பகுதி பன்னிரண்டு : நிலத்தடி நெருப்பு – 3
விதுரர் கிளம்பும்போது பீஷ்மர் புன்னகையுடன் அவர் பின்னால் வந்து “நான் உன்னை வருத்துவதற்காக சொல்லவில்லை” என்றார். விதுரர் தலைகுனிந்து நின்றார். “உன் உடலை நோக்கிக்கொண்டே இருந்தேன். உன் உள்ளம் கொதிப்பதை உணர்ந்தேன்.” விதுரர் உடலில் இருந்து ஒரு சொல் வெளியேற எண்ணி மெல்லிய அசைவை உருவாக்கி உள்ளே திரும்பிச் சென்றது. பீஷ்மர் அவர் தோளில் கைவைத்து “அறிவின் நிழல் ஆணவம். முதுமையில் நிழல் பெரிதாகிறது” என்றார்.
சினத்துடன் தலைதூக்கி “நான் என்ன ஆணவத்தை வெளிப்படுத்தினேன்?” என்றார் விதுரர். “அஸ்தினபுரியின் படைகளுக்கு நீயே ஆணையிட வேண்டும் என்று யாதவனிடம் சொன்னாய் அல்லவா?” என்றார் பீஷ்மர். “எந்த நெறிப்படியும் அமைச்சருக்கு அந்த இடம் இல்லை. அப்படியென்றால் ஏன் அதைச் சொன்னாய்? நீ விழையும் இடம் அது. அத்துடன் உன்னை யாதவன் எளிதாக எண்ணிவிடலாகாது என்றும் உன் அகம் விரும்பியது.”
உயரத்தில் இருந்து குனிந்து நோக்கி விதுரரின் தலையைத் தடவியபடி பீஷ்மர் சொன்னார் “மைந்தா, அவன் முன் நீ தோற்ற இடம் அது. அச்சொல்லைக் கொண்டே உன்னை அவன் முழுமையாக புரிந்துகொண்டுவிட்டான். உன் ஆணவத்தையும் விழைவையும் மதிப்பிட்டான். நீ புகழை இழப்பதை இறப்பைவிட மேலாக எண்ணுவாய் என்று உணர்ந்துகொண்டான். உன் நிலையை நீ பெருக்கிக் காட்டுவதற்கான அடிப்படை உணர்வு என்பது சூதன் என்ற உன் தன்னுணர்வே என்று கணித்துக்கொண்டான். அனைத்தையும் சொற்களால் அறுத்து வீசினான்.”
“அவன் சினந்தோ, நாவின் கட்டிழந்தோ அதைச் செய்யவில்லை. தெளிவான கணிப்புகளின்படி சொல்லெண்ணியே அதை சொல்லியிருக்கிறான். உன்னை முழுமையாக உடைத்து தன் வழியிலிருந்து அகற்றவேண்டுமென்று எண்ணியிருக்கிறான். அதை அடைந்துவிட்டான்” என்றார் பீஷ்மர். விதுரர் சினத்துடன் “இனியும்கூட நான் அவனை எதிர்க்கமுடியும். அவன் கனவுகளை உடைத்து அழிக்கமுடியும்” என்றார்.
பீஷ்மர் “இல்லை விதுரா, இனி உன்னால் முடியாது. உன் அகம் பதறிவிட்டது. உன் ஆற்றல் இருந்தது நீ மாபெரும் மதியூகி என்ற தன்னுணர்வில்தான். அது அளிக்கும் சமநிலையே உன்னை தெளிவாக சிந்திக்கவைத்தது. அவன் அதை சிதைத்துவிட்டான். சினத்தாலும் அவமதிப்புணர்வாலும் சித்தம் சிதறிய விதுரனை அவன் மிக எளிதாக கையாள்வான்… அவன் வென்றுவிட்டான். அதை நீ உணர்வதே மேல். உன் அறிவாணவத்தை அவன் கடந்துசென்றுவிட்டான்” என்றார். விதுரர் “நான் அவ்வாறு எண்ணவில்லை. என் பொறுப்பிலிருக்கும் நாட்டைக் காப்பது என் கடன். அதில் எனக்கு மாற்றமில்லை” என்றார்.
பீஷ்மர் “நீ சொல்லும் சொற்களை மீண்டும் எண்ணிப்பார். அறிவின் ஆணவம் மூன்று வழிகளில் வெளிப்படுகிறது. நான் அறிவேன் என்ற சொல். என் பொறுப்பு என்ற சொல். எனக்குப்பின் என்றசொல். அரசியல் மதியூகிகள் அவற்றை மீளமீள சொல்லிக்கொண்டே இருப்பார்கள்” என்றார். ”இது ஒரு தருணம், நீ உன்னை மதிப்பிட்டுக்கொள்ள. இல்லையேல் உனக்கு மீட்பில்லை.” விதுரர் “வணங்குகிறேன் பிதாமகரே” என்றபின் தேர் நோக்கி நடந்தார்.
