‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 58

பகுதி பன்னிரண்டு : நிலத்தடி நெருப்பு – 4

தலைக்குமேல் மிக அருகே ஒரு நீலச்சுடர்போல விண்மீன் ஒன்று நின்றிருந்தது. இது ஏன் இத்தனை அருகே வந்தது, கீழே விழுந்துவிடாதா என்று விதுரர் எண்ணினார். “விலகிவிடுங்கள்” என்று சுருதை சொன்னாள். விதுரர் “இல்லை, அது நிலையானது” என்றார். ”வந்துவிடுங்கள்” என்றாள் சுருதை. “எனக்கு அச்சமில்லை. இது எனக்கு பிடித்தமானதே” என்றார் விதுரர். மீண்டும் சுருதை அழைத்தபோது விழித்துக்கொண்டார்.

நன்றாகவே விடிந்திருந்தது. சாளரம் வழியாக வந்த ஒளிக்கற்றைகள் அறைக்குள் பரவியிருந்தன. கண்கள் அந்த ஒளிக்கு நன்றாகவே கூச விதுரர் இமைகளை மூடிக்கொண்டு தலைகுனிந்து அமர்ந்திருந்தார். “அரண்மனையில் இருந்து காந்தார அரசி செய்தியனுப்பியிருந்தார். தூதன் வந்து நெடுநேரமாகிறது” என்றாள் சுருதை. அவர் நீர்வழியும் கண்களைத் துடைத்தபடி எழுந்து அவளை நோக்கினார். அவள் முகம் இயல்பாக இருந்தது, நேற்று நடந்தவை எல்லாம் அவள் அறியாமல் அவர் கனவில் நடந்தவையா என்று ஐயம் எழுப்பும்படியாக.

அவர் அவள் கண்களை நோக்கினார். எந்தத் தயக்கமும் இல்லாமல் அவரை வந்து தொட்டன அவை. “என்ன செய்தி?” என்றார். “செய்தி என ஏதுமில்லை, காந்தார அரசி சந்திக்கவிழைவதாக சொல்லப்பட்டது” என்றாள் சுருதை. “நீ என்ன நினைக்கிறாய்?” என்றார். “பிதாமகர் பீஷ்மரைப்பற்றியதாகவே இருக்கும். அவர் நேற்றுவந்ததுமே சில முடிவுகளை எடுத்திருப்பார்.” அது முற்றிலும் உண்மை என விதுரர் உடனே உணர்ந்தார். புன்னகையுடன் “அரசியலில் நீ அறியாத ஏதுமில்லை போலிருக்கிறது. இங்கும் சில ஒற்றர்களை ஏற்படுத்தவேண்டியதுதான்” என்றார். சுருதை நகைத்தாள்.

அவளிடம் நேற்று அவள் பேசியதைப்பற்றி ஏதாவது சொல்லலாம் என்று எண்ணியதுமே அதைப்பற்றி ஏதும் சொல்லாமலிருப்பதே நல்லது என்று தோன்றியது. அது அவளிடமிருந்து வெளிப்பட்டதுமே அவள் எதிர்திசையை நோக்கி ஓடத் தொடங்கியிருப்பாள். இரவெல்லாம் துயிலாமல் காலையில்தான் நிலைகொண்டிருப்பாள். அந்த நிலைகொள்ளலின் நிறைவையே அவள் முகம் காட்டுகிறது. மீண்டும் அதை கலைப்பதில் பொருளில்லை.

சுருதை கொண்டு வைத்திருந்த மரத்தாலத்தில் நறுமணப்பொடி கலந்த இளவெந்நீர் இருந்தது. அதை அள்ளி முகம் கழுவிக்கொண்டு திரும்பி அவள் தோளில் கிடந்த துணியால் முகத்தை துடைத்துக்கொண்டார். “நீராடியதுமே கிளம்பிவிடுங்கள். அவர்கள் காத்திருப்பார்கள் என நினைக்கிறேன்” என்றாள் சுருதை. “நான் உணவை எடுத்து வைக்கிறேன்” என அவள் திரும்பியதும் அவர் அவள் இடையை வளைத்து பின்னின்று அணைத்துக்கொண்டார். அவள் அசையாமல் தலைகுனிந்து நிற்க அவள் பின்னங்கழுத்தில் முகத்தைவைத்து “என் மேல் சினமா?” என்றார்.

“சினமா?” என்று சுருதை கேட்டாள். “ஆம்” என்றார் விதுரர். “இதற்கு நான் என்ன சொல்வது? நான் இறந்தபின்னர்தான் அதற்கான விடை உங்களுக்குக் கிடைக்கும்” என்று அவள் இடறியகுரலில் சொன்னாள். அவர் அவளைத் திருப்பி தன்னுடன் இறுக்கி அவள் தோளின் வளைவில் முகம் புதைத்துக்கொண்டார். “பிறிது என ஒன்றும் இல்லை எனக்கு…” என்று அவள் சொல்ல “நான் ஒரு தருணத்திலும்…” என விதுரர் தொடங்கினார். “வேண்டாம்” என்று அவள் சொன்னாள். அவர் அவள் கன்னங்களிலும் கழுத்திலும் முத்தமிட்டார்.

