வளைபோட்டு கொடுக்கும் எலிகள்.” ஒருகுரல் . எவரேனும் “ஆனால் அவர்கள் இங்கே பிறந்தவர்கள்” என்றால் உடனே ”அப்படியென்றால் இந்தப்பழிகளைக் கேட்டு அவர்கள் ஏன் தலைகுனிந்து செல்கிறார்கள்?” என்று இளைஞர்கள் கூவினார்கள். “முதலில் யாதவர்களை நாம் கண்காணிக்க வேண்டும். அவர்கள் நம் குடித்தலைவர்கள் முன் வந்து நிற்கட்டும்.” ஒரு கிழவர் “அவர்களுக்கு இந்நகர் ஒரு பொருட்டே அல்ல. தருமன் நாடுவிட்டுச் சென்றபோது இந்நகரை உதறி கூடவே செல்லத்தலைப்பட்டவர்கள் என நாம் அறிவோம்” என்றார். அந்நினைவு சரியான தருணத்தில் எழுந்ததனால் அனைவரும் திகைப்புடன் சொல்லிழந்து ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டனர்.
அந்நிலையில் யாதவகிருஷ்ணனின் கருடக் கொடியை அஸ்தினபுரியின் கிழக்குக் கோட்டைவாயில் முன்னால் நின்ற அரசமரத்தின் கிளையில் யாரோ கட்டினார்கள். காலையில் கொடியை வீரர்கள் எவரும் காணவில்லை. அதற்குள் வணிகர்கள் கண்டுவிட்டனர். கொடி உடனே அகற்றப்பட்டது. ஆனால் மதியத்திற்குள் கோட்டையின் நான்கு வாயில்களிலும் நூற்றுக்கணக்கான யாதவர்கள் திரண்டு சென்று யாதவக் காவலர்களின் உதவியுடன் கருடக்கொடிகளை ஏற்றிவிட்டனர் என்ற செய்தி பரவியது. ஷத்ரியர்களும் வணிகர்களும் தெருக்களில் கூடி கூச்சலிட்டனர். “இது அஸ்தினபுரி. ஹஸ்தியின் நகரம். இது யாதவர்களுக்குரியது அல்ல. அதை அவர்களுக்கு உணர்த்துவோம்”
“யாதவர்களை பாதுகாப்பவர்களை கண்டுபிடியுங்கள்!” என்று ஒரு வணிகர் கூச்சலிட்டார். “சொல்லுங்கள்! இது எவருடைய நகரம்? இதை காக்க உயிர்கொடுக்கப்போவது யார்?” என்று முதிய ஷத்ரியர் ஒருவர் உடைவாளை உருவி மேலே தூக்கி ஆட்டி கூச்சலிட்டார். “அஸ்தினபுரி அழிகிறது… யாதவர்களால் இது கொள்ளையடிக்கப்படுகிறது. ஷத்ரியக்குருதி கெட்டுவிட்டது!“ குடித்தலைவர்கள் அந்தக் கொந்தளிப்பின் நடுவே தங்கள் மூடுவண்டிகளில் அமர்ந்து மெல்ல நகர்ந்து அரசவை நோக்கி சென்றனர்.
மாலை அவைகூடுவதற்கு முன்னரே அனைத்தும் முடிவாகிவிட்டன. குடித்தலைவர்கள் அவர்கள் தங்கியிருந்த மாளிகைகளின் சோலையிலேயே கூடி பேசிக்கொண்டனர். “பாஞ்சால இளவரசி வந்தாகவேண்டும். பிறிது எதையும் கேட்க அவர்கள் சித்தமாக இல்லை. இந்நகரமே அந்த ஒற்றை எண்ணத்துடன் நம்மை சூழ்ந்திருக்கிறது” என்றார் வணிகர்குலத்தலைவரான குபேரர். “துரியோதனருக்கு இளவரசுப்பட்டம் அளிக்கவேண்டும். வலுவான படையுடனும் பெரும்பரிசுச்செல்வத்துடனும் அவரும் கர்ணதேவரும் காம்பில்யத்துக்கு கிளம்பவேண்டும். அதைத்தான் நம்மிடம் குடிகள் ஆணையிடுகிறார்கள்.”
