‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 64

பகுதி பதின்மூன்று : இனியன் – 6

இருண்ட காட்டுக்குள் கண்களுக்குள் அஸ்தமனத்தின் செவ்வொளி மிச்சமிருக்க பீமனும் இடும்பியும் கடோத்கஜனும் சென்றனர். மரங்கள் இருளுக்குள் திட இருள் வடிவுகளாக நின்றன. சீவிடுகளின் ஒலி திரண்டு இருட்டை நிரப்பத்தொடங்கியது. அவ்வப்போது கலைந்து பறந்த சில பறவைகள் நீரில் அறைவதுபோல இருளில் ஒலியெழுப்பி சிறகடித்தன. சிறகுகள் மரங்களிலும் கிளைகளிலும் உரசும் ஒலியுடன் அவை சுழன்றன. எங்கோ சில இடைவெளிகளில் வழிந்த மெல்லிய ஒளியில் மின்னிய இலைகள் ஈரமானவை போல் தோன்றின.

பொந்துக்குள் சுருண்ட மலைப்பாம்பின் விழிபோல இருளுக்குள் மின்னிய சுனையில் பீமன் குனிந்து நீரள்ளி குடித்தான். கடோத்கஜன் இலை ஒன்றை கோட்டி நீரை அள்ளி இடும்பிக்குக் கொடுத்தான். நீரில் ஒரு தவளை பாய்ந்துசெல்ல இருளின் ஒளி அலையடித்தது. மேலிருந்து ஓர் இலை சுழன்று சுழன்று பறந்து வந்து நீரில் விழுந்தது. சுனைக்குக் குறுக்கே கட்டப்பட்டிருந்த சிலந்தி வலைகளில் சிக்கியிருந்த சிறிய இலைகள் அந்தரத்தில் தத்தளித்தன. பீமன் பெருமூச்சு விட்டு தன் தாடியை துடைத்துக்கொண்டான். மீண்டும் பெருமூச்சு விட்டு கைகளை மேலே தூக்கி சோம்பல் முறித்தான்.

ஈரக்கையை உதறிவிட்டு ”தந்தையே, நீங்கள் யாரையாவது அஞ்சுகிறீர்களா?” என்றான் கடோத்கஜன். பீமன் அதிர்ந்து திரும்பி நோக்கி சிலகணங்கள் தயங்கிவிட்டு “ஆம்” என்றான். “கர்ணன் என் கனவில் வந்துகொண்டே இருக்கிறான், மைந்தா. அவனை நான் அஞ்சுகிறேன் என்பதை எனக்கு நானேகூட ஒப்புக்கொள்வதில்லை” என்றான். “நான் அவனை கொல்கிறேன்” என்றான் கடோத்கஜன். பீமன் அவன் கையைப் பற்றி “வேண்டாம்… நீ அவனை கொல்லக்கூடாது” என்றான். “ஏன்?” என்றான் கடோத்கஜன். “கொல்லலாகாது” என்றான் பீமன். இருளில் விழிகள் மின்ன நோக்கி ”தங்கள் ஆணை” என்றான் கடோத்கஜன்.

“ஆனால் அவன் என்னை கொல்வானென்றால் நீ அவனை களத்தில் சந்திக்கவேண்டும். என்பொருட்டு அவனிடம் வஞ்சம் தீர்க்கவேண்டும்” என்றான் பீமன். கடோத்கஜன் “நான் அவனை வெல்வேன்” என்றான். பீமன் புன்னகையுடன் அவன் தலையைத் தட்டி ”அது எளிதல்ல மண்டையா. அவன் சூரியனின் மைந்தன் என்கிறார்கள்” என்றான். ”நான் காற்றின் வழித்தோன்றல் அல்லவா?” என்றான் கடோத்கஜன். பீமன் புன்னகையுடன் அவனை அருகே இழுத்துக்கொண்டு “ஆம்” என்றான்.

இடும்பி முன்னால் சென்று ”விரைவிலேயே முழுதிருள் அடர்ந்துவிடும்” என்றாள். பீமன் “ஆம்… உங்கள் குடிகள் இப்போது குடில்களுக்கு திரும்பிவிட்டிருப்பார்கள். இருளில் குடிலுக்கு மீண்டாகவேண்டியது உங்கள் கடன் அல்லவா?” என்றான். கடோத்கஜன் “அவர்கள் எனக்காக காத்திருக்கட்டும்…” என்றான். ”அரசன் என்பவன் நெறிகளை காக்கவேண்டியவன், மைந்தா” என்றான் பீமன்.

“நான் நெறிகளை அமைக்கிறேன்” என்றான் கடோத்கஜன். “அரக்கர்கள் இன்றுவரை நச்சுப்பாம்புகளையே பெரிதும் அஞ்சிவந்தனர். அவர்கள் தரையிறங்காமலிருப்பதே அதனால்தான். நான் நச்சுப்பாம்புகளை பிடித்துவந்து ஆராயப்போகிறேன். அவற்றை வெல்வதெப்படி என்று கற்று என் குடிக்கு சொல்லப்போகிறேன்.”