இளையவளாக இருந்தநாளை விட முதுமையின் தொடக்கத்தில் சற்றே தளர்ந்த அவள் உடல்தான் அழகுடன் இருப்பதாக அவருக்குத் தோன்றியது. கழுத்திலும் தோள்களிலும் மாந்தளிர் நிற மேனியில் மெல்லிய வரிகள். இளம்பாளையில் தெரிபவை போல. கண்களும் உதடுகளும் கனிந்திருப்பவை போல தோன்றின. இவள் அளவுக்கு எனக்கு அண்மையானவள் என எவருமில்லை என்ற எண்ணம் வந்தது. வேறு எவருக்கும் அகத்தைக் காட்டியதுமில்லை. மிகமிக அரிய ஒன்றை அவரிடமிருந்து எடுத்துக்கொண்டவள். “நான் உனக்குமட்டுமே என்னை முழுமையாக படைத்திருக்கிறேன் சுருதை” என்று சொன்னார். சொன்னதுமே எத்தனை எளிய சொற்கள் என்று தோன்றியது. காவியங்களிலன்றி எவரும் இத்தருணங்களில் நல்ல சொற்களை சொல்வதில்லை போலும்.

“வேண்டாம்” என்று சுருதை சொன்னாள். “ம்?” என்றார் விதுரர். “சொல்லவேண்டாம்” என்றாள். அவர் “ம்” என்றார். அவள் மார்பின் துடிப்பை, மூச்சின் வாசத்தை உணர்ந்துகொண்டிருந்தார். பின்பு அவள் அவரை சற்று விலக்கி “நேரமாகிக்கொண்டிருக்கிறது” என்றாள். விதுரர் சிரித்து “எத்தனை நேரம் என்று கணக்கு வைத்திருக்கிறாயா என்ன?” என்றார். சிரித்தபடி அவரை மெல்ல அடித்துவிட்டு சுருதை வெளியே சென்றாள். அவர் மலர்ந்த முகத்துடன் சிலகணங்கள் நின்றபின் பொருளின்றி அறைக்குள் சில எட்டுகள் நடந்தார். முகம் சிரித்துக்கொண்டிருப்பதை உணர்ந்து இறுக்கிக்கொண்டார்.

நீராடி வந்தபோது சுசரிதன் தலைப்பாகையும் பட்டு மேலாடையும் அணிந்து அவரைக்காத்து நின்றிருந்தான். அவன் விழிகள் தயங்கி கீழே சரிந்தன. “வா” என்றார் விதுரர். அவன் அருகே வந்ததும் அவன் தோளைத் தொட்டு தன்னுடன் அணைத்துக்கொண்டார். கோழிக்குஞ்சு போன்ற மெல்லிய மயிர்பரவிய ஒடுங்கிய முகம். மென்மயிர் புகைக்கரி போல பரவிய சிறிய மேலுதடு. அவன் குனிந்து அவர் கால்களைத் தொட்டான். “ஒவ்வொரு கணமும் சொல்லும் சொற்களை கண்காணித்துக்கொண்டிரு. சொன்னபின் சொன்னவற்றை மீண்டும் எண்ணிப்பார். அப்படிப் பார்க்கத் தொடங்கினாலே காலப்போக்கில் உன் சொற்கள் சுருங்கி அடர்ந்துவிடும்” என்றபின் அவன் தலையில் கைவைத்து “விழைவது அடைவாய்” என வாழ்த்தினார்.

உணவருந்தி ஆடையணிந்து கொண்டிருக்கும்போது சுருதை வந்து “நேற்றுமாலை பீஷ்மர் அரசரை சந்தித்திருக்கிறார்” என்றாள். விதுரர் திரும்பாமலேயே ”ம்” என்றார். ”அவரிடம் சொல்லிவிட்டீர்களா?” என்றாள். “என்ன?” சுருதை இதழ்விரிய நகைத்து “யாதவ அரசியும் மைந்தரும் வாழ்கிறார்கள் என்பதை.” விதுரர் திடுக்கிட்டு நோக்கி “உனக்கு எப்படித் தெரியும்?” என்றார். சுருதை “அவர்கள் இறந்திருந்தால் நீங்கள் எப்படி இருப்பீர்கள் என நான் அறிவேன்” என்றாள். விதுரர் அவளை அணுகி அவள் கண்களை உற்று நோக்கி “மேலும் என்ன அறிவாய்?” என்றார். சுருதை சிரித்தவிழிகளுடன் “அனைத்தும்” என்றாள்.

விதுரர் சிலகணங்கள் அவளையே நோக்கினார். ”சிலவற்றை தெரிந்துகொள்ளும்போது துயர்தான். ஆனால் முழுதறிந்திருக்கிறோம் என்ற உவகைக்கு அது சிறிய இழப்பே” என்றாள் சுருதை. விதுரர் பெருமூச்சு விட்டார். சுருதை வந்து அவரை அணைத்துக்கொண்டாள். மெல்லிய குரலில் அவர் செவியில் “என் கைகளில் நான் வளைத்திருப்பது என் உடலளவுக்கே நானறிந்த ஒருவர் என்பது பெரிய வரம் அல்லவா?” என்றாள். விதுரர் “நீ எப்படி எடுத்துக்கொள்கிறாய் என்று தெரியவில்லை” என்றார். பின்னர் “ஆனால் ஒரு மனிதர் இன்னொருவரை முழுதறியலாகாது. அந்த மனிதரை விரும்ப முடியாது” என்றார். ”அது ஆண்களின் அகம். பெண்கள் அப்படி அல்ல. நாங்கள் உள்ளத்தால் அன்னையர்” என்றாள் சுருதை.

