அன்புள்ள ஜெ,
உங்கள் இணையதளத்தில் நீங்கள் ஆன்மீகம் போலி ஆன்மீகம் என்ற தலைப்பிலே எழுதிய கட்டுரைகளைப்பற்றி எனக்கு சில சந்தேகங்கள் இருந்தன. ஆனால் அவை விவாதத்துக்கு அல்ல என்று சொல்லிவிட்டீர்கள். கட்டுரைகளின் முடிவில் எழுதிய குறிப்பும் அதை மீண்டும் சொல்லியிருந்தீர்கள். இது குழப்பம் அளிக்கிறது. எல்லாவற்றையும் விவாதித்துதான் நீங்களே வந்திருப்பீர்கள். இப்போது விவாதிக்கக்கூடாது கேட்டுக்கொண்டு போ என்று சொல்வது போல் உள்ளது. இது சரியா என்று சந்தேகமாக இருக்கிறது. அந்தக் கட்டுரைகளில் உள்ள விஷயங்களை விவாதிக்கவில்லை. ஆனால் ஏன் விவாதிக்கக் கூடாது என்று சொல்கிறீர்கள் என்று மட்டுமாவது சொல்லலாம் இல்லையா?
செல்வராஜன்
***
அன்புள்ள செல்வராஜன்,
இந்த விஷயத்தை நீட்டிக்கொண்டுசெல்லவேண்டாமென எண்ணினாலும் மீண்டும் இதேபோன்ற பல கேள்விகள் எழுவதனால் இந்தப் பதில். இணையதளத்தில் பின்னூட்டம்பகுதியில் எழுதப்பட்டவற்றுக்கும் சேர்த்துத்தான். இது தனிப்பட்ட முறையில் எவரையும் விமரிசனம் செய்வதல்ல என்று சொல்ல விழைகிறேன்.
நித்ய சைதன்ய யதி
நான் நித்ய சைதன்ய யதி உட்பட அனைவரிடமும் கடுமையாக விவாதித்து வளர்ந்தவன் என்பதை எப்போதுமே சொல்லியிருக்கிறேன். நித்யாவே என்னை ‘சந்தேகத் தாமஸ்’ என்றுதான் சொல்லியிருக்கிறார். ஆனால் விவாதிக்கக்கூடிய விஷயங்கள் விவாதிக்க முடியாத விஷயங்கள் என இருவகை உண்டு. அந்த வேறுபாடும் நித்யா வழியாகவே தெரிந்தது.
ஒருநாள் நித்ய சைதன்ய யதி ஒரு மாணவருக்கு Self Realization குறித்து சொல்லிக்கொண்டிருந்தார். சில சொற்கள்தான். வழக்கம்போல நான் உடனே ‘அப்படியென்றால் என்ன? இவருக்கு இதுவரை இவர் யாரென்று தெரியாதா?’ என்று கேட்டேன். நித்ய சைதன்ய யதி சிரித்துக்கொண்டு ‘சரி நீ யார்?’ என்றார் ‘ஜெயமோகன்’ என்றேன். ‘சரி அப்புறம்?’ ‘எழுத்தாளன். மனிதன்’ என்றேன். வேடிக்கையாகச் சிரித்தபடி ‘சரியாகச் சொன்னாய். உனக்கு இனி Self realization தேவையே இல்லை. நன்றாக தெரிந்திருக்கிறது. இவருக்குத்தான் குழப்பம், பாவம்’ என்று சொல்லிவிட்டார்.
பல வருடங்கள் கழித்து அந்த நிகழ்ச்சியை நினைவில் மீட்டிய போது நித்ய சைதன்ய யதி என் அறியாமையை எதிர்கொண்ட விதம் ஆச்சரியமளித்தது. அவர் என்ன பேசிக்கொண்டிருந்தார் என்பது எனக்கு கொஞ்சம்கூட தெரியாத ஒன்று. என் அறிதலின் தளத்திலேயே அது இல்லை. ஆனால் நான் பாய்ந்து விவாதிக்கச் சென்றேன். அப்போது என்னை அவர் சமாளிப்பதற்கான ஒரே வழி மென்மையாக தவிர்த்துவிடுவது மட்டும்தான்.
