‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 63

பகுதி பதின்மூன்று : இனியன் – 5

பீமன் காட்டுக்குள் அவன் வழக்கமாக அமரும் மரத்தின் உச்சிக்கிளையில் அமர்ந்திருந்தான். அவனைச்சூழ்ந்து பின்பொழுதின் வெள்ளிவெயில் இலைத்தழைப்பின் விரிவுக்கு மேல் கால்களை ஊன்றி நின்றிருந்தது. காற்று வீசாததனால் இலைவெளி பச்சைநிறமான பாறைக்கூட்டம் போல அசைவிழந்து திசை முடிவு வரை தெரிந்தது. பறவைகள் அனைத்தும் இலைகளுக்குள் மூழ்கி மறைந்திருக்க வானில் செறிந்திருந்த முகில்கள் மிதக்கும் பளிங்குப்பாறைகள் போல மிக மெல்ல கிழக்கு நோக்கி சென்றுகொண்டிருந்தன.

முகில்களை நோக்கியபடி பீமன் உடலை நீட்டி படுத்தான். அவனுக்குக் கீழே அந்த மரத்தில் அமர்ந்திருந்த பறவைகள் கலைந்து ஒலியெழுப்பிக்கொண்டிருந்தன. அவன் உள்ளத்தின் சொற்களாகவே அவை ஒலித்தன. அங்கு வந்து படுத்த சற்று நேரத்திலேயே மதுவின் மயக்கத்தில் அவன் துயின்றுவிட்டான். கங்கைப்படகு ஒன்றில் அவனை பாயாக கட்டியிருப்பதுபோன்ற கனவு வந்தது. அவன் காற்றில் உப்பி அதிர்ந்துகொண்டே இருந்தான். அவனைக் கட்டிய கொடிமரத்தில் இருந்தும் கயிறுகளில் இருந்தும் விடுபடுவதற்காக மூச்சை இழுத்து முழுத்தசைகளையும் இறுக்கி முயன்றான். அவனுக்குக் கீழே கங்கை நுரைத்துச் சுழித்து ஓடிக்கொண்டிருந்தது.

பின்னர் விழித்துக்கொண்டு எழுந்து சாய்ந்து படுத்தபடி முகில்களை நோக்கினான். பெரிய மலைபோன்ற முகிலுக்குப்பின்னால் சூரியன் இருந்தது. அதன் கதிர்கள் முகிலின் விளிம்புகளில் தோன்றி விரிந்து நிற்க அது ஒளிவிடும் வலையில் நின்றிருக்கும் சிலந்தி போலிருந்தது. அவன் புன்னகை செய்தான். தருமன் ஆயிரம் கரங்கள் விரித்த தெய்வம் போல என்று சொல்லியிருக்கக் கூடும். முகில்களின் இடைவெளி உருவாக்கிய ஒளித்தூண்களால் காட்டின் மேல் வானை கூரையாக அமைத்திருப்பதாக அவன் எண்ணிக்கொண்டான். மீண்டும் புன்னகை செய்துகொண்டான். ஒன்றுமே செய்யாமலிருக்கவேண்டும். உலகிலிருந்து எவ்வகையிலோ அயலாகிவிட்டிருக்கவேண்டும். இத்தகைய கவித்துவக் கற்பனைகள் உள்ளத்தில் எழுந்துகொண்டே இருக்கும்போலும்.

அவன் மூதாதைக்கற்களின் முற்றத்தை விட்டு கிளம்பும்போது இடும்பர்கள் அனைவருமே கள்மயக்கில் நிலையழிந்துவிட்டிருந்தனர். குழந்தைகள் வானிலிருந்து வீசப்பட்டவை போல புல்வெளியில் ஆங்காங்கே விழுந்து கிடந்தன. பெண்கள் சிலர் படுத்துக்கிடந்தபடியே கைநீட்டி குழறிப்பேசியும் சிரித்தும் புலம்பியும் புரண்டனர். புல்வெளியின் கீழ்ச்சரிவில் சில ஆண்கள் கூடி நின்று உரக்க கைநீட்டிப் பேசி பூசலிட்டனர். மரத்தடியில் தனியாக அமர்ந்து மேலும் குடித்துக்கொண்டிருந்தனர் சிலர். முதியவர்கள் தேவதாருப்பிசினை மென்றபடி புல்லில் அமர்ந்திருந்தனர். அவர்கள் விழிகள் வெறிமயக்கில் பாதி சரிந்திருந்தன. தலை அவ்வப்போது ஆடி விழுந்தது.

உருகிய கொம்புகளும் குளம்புகளுமாக தசை ஒட்டிய எலும்புக்கூடாக குட்டி எருமை தொங்கிக்கிடந்தது. மேலும் ஒரு முழு எருமையைச் சுட்டு அப்பால் தொங்கவிட்டிருந்தனர். அதன் விலாப்பகுதியில் தசை மிச்சமிருந்தது. அவற்றில் காகங்கள் அமர்ந்து பூசலிட்டு கூவியும் சிறகடித்து எழுந்தமர்ந்தும் ஊனைக் கொத்திக்கிழித்து உண்டன. வாயில் அள்ளியபடி பறந்து அப்பால் நின்ற மரங்களுக்குச் சென்றன. கடோத்கஜன் கைகால்களை விரித்து வெற்றுடலுடன் துயில்வதை பீமன் கண்டான். அப்பால் பெண்கள் நடுவே இடும்பி கிடந்தாள். அவன் மெல்ல எழுந்து நடந்து விலகியபோது கிழவர்களில் இருவர் திரும்பி நோக்கியபின் தலைஆட இமைசரிந்தனர்.

