ஆன்மீகம், போலி ஆன்மீகம் – 2

ஆன்மீகம் சார்ந்த குழப்பங்களுக்குக் காரணமாக அமையும் இன்னொரு தளம் ‘குரு’ என்ற கருத்துநிலை சார்ந்தது. சாதனா என்பது  குரு இன்றி முழுமைகொள்ள முடியாது. குரு என்பவர் நம்மை வழிகாட்டி அழைத்துச்செல்லும் ஒரு மனிதர். நம்முடைய அறியாமையை நாம் அவர்முன் வைக்கிறோம். அவரது ஞானத்தை பெறுவதற்காக நம்மை திறந்துகொள்கிறோம். இதில் ஒரு சுயசமர்ப்பணம் உள்ளது. இந்தச் சுயசமர்ப்பணத்தை பக்தியாக உருமாற்றிக்கொள்கையில் குருவாக நாம் எண்ணும் மனிதரை அதிமானுடராக ஆக்கிக்கொள்கிறோம்.

சில வருடங்களுக்கு முன்னர் நான் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் ஒரு நவீனச் சாமியாரை தன் குரு என்று சொன்னார். குரு தனக்களித்த ‘ஞான’த்தைப் பற்றிச் சொல்லிக்கொண்டே வந்தவர் தனக்கு வந்த கடுமையான வணிக நெருக்கடியை குரு தீர்த்து வைத்தார் என்றார். ‘அது குருவின் வேலையா’ என்று நான் கேட்டேன். ‘நான் எல்லாவற்றையும் குருவிடம் ஒப்படைத்துவிட்டேன். அவர் பார்த்துக்கொள்வார்’ என்றார் அவர்.

இங்கே நிகழும் பிழை என்ன? குருவையும் கடவுளையும் இவர் குழப்பிக்கொள்கிறார். கடவுளின் இடத்தில் குருவை வைக்கிறார். விளைவாக அந்த குரு மானுடக்கடவுளின் இடத்துக்குக் கொண்டுசெல்லப்படுகிறார். பல நவீன குருக்கள் தங்களை விளம்பரம் மூலம் பல்வேறு பிம்பங்கள் மூலம் அந்த இடம் நோக்கி நகர்த்திக்கொள்கிறார்கள்.

பக்திவழியையும் ஞானவழியையும் குழப்பிக்கொள்ளும் அறியாமையில் இருந்து இந்தச் சிக்கல் உருவாகிறது. பக்தி என்பது எந்த வினாவும் இல்லாமல் தன்னை முழுமையாக சமர்ப்பணம் செய்துகொள்வது. அந்த வழியில் வினாவற்ற பணிதலுக்கு முதல்மதிப்பு உள்ளது. ஆனால் அந்த சுயசமர்ப்பணம் இப்பிரபஞ்சத்தை உருவாக்கி நடத்தும் சக்தியிடம் மட்டுமே நிகழவேண்டும். அதை அறியமுடியாதென்பதனால் அதற்கு தன்னை ஒப்புக்கொடுத்தல்தான் பக்தி என்பது.

பக்தியின் தளத்திலும் குருநாதர்களுக்கு ஓர் இடமுண்டு. பக்தியை நோக்கி இட்டுச் செல்லக்கூடிய வழிகாட்டிகள் மட்டும்தான் அவர்கள். அவ்வழியில் உருவாகும் சஞ்சலங்களை அகற்றுபவர்கள், பக்தியை உணர்ச்சிகரமாக நிலைநாட்டக்கூடியவர்கள், பக்திக்கான குறியீடுகளை நிறுவக்கூடியவர்கள் அவர்கள். பக்தியில் ஆழ வேரூன்றிய மனம் படைத்த ஒருவர் சஞ்சலம் கொண்ட இன்னொருவரை தன்னுடன் அழைத்துக்கொண்டு ஆழமான பக்திக்குள் செல்ல முடியும். அத்தகைய குருநாதர்கள் பக்திவழியில் எல்லா காலகட்டத்திலும் உண்டு.

அந்தக்குருநாதர் மேல் ஒருவருக்கு இருக்கும் ஈடுபாடும் அர்ப்பணிப்பும் இயல்பானதே. அந்த அர்ப்பணிப்பு அவரை குருநாதரின் வழியை பின்பற்றிச்செல்ல உதவக்கூடியது. ஆனால் இங்கே ஒன்று கவனிக்கவேண்டும், பிரபஞ்சசக்தி ஒன்றை நோக்கி ஆற்றுப்படுத்தும் வழிகாட்டிதான் இங்கே குருநாதர். அவர் அதன் வடிவம் அல்ல, பிரதிநிதி அல்ல. அவர் வழிகாட்டுவதற்கு அப்பால் எதையுமே அளிக்க முடியாது. அவர் ஏழாம் வகுப்பு மாணவனுக்கு வகுப்பெடுக்கும் எட்டாம் வகுப்பு மாணவன் மட்டும்தான்.

ஞானவழியில் உள்ள குருநாதர்கள் நம்மை மெய்ஞானம் நோக்கி இட்டுச்செல்பவர்கள். அவர்களும் வழிகாட்டிகள் மட்டுமே. ஞானவழியில் ஒவ்வொருவரும் அவரவர் பயணத்தை தாங்களேதான் செய்தாகவேண்டும். ஆகவே முழுமையான குரு என்று ஒருவர் அந்த வழியில் இல்லை. மாபெரும் ஞானியரின் வாழ்க்கையைக் கவனித்தால் அவர்களுக்கு பல குருநாதர்கள் இருப்பதைக் காணலாம்.  அவர்கள் ஒரு குருநாதரை விட்டு எழுந்து அடுத்த குருநாதரை நோக்கிச் சென்றிருக்கிறார்கள். ஞானத்தின் பாதையில் ஒவ்வொருவரும் ஒன்றை நமக்களிக்கிறார்கள். நமது பாதையை நாமே அமைக்கிறோம். நாம் சென்றுசேரும் புள்ளியில் நாம் மட்டும் தன்னந்தனியாகவே சென்று சேர்கிறோம்.

