எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,
கடந்த சில ஆண்டுகளாக நான் தங்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். தங்களால் அடையாளம் காட்டப்பட்டப் பின்னரே சில முக்கிய எழுத்தாளர்களை வாசித்து அறிந்தேன். அதே போல ‘நவீன இலக்கியம்’ புத்தகத்தில் தாங்கள் கொடுத்த பட்டியல் படி பல எழுத்தாளர்களையும் வாசித்துவருகிறேன். இதை ஏன் சொல்ல வருகிறேன் என்றால் தாங்கள் கை காட்டும் ஒருவரை வாசித்து அறிய என் போன்ற பலரும் காத்திருக்கின்றனர். தங்களின் தீவிர வாசிப்பும் அதை ஒட்டிய தர நிர்ணயித்தின் மேல் வாசகர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும் அதற்கு முக்கியக் காரணம்.
இந்நிலையில் அகப்பங்களில் தங்கள் வழிகாட்டுதல்கள் தவறாக உள்ளது. தங்களிடம் இலவச விளம்பரம் பெற துடிக்கும் சில பதிவர்கள் கண்டதையும் எழுதிவிட்டு தங்களுக்கு அறிமுகம் செய்ய அனுப்ப நீங்களும் அதை அப்பிடியே பிரசுரிக்கிறீர்கள். நான் எழுத்தாளினி இல்லாவிட்டாலும் அந்த எழுத்துகளின் தரத்தை என்னாலேயே அறிய முடிகின்றது.
குறிப்பாக அண்மையில் தாங்கள் தாங்கள் முக்கிய எழுத்தாளர்களாக சிங்கையில் இந்திரஜித்தையும் மலேசியாவில் பாலமுருகனையும் குறிப்பிட்டீர்கள். என்ன சார் இது. எனக்கு தெரிந்த தரம் உங்களுக்குத் தெரியவில்லையா? இந்திரஜித் ஒரு தமாஸ் எழுத்தாளர் என தெரியவில்லையா? அது கிடக்கட்டும் போங்கள்.பாலமுருகன் பின் நவீனத்துவம் என தனக்குத்தெரியாத விசயங்களை புளோக்கில் உளறிக்கொட்டுவதை நீங்கள் படிப்பதில்லையா? இதில் சிங்கப்பூருக்கு வந்த போது நீங்கள்தான் அவருக்கு நெருங்கிய நண்பர் என கூறி திரிவதால், இது போன்ற தவறான போதனையை செய்தது நீங்கள்தான் எனப் பேச்சு.
.
அன்புடன்,
சிதனா
sitana subramaniam <[email protected]
அன்புள்ள சிதனா அவர்களுக்கு,
பொதுவாக இளம் எழுத்தாளர்களை அடையாளம் காட்டும்போது விமர்சகர்களுக்கு பலவகையான இடறல்கள் எழும். இதற்கு க.நா.சு முதல் இன்றுள்ள எந்த ஒரு எழுத்தாளர்- விமர்சகர்களும் விதிவிலக்கல்ல.
என்ன நடக்கிறதென்றால் ஓரு மூத்த, முதல்நிலை எழுத்தாளனை அறிமுகம்செய்யும்போது அவனது முக்கியமான ஆக்கங்களை வாசித்துவிட்டு அவனைப்பற்றிப் பேசுகிறோம். அவனைப் பற்றி ஒரு கருத்தை உருவாக்கிக்கொள்ளும் அளவுக்கு எண்ணிக்கையிலும் அவனது ஆக்கங்களை வாசித்திருப்போம்.
அடுத்த தலைமுறை இளம் எழுத்தாளர்களை பெரும்பாலும் அவ்வாறு உறுதியாகச் சுட்டிக் காட்ட இயலாது. அவர்களின் நல்ல ஆக்கங்கள் அப்போது வெளிவந்திருக்காது. அளவிலும் குறைவாகவே வெளிவந்திருக்கும். வெளிவந்த ஆக்கங்களில் நம்மைக் கவரும் சில அம்சங்களைக் கொண்டு அவரது சாத்தியங்களை நாம் ஊகிக்கிறோம். அந்த ஊகத்தின் அடிப்படையில் நாம் அவரை கவனிக்கும்படிச் சொல்கிறோம்.