பின்னால் வந்த பீஷ்மர் “நீ அமைச்சனாக நடந்துகொள்ளவில்லை. ஆனால் குந்தி அரசியாக நடந்துகொண்டாள். மதுராவை பிடிக்க அவள் ஆணையிட்டதும், அதைச்செய்ய யாதவனால் முடியும் என மதிப்பிட்டதும், கட்டியை வாளால் அறுத்து எறிவதுபோல அந்த இக்கட்டை அச்சத்தைக்கொண்டு ஒரே வீச்சில் முழுமையாக முடிக்கச் சொன்னதும் பேரரசியரின் செயல்களே” என்றார். விதுரரின் முகம் மலர்ந்தது. “ஆம் பிதாமகரே. நான் அவர்களின் சொல்லில் இருந்த ஆற்றலை எண்ணி பலமுறை வியந்திருக்கிறேன். நகரங்களை அழிக்கும் சொல் என்று புராணங்களில் நாம் கேட்பது அதுதான் என எண்ணிக்கொண்டேன்” என்றார்.
பீஷ்மர் “நலமாக இருக்கிறாள் என நினைக்கிறேன். இங்கே வெறும் ஆட்சியாளராக இருந்தாள். காட்டில் மைந்தருடன் அன்னையாகவும் இருக்கமுடிந்தால் அவள் முழுமையான அரசியாவாள். பொதுமக்களுடன் வாழ்ந்து அவர்களில் ஒருவராக தன்னை உணர்ந்தாளென்றால் பாரதவர்ஷம் நிகரற்ற பேரரசி ஒருத்தியை அடையும்” என்றபின் “அவ்வாறே நிகழட்டும்” என்று வாழ்த்தினார். விதுரர் தலைவணங்கி சாரதியை தொட்டார். தேர் உருண்டது.
அந்தி இருண்டு வந்துகொண்டிருந்தது. ஓரிரு காவல்மாடங்களில் பந்தங்களை கொளுத்திவிட்டிருந்தனர். சகடங்களின் ஒலியும் மக்களின் பேச்சின் இரைச்சலும் இணைந்து அழுத்தமான கார்வையுடன் சூழ்ந்திருந்தன. கோடைகாலமாதலால் காற்றில் இருந்த நீராவி காதுகளைத் தொட்டது. முதற்கோட்டைவாயிலின் வலப்பக்கம் நின்றிருந்த பெரிய மாமரத்தில் காக்கைக்கூட்டங்கள் கூடி பெருங்குரல் எழுப்பி கலைந்து அமைந்துகொண்டிருந்தன. குழல் பறக்க தேர்த்தட்டில் நின்றிருந்த விதுரர் சிறிது நேரம் கழித்துத்தான் தன் முகம் புன்னகைத்துக் கொண்டிருப்பதை கண்களின் சுருக்கமாகவும் கன்ன மடிப்பாகவும் உணர்ந்தார். அதை முகத்தில் மறைத்தபின்னரும் அகத்தில் அதன் ஒளி எஞ்சியிருந்தது.
அமைச்சுமாளிகைக்குச் செல்லவேண்டும் என்றுதான் எண்ணியிருந்தார். ஆனால் வீடுதிரும்பும் எண்ணம் அரண்மனை வளைப்புக்குள் நுழைந்ததும் ஏற்பட்டது. தேரைத்திருப்பும்படி சாரதியிடம் சொல்லியபின் கண்களை மூடி அமர்ந்திருந்தார். ரதத்தில் இருந்து இறங்கி படிகளில் ஏறிச்சென்றதும் சுருதை ஒலிகேட்டு எதிரே வந்தாள். “பிதாமகர் வந்திருக்கிறார் என்றார்கள்…” என்றாள். விதுரர் “ஆம்” என்றார். “அவருடன்தான் இருந்தேன். அவர் அரசரைப் பார்க்கப் போனபோது உடன் சென்றேன்” என்றபின் “நான் சற்று ஓய்வெடுக்கவேண்டும்” என்று சொல்லி படியேறி மேலே சென்றார்.
தன் படுக்கையறையில் விரித்திருந்த மஞ்சத்தில் கால்களை நீட்டிப் படுத்துக்கொண்டு சுவரையே நோக்கிக்கொண்டிருந்தார். சுருதை அருகே வந்து “இரவுணவை இங்கே அருந்துவீர்களா?” என்றாள். “ஆம்” என்றார். அவள் சில கணங்கள் தயங்கியபின் “சுசரிதன் தங்களைப் பார்க்கவேண்டுமென விழைகிறான்” என்றாள். விதுரர் புருவத்தை மட்டும் அசைத்தார். ”அவனை யாதவபுரிக்கு அனுப்புவதாக சௌனகரின் ஆணை வந்துள்ளது. தங்கள் வாழ்த்துக்களை விழைகிறான்.” விதுரர் எழுந்து அமர்ந்து “வரச்சொல்” என்றார்.
