பகுதி பதின்மூன்று : இனியன் – 2
காட்டுக்குள் பறவைகள் துயிலெழுந்து இலைக்கூரைக்கு மேல் சுற்றிப்பறந்தன. சற்றுநேரத்தில் பறவையொலிகளால் காடு முழங்கத் தொடங்கியது. புல்வெளியில் இருந்து ஒரு நரி வாலை காலிடுக்கில் செருகியபடி ஓடி பீமனை அணுகி அஞ்சி பின்னடைந்தபின் திரும்பி புதருக்குள் சென்று மறைந்தது. புதரில் இருந்து ஒரு காட்டுக்கோழி ஓடி புல்வெளியை நோக்கிச் சென்றது. புல்வெளியில் இருந்து நீரோடையின் ஒளியுடன் வந்த பாம்பு காட்டுக்குள் நுழைவதை நோக்கியபடி நின்றவன் புன்னகையுடன் காலை ஓங்கி தரையில் மிதித்தான். பாம்பு அதிர்ந்து வளைந்து அசையாமல் நின்றபின் பாய்ந்தோடி மறைந்தது.
தூரத்தில் குறுமுழவின் ஒலி போல இடும்பியின் குரல் கேட்டது. அவன் முகம் மலர்ந்து வாயில் தன் கையை வைத்து முழவொலி எழுப்பினான். கால்களை மாற்றிக்கொண்டு சிலகணங்கள் மெல்லிய தவிப்புடன் நின்றபின் ஓடிச்சென்று ஒரு மரக்கிளையைப்பற்றி எழுந்து மேலே சென்றான். இலைத்திரள்வழியாக கிளைகளை தொட்டுத்தொட்டு பறந்து சென்று பச்சை இருளுக்குள் மூழ்கினான்.
நீருக்குள் மீன்கள் முகம் தொட்டுக்கொள்வதுபோல ஈரத்தால் குளிர்ந்திருந்த பச்சைஇலைகளின் தழைப்புக்குள் அவனும் இடும்பியும் சந்தித்துக்கொண்டனர். இடும்பி அவனைக் கண்டதும் சிரித்தபடி உரக்க குரலெழுப்பினாள். அவனும் குரலெழுப்பி தன் தோள்களில் அடித்துக்கொண்டான். அருகே சென்றதும் இருவரும் இறுகத்தழுவிக்கொண்டு புதர்கள் மேல் விழுந்தனர். நகைத்தபடி புல்லில் உருண்டு எழுந்து மீண்டும் கிளைகளில் தொற்றி ஏறினர்.
இடும்பி அவனைப்பிடித்து தள்ளிவிட்டு கிளைகள் வழியாக விரைந்தாள். அவன் கூச்சலிட்டபடி கிளைகளில் விழுந்து தப்பி மீண்டும் மேலேறி அவளை துரத்தினான். மரக்கிளைகளில் அவர்கள் தொற்றித்தொற்றிப் பறந்தனர். இலைகளில் ஊடுருவி, சிறுகிளைகளை வளைத்துக்கொண்டு சென்றனர். இடும்பி பெரிய மூங்கில்கழைகளைப் பற்றி உடலின் எடையாலேயே வளைத்து வில்லாக்கி தன்னை அம்பாக்கி பாய்ந்து காற்றில் சென்று இன்னொரு கழையை பற்றிக்கொண்டாள்.
அவளுடைய விரைவை அவன் அடைய முடியவில்லை. அவள் தோன்றிய இடத்திலிருந்து கணநேரத்தில் மறைந்தாள். மிக அருகே தோன்றி காதுக்குள் சிரித்துக்கொண்டு மீண்டும் மறைந்தாள். காடெங்கும் நிறைந்திருப்பது போல தோன்றினாள். சிலகணங்களில் காடே அவனைச்சூழ்ந்து சிரிக்கத் தொடங்கியது. மரங்களும் புதர்களும் அவனை நோக்கி நகைத்து கையசைத்தன.
