பேய்கள்

ஒருமுறை திருவனந்தபுரத்தில் ஒரு விழாவுக்குக் கூப்பிட்டிருந்தார்கள். போயிருக்கவே கூடாது. ஆனால் அடிக்கடி அதுபோல நிகழ்ந்துவிடும். தூரத்துச் சொந்த அண்ணனும் கேரளக் காவல்துறையின் ஓய்வுபெற்ற தலைமைக்காவலருமான பப்பண்ணண் என்னும் மடுவில் பத்மநாபன் பிள்ளை மிகுந்த பெருமிதத்துடன் ‘என் தம்பி ரைட்டர்! பெரீய ரைட்டர்! அவனை ஜனாதிபதியே ரைட்டர்னு சொல்லிட்டார்’ என்று திருவிழாக்கமிட்டிக் கூட்டத்தில் சொல்லப்போக மதமாநாட்டை ஒட்டிய இலக்கிய அரங்கில் நான் பேசலாமே என்று கமிட்டித்தலைவர் சொல்லிவிட்டார். ‘நாம ஒரு சான்ஸ் குடுப்பமே… நல்ல பையன்னு சொல்லிறீய’

‘வருவாரா?’ என்று இன்னொருவர் ஐயப்பட ‘வராம பின்ன? என் முன்னால அவன் உக்கார மாட்டான். நான் அவனை அந்தக்காலத்திலே எங்க பாத்தாலும் அடிப்பேன்ல?’ என்றார் அண்ணா.இரண்டுமே உண்மைதான். அடிப்பதன் வழியாக ஒருவன் நினைவில் இளமைக்கால இனிய நினைவாக எஞ்ச முடியும் என அண்ணா நம்புவது விசித்திரமானதுதான். என்னை அடிப்பது வழியாகவே அவர் காவலராக பரிணாமம் அடைந்தார். ‘இடியன்’ பப்பன் நாயர் அக்காலகட்டத்தில் நெடுமங்காடு பிராந்தியங்களில் பிரபலம். ஓட்டல்காரர்கள் நடுங்குவார்கள், பில் கொடுக்காமல் நிறைவாகச் சாப்பிடுவார்.

ஆகவே நான் ஸ்ரீ ஆலும்மூடு நாகபத்ரகாளி கோயில் எட்டாம் திருவிழாவின் அகிலகேரள இலக்கிய மாநாட்டில் பங்கேற்க நேரிட்டது. உள்ளூர் மலையாள ஆசிரியரும் சோதிடருமான சந்தனப்பொட்டுக்காரர் தலைமை. இன்னொரு குங்குமப்பொட்டுக்காரர் பேருரை அவரைப்பார்த்ததுமே ஆறுதலடைந்தேன். அவர் பேசிமுடிந்தபின்னர் நான் அதிகம் பேசவேண்டியிருக்காது. கதகளிக்காரர்கள் செண்டையுடன் வந்து அருகே நிற்பதுவரை அவர் பேசினார். நான் பேச எழுந்தபோதே செண்டைக்காரர் இருமுறை கொட்டி அவர்களின் ஆட்டம் தொடங்கவிருப்பதை அறிவித்தார். நான் ரத்தினச்சுருக்கமாகப் பேசினேன்.

குங்குமப்பொட்டுக்காரர் பேசியபின் சரஸ்வதியிடமே சொற்கள் எஞ்சாது என்றேன். நான்பேசி முடித்ததுமே அவர் என்னை ஆரத்தழுவி பாராட்டினார். அமர்ந்ததுமே செண்டைக்காரர் மேடை ஏறிவிட்டார். அவரை அமர்த்திவிட்டு மேடைக்கு வந்த உள்ளூர் வட்டித்தொழில் பிரமுகரும் தர்மகர்த்தாவுமான சங்கரநாராயண பிள்ளை எங்களை வெற்றிலைத் தெறிப்புடன் பாராட்டி ஆளுக்கொரு நினைவுப்பொருள் அளித்தார். விபரீதமான ஒரு வெண்கலச்சிற்பம். ஒரு மரப்பீடத்தின் மீது பத்தி விரித்த ஏழுதலை நாகம். அதன் கண்களில் சிவப்புக் கற்கள். வாயில் செந்நிறம். அதன் பத்தியில் ஏதோ எழுதியிருந்தது. மந்திரித்திருப்பார்களோ என்று கேட்டேன். ‘இல்லை, அது இங்கே கபடிப்போட்டிக்குக் கொடுத்த மெமெண்டோ. நாகதேவியின் பத்தியில் எழுதியிருந்த அந்த எழுத்துக்களை சுரண்டி அழித்தோம்’ என்றார்கள். இருந்திருக்கலாம், நான் கபடி ஆடுவதுண்டு என்பதற்கான சான்றாக இருந்திருக்கும்