மெலிந்த கரிய சிற்றுடலும் ஒளிமிக்க கண்களுமாக சுசரிதன் அவரது இளமைக்காலத் தோற்றத்தை கொண்டிருந்தான். உள்ளே வந்ததுமே “வணங்குகிறேன் தந்தையே” என்று சொல்லி குனிந்து அவர் பாதங்களைத் தொட்டான். “புகழுடன் இரு!” என்றார் விதுரர். “என்னை துவாரகைக்கு அனுப்புகிறார் பேரமைச்சர். நான் செல்லும் முதல் அரசமுறைத் தூது இது. அதுவும் துவாரகைக்கு. இங்கே அத்தனை பேருமே அந்நகரைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இளைய யாதவனை ஷத்ரியர்களெல்லாம் அஞ்சுகிறார்கள்.”
விதுரர் அவன் உவகையை நோக்கிக்கொண்டிருந்தார். “அவனை வெல்ல இன்று பாரதவர்ஷத்தில் எவருமில்லை தந்தையே. அவன் முன் பரசுராமரும் பீஷ்மரும் கர்ணனும் எல்லாம் சிறுவர்கள் போல என்கிறார்கள். யாதவர்கள் உலகை ஆளும் காலம் வந்துவிட்டது என்கிறார்கள்” என்று அவன் சற்றே உடைந்த குரலில் கூவினான். குரல்வளை ஏறியிறங்கியது.
விதுரர் கசப்பான புன்னகையுடன் “யார், யாதவர்களா சொல்கிறார்கள்?” என்றார். அவன் அந்த ஏளனத்தை உணராமல் “ஆம், நம்மவர்தான் சொல்கிறார்கள். நம்மவர் நடையே மாறிவிட்டது. நான் துவாரகைக்குச் சென்றால் திரும்பி வரப்போவதில்லை. அங்கேயே அமைச்சனாக இருந்துவிடுவேன்” என்றான். “எனக்கு இங்கே எதிர்காலம் இல்லை. துணையமைச்சனாகவும் தூதனாகவும் வாழ்ந்து மறையவேண்டியிருக்கும்.”
விதுரர் கண்களைச் சுருக்கி “அங்கு சென்றபின் அம்முடிவை எடு” என்றார். சுசரிதன் தன் அக எழுச்சியில் அவரது குரல் மாறுபடுவதை உணரவில்லை. உரத்தபடியே சென்ற குரலில் “அவனைப்பற்றி கேள்விப்படுவதை வைத்துப் பார்த்தால் அவன் ஒவ்வொரு மனிதனையும் அறிந்த இறைவனுக்கு நிகரானவன். எளிய குதிரைக்காரர்கள் கூட அவர்களுக்கு மிகநெருக்கமானவன் அவனே என்கிறார்கள். நேற்று ஒரு சூதப்பாடகன் சொன்னான். இந்த பாரதவர்ஷத்தில் இனி எளிய மக்களை வெறும் மானுடத்திரளாக எவரும் எண்ணமுடியாது என்று. ஏனென்றால் பாரதவர்ஷத்தில் வாழும் ஒவ்வொருவரின் பெயரையும் அறிந்த ஒரு மன்னன் வந்துவிட்டானாம்…” என்றான்.
விதுரர் “போதும்…” என்று கைகாட்டினார். “தூது செல்லும் முன் தூதன் செல்லுமிடத்தை நன்கு அறிந்துகொள்ளவேண்டும். மிகையுணர்ச்சிகள் எதையும் அடைந்து விடக்கூடாது” என்றார். சுசரிதன் “தந்தையே, இந்த நகரம் பிராமணர்களுக்கும் ஷத்ரியர்களுக்கும் உரியது. இனி இங்கே பறக்கப்போவது காந்தாரத்தின் கொடி. ஷத்ரியர்களுக்குப் பணிந்து தோளை ஒடுக்கி நான் ஏன் இங்கே வாழவேண்டும்?” என்றான். அவன் எல்லையை மீறிவிட்டதை அவனே உணர்ந்ததை இறுதிச்சொற்களில் வந்த தயக்கம் காட்டியது. ஆனால் ஏதோ ஒரு வெறி அவனை மேலும் இட்டுச்சென்றது. பழுத்த கட்டியின் கண்ணையே அடிப்பது போல “நீங்கள் இங்கே எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்று எனக்கும் தெரியும். உங்கள் சொற்கள் மீறப்பட்டதன் துயரம் உங்களை வாட்டுகிறது” என்றான்.