காட்டில் நடக்கும்போது பீமன் தனிமையை உணர்ந்தான். மீண்டும் சாலிஹோத்ரரின் தவச்சாலைக்கு செல்லத் தோன்றவில்லை. அங்கே அப்போது மாலைவேளைக்கான வேள்விக்கு ஒருக்கங்கள் தொடங்கிவிட்டிருக்கும். தருமன் முழு ஈடுபாட்டுடன் அதில் மூழ்கியிருப்பான். நகுலனும் சகதேவனும் அவனுக்கு உதவுவார்கள். அர்ஜுனன் பின்பக்கம் புல்வெளியில் அம்புப்பயிற்சி செய்யலாம். அல்லது காட்டின் விளிம்பில் அமர்ந்து பறவைகளை நோக்கிக்கொண்டிருக்கலாம். குந்தி தன் குடிலில் அன்றைய பணிகளை முடித்துவிட்டு நீரோடையில் குளித்து ஆடை மாற்றிக்கொண்டு வேள்விக்காக சாலிஹோத்ரரின் பெருங்குடிலுக்கு வந்திருப்பாள்.

வாழ்க்கை ஒரு தாளத்தை அடைந்துவிட்டிருந்தது. ஒவ்வொருநாளும் பிறிதைப்போலவே விடிந்தன. நிகழ்வுகளின்றி முடிந்தன. தருமன் சாலிஹோத்ர குருகுலத்தில் வைசேஷிக மெய்யியலையும் நியாயநூலையும் கற்றுத்தேர்ந்தான். சாலிஹோத்ர நீதிநூல் பன்னிரண்டாயிரம் சூத்திரங்கள் கொண்டது. அவற்றை முழுமையாக மனப்பாடம் செய்து அவற்றுக்கான ஆறுவகை உரைகளையும் கற்றான்.

அர்ஜுனனுக்கு சாலிஹோத்ரர் அவர்களின் தேகமுத்ராதரங்கிணி நூலைக் கற்பித்தார். ஒருவரின் எண்ணங்கள் இயல்பாக உடலில் எப்படி வெளிப்படும் என்ற கலையை சாலிஹோத்ர மரபு ஆயிரமாண்டுகளாக பயின்று தேர்ந்திருந்தது. தொலைவில் நிற்கும் ஒரு அயலவர் அல்லது விலங்கு அடுத்த கணம் என்னசெய்யக்கூடும் என்பதை அவரது உடலின் தசைகளிலும், விழிகளிலும் நிகழும் மெல்லிய மாற்றம் மூலமே உய்த்தறிய அர்ஜுனன் பயின்றான். எதிரே வரும் நாய் திரும்பிப்பாயும் இடத்தில் அது சென்றுசேரும்போது அவனுடைய வில்லில் இருந்து கிளம்பிய களிமண்ணுருண்டையும் சென்று சேர்ந்தது.

”மூத்தவரே, இவர்களின் உடல்வெளிப்பாட்டுக் கலையின் உள்ளடக்கம் ஒன்றே. உடலசைவுகளை நம் சித்தத்தால் அறிந்துகொள்ளக் கூடாது. நம் சித்தத்தின் அச்சம், விருப்பம், ஐயம் ஆகியவற்றை நாம் அந்த அசைவுகள் மேல் ஏற்றி புரிந்துகொள்வோம். பிற உடலின் அசைவுகளை நம் அகம் காண்கையில் முற்றிலும் சித்தத்தை அகற்றுவதையே இந்நூல் கற்பிக்கிறது. சித்தமில்லா நிலையில் நாம் அவர்களின் உடலை உள்ளமெனவே அறிகிறோம். மானுட உடலை மானுட உடல் அறியமுடியும். ஏனென்றால் மண்ணிலுள்ள மானுட உடல்களெல்லாம் ஒன்றோடொன்று இணைந்து ஒற்றைப்பிண்டமாகவே இங்கே இயங்குகின்றன என்று தேகமுத்ராதரங்கிணியில் ஒரு பாடல் சொல்கிறது” என்றான்.

பீமன் புன்னகைத்து “அதைத்தான் விலங்குகள் செய்கின்றன. விலங்காக ஆவதற்கும் மனிதர்களுக்கு நூல்கள் தேவையாகின்றன” என்றான். அர்ஜுனன் நகைத்து “ஆம், விலங்குகளை விலங்குகளாக வாழச்செய்யும் நூல்களையும் நாம் எழுதத்தான்போகிறோம்” என்றான். தருமன் “பார்த்தா, நீ அவனிடம் ஏன் இதையெல்லாம் பேசுகிறாய்? அவன் மெல்லமெல்ல விலங்காகவே ஆகிவிட்டான். எந்த நூலும் அவனை மீண்டும் மானுடனாக ஆக்கமுடியாது” என்றான்.

