இனிய ஜெயம்,
ஏன் சில குறிப்புகள் பதிவு வாசித்தேன்.
எல்லா துறைகளிலும் இருக்கும் பேரிடரே ஊடகத் துறையிலும் நிலவுகிறது. ஜர்னலிசம் படித்து முடித்தவர் மட்டுமே பணியில் அமர வேண்டும் என ஒரு சட்டம் வந்தால், பத்திரிக்கை தொலைக்காட்சி என ஒட்டுமொத்த ஊடகத் துறையிலும் சேர்த்து ஒரு பத்து பேர் தேறுவார்கள் என நினைக்கிறேன்.
ஊடகங்கள் பெருத்து விட்டன. செய்தி மழை. இந்த மழையை ஊடகங்களுக்குக் கொண்டு சேர்க்கும் நுண்ணுணர்வு கொண்ட ஊடகவியலாளர் அனேகமாக இன்று எவரும் [குறைந்த பட்சம் தமிழில்] இல்லை.
இணையம் விற்பன்னர்களை ‘அழித்தது’ இங்கும் தொடர்கிறது. உங்களுக்கு வாட்ஸ் ஆப் இயக்கத்தெரிந்தால் போதும் [அதை இயக்குவது மனிதனா மந்தியா என்று மேலாளர்கள் ஆய்வு செய்ய மாட்டார்கள்] இன்று உங்களால் ஒரு ஊடகத்தில் ப்ரீ லான்சராக இணைந்து ஜனநாயகத்தின் நான்காவது தூணின் அடித்தளத்தை பலம் கொள்ளவைக்கும் பணியில் ஈடுபடலாம்.
ஊடகவியலாளராக இருப்பதன் பெரும் சௌகரியம் எந்த அரங்கிலும் முதல் வரிசை கிடைக்கும். எந்த துறை சார்ந்த எந்த பிரபலத்தையும் அவர்களை குறித்து சிறு அறிமுகம் கூட தனக்குள் செய்து கொள்ளாமல் அவர்களை அணுகி மணிக் கணக்கில் வறுத்து கொல்லலாம்.
சமீபத்தில் பண்ருட்டியில் தனது கண் மருத்துவமனை துவக்க விழாவுக்கு மருத்துவர் அகர்வால் வந்து துவக்க உரையாக இந்தியாவின் முதல் சிக்கலான ‘பார்வை இழப்பு’ குறித்து கால் மணி நேரம் பேசினார்.
முடிந்ததும் ‘மூத்த பத்திரிக்கையாளர்’ ஒருவரின் முதல் கேள்வி ‘இந்தியாவில் பெருகிவரும் பார்வை இழப்பு பிரச்னை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?’
நெய்வேலி நிலக்கரி நிறுவனராக முன்பு அன்சாரி எனும் நண்பர் இருந்தார். நிறுவனம் குறித்து ஏதேனும் பத்திரிக்கையாளர் சந்திப்பு எனில் அவரே கேள்விகளையும் எழுதி அவரே பதிலும் எழுதி தந்துவிடுவார்.
பண்டிகைக் காலங்களில் அரசியல்வாதி வீடுகள் முன் இரவலர் போல இந்த நிருபர்கள் வரிசையைக் காணலாம். ‘அன்பளிப்பு’ கிட்டாத ஒரு நாள் இவர்கள் வாழ்வில் இருண்ட நாள்.
இவர்களைக் கொண்டுதான் நமது கலாச்சார வெளி ‘மக்களை’ சேர்க்கிறது. அனைத்துக்கும் மேல் இன்றைய ஊடகங்களின் இன்றைய நிலைக்கு முக்கிய காரணம் ‘செய்திகள்’ உட்பட அதில் வரும் எதுவும் விளம்பரதாரர் நிகழ்ச்சியே. விளம்பரக் காசுதான் இன்று முக்கியமே தவிர ‘அறம் ‘எல்லாம் பிற்ப்பாடுதான்.
கடலூரின் பிரபல பள்ளி வெள்ளி விழா கொண்டாடியது. அதற்க்கு கவர்னரை அழைத்திருந்தது. அது அங்கீகாரமற்ற பள்ளி . ஆகவே கவர்னர் வரவில்லை. இது தெரியாத எந்த ஊடக நிறுவனமும் இல்லை. முக்கிய நாளிதழ்கள் எந்த மனத்தடையும் இல்லாமல் அன்றைய அப் பள்ளி விழாவின் விளம்பரத்தை வெளி இட்டு இருந்தன.
இதில் ஹிந்து மட்டும் விதிவிளக்கு. பள்ளி விளம்பரத்தை முழு பக்கம் வெளியிட்டு, ‘விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு பத்திரிக்கை பொறுப்பல்ல’ எனும் பொறுப்பான செய்தியை ஆட்டாம் புழுக்கை அளவு வெளியிட்டு இருந்தது.
ஆக நிகழ்வது எதுவோ அது இங்கு செய்தி ஆகாது. ‘மக்கள்’ விரும்புவது எதுவோ அதுவே இங்கு செய்தியாக வெளியாகும். இங்கு பத்திரிகை நிருபரின் முதல் வேலை தான் சார்ந்த பத்திரிக்கைக்கு விளம்பரம் சேகரிப்பது. செய்தி இரண்டாம் பட்சமே.தொன்னூறுகள் துவங்கி ஊடகம் எனும் கருவியின் அனைத்து கூறுகளும் இந்த கூறில் ஒடுங்கி விட்டது.
இன்று காந்தி பாரதி போன்றோர் இருந்திருந்தால் அவர்கள் முதலில் இந்த ஊடகங்களைக் கண்டுதான் தெறித்து ஓடி இருப்பார்கள்.
இன்று ஒரு பண்பாட்டு செயல்பாட்டாளின் இருப்பை ஊடகங்களுக்கு வெளியில் வைத்து மதிப்பிடுவதே அவனை ‘சரியாக’ அணுக ஒரே வழி.
கடலூர் சீனு