அன்றிரவு அண்ணா வீட்டில் தங்கி இரவு நெடுநேரம் அவரது போலீஸ் வாழ்க்கையின் மெய்சிலிர்க்க வைக்கும் சாகசங்களைக் கேட்டேன். பெரும்பாலான பெண்கள் பணம் வாங்கிக்கொண்டு சமரசத்துக்கு வந்திருந்தார்கள். மயக்கின மரவள்ளிக்கிழங்கும் மீன்கறியும் சாப்பிட்டேன்.

திரும்பியது நாகர்கோயில் வரும் குளிர்சாதன ரயிலின் கூபேயில். திருவனந்தபுரம் தாண்டியபின் அந்தப்பெட்டியிலேயே மானுட சலனம் இருப்பதில்லை. திருவனந்தபுரம் ரயில்நிலையத்தில் வந்து என்னை ஏற்றிவிட்டார் அண்ணா. அந்த நினைவுப்பரிசையும் ரத்தச்சிவப்பு நிறத்தில் மின்னிய பொன்னாடையையும் ஏழுதலை நாகப்பாம்பு பொறிக்கப்பட்டிருந்த மஞ்சள்பையில் போட்டு என்னிடம் கொடுத்திருந்தார்கள். அண்ணா அவரது அன்பளிப்பாக கோயில்பிரசாதத்தை இலையில் பொதிந்து ஒரு பையில் போட்டு கொடுத்தார். கூடவே பெரிய மலர்மாலைகள் இரண்டு. ‘தேவிக்குச் சாத்தினதாக்கும். வீட்டிலே ஒரு அஞ்சுநாள் இருக்கட்டும். பேய் கீய் இருந்தா ஓடிரும்’

பைகளுடன் பிளாட்பாரத்தில் வரும்போது கனத்த பெட்டிகளுடன் சென்ற ஒரு தள்ளுவண்டியில் சிக்கி நினைவுச்சின்னப்பை கூடவே சென்று கீழே விழுந்து சக்கரத்தில் மாட்டி விட்டது. அண்ணா பழைய போலீஸ் மலையாளத்தில் பேசி அதை மீட்டு என்னிடம் அளித்தார். அந்த தனிமொழியைக் கேட்டதுமே அவரை தலைமைக்காவலர் என்று அறிந்துகொண்ட போர்ட்டர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார், கேரள போர்ட்டர்கள் போலீஸ்மலையாளம் கம்யூனிஸ்டுமலையாளம் இரண்டையும் மதிப்பவர்கள். ஏறி அமர்ந்து ரயில் அசைந்ததும்தான் சற்று ஆறுதல் ஏற்பட்டது. கெட்ட கனவு ஒன்றில் இருந்து விடுபட்டதுபோல.

கதவு திறந்து கரிய குள்ளமான மனிதர் உள்ளே வந்து நல்ல ஆங்கில உச்சரிப்பில் ‘குட்மாணிங்’ என்றார். நான் புன்னகையுடன் ‘வணக்கம்’ என்றேன். அவர் நீலநிற கோட் சூட் அணிந்திருந்தார். ராடோ வாட்ச். ரேபான் கண்ணாடி. மற்றவையும் உயர்தர பிராண்டுகளாகவே இருக்கவேண்டும். என் முன் அமர்ந்துகொண்டு பெட்டியை கீழே வைத்தார். புட்டியைத் திறந்து நீர் அருந்தினார். நான் என் உடை பற்றிய உணர்வை அடைந்தேன். மதமாநாடு ஆனதனால் வெள்ளை வேட்டியும் சட்டையும் அணிந்து வரும்படி அண்ணா சொல்லியிருந்தார். அதில் அம்மன் கோயிலின் மஞ்சள்விழுந்து பிரசாதம் சகட்டுமேனிக்குப் பூசியிருந்தது.