இந்த இரு வழிகளிலும் குருவை மனிதக் கடவுளாக ஆக்கும் மனநிலைக்கு இடமே இல்லை.  உண்மையில் அது குருவை அவமதித்து நிராகரிப்பதற்குச் சமம். அவர் ஞானத்தை நமக்களிக்க தயாராக இருக்கிறார், கூடவே என் தொழிலையும் நீ கவனித்துக்கொள் என அவரிடம் நாம் சொல்கிறோம் என்றால் அதற்கு என்ன பொருள்?

குரு ஒரு வழிகாட்டி மட்டுமே. நாம் சென்று சேரும் புள்ளி அல்ல அவர். அவர் வழியாக நாம் சென்றுகொண்டிருக்கிறோம். அவரை நாம் கடந்துசெல்வதும்கூட சாத்தியமே. நாம் தேர்ந்துகொண்ட வழிக்கு ஏற்ப நம்முடைய இயல்புக்கு ஏற்ப நாம் குருநாதர்களை அடைகிறோம். முழுமையான மெய்ஞானிகூட ஒருவனுக்கு அவனது வழியைத்தான் காட்டமுடியும். அவனது ஞானமென்பது அவனே அடைவதாகவே இருக்கும். 

இந்த உண்மையான சாதகனுக்குரிய மனநிலையை நவீனக்குருமார்கள் பலர் உச்சகட்டப் பிரச்சாரம் மூலம் சிதைக்கிறார்கள். அந்தகுருவை  மானுடக்கடவுளாக நம்பும் மனநிலையை பிறரிடம் உருவாக்குகிறார்கள். அவரை ஒரு பிம்பமாக ஆக்கி அளிக்கிறார்கள். எல்லா இடங்களில் இருந்தும் நம்மை நோக்கி வந்துகொண்டே இருக்கும் அந்தப் பிம்பம் நம்மை மெல்ல மெல்ல மூளைச்சலவைக்குள்ளாக்கி விடுகிறது. எங்கோ ஒரு புள்ளியில் நம்மை ஆழ்ந்த ஏமாற்றத்துக்கும் உள்ளாக்குகிறது.

ஒரு குரு-சீட உறவு எப்படி அமையும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். குரு ஏன் தேவைப்படுகிறார்? நூறுநூறாயிரம் புத்தகங்கள் இருக்கின்றனவே, அவற்றில் இல்லாதவற்றையா ஒருவர் சொல்லிவிட முடியும்? நூல்கள் நம்மிடம் பேசக்கூடியவை. நமக்குத்தேவை நம்முடன் உரையாடும் ஒருவர். நம்மை அறிந்து நமக்கு வழிகாட்டும் ஒருவர். ஓர் ஆசிரியர் கற்பிப்பதை நூல்கள் கற்பிக்க முடியாது. இது எல்லா அறிவுத்துறைகளுக்கும் பொருந்துவதுதான். 

ஞானவழியில் ஒருவனை ஒரு குரு ஏற்றுக்கொள்வதென்பது எளிய விஷயம் அல்ல. பற்பல வருடங்கள் அவனைக் கூர்ந்து அவதானித்த பின் அவனது தேடலையும் தகுதியையும் உறுதி செய்தபின்னரே அவர் அவனை ஏற்றுக்கொள்கிறார். அதேபோல ஒருவன் ஒருவரை குருவாக ஏற்றுக்கொள்வதும் எளிய விஷயமல்ல. அவன் அவரை கூர்ந்து கவனித்துக்கொண்டே இருக்கிறான். தொடர்ச்சியாக, நெருக்கமாக. மெல்லமெல்ல அவரை அவன் அகம் குருவாக ஏற்றுக்கொள்கிறது.

பிறகு இருப்பது ‘உபநிஷத்’- உடனமர்தல் – தான். ஒரு குருவுடன் கூடவே இருப்பதுதான் உண்மையான கல்வி. அவரது சிந்தனைகளுடன் சிந்தித்து, அவரது சொற்களை தனக்குள் முளைவிடச் செய்து, அவரை முழுமையாக உள்வாங்கிக்கொள்ளுதல்.  அவருக்கு குறைகள் இருக்குமென்றால் அவற்றையும் அறிந்துகொள்ளுதல். ஏதேனும் ஒரு கட்டத்தில் அவர் போதவில்லை என்றால் மிகச் சாதாரணமாக அவரை தாண்டிச் செல்லுதல்.

குருகுல முறை பெருநிறுவனமாக ஆக்கப்படும்போது இதெல்லாம் நடக்கிறதா என்று கவனியுங்கள். பெரும்பாலும் அந்த மையகுருவை நாம் அணுகவே முடிவதில்லை. அதிகபட்சம் அவர் ஒரு பேருரை ஆற்றும்போது நாம் பெருங்கூட்டத்துடன் அமர்ந்து கேட்க முடிகிறது. அவர் பலநூறுபேருக்கு கற்பிக்கும் ஒரு வகுப்பில் அமர்ந்திருக்கமுடிகிறது. நான் சொல்வது அதுவல்ல.  உபநிடம் கூறுவதும் அதுவல்ல. அருகமர்தல் என்றால் ஒரு மனிதரை உள்ளும் புறமும் எந்த ரகசியமும் இன்றி பார்க்குமளவுக்கு அருகே செல்லுதல்தான்.

நான் பார்த்தவரை பல பிரம்மாண்டமான அமைப்புகளில் குரு சில வருடங்களில் சில அடிப்படைப் பயிற்சிகளை அளித்து ஒரு முதல்நிலைச் சீடர்வளையத்தை உருவாக்குகிறார். அவர்கள் சில வருட பயிற்சி அளித்து இரண்டாம் நிலை சீடர்களை உருவாக்குகிறார்கள். அவர்கள் மூன்றாம்நிலைச் சீடர்களை. கடைசியில் சிலவாரங்கள் சில சொற்றொடர்களையும் சில செயல்முறைகளையும் கற்றவர்கள் பொதுமக்களுக்கு கற்பிக்க வருகிறார்கள்.