இத்தகைய சந்தர்ப்பங்களில் நித்ய சைதன்ய யதி வேடிக்கையாகப் பேச்சை மாற்றி விவாதத்தை முழுமையாகத் தவிர்த்துவிடுவார். ஒரு இளம் துறவி இன்னொரு மடத்திலிருந்து வந்திருந்தார். ஏகப்பட்ட நூல்களைச் சொல்லிக்கொண்டே இருந்தார். நித்ய சைத்ன்ய யதி ”அறியபப்டும் எதிலும் நம்முடைய ஓரு அம்சம் சென்று படிகிறது. அதையே நாம் அறிகிறோம்” என்று சொற்பொழிவில் சொன்னபோது அவர் ”இல்லை குரு, அறிபடு பொருளில் சென்று படிவது நம் ஆத்மா அல்ல. அகங்காரம்தான். அதை ரங்கநாதானந்தா சொல்கிறார்” என்றார்
நித்ய சைதன்ய யதி படு சிரியஸாக ”இருக்கலாம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு மெட்டீரியல் அல்லவா? உதாரணமாக கண்ணாடி எதனுடனும் வேதிவினை புரிவதில்லை” என்று சொல்லிவிட்டு மேலே பேச ஆரம்பித்தார். நான் கைகளுக்குள் வாயைப்பொத்தி புன்னகைசெய்தேன்.
Self Realization குறித்த பேச்சின் என்னை தவிர்த்த அன்று மாலையே வேதாந்த வகுப்பில் நான் ‘சத்யம் சிவம் சுந்தரம்’ என்ற கருதுகோளைப்பற்றி அவரிடம் முரண்பட்டு கேட்க எனக்காக விரிவாக விவாதித்தார் நித்ய சைதன்ய யதி. அந்த விவாதம் அதற்கு மறுநாள் காலைநடையிலும் மதியத்திலும் நீடித்தது. அவரிடம் நான் நடத்திய உரையாடலில் [காலச்சுவடு இதழில் வெளியானது. ‘இலக்கிய உரையாடல்கள்’ [எனி இண்டியன்] என்ற தொகுதியில் அது உள்ளது] அந்த விவாதத்தின் சுருக்கம் உள்ளது. உண்மை, நன்மை, அழகு மூன்றும் ஒன்றாகவே இருக்கமுடியும் என்பதை நான் மறுத்து வாதாடியிருந்தேன். அவர் அதற்கான விளக்கத்தை அளித்தார்.
ஒரு விஷயம் பொதுவாக விவாதிக்கப்படுகிறது, இன்னொன்று விவாதிக்கப் படவில்லை. ஏன்? விவாதிக்கப்பட்ட விஷயத்தில் புறவயமான ஓரு தளம் உள்ளது. அந்த புறவயமான தளத்தை வைத்தே விவாதம் நடக்க முடிகிறது. எந்த ஒரு விஷயத்தையும் தத்துவமாக குறுக்க முடிந்தால் அது பொது விவாதத்திற்குரியதுதான். தத்துவம் என்பது அனைத்து அறிவுத்துறைகளிலும் உள்ள அடிப்படையான தர்க்கங்களின் தொகுதி. எது தர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறதோ அதை தத்துவமாக குறுக்கலாம்.
உண்மை நன்மை அழகு மூன்றுமே ஒன்றின் மூன்று பரிமாணங்கள் மட்டும்தானா என்ற கேள்வியை அடிப்படையான ஒரு தத்துவத் தருக்கமாக ஆக்கிக்கொள்ளலாம். அதை ஓவ்வொருவரும் தன் வாழ்க்கையை வைத்து விவாதிக்கலாம். சாத்தியமான தளத்தில் முடிந்தவரை முரண்பட்டு விவாதிப்பது மேலும் மேலும் கூர்மையான புரிதலை உருவாக்கும். தத்துவம் என்பதே விவாதம் மூலம் மட்டுமே தொடர்புறுத்தக்கூடிய ஒரு துறை. சாராம்சத்தில் தத்துவமாக ஆகக்கூடிய எந்த அறிவுத்துறையும் அப்படியே.
முதல் விஷயத்தில் எது விவாதத்திற்கு அப்பால் உள்ளது? நித்ய சைதன்ய யதி பேசிக்கொண்டிருந்த அந்த தளம் என் அறிதல்வட்டத்திலேயே இல்லை. அது என்னவென்றே எனக்கு தெரியாது. அதாவது அங்கே புறவயமான பகுதியே இல்லை. பேசிக்கொண்டிருந்த இருவரும் பகிர்ந்துகொண்டிருந்த மிக அந்தரங்கமான ஒர் அறிதல் அது. என்னவென்று தெரியாமலேயே நான் மறுத்துப்பேச ஆரம்பித்துவிட்டேன்.