குந்தி சாலிஹோத்ரரின் மாணவர்கள் சிலரை தன் பணியாட்களாக அமைத்துக்கொண்டாள். அவர்கள் கங்கையைக் கடந்து சென்று வெவ்வேறு நகரங்களின் செய்திகளை கொண்டுவந்தார்கள். அவள் சலிக்காமல் ஓலைகளை அனுப்பிக்கொண்டே இருந்தாள். எவற்றுக்கும் அவள் விரும்பிய பயன் நிகழவில்லை. ”நாம் எவரிடமும் முறையாக பெண்கேட்க முடியாது. எவரேனும் சுயம்வரம் அமைத்து அரசர்களுக்கு அழைப்பு விடுத்தால் மட்டுமே நாம் செல்லமுடியும்” என்று குந்தி சொன்னாள். “பாரதம் முழுக்க எங்கு சுயம்வரம் நிகழ்ந்தாலும் அதை எனக்கு அறிவிப்பதற்கான செய்தியமைப்பை உருவாக்கியிருக்கிறேன்.”

“நாம் இப்போது செய்யவேண்டியது மகத மன்னன் ஜராசந்தனின் மகளை மணந்து அஸ்தினபுரியின் மீது படைகொண்டு செல்வதுதான்” என்றான் பீமன். “விளையாட்டுப்பேச்சு வேண்டாம். நாம் காத்திருக்கிறோம். அதை மறக்கவேண்டியதில்லை” என்றாள் குந்தி. “அன்னையே, இது நீண்டநாள் காத்திருப்பு. மூத்தவருக்கு இப்போது முப்பத்தைந்து வயதாகிறது. முறைப்படி மணம் நிகழ்ந்திருந்தால் அவரது மைந்தனுக்கு நாம் இளவரசுப்பட்டம் சூட்டியிருப்போம்” என்றான் அர்ஜுனன்.

“ஆம். ஆனால் அதற்காக ஷத்ரியர்கள் அல்லாதவர்களிடம் நாம் மணவுறவு கொள்ளமுடியாது. முதல் இளவரசனுக்கு அவ்வாறு நிகழ்ந்தால் பிறருக்கும் அதுவே நிகழும். நமக்குத் தேவை ஷத்ரிய அரசன் ஒருவனின் பட்டத்தரசிக்குப் பிறந்த மகள்…” என்றாள் குந்தி. தருமன் திரும்பி பீமனை நோக்கி புன்னகைசெய்தபின் ஏட்டுச்சுவடிகளைக் கட்டி எடுத்துக்கொண்டு வெளியே சென்றான். அர்ஜுனன் ”முடிசூட முடியாததனால் அங்கே துரியோதனனுக்கும் மணம் நிகழவில்லை” என்றான்.

குந்தி “பார்த்தா, பாரதவர்ஷம் முழுக்க அரசர்கள் மிகப் பிந்தித்தான் மணம்புரிந்துகொள்கிறார்கள்” என்றாள். பீமன் சிரித்துக்கொண்டே “அது நல்லது. முதுமைவரை அரசனாக இருக்கலாம். இல்லையேல் பட்டத்து இளவரசன் தந்தையின் இறப்புக்கு நாள் எண்ணத் தொடங்கிவிடுவான்” என்றான். குந்தி நகைத்து “ஆம், அதுவும் ஒரு காரணம்தான்” என்றாள்.

மரக்கிளையில் ஏறி அமர்ந்துகொண்டதும் கீழிருந்து ஒரு குரங்கு மேலே வந்து எதிரே அமர்ந்துகொண்டு “ஏன் இங்கே அமர்ந்திருக்கிறாய்?” என்றது. “வானைப் பார்ப்பதற்காக” என்றான் பீமன். அது வானை நோக்கியபின் “வெயிலில் வானை பார்க்கமுடியாதே?” என்றது. ”குரங்குகள் நிலவைத்தானே பார்க்கவேண்டும்?” பீமன் “ஆம், ஆகவேதான் துயிலப்போகிறேன்” என்றான். குரங்கு தலையை கையால் இருமுறை தட்டியபின் வாயை நீட்டி மூக்கைச் சுளித்துவிட்டு தாவி இறங்கிச்சென்றது.

பீமன் எழுந்து கீழிறங்கப்போனபோது அப்பால் இலைத்தழைப்புக்கு மேல் கடோத்கஜன் மேலெழுந்து வந்து “தந்தையே” என்று கைநீட்டினான். பீமன் அவனை நோக்கி கையசைத்ததும் அவன் கிளைப்பரப்பின் மேல் தாவித்தாவி வந்து அருகணைந்து “தாங்கள் அகன்றதை நான் காணவில்லை. தாங்கள் இல்லை என்றதும் இங்கிருப்பீர்கள் என்று உணர்ந்தேன்” என்றான். பெரிய கரிய கைகளை விரித்து “எங்கள் உணவை தாங்கள் விரும்பவில்லையா? சொல்லியிருந்தால் வேறு உணவுக்கு ஒருங்குசெய்திருப்பேனே?” என்று கேட்டான்.