மூச்சிரைக்க பீமன் ஒரு மரத்தடியில் அமர்ந்துகொண்டான். அவள் மரக்கிளை ஒன்றில் தலைகீழாகத் தொங்கி அவன் முன் கைவீசி ஆடியபடி சிரித்தாள். “மைந்தன் எங்கே?” என்றான் பீமன். “மூத்த இடும்பியரிடம் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன்” என்றாள் இடும்பி. “அன்னை அவனைத் தேடினாள். நீ அவனை சிலநாட்கள் என்னிடம் விட்டுவிடு” என்றான். “இடும்பன் தன் குடியைவிட்டு ஒருநாள் இரவுகூட அகன்றிருக்கலாகாது” என்று அவள் சொன்னாள்.
அவள் எப்போதுமே சொல்வதுதான் அது. பீமன் நீள்மூச்சுடன் “இன்று அவனை கொண்டுசென்று காட்டவேண்டும். அன்னை நாலைந்துமுறை கேட்டுவிட்டாள்” என்றான். “ஆம், அவனும் பாட்டியை தேடுகிறான். ஆனால் அங்கே இருக்கும் கிழவிகளுக்கு அவனை கொண்டுசெல்வதே பிடிக்கவில்லை. அவனை நீங்கள் மந்திரத்தால் கட்டிவிடுவீர்கள் என்கிறார்கள்” என்றாள். பீமன் “அது உண்மை… என்னையே மந்திரத்தால்தான் கட்டிவைத்திருக்கிறார்கள்” என்றான்.
இடும்பி தலைகீழாகத் தொங்கியபடி சிந்தித்தபின் பறந்து சென்று இருகைகளிலும் பெரிய பலாப்பழங்களுடன் வந்து அவனருகே அமர்ந்தாள். அதை உடைத்து சுளைகளை எடுத்து பீமனிடம் கொடுத்தாள். “மைந்தன் ஒரு சொல்லும் இதுவரை பேசவில்லை. அமைதியாகவே இருக்கிறான்” என்றாள். பீமன் “அவன் என் மைந்தன். நான் பேசவும் நெடுநாளாயிற்று” என்றான். “அவன் ஊமை என்று குடிமூத்தார் ஒருவர் சொன்னார்” என்றாள் இடும்பி. பீமன் நகைத்து “அவன் கண்களில் சொற்கள் இருக்கின்றன” என்றான்.
பழத்தை உண்டுமுடித்ததும் இடும்பி அவனை தன் கைகளால் அள்ளி தோளிலேற்றிக்கொண்டாள். பீமன் “ஆயிரக்கணக்கானமுறை உன் தோளில் ஏறி பறந்துவிட்டேன். ஆனாலும் கீழே விழுந்துவிடுவேன் என்ற அச்சம்தான் வயிற்றில் தவிக்கிறது” என்றான். இடும்பி “ஒருபோதும் நிகழாது… நான் உங்களை என் வயிற்றால் அல்லவா சுமந்துசெல்கிறேன்” என்றபடி மரக்கிளைகளைப் பற்றி காற்றில் ஆடிச்சென்றாள். அந்தக் கூற்றிலிருந்த கூர்மை பீமனை வியக்கச் செய்தது. மிகக் குறைவான சொற்கள் மட்டுமே கொண்ட மொழி என்பதனால் அவர்கள் எப்போதுமே சுருக்கமாகத்தான் பேசினார்கள். காவியத்தில் இருக்கும் வரிகளைப்போல.
அவள் முதுகிலிருந்தபடி பீமன் கீழே ஓடிமறைந்த பசுங்காட்டை பார்த்துக்கொண்டிருந்தான். அவள் கிளைகளை கண்ணால் பார்க்கவில்லை, கைகளில் அவளுக்கு கண்களிருக்கின்றன என்று அவனுக்கு எப்போதுமே தோன்றும். தனித்தனியாக இரு நாகங்கள் போல அவள் கைகள் பறந்து சென்று கிளைகளைப் பற்றி அவ்விரைவிலேயே வளைத்துவிட்டு தாவிச்சென்றன. அவள் உடல் அக்கைகளுக்கு நடுவே மண்ணுடனும் கிளைகளுடனும் தொடர்பேயற்றதுபோல காற்றில் சென்றுகொண்டிருந்தது.