“இளவரசுப்பட்டம் சூட்டி முடிசூட்டவேண்டியது அரசர். நாமல்ல” என்றார் வேளாண்குடித்தலைவரான நதீஜர். “ஆம். ஆனால் இன்று அரசர் முடிசூட்ட மறுப்பாரென்றால் அது அஸ்தினபுரிக்கு எதிரான விதுரரின் சதியாக மட்டுமே பொருள்படும். அதை நம்மில் எவர் ஏற்றுக்கொண்டாலும் நமது குடிகளை நாம் சென்று சந்திக்க முடியாது.” மாத்ரர் சோர்ந்த குரலில் “மக்களின் உணர்ச்சிகள் குவிந்துவிட்டால் அதை நாம் வெல்ல முடியாது. இனி தர்க்கங்களுக்கு இடமில்லை” என்றார்.
“ஏன் தர்க்கம் செய்யவேண்டும்?” என்று சினத்துடன் கேட்டபடி ஷத்ரியர்குலத்தலைவர் பத்ரசேனர் எழுந்தார். “துரியோதனர் பட்டம் சூடிச் சென்று பாஞ்சாலத்தை அச்சுறுத்தி அவ்விளவரசியை வென்று வரவேண்டும். அதைச்செய்வது மட்டுமே நம் நாட்டைக் காக்கும் ஒரே வழி. அதைச் செய்ய எவருக்கு தடை இருக்க முடியும்? துவாரகை அங்கே எழுகிறது. இங்கே பாஞ்சாலம் அதனுடன் கைகோர்க்கிறது. நடுவே அரசனற்ற அஸ்தினபுரி தோள்மெலிந்த சூதனின் சொற்களைக் கேட்டு சோர்ந்துகிடக்கிறது.”
“நாம் குடித்தலைவர்கள் மட்டுமே” என்றார் நதீஜர். “ஆம், ஆனால் நம் குடிகளே இவ்வரசு. இன்று நான் அவையில் பிறிது எதையும் பேசப்போவதில்லை. எழுந்து ஒன்றை மட்டும் சொல்லப்போகிறேன். பிதாமகர் பீஷ்மரின் முகத்தை நோக்கி. இன்று மாலை இதே அரசப்பேரவையில் துரியோதனர் முடிசூட்டப்படவேண்டும்.” நதீஜர் ”முடியா?” என்றார். ”ஆம், மணிமுடி. இளவரசுப்பட்டமெல்லாம் இனி தேவையில்லை. அந்தப்பசப்புகளுக்குப் பின்னால் இருந்த சதிகளை எல்லாம் நானும் அறிவேன். இனி அதை நாங்கள் பொறுத்துக் கொள்ளப்போவதில்லை. இனி சூதனின் ஆணையை நாங்கள் ஏற்கமாட்டோம்.”
பிற குலத்தலைவர்கள் அச்சத்துடன் சமைந்து அமர்ந்துவிட்டார்கள். ”பீஷ்மரை எதிர்ப்பது தந்தையை எதிர்ப்பது போல” என்றார் நதீஜர். “ஆம், ஆனால் தந்தையின் மூடத்தனம் நம் அரசையும் நம் குடிகளையும் அழிக்கும் என்றால் நம் மக்களை அடிமைகளாக்குமென்றால் அந்தத் தந்தையின் நெஞ்சில் வேலை ஏற்றி நிறுத்துவதும் ஷத்ரியனாகிய மைந்தனின் கடமையே. இனி முடியாது. இன்று மாலை துரியோதனர் அரசராக ஆக வேண்டும். இன்றே அவர் கிளம்பி பாஞ்சாலம் செல்லவேண்டும்” என்றார் பத்ரசேனர்.