‘நான் யார்” என்ற கேள்விக்கு ‘நான் இது அல்ல, இதுவும் அல்ல’ என்று ஒவ்வொன்றாக நிராகரித்துக்கொண்டே சென்று ‘அப்படியானால்?’ என்ற கேள்விமுன் திகைத்து நின்றுவிட்ட பிறகுதான் நான் அந்த மாணவர் உணர்ந்த அந்தரங்கமான அந்த தவிப்பை அடையாளம் காணமுடியும். அதன் பின்னரே Self realization என்ற சொல்லை என்னால் புரிந்துகொள்ள முடியும். அந்தப்புரிதல் இல்லாமல் அவரிடம் நான் விவாதிக்கச் சென்றால் வெறும் சொற்களே விரயமாகும்.
ஒரு விவாதம் நிகழ வேண்டுமென்றால் விவாதிக்கும் இரு தரப்பினருக்கும் நடுவே பிரமாணங்கள் பொதுவானவையாக இருக்க வேண்டும் என்று நம் மரபு சொல்கிறது. பிரத்யட்சம், அனுமானம், சுருதி என்ற மூன்று பிரமாணங்கள். பிரமாணங்கள் என்றால் அறிவடிப்படைகள். நேர்க்காட்சி, ஊகம், முன்னறிவு என தமிழில் சொல்லலாம்
நான் புலன்கள் மூலம் அறிவதையே நீங்களும் அறியவேண்டும். நான் ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு எந்த அடிப்படையில் ஊகங்களை நிகழ்த்துகிறேனோ அந்த அடிப்படையை நீங்களும் ஏற்றாக வேண்டும். நான் அதுவரையிலான அறிதலாக எவற்றை கொண்டிருக்கிறேனோ அவற்றை ஓரளவேனும் நீங்களும் கொண்டிருக்கவேண்டும். இல்லாவிட்டால் நாம் விவாதிக்க முடியாது
நான் மேலே சொன்ன முதல் உதாரணத்தில் Self realization என்று நித்ய சைதன்ய யதி சொன்ன சொல்லுக்கு அவர் உத்தேசித்தது அல்ல நான் உத்தேசிப்பது. அவர் உத்தேசித்த அந்த அனுபவம் நான் முற்றிலும் அறியாத ஒன்று. ஆக முதல் அறிவடிப்படையே பொருந்தவில்லை. விவாதிக்க முகாந்தரமே இல்லை. ஆகவே தான் அவர் தவிர்த்துவிட்டார்.
அங்கே நான் செய்வதற்கொன்றே இருந்தது. அந்த உரையாடலைக் கூர்ந்து கவனித்து அந்த அனுபவமண்டலத்திற்குள் நுழைய முடியுமா என்று பார்ப்பது. அல்லது அதை முழுக்க நிராகரித்துவிட்டு என் இடத்திலேயே இருந்துகொள்வது. என் இளமையின் காரணமாக நான் இரண்டாவதையே செய்தேன். அந்த அனுபவத்திற்கு நான் சென்று சேர மேலும் சிலவருடங்களாகியது.
இதுதான் விவாதத்தின் எல்லை. பெரும்பாலான ஆன்மீக அனுபவங்கள் அகவயமானவை. அவற்றை புறவயமாக விவாதிக்க முடியாது. ஏன் ஆன்மீகம் என்று செல்லவேண்டும். ஒரு கதையை நான் எப்படி உள்வாங்கி எழுதினேன் என்று நான் விவரிக்கிறேன் என்றிருக்கட்டும். நீங்கள் என்னிடம் விவாதிக்கமுடியுமா என்ன? அது என் சொந்த அனுபவம் அல்லவா?
நீங்கள் செய்வதற்கு ஒன்றே உள்ளது. ஒன்று, நீங்கள் அதைக்கூர்ந்து கவனித்து நான் சொல்லும் அனுபவத்திற்குள் நுழைய முயலலாம். அல்லது அதை நிராகரித்துவிடலாம். அதேபோன்றதே ஆன்மீக அனுபவமும்.