பீமன் “ஆம், அறிந்ததுமே அச்சம் விலகிவிடுகிறது” என்றான். கடோத்கஜன் “இடியோசையை பாம்புகள் அஞ்சுகின்றன. இந்திரனிடம் உள்ளது நாகங்களை வெல்லும் வித்தை என்று தோன்றுகிறது” என்றான். இடும்பி “போதும், இருளில் பாம்புகளைப் பற்றி பேசவேண்டாம்” என்றாள். கடோத்கஜன் சிரித்துக்கொண்டே “அன்னையே, தந்தையின் இரு கைகளும் இரு பாம்புகள், அறிவீர்களா?” என்றான். “வாயை மூடு” என்று இடும்பி சீறினாள். “ஆம், பாட்டி சொன்ன கதை அது. ஜயன் விஜயன் என்னும் இரு பாம்புகள்… வெல்லமுடியாத ஆற்றல்கொண்டவை.” அருகே சென்று அவளைப்பிடித்து “அவற்றை அஞ்சுகிறீர்களா?” என்றான். “பேசாதே…“ என்று சொல்லி இடும்பி முன்னால் பாய்ந்து செல்ல சிரித்தபடி கடோத்கஜன் அவளை துரத்திச்சென்றான்.

காட்டுவிளிம்பில் புல்வெளியில் இறங்கியதும் பீமன் குந்தியின் குடில்முன் ஒற்றை அகல்சுடர் இருப்பதைக் கண்டு “அன்னை உங்களைப் பார்க்க விழைகிறாள்” என்றான். இடும்பி “நானும் அவர்களைப் பார்க்க விரும்பினேன். இன்று நம் மைந்தன் தலைமை ஏற்ற நாள் அல்லவா? காணிக்கைகளை கொண்டுவரவேண்டுமென எண்ணியிருந்தேன். விளையாட்டில் அனைத்தையும் மறந்துவிட்டேன்” என்றாள். “இவனைப் பார்ப்பதைத் தவிர அன்னைக்கு வேறேதும் தேவைப்படாது” என்றான் பீமன். கடோத்கஜன் “பாட்டியிடம் நான் இன்றுமுதல் அரசன் என்று சொல்லியிருந்தேன்… மணிமுடி உண்டா என்று கேட்டார்கள். இல்லை, கோல் மட்டுமே என்றேன்” என்றான்.

குடிலைச்சுற்றி கூட்டம் கூட்டமாக மான்கள் மேய்ந்துகொண்டிருந்தன. பின்னிரவில் முழுமையாகவே மானுட ஓசைகள் அடங்கியபின்னரே குதிரைகள் வரும். அங்கே மனிதர்களும் நெருப்பும் இருப்பதனால் புலி அணுகாது, மனிதர்கள் தேவைக்குமேல் வேட்டையாடுவதில்லை என மான்கள் அறிந்திருந்தன. அவர்கள் புல்வெளியில் நடந்து சென்றபோது தரை வழியாகவே ஒலியை அறிந்து வெருண்டு தலைதூக்கி காதுகளை முன்னால் கோட்டி, வால் விடைத்து, பச்சைநிற ஒளி மின்னிய கண்களால் நோக்கின. அவர்களின் ஒவ்வொரு காலடியும் அவற்றின் உடலில் தடாகத்து நீரில் அலையெழுவது போல அசைவை உருவாக்கியது. “பூட்டிய வில்லில் அம்புகள் போல நிற்கின்றன தந்தையே” என்றான் கடோத்கஜன். “விற்கலையையும் கற்கத் தொடங்கிவிட்டாயா?” என்றான் பீமன். கடோத்கஜன் “சிறியதந்தை எனக்கு அடிப்படைகளை கற்பித்தார்” என்றான்.

பேச்சொலி கேட்டு குடிலின் உள்ளிருந்து குந்தி எட்டிப்பார்த்தாள். கடோத்கஜனைக் கண்டதும் ஓடிவந்து கைகளை விரித்து “பைமீ… வா வா… உச்சிப்போது முதலே உனக்காகத்தான் காத்திருந்தேன்…” என்றாள். கடோத்கஜன் ஓடிச்சென்று அவளை அணைத்துக்கொண்டு அப்படியே தூக்கி தன் தோள்மேல் வைத்துக்கொண்டு சுழன்றான். குந்தி “மெல்ல மெல்ல… அய்யய்யோ” என்று சிரித்துக்கொண்டே கூவி அவன் தலையை தன் கையால் அறைந்தாள். பீமனும் இடும்பியும் சென்று குடில் முன்னால் இருந்த மரப்பீடத்தில் அமர்ந்துகொண்டு சிரித்தபடி நோக்கினர். கடோத்கஜன் குந்தியுடன் புல்வெளியில் ஓடினான். மான்கள் குளம்புகள் ஒலிக்க பாய்ந்து வளைந்து விழுந்து துள்ளி எழுந்து விலகின.