“பீஷ்மர் எவர் ஆணையையும் ஏற்பவர் அல்ல” என்றார் மாத்ரர். பத்ரசேனர் “வேண்டாம். அவரது ஆணையை நாங்களும் ஏற்க மாட்டோம். இன்று அந்தச் சூதன் ஒரு சொல் மாற்றுக்கருத்து சொன்னான் என்றால் சபையிலேயே எழுந்து அந்த காட்டிக்கொடுக்கும் வஞ்சகனை வெட்டிப்போடுவேன், ஆம், அரசர் முன்னால் வெட்டுவேன். என்னை பீஷ்மர் கொல்லட்டும். அவை நடுவே என் சடலம் கிடக்கட்டும். ஷத்ரியர் அறியட்டும், இச்சதியைக் கண்டபின் நான் உயிர்வாழவில்லை என்று. அவர்கள் முடிவெடுக்கட்டும்.” என்று கூவினார்
பத்ரசேனரின் பெருங்குரல் அவர்களை நடுங்கச்செய்தது. இருகைகளையும் தூக்கி அவர் அறைகூவினார் “இன்று அவையில் ஒரே முடிவைத்தான் எடுக்கமுடியும்… வேறெதையும் நான் ஒப்ப மாட்டேன். குடித்தலைவர்களாகிய உங்களிடமும் சொல்கிறேன். எந்தக்குடி இந்த முடிவை எதிர்க்கிறதோ அதை யாதவர்களுக்கு ஆதரவான குடியாகவே என் குடி கொள்ளும். எவர் ஒரு எதிர்ச்சொல் சொன்னாலும் அந்த அவையிலேயே அக்குடிக்கு எதிராக ஷத்ரியப் பெருங்குடி தீராப்போரை அறிவிக்கும். அந்தக்குடிகளில் ஒரு உயிர் எஞ்சுவது வரை ஷத்ரியர் போரை நிறுத்த மாட்டார்கள்.” தன் உடைவாளை உருவி தன் வலக்கையை வெட்டி பெருகிய குருதியை தூக்கி தரையில் சொட்டியபடி “கொற்றவை மேல் ஆணை” என்றார் .
யாதவர் குலத்தலைவரான நசீகர் “நான் பத்ரசேனரின் ஒவ்வொரு சொல்லையும் ஆதரிக்கிறேன். என் குடி அவருடன் இருக்கும்” என்றார். பிறர் “நாம் அனைவரும் ஒரே குரலில் சொல்வோம். இன்றே துரியோதனர் முடிசூடியாகவேண்டும். இன்றிரவே பாஞ்சாலத்துக்கு படைகிளம்பியாகவேண்டும். பாஞ்சால இளவரசி அஸ்தினபுரிக்கு வந்தாகவேண்டும். வேறெந்த சொல்லையும் கேட்க நாம் சித்தமாக இல்லை. மறுத்து ஒரு சொல்லை எவர் சொன்னாலும் அவர் நம் முதல் எதிரி. அவரைக் கொன்று அக்குருதியைக் கண்ட பின்னரே அடுத்த சொல்லை நாம் பேசுவோம். அச்சொல்லை அவர் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே நாம் எழுந்து கொலைவஞ்சினம் உரைத்து அவைவிட்டு நீங்குவோம்” என்றனர். குடித்தலைவர் எண்மரும் “ஆம்” என்றனர். “அது பீஷ்மரே ஆனாலும்” என்றார் பத்ரசேனர். குடித்தலைவர்கள் “ஆம்” என்றனர்.
அரைநாழிகைக்குள் ஒற்றர் வழியாக அதை விதுரர் அறிந்தார். வாழ்வில் முதல்முறையாக அவரது கட்டுப்பாட்டை மீறி அச்சமும் துயரும் வெளிப்பட்டது. “தெய்வங்களே!” என்று கூவியபடி நடுங்கும் கைகளை தொழுவதுபோல நெஞ்சுடன் சேர்த்துக்கொண்டார். தொடைகளும் தோள்களும் அதிர்ந்தன. கழுத்து நரம்பு இழுபட்டு துடிக்க உதடுகளை இறுக்கிய கணமே மெல்லிய கேவல் வெளிப்பட்டது. கண்களிலிருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது. அதன்பின் அவர் அதை கட்டுப்படுத்தவில்லை. முகத்தை கைகளில் தாங்கி அழுதார். கூப்பிய கைகள் வழியாக கண்ணீர் வழிந்தது.
ஒற்றன் அவரை நோக்கியபடி நின்றான். அவன் முகத்தில் எந்த மாற்றமும் தெரியவில்லை. விதுரர் தன்னை உணர்ந்து அவனை திரும்பிப்பாராமல் சுவடி அறைக்குள் சென்றுவிட்டார். கைக்குச் சிக்கிய சுவடிக்கட்டு ஒன்றை எடுத்து பிரித்துக்கொண்டு அமர்ந்து வாசிக்க முனைந்தார். எழுத்துக்கள் நீர்மேல் அசைவதுபோல தெரிந்தன. சுவடிகளை வெறுமனே புரட்டிக்கொண்டிருந்தபோது ஓர் உலுக்கல் போல யாதவகிருஷ்ணனின் நினைவு வந்தது. கைகள் நடுங்க சுவடியை வைத்துவிட்டார்.