அவர் என்னை கூர்ந்து நோக்கி புன்னகை செய்தார். ‘ஐ யம் டாக்டர் சிவசங்கரன். ஆக்சுவலி ஐயம் எ டாக்டர்’ என்று ஒரு விசிட்டிங் கார்டை நீட்டினார். நான் வாங்கிவிட்டு மங்கலான புன்னகையை அளித்தேன். நான் டாக்டர்களைப்பற்றி கடுப்பில் இருந்த நேரம். காரணம் டிவியில் பார்க்கநேர்ந்த சில மருத்துவ நிகழ்ச்சிகள். ‘கான்ஸர்னு சொன்னா ஆக்சுவலி இட் இஸ் எ கைண்ட் ஆஃப்… யூ நோ… அதனால ரொம்ப பெய்ன்…அட் தி எண்ட் ஆஃப் த டே…பட் வி கேன் ஸே…எதுக்குன்னா’ என்று பேசிச்செல்லும் கோட்டுசூட்டர்களை என்னசெய்யலாம் என்று சிந்திப்பதற்காகவே பத்மநாபபுரம் அரண்மனைக்குச் சென்று பழங்காலச் சித்திரவதைக்கருவிகளைப் பார்த்துவந்தேன். தேங்காய்த்துருவி போன்ற ஒன்று நன்றாக இருந்தது. அது என்ன செய்யும் என்று கேட்டேன். என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்றார்கள். அண்ணாக்கை தேங்காய் மாதிரி துருவலாமா என்று கேட்டேன். பதில் சொன்ன வழிகாட்டி பீதியுடன் விலகிச்சென்றார்

திருவனந்தபுரம் ரயில் நிறையவே வளையும். என் பை சரிந்தது. நான் குனிந்து என் பையின் பொருட்களை எடுத்து திருப்பி அடுக்கினேன். ரத்தச்சிவப்பான பட்டு. அம்மனுக்குச் சார்த்துவதையே பொன்னாடையாக மறுசுழற்சி செய்திருந்தார்கள். நினைவுச்சின்னத்தின் அந்த பீடம் தனியாகக் கழன்று உள்ளே கிடந்தது. நான் வெண்கலப்பாம்பை எடுத்து இருக்கையில் வைத்து பொன்னாடையை மடித்துவைத்தேன். இன்னொரு பையிலிருந்த மலர்மாலைகளைச் சுருட்டி வைத்து பாம்பை அதனுள் செருகிவிட்டு நிமிர்ந்தேன். டாக்டர் சிவசங்கரன் எம்.பி.பி.எஸ், எம்.டி என்னை ஏறிட்டு பார்த்து ‘ஆண்ட் யூ ஆர்?’ என்றார்

நான் நிதானமாக ‘என் பேரு ஜெயமோகனன் நாயர்’ என்றேன். ‘ஓ’ என்றார். ‘எங்கள் குலதெய்வம் ஜெயமோகினி தேவி. அதான் அந்தப்பேரு. கேட்டிருப்பீங்க, எங்க குடும்பம். மாஞ்சாறைக்கல் வீடு’ அவர் இல்லை என தலையசைத்தார். ‘நாங்க தான் தெக்குதிருவிதாங்கூரிலேயே பெரிய மாந்த்ரீகர்கள். எங்க மாமாதான் கணியாம்பாறை யக்ஷியை கொண்டுவந்து அந்த சூலாயுதத்திலே தளைத்தது. கணியாம்பாறை யக்‌ஷியைப் பாத்திருப்பீக’