பீமன் “சுவையான ஊன்” என்றான். ”நான் நன்கு உண்டேன் மைந்தா. நீ அதை கண்டிருக்கமாட்டாய்” என்றான். கடோத்கஜன் அருகே அமர்ந்து கொண்டு “தாங்கள் அகச்சோர்வடைவதைக் கண்டேன். அது ஏன் என்றும் புரிந்துகொண்டேன்” என்றான். பீமன் “அகச்சோர்வா?” என்றான். “ஆம், அப்பாலிருந்து என்னை நோக்கினீர்கள். ஒருகணம் தங்கள் உடல் என்னை நோக்கித் திரும்பியது. என்னைத் தாக்க வரப்போகிறீர்கள் என எண்ணினேன். திரும்பிச் சென்றுவிட்டீர்கள். அதன் பின் நான் சிந்தித்தேன். உங்கள் உணர்வை அறிந்தேன்.”

பீமன் “நீ வீண் கற்பனை செய்கிறாய்” என்றான். ஆனால் அவன் முகம் சிவந்து உடல் அதிரத்தொடங்கியது. “தந்தையே, நீங்கள் என் உடலைக் கண்டு உள்ளூர அஞ்சினீர்கள். நான் உங்கள் குலத்து மானுடரைவிட இருமடங்கு பெரியவனாவேன் என்று உங்கள் உடன்பிறந்தாரை காண்கையில் உணர்கிறேன். எங்கள் மொழியில் சொற்கள் குறைவு என்பதனால் நாங்கள் எதையும் மறைக்கமுடியாது. ஆகவே அனைத்தையும் தெளிவாகப் புரிந்துகொள்ளவும் எங்களால் முடியும்…” என்றான்.

பீமன் உடல் தளர்ந்து பெருமூச்சுடன் “ஆம் மைந்தா. உன்னை நான் அஞ்சினேன். இளமையிலேயே உன்னிடம் போரிட்டால் மட்டுமே என்னால் உன்னை வெல்லமுடியும் என ஒரு கணம் எண்ணினேன். அந்த எண்ணம் என்னுள் எழுந்தமைக்காக என்னை வெறுத்தேன். அதுவே என் உளச்சோர்வு” என்றான். ”உன் குலத்தின் உள்ளத்தூய்மை கொண்டவன் அல்ல நான். நீ என்னை வெறுக்க நேர்ந்தால் கூட அது உகந்ததே. நான் உன்னிடம் எதையும் மறைக்க விரும்பவில்லை.”

குரல் தழைய இருகைகளையும் கூட்டி தலைகுனிந்து அமர்ந்து பீமன் சொன்னான் “என்னைவிட வலிமைகொண்டவன் ஒருவன் இவ்வுலகில் உள்ளான் என்ற எண்ணத்தை என் அகத்தால் தாளமுடியவில்லை. அது உண்மை. அதன்மேல் எத்தனை சொற்களைக் கொட்டினாலும் அதுவே உண்மை.” கடோத்கஜன் பெரிய விழிகளை விரித்து அவனை நோக்கி அமர்ந்திருந்தான். “மைந்தா, நான் விட்ட மூச்சுக்காற்றிலேயே அச்சமும் ஐயமும் வெறுப்பும் கலந்திருந்தது… அத்துடன் என் வாழ்க்கையில் ஒருபோதும் மறக்கமுடியாத நிகழ்வொன்றை அடைந்தேன். என் அகத்தில் அழியாத நச்சுச்சுனை ஒன்று அமைந்தது.”

பீமன் சொல்லி முடிப்பது வரை கடோத்கஜன் அசைவற்ற விழிகளுடன் கேட்டிருந்தான். அரக்கர்கள் கேட்கும்போது முழுமையாகவே உள்ளத்தைக் குவிப்பவர்கள் என்றும் ஒரு சொல்லையும் அவர்கள் தவறவிடுவதில்லை என்றும் பீமன் அறிந்திருந்தான். ”அன்று நான் இறந்திருக்கலாமென இன்று எண்ணுகிறேன் மைந்தா. என் உள்ளத்தில் நிறைந்திருக்கும் இந்த நஞ்சை இங்கே உங்களுடன் வாழும்போதுகூட என்னால் அகற்றமுடியவில்லை என்றால் நான் உயிர்வாழ்வதில் என்ன பொருள்?” என்றான். ”இப்போது அறிகிறேன். இதிலிருந்து எனக்கு மீட்பே இல்லை.”

கடோத்கஜன் “தந்தையே, நீங்கள் மீண்டுவந்ததுமே அந்த உடன்பிறந்தாரை கொன்றிருக்கவேண்டும்” என்றான். “கொன்றிருந்தால் விடுதலை அடைந்திருப்பீர்கள். அவர்கள் இருப்பதுதான் உங்களை கசப்படையச் செய்கிறது.” பீமன் அவனை நோக்கி சிலகணங்கள் சித்தம் ஓடாமல் வெறுமே விழித்தபின் “மூர்க்கமான தர்க்கம். ஆனால் இதுவே உண்மை” என்றான்.