விதுரர் சிவந்த முகத்துடன் “நீ அஸ்தினபுரியின் தூதன், அதை எந்நிலையிலும் மறக்கலாகாது” என்றார். “ஆம், நான் அஸ்தினபுரியின் தூதன். ஆனால் அஸ்தினபுரியினர் யாதவர்களை அழித்துவிட்டனர். பாண்டவர்கள் சதியால் கொல்லப்பட்டார்கள் என்று ஒவ்வொரு யாதவனும் சொல்கிறான். இனி இது எங்கள் நகர் அல்ல. யாதவர்களின் அரசர் துவாரகையின் அதிபரே” என்று சுசரிதன் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே விதுரர் சினத்துடன் எழுந்து ”போதும்” என்று உரக்கக் கூவினார். சுசரிதன் திகைத்து பின்னடைந்தான்.
“நீ யாதவன் அல்ல, தெரிகிறதா? நீ யாதவன் அல்ல!” என்று விதுரர் நடுங்கும் கையை நீட்டி கூச்சலிட்டார். “நீ சூதன். சூதப்பெண்ணின் வயிற்றில் பிறந்த சூதனின் மைந்தன்” என்று சொல்லி அடிக்கப்போவதுபோல அவனை நோக்கி வந்தார். சுசரிதன் தடுமாறிய குரலில் “அன்னைவழியில்தானே நீங்கள் சூதர்? அப்படியென்றால் நான் யாதவன் அல்லவா?” என்றான்.
விதுரர் “சீ, மூடா! என்னை எதிர்த்தா பேசுகிறாய்?” என்று கையை ஓங்கியபடி ஓர் எட்டு எடுத்து வைத்தார். அதை எதிர்பாராத சுசரிதன் பின்னகர்ந்து சுவரில் முட்டிக்கொண்டு நின்றான். அவன் கண்களைச் சந்தித்த விதுரர் மெல்லத் தளர்ந்து பெருமூச்சு விட்டு “செல்” என்று மட்டும் சொன்னார். அவன் உதடுகளை அசைத்து ஏதோ சொல்லவந்தான். பின்னர் சுவரைப்பிடித்துக்கொண்டு நடந்து வெளியேறினான். விதுரர் சிலகணங்கள் நின்றுவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டார்.
என்ன நிகழ்ந்தது என அவர் தனக்குத்தானே கேட்டுக்கொண்டார். பிள்ளைகளிடம் அவருக்கு எப்போதுமே நெருக்கமான உறவு இருந்ததில்லை என்றாலும் அவர் அவர்களை கண்டித்ததோ சினந்ததோ இல்லை. ஆகவே எப்போதும் ஓர் இயல்பான உரையாடலே அவர்களிடையே நிகழ்ந்து வந்தது. சுசரிதன் இந்த நாளை ஒருபோதும் மறக்கமாட்டான் என எண்ணிய மறுகணமே பல ஆண்டுகளுக்குப்பின் அவன் இந்நாளை எண்ணி புன்னகை புரியக்கூடும் என்றும் நினைத்துக்கொண்டார். இந்த விரிசல் வழியாக அவன் அவருக்குள் நுழையும் வழி கிடைத்துவிட்டது.
தந்தை தன் மிகச்சிறிய பகுதியையே மைந்தர்களிடம் காட்டமுடியும். அந்தச் சிறிய பகுதியைக்கொண்டு அவர் உருவாக்கும் தன்னுரு மிகப்பொய்யானதே. மைந்தர்கள் அந்தப்பொய்யுருவை இளமையில் நம்புகிறார்கள். பின்னர் அதை உடைத்துப்பார்க்க ஒவ்வொரு தருணத்திலும் முயல்கிறார்கள். ஏனென்றால் அந்தப்படிமை மைந்தனுக்கு முன்னுதாரணமாகவும் வழிகாட்டியாகவும் இருக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டது. பிழைகளோ கீழ்மைகளோ அற்றது. தன் பிழைகளையும் கீழ்மைகளையும் அறியத் தொடங்கும் வயதில் தந்தையை உடைத்து அவரிலும் அவற்றைக் காணவே மைந்தர் விழைகிறார்கள்.
அந்தமோதலே மைந்தரின் வளரிளமைப் பருவத்தில் தந்தைக்கும் மைந்தர்களுக்கும் இடையே எங்கும் நிகழ்கிறது. ஆனால் முழுமையாக உடைபட்டதுமே தந்தை இரக்கத்துக்குரிய முதியவராக ஆகிவிடுகிறார். எப்போது தந்தையை எண்ணி மைந்தர் சிரிக்கத் தொடங்குகிறார்களோ அங்கு அவர்களுக்கிடையேயான உறவு மீண்டும் வலுப்படுகிறது. தந்தை மைந்தனாகிவிடுகிறார். தனயர்கள் பேணுநர்களாகி விடுகிறார்கள்.