குந்தியை தூக்கிச் சுழற்றி மேலே போட்டு பிடித்தான் கடோத்கஜன். இருளுக்குள் அவர்களின் சிரிப்பொலி கேட்டுக்கொண்டே இருந்தது. குந்தி மூச்சுவாங்க உரக்க சிரித்து “மூடா… வேண்டாம்… பீமா, இவனைப்பிடி! இதென்ன இத்தனை முரடனாக இருக்கிறான்! பைமீ… அரக்கா… அரக்கா… என்னை விடு” என்று கூவிக்கொண்டிருந்தாள். பீமன் “அன்னையை குழந்தையாக்கும் கலை இவனுக்கு மட்டுமே தெரிகிறது” என்றான். “அவர்களை காட்டுக்குள் தூக்கிக் கொண்டு சென்றிருக்கிறான். குலத்தவர் என்னிடம் சினந்து சொன்னார்கள். அவர்களுக்கு மைந்தனிடம் அதைச் சொல்ல அச்சம்…” என்றாள்.

அர்ஜுனனும் நகுலனும் சகதேவனும் சாலிஹோத்ரரின் பெருங்குடிலின் உள்ளிருந்து வந்தனர். அரையிருளில் அவர்களின் ஆடைகளின் வெண்மை அசைவது தெரிந்ததும் இருவரும் எழுந்தனர். அர்ஜுனன் “மூத்தவரே, இன்று உங்கள் மைந்தன் குடித்தலைமை கொள்கிறான் என்றானே” என்றான். “அத்தனை பேரிடமும் சொல்லியிருக்கிறானா? எப்போது சொன்னான்?” என்றான் பீமன். “நேற்று முன்தினம் அவன் எங்களை காட்டுக்குள் கூட்டிச்சென்றான்” என்றான் நகுலன்.

பீமன் நகைத்து “மானுடர் அவர்களின் காடுகளை தொடக்கூடாதென்பது நெறி. இடும்பர்கள் உடனே உங்களை கொன்றிருக்கவேண்டும்” என்றான். அர்ஜுனன் “அவனைப்பார்த்தாலே அவர்கள் தலைகுனிந்து விலகிச் செல்கிறார்கள்… ஒவ்வொரு கண்ணிலும் அச்சம் தெரிந்தது. மூத்தவரே, அரக்கர்குலத்திலேயே இவனளவுக்குப் பெரியவர் எவரும் இல்லை என நினைக்கிறேன்” என்றான். அப்பால் குந்தி “அய்யய்யோ… என்ன இது” என்றாள். கடோத்கஜன் அவளை தன் இருகைகளிலும் தூக்கி தலைக்குமேல் சுழற்றினான்.

”எங்களை அவன் தன் தோளில் ஏற்றி உச்சிமரக்கிளைக்கு கொண்டுசென்று கீழே வீசினான். நாங்கள் கிளைகள் வழியாக அலறியபடி மண்ணில் விழுவதற்குள் வந்து பிடித்துக்கொண்டான். மூத்தவரே, அவன் காற்றின் சிறுமைந்தன். அவன் ஆற்றலுக்கு அளவே இல்லை” என்றான் நகுலன். சகதேவன் “மதகளிறின் மேல் என்னை ஏற்றிவிட்டுவிட்டான். அது இவன் குரலைக் கேட்டு அஞ்சி மூங்கில்காடு வழியாக வால் சுழற்றிக்கொண்டு ஓடியது. அஞ்சி அதன் காதுகளைப் பிடித்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டு அமர்ந்துவிட்டேன்” என்றான்.

அர்ஜுனன் இடும்பியிடம் தலைதாழ்த்தி “வணங்குகிறேன், மூத்தவர் துணைவியே” என்றான். நகுலனும் சகதேவனும் வந்து குனிந்து அவள் கால்களைத் தொட்டு வணங்கினர். ஒவ்வொரு முறை அவர்கள் வணங்கும்போதும் இடும்பி வெட்கி மெல்லிய குரலில் சிரித்துக்கொண்டுதான் ”நலம் திகழ்க” என்று வாழ்த்துவது வழக்கம். கடோத்கஜனை நோக்கியபடி ”அரசனாக ஏழுவயதிலேயே ஆகிவிட்டான். நம் மூத்தவருக்கு முப்பத்தி ஐந்து வயதாகிறது, இன்னமும் இளவரசர்தான்” என்றான் நகுலன்.

“அதற்கென்ன செய்வது? நம் மூதாதை ஒருவர் அறுபத்தாறு வயதில் பட்டமேற்றிருக்கிறார்” என்றான் அர்ஜுனன். “மூத்தவர் இன்னமும் உரிய ஆட்சிமுறை நூல்களை கற்று முடிக்கவில்லை… ஐயம்திரிபறக் கற்றபின்னரே ஆட்சி. அதில் தெளிவாக இருக்கிறார்.” நகுலனும் சகதேவனும் சிரித்தனர். ”அன்னைக்கு இன்று ஏதோ செய்தி வந்திருக்கிறது. காலைமுதலே மகிழ்ச்சியுடன் இருக்கிறார்” என்றான் அர்ஜுனன் அப்பால் அமர்ந்தபடி. “மூத்தவரிடமும் அதை சொல்லியிருக்கிறார். அவர் வழக்கம்போல கவலைகொண்டு நூல்களை ஆராயத் தொடங்கிவிட்டார்.”