இவ்வாறு ஆன்மீக அனுபவம் அந்தரங்கமானதாக இருப்பதனால் அது மூடநம்பிக்கையாக இருந்தாலும்கூட அதை விவாதிக்கமுடியாதுதான். ஆன்மீகமான நம்பிக்கைகளையும் வழக்கங்களையும் ஒருபோதும் பேசி மாற்ற முடியாது.ஆகவே விவாதிப்பதில் பொருளில்லை.
ஏன்? இரண்டுமே இரண்டு தளங்கள் என்பதனால்தான். ஒன்று அனுபவம், இன்னொன்று கருத்து. நீங்கள் வாழ்ந்தடைந்த அனுபவம் ஒன்றை இன்னொருவர் மறுத்து வாதிட்டால் மாற்றிக்கொள்வீர்களா என்ன? தவறோ சரியோ ஏதோ ஓர் அனுபவம் வழியாகவே ஆன்மீகமான எண்ணங்களை மனிதர்கள் வந்தடைகிறார்கள். வேறு ஓர் அனுபவம் மட்டுமே அதை மாற்றும். அதாவது ஆன்மீகம் அனுபவம் மூலமே கைமாறப்பட முடியும். சொற்கள் மூலம் அல்ல.
அப்படியானால் எதற்காகச் சொற்கள்? அனுபவங்களை விளங்கிக்கொள்ள, விரித்துக்கொள்ள தேவையான ஓர் அடிப்படையை சொற்கள் அளிக்க முடியும். சொற்களில் உள்ள தர்க்கம் அல்ல. இங்கே தர்க்கத்துக்கு இடமே இல்லை. அச்சொற்கள் மூலம் முன்வைக்கப்படும் அனுபவ தளத்தை ஒருவர் தன் நுண்ணுணர்வால் அடைந்தாரென்றால் அவருக்கு அது ஒரு திறப்பாக அமையும்.
அதாவது இங்கே சொற்கள் ஒரு புறவயமான தர்க்கமாக உங்களை நோக்கி வரவில்லை. ஒரு மனிதனின் அந்தரங்கமான அறிதலை சுமந்து வருகின்றன. அந்த மனிதனை நோக்கி நீங்கள் வருவதற்கான ஒரு வழி. அவனது அனுபவதளத்தையும் உங்கள் அனுபவதளத்துடன் சேர்த்துக்கொள்வதற்கான ஒரு உத்தி. அவ்வளவுதான்.
இந்நிலையில் அச்சொற்களை மறுத்து வாதாடப்புகுந்தால் அந்த அனுபவதளத்தை நிராகரித்துவிடுகிறீர்கள். அதை நோக்கி உங்கள் தர்க்கத்தை முன்வைக்கிறீர்கள். நீங்கள் ஏற்கனவே நின்றுகொண்டிருக்கும் அனுபவதளத்திற்கு அதை இழுத்துச் செல்கிறீர்கள். அகவயமான அனுபவங்களைப் பற்றி விவாதிப்பதென்பது விவாதிப்பவர் இருவரும் சம்பந்தமில்லாத இரு திசைகளை நோக்கி பேசிக்கொண்டிருப்பதாகவே முடியும்.
என்னுடைய இணைய தளத்தில் எல்லாவற்றையும் விவாதிக்கவே முன்வைக்கிறேன். விவாதிக்கவே அழைக்கிறேன். ஆனால் அத்தகைய விவாதம் மூலம் இந்த குறிப்பிட்டக் கட்டுரைகளை எதிர்கொள்ள முயன்றால் அவர்களுக்கு எதுவுமே கிடைக்காது என்பதே என்னுடைய முன்னெச்சரிக்கை. அந்த கருத்துக்களுக்குப் பின்னால் என் அனுபவ மண்டலம் உள்ளது. அங்கே வந்துசேரும் சிலருக்கு மட்டுமே அது உதவும்.
உதாரணம் சொல்கிறேன். இந்த பின்னூட்டங்களில் இணைய நண்பர் சந்திரமோகன் [சந்தனார்] ஒரு பின்னூட்டமிட்டிருக்கிறார். ‘நித்யானந்தரை [காஞ்ஞாங்காடு] ஒரு நல்ல மனிதராக கொண்டால் போதும், ஏன் ஞானியாக எண்ணவேண்டும், கடவுளுக்கும் நமக்கும் நடுவே மனிதர்கள் எதற்கு?’ என்கிறார்.
இந்த மொத்தக்கட்டுரைகளே அவரது கேள்விக்கான பதில்களும் விளக்கங்களும்தான். ஆனால் அந்தக் கட்டுரைகளுக்குப் பின்னர் அந்தக் கேள்வியை அபாரமான நம்பிக்கையுடன் கேட்கிறார்.