விதுரர் அவள் கழுத்தில் முகம் சேர்த்து “அன்னையாகவே இரு சுருதை. சிலசமயம்…” என்றார். “ம்?” என்றாள் சுருதை. “சிறுமையும் கீழ்மையும் கொண்ட ஒருவனாகவே என்னை நீ அறிய நேரும். அப்போதும் அன்னையாகவே இரு!” அவள் மெல்ல சிரித்து அவர் தலையை வருடி “என்ன பேச்சு இது?” என்றாள். சிலகணங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்தபடி இருந்தனர். “எப்போதும் என்னிடமிருக்கும் தனிமை உன்னருகே இல்லாமலாகிறது” என்றார் விதுரர் பெருமூச்சுடன். சுருதை “அதற்காகத்தானே?” என்றாள். விதுரர் “நான் கிளம்புகிறேன். என்ன பேசப்போகிறேன் என்று தெரியவில்லை. ஆனால் எவர் எது சொன்னாலும் இன்று அவர்களை முழுமையாகவே ஏற்றுக்கொள்வேன் என்று தோன்றுகிறது” என்றார்.

ரதம் காந்தார மாளிகை முன் வந்து நிற்பது வரை உள்ளத்தில் அந்த மலர்ச்சி இருந்தது. இறங்கும்போது எதையோ எண்ணி அகம் நடுங்கியது. அது ஏன் என்று துழாவியபடி மெல்லிய பதற்றத்துடன் இடைநாழியில் நடந்தார். ஏதும் சிக்கவில்லை. உப்பரிகை ஒன்றில் ஒரு திரைச்சீலை ஆடக்கண்டு அகம் அதிர்ந்தது. உடனே நினைவுக்கு வந்தது, அந்த காந்தார அரசி. அவள் பெயர் சம்படை. ஆம், அதுதான் அவள் பெயர். அவளை நேற்று எண்ணிக்கொண்டேன், அன்னையுடன் இணைத்து சிந்தனை செய்தேன். அதன்பின் எப்போதோ வந்து படுத்தேன். இல்லை அதற்குப்பின்னர்தான் துருவனைப் பார்த்தேன்.

சின்னஞ்சிறுமியாக அவள் அரண்மனை வாயிலில் கொட்டும் மழையில் வந்திறங்கியதை துல்லியமாக நினைவுகூர முடிந்தது. பதற்றமும் ஆவலும் நிறைந்த பெரிய விழிகள். சற்று பொன்னிறம் கலந்தவை. சிறிய உதடுகள். எதையோ கேட்கப்போவதுபோல மேலுதடு சற்று வளைந்திருக்கும். உள்ளூர ஓடும் எண்ணங்கள் அவ்வப்போது முகபாவனைகளில் விழியசைவுகளில் உடலில் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். அடிக்கடி தன் மூத்தவர்களை பார்த்துக்கொண்டும் ஓரக்கண்ணால் தனக்கு இணையான வயதுள்ள தசார்ணையை நோக்கிக்கொண்டும் இடைநாழி வழியாக நடந்தாள்.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

பெருமூச்சுடன் விதுரர் எண்ணிக்கொண்டார், கூடவே வேறெதையோ எண்ணினேனே? ஆம், துருவன். விண்ணிலிருந்து இமைக்காமல் மண்ணை நோக்குபவன். அன்னை சிவையும் இந்த காந்தார அரசியும் அப்படித்தானே இமைக்காமல் நோக்கிக்கொண்டு அசைவிழந்திருந்தனர். என்ன மூடத்தனம்! அவர்களின் அகத்தில் பெரும்புயல்கள் சூழ்ந்து வீசியிருக்கலாம். அலைகடல் கொந்தளித்துக்கொண்டிருக்கலாம். அவர்கள் அகத்தையும் வெளியையும் அனைத்துக் கதவுகளையும் மூடி துண்டித்துக்கொண்டவர்கள் மட்டுமே. அன்னையின் விழிகளில் ஒருபோதும் நிறைவை, நிலையை கண்டதில்லை. அவை எப்போதும் புல்நுனியின் பனித்துளிபோல தத்தளித்துக்கொண்டுதான் இருந்தன.

அரண்மனைக்காவலன் அவரை வணங்கி உள்ளே அழைத்துச்சென்றான். அவர் உள்கூடத்தில் பீடத்தில் அமர்ந்து தலைகுனிந்து தரையை நோக்கிக்கொண்டிருந்தார். உள்ளிருந்து காந்தாரியின் அணுக்கச்சேடி ஊர்ணை வந்து வணங்கி “அமைச்சரின் வருகையை அரசிக்குத் தெரிவித்தேன். உள்ளே மலர்வாடியில் அரசியர் இருக்கிறார்கள். அங்கே அழைத்துவரச்சொன்னார்கள்” என்றாள். விதுரர் எழுந்து “உள்ளேயா?” என்றார். “ஆம்” என்றாள் ஊர்ணை. ”வருக” என்று அழைத்துச்சென்றாள்.

ஊர்ணையிடம் ஏதேனும் கேட்கவேண்டும் என்று விதுரர் எண்ணினார். ஆனால் அவர் ஆவல் கொண்டிருப்பதை அவள் அறியக்கூடாது. காந்தாரியர் எவருமே நுட்பமான உள்ளம் கொண்டவர்கள் அல்ல. ஆகவே ஊர்ணையும் அவ்வாறுதான் இருப்பாள் என்று எண்ணியதுமே புன்னகை எழுந்தது. “அரசியர் எந்நிலையில் இருக்கிறார்கள்? என் மேல் சினம் கொண்டிருக்கிறார்களா?” என்றார். அவள் திரும்பி “தங்கள் மேல் சினமில்லை” என்றாள். ”அப்படியென்றால் சினத்துடன் இருக்கிறார்கள் இல்லையா?” என்றார் விதுரர். “அதை நான் எப்படிச் சொல்வது? நான் எளிய சேடி” என்றாள் ஊர்ணை.