பல்வேறு ஆசாபாசங்களுடன் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் வரக்கூடிய பலவகையான மக்கள் அனைவரையும் லட்சக்கணக்கில் உள்ளே கொண்டுவரவேண்டுமென்றால் வேறு வழியே இல்லை. அவர்கள் அனைவருக்கும் கற்பிக்க ஒரு பொதுப் பாடத்திட்டம் தேவைப்படுகிறது. மிக எளிமையாக யோகம் மற்றும் தியானம் சார்ந்த சில கருத்துக்களையும் சில செயல்முறைகளையும் இணைத்து அவற்றில் யோகத்தின் கலைச்சொற்களை தாராளமாக போட்டு தாளித்து ஒரு  ‘காப்ஸ்யூல்’ செய்கிறார்கள். அது சாதாரணமாக வினியோகம் செய்யப்படுகிறது.

இந்தக் காப்ஸ்யூல் யோகத்தை அறுபதுகளில் முதல்முறையாக வெற்றிகரமாகச் செய்தவர் மகரிஷி மகேஷ் யோகி. அதை மிகச்சிறந்த வணிக உத்திகள் மூலம் உலகளாவக் கொண்டு சென்று உலகின் மிகப்பிரம்மாண்டமான சமய அமைப்புகளில் ஒன்றை உருவாக்கினார். அவரது வழிமுறைகளையே இன்றுள்ள எல்லா நவீனச் சாமியார்களும் செய்து வருகிறார்கள். ஒரு மையக்குருவில் இருந்து சீடர்களின் வட்டங்கள் பெரிதாகி பெரிதாகி படிப்படியாக கீழிறங்கும் பிரமிட் அமைப்பு என்பது மகேஷ் யோகி உருவாக்கியதே.

ஏறத்தாழ இதேகாலகட்டத்தில் தான் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ‘கரிஸ்மாட்டிக் பிரீச்சர்ஸ்’ என்று சொல்லப்படும்  மதபோதகர்கள் உருவாகி பெரும் செல்வாக்கு பெற்றார்கள். ஓரல் ராபர்ட்ஸ் அவர்களில் முதல்பெரும் நட்சத்திரம். அறிவியல் கருவிகளின் துணையுடன் நிகழ்த்தப்படும் வசீகரமான நிகழ்ச்சிகள், உச்சகட்ட ஊடகப்பிரச்சாரம். ஆகிய இரு சக்திகளின் துணையுடன் இவர்கள் தங்கள் சாம்ராஜ்யங்களை அமைத்தார்கள். உருவாகிவந்த தொலைக்காட்சி என்ற ஊடகம் இவர்களுக்குக் கைகொடுத்தது.

இந்த சாம்ராஜ்யங்கள் பிரம்மாண்டமான பணபலத்துடன் அமைந்தபோது இவர்களுக்கு எல்லாத்துறைகளிலும் நிபுணர்களின் சேவைகள் கிடைத்தன. இவர்களின் பேச்சுகள் பெரியதோர் ஆய்வறிஞர்களின் குழுக்களால் உருவாக்கப்பட்டன. பெரும் கலைஞர்களால் பாடல்கள் அமைக்கப்பட்டன. இவர்களின் நிகழ்ச்சிகளுக்கு ஒளி அமைக்கவும் இவர்களின் உடைகளை வடிவமைக்கவும் உலகின் தலைசிறந்த நிபுணர்கள் கிடைத்தார்கள். ஒருகட்டத்தில் இவர்களை நம்பும் பலலட்சம் பேர் இவர்களுக்கான பிரச்சாரகர்களாக ஆகிவிடுகிறார்கள். ஒருகோடி பிரச்சாரகர்கள் உள்ள ஒரு பொருள் நம் சந்தைக்கு வந்தால் அதை எவர் தடுக்க முடியும்?

மேலும் மக்களின் மனநிலை மிக எளிமையானது. ‘ஒன்றும் இல்லாமல் இத்தனைபேர் ஏற்றுக்கொள்வார்களா?’ ‘என் பக்கத்துவீட்டுக்காரர் செல்கிறார் அதனால் நானும் செல்கிறேன்’. ‘இப்போதெல்லாம் இதுதான் எல்லாராலாலும் நம்பப்படுகிறது’ — இப்படி இந்த நம்பிக்கைகள் பெருகிப் பெருகிச் செல்கின்றன. மிக அபூர்வமாகவே சில பலூன்கள் உடைகின்றன. பெரும்பாலும் அந்த அமைப்புக்குள் உள்ள உள்சண்டைகள் காரணமாக. சாதாரணமாக இந்த அமைப்பு மிகச்சிறந்த காவல் கொண்டதாக, மேலே மேலெ சென்றபடியே இருக்கும்.

இந்தியாவில் கிறித்தவ கரிஸ்மாட்டிக் பிரீச்சர்களில் நாளொன்றுக்கு ஒருகோடி ரூபாய் வருமானம் உள்ளவர்கள் இருக்கிறார்கள். மாதம் ஒரு கோடிக்குமேல் வருமானமுள்ள ஐம்பதுபேர் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.  இஸ்லாமியக் கடவுள் மனிதர்கள் அதற்கிணையாக இருக்கிறார்கள். இவர்கள் கடவுளிடம் நேரடியாகப் பேசுகிறார்கள். மேடைகளில் கடவுளை வரவழைத்து பேசுகிறார்கள். உறுதியான மத அமைப்பு கொண்ட மதங்களிலேயே இப்படி என்றால் எந்த கட்டுப்பாடும்  இல்லாத இந்து மதத்திற்குள் கேட்கவே வேண்டாம். ஊருக்கு ஊர் குறிசொல்லும் சாமியார்கள், மனிதக்கடவுள்கள்தான்.

அமெரிக்க கரிஸ்மாட்டிக் பிரீச்சர்களின்  உத்திகளையும் பாணியையும் கையாண்டு ஊடகங்கள் வழியாக விஸ்வரூபம் கொண்ட மனிதக் கடவுள்கள்  இந்தியாவில் கடந்த முப்பதாண்டுக்காலமாகத்தான் பரலாகி வருகிறார்கள். இவர்களில் ஒரு நித்யானந்தர் உடைந்தாலும் எதிர்காலத்திலும் ஏராளமானவர்கள் வந்துகொண்டுதான் இருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

*

அப்படியானால் இந்த வகையான தியானப் பயிற்சிகளினால் எந்தப்பயனும் இல்லையா?  அப்படி அல்ல. இவை பயனுள்ளவையே. அந்தப் பயன் எல்லைக்குட்பட்டது. அது அந்த குருநாதராலோ அந்த அமைப்பாலோ உங்களுக்குக் கிடைப்பது அல்ல. இவர்கள் தியான-யோக முறையின் அடிப்படையான பாடங்களை எளிமைப்படுத்தி சொல்லித்தருகிறார்கள். பெரும்பாலும் அது பதஞ்சலி யோகத்தை அடிப்படையாகக் கொண்டது. சிலர் தாந்த்ரீகமுறைசார்ந்த தியானபாடங்களைச் கற்பிக்கிறார்கள்.