விதுரர் புன்னகையுடன் திரும்பிப் படுத்தார். வாழ்க்கையின் ஒரு சிறிய தருணத்தைக்கூட தத்துவமாக ஆக்காமல் இருக்க முடியவில்லை. உள்ளே நிறைந்திருக்கும் சொற்களை கருத்துக்களாக ஆக்கும் விசைகளை மட்டுமே நிகழ்வுகளில் இருந்து பெற்றுக்கொள்கிறேன். விசைமிகுந்த அனுபவங்கள் துயர்மிக்கவையாக இருந்தாலும் அகத்துள் ஆணவம் மகிழ்ச்சியையே அடைகிறது. பீஷ்மர் சொன்னது சரிதான், ஆணவத்தை விழித்திருக்கும் நேரமெல்லாம் அளைந்துகொண்டிருக்கிறேன். துயின்றபின் ஆன்மா ஆணவத்தையே அளைகிறது. கனவுகளில்…
விதுரர் எழுந்து அகல்விளக்கை எடுத்துக்கொண்டு அருகிருந்த சுவடி அறையை அடைந்தார். தன் இடையிலிருந்த சிறு திறவியால் ஒரு பெட்டியைத் திறந்து உள்ளிருந்து பெரிய தாழ்க்கோலை எடுத்தார். அறையின் தாழ்த்துளைக்குள் விட்டு இருமுறை வலமும் ஒருமுறை இடமும் மீண்டும் ஒருமுறை வலமும் மீண்டுமொருமுறை இடமும் சுழற்றி அதை திறந்தார். இருளில் தன் நிழல் துணைவர கைவிளக்குடன் நடந்து குனிந்து ஆமையோட்டு மூடியிட்ட சுவடிப்பெட்டியைத் எடுத்தார். அதற்குள் சுவடிகளுக்கும் சுருட்டிய பட்டு லிகிதங்களுக்கும் நடுவே இருந்த சிறிய தந்தப்பேழையை எடுத்து மெல்ல மூடியை அகற்றினார். உள்ளே அஸ்வதந்தம் என்ற அந்த சிறிய வைரம் இருந்தது. எளிய வெண்கூழாங்கல் போலத்தான் தெரிந்தது. செம்பழுப்புநிறம். அதில் அகல்சுடரின் ஒளி ஒரு நுனியில் பிரதிபலித்தது. வேல்நுனியின் குருதிப்பூச்சு போல.
விதுரர் அதையே நோக்கிக்கொண்டிருந்தார். வைரம் சினம்கொண்டபடியே செல்வது போலிருந்தது. வெம்மை கொண்டு பழுத்து கனன்று அது தழலாகியது. இருளில் அது மிதந்து நிற்பதுபோல விழிமயக்கு உருவானது. அதைவிட்டு கண்களை விலக்க முடியவில்லை. இருதழல்கள். அலைத்தழலை புன்னகைத்தது நிலைத்தழல். விதுரர் அகல்சுடரை ஊதி அணைத்தார். ஒளிகுறைந்து அறை மறைந்து வைரச்சுடர் மட்டும் தெரிந்தது. பின் விழிவிரிந்தபோது அந்த ஒளியில் அறைச்சுவர்கள் மெல்லியபட்டுத்திரை போல தெரிந்தன. ஆமாடப்பெட்டியின் செதுக்குகள், தந்தப்பேழையின் சித்திரங்கள் எல்லாம் வைரச்செவ்வொளியில் துலங்கித்தெரிந்தன. பூனைவிழிபோல, மின்மினி போல. அது செம்மையா பொன்னிறமா என்றே அறியமுடியவில்லை.
பின் எப்போதோ விழித்துக்கொண்டு அதை மீண்டும் பெட்டிக்குள் வைத்து மூடினார். எழுந்தபோதுதான் உடல் நன்றாக வியர்த்திருப்பதை உணர்ந்தார். வெளியே வந்து கதவை மூடி தாழ்க்கோலை சிற்றறைக்குள் வைத்து அதை திறவியால் மூடிக்கொண்டிருந்தபோது சுருதை படுக்கையறைக்குள் இருப்பதை உணர்ந்தார். ஒருகணம் அறியாமல் உடலில் வந்த அதிர்வை உடனே வென்று இயல்பாக வந்து படுக்கையறைக்குள் நுழைந்தார். அவள் சுசரிதனைப்பற்றி பேசமாட்டாள் என்று அவர் அறிந்திருந்தார். தானும் பேசலாகாது என எண்ணியபடி வந்து படுத்துக்கொண்டார்.