“நீங்கள் அவர்களை கொல்வீர்கள். அதுவரை இந்தக் கசப்பு இருக்கும்…” என்றான் கடோத்கஜன். “நாங்கள் ஏன் தோற்றவர்களை உடனே கொன்றுவிடுகிறோம் என்பதற்கு எங்கள் குலமூதாதை இந்தக் காரணத்தையே சொன்னார். தோற்கடித்தவர்களை கொல். கொல்லப்பட்ட விலங்கை உண். இல்லையேல் அது உனக்குள் நஞ்சாக ஆகிவிடும் என்றார்.” பீமன் புன்னகைத்து “இங்கே எல்லாம் எத்தனை எளிமையாக உள்ளன” என்றான்.

“நான் என்ன சொல்லவேண்டும் தந்தையே?” என்றான் கடோத்கஜன். “நான் என் மூதாதையரின் பெயரால் உறுதியளிக்கிறேன். எந்நிலையிலும் உங்களுக்கோ உங்கள் குலத்திற்கோ எதிராக நானோ என் குலமோ எழாது. எங்களை உங்கள் குலம் வேருடன் அழிக்க முயன்றாலும் கூட, பெரும் அவமதிப்பை அளித்தாலும்கூட இதுவே எங்கள் நிலை. என் வாழ்வின் ஒவ்வொரு கணமும் தங்களுக்கும் தங்கள் குலத்திற்கும் உரியது.”  பீமன் அவன் கைகளைப் பிடித்து “வேண்டாம் மைந்தா. இதை உன்னை சொல்லவைத்தேன் என்ற இழிவுணர்ச்சியை என்னால் கடக்கமுடியாது” என்றான்.

அதைச் சொல்லும்போதே அவன் கண்கள் நிறைய தொண்டை அடைத்தது. ”இழிமகனாக உன் முன் நிற்கிறேன். ஆம், உன்னிடம் முழுமையாகவே தோற்றுவிட்டேன்” என்றான். உள்ளத்தின் எழுச்சிக்குரிய சொற்களை அவனால் அடையமுடியவில்லை. “நீயன்றி எவரும் என் அகமறிந்ததில்லை. என் அகத்தின் கீழ்மையைக்கூட நீ அறிந்துவிட்டாய் என்பதில் எனக்கு நிறைவுதான்…” கணத்தில் பொங்கி எழுந்த அக எழுச்சியால் அவன் மைந்தனை அள்ளி தன் உடலுடன் அணைத்துக்கொண்டான். “நீ பெரியவன்… நான் கண்ட எந்த மாமுனிவரை விடவும் அகம்நிறைந்தவன். உன்னை மைந்தனாகப் பெற்றேன் என்பதனால் மட்டுமே என் வாழ்வுக்கு பொருள் வந்தது” என்றான்.

கடோத்கஜனின் பெரியதோள்களை பீமன் தன் கைகளால் சுற்றிக்கொண்டான். பெரிய தலையை தன் தோளுடன் சேர்த்தான். “இப்போது நீ மிகப்பெரியவனாக இருப்பது என் அகத்தை நிறையச் செய்கிறது. மானுட அகத்தின் விந்தைகளை தெய்வங்களாலேயே அறியமுடியாது” என்றான். முகத்தை அவன் காதுகளில் சேர்த்து “மைந்தா, நான் தெய்வங்களை வணங்குவதில்லை. இச்சொற்களை நான் வேறெங்கும் சொல்லமுடியாது. உன் தந்தையை எப்போதும் மன்னித்துக்கொண்டிரு” என்றான்.

அதற்கெல்லாம் ஒன்றும் சொல்லக்கூடாது என்பதை கடோத்கஜன் அறிந்திருந்தான். பறவைகள் சில இலைகளுக்குள் இருந்து சிறகடித்து எழுந்த ஒலியில் பீமன் கலைந்தான். மலர்ந்த முகத்துடன் பெருமூச்சு விட்டான். விழிநிறைந்து தேங்கிய நீரை இமைகளை அடித்து உலரச்செய்தான். மீண்டும் பெருமூச்சு விட்டு “மூடனைப்போல் பேசுகிறேனா?” என்றான். கடோத்கஜன் புன்னகைசெய்தான். “மூடா, நீ இவ்வினாவுக்கு இல்லை என்று சொல்லவேண்டும்” என்று சொல்லி சிரித்தபடி அவனை அறைந்தான் பீமன். கடோத்கஜன் நகைத்தபடி கிளையில் இருந்து மல்லாந்து விழுந்து இன்னொரு கிளையைப்பற்றி எழுந்து மேலே வந்து இரு கைகளையும் விரித்து உரக்கக் கூவினான்.