இந்த அடிப்படைப்பாடங்களை எவர் எப்படிச் செய்தாலும் அது அந்த அளவில் பயனுள்ளதே. உச்சகட்ட மன அழுத்தம் கொண்ட ஒருவர் தினம் அரைமணிநேரம் சும்மா கண்மூடி இருந்தாலே அவரது அகம் மாற ஆரம்பிக்கும். தியானத்தில் கண்மூடி அமரும் ஒருவர் தன் அகத்தை கவனிக்க ஆரம்பிக்கிறார். சும்மா கவனிப்பதே கூட அந்த அளவில் நம்மை அமைதிப்படுத்தும். நம் கொந்தளிப்புகளை அணைக்கும். நம்முடைய சிந்தனையில், மன ஓட்டத்தில் பிரமிக்கத்தக்க விளைவுகளை உருவாக்கும்.

ஆகவே இந்த மாபெரும் அமைப்புகள் பல லட்சம் மக்களுக்கு அளிக்கும் இளைப்பாறல் என்பது பெருமளவுக்கு பயனுள்ளதேயாகும். ஆனால் இதற்கு ஒரு குருவோ அமைப்போ தேவையில்லை என்பதே உண்மை. அதேசமயம் பெரும்அமைப்புகளால் மட்டுமே வெற்றிகரமாக இதைச் செய்யவும் முடிகிறது.

மூன்று காரணங்கள். ஒன்று, அவர்கள் பிரம்மாண்டமான விளம்பரங்கள்மூலம் பெருமளவில் மக்களை உள்ளே கொண்டுவருகிறார்கள். அந்த மக்களின் மனத்தில் அந்த விளம்பரங்கள் மூலம் உரைகள் மூலம் சில பிம்பங்களை நிறுவி அழுத்தமான நம்பிக்கையை உருவாக்குகிறார்கள். மூன்றாவதாக பல்லாயிரம் பேர் கூடும் கூட்டுத் தியானங்களை ஒருங்கிணைக்கிறார்கள். பொதுவாக மானுட மனங்கள் கூட்டாகச் சேரும்போது ஒட்டுமொத்தமான உத்வேகத்துடன் செயல்படுகின்றன. அப்போது அவை சாதாரணமாகச் செல்லமுடியாத இடங்களுக்குச் செல்ல முடியும்.

ஆனால் இவற்றை மிக எளிமையான உளப்பயிற்சிகள் என்ற அளவிலேயே எடுத்துக்கொள்ள வேண்டும். அன்றாட லௌகீக வாழ்க்கையில் உழலும் ஒருவருக்கு தன்னை தானே கவனிக்கவும் தன் அகம் மீது ஓரு கட்டுப்பாட்டை அளிக்கவும் இவை உதவும். பக்தியின் மூலம் தன்னை சமர்ப்பணம் செய்ய முடியாத அளவுக்கு தர்க்கஅறிவு கொண்ட ஒருவருக்கு தர்க்க பூர்வமாக இந்த பிரபஞ்சப்பேரியக்கத்தின் பிரம்மாண்டத்தை இவை காட்டும். அதில் ஒத்திசைவுடன் இணையும் சில கணங்களை அளிக்கும். அதன் மூலம் அவரில் ஒரு சமநிலை உருவாகும். அது அவரது அன்றாட லௌகிகச் செயல்பாடுகளில் நிதானமும் செறிவும் கைகூட உதவும்.

இந்தத் தியான முறைகள் நான் கவனித்தவரை பதஞ்சலி யோகமுறையின் மிக ஆரம்பப் படியிலேயே நிற்கின்றன. அதாவது சில எளிய பயிற்சிகள் மூலம் மேல்மனதை சற்றே ரத்து செய்கின்றன. ஜாக்ரத் என்ற விழிப்புநிலை சற்றே விலகி ஸ்வப்னம் என்ற ஆழ்கனவுநிலை கொஞ்சம் நீடிக்கும் ஒரு தளத்தை மட்டுமே அதிகபட்சமாக இவை அளிக்கின்றன. ஆனால் இந்த அமைப்புகள் துரியநிலை, துரியாதீத நிலை என்றெல்லாம் அதற்கு பெயரிட்டு விடுகின்றன.

பதஞ்சலி மானுட அகத்தை நான்காகப் பகுக்கிறார். ஜாக்ரத்,ஸ்வப்னம், சுஷ¤ப்தி ,துரியம். முறையே விழிப்பு, கனவு, ஆழ்நிலை, முழுநிலை. ஆனால் இதை ·ப்ராய்டின் பகுப்புடன் ஒப்பிடக்கூடாது. இப்படிச் சொல்லலாம். துளி, துமி, அலை ,கடல். கடல்தான் இருக்கிறது, மற்றவை அதன் வெவ்வேறு நிலைகள் மட்டுமே.

பதஞ்சலி யோகத்தில் துரிய நிலையே மானுட அகத்தின் பூரணநிலை. அந்நிலையில் மனிதமனம் தான் என்ற நிலையை முற்றாக இழந்து பிரபஞ்சமாகவே தன்னை ஆக்கிக்கொள்கிறது. துரியாதீதம் என்று பிரம்மத்தை அல்லது பிரபஞ்சமனத்தைத்தான் சொல்கிறார்கள்.ஆனால் நம் பயிற்சிமையங்களில் அந்த துரியாதீத நிலையை ஐயாயிரம் ரூபாய் கட்டணத்தில் ஆறுமாதப் பயிற்சியில் அளிப்பதாக சொல்கின்றனர். யோகம் வணிகமாக ஆகும்போது நிகழ்வது இது. இந்த அபத்தத்தைப் பற்றியே நாம் கவனமாக இருக்கவேண்டும்.