“உணவு அருந்துகிறீர்களா?” என்றாள் சுருதை. “இல்லை, எனக்குப் பசியில்லை” என்று அவர் சொன்னார். அவள் பெருமூச்சுடன் “துயில்கிறீர்கள் என்றால் நான் செல்கிறேன்” என்றாள். அந்த இயல்புநிலை அவரை சினம் கொள்ளச்செய்தது. அவளுடைய பாவனைகளைக் கிழித்து வெளியே இழுத்து நிறுத்தவேண்டும் என்ற அக எழுச்சியுடன் “நான் அந்த வைரத்தை நோக்கிக்கொண்டிருந்தேன்” என்றார். “தெரியும்” என்று அவள் சொன்னாள். “எப்படி?” என்றார் விதுரர் கடும் முகத்துடன். “தோன்றியது.” என்றாள் சுருதை
“எப்படித் தோன்றியது?” என்று உரக்கக் கேட்டபடி விதுரர் எழுந்தார். “விளையாடுகிறாயா? நான் மதியூகி. என்னிடம் உன் சமையலறை சூழ்ச்சிகளை காட்டுகிறாயா?” சுருதை சற்றும் அஞ்சாத விழிகளால் அவரை ஏறிட்டு நோக்கி “சற்று முன் சுசரிதனிடம் எதற்காக சினம் கொண்டீர்கள் என்று அறிந்திருந்தால் அதை கணிப்பதில் என்ன தடை இருக்க முடியும்?” என்றாள். “எதற்காகச் சினம் கொண்டேன்?” என்று பற்களை இறுக்கியபடி விதுரர் கேட்டார்.
“அவன் யாதவர்களின் முழுமுதல் தலைவன் என்று கிருஷ்ணனைச் சொன்னான். அதை உங்களால் தாளமுடியவில்லை. அவன் முன் அவமதிக்கப்பட்டதை நீங்கள் ஒருகணமும் மறக்கவில்லை” என்றாள் சுருதை. பொங்கி எழுந்த சினத்தால் விதுரரின் உடல் சற்று மேலெழுந்தது. உடனே அதை அடக்கியபடி சிரித்து “சொல்” என்றார். “ஆனால் அதற்கு முன் நீங்கள் அவனை அவமதித்தீர்கள். பாண்டவர்களின் முன்னால் அரசையும் படைகளையும் நடத்துபவர் நீங்கள் என்று சொன்னது அதற்காகவே.” கண்களில் சீற்றத்துடன் பற்கள் மட்டும் தெரிய சிரித்து “சொல், எதற்காக நான் அவனை அவமதிக்கவேண்டும்?” என்றார்.
“ஏனென்றால் இந்த நகரின் யாதவர்கள் உங்களைத்தான் தங்கள் தலைவராகவும் வழிகாட்டியாகவும் எண்ணிவந்தனர். நான் யாதவகுலத்தவள் என்பதனால். ஒவ்வொருநாளும் உங்கள் முன் வந்து பணிபவர்களில் பெரும்பாலானவர்கள் யாதவர்கள். அவர்களுக்கு நீங்கள் அடைக்கலமும் அளித்துவந்தீர்கள்.” என்றாள். விதுரர் “அவமதிக்கத் தொடங்கிவிட்டாய். முழுமையாகவே சொல்லிவிடு” என்றார்.
சுருதையின் விழிகள் மெல்ல மாறுபட்டன. அவற்றில் இருந்த இயல்பான பாவனை விலகி கூர்மை எழுந்தது. “மதுராவுக்கு உதவவேண்டாமென நீங்கள் முடிவெடுத்ததே அதற்காகத்தான். மதுராவை இளைய யாதவன் வென்று அரசமைத்ததை உங்கள் அதிகாரத்துக்கு வந்த அறைகூவலாகவே உங்கள் ஆழ்மனம் எண்ணியது. மதுராவை ஏகலவ்யன் கைப்பற்றியதை அது நிறைவுடனேயே எதிர்கொண்டது. இளைய யாதவன் வந்து உங்களிடம் மன்றாடியிருந்தால் படைகளை அனுப்பியிருப்பீர்கள்….” அவள் கசப்பான புன்னகையுடன் “இல்லை, அப்போதும் அனுப்பியிருக்க மாட்டீர்கள். அவன் எப்போதைக்குமாக உங்கள் அடிபணிந்து நிற்பவனல்ல என்று அவனைக் கண்டதுமே உணர்ந்துவிட்டீர்கள்” என்றாள்.
விதுரர் விரிந்த புன்னகையுடன் “எத்தனை சிறந்த மணவுறவிலும் மனைவியின் உள்ளத்தில் ஆழ்ந்த கசப்பு ஒன்று குடியிருக்கும் என்று நூல்கள் சொல்கின்றன. அது சிறந்த மணவுறவாக இருக்கும் என்றால் அந்தக்கசப்பை அவள் மேலும் மேலும் உள்ளே அழுத்திக்கொள்வாள். அதன்மேல் நல்லெண்ணங்களையும் இனியநினைவுகளையும் அடுக்கி மறைப்பாள். ஆனால் அழுத்த அழுத்த அது வீச்சு மிக்கதாக ஆகிறது. உன்னில் இப்போது வெளிப்படுவது அதுதான்” என்றார். சுருதை சீற்றத்துடன் “ஆம், உண்மைதான். கசப்புதான். இங்கே நான் அரசியாக வரவில்லை. ஆனால் அரசனின் மகளாக வந்தேன். இங்கு வந்தபின் ஒருமுறையேனும் நீங்கள் உத்தரமதுராபுரிக்கு வரவில்லை. எந்தை தேவகரை இங்கு அழைக்கவுமில்லை” என்றாள்.
