இந்தியப்பயணம் 22, கொனார்க், புவனேஸ்வர்

பூரியிலிருந்து செப்டெம்பர் 18 அன்று காலையில் கொனார்க் கிளம்பினோம். கடலோரமாகவே சாலை சென்றது. பெருமழைவெள்ளம் கடலுக்குச் செல்லாமல் ஈச்சைமரக்காடுகள் சவுக்குத்தோப்புகள் நடுவே பளபளவென தேங்கிக்கிடந்தது. இந்தக்கரை முழுக்க ஏராளமான ரிசார்ட்டுகள் இருந்தன. சவுக்குக்காடுகளுக்குள் குடிசைகள். கான்கிரீட் குடில்கள். வெளிநாட்டினரை நம்பி உருவாக்கப்பட்டவை. புயலில் அவையெல்லாம் சிதைந்து கிடந்தன. பல இடங்களில் ஜனநடமாட்டமே இல்லை.

கொனார்க் சென்றுசேர்ந்தபோது வெயில் ஒளியுடன் இருந்தது. மேகமிருந்ததனால் வெப்பம் இல்லை. கொனார்க் கோயிலை வாசலில் நின்று நோக்கும் ஒருவருக்கு ஏமாற்றம் ஏற்படும். கோயிலுக்கு முன்னால் உள்ள பெரிய மண்டபத்தின்மீதுள்ள கோபுரம் மட்டுமே கண்ணுக்குப்படும். அதை வைத்து ஓர் உயரமில்லாத சிறிய கோயில் என்று நாம் எண்ணிவிடுவோம். ஆனால் உள்ளே நடந்துசெல்லச் செல்ல கோயில் பிரம்மாண்டமாக நம் கண்முன் எழுந்துவரும். கோயிலின் அடித்தளமும் மேலே உள்ள கருவறைக்கட்டுமானமும் மட்டுமே இப்ப்போது இடியாமல் உள்ளது. கொனார்க் கோயிலைச் சுற்றிவரும்போதுதான் அது எத்தனைபெரிய ஆலயம் என்ற பிரமிப்பு ஏற்படும்.

கொனார்க் கோயில் சூரியனுக்காக கட்டபப்ட்ட கோயில். சூரியனுக்கு இந்தியாவில் எஞ்சியிருக்கும் பெரிய கோயில் இது ஒன்றுதான். இந்து ஞானமரபில் உள்ள ஆறு மதங்களில் சௌரம் ஒன்று. அது சூரியனை முக்கியமான கடவுளாகக் கொண்டது. இந்திய நிலப்பரப்பில் இருந்த மிகத்தொன்மையான வழிபாட்டுமரபுகளில் ஒன்று அது. சூரியவழிபாடு பண்டைய எகிப்து மெசபடோமியா ரோம் எங்கும் மிக வலுவாக இருந்த ஒன்று. சூரியவழிபாட்டை ஆரம்பகால ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் மதக்காழ்ப்பின் கண்ணோட்டத்தில் அணுகி புரிந்துகொள்ள முடியாமல் தவித்து சிறுமைப்படுத்தி எழுதியிருக்கிறார்கள். பிற்கால ஐரோப்பிய அறிஞர்கள்- குறிப்பாக எமர்சன் அதை சரியான விரிந்த பொருளில் அணுகியிருக்கிறார்கள்.

ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் சொல்லி நம் பாடநூல்களில் நாம் கற்பது போல சூரிய வழிபாடு என்பது [அல்லது அதேபோல இயற்கைசக்திகளை வழிபடுவதென்பது] இயற்கையை அப்படியே வழிபடும் ஒரு பழங்குடி நம்பிக்கை அல்ல. சூரியன் மேல் கொண்ட வியப்போ அச்சமோ அல்லது அதன் பயனோ அவ்வழிபாட்டுக்கு அடிப்படையாக அமையவில்லை. அதாவது இயற்கைசக்திகளைப் புரிந்துகொள்ள முடியாமல் அதை வழிபட்ட பேதைகள் அல்ல அம்மக்கள். இன்றும் நம்மில் சிலர் எட்டாம் வகுப்பு பாடத்திலிருந்து மீள முடியாமல் அதையே சொல்லிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