இடும்பர்கள் மரங்களில் செல்லும் கலையை பீமனால் கற்கவே முடிந்ததில்லை. விரைவிலேயே அவன் மூச்சிரைக்கத் தொடங்கிவிடுவான். பின்னர் அந்த நுட்பத்தை புரிந்துகொண்டான். அவன் தாவுவதற்கு தன் தோள்வல்லமையையே பயன்படுத்தினான். அவர்கள் கிளைகளை வளைத்து அந்த விசையைக்கொண்டே தாவிச்சென்றனர். அவனால் அந்தக் கணக்குகளை அடையவே முடியவில்லை. ”நீங்கள் கிளைகளில் தாவுவதில்லை, நீந்துகிறீர்கள்” என்றான்.
இடும்பி நகைத்து “இங்கே ஒரு வயதுக்குள் ஒரு குழந்தை இதை கற்றுக்கொள்ளும். கற்றுக்கொள்ளாத குழந்தை பிறகெப்போதுமே கற்றுக்கொள்ளாது” என்றாள். “நீ நம் மைந்தனைப்பற்றி சொல்கிறாயா?” என்றான் பீமன். “ஆம், நம் மைந்தனுக்கு ஒரு வயது தாண்டிவிட்டது. இன்னமும் அவன் கிளைகளில் ஏறவில்லை. அவன் தூய இடும்பன் அல்ல என்கிறார்கள். அவன் உங்கள் மைந்தன், அவனை உங்களிடமே தந்து அனுப்பிவிடும்படி சிலர் சொல்கிறார்கள்.”
“மகிழ்வுடன் கொண்டுசெல்வேன்” என்றான் பீமன். “அன்னை திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். மைந்தனை நம்முடன் கொண்டுசெல்லலாம் என்று. அவன்தான் பாண்டவர்களில் முதல் பெயரன். மறைந்த மன்னர் பாண்டு அவனையே முதலில் வாழ்த்துவார்.” இடும்பி “நான் எத்தனையோ முறை சொல்லியிருக்கிறேன், அவன் இந்தக்காட்டைவிட்டு வெளியே செல்ல முடியாது. அவனுடைய பெருந்தோற்றமே அவனை அங்கெல்லாம் அயலவனாக்கிவிடும். அரக்கன் என்ற சொல் அச்சத்துடன் மட்டுமே சொல்லப்படவேண்டும். ஒருபோதும் ஏளனத்துடன் சொல்லப்படலாகாது” என்றாள்.
அவர்கள் இடும்பக்குடியின் விளிம்பில் மண்ணில் இறங்கினார்கள். இருவர் உடல்களிலிருந்தும் நீர்த்துளிகள் சொட்டின. குடில்களுக்குக் கீழே காவல்நின்ற நாய்க்கூட்டம் பீமனின் வாசனையைப் பெற்றதும் குரைக்கத் தொடங்கியது. எட்டு நாய்கள் அம்புமுனை போன்ற வடிவில் எச்சரிக்கையுடன் காதுகளைத் தூக்கிக்கொண்டு ஓடிவந்தன. அணுகும்தோறும் அவை விரைவழிந்து மெல்ல காலெடுத்துவைத்தன. நூலால் கட்டி இழுக்கப்படுவதுபோல நாசியை நீட்டியபடி முன்னால் வந்த தலைவன் உறுமியது.
இடும்பி ஒலியெழுப்பியதும் அது வாலை ஆட்டியபடி காதுகளை மடித்தது. பிறநாய்களும் காதுகளை மடித்து வாலை ஆட்டியபடி அங்கேயே நின்றன. “இத்தனை நாட்களாகியும் இவை என்னை ஏற்றுக்கொள்ளவேயில்லை” என்றான் பீமன். “நீங்கள் அங்கே சாலிஹோத்ரரின் குடிலில் இருக்கிறீர்கள். அங்கே அவர்கள் வேள்விகளைச் செய்து புகையெழுப்புகிறார்கள். அந்த வாசம் உங்கள் உடலில் உள்ளது” என்றாள் இடும்பி. “அத்துடன் உங்கள் உடன்பிறந்தாரும் அன்னையும் உங்களை தீண்டுகிறார்கள். அந்த வாசமும் உள்ளது.”