விதுரர் “ஆம், ஆனால் அரசியார் உங்கள் சொற்களையே மெய்யாக எண்ணுவதாக கேள்விப்பட்டேன்” என்றார். “ஆம், அவர்கள் என்னை நம்புகிறார்கள். ஏனென்றால் நான் எந்நிலையிலும் அவர்களுக்கு கட்டுப்பட்டவள். அவர்களின் நலனை நாடுபவள்.” விதுரர் “அதை நான் அறியமாட்டேனா என்ன? அரசியர் மாமன்னர் இங்கு வருவதில்லை என்பதில் சினம்கொண்டிருப்பார்கள் இல்லையா?” என்றார். “இல்லை, மாமன்னர் துயரம்கொண்டிருப்பதே அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர் துயரமேதும் கொள்ளவில்லை. அகிபீனா உண்டு மயங்கிக்கிடக்கிறார் என்று இளைய அரசி சொன்னார்கள்” என்றாள் ஊர்ணை. “உண்மையில் அரசர் இங்கே வந்து நெடுநாட்களாகிறது. குந்திதேவி இறந்த செய்தி வருவதற்கு எட்டுநாட்களுக்கு முன் இறுதியாக வந்தார்.”

“அப்படியா? அன்று நீங்களும் இருந்தீர்களோ?” என்றார் விதுரர் நடையை மெதுவாக ஆக்கியபடி. “ஆம், அவர்கள் அவரைப்பார்த்ததுமே பூசலிட்டு அழுதனர். அவர் ஏதோ சொல்லத் தொடங்கியபோது பேசவிடாமல் கூச்சலிட்டனர். அவர் பெரிய அரசியை நோக்கி பேசிக்கொண்டிருந்தார். அவர் சொல்வதைக் கேட்காமல் பெரிய அரசி சினத்துடன் எழுந்துசென்று தன் அறைக்குள் தாழிட்டுக்கொண்டார். அரசர் மேலும் சினத்துடன் வெளியே வந்து வைசிய அரசி பிரகதியின் அரண்மனைக்குச் செல்லும்படி தேரோட்டியிடம் ஆணையிட்டார்” என்றாள் ஊர்ணை.

விதுரர் “அரசியரின் துயரம் அரசருக்குத் தெரியவில்லை” என்றார். “ஆம், அரசர் சினத்துடன் பதினொரு தேவியர் இருந்தும் இங்கே இருள்தான் நிறைந்திருக்கிறது. பதினொருவரும் விழிகளை இழந்தவர்களாக இருக்கிறீர்கள் என்று கூவினார். நான் நிறைவையும் இன்பத்தையும் அடையவேண்டுமென்றால் அங்குதான் செல்லவேண்டியிருக்கிறது என்றார்” என்றாள் ஊர்ணை. “அரசர் கடும் சினத்துடன் இருந்திருக்கிறார்” என்றார் விதுரர்.

“ஆம். இருகைகளையும் ஓங்கி அறைந்து அவன் மட்டும் வைசியமகன் இல்லை என்றால் யுயுத்சுவை அரசனாக்கியிருப்பேன். பார்த்துக்கொண்டே இருங்கள், இந்த நாட்டை ஒருநாள் அவன்தான் ஆளப்போகிறான் என்று கூவியபடி தேரில் ஏறிக்கொண்டார். தேர் சென்றதுமே இரண்டாவது அரசி வெளியே ஓடிவந்து என்னிடம் எங்கே செல்கிறார் அரசர் என்று கேட்டார்கள். பிரகதியிடம் என்று சொன்னேன். என்னை அடிக்க கை ஓங்கினார்கள். என்னை நோக்கி உன் முதலைமுகத்துடன் அரசரை தேருக்கு இட்டுச்சென்றாயா என்று கேட்டார்கள். நான் என்ன செய்வேன்? ஒன்றும் தெரியாத எளிய சேடி. எனக்கு என்ன கடமையோ அதைச் செய்கிறேன். இங்கே நடப்பது எதையும் எங்கும் சொல்வதில்லை. என்னைப்பற்றி தாங்களே அறிவீர்கள்… இதோ இந்த வாயில்தான்” என்றாள் ஊர்ணை.

உள்ளே காந்தாரி ஒரு மரப்பீடத்தில் அமர்ந்திருக்க அருகே மூத்த காந்தாரியர் நால்வர் அமர்ந்திருந்தனர். இருவர் சற்று அப்பால் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். அனைவரும் விதுரரை நோக்கித் திரும்ப சத்யசேனை எழுந்து கையை நீட்டி உரக்கக் கூவியபடி அருகே வந்தாள். “அந்த யாதவப்பெண்ணும் அவள் போட்ட குட்டிகளும்தான் எரிந்து போய்விட்டார்களே? இன்னுமா எங்கள் மைந்தர்கள் தாசிமகன்களாக இந்நகரில் வாழவேண்டும்? விழியிழந்தால் அறிவிழந்து போய்விடவேண்டுமா என்ன? நீங்கள் கற்றவர் அல்லவா? நீங்கள் சொல்லக்கூடாதா?”

