அன்புள்ள ஜெயமோகன் சார்,
வெண்முரசு விழாவில் , கமல் சார் சொன்னது போல நாம் எல்லோருமே கதை சொல்லி, கதை கேட்டு வளர்ந்தவர்கள். என் மகள் காயத்ரி 6 வயது முதலே கதை கேட்பதில் ரொம்ப ஆர்வம் அவளுக்கு. சாதரணமாக கதை சொன்னால் பிடிக்காது, கை, கால்,தலை, உடல் முழுவதும் ஆட்டி, நாக்கை துருத்தி, பல்லை காட்டி, விழியை உருட்டி, கிட்டத்தட்ட உடல் முழுவதிலும், அந்த கதையை சொல்ல வேண்டும்.இல்லையெனில், நீ சுத்த “போர்” ப்பா, என்று கடிந்து கொள்வாள்.
இப்போது அவளுக்கு10 வயதாகிறது, இதுவரை, எத்தனையோ கதைகளை சொல்லி இருக்கிறேன், கடந்த 1 வருடமாக, அவளுடைய ஆர்வம் இரட்டிப்பானதற்க்கு வெண்முரசு மட்டுமே காரணம் என்று சொல்ல வேண்டும். ஒவ்வொரு நாளும் அன்றன்று படித்த பகுதியை சொல்லிவிடவேண்டும், நடித்துவிட வேண்டும். சில சமயங்களில் அவளுக்கு ‘சோத்து கல்வி”யின் வேலை பளு அதிகம் என்றால், ஒரு வாரம் சேர்த்து வைத்து வார இறுதியில் 2, 3, மணி நேரம், எங்கள் கதை நேரம் தான். போன வாரம் பிரயாகை வரை கதை சொல்லி விட்டேன்
ஒருமுறை, சதசிருங்கதில் பாண்டு மாத்ரியிடம் சொன்ன, சக்ரவாக பறவையின், கதையை சொன்ன போது, அந்த 10 வயது குழந்தைக்கு, என்ன புரிந்ததோ, தெரியவில்லை, I LOVE YOU அப்பா அன்று கட்டிக்கொண்டது.
அதன் பின், பல நாட்கள் இந்த சந்தோஷ தருணத்தை நினைத்து பார்க்கும், போதெல்லாம் எனக்கு உங்கள் நினைவு மட்டுமே வருவதுன்ன்டு. என் மகள் சின்ன பெண் எளிதாக, சொல்லி விட்டாள், 38 வயதில் நான் சொல்லலாமா என்று தெரியவில்லை, ஆனாலும், அதுதான், உண்மை, I LOVE YOU சார்,
அன்புடன்,
சௌந்தர்.G
அன்புள்ள சௌந்தர்
குழந்தைக்கு என் அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவியுங்கள். மகாபாரதம் இந்தியாவின் ஒட்டுமொத்த மரபையும் சொல்லிவிடும். கூடவே அடிப்படையான மானுடச் சிக்கல்கள் அனைத்தையும். அவை இளைய மனதில் கற்பனையை நிறைத்து நிகர்வாழ்க்கையாக வளரக்கூடியவை
ஜெ
வெண்முரசு அனைத்து விவாதங்களும்