“என் அன்னையின் கருவறை வாசமே இருக்கும். அதை நான் விலக்கமுடியாதல்லவா?” என்றான் பீமன். அவர்கள் நெருங்கியபோது முதல்நாய் வாலைச் சுழற்றி வீசியபடி காதுகளை நன்றாக பின்னால் மடித்து உடலைத் தாழ்த்தி ஓடிவந்தது. இடும்பியின் உடலை தன் உடலால் உரசியபடி சுற்றியது. பிறநாய்கள் ஓடிவந்து எம்பிக்குதித்து அவள் விரல்களை முத்தமிட்டன. ஒருநாய் ஓரக்கண்ணால் பீமனை நோக்கி மெல்ல உறுமியபின் இடும்பியை நோக்கிச் சென்று காதுகள் பறக்க எம்பிக்குதித்து மெல்ல குரைத்தது.
இடும்பி மெல்லியகுரலில் அவற்றுடன் பேசியபடியே சென்றாள். மேலும் நாய்கள் வந்து அவளை சூழ்ந்துகொண்டன. குடில்களுக்குக் கீழே தரையெங்கும் அவை உண்டு மிச்சமிட்ட எலும்புகள் மண்ணில் மிதிபட்டன. அவள் அணுகியதும் குடிலில் இருந்த கிழவர் ஒருவர் வாயில் கைவைத்து சங்கு போல ஒலியெழுப்ப குடில்களுக்குள் இருந்து குழந்தைகள் வந்து எட்டிப்பார்த்து சிரித்துக்கொண்டே கூச்சலிட்டன. குடில்களை ஆட்டி ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குப் பறந்தன. கிளைகள் வழியாக தாவிவந்து அவர்களைச் சூழ்ந்துகொண்டு கூச்சலிட்டு குதித்தன.
பீமன் நூலேணி வழியாக ஏறி கிழவர் இருந்த குடிலுக்குள் நுழைந்தான். முதுஇடும்பர் “நீ காட்டில் ஒலியெழுப்பியதைக் கேட்டேன்…” என்று கரியபற்களைக் காட்டி சிரித்துக்கொண்டே சொன்னார். அவர் ஒரு இலையில் தீயில் சுட்ட பலாக்கொட்டைகளை வைத்திருந்தார். அதை அவனை நோக்கி தள்ளிவைத்து “உயிர் நிறைந்தவை” என்றார். இடும்பி கொடிவழியாக இன்னொரு குடிலுக்குள் நுழைந்து மறைந்தாள். முதுஇடும்பர் “அவள் மைந்தனைப்பற்றித்தான் நேற்றிரவு பேசினோம். அவன் பேசுவதில்லை. அவன் கைகளுக்கு மரங்களும் பழகவில்லை” என்றார்.
பீமன் “நாங்கள் சற்று பிந்தியே அவற்றை கற்கிறோம்” என்றான். “ஆனால் அரக்கர்கள் மூன்று மாதத்தில் எழுந்து அமர்வார்கள். ஆறு மாதத்திலேயே பேசத்தொடங்குவார்கள். ஒருவயதில் கிளைகளில் நீந்துவார்கள். உன் மனைவி ஆறுமாதமே ஆகியிருக்கையில் காட்டின் எல்லையில் ஆறு வரை சென்று வருவாள்” என்றார் முதுஇடும்பர். பீமன் அவர் சொல்லவருவதென்ன என்று சிந்தனைசெய்தபடி பார்த்தான்.
முதுஇடும்பர் “அவனால் ஏன் கிளைகளில் நீந்தமுடியவில்லை தெரியுமா? அவன் இடும்பர்கள் அனைவரையும் விட பெரியவன். இரண்டு மடங்கு பெரியவன். ஒருவயதான குழந்தை, ஆனால் என் இடையளவுக்கு இருக்கிறான். நான்குவயது குழந்தைகளைவிட எடை கொண்டிருக்கிறான்” என்றார். பீமன் “ஆம்” என்றான். “அவன் மிகச்சிறந்த போர்வீரனாக வருவான்.” முதுஇடும்பர் “எங்கள் போர்களெல்லாம் கிளைகளில் அல்லவா? பறக்கமுடியாவிட்டால் அவனை எப்படி அரக்கன் என்று சொல்லமுடியும்?” என்றார்.