விதுரர் “நான் சொல்லவேண்டியதை சொல்லிவிட்டேனே அரசி” என்றார். “நேற்று பீஷ்மபிதாமகர் வந்தபோது கந்தார இளவரசரே வந்து அனைத்தையும் பேசிவிட்டார். பிதாமகர் ஆவன செய்வதாகக் கூறினார்.” சத்யவிரதை சினத்துடன் எழுந்து “போதும். எங்களுக்கும் ஒற்றர்களும் நலம்விரும்பிகளும் உண்டு. நேற்று அரசரை சந்தித்துவிட்டு பீஷ்மர் வந்ததுமே தமையனார் சென்று பேசிவிட்டார். மூத்தவனுக்கு முடிசூட்டுவதைப்பற்றி பீஷ்மர் உறுதியும் அளித்தார். ஆண்டுநிறைவுக்குப்பின் அது நிகழும் என்றார். அதன்பின் அவருடன் சென்றவர் நீங்கள். சென்று இறங்கியதுமே அவர் உள்ளம் மாறிவிட்டது” என்றாள்.

“நான் ஒன்றும் அறியேன் அரசி. நாங்கள் சென்றதும் அங்கே துரோணர் வந்தார். அவரது மாணவர்கள் வந்தனர். துரோணர் அவரது மாணவர்களில் ஜயத்ரதன், சிசுபாலன், தேவாலன், திருஷ்டத்யும்னன் என்ற நான்கு மாவீரர்களை அறிமுகம் செய்தார். அவர்களைப்பார்த்து பீஷ்மபிதாமகர் மகிழ்ந்தார். துரோணரிடம் அவர் நெடுநேரம் உரையாடிக்கொண்டிருந்தார். அவரது அகம் எப்போது மாறியது என்று தெரியவில்லை அரசி. அவர் மாறியதே எனக்கு இப்போது நீங்கள் சொல்லித்தான் தெரியும்” என்றார் விதுரர். அவர் எண்ணியதுபோலவே காந்தாரிகள் குழம்பி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். அத்தனை செய்திகளையும் பெயர்களையும் கடந்து அவர்களால் சிந்திக்கமுடியவில்லை.

விதுரர் “பீஷ்மர் என்ன சொன்னார் என நான் அறியலாமா?” என்றார். “ஆண்டுமுடிவுக்குப் பின்னரும் சிலவருடங்கள் காத்திருக்கலாம் என்கிறார். அஸ்தினபுரியின் நட்புநாடுகள் துரியோதனனை ஏற்குமா என்று பார்க்கவேண்டும் என்று சொல்கிறார்.” விதுரர் “இதென்ன மூடத்தனம்? பிதாமகரா அப்படிச் சொன்னார்? அஸ்தினபுரியின் அரசர் யாரென்று நட்புநாடுகளா முடிவெடுப்பது?” என்றார். “மூடத்தனம்தான். ஐயமே இல்லை” என்றாள் காந்தாரி. “நமக்கிருக்கும் நான்கு துணையரசுகள் யாதவர்களுடையது என்கிறார். அவர்களின் ஒப்புதலைப்பெறவேண்டும் என்கிறார்.”

“பீஷ்மபிதாமகர் வேறு ஏதோ திட்டம் வைத்திருக்கிறார்” என்றார் விதுரர். “யாதவர்களை அஞ்சுபவர் அல்ல அவர்.” காந்தாரி ”நானும் அதையே எண்ணினேன். அவரது திட்டம் எதுவாக இருக்கக் கூடும்?” என்றாள். “திருதராஷ்டிர மாமன்னர் இன்னும் சற்றுநாள் அரசராக நீடிக்கட்டும் என நினைக்கிறார். ஒருவேளை துரோணரின் மாணவர்கள் குண்டலம் அணியட்டும் என காத்திருக்கப்போகிறாரோ?” என்றார் விதுரர். முற்றிலும் தொடர்பற்ற அந்தக் கூற்று அவர் கணக்கிட்டதைப்போல காந்தாரியரை திகைக்க வைத்தது. காந்தாரி “எனக்கு ஒன்றும் புரியவில்லை விதுரரே. இந்த அரசியல் சதிகளை எண்ணினால் என் தலைக்குள் ஏதோ வண்டுகள் குடியேறுவதுபோல இருக்கிறது” என்றாள்.

சத்யசேனை சினத்துடன் “இதில் என்ன சிந்தனை தேவையிருக்கிறது? இன்றிருக்கும் மூத்த இளவரசன் என்றால் துரியோதனன் மட்டுமே. ஆணைகளை புரிந்துகொள்ளாத இடத்தில் அரசர் இருக்கையில் முடியை அவருக்கு அளிப்பதில் என்ன தடை இருக்க முடியும்?” என்றாள். விதுரரின் உள்ளத்தில் ஒரு மெல்லிய புன்னகை படர்ந்தது. அவர் விழிகள் இடுங்க முகம் இணக்கமாக ஆகியது. “அரசி, பீஷ்மபிதாமகருக்கு ஐயங்கள் இருக்கலாம்” என்றார். “என்ன ஐயம்?” என்றாள் சத்யசேனை கண்களை சுருக்கியபடி. “அரசு சூழ்தலில் நிகழ்வதுதானே?” என்றார் விதுரர். “என்ன ஐயம் விதுரரே?” என காந்தாரி உரத்த குரலில் கேட்டாள்.