கடோத்கஜன் குந்தியுடன் திரும்பி வந்தான். குந்தி “பைமீ, போதும்… இறக்கு என்னை” என்று சொல்லி மூச்சுவாங்கினாள். அவளை இறக்கி விட்ட பின் அவன் திரும்பி நகுலனிடம் “சிறிய தந்தையே, நாம் ஒரு விற்போரில் ஈடுபட்டாலென்ன?” என்றான். “இரவிலா? இரவில் அரக்கர்களுக்கு மாயம் கூடிவரும் என்றார்களே” என்றான் நகுலன். “நல்ல கதை. இரவில் பாம்புகளை அஞ்சி நாங்கள் உறிகளில் துயில்கிறோம்” என்றான் கடோத்கஜன். இடும்பி “விளையாட்டுக்கெல்லாம் இனிமேல் நேரமில்லை. போதும்” என்றாள்.

குந்தி மூச்சிரைக்க அமர்ந்து ஆடைகளை சீராக்கிக் கொண்டதும் இடும்பி குனிந்து அவள் கால்களைத் தொட்டு வணங்கினாள். “அனைத்து நலன்களும் சூழ்க” என்று குந்தி அவளை வாழ்த்தினாள். கடோத்கஜன் அர்ஜுனனின் அம்பறாத்தூணியில் இருந்து ஒரு நாணல் அம்பை எடுத்து வானில் எறிந்தான். அது சுழன்று திரும்ப வந்ததைக் கண்டு அஞ்சி விலகி ஓடினான். அர்ஜுனன் அதை கையால் பிடித்தபின் கடோத்கஜனின் தலையில் ஓங்கி அறைந்து சிரித்தான். “அம்புகள் மாயம் நிறைந்தவை” என்று கடோத்கஜன் விழிகளை உருட்டி சொன்னான். “அவற்றில் பறவைகளின் ஆன்மா வாழ்கிறது.”

இடும்பி “இன்று மைந்தன் கோலேந்தி குடித்தலைவனானான் அரசி. இதுவரை இடும்பர் குடியில் இவனளவு விரைவாக எவரும் வேட்டையாடி மீண்டதில்லை. அதுவும் பெரிய எருமைக்கன்று. குடித்தலைவர்கள் சொல்லடங்கிப்போனார்கள்” என்றாள். இன்னொரு அம்பை எடுத்து குறி பார்த்து குடிலின் கூரையை நோக்கி விட்ட கடோத்கஜனை நோக்கிய குந்தி “அவன் உங்கள் குடியில் தோன்றிய முத்து” என்றாள். “அவன் ஒரு வீரியம் மிக்க விதை. இத்தனை ஆற்றல் கொண்டவனாக அவனை உருவாக்கிய தெய்வங்களுக்கு மேலும் சிறந்த நோக்கங்கள் இருக்கவேண்டும்.”

சிலகணங்கள் அவனை நோக்கியபின் சொற்களைத் தேர்ந்து குந்தி சொன்னாள் “உங்கள் குலவழக்கப்படி நீங்கள் இந்தக் காட்டை கடப்பதில்லை என்று அறிவேன். ஆகவே உங்கள் குடிக்கு வெளியே அவன் மணம் முடிக்கவும் போவதில்லை.” இடும்பி அவள் சொல்லப்போவதை எதிர்நோக்கி நின்றாள். “ஆனால் அவன் அவனுக்குரிய மணமகளை கண்டடையவேண்டுமென விழைகிறேன். அரக்கர்குலத்துக்கு வெளியே ஆற்றல் மிகுந்த ஓர் அரசகுலத்தில் அவன் தன் அரசியை கொள்ளவேண்டும். அவள் வயிற்றில் பிறக்கும் மைந்தனின் வழித்தோன்றல்கள் ஷத்ரியர்களாகி நாடாளவேண்டும்…”

இடும்பி கைகூப்பி “தங்கள் சொற்களை ஆணையாகக் கருதுகிறேன்” என்றாள். “இடும்பர்நாடு என்றும் அஸ்தினபுரியின் சமந்தநாடு. பாரதவர்ஷத்தை அஸ்தினபுரி ஆளும்போது அதன் சக்ரவர்த்தியுடன் குருதியுறவு கொண்டவர்களாகவே இடும்பர்குலத்து அரசர்கள் கருதப்படுவார்கள்” என்றாள். அவள் சொல்லப்போவதை இடும்பி உய்த்தறிந்துகொண்டதுபோல அவள் உடலில் ஓர் அசைவு வெளிப்பட்டது. ”நாங்கள் நாளை விடிகாலையில் கிளம்புகிறோம். இத்தனைநாள் இங்கே காத்திருந்ததே வலுவான ஷத்ரிய குடி ஒன்றில் என் மைந்தன் மணம்கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான். அந்த வாய்ப்பு வந்துள்ளது” என்றாள்.