இன்று சர்வ சாதாரணமாக நான்குபேர் கூடினால் அதில் ஒருவர் தான் யோகம் வழியாகச் சென்ற உச்சங்களைப்பற்றி எடுத்துவிட ஆரம்பிக்கிறார். இவற்றில் பெரும்பாலானவை தன்னைப் பற்றிய மிகையான கற்பனை மூலம் உருவாகிக்கொள்பவை. கற்பனை செய்து செய்து ஒரு கட்டத்தில் அதை உண்மை என்றே நம்ப ஆரம்பித்துவிடுகிறார்கள். சிலர் உண்மையாகவே ஏமாந்தும் சொல்கிறார்கள்.

யோகத்தின் முதல்படி மிகமிகமிக எளிது. கொஞ்சநேரம் பிரக்ஞையை ஆறவைத்தல்மட்டும்தான் அது. அதற்கு அடுத்தபடிகள் மிகச்சிக்கலானவை. பிரக்ஞைக்கு அடியில் பிரக்ஞையால் கட்டுப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் கனவுமனம் வெளிப்படும் நிலை அது. அது முழுக்கமுழுக்க கட்டற்றது. ஒருவகையான உன்மத்த நிலை, பைத்திய நிலை. நம் அகத்தின் அத்தனை அத்தனை அழுக்கும் கொடூரமும் வெளிவரும் நிலை.

அதைத்தாண்டுவதும் சுஷ¤ப்தி நிலைகள் வழியாக துரியநிலையில் லயிப்பதுமெல்லாம் பற்பல ஆண்டுகள் முறையான விடப்பிடியான பயிற்சி மூலம் மட்டுமே நிகழ்பவை. அவை சாதாரண லௌகீகர்கள் அன்றாடவாழ்க்கையில் இருந்துகொண்டு செய்யத்தக்கவை அல்ல. எல்லாராலும் அடையக்கூடியவையும் அல்ல. இந்தச் சொற்களை நான் எங்கும் வாசித்துவிட்டுச் சொல்லவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இந்தப் பயணத்தில் உண்மையான வழிகாட்டல் அளிக்கும் குரு தேவைப்படுகிறார்.  அவர் வெறும் பிம்பமாக இருக்க முடியாது. அவர் நம்மிடம் உரையாட வேண்டும். நம்மை ஆழ்ந்து அடுத்து அறிந்திருக்கவேண்டும். நம்முடன் அவரும் வரவேண்டும். அந்தரங்கமான உறவு வழியாக மட்டுமே சாத்தியமாகக் கூடியது அது. அந்நிலை இந்த பேரமைப்புகளில் சாத்தியமல்ல.

அதே அமைப்பைச் சேர்ந்த இன்னொரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் சொன்னார் ‘என் குரு என்னிடம் எதையும் உரையாடுவதில்லைதான். ஆனால் அவர் என்னுடனே சூட்சும வடிவில் இருக்கிறார். அவரது சக்தியை இந்த படிகமணிமாலையில் ஏற்றி என்னிடம் கொடுத்திருக்கிறார்’ . நான் கேட்டேன் ‘என்னுடைய இலக்கியத்திறனை ஒரு பாசிமணியில் ஏற்றி நான் உங்களுக்கு தந்துவிட முடியுமா என்ன?’ என்று.

இங்கே இவரிடம் உள்ள சிக்கலே பக்திவழியில் இருந்து அந்த நம்பிக்கைமுறைகளை ஞானவழிக்கு கொண்டுவருவதுதான்.  ஒரு குரு அடைந்துள்ள ஆற்றல் என்பது அவரது ஞானமாகவே இருக்கமுடியும். அந்த ஞானம் அவரது அகத்தில் ஒரு நுண்ணுணர்வாக இருக்கும். அவர் சென்ற ஒரு மன ஆழம் அது. அவர் அடைந்த ஒரு பார்வை அது. அதை எப்படி பாசிமணிகளில் ஏற்றி அவர் வினியோகம் செய்ய முடியும்?

சில அபூர்வதருணங்களில் சிலவகையான குறியீடுகள் தேவையாக ஆகலாம். அதை குருநாதர்கள் பயன்படுத்தலாம். ஆனால் அதை மூடநம்பிக்கையாக ஆக்கிக் கொள்கிறார்கள் இங்கே. புதுவகையான விக்கிரகங்களை தாயத்துகளை கண்டுபிடிக்கிறார்கள்.

என்ன காரணம் என்றால் பெரும் அமைப்புகள் மூலம் லட்சக்கணக்கானவர்கள் இத்தகைய  ஆரம்பநிலை யோகமுறைகளுக்குள்  திரட்டப்படுவதுதான். அவர்களில் தொண்ணூறு சதவீதம் பேரும் பக்திவழியில் செல்லும் மன அமைப்பு கொண்டவர்கள். அதற்கான மனப்பயிற்சியை இளமையிலேயே அடைந்தவர்கள். அவர்கள் தேடுவது சரணாகதிக்கான ஒரு சன்னிதி மட்டுமே. ஞானவழியை தேர்வு செய்வதற்கான சமரசமில்லாத தேடலோ கவனமோ அவர்களிடம் இல்லை.

இந்த தேடலையும் கவனத்தையும் ஒரே சொல்லாக ‘சிரத்தா’ என்று சொல்வார்கள். சுவாமி விவேகானந்தர் சிரத்தா என்ற கருத்தாக்கத்தைப் பற்றி விரிவாக ஒரு பேருரை ஆற்றியிருக்கிறார். நசிகேதன் யமனைப் பார்க்கச்செல்லும் இடம் அதற்கான சிறந்த உதாரணம். மெய்ஞானத்துக்கு பதிலாக வேறு எதை வேண்டுமானாலும் அளிக்கிறேன் என்கிறான் எமன். அதைத்தவிர எதுவுமே தேவையில்லை என்கிறான் நசிகேதன். இதற்கிணையாக ஏசுவிடம் லூசி·பர் பேசுவது பைபிளில் வரும். இதுவே சிரத்தை. இந்த சிரத்தை இல்லாதவர்களுக்கு ஞானமார்க்கம், யோகம் உரியதல்ல.