அவன் அவரை முகம் நோக்கி மிரட்டியபோது ஒருகணம் நெஞ்சு நடுங்கிப்போயிற்று என்றாலும் அது வெறும் சொற்கள் என்றே பின்னர் தோன்றியது. அஸ்தினபுரியின் மக்களை அவர் பிறந்த நாள்முதல் அறிந்திருக்கிறார். நூற்றுக்கணக்கான தருணங்களில் நகரம் அவரது அறிவால் மட்டுமே காக்கப்பட்டிருக்கிறது. ஒரு தலைமுறைக்காலம் உண்மையில் அவர்தான் ஆட்சி செய்தார். ஒரு முறைகூட முறைமை மீறப்பட்டதாக, எவருக்கேனும் அநீதி இழைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததில்லை. பல்லாயிரம்பேர் அவரது திறம்பிறழாத நீதியை உணர்ந்து கைகூப்பி அழுது அவர் காலில் விழுந்திருக்கிறார்கள். அவரது துலாமுள்ளை நம்பி எளியவர்கள் ஒவ்வொரு நாளும் கூப்பிய கைகளுடன் அரண்மனை முற்றத்தில் வந்து நிற்கிறார்கள்.
ஆனால் வெறும் ஒரு ஐயத்தைக்கொண்டு அனைத்தையும் உடைத்து அழித்துவிட்டிருக்கிறார்கள். வெளியே அவர் மேல் கடும் வெறுப்புடன் கூச்சலிடும் அத்தனைபேரும் அவரது நீதியின் நிழலை அடைந்தவர்கள். ஆனால் அனைத்தையும் உணர்வெழுச்சியால் மறந்துவிட்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் அப்படித்தானா? அவர்கள் இந்தத் தருணத்தை எதிர்நோக்கி இருந்தார்களா? அவரது நீதியுணர்ச்சியையும் கருணையையும் உணரும்போதே அவர்கள் உள்ளத்தின் ஒரு மூலையில் இக்கசப்பு ஊறத் தொடங்கிவிட்டதா?
பெருந்தன்மை சினமூட்டுகிறது. கருணை எரிச்சலை அளிக்கிறது. நீதியுணர்ச்சி மீறலுக்கான அறைகூவலை அளிக்கிறது. மானுடன் தன்னுள் உறையும் தீமையை நன்கறிந்தவன். இன்னொருவனின் தீமையை காண்கையில் அவன் மகிழ்கிறான். அவனை புரிந்துகொள்ள முடிகிறது. அவனை கையாள முடிகிறது. பிறன் நன்மை அவனை சிறியவனாக்குகிறது. அதை புரிந்துகொள்ளமுடியாத பதற்றம் எழுகிறது. சீண்டப்படும் சீற்றம் எழுகிறது. எளியமனிதர்கள் என்றால் சிறிய மனிதர்கள் என்றே பொருள். மக்கள்! மானுடம்! ஆனால் ஒருவருடன் ஒருவர் முரணின்றிக் கலக்கும் மிகச்சிறிய மனிதர்களின் திரள் அல்லவா அது? அதன் பொதுக்குணம் என்பது அந்தச்சிறுமையின் பெருந்தொகுதி மட்டும்தானா?
மக்களை வெறுக்காமல் ஆட்சியாளனாக முடியாது என்று ஒரு சொல்லை அவர் அடிக்கடி கேட்டிருந்தார். சௌனகருக்குப் பிடித்தமான சொல் அது. “கடிவாளத்தை விரும்பும் குதிரை இருக்கமுடியாது அமைச்சரே. அது பொன்னாலானதாக இருந்தாலும்” புன்னகையுடன் ஒருமுறை சௌனகர் சொன்னார். “எங்கோ ஒருமூலையில் கணவனை வெறுக்காத பத்தினியும் இருக்கமுடியாது.” விதுரர் “இவ்வகைச் சொற்களை உருவாக்கிக் கொள்வது நம்மை அறிஞன் என்று காட்டும். அதை கேட்பவன் அடையும் திகைப்பில் நம் ஆணவம் மகிழ்கிறது” என்றார். “இருக்கலாம்” என்று சொல்லி சௌனகர் சிரித்தார்.