சுருதையின் விழிகளில் தெரிந்த பகைமையைக் கண்டு விதுரரின் அகம் சற்று அஞ்சியது. முற்றிலும் அயலவளான ஒரு பெண். இருபதாண்டுகாலம் உடன் வாழ்ந்தும் ஒருகணம் கூட வெளிப்பட்டிராதவள். “…அது ஏன் என்று எனக்குத்தெரிந்தது. நீங்கள் சூதர். யாதவர்களின் அரசராஅன எந்தை முன் உங்கள் ஆணவம் சீண்டப்பட்டது. அந்தத் தாழ்வுணர்ச்சியை நான் புரிந்துகொண்டேன். ஆனால் என் தந்தையின் நகரில் ஹிரண்யபதத்து அசுரர்படைகள் புகுந்து சூறையாடியபோது அவர் அங்கிருந்து உயிர்தப்பி மார்த்திகாவதிக்கு நாடிலியாகச் சென்று தங்கியபோது நீங்கள் வாளாவிருந்தீர்களே அதை நான் ஒருபோதும் என் அகத்தில் பொறுத்துக்கொண்டதில்லை. மதுராவை வென்று என் தந்தைக்கு உத்தரமதுராபுரியை திருப்பி அளித்த இளைய யாதவனையே என் தலைவனாக என்னால் கொள்ளமுடியும்.”
“முடித்துவிட்டாயா?” என்றார் விதுரர். உண்மையிலேயே அவள் அப்போது முடித்துக்கொண்டு எழுந்துசென்றால் நல்லது என்றே அவர் நினைத்தார். “இல்லை, இப்போது உள்ளே சென்று நீங்கள் அவ்வைரத்தை எடுத்துப்பார்த்தது எதை என நான் எப்படி அறிந்தேன் தெரியுமா? உங்கள் மைந்தன் நாவில் உங்கள் சிறுமையும் யாதவன் பெருமையும் வெளிவந்தபோது நிலையழிந்தீர்கள். சென்று அந்த வைரத்தை எடுத்து நோக்கியிருப்பீர்கள். இந்த அஸ்தினபுரியின் பாதிக்கு நிகராகக் கொடுக்கப்பட்ட வைரம். அது உங்கள் அறையின் ஆழத்தில் இருந்துகொண்டிருக்கிறது. அதை உங்களுக்கு அளித்தவர் பாண்டு. அவர் இன்றில்லை…”
“சீ, வாயை மூடு!” என்று எழுந்து அவளை அறைய கையோங்கி முன்னால் சென்றார் விதுரர். நடுங்கும் கையுடன் அசையாமல் நின்றபின் மீண்டும் அமர்ந்துகொண்டார். அந்த விசையில் மஞ்சம் அசைந்தது. “ஏன் அடிக்கவேண்டியதுதானே? என்ன தயக்கம்?” என்றாள் சுருதை. விதுரர் “போ வெளியே” என்றார். “அடிக்க முடியாது. நூலறிந்த ஞானி அல்லவா?” என்றாள் சுருதை. ”ஆம், மனைவியை அடிக்கும் ஆண்கள் எளிதில் அவளை கடந்துசெல்லமுடியும். இப்போது அதை உணர்கிறேன்” என்றார் விதுரர்.
சுருதை ”உங்களால் முடியாது. உங்களிடமில்லாதது அதுதான்… ஷாத்ரம். நீங்கள் இவ்வுலகில் எதையும் வென்றெடுக்க முடியாது. அதை என்று உணர்ந்து உங்கள் ஆசைகளை களைகிறீர்களோ அன்றுதான் விடுதலை அடைவீர்கள்” என்றாள். “அந்த ஆசைகள் அனைத்தும் உங்களில் நிறைந்திருக்கும் அச்சங்களாலும் தாழ்வுணர்ச்சியாலும் உருவானவை. நீங்கள் எவரென்று உங்கள் எண்ணங்களும் செயல்களும் திட்டவட்டமாகவே காட்டுகின்றன. அதற்குமேல் ஏன் எழவிரும்புகிறீர்கள்? தன் நீள்நிழல் கண்டு மகிழும் குழந்தைக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு?”
“போ…” என்று விதுரர் கைகாட்டினார். சுருதை எழுந்து தன் கூந்தலை சுழற்றிக்கட்டி திரும்பி “என் மைந்தன் நாளை அவன் வாழ்வின் தொடக்கத்தை எதிர்கொள்ளப் போகிறான். அவனை சிறுமைசெய்வதை நான் ஒருபோதும் ஏற்கமாட்டேன். அது எவராக இருந்தாலும் சரி. இந்த வார்த்தைகளை உங்கள் முகம் நோக்கிச் சொல்லவே வந்தேன்” என்றபின் வெளியே சென்றாள். அவள் சென்றபின்னரும் அங்கே அவள் தோற்றம் இருப்பது போலிருந்தது. அது சுருதைதானா அல்லது எதேனும் தெய்வம் அவளுருவில் வந்து செல்கிறதா?