கீழே இடும்பியின் குரல் கேட்டது. “உன் அன்னையா?” என்றான் பீமன். ”ஆம், அவர்கள் என்னுடன் வந்தார்கள். நான் தங்களுடன் தனியாகப் பேசியதனால் அவர்கள் கீழேயே காத்து நின்றிருக்கிறார்கள்” என்றான் கடோத்கஜன். பீமன் குரல் கொடுத்ததும் இடும்பி மேலே வந்தாள். கடோத்கஜன் அவளை அணுகி பிடித்து கீழே தள்ள அவள் இலைகளுக்குள் விழுந்து அப்பால் மேலெழுந்து வந்தாள். அவன் மீண்டும் அவளைப் பிடித்து தள்ளச்சென்றான். பீமன் அவர்களுக்குப்பின்னால் சென்று அவனை பிடித்துக்கொண்டான். இருவரும் கட்டிப்பிடித்தபடி கிளைகளை ஒடித்து கீழே சென்று ஒரு மூங்கில் கழையை பிடித்துக்கொண்டனர்.

உரக்கநகைத்தபடி இடும்பி அவர்களை அணுகி “அவனை விடாதீர்கள்… பிடித்துக்கொள்ளுங்கள்” என்று கூவினாள். அதற்குள் பீமனை உதறி மரக்கிளை ஒன்றைப் பற்றி வளைத்து தன்னை தொடுத்துக்கொண்டு கடோத்கஜன் மேலே சென்றான். இடும்பி பீமனை அணுகி “உங்கள் கைகளில் என்ன ஆற்றலே இல்லையா?” என்று அவன் முதுகில் அடித்தாள். அவன் அவளை வளைத்துப்பிடித்து “என் ஆற்றல் உன்னிடம் மட்டும்தான்” என்றான். அவள் அவனைப் பிடித்து தள்ளிவிட்டு மேலே சென்றாள். அவன் தொடர்ந்தபடி “நீ முடிந்தால் அவனை பிடித்துப்பார். அவன் அரக்கர்களிலேயே பெரியவன்” என்றான். இடும்பி திரும்பி நகைத்து “ஆம், அவனைப்பார்த்தால் எனக்கே அச்சமாக இருக்கிறது” என்றாள்.

பீமன் முகம் மாறி “இத்தனை நேரம் தந்தையிடம் பேசுவதுபோல அவனிடம் பேசிக்கொண்டிருந்தேன்” என்றான். “பிறவியிலேயே அனைத்தையும் அறிந்த முதிர்வுடன் இருக்கிறான். எங்கள் குலத்திற்கே உள்ள சிறுமைகள் இல்லை. உன் மைந்தன் நீலவானம் போன்ற அகம் கொண்டவன்…” இடும்பி “சிறுமைகள் என்ற சொல்லை நீங்கள் சொல்லாத நாளே இல்லை. அது என்ன?” என்றாள். “சிறுமைகள் வழியாகவே அதை புரிந்துகொள்ளவும் முடியும்” என்றான் பீமன்.

மேலிருந்து கடோத்கஜன் அவர்களை அழைத்து கூவிச்சிரித்தான். “முதிராச் சிறுவனாகவும் இருக்கிறான்” என்றபின் பீமன் மேலே எழுந்து அவனைப்பிடிக்கச் சென்றான். கடோத்கஜன் அவன் அணுகிவரும் வரை காத்திருந்துவிட்டு சிரித்துக்கொண்டே எழுந்து மறைந்தான். “அவனை வளைத்துக்கொண்டு வாருங்கள். நான் மறுபக்கம் வழியாக வருகிறேன்” என்றாள் இடும்பி. “ஏன் அவனைப் பிடிக்க வேண்டும்?” என்றான் பீமன். “என் மைந்தன் இறுதிவரை எவராலும் பிடிக்கப்பட மாட்டான்.”

“நாணமில்லையா இப்படிச் சொல்ல? ஆண்மகன் எங்கும் தோற்கலாகாது” என்றாள் இடும்பி கண்களில் சிரிப்புடன். “இவனிடம் தோற்பதனால்தான் நான் நிறைவடைகிறேன். என் இறுதிக்கணத்தில் இவன் பெயர் சொல்லித்தான் விழிமூடுவேன். இவன் நினைவுடன்தான் விண்ணகம் செல்வேன்” என்றான் பீமன். இடும்பி அருகே எழுந்து வந்து அவனை அணைத்து கனிந்த விழிகளுடன் “என்ன பேச்சு இது?” என்றாள். அவளுடைய பெரிய முலைகள் அவன் உடலில் பதிந்தன. “உன் முலைகளைப்போல என்னை ஆறுதல்படுத்துபவை இல்லை என நினைத்திருந்தேன். அவன் விழிகள் இவற்றைவிட அமுது ஊறிப்பெருகுபவை” என்றான் பீமன். நகைத்தபடி அவனை தள்ளிவிட்டாள்.

பக்கத்து மரத்தில் இருந்து வந்த கடோத்கஜன் அவர்கள் நடுவே கையை விட்டு விலக்கி தலையை நுழைத்து நின்றுகொண்டான். அவர்கள் அளவுக்கே அவனும் எடையும் இருந்தான். “நானில்லாமல் நீங்கள் சேர்ந்து நிற்கக் கூடாது. கீழே யானைகளெல்லாம் அப்படித்தானே செல்கின்றன?” என்றான். “அது குட்டியானை. நீ என்னைவிடப்பெரியவன்” என்றாள் இடும்பி. “நான் ஏன் வளர்ந்துகொண்டே இருக்கிறேன் அன்னையே?” என்று கடோத்கஜன் சிந்தனையுடன் கேட்டான். “ஆலமரம் ஏன் பிற மரங்களைவிடப் பெரிதாக இருக்கிறது?” என்றாள் இடும்பி. பீமன் வெடித்துச் சிரித்தான்.