ஒரு முக்கியமான படைப்பாளியைச் சுட்டிக்காட்டும்போது ‘இவரை வாசியுங்கள், இவர் இன்னின்ன முறையில் முக்கியமானவர்’ என்கிறோம். ஒர் இளம் படைப்பாளியைப்பற்றி சொல்ல வரும்போது ‘இவரைக் கவனியுங்கள் இவர் அந்தக் கவனத்திற்குத் தகுதியானவர்’ என்கிறோம். இந்த வேறுபாடு முக்கியமானது. நான் இவ்விரு எழுத்தாளர்களின் பெயர்களை மட்டுமே சுட்டியிருக்கிறேன்.
நான் தமிழிலும் பல இளம் படைப்பாளிகளை அவ்வாறு ஒரு சில ஆக்கங்களின் அடிப்படையில் சுட்டிக்காட்டியிருக்கிறேன். அவர்களில் பலர் பின்னர் எதையுமே படைக்காமல் நின்றுவிட்டிருக்கிறார்கள். அதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்ள இயலாது. நான் அவர்களிடம் எதிர்பார்த்தேன் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
சமீபத்தில் நான் சுட்டிக்காட்டியிருந்த ஒர் இளம் தமிழக எழுத்தாளரின் கதை தொகுதியை வாசித்தேன். அவரது படிமங்கள் என்னை கவர்ந்திருந்தன. தொகுப்பாக வாசிக்கும்போது அவரால் ஒரு புனைவுலகை உருவாக்க முடியவில்லை, மனிதர்க¨ளையும் வாழ்க்கையையும் காட்ட முடியவில்லை, பயிலா மொழியை வைத்துக்கொண்டு படிம உற்பத்தி மட்டும்தான் செய்கிறார் என்று புரிந்தது. நான் செய்யக்கூடுவது பேசாமல் இருந்து விடுவதுதான்.
ஓர் இளம் படைப்பாளியிடம் எப்போதுமே நான் கறாரான அளவுகோல்களை முன்வைப்பதில்லை. கச்சிதமான கலைப்படைப்புகளை எதிர்பார்ப்பதுமில்லை.எதை அளவுகோலாகக் கொள்கிறேன். ஒன்று தமிழில் ஏதேனும் ஒரு புதிய அம்சத்தை அவர் கொண்டுவந்திருக்க வேண்டும். எழுத்தில் சரளமான ஓர் ஓட்டம் இருக்கவேண்டும். உண்மையுடன் ஓரு சமூகத்தின் நிலப்பகுதியின் வாழ்க்கையைச் சொல்ல முயன்றிருக்க வேண்டும் — இவற்றில் ஏதேனும் ஓர் அம்சம் இருந்தாலே போதுமானது.
இந்த அளவுகோல்கள் கூட தமிழக எழுத்தாளர்களுக்கு எத்தனை கறாராக போடப்படுகிறதோ அப்படி இலங்கை, சிங்கப்பூர், மலேசிய எழுத்தாளர்களுக்கு போடபடுவதில்லை. காரணம் உங்களுக்கே தெரிந்திருக்கும். சொல்லும்போது வருத்தமாக இருந்தாலும் அது உண்மை. அப்பகுதிகளில் இருந்து பொதுவாக வரும் எழுத்துக்கள் பெரும்பாலும் மேலோட்டமானவை. கலைச்செறிவும் தீவிரமும் கைகூடாதவை.
இலங்கையைப் பொறுத்தவரை, இலக்கியத்தில் மேலோட்டமான அரசியல் கருத்துக்களை மட்டுமே வாசிக்கும்படி அவர்கள் இளமையிலேயே பழக்கப்பட்டிருக்கிறார்கள். வாழ்க்கையின் நுட்பங்களை, மொழியின் தீவிரத்தை அடையாளம் கண்டு வாசிப்பதற்கான தொடக்கமே அங்கே இல்லை. பல்லாண்டுக்கால முற்போக்கு இலக்கியப் பிரச்சாரம் மூலமும், சின்னஞ்சிறு நிலப்பகுதியில் நிகழ்ந்த உக்கிரமான அரசியல் நிகழ்வுகள் மூலமும் பொதுவாக அந்த நுண்ணுணர்வை அவர்கள் இழந்து விட்டிருக்கிறார்கள்.