இந்தக் கட்டுரைகளில் சொல்லப்பட்டிருப்பனவற்றையே சுருக்கிச் சொல்கிறேன். பிரபஞ்சத்தின் பிரம்மாண்டமான இயக்கத்தின் நியதிகள் மானுடமனத்தை பேதலிக்கச் செய்கின்றன. வாழ்க்கை குறித்த மனிதனின் பதற்றம் அவ்வாறு உருவாவதே. எளிய மனம் அந்த பேரியக்கத்தை அறிய முடியாதென்பதனால் அந்த பிரம்மாண்டத்தின் முன் தன்னை ஒப்புக்கொடுத்து சரணடைகிறது. அதுவே கடவுள் கோட்பாடு. கடவுள் பக்தி பெரும்பாலான மதங்கள் முன்வைக்கும் வழி.
பௌத்த சமணமதங்களும், உயர்தளத்தில் இந்துமதமும் இணையான இன்னொரு வழியை முன்வைக்கின்றன. முதல் வழியில் நிறைவடையமுடியாத அறிவுத்தளம் கொண்டவர்களுக்காக. அந்த தளத்தில் உள்ள விடையே முக்தி அல்லது விடுதலை என்பது. இதற்கும் இறைவனுக்கும் சம்பந்தமில்லை. இந்த பிரபஞ்சப்பேரியக்கத்தை முமையாக உணர்ந்துகொள்வதன் மூலம் அது உருவாக்கும் பதற்றத்தையும் துயரையும் வெல்வதே வீடுபேறு அல்லது நிர்வாணம் அல்லது மோட்சம்.
இந்த தளத்தில் பக்திக்குப் பதிலாக கூரிய ஞானத்தேடல்தான் தேவையாகிறது. சமரசமில்லாத சலியாத தேடல். அதற்கு நம்மை அறிந்து நமக்கு வழிகாட்டும் குருநாதர்கள் இன்றியமையாதவர்கள். நாம் தேடுவது எதையோ அதை அடைந்தவர்கள் அளவுக்கு நம்மை வழிகாட்டி நடத்தும் எவரும் இருக்க முடியாது.
முழுமையறிவை தேடுபவர் சாதகர். அவரது பணி சாதனா. அடைந்தவர் யோகி அல்லது ஞானி அல்லது பரமஹம்சர் அல்லது போதிசத்வர். அத்தகைய மனிதர்கள் மானுடம் தேடும் முழுமையறிவின் உதாரணங்கள். அவர்களின் இருப்பே அதற்கான சான்றாகும். ஆகவே அவர்கள் தேவைப்படுகிறார்கள். நித்யானந்தர் அவர்களில் ஒருவர்.
சந்திரமோகன் கேட்கும் கேள்விக்கும் நான் பேசும் தளத்திற்கும் சம்பந்தமே இல்லை என்பதை வாசகர் கவனிக்கலாம். நித்யானந்தர் கடவுளுக்கும் மனிதர்களுக்கும் நடுவே உள்ள பூசாரி அல்ல. அவர் பேசியது கடவுள் பக்தியைப்பற்றியும் அல்ல. இந்த தளத்தில் கடவுள் இல்லை. அல்லது இங்கே கடவுளுக்கு வேறு பொருள். நித்யானந்தருக்கும் சமூக சேவை செய்யும் நல்ல மனிதர்களுக்கும் நடுவே ஏராளமான வேறுபாடு உண்டு.
ஏன் மனிதர்களை ‘மேலே’ வைத்து பார்க்கவேண்டும்? சந்திரமோகனை விட ஐன்ஸ்டீன் மேலானவர் என்பதை அவர் ஒப்புக்கொள்வார் என நினைக்கிறேன். ஏனென்றால் சந்திரமோகனுக்கு இருப்பதை விட இன்னும் கொஞ்சம் விரிந்த பிரபஞ்சஞானம் கொண்டவர் அவர். ஒரு’நல்ல மனிதர்’ மட்டுமல்ல அவர். நித்யானந்தர் அவரது தளத்தில் ஐன்ஸ்டீன் போல மேலும் பலமடங்கு விரிந்து பிரபஞ்சத்தின் முழுமையை நோக்கி தன் பிரக்ஞையை விரித்துக்கொண்டவர். அவரது பரிபூரண சமநிலை அந்த நிலையில் மட்டுமே அடையத்தக்கது.