“வெற்றி நிறைக” என்றாள் இடும்பி. “என் குடியின் முதல் மாற்றில்லமகள் நீயே. நீ என் முதல்மைந்தனின் துணைவியாக இருந்திருந்தால் அஸ்தினபுரியின் பட்டத்தரசியாகவும் உன்னையே எண்ணியிருப்பேன்” என்றபின் குந்தி திரும்பி கடோத்கஜனை அருகே அழைத்தாள். கீழே விழுந்த அம்பை ஓடிச்சென்று எடுத்த அவன் திரும்பி அருகே வந்தான். “இவன் அஸ்தினபுரியின் முதல் இளவரசன். பீமசேனஜன் என்றே இவன் அழைக்கப்படவேண்டும். உன் குலமும் இவனை அஸ்தினபுரியின் இளவரசனாகவே எண்ண வேண்டும்” என்றாள் குந்தி.

கடோத்கஜன் “நீங்கள் கிளம்புகிறீர்களா, பாட்டி?” என்றான். குந்தி புன்னகையுடன் ஏறிட்டு நோக்கி “ஆம், பைமி. நாங்கள் நாளை காலை கிளம்பிச் செல்கிறோம். எங்கள் நோக்கம் நிறைவேறுமெனத் தெரிகிறது” என்றாள். அவள் அருகே வா என்று கைநீட்ட அவன் அவள் காலடியில் அமர்ந்தான். அவன் தலை அவள் உயரத்திற்கு இருந்தது. மென்மயிர் படர்ந்த பெரிய தலையை வருடியபடி “நீ அரசன், உனக்கு அளிப்பதற்கு எங்களிடம் ஏதுமில்லை. உன்னிடம் கோரிப்பெறுவதற்கே உள்ளது. உன் தந்தையருக்கு என்றும் உன் ஆற்றல் துணையாக இருக்கவேண்டும்” என்றாள்.

“எண்ணும்போது அங்கே நான் வந்துவிடுவேன்” என்றான் கடோத்கஜன். “பைமசைனி, நீ அழியாப்புகழ்பெறுவாய். உன் குருதியில் பிறந்த குலம் பெருகி நாடாளும்” என்றாள் குந்தி. பெருமூச்சுடன் அவன் செவிகளைப் பிடித்து இழுத்து “அஸ்தினபுரியின் அரண்மனையில் உனக்கு அறுசுவை உணவை என் கையால் அள்ளிப் பரிமாறவேண்டும் என விழைகிறேன்… இறையருள் கூடட்டும்” என்றாள்.

அப்பால் தருமன் வருவது தெரிந்தது. “அன்னையே, அது யார் பைமசைனியா?” என்றான் தருமன். “மூடா, இன்று உச்சி முதலே உன்னை எண்ணிக்கொண்டிருந்தேன். நீ கோலேந்தி நிற்பதை நான் காண வேண்டாமா?” என்றபடி அணுகிவந்தான்.கடோத்கஜன் அவனை நோக்கி ஓடிச்சென்று “நான் தந்தையுடன் மர உச்சியில்…” என்றபின் அவன் கையில் இருந்த சுவடிகளை நோக்கி ”இந்தச் சுவடிகளை நான் எப்போது வாசிப்பேன்?” என்றான். ”அரக்கர்கள் வாசிக்கலாகாது, வேள்வி செய்யலாகாது. அது அவர்களின் குலநெறி” என்றான் தருமன் கடோத்கஜனின் தோளை வளைத்தபடி.

“நான் வேள்விசெய்யப்போவதில்லை. ஆனால் வாசிப்பேன்” என்றான் கடோத்கஜன். குந்தி “பைமி, உன் தந்தையரை வணங்கி வாழ்த்துக்களை பெற்றுக்கொள்” என்றாள். கடோத்கஜன் சுவடிகளைக் கொடுத்தபின்னர் தருமனின் கால்களைத் தொட்டு வணங்கினான். “அழியாப்புகழுடன் இரு மைந்தா” என்றான் தருமன். “காடுறைத் தெய்வம் என்று கேட்டிருக்கிறேன். உன் வடிவில் பார்த்தேன். என்றும் உன் அன்பு என் குடிக்குத் தேவை.” கடோத்கஜன் அர்ஜுனனையும் நகுலனையும் சகதேவனையும் வணங்கி வாழ்த்து பெற்றான்.

குந்தி எழுந்து அவனை மீண்டும் அணைத்து “நூல்களைக் கற்க நீ விழைந்தது நன்று, மைந்தா. ஆனால் எந்த குருகுலத்திலும் சென்று சேர்ந்து நூல்களை கற்காதே. உன் காடும் முன்னோரும் கற்பித்தவற்றை இழந்துவிடுவாய்” என்றாள். “நூல்களை உன் காட்டுக்குக் கொண்டுவரச்சொல். அங்கேயே அமர்ந்து வாசித்து அறிந்துகொள். நீ பிறவியிலேயே பேரறிஞன். மொழிகளையும் நூல்களையும் கற்பது உனக்கு விளையாட்டு போன்றது” என்றாள். அவன் தலையை கைதூக்கி தொட்டு “பைமசேனா, பெருவாழ்வு அடைக” என்றாள்.