பீமன் அவர் சொல்லப்போவதற்காக காத்திருந்தான். “அவனை நீங்கள் கொண்டுசெல்ல முடியாது. அங்குள்ள எளிய மானுடர்களைவிட இருமடங்கு உயரமும் எடையும் கொண்டவனாக இருப்பான். அவனால் அங்கே வாழமுடியாது. இங்கும் அவனால் வாழமுடியாது. பறக்காதவனை இடும்பனாக ஏற்பதும் குலஉரிமைகளை அளிப்பதும் முடியாது.” பீமன் ஒன்றும் சொல்லவில்லை.
“ஆகவே, அவனை இடும்பர் குலத்தில் இருந்து விலக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம். இக்காட்டின் எல்லைக்கு அப்பால் உள்ள புல்வெளியில் அவன் வாழலாம். அவன் தானாகவே உணவு தேடி உண்பதுவரை அவன் அன்னை அவனுக்கு உணவு கொண்டு கொடுக்கட்டும். அதன்பின் இடும்பர்களின் நண்பனாக அவன் அங்கே இருக்கலாம்” முதுஇடும்பர் சொன்னார் “அவன் கால்களைப் பார்த்தேன்… எடை மிக்க யானைக்கால்கள். இடும்பர்களுக்குரியவை குரங்குக் கால்கள். அவனால் பச்சையில் நீந்தவே முடியாது. அவன் புல்வெளிகளில் வாழ்வதற்காகவே மூதாதையரால் படைக்கப்பட்டிருக்கிறான்.”
பீமன் ஒன்றும் சொல்லாமல் தலையசைத்தான். முதுஇடும்பர் “நீயே இப்போதுதான் காட்டை அறியத் தொடங்குகிறாய். உன் கைகளும் கால்களும் இன்னும்கூட காட்டை அறியவில்லை. துணைவியின் தோளிலேறி காட்டைச் சுற்றுகிறாய். ஆகவேதான் உன் மைந்தனின் உடலும் காட்டை அறியவில்லை” என்றார். “காட்டை அறிவது நம்மால் முடியாது. அன்னை தன் குழந்தையை கைநீட்டி எடுத்துக்கொள்வதுபோல காடு நம்மை எடுத்துக்கொள்ளவேண்டும்…” பீமன் தலையசைத்தான்.
“நாங்கள் காட்டின் மைந்தர்கள். அப்பால் வாழ்பவர்கள் நெருப்பின் மனிதர்கள். அவர்கள் நெருப்பை வழிபடுகிறார்கள். ஒவ்வொருநாளும் நெருப்பை ஏற்றி வானத்துக்கு அனுப்புகிறார்கள். காடுகளை நெருப்பிட்டு அழித்து அங்கே தங்கள் வீடுகளை கட்டுகிறார்கள். நீ அவர்களில் ஒருவன். உன் உடல் நெருப்பின் நிறம் கொண்டிருக்கிறது. உன் உடலில் புகையின் வாசம் எழுகிறது” என்றார் முதுஇடும்பர். “காட்டுக்கு எதிரானது நெருப்பு. காடும் நெருப்பும் காலம் தொடங்கியது முதலே போரிட்டுவருகின்றன. நீ எங்களில் ஒருவனல்ல. உன் மைந்தனும் அப்படித்தான்.”
“அவன் உங்களைப் போலிருக்கிறான்” என்றான் பீமன். “இல்லை, எங்களைவிடவும் பெரியவனாக இருக்கிறான். ஆனால் அவன் எங்களவன் அல்ல. எங்களவன் என்றால் இதற்குள் அவனை காடு அறிந்திருக்குமே?” பீமன் பெருமூச்சுடன் பார்வையை விலக்கிக் கொண்டான். “நாளை மறுநாள் முழுநிலவு. அன்று நாங்கள் குலம்கூடி முடிவெடுத்து அவனை காட்டிலிருந்து விலக்கி புல்வெளிக்கு அனுப்பலாமென நினைக்கிறோம்” என்றார் முதுஇடும்பர். பீமன் ஏதோ சொல்லவந்ததுமே தெரிந்துகொண்டான் அவை அவரது சொற்கள் அல்ல, அவனிடம் அவற்றைச் சொல்ல அவர்களால் அவர் பொறுப்பாக்கப்பட்டிருக்கிறார் என.