சிரத்தை இல்லாதவர்கள் யோக வழிக்கு எளிமையான பிரச்சார உத்திகள் மூலம் திரட்டப்படும்போது அவர்கள் அதை தங்களுக்கு ஏற்ப பக்தியாக மாற்றிக்கொள்கிறார்கள். குருநாதரை கடவுளாக்குகிறார்கள். ஞானத்தை மாயமந்திர ஆற்றலாக எண்ணிக்கொள்கிறார்கள். இத்தகைய மூடநம்பிக்கைகளில் இருந்துதான் போலி ஆன்மீகம்  ஒரு பெருந்தொழிலாக வேர்விட்டு கிளைபரப்புகிறது. 

எனக்கு வந்த கடிதங்களில் இந்த சாமியார்களின் சிறந்த உரைகளைப் பற்றிச் சொல்லி அப்படியெல்லாம் சொன்னாரே என்ற துயரத்துடன் எழுதப்பட்டிருக்கிறது. நான் இந்தச் சாமியார்களின் ஆகச்சிறந்த நூல்கள் என்று சொல்லப்படுவனவற்றை வாசித்திருக்கிறேன். உரைகளையும் கேட்டிருக்கிறேன். இந்து ஞான மரபுகளில் அறிமுகம் உடைய ஒருவரைக் கவரும் அளவுக்கு அபூர்வமான, ஆழமான எதுவுமே இவர்களால் சொல்லப்படவில்லை. அறிவுத்தள அறிமுகம் பெரிதாக இல்லாத எளிய பொதுமக்களைக் கவரும்படியாகச் சொல்லப்படும் எளிமையான கருத்துக்கள் மட்டுமே அவை.

மேலும் இவையனைத்தும் ஏற்கனவே சொல்லப்பட்டு நூல்களில் உள்ள கருத்துக்கள். இவர்களின் தனிப்பங்களிப்பு, இவர்களின் ஆளுமையின் அம்சம் என ஏதும் இவற்றில் இல்லை.சில நல்ல உரைகளை உருவாக்கிக்கொள்வதென்பது மிகமிக எளிமையான ஒரு செயல். அதிலும்  ஆய்வாளர்களும் அறிஞர்களும் உதவினார்கள் என்றால் அது எளியதோர் தொழில்நுட்பமாக ஆகிவிடுகிறது.

வித்தாரமாக, மனம் கவரும்படியாக, உணர்ச்சிகரமாக பேசுவதென்பது  பயிற்சியினால் விளையும் திறமை மட்டுமே. இந்த சாமியார்களைவிட திறமையாகப் பேசுபவர்கள் பல ஆயிரம்பேர் உள்ளனர். எல்லாக்காலத்திலும் அவர்கள் இருப்பார்கள். அந்த திறன் ஒருவர் யோகி என்பதற்கோ ஞானி என்பதற்கோ சான்றாக ஆவதில்லை.

மேலும் கருத்துக்களைச் சொல்பவர்களை நம் மரபில் பௌராணிகர்கள் உபன்னியாசகர்கள் என்று சொல்வார்களே ஒழிய ஞானிகள் என்றல்ல. கருத்துக்கள் முக்கியமென்றால் அக்கருத்துக்களைச் சொன்னவர்களை வழிபடவேண்டிய, முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. 

நித்யானந்தரை மிகச்சிறந்த யோகி என்று வேதமனமும் யோக உடலும் கொண்டவர் என்று நண்பர் சொல்லியிருப்பதைக் கண்டு வேதனைதான் ஏற்பட்டது. எந்த அளவுகோலைக் கொண்டு இவ்வெண்ணத்தை அடைந்தார்? யோகியை இதற்கு முன் அவர் அறிந்திருக்கிறாரா? இவரை யோகி என முடிவுகட்டுமளவுக்கு இவரை அவர் எப்படி அறிவார்?  சில படங்கள், சில உரைகள், சில நூல்கள் — அவ்வளவு போதுமா?

எளிய விடைதான். இவரது மனதில் சில பிம்பங்கள்தான் இருக்கின்றன. அந்த பிம்பங்களை நிரப்பும் ஒரு மனிதர் வந்ததும் மனம் தாவி அதை ஏற்றுக்கொள்கிறது. அந்த நம்பிக்கையை ஊடகங்கள் வளர்க்கின்றன. அவர் கண்ட அதே படங்களை உரைகளை நூல்களைக் கொண்டு வேடதாரி என்று நான் அவரை மதிப்பிட்டேன். அதை நண்பர்களிடம் சொல்லியும் இருக்கிறேன். ஏனென்றால் யோகத்தை உண்மையில் அறிந்தவன் யோகியை அடையாளம் காண்பது மிக எளிது. ஓடும் பேருந்தில் இருப்பவரை சாலையோரம் நின்றே கண்டுகொள்ள முடியும்.

சில கடிதங்களில் ‘தனிநபரை ஏன் பார்க்க வேண்டும், அவர் சொல்வதை அறிந்தால் போதாதா?’ என்ற சமாதானம் இருக்கிறது. நான் ஒரு சந்தர்ப்பத்திலும் அத்தகைய ஒரு பிரிவினையை ஏற்றுக்கொள்பவனல்ல.  என் சொற்கள்தான் நான். நான் நம்பும் ஒன்றை, நான் வாழும் ஒன்றை, நான் எதுவோ அதை மட்டுமே நான் சொல்ல வேண்டும். அப்போதுதான் அந்தச் சொற்களுக்கு பொருள்.

வெறும் கருத்துக்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பதை உணருங்கள்.  அந்தக்கருத்துக்களுக்குப் பின்னால் இருக்கும் மனிதர், அவரது வாழ்க்கை மட்டுமே முக்கியம். கருத்துக்கள் நம்மை அவரிடம் கொண்டு சென்று சேர்க்கும் பாதை மட்டுமே. சிந்திப்பவர்களுக்கு ஒரு கட்டத்தில் தெரியும் விஷயம் ஒன்றுண்டு, நூல்களில் இருந்து கருத்துக்களைத் திரட்டிக்கொண்டு எவரும் எதையும் பேசலாம்.

