இந்திய வேளாண்மையும் உழைப்பும்

india2021
ஜெயமோகன் அவர்களுக்கு,

இப்போதிருக்கும் எல்லா மாணவர்களையும் போல் பெற்றோரால் நானும் பொறியியல் கல்லூரியிலேயே சேர்க்கப்பட்டேன். கல்லூரியில் சோம்பித்திரிந்த காலத்தில், ஒளிப்பதிவாளர் செழியன் எழுதிய ‘உலக சினிமா’ என்னும் புத்தகத்தை எதேச்சையாக படிக்க நேர்ந்தது. சினிமாவின்பால் ஈர்க்கப்பட்டேன். சினிமா சம்மந்தமாக புத்தகங்கள் தேடும் போது எஸ்.ராமகிருஷ்ணனின் புத்தகங்கள் மூலம் இலக்கிய அறிமுகம் கிடைத்தது. ஒரு முறை என் நண்பன் ஈரோடு புத்தக கண்காட்சியில் இலவசமாக ஒரு புத்தகம் கிடைத்ததாக படித்து பார்க்க சொன்னான். அச்சிறிய புத்தகத்தில் இருந்த கதை ‘யானை டாக்டர்’.அந்த கதை என்னை புரட்டி போட்டது. பணம் சம்பாதிப்பதே வாழ்க்கையின் வெற்றி என்று சொல்லி வளர்க்கப்பட்ட எனக்கு வெற்றி என்றால் என்ன என்று யோசிக்க வைத்தது. நாஞ்சில் நாடனின் ‘சதுரங்க குதிரையும்’ எஸ்.ராமகிருஷ்ணனின் ‘உறுபசியும்’ என்னை உடைத்து போட்டது. எனது வாழ்கையில் இவ்வளவு நாட்கள் வீணடித்து விட்டோம் என்று தோன்றியது. எனக்கு கிடைத்த MNC வேலையை விட்டுவிட்டு என்னுடைய தன்னறம் சினிமா என்று முடிவு செய்தேன். நாமக்கல் பள்ளிகளில் பிராய்லர் கோழி போல் வாழ்ந்த நான் கல்லூரி படிப்பு முடித்த பின் வாழ்கையை வாழ முடிவு செய்தேன். சென்னையில் ஒரு அறை எடுத்து கடந்த ஒரு வருடமாக இலக்கியம், வரலாறு என்று எல்லாவற்றையும் படித்து கொண்டு இருக்கிறேன். குகை ஓவியங்கள், பல்லவர், சோழர் கோயில்கள், தமிழகத்தின் ஆறுகள் என்று சுற்றித்திரிகிறேன். என் வாழ்கையில் இவ்வளவு சந்தோசமாகவும் busy-யாகவும் நான் இருந்ததில்லை.(ஆனால் வீட்டில் வெட்டியாக இருப்பதாக வசைபாடுகிறார்கள்). இப்போது உதவி இயக்குனர் ஆகும் முயற்சியில் இருக்கிறேன்.

ஒரு சிறு சந்தேகம். உங்களின் சிபாரிசின் படி டிடி கோசம்பியின் ‘இந்திய வரலாறு: ஓர் அறிமுகம்’,மார்வின் ஹாரிஸின் ‘பசுக்கள், பன்றிகள், போர்கள்’ முடித்து விட்டு ஜாரேட் டைமன்டின் ‘துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு’ படித்து கொண்டு இருக்கிறேன் (அடுத்து டிடி கோசாம்பியின் ‘பண்டைய வரலாறு’ வரிசையில் இருக்கிறது). இவ்வெல்லாவற்றிலும் பொதுவான கருத்து என்னவென்றால் ஓர் பழங்குடி சமுகம் வேட்டையில் இருந்து விவசாயத்திற்கு மாறும் பொழுது உபரியை உருவாக்குகிறது. இதனால் அச்சமுகத்தில் பிற தொழில்களும் கலைகளும் வளர்ச்சி அடைகிறது. எந்த அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து உபரி உருவாகிறதோ அந்த அளவுக்கு மக்கள் விவசாயத்தில் இருந்து வெளியே வந்து பிற தொழில்கள் செய்து பேரரசை உருவாக்குகிறார்கள். இதையே இன்றைய நவீன உலகில் வைத்து பார்க்கும் பொழுது இந்திய ஜனநாயகம் மாபெரும் சக்தியாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. ஆகவே வளரும் நாட்டில் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியே வருவது இயல்பானதாகவே தோன்றுகிறது. நம்மை விட பொருளாதரத்தில் கீழே இருக்கும் நாடுகளிடம் இருந்து உணவை இறக்குமதி செய்து கொள்ளலாமே. இன்று வல்லரசாக இருக்கும் அமெரிக்காவும் பிரிட்டனும் அப்படித்தானே செய்கிறது. அது மட்டும் அல்லாது கிராமத்தில் இருக்கும் சாதி அடுக்குகளையும் நீர்த்து போக செய்ய இதுவே சிறந்த வழி என்று தோன்றுகிறது.