“தருமன் பட்டத்து இளவரசன். அவன் தம்பியர் மாவீரர். அனைவரும் ஒரே தீநிகழ்வில் அழிந்தார்கள் என்றால் அதன்பின் ஏதேனும் சதி இருக்கலாமோ என்ற ஐயம் மக்களுக்கு வரலாம். அவ்வண்ணம் வரலாகாதே என பிதாமகர் அஞ்சலாம்” என்றார் விதுரர். “என்ன சொல்கிறீர்? அவர்களை என் மைந்தர்கள் கொன்றார்கள் என்கிறீர்களா? பழி பரப்புகிறீர்களா?” என்று சத்யசேனை கூவியபடி அடிக்க வருபவள் போல அவரை நோக்கி வந்தாள். விதுரர் தடுப்பது போல கைநீட்டி “நான் அவ்வண்ணம் சொல்லவில்லை அரசி. அந்த எண்ணம் யாதவர்களிடம் இருக்கிறதா என்ற ஐயத்தை பிதாமகர் அடைந்தாரோ என நான் ஐயப்படுகிறேன்… அதுவன்றி பிதாமகரின் நடத்தையை வேறு எவ்வகையிலும் விளக்கிவிட முடியாது.”

காந்தாரியர் கொதிப்புடன் அவரைச் சூழ்ந்து நின்றனர். சத்யவிரதை “இது இறுதிச்சதி. வஞ்சத்தால் என் மைந்தரின் முடியுரிமையைப் பறிப்பதற்கான முயற்சி” என்று சொன்னாள். “ஒருபோதும் இதை ஒப்புக்கொள்ளமாட்டோம். நாங்களே அவைக்கு வந்து அதைக் கேட்கிறோம். அவ்வாறு ஐயமேதுமிருந்தால் அங்கேயே அதை அரசரும் பிதாமகரும் தீர்த்துவைக்கட்டும். வெறுமே பழிசுமத்தி முடியுரிமையைப் பறிப்பதை ஏற்க மாட்டோம்… தமையனாரை சந்தித்து பேசுகிறோம்” என்றாள் சத்யசேனை.

“விதுரரே” என்று காந்தாரி தன் கனத்த கைகளை நீட்டி அழைத்தாள். “நீங்கள் அப்படி ஐயுறுகிறீர்களா?” விதுரர் எழுந்து கைகூப்பி “அரசி, இவ்வினாவை என்னிடம் கேட்கலாமா? அரசியின் குருதிமரபை நான் அறியமாட்டேனா?” என்றார் விதுரர். “அவர்கள் அப்படி செய்யக்கூடும் என்று நான் நினைக்கவில்லை விதுரரே. ஒருவேளை என் இளையோன் அதற்கும் துணியக்கூடும். அவருடன் இருக்கும் கணிகன் அதை அவருக்கு சொல்லவும்கூடும். ஆனால் என் மைந்தன் அதை ஒருபோதும் செய்யமாட்டான். அவனால் அச்சிறுமையை எண்ணிக்கூட பார்க்கமுடியாது… விதுரரே, அவன் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவன்.”

சட்டென்று அவள் உதடுகளை அழுத்தி அழத்தொடங்கினாள். கண்களைக் கட்டியிருந்த துணி நனைந்து ஊறி கன்னத்தில் வழிந்தது. “அவன் பிறந்தநாள் முதலே பழி சுமந்து வாழ்பவன். அத்தனை தீமைகளுக்கும் உறைவிடமாக அவனை காட்டிவிட்டனர் சூதர்கள். யாதவ அரசி அவனைப்பற்றிய தீயசெய்திகளை பரப்புவதை தன் வாழ்நாளெல்லாம் செய்துவந்தாள். ஆனால் அவனை நான் அறிவேன். என் மைந்தன் நிறைந்த உள்ளம் கொண்டவன். அவனால் இழிவை நோக்கி இறங்க முடியாது.” விசும்பி அழும் காந்தாரியை நோக்கியபடி விதுரர் அமைதியாக அமர்ந்திருந்தார்.

“நீங்கள் சொன்னீர்களே, அவன் என் குருதி என்று… இல்லை… அவன் வேழத்தின் நெஞ்சு கொண்ட திருதராஷ்டிரரின் மைந்தன். என் கணவரை நான் நெஞ்சில் இறைவடிவமாக நிறுத்தியிருப்பது அவர் என் கழுத்தில் தாலியணிவித்தார் என்பதற்காக மட்டும் அல்ல. நானறிந்த மானுடரிலேயே விரிந்த மனம் கொண்டவர் அவர் என்பதனால்தான். அவன் அவரது மைந்தன் விதுரரே. அவன் சிறுமையை செய்யமாட்டான். இதை நீங்கள் நம்புங்கள். உங்களிடம் பேசுபவர்களிடம் சொல்லுங்கள்… பிதாமகர் அவனை அப்படி ஐயுற்றார் என்றால் அது அவன் நெஞ்சில் ஈட்டியை நுழைப்பதற்கு நிகர். அவரிடம் அதை சொல்லுங்கள் விதுரரே!” அவள் தோள்கள் குலுங்கின. சத்யசேனை அவள் முகத்தை தன் மேலாடையால் துடைத்தாள்.