இடும்பி மீண்டும் குந்தியை வணங்கி விடைபெற்றாள். கடோத்கஜன் பீமனை வணங்கியபோது அவன் மைந்தனை அள்ளி நெஞ்சுடன் அணைத்து பெருமூச்சு விட்டான். கடோத்கஜன் பீமனின் அணைப்பில் தோளில் தலைவைத்து நின்றான். பீமன் மீண்டும் பெருமூச்சு விட்டான். ஏதோ சொல்லப்போவதுபோலிருந்தது. ஆனால் அவனிடமிருந்து பெருமூச்சுகள்தான் வந்துகொண்டிருந்தன. பின்பு கைகளைத் தாழ்த்தி “சென்று வா, மைந்தா…” என்றான். கடோத்கஜன் திரும்பி குந்தியை நோக்கி தலைவணங்கிவிட்டு நடந்தான். இடும்பி அவனைத் தொடர்ந்து சென்றாள்.

இருவரும் இருளுக்குள் சென்று மறைவது வரை அவர்கள் அங்கேயே நோக்கி நின்றனர். இடும்பி திரும்பித்திரும்பி நோக்கிக்கொண்டு தளர்ந்த நடையுடன் சென்றாள். கடோத்கஜன் ஒருமுறைகூட திரும்பவில்லை. அவர்கள் செல்லச்செல்ல பீமனின் விழிகள் மேலும் கூர்மை கொண்டு அவர்களை நோக்கின. காட்டின் எல்லைவரைக்கும் கூட வெண்ணிற அசைவாக அவர்களின் தோலாடை தெரிந்தது. பின்னர் மரங்கள் அசைவதையும் அவன் கண்டான்.

தருமன் பீமனின் தோளைத் தொட்டு “அன்னை சொன்னது உண்மை, மந்தா” என்றான். “இங்கே இவர்களின் பேரன்பில் நீ முழுமையாகவே சிக்கிக் கொண்டுவிட்டாய். இத்தருணத்தில் உன்னை இங்கிருந்து மீட்கவில்லை என்றால் பிறகெப்போதும் முடியாது” என்றான். அர்ஜுனன் “இங்கே மூத்தவரின் வாழ்க்கை முழுமைகொள்ளுமென்றால் அதன்பின் அவர் எதை நாடவேண்டும்?” என்றான். குந்தி “அவன் பாண்டவன். அஸ்தினபுரியின் மணிமுடிக்கும் குடிகளுக்கும் அவன் செய்தாகவேண்டிய கடமைகள் உள்ளன” என்றாள்.

தருமன் “மந்தா, பாஞ்சால மன்னன் துருபதன் தன் மகளுக்கு சுயம்வர அறிவிப்பு செய்திருக்கிறார். அன்னைக்கு அச்செய்தி இன்றுகாலைதான் வந்தது. நாம் அதற்காகவே இங்கிருந்து கிளம்பவிருக்கிறோம். எவ்வகையிலும் அவ்வுறவு நமக்கு நலம் பயப்பதே” என்றான். அர்ஜுனன் திகைப்புடன் “துருபதனா? அவரை நாம்…” என்று சொல்லத் தொடங்க தருமன் “ஆம், அதைப்பற்றித்தான் நான் அன்னையிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவரை நாம் வென்று அவமதித்தோம். நாம் அவர் மகளை முறைப்படி மணக்க அவர் ஒப்ப மாட்டார். ஆனால் சுயம்வரத்தில் ஷத்ரியர்கள் எவரும் பங்குகொள்ளலாம்” என்றான்.

அர்ஜுனன் “ஆனால்…” என்று மீண்டும் தொடங்கினான். தருமன் “நாம் அவளை வென்றால் அதன்பின் துருபதன் தடையேதும் சொல்லமுடியாது, பார்த்தா. அவர் நம்முடன் மணவுறவு கொள்வது போல நமது இன்றைய நிலையில் சிறப்பானது ஏதுமில்லை. பாரதவர்ஷத்தின் மிகத்தொன்மையான நான்கு அரசகுடிகளில் ஒன்று பாஞ்சாலம். அவர்களின் கொடிவழியும் நம்மைப்போலவே விஷ்ணு, பிரம்மன், அத்ரி, சந்திரன், புதன், புரூரவஸ், ஆயுஷ், நகுஷன், யயாதி என்றே வருவது. பாண்டவர்களாகிய நமக்கு இன்று இல்லாத ஷத்ரிய மதிப்பு அவர்களின் குடியில் மணம்செய்தால் வந்துவிடும். பாஞ்சாலத்திடம் மணமுடித்தால் பின்னர் உங்கள் அனைவருக்கும் ஷத்ரிய அரசிகள் அமைவார்கள்” என்றான்.