அவர் இல்லை என்று சொல்லி எச்சில் விழுங்கினார். ‘உங்க வீடு எங்க?’ என்றேன். ‘பொன்னப்பநாடார் காலனி’ என்றார். ‘அய்யோ, அங்க தெக்கூட்டு ஏக்கியை நாங்கதானே தளைச்சோம். அந்த ஏரியால ஒம்பது யக்‌ஷிகளை நாங்கதான் கட்டினது. எல்லாம் இப்ப நல்லபடியா கொடையும் பலியும் வாங்கி இருக்குதுக… ’ என்றேன். ‘எப்பமாம் உதிரம் குடுக்க விட்டுட்டானுகன்னா கெளம்பி அதகளம் செஞ்சிரும்….நாலஞ்சு தலை சாயும். எங்களுக்கு ஆளவிடுவானுக’

கொஞ்சநேரம் அவர் மூச்சை அடக்கியே வைத்திருந்தார். பின்னர் ‘நீங்க என்ன செய்றீக?’ என்றார். ‘மாந்த்ரீகம்தான்’ என்றேன். ‘நாந்தான் இப்பம் தமிழ்நாட்டிலேயே பெரிய மாந்திரீகன்…கேள்விப்பட்டிருப்பீக’ அவர் ‘இல்லை’ என்றார். ‘என்னசார்? பேப்பரிலே எல்லாம் நம்ம படத்தோட செய்தி வந்திருக்கே?’ என்றேன். அவர் ‘நான் ஹிண்டு ஒண்டிதான் படிக்கிறது’ என்றார்

‘சின்ன வயசிலேயே எனக்கு ஆர்வம் வந்திட்டுது’ என்றேன். ‘எங்க அம்மாவன் சி.வி.ராமன்பிள்ளைன்னு ஒருத்தர். அவர்தான் பெரிய மாந்திரீகன். அப்றம் தகழி சிவசங்கரப்பிள்ளைன்னு ஒருத்தர். அவரும் பெரிய மாந்த்ரீகர். பிறவு வைக்கம் முகமது பஷீர்னு ஒரு மஸ்தான். ஆளு கெஜகில்லி…அவங்கள மாதிரி ஆகணும்னுதான் நானும் மந்திரத்துக்கு ஒக்காந்தது’ என்றேன். ஈனஸ்வரத்தில் ‘ஓ’ என்றார்

‘சீண்டரம் பிடிச்ச சோலி சார். வருசக்கணக்கா கிரந்தங்களை படிக்கணும். மந்திரங்கள நெட்டுரு போடணும். இப்ப ஒருமாதிரி கைத்தேர்ச்சி வந்திட்டுது… ’ மீண்டும் அந்த நாகப்பாம்பை எடுத்து பார்த்தேன். ‘இது இப்ப போன மாந்திரீகத்துக்குள்ளது. செம்பட்டும் மாலையும் எல்லாம் அதுக்குத்தான்’ என்றேன்.அவர் ‘அங்க கோயிலிலயா?’ என்றார். ‘ஆமா சார். கேரளப் பேய்களெல்லாம் கொஞ்சம் ஆட்டம் காட்டும். பல வகை இருக்கு. பழங்காலப் பேய்னா அதெல்லாம் செவ்வியல்னு சொல்லிருவோம். பாக்க சாதாரணமா மாதிரி இருந்தா அதை யதார்த்தவாதம்னு சொல்றது. சிலது இருக்கு , ஒரே இங்கிலீஷா கொட்டும். அதை நவீனத்துவம்னு சொல்லுவோம்’

‘இப்டீல்லாம் கேட்டதில்லை’ என்றார். ‘அதுசரி. இப்ப நாங்க உங்க கிட்ட வயித்தையும் குண்டியையும் கொண்டுவந்து காட்டுதோம். நீங்க கீறி முறிக்கிறீக. நம்ம கிட்ட சில இங்கிலீஷ் பேருகளச் சொல்லி காசு கறக்கிறீக. நாங்களும் செய்யணும்லா? இப்ப உங்க பெஞ்சாதிக்கு பேய் புடிச்சிபோட்டுன்னு வைங்க. இதில எந்த பேய்னு கண்டுபிடிக்கணும்ல?’ அவர் முகம் வெளிறி ‘ஐ நோ’ என்றார். ‘நீங்கள்லாம் படிச்சவங்க. உங்களுக்கெல்லாம் வாற மாதிரி பின்நவீனத்துவம்னு ஒரு பேய் இருக்கு. தாறுமாறா வெளையாடும்.சாரு நிவேதிதான்னு கேள்விப்பட்டிருக்கியளா?’ அவர் மூச்சுவாங்கி ‘இல்ல’ என்றார். ‘இப்ப நம்பர் ஒண் பேயி அதான். புடிச்சா புடிச்சதுதான். கொஞ்சநாள் ஆட்டம் காட்டிப்போடும்’