கடோத்கஜன் “சிரிக்காதீர்கள்… இத்தனை பெரிதாக இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. சிறுவர்கள் எவரும் என்னுடன் விளையாட வருவதில்லை” என்றான். இடும்பி ”பெரியவர்களுடன் விளையாடு. இல்லையேல் யானைகளுடன் விளையாடு” என்றாள். பீமன் திரும்பி கடோத்கஜனைப் பிடித்து மரத்துடன் சேர்த்து அழுத்தி “இதோ உன்னைப் பிடித்துவிட்டேன்” என்றான். “இல்லை, நானே வந்தேன். நானேதான் வந்தேன்” என்றான் கடோத்கஜன். “உன்னைப் பிடிக்கத்தான் அப்படி சேர்ந்து நின்றோம்… நாங்கள் அப்படி சேர்ந்திருந்தாலே நீ வந்துவிடுவாய்” என்றான் பீமன். “அந்தப் பிரம்புக்கொடியைப் பிடுங்கு… இவனைக் கட்டி தூக்கிக் கொண்டு போய் உன் குடிகளுக்குக் காட்டுவோம்.”

இடும்பி திரும்புவதற்குள் கடோத்கஜன் பீமனைத் தூக்கிக்கொண்டு தாவி மேலே சென்றான். பீமன் அவன் தோளில் அடித்துக்கொண்டே இருந்தான். மேலே சென்றபின் பீமனை தூக்கி வீசினான். பீமன் விழுந்து கிளையொன்றைப் பிடித்துக் கொண்டான். இடும்பி ஓடி அவனருகே வந்து அவனைப் பிடித்து தூக்கினாள். “அவனை விடாதே” என்று கூவியபடி பீமன் கடோத்கஜனை நோக்கி பாய்ந்துசென்றான். சிரித்தபடி இடும்பியும் பின்னால் வந்தாள்.

அந்தி சாயும்வரை அவர்கள் மரங்களில் தாவி பறந்து விளையாடினார்கள். களைத்து மூச்சிரைக்க உச்சிக்கிளை ஒன்றில் சென்று பீமன் அமர்ந்ததும் இடும்பியும் வந்து அருகே அமர்ந்தாள். எதிரே கடோத்கஜன் வந்து இடையில் கைவைத்து காலால் கிளைகளைப் பற்றிக்கொண்டு நின்றான். பீமன் அவனைப்பார்த்து சிரித்தபடி இடும்பியை சேர்த்து இறுக்கி அணைத்துக்கொண்டான். கடோத்கஜன் பாய்ந்து அருகே வந்து அவர்கள் நடுவே தன் உடலைப் புகுத்திக்கொண்டான்.

பீமன் மைந்தனின் உடலைத் தழுவி தன்னுடன் சேர்த்துக்கொண்டான். கண்களை மேற்குவானில் நிறுத்தியபடி மைந்தனின் தோள்களையும் மார்பையும் கைகளையும் கைகளால் தடவிக்கொண்டிந்தான். கைகள் வழியாக அவனை அறிவதுபோல வேறெப்படியும் அறியமுடியவில்லை என்று எண்ணிக்கொண்டான். “மைந்தா, நான் உன் பெரியபாட்டனாரைப் பற்றி சொன்னேன் அல்லவா?” என்றான். “ஆம், திருதராஷ்டிரர்” என்றான் கடோத்கஜன். “அவருக்கு விழிகள் இல்லை என்பதனால் மைந்தர்களை எல்லாம் தடவித்தான் பார்ப்பார். அவர் தடவும்போது அவர் நம்மை நன்றாக அறிந்துகொள்வதாகத் தோன்றும்” என்றான் பீமன்.

“குரங்குகள் யானைகள் எல்லாமே மைந்தர்களை தடவித்தான் அறிகின்றன” என்றாள் இடும்பி. “நானும் உங்களைத் தொட்டு இறுக்கிப்பிடிக்கும்போதுதான் அறிகிறேன்” என்று கடோத்கஜன் சொன்னான் . மெல்ல பீமனின் முழங்கையை கடித்து “கடித்துப்பார்க்கும்போது இன்னும்கூட நன்றாகத் தெரிகிறது.” இடும்பி சிரித்தபடி “என் பாட்டி சொன்னாள், முற்காலத்தில் அரக்கர்கள் மூதாதையரை தின்றுவிடுவார்கள் என்று…” என்றாள். பீமன் “மூதாதையர் நம் உடலாக ஆகிவிடுவார்கள் என்பதனால் அப்படி உண்ணும் வழக்கம் இன்னமும்கூட சில இடங்களில் உள்ளது என்கிறார்கள்” என்றான்.