ஆகவே அவர் ஞானம் தேடுபவர்களுக்கு ஒரு முன்னுதாரணம். குரு சன்னிதானம். அவர்கள் அவரை வணங்குவார்கள். நினைவில் இருத்துவாகள். கடவுள்பக்தி மட்டும் போதும் என்பவர்களுக்கு நித்யானந்தரால் எந்த பயனும் இல்லைதான். ஆகவே அவர்கள் அவரும் ஒரு குட்டிக் கடவுளாக இருக்கக் கூடாதா என்று எண்ணுகிறார்கள். அதனால்தான் அவரை அவர்கள் மாயமந்திரங்கள் செய்பவராக எண்ண விழைகிறார்கள்.
இதுதான் நான் என் கட்டுரையில் சொன்ன விஷயங்கள். ஆனால் பின்னூட்டம் சம்பந்தமே இல்லா திசை நோக்கிச் சொல்லப்படுகிறது. இது அறிவுத்திறனின் சிக்கலால் அல்ல. இது ஒரு தத்துவக் கட்டுரையாக இருந்திருந்தால் சந்திரமோகன் மிக வலுவான மறுப்பை முன்வைத்து விவாதித்திருக்கமுடியும். இது ஆன்மீகம் சார்ந்தது. இது பேசும் தளத்தில் அவருக்கு அனுபவமே இல்லை. ஆகவே நான் எத்தனை திட்டவட்டமாக சொன்னபோதும்கூட அவருக்கு முக்தி, சாதனா, குரு, யோகி என்ற எந்தக் கருத்துமே சென்று சேரவில்லை. அவர் ஏற்கனவே எண்ணியிருக்கும் கடவுள், பூசாரி என்ற இடத்தில் நின்றுகொண்டே பேசுகிறார். இத்தகைய விவாதங்களின் பயனின்மை குறித்து நான் சொன்னதற்குக் காரணம் இதுவே.
இதையே கோமதி சங்கர் அவர்களின் பின்னூட்டம் குறித்தும் சொல்லமுடியும். நான் என் கட்டுரையில் ஓர் அனுபவ தளத்தை முன்வைக்கிறேன். அந்த அனுபவ தளத்திற்கு வர முயல்வதற்குப் பதிலாக அவர் வாசித்த நூல் ஒன்றில் வேறு மாதிரி இருந்ததே என்கிறார். அந்த விவாதத்தை பல திசைகளில் நீட்டலாம். நூற்றுக்கணக்கான நூல்கள் உள்ளன. அவற்றில் நூற்றுக்கணக்கான கோணங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றாக எடுத்து ஏற்கவோ மறுக்கவோ செய்வதல்ல இங்குள்ள வேலை.
சரி, அவ்வாறு ஏற்கவோ மறுக்கவோ என்ன அடிப்படை? நமக்கு சுய அனுபவ தளம் இருந்தால் அது மட்டும்தானே அடிப்படையாக அமைய முடியும்? அவ்வாறு இல்லாத பட்சத்தில் ஒரு நூலை வைத்து இன்னொன்றை மறுக்கலாமன்றி வேறென்ன செய்ய முடியும்? சுய அனுபவம் இருந்தால் அதன் பின் நூல்களில் என்ன சொல்லப்பட்டிருந்தால் என்ன? இங்கே ஒரு அனுபவம் சொல்லப்படுகிறது, அதனுடன் தொடர்புகொண்டு நம் அனுபவமாக அதை ஆக்கிக்கொள்ள முடியுமா என்பதே கேள்வி.
மேலைச்சிந்தனையில் 1930களில் உருவான ஒன்று புறவயத்தர்க்கவாதம் [Logical positivism]. புறவயமாக தர்க்கபூர்வமாக நிறுவப்படக்கூடிய ஒன்றே உண்மையாக இருக்கமுடியும் என்று அது வாதிடுகிறது. அந்தப்பார்வை இங்கே இன்றைய விவாதங்களில் மேலோங்கி உள்ளது. ஏனென்றால் அது அறிவியலின் அடிப்படைத் தளங்களில் உள்ள பார்வை. அறிவியலின் உயர்நிலையில் அது இல்லை. ஆகவே எல்லா இடங்களிலும் அது ஓங்கி வருகிறது.