சமீபத்தில் சமண குகைகளை பார்ப்பதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோயிலூரில் ஜம்பை என்ற கிராமத்திற்கு சென்றிருந்தேன். தென் பென்னாறு பாசனத்தில் நெல் வயல்களாகவே இருந்தது. ஆனால் கிராமம் வளர்ச்சி அடையவே இல்லை. சாதிய அடுக்கும் மிக அப்பட்டமாகவே தெரிந்தது. நான் கொங்கு பகுதியில் திருப்பூரை சேர்த்தவன். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் கிராமமும் அப்படியே இருந்தது. திருப்பூர் தொழில் வளர்ச்சி அடைய ஆரம்பித்தவுடன் எங்கள் கிராமத்தில் விவசாய கூலிகளாக இருந்தவர்கள் கம்பெனிக்கு வேலைக்கு போக ஆரம்பித்தனர். இப்போது அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது. விவசாய நிலம் வைத்திருக்கும் கவுண்டர்களும் குறைந்த உழைப்பே தேவைப்படும் தென்னையை போட்டு விட்டு power loom வைத்து சம்பாதிக்கிறார்கள். ஆகவே உலகமயமாக்கலில் இது தவிர்க்க முடியாத ஒன்றாகவே தோன்றுகிறது.

இப்படிக்கு,

ரா. பாலு மகேந்திரா

அன்புள்ள பாலு

நீங்கள் செய்தது எந்த அளவுக்குச் சரி என்று குழப்பமாகவே இருக்கிறது. தமிழ்ச்சூழல் கலை- இலக்கியம்- அறிவுத்தளம் சார்ந்த வாழ்க்கையை வாழ்வதற்குரியது அல்ல. எழுத்தையோ கலையையோ நம்பி வாழ வந்தவர்கள் பின்னர் வாழ்க்கைக்காகவே அவற்றைக் கையாளும் நிலைக்குச் செல்லும் அவலம் இங்கே உண்டு. வாழ்க்கைக்கு வலுவாக இன்னொரு பிடிப்பு இருக்கையில் மட்டுமே இங்கே சுதந்திரமாகச் சிந்திக்கமுடியும், செயல்படமுடியும் . இதுவே யதார்த்தம்

நீங்கள் செய்திருக்கும் அவதானிப்பு சரியானதே. விவசாயத்தில் மானுட உழைப்பு குறைவது நவீன பொருளியல் வளர்ச்சியின் ஆதாரமான நிகழ்வு. இந்தியாவில் அது நிகழ்கிறது. மேலும் விரிவாக நிகழும். இயந்திரங்கள் வழியாக விவசாயம் நிகழ்வதும். நிலம் தொகுக்கப்பட்டு பெருந்தொழிலாக அது ஆவதுமே இன்றைய விவசாயத்தைக் காப்பாற்றமுடியும். இப்போது விவசாயம் நஷ்டமாக ஆகி நிலங்கள் கைவிடப்படுகின்றன. வரும்காலத்தில் அவை தொழில்மயமாக ஆகும். பழைய விவசாயமுறைகள் ஒழியும்.

அது நல்லதே. உழைப்பாளிகள் நிலத்தில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். சொல்லப்போனால் பழைய சமூக அமைப்பு, சாதிமேலாண்மை ஆகியவை அழிந்து முற்போக்கான ஒரு மாற்றமே அதன் விளைவாக நிகழும்.

அந்த உழைப்பு விலக்கம் வளர்ச்சியின் ஒரு பகுதியாக நிகழவேண்டும். உழைப்பாளிகள் மேலும் பட்டினிக்குச் செல்லக்கூடாது. தொழிற்சாலை அடிமைமுறைக்கோ உதிரித்தொழிலாளி வாழ்க்கைக்கோ நகர்ப்புற லும்பன் வாழ்க்கைக்கோ அவர்கள் தள்ளப்படக்கூடாது. இன்னும் நல்ல ஊதியமளிக்கும் பணிக்குச் செல்லவேண்டும். விவசாயத்தை விட்டுச்செல்பவர்களில் சிலரே மேலும் நல்ல வாழ்க்கைக்குச் செல்கிறார்கள்.

உண்மையான வளர்ச்சி நிகழ முறையான தொழில்பாதுகாப்புமுறைகள் தேவை. அரசின் தொழிலாளர்பாதுகாப்புச் சட்டங்கள், வலுவான தொழிற்சங்க அரசியல் போன்றவை. அதுதான் இங்கே குறைவாக உள்ளது. இந்தியாவின் சிக்கலே அதுதான்.

ஜெ

முந்தைய கட்டுரைஞானக்கூத்தனுக்கு வாழ்த்து
அடுத்த கட்டுரைபகவத் கீதை தேசியப்புனித நூலா?