சினிமா – கடிதம்

ஜெயமோகன் அவர்களுக்கு,

­‘இந்திய வேளாண்மையும் உழைப்பும்’ என்னும் பதிவில் ‘எழுத்தையோ கலையையோ நம்பி வாழ்பவர்கள் சமரசம் நோக்கி செல்ல நேரிடும்’ என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். இதை பற்றியே இரண்டு நாளாக யோசித்து கொண்டு இருந்தேன். நாலைந்து இலக்கியப்புத்தகங்களை படித்து விட்டு இங்கு இருக்கும் சினிமாவே சரி இல்லை அதனால் கலைப்படம் எடுத்து தமிழ் சினிமாவையே மாற்றி அமைக்கப்போகிறேன் என்று அசட்டுத்தனமாக நினைக்கும் கூட்டத்தில் நான் இல்லை. எந்த ஒரு கருத்தையும் அதன் வரலாற்றுடன் வைத்துப்பார்க்க வேண்டும் என்பது தங்களின் பால பாடம் அல்லவா ?

தமிழ் சினிமாவின் 100 ஆண்டு கால வரலாற்றையும் (நன்றி: தியோடர் பாஸ்கரன்) நம் தமிழ் சமுதாயம் சினிமாவை எப்படி எதிர் கொள்கிறது என்பதையும் வைத்துப்பார்க்கும் பொழுது அப்படி ஒரு அசட்டுத்தனமான முடிவுக்கு யாரும் வரமுடியாது. தமிழ் சினிமா என்றும் பொது மக்களின் ரசனையை வைத்தே இயங்கிக்கொண்டு இருக்கிறது.

ஆனால் இன்றைய மல்டிபிளக்ஸ் சினிமாக்கள் ரசிகர்களின் ரசனையை தரம் பிரிக்க உதவுகிறது என்றே நினைக்கிறேன். முதலில் ஒரு திரைஅரங்கில் சராசரியாக 700 முதல் 800 இருக்கைகள் இருக்கும். அதில் பெண்கள்,இளைஞர்கள், சிறுவர்கள்,முதியவர்கள் என்று பல்வேறு விதமான மக்கள் வந்தால்தான் திரைஅரங்கம் நிறையும்(அன்று குடும்பத்துடன் சினிமாவுக்கு செல்வது என்பது ஒரு திருவிழா). அவர்கள் அனைவரையும் திருப்திப்படுத்தும் விதமாக அனைவருக்கும் ஒரு காட்சி வைக்க வேண்டும் (ஒரு காணொளியில் தாங்களே இதை சொல்லி இருக்கிறீர்கள்). இத்திரைப்படங்கள், திரைக்கதை ஆசிரியர்கள் Syd Field, Robert mckee, Joseph Campbell போன்றவர்கள் கூறும் genre என்னும் திரை வகைப்பாட்டுக்குள்ளேயே வராது.

ஆனால் இன்றைய மல்டிபிளக்ஸ் திரைஅரங்குகளில் ஒரு திரைஅரங்கில் 100-150 இருக்கைகளே இருக்கும். அதற்கான மக்கள் வந்தாலே போதுமானது(இவர்களுக்கு சினிமாவுக்கு செல்வது அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சியே). அதனால் எந்த காதல் காட்சியும் இல்லாமல், பாடல்கள் இல்லாமல் குறைந்த செலவில் ஒரு படம் எடுத்து மல்டிப்ளக்சில் மட்டும் திரையிட்டாலே லாபம் பார்க்க முடியும். இதனால் தனி தனி genre-ல் படம் எடுக்க முடியும் (action படம் பிடிப்பவர்கள் ‘screen 1’, drama படம் பார்பவர்கள் ‘screen 2’). அதற்கு சரியான உதாரணமாக ‘6 மெழுகுவர்த்திகள்’ படத்தை கூறலாம். காதல் காட்சிகளோ, பாடல் காட்சிகளோ இல்லாமல் இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாகவே ஓடி, ஓர் வலுவான சமுதாய பிரச்சனையையும் சுட்டிக்காட்டியது. இது குறைந்த பண செலவில் எடுத்ததாலேயே வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

கண்டிப்பாக இதைப்போன்ற படங்கள் அதற்கான ரசிகர்களை சென்று சேர்ந்தாலே போதும், வணிக ரீதியாக வெற்றி பெரும்(நான் கடவுள், பரதேசி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், pizza etc.,). இங்கு சினிமா கலையோ-இலக்கியமோ-அறிவு தளமோ அல்ல. சினிமா அறிவு தளத்திற்கும் மக்களின் பொது ரசனைக்கும் ஓர் சமரச புள்ளியே. அந்த சமரசத்தின் வழியாகவே மக்களின் ரசனையைப்படிப்படியாக அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லவேணும் இலக்கியமும் கலையும் சினிமாவுக்கு தேவை என்றே நினைகிறேன்.அப்படிப்பட்ட படங்களையே நானும் எடுக்க விரும்புகிறேன்.இதை ஒரு சமரச விழ்ச்சி என்று நான் நினைக்கவில்லை ஒரு வளர்ச்சி என்றே நினைகிறேன். இப்படிப்பட்ட யதார்த்தம் மீறிய இலச்சியவாதம் வாழ்வில் இல்லாவிட்டால் வாழ்வில் வேறு என்ன இருக்கிறது ?

பின்குறிப்பு: திரைப்படம் குறித்தும் திரைக்கதை எழுதுவது குறித்தும் தங்களிடம் உரையாட வேண்டும். ஆனால் அதை விட முக்கியமான பல வேலைகள் உங்களுக்கு இருப்பதும் தெரிகிறது. விஷ்ணுபுரம் விழாவில் சந்திப்போம்.

இப்படிக்கு,

ரா. பாலு மகேந்திரா.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 64
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருது இந்திரா பார்த்தசாரதி