முன்விலையின் மெய்விலை

ஜெ,

சாரு நிவேதிதாவின் எக்ஸைல் நாவலை கிழக்கு பதிப்பகம் முன்விலைத் திட்டத்தில் 50 சதவீதம் விலைக்கு அளிக்கிறது. ஏற்கனவே அந்தப்பதிப்பகம் விற்காத  நூல்களை பாதிவிலைக்கு விற்றிருக்கிறது. இந்த முறையானது அனைத்து நூல்களுக்கும் இவர்கள் அதிகமாக விலை வைக்கிறார்கள் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. உண்மையான விலை ஐநூறுக்கும் கீழேதான் என்ற சித்திரம் உருவாகிறது. இணையத்தில் இதைப்பற்றி நிறையவே எழுதுகிறார்கள். இது சரியானதா? மேலும் வெண்முரசின் முன்பதிவு விற்பனையுடன் இதை ஒப்பிட்டு பேசுவதையும் காண்கிறேன்.

சிவராம்

அன்புள்ள சிவராம்

உலகில் எந்தப்பொருளுக்கும் அதன் அடக்கவிலை மூன்று அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. உற்பத்திப் பொருளின் மதிப்பு, அதிலுள்ள உழைப்பின் மதிப்பு, வினியோகத்தின் செலவு. இவை மூன்றும் சேர்ந்ததே அடக்கவிலை. அடக்கவிலையுடன் அதன் பலபடிகளிலான லாபமும், முதலீட்டுக்கான வட்டியும் சேரும்போது முகவிலை உருவாகிறது. முகவிலைக்கு மேல் அதன் மதிப்பு சந்தையில் கூடும்போது கிராக்கிவிலை ஏற்படுகிறது.

ஒருமுறை சுந்தர ராமசாமி சொன்னார். சாதாரணமாக நாம் போடும் துணிகளின் அடக்கவிலை என்பது அதன் முகவிலையின் 20 சதவீதமே என்று. அதாவது பொருள், உழைப்பு, வினியோகம் மூன்றும் இணைந்து அதன் மதிப்பே அவ்வளவுதான். எஞ்சிய 80 சதவீதமும் பலவகை லாபங்கள் வரிகள். மொத்தவிற்பனையாளர் முதல் ஐந்துகட்ட சில்லறை விற்பனையாளர் வரை ஆறு லாபங்கள் உள்ளன. மத்திய மாநில உள்ளூர் வரிகள் உள்ளன.

இங்கே குடிக்கப்படும் ஒரு குவார்ட்டர் சாராயத்தின் அடக்கவிலை 6 ரூபாய்தான். முகவிலை 88 ரூபாய். காந்தி ஜெயந்திக்கு 200 ரூபாய். சென்னையில் ஒரு ஃப்ளாட்டின் அடக்கவிலை அதன் முகவிலையின் 25 சதவீதமே.பலவகை லாபங்கள், பலவகை லஞ்சங்கள் சேர்ந்துதான் மீதி 75 சதவீதம்.

அப்படிப்பார்த்தால் இங்கு புத்தகங்களுக்கான விலை என்பது மிகப்பரிதாபகரமாகவே வைக்கப்படுகிறது. இன்று காகிதம் மாதம்தோறும் விலையேறும் ஒருபொருள். காகித உற்பத்திக்கான கச்சாப்பொருள் குறுகிவருகிறது. காகிதத்தை உருவாக்கும் ஆற்றல், நீர் , உழைப்புச் செலவு கூடிக்கொண்டே செல்கிறது. மேலும் காகிதக்கூழை தூய்மையாக்கி, அதன் கழிவை முறையாகச் சுத்தம்செய்யும் செலவும் அச்சமூட்டும் அளவு பெருகிவருகிறது.