அத்துடன் கருத்துக்களை உருவாக்குவதற்கான ஒரு சட்டகத்தை கண்டுபிடித்துக்கொண்டோமென்றால் அதற்குள் உலகிலுள்ள அனைத்தையும் கொண்டு வந்து போட்டு புதிய கருத்துக்களாகக் கொட்டிக்கொண்டிருக்கலாம். கருத்துக்களுக்கு தன்னளவில் எந்த மதிப்பும் இல்லை.

உண்மையான சாதகர் அல்லது ஞானியை நீங்கள் பார்க்கச் சென்றால் ஒருபோது கருத்துக்களைப்பற்றிப் பேசாதீர்கள். நூல்களைப் பற்றிச் சொல்லாதீர்கள்.கருத்துக்களைக் கேட்டு ரமணரே எரிச்சலடைந்திருப்பதை நாம் வாசிக்கலாம்.  வாழ்க்கையாக ஆகாத கருத்து என்பது வெறும் சருகுக் குப்பை மட்டுமே. உங்களுக்குத் தேவை குரு என்றால் அது ஒரு கருத்துநிலை அல்ல, ஒரு பொதுப்பிம்பம் அல்ல, ஒரு மனிதர், ஒரு வாழ்க்கை என்பதை உணருங்கள்.

ஒரு குரு, அவர் உண்மையான குரு என்றால் சீடன் முன் அம்மணமாக நிற்பார் என்று உணருங்கள். அவரில் உங்களுக்குத் தெரியாத எதுவுமே இருக்காது. நான் முதன்முதலில் நித்ய சைதன்ய யதியைச் சந்தித்தபோது கேட்டேன் ”நீங்கள் உங்கள் மாணவர்களுக்கு என்ன சொல்லிக் கொடுக்கிறீர்கள்?” ”எதுவும் இல்லை. நான் அவர்களை என்னுடன் இருக்க அனுமதிக்கிறேன். எல்லா நேரத்திலும். அவர்கள் எதைக் கற்கிறார்களோ அதுவே அவர்களுக்கு” என்றார். அதுவே குருவின் பாதை.

இங்கே எழும் உண்மையான சிக்கல் ஒன்றை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. பக்தி,விசுவாசம், வழிபாடு ஆகியவற்றை மட்டுமே முன்வைக்கும் மதங்களில் குரு என்ற ஆளுமைக்கான தேவை இல்லை. அந்த விசுவாசத்தை அமைப்பாக திரட்டிக் கட்டிக்காக்கும் மதகுருக்கள் மட்டுமே போதுமானவர்கள். ஏனென்றால் அங்கே தனித்தனியான ஞானத்தேடல், முழுமை நோக்கிய பயணம் என்பது இல்லை. கூட்டான நம்பிக்கை, கூட்டான வழிபாடு மட்டுமே உள்ளது.

ஆனால் ஞானத்தேடல் கொண்ட ஒவ்வொரு மனிதருக்கும் அவருக்குரிய ஆன்மீக பயணத்தையும் முழுமையையும்  அளிக்க முயலும் பௌத்தம்,சமணம், இந்து மதங்களில் தனிப்பட்ட குரு என்னும் ஆளுமை தவிர்க்க முடியாத ஒன்று. அந்த குரு ஒரு நிறுவனமாக இருக்க முடியாது. அது அந்தரங்கமான தனிமனித உறவாகவே இருக்க முடியும். குரு சீட உறவென்பது கணவன் மனைவி உறவை விட அந்தரங்கமானது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அப்படியானால் அத்தனைபேரும் குருவுக்கு எங்கே செல்வது? மிகச்சிக்கலான வினாதான் இது. அதற்கான விடைகள் பல முன்னரே சொல்லப்பட்டிருக்கின்றன. உண்மையான ஞானத்தேடல் கொண்டவர்கள் மிகமிகச் சிலரே. பெரும்பாலானவர்களுக்கு எளிய விடைகளே போதுமானவை. அந்த விடைகளை எங்கோ எவரோ அளித்துவிட முடியும். ஒரு புராணிகர், ஒரு சொற்பொழிவாளர் , ஒரு பூசகர் கூட அவருக்கு குருவாக அமைந்துவிட முடியும்.

‘சிரத்தை’ கொண்ட ஒருவருக்கு அவருக்கான குரு வந்தே தீர்வார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.  அவ்வாறு வரவில்லை என்றால் அவருக்கு அது விதிக்கப்படவில்லை என்றே பொருள் என்பார்கள். ‘தேடுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கிடைக்கும்’ என்று மெய்ஞானி அதைத்தான் சொன்னார் என்று நினைக்கிறேன். ‘இலக்கை எட்டும் வரை செல்லுங்கள்’ என்றும் அதுதான் சொல்லப்படுகிறது.

ஒரு பயணம் செல்லும்போது நாம் பலரிடம் வழி விசாரித்துச் செல்வதைப் போன்றதே இதுவும். 1982 ல்  வீட்டைவிட்டு கிளம்பி ‘அறிதலன்றி எதிலுமே ஆறுவதில்லை’ என்று தேடிச்சென்ற காலங்களில் நான் எத்தனை நித்யானந்தர்களைச் சந்தித்திருப்பேன். இன்று எண்ணும்போது ஆச்சரியமாகவே இருக்கிறது. நான் சந்தித்த துறவிகள், சாதகர்களில் போலிகளே மிகப்பெரும்பாலானவர்கள்

போலிகள் இருவகை. ஒருசாரார், ஒரு ஏமாற்றுத்தொழில்நுட்பமாகவே  இதைச் செய்பவர்கள். வேடதாரிகள். இன்னொருசாரார் உண்மையான ஊக்கத்துடன் ஆரம்பித்து எங்கோ ஓரிடத்தில் நின்றுவிட்டபின் தங்களை அதற்கும் மேலாக பாவனைசெய்து முன்வைப்பவர்கள். அதற்காக வேடமிடுபவர்கள்.

