சற்றுமுன் ஒருவரிடமிருந்து மின்னஞ்சல். நான் உயர்ந்த இடத்தில் வைத்திருக்கும் மனிதர். கட்டுகளற்றவர், பயணிப்பவர். பொதுவாக எதிர்வினைகளே ஆற்றுபவரல்ல. சுருக்கமான சில வரிகள் எழுதியிருந்தார்.
அவர் சொன்னவை உண்மை என்று உணர்கிறேன். இந்த கட்டுரைகள் எனக்கு ஒருவகையான திருப்தியை அளிக்கலாம், சிக்கலான சிலவற்றை சுருக்கமாகவும் தெளிவாகவும் எழுதியிருக்கிறேன் என்று. மற்றபடி இவற்றின் பயன் மிகமிகக் குறைவே
ஏனென்றால் இந்த தளத்துக்கு ஏற்கனவே வந்து சேர்ந்தவர்கள் இயல்பாக இதை ஏற்றுக்கொள்கிறார்கள். அப்போதுகூட தங்களுக்கு தெரிந்தவையாக இவற்றை உருமாற்றிக்கொண்டே அறிகிறார்கள்
இந்த தளத்துக்கு வராதவர்கள் தங்கள் அனுபவம் மூலமே வரமுடியுமே ஒழிய சொற்கள் மூலம் அல்ல. இச்சொற்களுடன் அவர்களின் தர்க்க மனம் மோதும், விவாதிக்கும். கடைசியில் அவர்கள் விரும்பும் வழியை தேர்வு செய்வதற்கான நியாயங்களை இச்சொற்களின் ஊடாக உருவாக்கிக் கொள்வார்கள்.
ஆனாலும் இவற்றைச் சொல்ல இது ஒரு தருணம். பிறிதொரு சந்தர்ப்பம் என்றால் வெறும் வம்புவழக்காகவே இது கொள்ளப்பட்டிருக்கும். ஒருபோதும் இந்தக் கவனத்தை ஈட்டியிருக்காது. ஏற்கனவே இந்த வகையில் யோசிக்க ஆரம்பித்திருக்கும் சிலருக்கு அதற்கான சொற்களை இக்கட்டுரைகள் அளித்தன என்றால்கூட நல்லதே.
இதற்காக வந்த எதிர்வினைகளைப் பற்றி தனிப்பட்ட முறையில் பலர் எழுதியிருந்தார்கள். எதிர்வினைப்பகுதியையே மூடவேண்டும் என்றுகூட உணர்ச்சிகரமாக எழுதியிருந்தார்கள். காரணம் பல எதிர்வினைகள் இக்கட்டுரைகளை புரிந்துகொள்ளவோ உள்வாங்கவோ எந்த முயற்சியும் செய்யப்படாமல் தோன்றிய வாக்கில் எழுதப்பட்டவை, அவை கட்டுரைகள் உருவாக்கிய மனநிலையை சிதைக்கின்றன என்று சொன்னார்கள்
இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் எங்கும் கருத்துக்கள் பரவும் விதம் அப்படித்தான். ஏசுவின் சொற்களிலேயே ஈரநிலத்தில் விழுந்தவை சிலவே என்று அவரே சொல்லியிருக்கிறார்.
இச்சொற்கள் இந்த வகையில் ஒருபோதும் சொல்லப்படவேண்டியவை அல்ல என நான் பிற எவரை விடவும் அறிவேன். நேரடியான உணர்வுபூர்வமான உறவுள்ள, ஆர்வத்துடன் தன்னை திறந்து வைத்துக்கொள்ள முடிந்த, மிகச்சிலரிடம் அந்தரங்கமாக மட்டுமே பேசப்படவேண்டியவை. அப்படித்தான் என்னிடமும் இவை பேசப்பட்டன.
இப்படிச் சொல்லப்பட்டவற்றின் வழியாக இவையும் அறிவுத்தள விவாதத்தின் ஒரு தரப்பாக மாறி குறைவுபட்டுவிட்டன என்று நன்றாக அறிவேன். அதற்காக எவரிடம் மன்னிப்பு கோரவேண்டுமோ அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். ஆனாலும் இவை ஒரு சிலருடன் அந்தரங்கமாகப் பேசியிருக்கும் என்று நம்புகிறேன்.
ஏனென்றால் நான் மொழியை ஆளத்தெரிந்த எழுத்தாளனும்கூட.
இங்கே முடித்துக்கொள்கிறேன்