மெல்லிய விசும்பல்களாக காந்தாரி அழும் ஒலி தோட்டத்தில் ஒலித்துக்கொண்டிருந்தது. காலையொளியில் நீண்டு கிடந்த நிழல்களுடன் பூமரங்கள் அசைவற்று நின்றன. மிக அப்பால் ஏதோ முரசின் ஒலி கேட்டது. காந்தாரியின் கைவளைகளின் ஒலியும் ஆடையின் சரசரப்பும் கேட்டன. விதுரர் தன் அகத்தை மிகுந்த விசையுடன் உந்தி முன்னால் தள்ளினார். மேலும் நெருங்கிச்சென்று “ஒருவேளை அது உண்மை என்றால்…” என்றார். காந்தாரி திடுக்கிட்டு முகத்தைத் துடைத்த கைகளுடன் நிமிர்ந்தாள். வாய்திறந்து காதை அவரை நோக்கி திருப்பினாள்.

“அரசி, ஒருவேளை மூத்தமைந்தர் ஏதோ ஒரு அகஎழுச்சியில் அதைச் செய்திருந்தால்? அவர் அவமதிக்கப்பட்டிருந்தார். சிறுமைத் துயரில் எரிந்துகொண்டிருந்தார். எவரேனும் தங்கள் தீய சொற்களால் அவரை அதற்கு உந்தியிருந்தால்?” காந்தாரி கைகளை மடிமேல் வைத்தாள். வளையல்கள் ஒலித்தன. அவள் உடல் நீள்மூச்சில் ஆடியது. “விதுரரே, அவ்வாறென்றால் அவன் திருதராஷ்டிரரின் மைந்தன் அல்ல என்று பொருள். அவன் குருதி பொய். அவன் அன்னையின் கற்பும் பொய்” என்றாள்.

பற்களைக் கடித்து தடித்த வெண்கழுத்தில் நீலநரம்புகள் புடைத்து எழ மெல்லிய குரலில் காந்தாரி சொன்னாள் “அவனை அதன்பின் என் மைந்தன் என கொள்ளமாட்டேன். அவன் என்னருகே வந்தால் அவன் நெஞ்சில் என் குறுவாளை ஏற்றுவேன். இல்லை என்றால் அவனுக்கு ஈமக்கடன்களைச் செய்து என் மைந்தனல்ல என்று விண்ணுலகில் வாழும் என் மூதன்னையருக்கு அறிவிப்பேன்.” அவள் கண்களில் இருந்து மீண்டும் கண்ணீர் வழிந்தது. “அதன் பின் நான் வடக்கிருந்து உயிர்துறப்பேன். அவனைப்பெற்ற பாவத்தை அவ்வாறு கழித்தபின் அன்னையர் அடியை சென்று சேர்வேன்.”

“அரசி, திருதராஷ்டிரரே அவ்வாறு செய்திருந்தால்?” என்றார் விதுரர். “ஒருகணம் நிலைதடுமாறி அவர் ஆமென ஒப்பியிருந்தால்?” காந்தாரி சீற்றத்துடன் எழுந்தாள். “அவ்வாறென்றால் என் தெய்வம் பேயென்றாகிறது. நான் வாழ்ந்த வாழ்க்கை இழிந்ததாகிறது. அக்கணமே சென்று தீயில் இறங்கி தூய்மைபெறுவேன்.” மேலும் கைநீட்டி ஏதோ சொல்ல முயன்றபின் உடைந்து அழுதபடி அமர்ந்துகொண்டாள். “விதுரரே, நீர் பேசுவதென்ன?” என்றாள் சத்யசேனை.

“அரசியரே, துரியோதனரோ திருதராஷ்டிரரோ இவ்வாறு நான் எண்ணுவதை அறிந்தாலே என் நெஞ்சில் வாளை ஏற்றிவிடுவார்கள் என அறிவேன்” என்றார் விதுரர். “நான் அரசியிடம் கேட்டது ஒரே நோக்கத்துடன்தான். அரசி எவ்வகையில் எதிர்வினையாற்றினார்கள் என்று நான் பீஷ்மபிதாமகரிடம் சொல்லவேண்டும் அல்லவா?” காந்தாரி “அரசு சூழ்தலில் எதுவும் நிகழும் என்பதே முதல்பாடம் விதுரரே. ஆகவேதான் உங்கள் நெஞ்சு அவ்வகையில் செல்கிறது. ஆனால் நான் பெண், அரசு சூழ்தலின் பாதை எதுவானாலும் குலப்பெண்கள் நெறிமீறுவதில்லை…” என்றாள்.

“ஆம் அரசி. அஸ்தினபுரியின் அரண்மனையில் கொற்றவை வாழும் வரை ஒருபோதும் இங்கு அறம் ஒளிகுன்றுவதில்லை” என்றார் விதுரர். “நான் இங்கு வந்தது ஒரு சொல்லுடன்தான். பிதாமருக்கு ஐயம் இருக்கலாம், இல்லாமலிருக்கலாம். ஆனால் அவர் தயங்குகிறார். அதை நாம் அவரிடம் பேசமுடியும். அவர் பிதாமகர்மட்டுமே. அஸ்தினபுரியின் அரியணை மேல் அவருக்கு முறைசார்ந்த உரிமை என ஏதுமில்லை.” சத்யசேனை “ஆம், அதை நான் நேற்றே சொல்லிக்கொண்டிருந்தேன்” என்றாள்.