தருமன் குரலைத் தாழ்த்தி “நம்மிடம் தோற்றபின் சென்ற பதினேழாண்டுகாலத்தில் அவர் தன் படைகளை மும்மடங்கு பெருக்கி வல்லமை பெறச்செய்திருக்கிறார். ஒரு அக்‌ஷௌகிணி அளவுக்கு படைகள் முழுப் படைக்கலங்களுடன் இருப்பதாக ஒற்றர்கள் சொல்கிறார்கள். அவர் குலங்கள் ஐந்தும் பிரிக்கமுடியாத ஒற்றுமை கொண்டவை. இன்று தன் மைந்தர்களுக்கு அத்தனை குலங்களில் இருந்தும் பெண்கொண்டு அவ்வொற்றுமையை துருபதன் பேணி வளர்த்திருக்கிறார்” என்றான். “இயல்பிலேயே பாஞ்சாலர்கள் மாவீரர்கள் பார்த்தா. துருபதனின் தம்பி சத்யஜித்தின் வீரத்தை நாமே பார்த்தோம். பட்டத்து இளவரசன் சித்ரகேதுவும் பெருவீரன்.”

“துருபதனின் பன்னிரு மைந்தர்களும் மாவீரர்கள்தான்” என்றாள் குந்தி. “சுமித்ரன். ரிஷபன் , யுதாமன்யு, விரிகன், பாஞ்சால்யன், சுரதன், உத்தமௌஜன், சத்ருஞ்ஜயன், ஜனமேஜயன், துவஜசேனன் அனைவருமே அக்னிவேச குருகுலத்தில் பயின்றவர்கள். இளையமைந்தன் திருஷ்டத்யும்னன் துரோணரிடம் பயில்கிறான். அத்துடன் அவன் தந்தை அக்னிவேசரின் மாணவனும் மாவீரனுமாகிய சிகண்டி என்னும் இருபாலினத்தவனை எடுத்துவளர்த்தான். அவனை துருபதன் தன் மைந்தனாக எரிசான்றாக்கி ஏற்றுக்கொண்டிருக்கிறான். பாஞ்சாலத்தில் மணம்கொள்பவன் இன்று பாரதவர்ஷத்தின் மாவீரர்கள் பதினைந்துபேரை தனக்கு உறவினராக்கிக் கொள்கிறான்.”

“நாம் இன்று படைபலமில்லாத தனியர். பாஞ்சாலத்தின் படைகளை நீ தலைமை ஏற்று நடத்தமுடியும் என்றால் நாம் அஸ்தினபுரியையே போரில் வென்றெடுக்க முடியும்” என்றான் தருமன். “நம்மை அதர்மத்தில் அழித்துவிட்டு அஸ்தினபுரியை கௌரவர்கள் ஆள நாம் ஒருபோதும் ஒப்பக்கூடாது. அதன் பெயர் ஆண்மையே அல்ல. நம் குலத்திற்கே அது இழுக்கு. நாம் திரும்பிச் செல்வதற்காகவே ஒளிந்து வாழ்கிறோம். நம் படைகள் அஸ்தினபுரியை நோக்கி செல்லும்போது அவர்கள் அறியட்டும் பாண்டுவின் குருதியின் நுரை எப்படிப்பட்டது என்று.”

பீமன் “அங்கே பிதாமகர் உள்ளவரை எவராலும் அஸ்தினபுரியை வெல்லமுடியாது” என்றான். குந்தி “ஆம், ஆனால் போரை தொடங்க முடியும். சமரசப் பேச்சுக்கு வரும்படி அவர்களை கட்டாயப்படுத்த முடியும். நாம் இன்று இலக்காக்குவது அஸ்தினபுரியின் மணிமுடியை அல்ல. பாதி அரசை மட்டுமே. முழுமையான நாட்டை வெல்வதற்கு நாம் பிதாமகரின் இறப்புவரை காத்திருக்கலாம்” என்றாள்.

பீமன் சிரித்து “விரிவாகவே அனைத்தையும் சிந்தித்துவிட்டீர்கள், அன்னையே” என்றான். “ஆம், நான் பாஞ்சால இளவரசியைப்பற்றி எண்ணத் தொடங்கி நெடுநாட்களாகிறது. அவள் பிறந்ததுமே சூதர்கள் எனக்கு செய்திகொண்டு வந்தனர். நூறு வெவ்வேறு நிமித்திகர் அவள் பிறவிநூலைக் கணித்து அவள் பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினி ஆவாள் என்று குறியுரைத்தனர் என்றனர் சூதர். பாரதவர்ஷத்தை ஆளும் அரசி தனக்கு மகளாகவேண்டும் என்பதற்காகவே துருபத மன்னன் சௌத்ராமணி என்னும் வேள்வியைக் செய்து அதன் பயனாக அவளைப் பெற்றான் என்றார்கள்.”