உதாரணமாக ரிக்வேதத்தைச் சொல்லவேண்டும். ரிக்வேதத்தில் சௌர மதத்தின் தொடக்கநிலை மிக விரிவாகவே உள்ளது. சூரியன் அதில் வெறும் ஓர் இயற்கைசக்தியாகச் சொல்லப்படவில்லை. விண்ணகத்தில் நிறைந்துள்ள கோடானுகோடி ஆதித்தியர்களில் நம் கண்ணுக்குப் படும் ஒன்றாக மீண்டும் மீண்டும் ரிக்வேதம் சூரியனை சொல்கிறது. அந்த கோடானுகோடி ஆதித்யர்களுக்கு ஒளிதரும் ஆதித்யன் ஒன்று உண்டு. அந்த ஆதித்யனைப்போல மீண்டும் கோடானுகோடி ஆதித்யர்கள் உண்டு…இவ்வாறுசெல்கிறது ரிக்வேதத்தின் முடிவின்மைபற்றிய உருவகம். அதாவது பிரபஞ்சமெங்கும் நிறைந்து நிற்கும் அலகிலா ஆற்றலின் ஒரு சிறு துளியாக ஒரு பிரதிநிதியாக மட்டுமே சூரியன் வழிபடப்பெற்றான். ரிக்வேத சூத்திரங்களில் பரம்பொருள் என்று அது சொல்லும் ஞானத்துக்கு அப்பாற்பட்ட, பிரபஞ்சமேயாக மாறிய ஒன்றின் வடிவமாகவே சூரியன் சொல்லப்படுகிறான்.

கொனார்க்கின் சூரியர் கோயில் ஒரு மாபெரும் ரதமாக உருவாக்கபப்ட்டுள்ளது. அதன் முகப்பில் ஏழு பெரும் கல்குதிரைகள் கால்தூக்கி நின்று அதை இழுக்கின்றன. மொத்தம் 24 மாபெரும் சக்கரங்கள் அக்கோயிலுக்கு இருப்பதுபோலச் செதுக்கப்பட்டுள்ளன. மிகநுணுக்கமான சிற்பவேலைப்பாடுகள் கொண்ட கொனார்க் சித்திரச் சக்கரங்கள் மிகப்புகழ்பெற்றவை, ஒரியாவின் அதிகாரபூர்வ இலச்சினைகள் இவையே. இந்தச்சக்கரங்கள் ஒவ்வொன்றும் அக்காலத்தில் நிழல்கடிகாரங்களாக இயங்கியிருக்கின்றன. இதன் ஆரங்களின் நிழல் சரியான நேரத்தைக் காட்டக்கூடியது.
கோயிலுக்கு முன்பக்கம் நாதமந்திர் என்ற மண்டபம் உள்ளது. பிரமிக்கச் செய்யுமளவுக்கு நுண்மையான சிற்பங்கள் அடர்ந்த வெளி இது. கஜுராகோ போலவே மக்காச்சோளக் கதிர் வடிவிலான உயரமான கோபுரம் மைய ஆலயத்தில் இருந்திருக்கலாம். முன்மண்டபத்தில் உயரம் குறைவான பிரமிடுவடிவ கோபுரம் உள்ளது.

கொனார்க் மைய ஆலயத்தின் அடித்தானம் இரண்டாள் உயரம் கொண்டது. கஜுராஹோ போல இதிலும் நுண்ணிய சிற்பங்கள் செறிந்துள்ளன. அவற்றில் கணிசமான அளவு சிற்பங்கள் பாலியல் லீலைகள் சார்ந்தவை. சௌரமதம் சூரியனை மாபெரும் சிருஷ்டிதேவனாகவே அணுகுகிறது. ஒளி என்பது பிரபஞ்சசக்தியின் விந்து. அது மண்ணில் படைப்புலகை உருவாக்குகிறது. இந்தக் காரணத்தால் சூரியன் வீரியம், ஆக்க சக்தி, அழகு ஆகியவற்றின் மூர்த்தியாக எண்ணப்படுகிறார். ஆகவேதான் இக்கோயிலெங்கும் பாலியல் சிற்பங்கள் பரவியிருக்கின்றன.