மலேசிய சிங்கப்பூர் எழுத்துக்களைப் பொறுத்தவரை, வேகமாக கரைந்து மறைந்து வரும் தமிழ்வாழ்க்கையின் பின்புலத்தில் இருந்து அவர்கள் எழுதுகிறார்கள். தீவிர எழுத்தை உருவாக்கும் கலாச்சாரச் சூழலும் கலாச்சார நெருக்கடிகளும் அங்கே இல்லை. அங்கே எழுதுவது அதனளவிலேயே பொதுப்போக்குக்கு எதிரான ஒரு போராட்டம். அங்கே கலைவெற்றிகளை எதிர்பார்க்கக்கூடிய தீவிமான சூழல் இல்லை.
ஆக இப்பகுதிகளில் இருந்து வெளிவரும் ஆக்கங்கள் பொதுவாக கலை எழுச்சியற்றவை. எழுத்தின் தொழில்நுட்பத்தில்கூட பலவீனமானவை. உண்மையைச் சொல்லப்போனால் இலக்கியத்தை அதன் வாழ்க்கைப்பெறுமானத்திற்காகவும், அழகியல் பெறுமானத்துக்காகவும் வாசிக்கும் ஒரு தமிழ் வாசகனால் பொருட்படுத்தத் தக்கவை அல்ல அவை.
ஆனாலும் இங்கே தமிழ் எழுதப்படுகிறதென்பதே முக்கியமானது. ஒர் இலக்கியப் பட்டியலில் கண்டிப்பாக இந்த இலக்கியச்சூழல்களைச் சுட்டிக்காட்டியாக வேண்டும். மலேசியாவில் உள்ள மூத்த எழுத்தாளர்களைச் சுட்டும்போதே அளவுகோல்களை மிகவும் கீழிறக்கித்தான் சொல்லவேண்டியிருக்கிறது. அப்படியானால் இளம் எழுத்தாளர்களுக்கு இன்னமும் இறக்காமல் முடியாது.
பலவருடங்களுக்கு முன்னர் சுந்தர ராமசாமி சிங்கப்பூர் அரசு சார்பில் நடைபெற்ற ஓர் இலக்கியப்போட்டிக்கு நடுவராக வந்தார். பெரும்தொகை பரிசு. ஆனால் கடைசிச் சுற்றுக்கு வந்த எந்தச் சிறுகதையும் குறைந்தபட்சம் அச்சுக்குக் கூட தகுதியானவை அல்ல என்று அவர் நினைத்தார். மு.வரதராசனார் காலத்து நடையில் அன்றாட நீதிகளைச் சொல்லும் முதிராப்படைப்புகள் அவை. ஆகவே எவருக்குமே பரிசுக்குத் தகுதியில்லை என்று சொல்லிவிட்டு திரும்பினார்.
அந்த நிராகரிப்பு இன்றும் சிங்கப்பூர் தமிழர்களை துன்புறுத்துகிறதென்பதை சிங்கப்பூர் சென்றபோது உணர்ந்திருக்கிறேன். சுந்தர ராமசாமியின் அளவுகோல்தான் கறாரான இலக்கிய விமரிசகனின் அளவுகோல். நானும் அதை வைத்திருப்பவனே. ஆனால் நான் நடுவராக வந்திருந்தால் அவற்றில் சில கதைகளை தேர்வுசெய்து பரிசளித்துவிட்டு என் விமரிசனத்தையும், எதிர்பார்ப்பையும் சொல்லியிருப்பேன்.