நான் சொல்வது அதற்கு நேர் எதிரான ஒரு பார்வை. புறவயத்தர்க்க பார்வையின் வழியாக அறியமுடியாத ஓர் உண்மையின் தளம் உண்டு. அதையே மெய்யியல் என்கிறேன். அது நுண்ணுணர்வால் உணரப்படுவது. உருவகங்களால் சொல்லப்படுவது. மீபொருண்மை [metaphysics] என அடையாளப்படுத்தப்படுவது. அதில் தர்க்கம் இரண்டாம் பட்சமானதே.
[பாஸிட்டிவிஸம் இங்கே நேர்க்காட்சிவாதம் என்று மொழியாக்கம் செய்யப்படுகிறது. நேர்க்காட்சிவாதம் என்றால் இந்திய மரபின் பிரத்யக்ஷவாதம் மட்டும்தான். அதில் தர்க்கம் இல்லை. அதை புலனறிவுவாதம் என்று மொழியாக்கம் செய்யலாம். நிரூபணவாதம் [Empiricism] என்பதும் வேறானது. புறவயத்தர்க்கவாதம் நிரூபிக்க கோரவில்லை. தர்க்கமுறையையே கோருகிறது]
*
நான் சொல்வதை எவரும் ஏற்கவேண்டும் என்று இங்கே சொல்லவில்லை. இன்றைய சூழலில் சிலருக்கு அவர்களின் நம்பிக்கையில் ஓர் விரிசல் விழுந்திருக்கலாம். அவர்களிடம் பல ஆழமான கேள்விகள் எழுந்திருக்கலாம். அவர்கள் இந்தச் சொற்கள் வழியாக இந்த அனுபவத்திற்குள் வர முடிந்தால் சில திறப்புகள் நிகழலாம் என்பதற்கு அப்பால் இதனால் பயனில்லை என்பதே என் எண்ணமும். அதையே சொல்லியிருக்கிறேன்.
விவாதிக்கவேண்டாமென்று சொன்னது நிராகரிப்புக்கான உரிமை உண்டு என்ற அடிக்குறிப்புடன்தான். மிகப்பெரும்பாலானவர்கள் நிராகரிப்பார்கள் என நான் அறிவேன். இந்த எதிர்வினைகளிலேயே நிராகரிப்பே அதிகம்.
ஏன் இவற்றை இப்படி புறவயமாக எழுதக்கூடாதென நினைக்கிறேன் என்றால் இத்தகைய விஷயங்களை பகிர்ந்துகொள்வதற்கு சில மனநிலை சார்ந்த நிபந்தனைகள் உள்ளன. ஆர்வம் இல்லாதவர்களிடம் சொல்லலாகாது. இந்த தளம் நோக்கி மனத்தில் ஒரு அடிப்படை திறப்பு இல்லாதவர்களிடம் சொல்லக்கூடாது. சொல்லப்படுபவருக்கும் சொல்பவருக்கும் இடையே ஆழமான நம்பிக்கை இல்லாமல் சொல்லக்கூடாது. சொல்லப்படும் சந்தர்ப்பமும் சூழலும் சிறப்பாக அமையாது சொல்லக்கூடாது
இல்லாமல் சொல்லப்படும்போது அதன் சாராம்சமான அனுபவதளத்திற்குப் பதில் வெறும் சொற்களே சென்று சேர்கிறது. விவாதம் மூலம் அந்த அனுபவ தளம் மேலும் நிராகரிக்கப்படுகிறது. தனிப்பட்ட முறையில் ஒருவரிடம் நம்பிக்கை இல்லாத போது அனுபவங்கள்மீதும் நம்பிக்கை இல்லாமலாகிறது.
கண்ணாடி அறைக்குள் நின்று பேசுபவரின் அசைவுகள் கேலிக்குரியதாக ஆவதைப்போன்றதே இதுவும். அவர் என்ன சொனனரென்று தெரியாதபோது அவர் கோமாளியாக ஆகிறார். இந்த தளத்தைச் சாராத ஒருவருக்கு இவ்விஷயங்கள் வேடிக்கையோ விசித்திரமோ அபத்தமோ ஆக தோன்றக்கூடும்.
இருந்தாலும் சொல்லப்படும்போது சிலருக்கு, மிகமிகச் சிலருக்கு மட்டும், பயனுள்ளவையாக இருக்கும் என்று தோன்றியதனால் எழுதினேன். அவ்வளவே. முடித்துக்கொள்வோம்.
ஜெ