“அரசர் நோயுற்றிருக்கிறார். அந்நிலையில் நெறிகளின்படி அரசரின் அதிகாரம் பட்டத்தரசியிடம் வந்து சேர்கிறது. காந்தார அரசி இன்று அஸ்தினபுரியின் முழுமையான பொறுப்பில் இருப்பவர் என்பதை சொல்லவிழைகிறேன். அவர் தன் மைந்தனை பட்டத்து இளவரசர் என அறிவித்து முடிசூடும்படி ஆணையிடலாம். அதை மறுக்க அரசர் ஒருவருக்கு மட்டுமே உரிமை உள்ளது” என்றார் விதுரர். “ஆண்டுமுடிவு நாளின் சடங்குகளுக்குப்பின் மறுநாளே துரியோதனர் பட்டத்து இளவரசராக முடிசூடுவார் என்றும் அடுத்த வளர்பிறையில் ஹஸ்தியின் மணிமுடி அவர் சென்னியில் இருக்கும் என்றும் அரசியின் திருமுகம் ஒன்று வெளியானால் அனைத்து வினாக்களும் முடிவடைந்துவிடும்.”

”நான் அதற்குரிய அனைத்தையும் செய்கிறேன்” என்று விதுரர் தொடர்ந்தார். “ஆமென்று அரசி சொன்னால் இன்று மதியமே முறையான ஆணை நகர்ச்சந்திகளில் முழங்கும். அதன்பின் எந்த ஐயத்திற்கும் இடம் இல்லை.” காந்தாரி பெருமூச்சுடன் “இல்லை விதுரரே, அவனுக்கு இப்போது மணிமுடி தேவை இல்லை. இப்படி ஒரு ஐயம் சற்றேனும் இருக்கையில் அவன் மணிமுடி சூடினால் அது அவனுக்கும் அவன் தந்தைக்கும் இழுக்கே. அவன் முன் வந்து நின்று இந்த நாடு விண்ணப்பிக்கட்டும். மணிமுடியை முழுமனதுடன் பிதாமகரும் குலக்குழுவினரும் அவனுக்கு அளிக்கட்டும்…” என்றாள்.

“நான் சொல்வதென்ன என்றால்…” என்று விதுரர் சொல்லத் தொடங்க “பழியின் சாயல்கொண்ட ஒன்றை அவன் செய்தாலே அது சிறுமைதான். அவன் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவனாகவே இதுவரை இருக்கிறான். இனிமேலும் அவ்வண்ணமே இருக்கட்டும் என் சிறுவன்” என்றபின் காந்தாரி எழுந்துகொண்டு தன்னை உள்ளே அழைத்துச்செல்ல கைகாட்டினாள். அவள் உள்ளே செல்வதை விதுரர் நோக்கி நின்றபின் தோள்களை தொங்கவிட்டு பெருமூச்சுவிட்டார்.

காந்தாரியரிடம் வணங்கி விடைபெற்று திரும்பும்போது விதுரர் நெடுமூச்சுகளாக விட்டுக்கொண்டிருந்தார். திரும்பி தன் இல்லம் சென்று வடக்கு உப்பரிகையில் அமரவேண்டுமென எண்ணினார்.ஊர்ணையிடம் “சம்படை என்னும் அரசிதானே அணங்குபீடித்தவள்?” என்றார் விதுரர். “ஆம், அதோ அந்த உப்பரிகையில்தான் எந்நேரமும் இருப்பார்” என்றாள் ஊர்ணை. விதுரர் திரும்பி அத்திசை நோக்கி நடந்தார். “அவர்களை அனைவரும் மறந்துவிட்டார்கள். அவர்கள் அங்கே ஒரு திரைச்சீலை ஓவியம்போல இருந்துகொண்டிருக்கிறார் என்று சேடி ஒருத்தி சொன்னாள்” என்றபடி ஊர்ணை பின்னால் வந்தாள்.

மேற்கு உப்பரிகையை அடைந்தபோது விதுரரின் நடை தளர்ந்தது. கால்கள் செயலிழந்து உள்ளங்கால்கள் வியர்வையால் ஈரமாகின. சறுக்கிவிழுந்துவிடுவோம் என அஞ்சியவர் போல அங்கேயே நின்றார். அவர் வந்த ஒலியைக் கேட்டு திரும்பி நோக்கியபின் சம்படை மீண்டும் சாளரத்துளைகள் வழியாக வெளியே நோக்கினாள். அரச உடைகளுடன் முழுதணிக் கோலத்தில் இருந்தாள். ஆனால் உடல் வற்றி அனல்பட்ட இலைபோல தோல் கருகிச் சுருங்கியிருந்தது. பற்கள் முற்றிலும் உதிர்ந்து உதடுகள் உள்நோக்கிச் சென்று மூக்கு பறவை அலகுபோல அதன் மேல் வளைந்து நின்றது. அழுக்குக் கூழாங்கற்கள் போன்ற உயிரற்ற விழிகள். முண்டுகள் புடைத்த சுள்ளிக்கைகள். நகம் நீண்டு வளைந்த விரல்கள். அங்கே இருந்தது இறப்பைஎட்டிவிட்ட முதிய உடல்.

விதுரர் அவளை நோக்கியபடி அங்கேயே நின்றிருந்தார். ஊர்ணை “ ”வருடக்கணக்காக காலைமுதல் மாலை வரை இங்குதான். அணங்கு அவர்களின் குருதியை குடித்துக்கொண்டிருக்கிறது” விதுரர் தன்னையறியாமல் அவளை அழைப்பது போல கையெடுக்க ஊர்ணை “அவர்களிடம் நாம் பேசமுடியாது” என்றாள். “ஆம், அவர்களை நான் நன்கு அறிவேன்” என்றார் விதுரர்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

முந்தைய கட்டுரைஒடுக்கப்படுகிறார்களா பிராமணர்கள்- கடைசியாக.
அடுத்த கட்டுரைவிடுதலையின் மெய்யியல்- கடிதம்