“எளியவழி, சக்ரவர்த்தினியை மணந்தால் சக்ரவர்த்தி ஆகிவிடலாம்” என்றான் பீமன். குந்தி சினத்துடன் “மந்தா, இது நகையாடலுக்குரியதல்ல. அவளைப்பற்றி நான் அறிந்ததெல்லாம் வியப்பூட்டுபவை. அவள் சக்ரவர்த்தினியாகவே பிறந்தவள் என்கிறார்கள். கருவறையில் சிம்மம் மேல் எழுந்தருளிய கொற்றவை போன்று கரியபேரெழில் கொண்டவள் என்கிறார்கள். ஏழுவயதிலேயே அரசநூல்களையும் அறநூல்களையும் கற்றுமுடித்தாளாம். பைசாசிகமொழிகள் உட்பட ஏழு மொழிகளை அறிந்திருக்கிறாளாம். பன்னிரு உடன்பிறந்தாரும் அவள் சொல்லைக் கேட்டே நாடாள்கிறார்கள் என்கிறார்கள் ஒற்றர்கள்” என்றாள்.

“அன்னையே, அத்தகைய சக்ரவர்த்தினி ஏன் நாடற்றவரும் தூய ஷத்ரியக் குருதி அற்றவருமாகிய மூத்தபாண்டவர் கழுத்தில் மாலையிடவேண்டும்?” என்றான் பீமன். “ஆம், அந்த ஐயமே என்னை வாட்டிக்கொண்டிருந்தது. இன்று காலை வந்த செய்திதான் என்னை ஊக்கம் கொள்ளச் செய்தது” என்றாள் குந்தி. “பாரதவர்ஷத்தின் மாவீரனையே தன் மகள் மணம்கொள்ளவேண்டுமென துருபதன் எண்ணுகிறான். அவனே அவள் அமரும் அரியணையை காக்கமுடியும் என்று அவன் நம்புவது இயல்பே. ஆகவே மணம் கொள்ளலுக்கு அவன் போட்டிகளை அமைக்கவிருக்கிறான். எந்தப்போட்டி என்றாலும் அதில் பார்த்தனோ பீமனோ வெல்வது உறுதி.”

அர்ஜுனன் பெருமூச்சுடன் “அன்னையே, இவற்றை முழுமையாக அறிந்து என்ன செய்யப்போகிறோம்? தாங்கள் முடிவெடுத்துவிட்டீர்கள். மூத்தவர் ஒப்புக்கொண்டு விட்டார். கட்டுப்படுவது எங்கள் கடமை” என்றான். எழுந்துகொண்டு “இளையோரே, நான் துயில்கொள்ளச் செல்கிறேன். வருகிறீர்களா?” என்றான். நகுலனும் சகதேவனும் அன்னைக்கு தலைவணங்கிவிட்டு அவன் பின்னால் சென்றனர். தருமன் “இறுதியாக சில ஆப்தமந்திரங்களை எனக்கு மட்டும் பயிற்றுவிப்பதாக சாலிஹோத்ரர் சொன்னார். நான் அங்கு செல்கிறேன்” என்றபின் தலைவணங்கி திரும்பிச்சென்றான்.

பீமனும் எழ எண்ணினான். ஆனால் உடலை அசைக்கும் ஆற்றல் அந்த விழைவுக்கு இருக்கவில்லை. தலைகுனிந்து இருளில் விழிவெளிச்சத்தாலேயே துலங்கிய மண்ணை நோக்கிக் கொண்டு அமர்ந்திருந்தான். குந்தியும் தூரத்தில் காற்றில் அசைந்த இருண்டகாட்டை நோக்கிக் கொண்டிருந்தாள். சில மான்கள் தும்மல் போல ஓசையிட்டன. அவை காதுகளை அடித்துக்கொள்ளும் ஒலி கேட்டது. மிக அருகே ஒரு மான் குறிய வாலை விடைத்து அசைத்தபடி கடந்து சென்றது. அதன் பின்னால் சென்ற சிறிய மான் ஒன்று அவர்களை நோக்கியபடி நின்று தலைதாழ்த்தி காதை பின்னங்காலால் சொறிந்தபின் கண்கள் மின்ன திரும்பிக்கொண்டது.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

குந்தி மெல்ல அசைந்த ஒலி கேட்டு பீமன் திரும்பினான். “மந்தா, உன்னை இங்கிருந்து பிரித்துக்கொண்டு செல்கிறேன் என எண்ணி சினம் கொள்கிறாயா?” என்றாள் குந்தி. “சினமேதும் இல்லை, அன்னையே” என்றான் பீமன். குந்தி “நான் முதியவள். என் சொற்களை நம்பு. இவர்கள் வேறு உலகில் வாழ்பவர்கள். இவர்களின் பேரன்பை நான் அறிந்துகொள்கிறேன். ஆனால் நீ அவர்களுடன் இணைந்து வாழமுடியாது. நீ அஸ்தினபுரியில் என் வயிற்றில் பிறந்துவிட்டாய்” என்றாள். பீமன் தன் கைகளை நோக்கி சிலகணங்கள் இருந்தபின்  “உண்மைதான், அன்னையே” என்றான்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

முந்தைய கட்டுரைசாதியும் அடையாளமும்
அடுத்த கட்டுரைசினிமா – கடிதம்