கோணம் அர்க்கம் என்ற இரு சொற்களின் கூட்டுதான் கொனார்க். அர்க்கன் என்றால் சூரியன். இங்கே தென்கிழக்குமூலையில் சூரியன் உதிக்கும் திசையிலிருந்து எழுவதுபோல இகோயில் அமைக்கப்பட்டிருப்பதனால் இந்தப்பெயர். பலகாலமாகவே கொனார்க் சௌர மதத்தின் மையமாக விளங்கிவந்திருக்கிறது. புராணங்களில் இந்த தலத்துக்கு முந்திரவனம் என்று பெயர். கோணாதித்யாபுரம் என்றும் பெயருண்டு. கலிங்கநாட்டின் முக்கியமான தலமாக இது இருந்தது. ஐதீகப்பிரகாரம் கிருஷ்ணபரமாத்மாவின் மகனாகிய சாம்பரால் இது கட்டப்பட்டது.

இந்த ஆலயம் 1238 முதல் 1264 வரை கலிங்கத்தை ஆண்ட மன்னர் நரசிம்மதேவரால் கட்டப்பட்டது என்று வரலாறு. கங்க வம்சத்தைச்சேர்ந்த மன்னர் நரசிம்மதேவர் டெல்லி சுல்தானின் படைகளை வென்றதன் நினைவாகக் கட்டபப்ட்டது என்று சில கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. பதினேழாம் நூற்றாண்டில் மொகலாயப்பேரரசர் ஜகாங்கீரின் தளபதி கொனார்க்கைக் கைப்பற்றி வென்று இக்கோயிலை இடித்து தள்ளினார். அதன்பின்னர் பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் வரை இடிபாடுகளாக பாழடைந்து கிடந்தது இது.

கொனார்க் கோயிலை 1903ல் அன்றைய வங்காள கவர்னர் ஆக்ரமிப்பாளர்கள் உள்ளே செல்லவிடாமல் தடுத்து முத்திரையிட்டார். அதன் உள்ளே எவரும்போகவிடாமல் சுவர்கட்டி பாதுகாத்தபின் அதைப்பேணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. கிட்டத்தட்ட 100 வருடங்களாக கொனார்க்கை மறுபடியும் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. உடைந்த கல்துண்டுகளை பொறுக்கி அடையாளம் கண்டு அடுக்குவது, எஞ்சிய பகுதிகளில் கற்களைக் கொடுத்து கட்டமைப்பை பேணுவது ஆகியவையே அப்பணிகள். ஆனால் சுதந்திரத்துக்குப் பின் இப்பணிகள் வெகுகாலம் கைவிடப்பட்டு இப்போது யுனெஸ்கோ உதவி கிடைத்தபின்னர் மெல்லமெல்ல சூடு பிடித்துள்ளன என்றுதான் சொல்ல வேண்டும். இதைப்பேணுவதில் ஆங்கில ஆட்சியாளர்களிடம் இருந்த அக்கறை இந்திய ஆட்சியாளர்களிடம் இல்லை என்பதே உண்மை.

கொனார்க்கின் முக்கியமான வரலாற்று நுட்பங்களில் ஒன்று இங்கே சிங்கத்துக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம். ஆந்திரம் முதல் வந்த வழியெங்கும் யானையின் அழகும் வலிமையும்தான் காணக்கிடைத்தது. பெரிய யானைச்சிற்பங்கள் யானைகளாலேயே ஆன தோரணங்கள் யானையின் நுட்பமான உடல்மொழி…. ஆனால் கொனார்க்கின் காவல்தெய்வம் சிம்மம். இங்கே கோயில் முகப்பில் சிம்மங்கள் யானைகளை கால்கீழே போட்டு மிதித்து நசுக்குவதுபோன்ற சிற்பங்கள் உள்ளன. ஒரிசாவில் இருந்துதான் இலங்கைக்கு சிங்களர் சென்று குடியேறினார்கள். சிங்கப்பூருக்குச் சென்றவர்களும் ஒரியர்களே. எங்கும் அவர்கள் இந்தச் சிங்கத்தைக் கொண்டுசென்றார்கள்.அந்த முத்திரைகளுக்கும் இச்சிங்கங்களுக்கும் இடையேயான உறவு ஆச்சரியமூட்டுவது.

