சில சிறிய விஷயங்கள் அபாரமான உற்சாகத்தை அளிக்கக்கூடியவை. பெரும்பாலும் இன்னொருவரிடம் அவற்றைப் பகிரக்கூட முடியாது. அதில் முக்கியமானது குழந்தைகளின் வெற்றிகள்.
பொதுவாகவே இந்தியர்களைப்பற்றி ஒரு மெல்லிய கிண்டல் மேலைநாட்டினரிடம் உண்டு, நாம் நம் குழந்தைகளைப்பற்றி அன்னியரிடம் பெருமையடித்துக்கொள்வோம்.Mike Stocks தமிழ்நாட்டைப்பற்றி கிண்டலுடன் எழுதிய White man falling என்ற நாவலில் இதை சொல்லியிருந்ததை நினைவுகூர்கிறேன். மலையாளிகளுக்கேகூட தமிழர்கள் தங்கள் பிள்ளைகளைக் கொஞ்சம் அதிகமாகவே சொல்லிக்கொள்வார்கள் என்ற கிண்டல் உண்டு
நாம் ஒருவீட்டுக்குச் சென்று அமர்ந்ததுமே தன் குழந்தைகள் வரைந்த நோட்டுப்புத்தகத்துடன் வந்து அமரும் தந்தையர் அடிக்கடிக் காணக்கிடைப்பவர்கள். “இப்பவே ஐபோனை அக்கக்கா கழட்டிருவான் சார்” என்ற பரவசம் அடிக்கடி என் முன் நிகழ்கிறது
ஆனால் நான் இதை ஒரு பிழையாக அல்லது குறைவாக கருதுவதில்லை. நானேகூட கொஞ்சம் பெருமையடித்துக்கொள்ளலாம் என்றே நினைப்பேன். ஏனென்றால் அதில் ஒரு இயல்புநிலை உள்ளது. பெருமையடிக்காமல் அடக்கிக் கொள்வதுதான் செயற்கையானது
அத்தகைய ஒரு தருணம் சிலநாட்களுக்கு முன் நிகழ்ந்தது. என் இளையநண்பர் ராதாகிருஷ்ணன் சிலவருடங்களுக்கு முன்னர் அறிமுகமானவர். நாங்கள் கோவையில் விஷ்ணுபுரம் பற்றி நிகழ்த்திய ஒரு வாசகர் சந்திப்பில் அவர் எழுந்து அழுத்தமாகவும் நுட்பமாகவும் பேசினார். அரங்கசாமி உடனே அவரைக் கவ்விக்கொண்டார்
அந்த அரங்கில் பல்கலைப் பேராசிரியர்கள், முனைவர்கள், கோட்பாட்டாளர்கள் விஷ்ணுபுரம் வாசிக்க கடினமானது ‘இருண்மை’ கொண்டது என்றெல்லாம் பேசினார்கள். துல்லியமாக வாசித்திருந்த ராதாகிருஷ்ணன் முறையான கல்வி கொண்டவர் அல்ல. அப்போது குறைந்த வருமானத்தில் இரும்பு அடுப்புகளுக்கு வண்ணம்பூசும் வேலை செய்துகொண்டிருந்தார்
அதன்பின் விஷ்ணுபுரம் நண்பர்களுக்கு நெருக்கமானவர் ஆனார். எங்கள் இலக்கியச் சந்திப்புகளுக்கெல்லாம் வந்திருக்கிறார்.சொற்களுக்காகச் சற்று சுற்றியடித்தாலும் எப்போதும் கூரிய கருத்து ஒன்றைச் சொல்ல முடியும் அவரால். எனக்கு நீளமான கடிதங்களை இரண்டுநாளுக்கு ஒருமுறை என எழுதிக்கொண்டிருந்தார். அவ்வப்போதுதான் நான் அவருக்கு பதிலளிப்பேன். ஆனால் எனக்கு மிக நெருக்கமானவராக அவரை உணர்ந்தேன்
ராதாகிருஷ்ணன் பின்னர் சில வெல்டிங் மற்றும் இரும்புவேய்தல் வேலைகளை எடுத்துச் செய்யத் தொடங்கினார். முழுமையாக ஈடுபட்டு தரமாகச் செய்வதனால் ஆரம்பத்தில் நஷ்டங்களைச் சந்தித்தார். ஆனால் மெல்ல அதுவே ஓர் அடையாளமாக ஆகும் என்பதை அறிந்துகொண்டார்
ராதாகிருஷ்ணன் அவரது சமீபத்திய வேலை ஒன்றின் புகைப்படத்தை அனுப்பியிருந்தார். பெரும் பூரிப்புடன் அதை பார்த்துக்கொண்டிருந்தேன். பின்னர் அதை ‘ஸ்க்ரீன் சேவராக’ வைத்திருந்தேன். அருண்மொழி ‘இது என்ன தகரக்கொட்டாய் படம்?’ என்று திகைத்தாள். ராதாகிருஷ்ணன் கட்டியது என்றேன் .’பையன் சாதிச்சிட்டான் பாத்தியா?’ என்று கேட்டேன்.
‘உனக்கு கிறுக்கு’ என்றாள். ‘அவனை நீ சின்னப்பையனாகவே பாக்கிறே. அதான் பெரிசா தெரியுது…இதேமாதிரி எவ்ளவோ கட்டிகிட்டுத்தானே இருக்காங்க?’ என்றாள். சரிதான். ஆனால் இது ஒரு சாதனை என்று எனக்கு மட்டும்தான் தோன்றும்.
எதிர்காலத்தில் ராதாகிருஷ்ணன் ஒரு குட்டி கோவைத் தொழிலதிபராக மாறுவதைக் கற்பனை செய்துகொண்டேன். உற்சாகமாக இருந்தது