இங்கே புத்தகங்களின் அடக்கவிலை என்பது பெரும்பாலும் 60 சதவீதமாக உள்ளது – வினியோகச்செலவைச் சேர்க்காமலேயே. இங்கு சந்தையில் விற்கப்படும் எந்தப்பொருளும் இந்த அடக்கவிலை கொண்டிருப்பதில்லை. உற்பத்திச்செலவு என்பது இங்கே காகிதம்,அச்சுக்கூலி, மை, அட்டைபோடும் உழைப்புக்கான ஊதியம் மட்டுமே. பெரும்பாலும் எழுத்தாளர்களுக்கு பதிப்புரிமை ஊதியம் கொடுக்கப்படுவதில்லை. சில நிறுவனங்களே அதைக் கொடுக்கின்றன.

எழுத்தாளர்களே தட்டச்சுப்பிரதியை அளிப்பதனால் அந்தச் செலவு இல்லை. மெய்ப்பு நோக்குவது, பிரதிமேம்படுத்துவது, அட்டைவடிவமைப்பது எதுவுமே ஊதியத்திற்குரிய உழைப்பாக கருதப்படுவதில்லை. மேலைநாடுகளில் நூலுற்பத்திச் செலவின் கணிசமான பகுதி அதுவே. இங்கு அவை பெரும்பாலும் ஆசிரியராலேயே இலவசமாக அளிக்கப்படுகின்றன. இப்படி அடக்கவிலை தீர்மானிக்கப்படுகிறது.

அதன்பின் 10 சதவீதம் வரை பதிப்பாளர் லாபம் சம்பாதிக்கலாம். அவரது முதலீடுக்கான வட்டியை கணக்கிட்டால் 3 சதவீதம் வரைத்தான் அவருக்கு உண்மையான லாபம் இருக்கும். 30 சதவீதம் வரை விற்பனைநிறுவனங்களுக்கான கழிவு. அவர்கள் அதை மூன்றுகட்டங்களாக பிரித்து எடுக்கிறார்கள். கடைசி 10 சதவீதமே பலசமயம் கடைகளில் வாசகர்களுக்கு அளிக்கப்படுகிறது

இன்றுவரை இது குடிசைத்தொழிலே. அரசும் கல்விநிறுவனங்களும் நூல் வாங்குவதை நம்பி இது செயல்படுகிறது. அரசு சென்ற திமுக ஆட்சிக்காலம் முதல் முறையாக நூலகத்துக்குப் புத்தகம் வாங்குவதற்கான நிதியை நிறுத்திவிட்டது. மத்திய அரசின் நிதியால் மட்டுமே ஓரளவு நூல்கள் வாங்கப்பட்டன.

இன்றைய அரசு ஒரு படி மேலெ சென்று தானே நிச்சயித்து அளிக்கும் விலையில் மேலும் 20 சதவீதம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு நூல்களை வாங்குகிறது- மத்திய அரசின் நிதியைக்கூட அவ்வாறு ‘செலவழிக்கிறார்கள்’.. ஆகவே ‘ராயல்டி’ இல்லாத பழைய நூல்களை பல்வேறுவகையில் கிழித்துப்போட்டு அச்சுநகல் எடுத்து பல்வேறு தலைப்புகளில் சாணித்தாளில் அச்சிட்டு அந்தச் சரக்கை ‘சப்ளை’செய்து லாபம்பெறும் நிறுவனங்கள் இத்துறையில் லாபமீட்டுகின்றன.நூலகங்கள் குப்பைகளால் நிறைகின்றன. அவை உண்மையில் கட்டு அவிழ்த்து அடுக்குவதற்குள்ளேயே மட்கி நேராகவே எடைக்குச் சென்றுவிடுகின்றன என்று ஒரு நூலகர் சொன்னார். விளைவாக உண்மையான பதிப்பகங்கள் தள்ளாடுகின்றன