நூலேணி வழியாக குழந்தையுடன் இடும்பி இறங்கிச்சென்றாள். அவள் தோளுக்குப்பின்னால் இரு கைகளாலும் பற்றிக்கொண்டு தொங்கிய பெருங்குழந்தை மயிரே இல்லாமல் பளபளத்த பெரிய தலையுடன் கன்னங்கரிய உடலுடன் இருந்தது. கொழுத்துருண்ட கைகால்களால் அன்னையை கவ்விப்பற்றி நாய்களை நோக்கி உரத்தகுரலில் உறுமியது. நாய்கள் அவனை நோக்கிக் குரைத்தபடி எம்பிக்குதித்தன. நாய்களின் தலைவன் அவனை நோக்கி மூக்கை நீட்டி வந்தபின் வாலை அடிவயிற்றில் செருகி பின்னால் சென்று குந்தி அமர்ந்து ஊளையிட்டது. ஆங்காங்கே நின்றிருந்த நாய்களும் ஊளையிடத் தொடங்கின.
பீமன் நூலேணிவழியாக இறங்கி இடும்பியை நோக்கி சென்றான். அவள் இடையில் இருந்த மைந்தன் அவனை நோக்கித் திரும்பி உருண்ட விழிகள் மலர்ந்து வெண்ணிறப்பற்களைக் காட்டி சிரித்தான். அரக்கர்குல இயல்புக்கேற்ப அவன் பெரிய பற்கள் முழுமையாகச் செறிந்த வாயுடன்தான் பிறந்தான். பிறந்த மூன்றாம்நாளே அவனுக்கு ஊனுணவு அளிக்கத் தொடங்கினர். காட்டெருமையின் கழுத்தை அறுத்து ஊற்றி எடுத்த பசுங்குருதியை பனையோலைத் தொன்னையில் பிடித்து அவனுக்கு ஊட்டினர். அவன் உண்ணும் விரைவையும் அளவையும் கண்டு பீமனே திகைத்தான். இரண்டாம் வாரமே எழுந்து அமர்ந்து கைகளால் தரையை அறைந்து ஆந்தைபோன்ற பெருங்குரலில் உணவு கோரி வீரிட்டழுதான்.
பீமன் அருகே சென்று மைந்தனை நோக்கி கைநீட்டினான். அவனைக் கண்டதுமே குழந்தை கால்களை உதைத்து எம்பிக் குதித்து பெருங்குரலில் சிரித்தது. அவன் அதை தன் கையில் வாங்கிக் கொண்டான். குனிந்து அதன் பெரிய உருண்டவிழிகளையும் சற்று தூக்கிய நெற்றியையும் நோக்கினான். அதன் உடலில் முடியே இருக்கவில்லை. எடைமிக்கக் கரும்பாறைபோலிருந்தான். பீமன் அவனைச் சுமந்தபடி நடந்தான். இடும்பி அவன் பின்னால் வந்தாள். அவன் கைநீட்டி அவளைத் தடுத்தபின் மைந்தனுடன் முன்னால் நடந்து சென்று காட்டுக்குள் புகுந்தான்.
மைந்தனை தன் தோளில் ஏற்றிக்கொண்டு காட்டுக்குள் சென்றுகொண்டிருந்தான். எதிரே வந்த எருது சிவந்த கண்களை உருட்டி கொம்பு தாழ்த்தி நோக்கி “யார்?” என்றது. “மைந்தன்” என்றான் பீமன் ”கரியவன்” என்றது எருது. அவன் இலைகள் வழியாகச் சென்றபோது உவகையுடன் கால்களை உதைத்து கைகளை விரித்து கூச்சலிட்டு மைந்தன் குதித்தான். மூங்கில்கூட்டமருகே நின்றிருந்த நான்கு யானைகளில் மூத்த யானை திரும்பி அவனை நோக்கி ஓசையிட்டது. மேலே வந்த குரங்கு “ அழகன்…” என்றது. பிடியானை ஒன்று துதிக்கை தூக்கி பெருங்குரல் எடுத்து அவனை வாழ்த்தியது.