சூரியரதத்தின் நான்கு வாயில்களிலும் உள்ள நான்கு கருங்கல் சூரியசிலைகள் கம்பீரமானவை. அவற்றின் கைகளும் மூக்கும் உடைந்துள்ளன. சர் அலக்ஸாண்டர் கன்னிங்ஹாம் தலைமையில் இங்கே அகழ்வாய்வுசெய்தவர்களால் இவ்வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டு முறைபப்டி மீண்டும் நிறுவப்பட்ட சிலைகள் அவை. இடிந்த கோபுரத்துக்குக் கீழே உடைந்து நின்றாலும் சூரியனின் எதையும் பார்க்காமல் திசைகளை ஏறிடும் நோக்கில் உள்ள கம்பீரம் மனதைக் கவர்கிறது.

கொனார்க்கில் உள்ள பெரும்பாலான பாலியல்சிலைகள் உப்புக்காற்றால் அரிக்கப்பட்டுள்ளன. கஜுராஹோ பாணிசிற்பங்கள்தான் இவையும்.  பெருத்த மார்புகளும் சிற்றிடையும் கொண்ட நடனமாதர். கோயிலெங்கும் ஒரு பெரும் களியாட்டம் நிகழ்வதுபோல சிற்பங்கள். கையில் மிருதங்கத்துடன் நடனமாடும் பெண்கள் இங்குள்ள தனிச்சிறப்பு என்கிறார்கள். நூற்றுக்கணக்கான இசைக்கருவிகள். நடனநிலைகள். தோரண ஊர்வலங்கள். ராமப்பாகோயில் மண்டபமும் சரி, கஜுராஹோவும் சரி, கொனார்க்கும் சரி , முன்பு இந்தியாவில் பிரபஞ்சம் என்பது ஓர் இறைவிளையாட்டு என்றும் மானுடவாழ்க்கை அவ்விளையாட்டின் பகுதியான ஒரு விளையாட்டு என்றும் சொல்லும் லீலைக்கோட்பாடு நம் நாட்டில் எப்படி வேரூன்றியிருந்தது என்பதையே காட்டுகிறது. நமது பெரும் திருவிழாக்கள் அம்மனநிலையின் வெளிபாடுகளே

இன்றும் இந்தநாடு அந்தக் கொண்டாட்ட களியாட்ட மனநிலையை விட்டு விலகவில்லை. நாங்கள் ஈரோடுவிட்டு கிளம்பும்போதே வினாயகர் சதுர்த்தி முடிந்துவிட்டது. ஆனால் தாரமங்கலம், லெபாட்ஷி முதல் கஜுராஹோவரை எங்கும் வினாயகர்பூஜை நடந்துகொண்டிருந்தது. ஒரு இடம்கூட மிச்சமில்லை. மிகமிகச் சிறிய கிராமங்களில் கூட பெரிய வினாயகரை பூஜைசெய்திருந்தார்கள். ஒவ்வொரு இடத்திலும் கொண்டாட்டத்தின் விதத்தில் சிறிய மாற்றங்கள் இருந்தன. பொது இடம் ஒன்றில் பந்தல் அமைத்து வினாயகரை நிறுவி உள்ளூர் இளைஞர்களே பூஜைசெய்து சுண்டல் பாயசம் போன்றவற்றை பிரசாதமாக வினியோகம் செய்கிறார்கள். ஒலிபெருக்கிகளில் பக்திப்பாடல்கள் ஓயாது ஒலிக்கின்றன. வினாயகரை விஸர்ஜம்செய்ய கொண்டு செல்லும்போது வாத்தியங்கள் முழங்க இளைஞர்களின் நடனம். லாரிகளில் சிலைகள் செல்லும்போது கணபதி பாபா மோரியா என்ற களியாட்டக்கூச்சல்.

ஆந்திரத்தில் ஹோலி போல வண்ணப்பொடிகளை ஒருவர் மீது ஒருவர் வீசிக் கொண்டாடினார்கள். பையன்கள் சாயம்பூசிய முகத்துடன் தெருக்களில் அலைந்தார்கள். ஸ்ரீசைலத்தில் அதை போட்டோ எடுக்கப்போன வசந்தகுமார் சாயத்துடந்தான் திரும்பிவருவார் என்று எண்ணினேன், மயிரிழையில் தப்பினார். நாங்கள் சென்ற ஊர்களில் வினாயகர்பூஜை நடக்காத எந்த இடமும் இல்லை என்பதே ஆச்சரியமளித்தது. எல்லாபூஜைகளுமே பெரிய வினாயகர் சிலைகளும் பெரிய பந்தலுமாக ஆர்ப்பாட்டமாகவே இருந்தன.வசந்தகுமார் இந்த பூஜைக்கு ஏதாவது அமைப்பு நிதியுதவிசெய்திருக்கலாம், ஒரு பூஜைக்கு 5000 வரை செலவாகுமே என்றார். செந்தில் அதை மறுத்தார்.