இடும்பி “அழகிய சூரியன்” என்றாள். அந்திச்செம்மையில் அவள் முகம் அனல்பட்ட இரும்புப்பாவை போல ஒளிர்ந்தது. அப்பால் மரங்களின் மேல் குரங்குகள் ஒவ்வொன்றாக எழுந்து வந்தன. கைகளை மார்பின் மேல் கட்டியபடி அமர்ந்து சூரியன் அணைவதை அவை நோக்கின. அவற்றின் தலையிலும் கன்னங்களிலும் மெல்லிய மயிர்கள் ஒளியில் ஊறி சிலிர்த்து நின்றன. செம்மை படர்ந்த மேகங்கள் சிதறிப்பரந்த நீலவானில் பறவைக்கூட்டங்கள் சுழன்று கீழிறங்கிக் கொண்டிருந்தன. காடுகளுக்குள் அவை மூழ்க உள்ளே அவற்றின் குரல்கள் இணைந்து இரைச்சலாக ஒலித்தன.

செங்கனல் வட்டமாக ஒளிவிட்ட சூரியன் ஒரு பெரிய மேகக்குவையில் இருந்து நீர்த்துளி ஊறிச் சொட்டி முழுமைகொள்வதுபோல திரண்டு வந்து நின்றபோது இலைப்பரப்புகளெல்லாம் பளபளக்கத் தொடங்கின. பீமன் பெருமூச்சுடன் பார்வையை விலக்கி அப்பால் சிவந்து எரியத் தொடங்கிய மேகத்திரள் ஒன்றை நோக்கினான்.

அந்தியின் செம்மை கனத்து வந்தது. மேகங்கள் எரிந்து கனலாகி கருகி அணையத் தொடங்கின. தொடுவானின் வளைகோட்டில் ஒரு சிறிய அகல்சுடர் போல சூரியன் ஒளி அலையடிக்க நின்றிருந்தான். செந்நிறமான திரவத்தில் மிதந்து நிற்பது போல. மெல்ல கரைந்தழிவதுபோல. செந்நிறவட்டத்தின் நடுவே பச்சைநிறம் தோன்றித்தோன்றி மறைந்தது. ஏதோ சொல்ல எஞ்சி தவிப்பது போலிருந்தான் சூரியன். பின்னர் பெருமூச்சுடன் மூழ்கிச்சென்றான். மேல்விளிம்பு கூரிய ஒளியுடன் எஞ்சியிருந்தது.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

சூரியனில் இருந்து வருவதுபோல பறவைகள் வந்துகொண்டே இருந்தன. மேலே பறக்கும் வெண்ணிறமான நாரைகள் சுழற்றி வீசப்பட்ட முல்லைச்சரம் போல வந்தன. அம்புகள் போல அலகு நீட்டி வந்த கொக்குகள். காற்றில் அலைக்கழியும் சருகுகள் போன்ற காகங்கள். கீழிருந்து அம்புகளால் அடிக்கப்பட்டு அலைக்கழிக்கப்படுபவை போல காற்றிலேயே துள்ளித்துள்ளி தாவிக்கொண்டிருந்தன பனந்தத்தைகள். காட்டுக்குள் பறவைகளின் ஒலி உரக்கக் கேட்டது. இலைத்தழைப்புக்குள் காடு முழுமையாகவே இருண்டு விட்டது. மேலே தெரிந்த இலைவிரிவில் மட்டும் ஒளி பரவியிருந்தது. கூரிய அம்புமுனைகள் போல இலைநுனிகள் ஒளித்துளிகளை ஏந்தியிருந்தன.

இலைக்குவைகளுக்குள் இருந்து கரிய வௌவால்கள் காட்டுத்தீயில் எழுந்து பறக்கும் சருகுக்கரித் திவலைகள் போல எழுந்து வானை நிறைத்துச் சுழன்று பறந்தன. சூரியவட்டம் முழுமையாகவே மறைந்தது. மிகச்சரியாக சூரியன் மறையும் கணத்தில் ஏதோ ஒரு பறவை “ழாக்!” என்று ஒலியெழுப்பியது. மேலுமிரு பறவைகள் குரலெழுப்பி எழுந்து காற்றில் சுழன்று சுழன்று செங்குத்தாக காட்டுக்குள் இறங்கின.

மேகங்கள் துயரம்கொண்டவை போல ஒளியிழந்து இருளத் தொடங்கின. அவற்றின் எடை கூடிக்கூடி வருவதுபோல் தோன்றியது. அனைத்துப்பறவைகளும் இலைகளுக்குள் சென்றபின்னரும் ஓரிரு பறவைகள் எழுந்து சுழன்று இறங்கிக்கொண்டிருந்தன. பீமன் “செல்வோம்” என்றான். கடோத்கஜன் பெருமூச்சுவிட்டான். மெல்லிய ஒலி கேட்டு திரும்பி நோக்கிய பீமன் இடும்பி அழுவதைக் கண்டான். ஏன் என்று கேட்காமல் அவள் இடையை வளைத்து தன் உடலுடன் சேர்த்துக்கொண்டான்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

முந்தைய கட்டுரைதேவதச்சன் குங்குமம் ஜன்னல் பேட்டிகள்
அடுத்த கட்டுரைநிருபர்கள் -கடிதம்