இரவின் ஒலிகளைக் கேட்டபடி விதுரர் படுக்கையில் தலைகுனிந்து அமர்ந்திருந்தார். பின்னர் மஞ்சத்தில் படுத்துக்கொண்டு சுடரை ஊதி அணைத்தார். சூழ்ந்த இருள் மெல்ல வெளிறி அறையின் நிழலுரு தெரியத் தொடங்கியது. சாளரத்துக்கு அப்பால் விண்மீன்கள் செறிந்த வானம் மிக அண்மையில் தெரிந்தது. காற்றே இல்லாமல் மரக்கிளைகள் அனைத்தும் உறைந்து நின்றன. மிக அப்பால் காவலர்கள் ஏதோ பேசிச்சென்றார்கள். ஒரு காவல் குதிரை குளம்பொலியுடன் சென்றது. வடக்குக் கோட்டைமுகத்தில் யானை ஒன்று மெல்ல உறுமியது.
மூச்சுத்திணறுவது போலிருந்தது. சிந்தனைகளாக உருப்பெறாமல் உதிரி எண்ணங்களாக ஓடிக்கொண்டிருந்தது சித்தம். பின்னர் அவர் உணர்ந்தார், அது ஒன்றையே சொல்லிக்கொண்டிருந்தது என. சுருதையின் சொற்களை. அவற்றை விட்டு விலகி நான்கு திசைகளிலும் சென்று சுழன்று அவற்றையே வந்தடைந்துகொண்டிருந்தார். அச்சொற்களை முழுமையாக நினைவுகூர அவரது அகம் அஞ்சியது. அவற்றின் நுனியைத் தீண்டியதுமே விதிர்த்து விலகிக் கொண்டது. மீண்டும் சுழற்சி. நெருப்புத்துளிமேல் வைக்கோலை அள்ளிப்போடுவது போல வெற்றுச் சொற்களை அள்ளி அள்ளி அதன் மேல் போட்டுப்போட்டு சலித்தார்.
எழுந்து வந்து வடக்கு உப்பரிகையில் அமர்ந்துகொண்டார். வெளியே மண்சாலையில் பந்தத்தின் ஒளி செந்நிறமாக சிந்திக்கிடந்தது. நீளநிழலுடன் ஒரு முயல் அதன் வழியாக தாவி ஓடியது. அங்கே அமர்ந்திருந்து அன்னை அந்த முயலின் முதுமூதாதையரை பார்த்திருப்பாள். தலைமுறை தலைமுறையாக அவை அவளையும் பார்த்திருக்கும். அவளை ஒரு கற்சிலை போல தெய்வம் போல அவை எண்ணியிருக்கும். அவளை அவை நினைவுகூர்ந்தால்தான் உண்டு. சிவை என்ற பெயரைச் சொல்லும் எவர் இன்றிருக்கிறார்கள்?
அவர் காந்தாரத்தின் இளைய அரசி சம்படையை நினைத்துக்கொண்டார். எப்போதும் அரண்மனையில் அணங்கு பிடித்த ஓர் அரசி இருந்துகொண்டுதான் இருப்பாள் என்று தீச்சொல் உண்டு என்று சூதர்கள் சிலர் சொல்லி கேட்டிருக்கிறார். அவ்வேளையில் அது உண்மை என்றே தோன்றியது. அவளை ஓரிருமுறை அவர் அரண்மனை உப்பரிகையில் ஒரு நிழல்தோற்றமாக மட்டுமே பார்த்திருக்கிறார். நிழல்தான், உடல் மறைந்தபின்னரும் எஞ்சும் நிழல். சூதப்பெண் சிவையின் நிழல் இந்த உப்பரிகையில் எஞ்சியிருக்கக் கூடும்.
அவர் அங்கேயே கண்மூடி அமர்ந்திருந்தார். அன்னையை அருகே உணரமுடிந்தது. எழுந்து சாளரம் வழியாக வானைநோக்கியபோது வடக்கு முனையில் துருவன் ஒளிவிடுவதை நோக்கினார். விழிகளை விலக்கவே முடியவில்லை. ஆவல், அச்சம், அமைதியின்மை ஏதுமற்ற நிலைப்பு. தான் மட்டுமே தன்னுள் நிறைந்திருப்பதன் முழுமையான தனிமை.
=====================================================
சுட்டி அத்தியாயங்கள்
அஸ்வதந்தம்
சம்படை
===========================================================
வெண்முரசு அனைத்து விவாதங்களும்