சரி கேட்டுவிடலாமென பானகிரியில் இருந்த இளைஞர்களிடம் கேட்டோம். வீட்டுக்கு குறைந்தது 10 ரூபாய் என்று ‘வரி’ போட்டு வசூலித்ததாகவும் பலர் பெரிய தொகைகள் கொடுத்ததாகவும் சொன்னர்கள். நாங்கள் பேசிய இளைஞர் குழுவிலேயே இருவர் ஐந்நூறு ரூபாய் கொடுத்திருந்தார்கள். பூஜைக்கான செலவு 20000 ரூபாய்க்கு மேல். 2000 ரூபாய்கொடுத்தவர்களும் இருந்தார்கள். அந்தக் கொண்டட்டம் கிராமத்தின் ஒரு மகிழ்ச்சிகரமான காலகட்டம் என்பதனால் ஊரே அதை வரவேற்கிறது.

வங்கத்துக்குள் நுழைந்தபோது அதேபோல கொண்டாட்டத்துடன் சிலைகள் ஊர்வலமாகச் சென்றன. மேளதாளம் நடனம் களியாட்டம் . ஆனால் வினாயகர் அல்ல. துர்க்கை என்று எனக்குப் பட்டது. ஆனால் துர்க்காபூஜைக்கு இன்னும் நாளிருக்கிறதே. இந்த சாமிக்கு மீசை இருந்தது. என்ன தெய்வமென்றே புரியவில்லை. அதேபோல தெருவெங்கும் பந்தல்கள். பூஜைகள். துர்க்கைபூஜைக்கான ஏதோ முன்னோடி பூஜை என்று தெரிந்தது. கேட்குமளவுக்கு வங்கமொழி தெரியாது.

கொனார்க்கிலிருந்து மதியம் கிளம்பி புவனேஸ்வர் வந்தோம். செந்தில் சிவா இருவருக்குமே வீடுதிரும்பும் எண்ணம் வந்துவிட்டது. ஆகவே கோயில்நகரமான புவனேஸ்வரத்தை கிட்டத்தட்ட பார்க்காமல்தாண்டித்தான் வந்தோம். வழியில் ஒரு இடத்தில் முக்தேஸ்வர், சித்தேஸ்வர் என்ற இரு கோயில்களும் அதற்கு அப்பால் லிங்கராஜ் கோயிலும் தெரிந்தன. கஜுராகோ பாணி கோபுரங்கள் கொண்ட 12 ஆம் நூற்றாண்டுக் கோயில்கள் அவை. மழைநீர் தேங்கிக்கிடந்த பள்ளங்களுக்குள் இருந்தன கோயில்கள். கோயில் பிராகாரம் கருவறை எங்கும் தண்ணீர். பூஜை இல்லாத தொல்பொருள்துறைக் கோயில்கள் இவை. அதிகம் சிதைவுபடாமல் உள்ளன. அழகிய சிற்பங்கள் கோயிலின் சுற்றுச்சுவர்களில் இருந்தன. சிறிய கச்சிதமான அக்கோயில்களின் கட்டிட அமைப்பு மிக அழகானது.

லிங்கராஜ் கோயிலுக்கு அப்பால் செல்லும் சாலையில் ஒரு வரைபடத்தை சுவரில் கண்டோம். அச்சாலை ஒரு பெரிய ஏரியைச் சென்றடையும் என்றும் அவ்வேரிக்குள்ளும் அதைச்சுற்றியும் நிறைய கோயில்கள் இருப்பதாகவும் அப்பகுதியே ஒரு கோயில்வளாகமென்றும் தெரிந்தது.ஆனால் குழுவினருக்கு மேலும் பயணம்செய்யும் தெம்பு இல்லை. வேறுவழியில்லாமல் திரும்பி காரில் ஏறினோம்.

கஜுராகோ ஒரு பாலியல் சிற்பம்

காலமெனும் சக்கரம்,சூரியனின் ரதம்

முந்தைய கட்டுரைஷாஜியின் வலைப்பூ
அடுத்த கட்டுரைபயணம்:கடிதங்கள்