அந்தக்கதைகளை ஒரு தமிழ்நாட்டு வாசகர் வாசித்துவிட்டு இங்கே இதைவிட பலமடங்கு துல்லியமாக எழுதும் பல இளம் எழுத்தாளர்களை நிராகரித்துவிட்டு இந்தக் கதைகளை எப்படி பரிசுக்கு பரிந்துரைத்தீர்கள் என்று கேட்கலாம். சுந்தர ராமசாமி சிங்கை கதைகளை நிராகரித்தமைக்குச் சொன்ன காரணமும் அதுவே. ஆனால் இலக்கிய விமரிசகனின் அளவுகோல் என்பது பலசமயம் கலையை மட்டுமல்ல விரிந்த சமூக நோக்கையும் கணக்கில் கொள்ளலாம் என்றே நான் பதில் சொல்வேன்.
கடைசியாக ஒன்று. இன்றைய இலக்கியப் பரிமாற்றமும் இந்த வகையில் ஓரு பங்கை வகிக்கிறது. தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் – விமரிசகர்களில் இலங்கை-மலேசிய-சிங்கப்பூர் எழுத்துக்களுடன் தொடர்ந்து அறிமுகம் உடையவன் நான். ஆனாலும் ஏதேனும் ஒருவழியில் கிடைக்கும் கதைகளை வைத்தே முடிவுக்கு வரவேண்டியிருக்கும். பலசமயம் அபூர்வமான சில எழுத்தாளர்கள் கண்ணுக்குத் தென்படாமல் போகக்கூடும். அந்நிலையில் நீங்கள் அவர்களைச் சுட்டிக்காட்டுவதே உகந்த வழி.
இனி மேலே சொன்ன எழுத்தாளர்களை ஏன் சொன்னேன் என்பது குறித்து. இந்திரஜித் குறித்து என்னிடம் சொன்னவர் மனுஷ்யபுத்திரன். அவர் அவரை உயிர்மை அறிமுகம் செய்த ஓர் இளம் எழுத்தாளர் என்று சொன்னார். அந்தக் கதைகளில் ஒரு எளிமையான சரளமான ஓட்டம் இருந்தது. நிறைய எழுதி வரக்கூடிய சரளம் அது. ஓர் இளம் எழுத்தாளரிடம் அந்த அம்சம் இருப்பது எனக்கு பிடித்திருந்தது.
ஆனால் பிறகு தெரிந்துகொண்டேன், இந்த இந்திரஜித் இருபது வருடங்களாக இந்த வகையான மேலோட்டமான குறிப்புகளை கதைபோல எழுதிவருபவர் என்று. நாளிதழில் பணியாற்றி அன்றாடம் இதே மாதிரி எழுதக்கூடியவர் அவர் என்றார்கள். பல கடுமையான கடிதங்கள் வந்தன. ஆகவே அவரது பிற எழுத்துக்களை வாசித்தேன். தீவிரஇலக்கியம் அல்லது நவீனக் கருத்துக்கள் எதனுடனும் சம்பந்தமில்லாதவர், பல காலமாக வெறும் பூசல்கள் வழியே பிழைத்திருப்பவர் என்ற எண்ணம் ஏற்பட்டது.
அதேபோல பாலமுருகன். அவர் உயிரெழுத்து மற்றும் இணையத்தில் எழுதிய கதைகளில் நான் அறியாத மலேசியாவின் உட்பகுதி வாழ்க்கையைப்பற்றிய சித்திரங்கள் நேர்மையாக இருந்தன, கலைத்திறனுடன் இல்லை என்றாலும். ஆனால் அந்த நேர்மையே அவரை பல முக்கியமான படைப்புகளுக்கு இட்டுச் செல்லும் என்றுதான் இப்போதும் நினைக்கிறேன்.
பாலமுருகனின் கதைகளில் நடையை மேம்படுத்திக்கொள்ள அவர் செல்லவேண்டிய தூரம் அதிகம். அவருக்கு எழுதுவதற்கு ஒரு வாழ்க்கை உள்ளது. அதைச் சென்றடையும் நடையை அவர் வாழும் சூழலில் இருந்து , வாசிப்பில் இருந்து, பயிற்சியில் இருந்து உருவாக்கிக்கொள்ள வேண்டும். அவரது இடம் யதார்த்தவாதம் சார்ந்தது, ஏன் இயல்புவாதம் சார்ந்தது. துல்லியமான புறத்தகவல்கள் மூலம் உருவாக்கப்படும் ஓரு புனைவுலகுக்காக அவர் முயல வேண்டும். அது ஒரு பெரிய சவால்.