மைந்தன் துள்ளிக்கொண்டே இருந்தான். அவன் எடையில் பீமனின் தோள்கள்கூட களைப்படைந்தன. அவன் ஓர் ஓடைக்கரையில் பாறைமேல் அமர்ந்து அவனை தன் மடியில் வைத்துக்கொண்டான். அவனை உதைத்து பின்னால் தள்ளிவிட்டு மைந்தன் எம்பி முன்னால் பாய்ந்து அதேவிசையில் தலைகுப்புற விழுந்து உருண்டு கீழே சென்று புல்லில் விழுந்தான். எரிச்சலுடன் முகம் சுளித்து அழுதபடி அருகே நின்ற சிறிய மரம் ஒன்றை ஓங்கி அறைய அது வேர் அசைந்து எழ சரிந்தது.
பீமன் எழுந்து புன்னகையுடன் அதை நோக்கியபடி நின்றான். பெரிய கரும்பானை போன்ற தலையை ஆட்டியபடி குழந்தை அவனை நோக்கி கையை நீட்டி ஏதோ சொன்னான். வாயிலிருந்து எச்சில் குழாய் வழிய தவழ்ந்து சென்று ஒரு பெரிய பாறாங்கல்லை தூக்கி தலைக்குமேல் எடுத்துக்கொண்டபோது அப்பால் வந்திறங்கிய நாரையைக் கண்டான். விரிந்த கண்களுடன் நாரையை நோக்கி சிலகணங்கள் வியந்தபின் கல்லை அப்படியே விட்டுவிட்டு நாரையை நோக்கி கைநீட்டி உரக்கக் கூவினான். கல் அவன் மண்டையிலேயே ஓசையுடன் விழுந்து சரிந்து கீழே விழுந்தது. அவன் இயல்பாகத் திரும்பி கல்லை நோக்கிவிட்டு மீண்டும் நாரையை நோக்கி கூச்சலிட்டு எம்பினான். பாய்ந்து சேற்றில் விழுந்து தவழ்ந்து செல்லத் தொடங்கினான்.
பீமன் “டேய், பானைமண்டை” என்றான். மைந்தன் திரும்பி கண்களை உருட்டி நோக்கி பற்கள் தெரிய நகைத்து கைகளை தலைக்குமேல் தூக்கி ஆட்டினான். எச்சில் வழிந்து பெரிய செல்லத்தொந்தியில் சொட்டியது. சிரிக்கும்போது உருண்ட கரிய முகத்தில் வெளிப்பட்ட சீரான வெண்பற்களும் கண்களில் எழுந்த ஒளியும் பீமனை பேருவகை அடையச்செய்தன. கைகளைத் தட்டி நீட்டி “பானைமண்டையா, என் அழகா… செல்லமே” என்றான். குழந்தை இருகைகளாலும் மண்ணை அறைந்தபடி அவனை நோக்கி தவழ்ந்தோடி வந்தான்.
”இனி உன்பெயர் பானைமண்டையன். கடோத்கஜன்” என்றான் பீமன். அவனை குனிந்து எடுத்து தூக்கி அந்தப் பெரிய தொப்பையில் முகத்தை அழுத்தி “கடோத்கஜா, மைந்தா” என்றான். சிரித்துக்கொண்டே கைகால்களை நெளித்து கடோத்கஜன் துள்ளினான். “என் செல்லமே, என் அரசனே, என் பேரழகனே” என்று சொல்லி பீமன் அவனை முத்தமிட்டான். ”பறக்க மாட்டாயா நீ? எங்கே பற” என்று அவனை தூக்கி வீசி பிடித்தான். காற்றில் எழுந்த கடோத்கஜன் சிரித்தபடியே வந்து அவன் கைகளில் விழுந்தான். அவன் எச்சில் பீமனின் முகத்திலும் கண்களிலும் வழிந்தது.