மக்களுக்காக வாழ்பவர்கள் பெரும்பாலும் மக்களை அறியாதவர்கள். அவர்களைப்பற்றிய தங்கள் உணர்ச்சிமிக்க கற்பனைகளை நம்புபவர்கள். அந்நம்பிக்கை உடையாத அளவுக்கு வலுவான மடமை கொண்டவர்கள். புனிதமான மடமை. தெய்வங்களுக்குப் பிடித்தமான மடமை. அந்த மடமையில் சிக்கி தெய்வங்களும் அழிகின்றன. ராகவ ராமன் தெய்வத்தின் மானுட வடிவம் என்கிறார்கள். அவன் மக்களின் மாண்பை நம்பியவன். அவர்கள் விரும்பியபடி வாழ முயன்றவன். அவர்கள் துயரையும் அவமதிப்பையும் மட்டுமே அவனுக்களித்தனர். அவன் செய்த பெரும் தியாகங்களை முழுக்க பெற்றுக்கொண்டு மேலும் மேலும் என்று அவனிடம் கேட்டனர்.
மனைவியை மைந்தரை இழந்து வாழ்ந்தான். சரயுவில் மூழ்கி இறக்கையில் என்ன நினைத்திருப்பான்? இதோ ஏதுமில்லை இனி, அனைத்தையும் அளித்துவிட்டேன் என்று அவன் அகம் ஒருகணம் சினத்துடன் உறுமியிருக்குமா? சரயுவின் கரையில் நின்றிருப்பார்கள் மக்கள். அவன் உண்மையிலேயே தன்னை முழுதளிக்கிறானா என்று பார்த்திருப்பார்கள். ஏதும் எஞ்சவில்லை என்று கண்டபின் மெல்ல, ஐயத்துடன், “என்ன இருந்தாலும் அவன் இறைவடிவம்” என்றிருப்பார்கள்.
அந்த ஒரு வரியில் இருந்து அவனைப்பற்றிய கதைகளை சூதர்கள் உருவாக்கத் தொடங்கியிருப்பார்கள். அக்கதைகளை கேட்டுக்கேட்டு தன் குற்றவுணர்வை பெருக்கிக்கொள்வார்கள் மக்கள். அக்குற்றவுணர்வின் கண்ணீரே அவனுக்கான வழிபாடு. அவன் தெய்வமாகி கருவறை இருளின் தனிமையில் நின்றிருப்பான்.
விதுரர் நெடுமூச்சுடன் மீண்டும் கிருஷ்ணனை எண்ணிக்கொண்டார். மக்களைப்பற்றி இத்தனை அறிந்த ஒருவன் வேறில்லை. ஆனால் அவன் மக்களை விரும்புகிறான். அவர்களுக்காக தன் வாழ்க்கையை அளிக்கிறான். ஒவ்வொரு கணமும் முழுமையாக மன்னித்துக்கொண்டே இருந்தாலொழிய அது இயல்வதல்ல. இந்நிலையில் அவன் இருந்திருந்தால் என்ன செய்திருப்பான். இவர்கள் அவனை கல்லால் அடித்துக் கொன்றிருந்தால் எப்படி எதிர்வினை ஆற்றியிருப்பான்? அப்போதும் அவன் இதழ்களில் அந்தப் புன்னகை இருந்திருக்கும்.
அவர் உடல் சிலிர்த்தது. அக்கணம் அதை முழுமையாக உணர்ந்தார். ஆம், புன்னகைதான் செய்திருப்பான். அந்தப்புன்னகை. தன்னை அறியாமலேயே எழுந்துவிட்டார். அக எழுச்சியால் அவரால் அமர முடியவில்லை. அறைக்குள் நிலைகொள்ளாமல் சுற்றிவந்தார். ஆம், அந்தப் புன்னகை. தெய்வங்களே, அந்தப்புன்னகையை எப்படி காணத் தவறினேன்? இத்தனை காவியம் கற்றும் அதை காணமுடியவில்லை என்றால் நான் வெறும் ஆணவக்குவை மட்டும்தானா?
அந்தப்புன்னகை அந்தப்புன்னகை என்று சொல்லிக்கொண்டே இருந்தார் விதுரர். அச்சொல் தன்னுள் மழைத்துளி சொட்டும் தாளமென ஓடிக்கொண்டே இருப்பதை உணர்ந்து திகைத்தார். அவன் புன்னகையை கண்முன் கோட்டைச்சுவரை நிறைத்து வரையப்பட்ட பேரோவியம் போல கண்டார். ஒளிமிக்க உதயம் போல. அல்லது அலையடிக்கும் ஆழ்தடாகம் போல. உள்ளிழுத்து மூழ்கடித்துவிடும் புன்னகை.
வெண்முரசு அனைத்து விவாதங்களும்