எது நுண்மையான விஷயமோ அதில்தான் போலிகள் அதிகம் இருக்கும். ஆன்மீகம், கவிதை, கலைகள்… ஏனென்றால் அங்கே ஊன்மையையும் போலியையும் பத்துபேர் பிரித்தறிவார்கள் என்றால் பத்தாயிரம்பேரால் அந்த நுட்பமான பாகுபாட்டை நிகழ்த்த முடியாது. ஆனால் உண்மையான தேடல் கொண்டவனுக்கு முன் வேடங்கள் எளிதிலேயே அம்பலமாகிவிடும் என்றே நினைக்கிறேன்.

அப்படி இருந்தும் பல சமயம் நாம் ஏன் தொடர்ச்சியாக ஏமாறுகிறோம் என்றால் நம்முடைய சொந்த அகங்காரத்தால் அல்லது போலித்தனத்தால்தான். நித்யானந்தரின் பல மாணவர்கள் தாங்கள் யோகத்தில் இன்னின்ன நிலைவரை சென்றோம் என்றெல்லாம் சொல்வதைக் கவனிக்கிறேன். இங்கே ‘நான் மிக எளிதாக யோகத்தின் படிகளில் ஏறக்கூடியவன்’ என்ற நம் ஆணவம் நம்மை முட்டாளாக்கியிருக்கிறது.

அந்த அகங்காரம் இல்லை என்றால் ஒரு ஞானியை அல்லது யோகியை அடையாளம் காண்பது மிக எளிது.அவர்கள் ஒருபோதும் அமைப்புகளை உருவாக்கிக்கொள்வதில்லை. சில வரலாற்றுக் காலகட்டத்தில் அவர்கள் அமைப்புகளை உருவாக்கினாலும் அவற்றிலிருந்து வெளியேறியும் இருப்பார்கள். அவர்கள் சுயப்பிரச்சாரம் செய்வதில்லை. அவர்கள் அணிதிரட்டுவதில்லை. முக்கியமாக அவர்களைச் சுற்றி ஒருபோதும் செல்வமும் அதிகாரமும் திரள்வதே இல்லை. அவர்கள் அத்தனை எளிதாக கண்ணுக்குச் சிக்குபவர்களும் அல்ல.

அதேபோல யோக சாதனை என்பதும் எளிதான விஷயம் அல்ல. ஒரு லௌகீக வாழ்க்கையில் அதன் சமநிலைக்காக நாம் மேற்கொள்ளும் தியானம் என்பது யோகம் அல்ல. யோகம் முழுமையான அர்ப்பணிப்பைக் கோருவது. பிற அனைத்தையும் இழந்து அடையப்படுவது. மிகமிக அபாயமரமான பாதைகள் வழியாக நெடுந்தூரம் பயணம்செய்து அடையப்பெறுவது. அடைந்தவரால் விளக்கப்படாதது. அவர் சென்றபாதையில் பிறர் செல்ல ஒண்ணாதது.

அன்றாட வாழ்வுக்கான தியானப்பயிற்சிகளை அளிக்கும் அமைப்புகளை ஒருவகை பள்ளிகள் என்று வேண்டுமானால் கொள்ளுங்கள். அதை அளிப்பவர்களை யோகி என்றோ ஞானி என்றோ சொல்லாதிருங்கள். அதை யோகம் என்று எண்ணிக்கொள்ளாதிருங்கள். அதுவே பாதி சிக்கல்களை இல்லாமலாக்கிவிடும்.

நித்யானந்தரை நம்பி ஏமாந்தவர்கள் அடையும் பதற்றம் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றே.  அப்படி நம்பியது அசட்டுத்தனம் என்றாலும் ஆன்மீகத்தின் பாதையில் அத்தகைய அனுபவங்களை எவராலும் தவிர்க்க முடியாது. அது நம்முடைய எல்லைகளை நமக்குக் காட்டுகிறதென்றே எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொன்றும் பாடங்கள் என்றே பொருள்படும். எனக்கு அத்தகைய பல கசப்பான அனுபவங்கள் உண்டு. என்னுடைய பல கதைகளில் இந்த ஏமாற்றம் பல கோணங்களில் பதிவாகியிருப்பதை வாசகர்கள் கவனிக்கலாம்.

அவற்றின் உச்சம், 1984 ல் நான் காஞ்ஞாங்காடு என்ற ஊரில் ஒரு குருவுடன் தங்கியிருந்த போது. மிகத்தீவிரமான சில யோகப்பயிற்சிகளுக்குப் பின் நோயுற்றேன். மனம்பேதலிக்கும் நிலை. அப்போதுதான் ஒன்று தெரிந்தது, அந்தகுருவுக்கு அதைப்பற்றி எதுவுமே தெரியாது. என் மூலமாக அவர் சோதனை செய்துகொண்டிருந்தார். அங்கிருந்து நான் இரவில் தப்பி ஓடினேன். அதன்பின் பல வருடங்கள் இந்த ஒட்டுமொத்த பயணத்தையே நிராகரிக்கும் அளவுக்கு கசப்பு கொண்டிருந்தேன்.

இந்த ஏமாற்றங்கள் நம் கையில் இல்லை. ஏனென்றால் இந்த பயணம் முன் தீர்மானிக்கப்பட்ட வழிகள் இல்லாதது. நாம் தேடும் விஷயம் நாம் எவ்வகையிலும் நிர்ணயிக்க முடியாத அளவுக்கு நுண்மையானது. ஆனால் ‘சிரத்தை’யுடன் இருப்பது நம் கையில்தான் உள்ளது. எது நம் ஆழம் அறிந்த உண்மையோ அதில் சமரசமே இல்லாமலிருப்பது. அதைத்தவிர வேறெதையுமே ஏற்காமலிருப்பது. நம்முடைய சொந்த அகங்காரம் அல்லது போலிப்பாவனைகள் நமக்கு தடையாக ஆகாமல் பார்த்துக்கொள்வது. அதைத்தான் இந்த தருணத்தில் அத்தனை நண்பர்களுக்கும் சொல்ல விழைகிறேன். நலம் நிகழ்க.

ஜெ

முந்தைய கட்டுரைஆன்மீகம்,போலி ஆன்மீகம் – 1
அடுத்த கட்டுரைஆன்மீகம் போலி ஆன்மீகம் 3