ஆனால் இலக்கியத்தில் சோதனை முயற்சிகள்தான் புதுமையானவை, கவனிப்பு பெறுபவை என்று பொதுவாக இளம் எழுத்தாளர்கள் கொள்ளும் மயக்கம் காரணமாக அவர் தன் இலக்குகளை விட்டு விலகி வடிவத்திலும் நடையிலும் சில அந்தர்பல்டிகளை அடித்துப்பார்க்கிறார் என்று படுகிறது. உயிரெழுத்து இதழில் எழுதும் இளம் எழுத்தாளர்களைப் பார்க்கையில் அதை வேறுபலரும் செய்வதையும் காணமுடிகிறது. .
அதேபோல பாலமுருகன் எழுதிய இலக்கியக்கோட்பாட்டு விவாதங்களைப் பற்றியும் அவை அவரது எல்லையை மீறியவை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. பின் நவீனத்துவம் அல்லது இலக்கிய அறம் குறித்தெல்லாம் தமிழில் எழுதப்பட்டவற்றையே இன்னும் வாசிக்கலாம். அவரது கருத்துக்கள் அரைகுறைப்புரிதலும் அவசரத்தனமும் கொண்டவை.
ஆனால் எந்த இளம் எழுத்தாளரிடம் அத்தகைய துடுக்குத்தனம் இருக்காது சொல்லுங்கள்? ஏதோ ஒருவகையில் தன் சூழலை தொட்டு உசுப்பி உரையாடத்தான் எல்லா எழுத்தாளர்களும் முயல்கிறார்கள். தமிழகத்திலும் அப்படித்தான். சிலசமயம் தங்கள் எல்லைகளை அவர்கள் மீறலாம். ஆனால் அவர்களை அவர்களின் சிறந்த ஆக்கங்களை வைத்தே அவரை நாம் மதிப்பிடவேண்டும்.
பாலமுருகன் சொல்பவை நான் சொல்லும் கருத்துக்கள் அல்ல, பலசமயம் நேர்மாறானவை. என்னுடைய கருத்துக்கள் எவையுமே ரகசியமல்ல. அவை என் இணையப்பக்கங்களில் மிக விரிவாகவே தொடர்ந்து பதிவாகி உள்ளன. அவற்றை முன்வைத்து விவாதிக்க எப்போதும் தயாராகவே இருக்கிறேன். பாலமுருகன் மட்டுமல்ல பெரும்பாலான மலேசிய, சிங்கப்பூர், இலங்கை எழுத்தாளர்களிடம் எனக்கு தனிப்பட்ட தொடர்பு ஏதுமில்லை. எல்லா கடிதங்களுக்கும் நான் பதில் போடுவேன், அவ்வளவுதான்.
என் வரிகள் வழியாக வரும் எல்லா எழுத்தாளர்களையும் வாசியுங்கள், சொந்த மதிப்பீடுகளை அளியுங்கள். என்னிடமும் பிழைகள் இருக்கலாம். இலக்கிய ஆக்கங்கள் பல காரணங்களால் நம்மிடம் மிகையான மதிப்பை அல்லது குறைவான மதிப்பை பெற்றுவிடலாம். நாம் ஒவ்வாத கருத்து கொண்ட, நாம் கவனம் கொடுத்து வாசிக்கமுடியாத மனநிலையில் இருக்கையில் வாசித்த படைப்புகள் நம் மதிப்பில் குறைந்துவிடலாம். நம் சொந்த வாழ்க்கையை வந்து தீண்டும் உணர்ச்சிகரமான ஆக்கங்கள் மிகை மதிப்பைப் பெறலாம். எந்த விமரிசனத்திலும் பிழையின் இடம் கால்பங்கு உண்டு.
விமரிசனம் என்பது கூட்டுவாசிப்புக்கான ஒரு அழைப்பு மட்டுமே. என் மீதான நம்பிக்கைக்கு மீண்டும் நன்றி.
ஜெ