தோள்தளர்ந்து பீமன் கடோத்கஜனை கீழே வைத்தான். அவன் தந்தையின் காலைப்பிடித்து எழுந்து தலை தூக்கி நோக்கி கூச்சலிட்டு துள்ளினான். “அதோ பார், நாரை… நாரை!” என்றான் பீமன். “ந்தையே… ன்னும்” என்றான் கடோத்கஜன். பீமன் திகைத்து “அடேய் பாவி, நீ பேசுவாயா?” என்றான். கடோத்கஜனின் கனத்த உதடுகள் அவன் சொன்ன சொற்களுக்கு தொடர்பற்ற முறையில் நெளிந்து பின் குவிந்தன. “த்தூக்கு… ன்னும் ன்னும்” என்றான் கடோத்கஜன். “மூடா, பேசத்தெரிந்தா இதுவரை வாயைமூடிக்கொண்டிருந்தாய்?” என்றான் பீமன் சிரிப்புடன். “ன்னும் ன்னும் தூக்கு, த்த் தூக்கு! ” என்று கடோத்கஜன் கால்களை மாறிமாறி உதைத்தான்.
“போதும், இனி என்னால் முடியாது” என்றான் பீமன். அவனை கைகளால் அடித்து “வேண்டும்… வேண்டும்… ன்னும்!” என்றான் கடோத்ககஜன். “அடேய், நீ அரக்கன். நான் மனிதன். உன்னை இனிமேலும் தூக்கினால் என் கை உடைந்துவிடும்” என்றான் பீமன். “நான் இறந்துவிடுவேன்… இதோ இப்படி” என்று நாக்கை நீட்டி காட்டினான். கடோத்கஜன் சிரித்து “ன்னும்” என்றான். “நீ என்ன அரசனா? உனக்கு நான் என்ன அரசவை நடிகனா? மூடா, அரக்கா, நான்தான் அரசன். தெரியுமா?” என்றான் பீமன். கடோத்கஜன் சிறுவிரலை நீட்டி சுட்டிக்காட்டி “ரக்கன்” என்றான். “யார் நானா? நல்ல கதை. டேய், நீ அரக்கன். நான் மனிதன்” என்றான் பீமன். கடோத்கஜன் எல்லாம் தெரியும் என்பதுபோல புன்னகை செய்து “நீ ரக்கன்” என்றான்.
“சொல்லிச் சொல்லி என்னை அரக்கனாகவே ஆக்கிவிடுவாய் போலிருக்கிறதே” என்றான் பீமன். அவன் கையைப்பிடித்து அவன் மார்பில் வைத்து “சொல், அரக்கன்” என்றான். கடோத்கஜன் பீமன் மேல் இரக்கம் கொண்டவனைப்போல புன்னகை செய்து “ரக்கன்” என்றான். அதே கையை தன் மார்பில் வைத்து “தந்தை” என்றான். “ந்தை” என்றான் கடோத்கஜன். “தந்தை பாவம்” என்றான் பீமன். சரி என்று கடோத்கஜன் தலையசைத்தான்.
உடனே நினைவுக்கு வந்து “தூக்கு… ந்தையே தூக்கு” என வீரிட்டான். ”தூக்க முடியாது. தந்தை பாவம். அரக்கன் பெரியவன்” என்றான் பீமன். கடோத்கஜன் பீமனின் தொடையில் கையால் அடித்து “போடா!” என்றான். “அடேய், நான் உன் தந்தை” என்றான் பீமன். “நீ சீச்சீ… போடா” என்று கடோத்கஜன் பாய்ந்து பீமனின் தொடையை கடித்தான். பீமன் “ஆ” என்று கூவினான். மறுகணமே கடோத்கஜன் வேண்டுமென்றே மென்மையாகத்தான் கடிக்கிறான் என்று தெரிந்தது. சிரித்துக்கொண்டே அவனை மீண்டும் தோள்மேல் தூக்கிக்கொண்டான். அவன் கண்களை நோக்கினான். சிரிப்பு ஒளிர்ந்த கண்களுடன் “ந்தை பாவம்” என்றான் கடோத்கஜன்.
ஒருகணத்தில் அகம் பொங்க பீமன் “ஆம், என் மைந்தா! என் அரசே! உன்னிடம் மட்டுமே தந்தை தோற்பேன். உன்னிடம் மட்டுமே இரக்கத்தை நாடுவேன்” என்று அவனை அணைத்துக்கொண்டு இறுக்கினான். “நீ பெருங்கருணை கொண்டவன். என்றும் அவ்வண்ணமே இரு என் செல்லமே” என்றான்.
வெண்முரசு அனைத்து விவாதங்களும்
மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக
வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்