இன்றும் பதிப்பகங்கள் தாக்குப்பிடிக்க முக்கியமான காரணம் புத்தகக் கண்காட்சியும் தனியார் கல்விநிறுவனங்களின் நூலகங்களும்தான்.அரசுக் கல்விநிறுவனங்களில் புத்தகம் வாங்குபவருக்கு 30 சதம் வரை கையூட்டு கொடுக்கவேண்டியிருக்கிறது. அவருக்கு அதைக்கொடுத்தபின்னரும் லாபம் வரவேண்டுமென்றால் மேலே சொன்ன குப்பை உற்பத்தி நிறுவனங்களே செய்யமுடியும். புத்தகக் கண்காட்சியில் விற்கும்பணம் பதிப்பாளர் கைக்கு நேரடியாக வருவது மிகப்பெரிய வரம்

இன்று சராசரி முகவிலை என்பது பக்கத்துக்கு ஒரு ரூபாய். அப்படியென்றால் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நூலின் அடக்கவிலை 600 ரூபாய். வினியோகச்செலவு , லாபம் , வட்டி ஆகியவை முற்றிலும் சேர்க்கப்படாமல் இருந்தால் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நூலை 600 ரூபாய்க்குக் கொடுக்கலாம். 500 ரூபாய்க்குக் கொடுக்கிறார்கள் என்றால் அதன் உற்பத்திவிலைக்கு மட்டுமே கொடுக்கிறார்கள் என்று பொருள். நிறுவனத்தின் உழைப்புச்செலவை சேர்க்கவில்லை. காகித விலை, அச்சு அட்டை ஆகியவற்றின் கூலி மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கிறது.

முன்விலைத்திட்டத்தில் முன்னரே பணம் வந்துவிடுவதனால் இதைச் செய்யமுடிகிறது. அப்போதுகூட 5 சதவீதம் வரை நிகர நஷ்டம் இருக்கலாம். இதை வெண்முரசுக்குச் செய்யமுடியாது.வெண்முரசு நூல்கள் வண்ணப்படங்கள் கொண்டவை. நூல்களில் அட்டைச்செலவுதான் அதிகம். வெண்முரசில் 90 அட்டைகள் வரை இருக்கின்றன. வண்ண அச்சும் அட்டைக்கட்டும் படங்களை இணைப்பதும் நேரடியான மானுட உழைப்பு தேவையானவை. அவற்றின் செலவை குறைக்க முடியாது. வெண்முரசு நூல்கள் ஏறத்தாழ அடக்கவிலைக்கே அளிக்கப்படுகின்றன. அவற்றில் உள்ள மெல்லிய லாபம் என்பது பணம் முன்னரே வருவதனால் சேமிக்கப்படும் முதலீட்டின் ஒருவருட வட்டி மட்டுமே.

அப்படியென்றால் ஏன் இதைச் செய்கிறார்கள்? முன்னரே வாங்குபவர்கள் வாசித்து நல்ல கருத்து சொல்லி அது பரவினால் அசல்விலையில் நூல் அதிகமாக விற்கப்படலாம், லாபம் வரலாம். அத்துடன் அதிகமானபேர் வாசிப்புப் பழக்கத்திற்குள் வர இந்த வகை மலிவுவிலைப் பிரசுரங்கள், தள்ளுபடி விற்பனைகள் உதவலாம். எந்த விற்பனையிலும் ‘சாத்தியமான வாங்குநர்’களை கண்டடைந்து உருவாக்கி எடுக்கவேண்டியிருக்கிறது. இலக்கியத்தைப் பொறுத்தவரை ஒருமுறை உள்ளே வந்தவர் எப்போதைக்குமான வாங்குநர். அவரை முதலில் வாங்கவைப்பதே சவால். ஆகவே இவை நீண்டகால அடிப்படையில் உபயோகமானவை. 

— என்று ஒரு நம்பிக்கை 0))

ஜெ

கிழக்கு எக்ஸைல் முன்விலை அறிவிப்பு

பா ராகவன் கட்டுரை

முந்தைய கட்டுரைவெண்முரசு என்னும் குழந்தைக்கதை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 48