‘அப்டியா?’ என்றார். வாசலை அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்தார். ‘ரெமி மார்ட்டின் சாராயத்தை படைச்சா எறங்கீரும். ஆனா கோணங்கீன்னு ஒண்ணு கெடக்கு. பேசினா ஒரு வார்த்த வெளங்காது பாத்துக்கிடுங்க. அதை சமாளிக்கணும்னா அது பேசுதத நாம கேக்கப்பிடாது. அதேமாதிரி நாம பேச ஆரம்பிச்சிரணும். இப்டி பலது. யுவன்னு ஒண்ணு–’ அவர் ஆர்வம் தாளாமல் ‘சின்ன வயசோ?’ என்றார். ‘சேச்சே…அதுக்கு இருக்கும் ஆயிரம் ரெண்டாயிரம் வயசு. பேச்சு அப்டி. ஒரு விசயத்தச் சொல்ல ஒம்போது கதை சொல்லும்…’

ரயில் சென்றுகொண்டிருந்தது. பை தடாரென விழுந்தது. நாகம் வெளியே வந்து உருண்டது.‘பாத்தீயளா , அமைஞ்சு இருக்காளா பாருங்க… இப்பம் நெடுமங்காட்டிலே ஒழிப்பிச்ச பேயாக்கும். பேரு சுகதகுமாரி. பாட்டா பாடி கொல்லும். நாகயட்சி. அதனால நாகப்பாம்பு மேலே ஆவாகிச்சு கொண்டாந்துட்டேன். இதை கொண்டுபோய் ஊரிலே நாகலிங்க மரத்துக்கு அடியிலே பிரதிஷ்டை பண்ணுத வரை கண்ணுறக்கமில்லை. தப்பி போயிட்டான்னு வைங்க…பின்ன அம்பிடுதான்’

நான் அந்த செம்பட்டை எடுத்து இருக்கையில் விரித்து நாகத்தை எடுத்து அதன்மேல் வைத்து மலர்மாலையைச் சூட்டினேன். பார்க்க எனக்கே பயமாக இருந்தது. ‘இருங்கசார், பாத்ரூம் போய்ட்டு வந்திடறேன்’ என்று எழுந்து வெளியே சென்று கதவருகே நின்றுகொண்டேன். சரியாக இருபது நிமிடம். கதவைத்திறந்து வெளியே வந்த டாக்டர் வெளிறிய முகத்துடன் ‘இங்க நிக்கிறீங்களா? சிகரெட் புடிக்கணும் அதான்’ என கம்மிய புன்னகையுடன் சொன்னார். கைநடுங்க ஒரு சிகரெட்டை எடுத்தார்.

’‘நாம எங்க போனாலும் பேய்கள்தான் சார். வாழ்க்கை இப்டியே பேயோட பேயா போய்ட்டிருக்கு… மந்திரம் கைய விட்டு போனதும் எல்லா பேய்களுமா சேந்து நம்மளையும் கொண்டுட்டு போயிரும். நாமளும் பேயா அலைவோம். மத்த மந்திரவாதிக நம்மள ஓட்டுவானுக’ என்றேன் ‘இப்பிடித்தான் சார் ஜி.நாகராஜன்னு ஒரு பேய். ரயிலிலே பாத்ரூம் பக்கத்திலேதான் நின்னிட்டிருக்கும்.பட்டைச் சாராயப்பார்ட்டி…’ என்று தொடங்கியபோது ‘ஐ வில் கம்’ என்று சொல்லி மறுபக்கம் நோக்கி கிட்டத்தட்ட ஓடினார்

முந்தைய கட்டுரைஞானக்கூத்தன் பற்றி கமல்ஹாசன்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 61