‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 53

பகுதி பதினொன்று : காட்டின் மகள் – 6

அடர்காட்டில் இடும்பி முன்னால் செல்ல பின்னால் பீமன் சென்றான். குந்தியும் தருமனும் நடக்க பின்னால் நகுலனும் சகதேவனும் பேசிக்கொண்டு சென்றனர். கையில் வில்லுடன் இருபக்கங்களையும் பார்த்தபடி அர்ஜுனன் பின்னால் வந்தான். அவர்களைச் சூழ்ந்து மரங்கள் வழியாக வந்த குரங்குகள் உரக்க சேர்ந்தொலி எழுப்பின. அதே ஒலியை எழுப்பி அவற்றைப்போலவே பீமன் உடலை ஆட்டி மறுமொழி சொன்னான். “அவர்களின் எல்லை முடிகிறது என்கிறார்கள் மூத்தவரே. இனி வேறு குலத்தின் எல்லை வருகிறது” என்றான் பீமன். “எல்லையை மீறி அவர்கள் வருவதில்லை. வந்தால் பெரும்போர் நிகழும்.”

சூர்ணன் மரத்திலிருந்து ஓசையுடன் விழுந்து ஓடிவந்து பீமனை அணுகி அவன் காலில் தொற்றி தோளில் ஏறி காதைப்பிடித்து ஆட்டியபடி பறவை போல அகவல் ஒலி எழுப்பினான். “உன்னைப்பிரிவதில் வருந்துகிறானா?” என்றான் தருமன். “இல்லை. உங்களை விட்டுவிட்டு நான் மட்டும் அவர்களுடன் இருந்துவிடச்சொல்கிறான்” என்றான் பீமன். சூர்ணனை அவன் தலையைத் தடவி வாலைப்பிடித்து இழுத்து ஆறுதல்படுத்தினான். சூர்ணன் அதை ஏற்றுக்கொண்டு இறங்கி இரு காலில் நின்று தருமனை நோக்கி உதட்டைக் குவித்து நீட்டி “வேடிக்கையான மனிதன்” என்று சொல்லிவிட்டு ஓடிச்சென்று மரத்தில் ஏறிக்கொண்டான். பிறகு குதித்து திரும்பி வந்து நின்ற இடத்தில் சில துளிகள் சிறுநீரை விட்டுவிட்டு மீண்டும் தருமனை நோக்கி கைநீட்டி கண்களைச் சிமிட்டி “விசித்திரமானவன்” என்று சொல்லிவிட்டு திரும்பி மரத்தில் ஏறி கிளைகளுக்குள் சென்று அமர்ந்தான்.

“என்ன செய்கிறான்?” என்றான் தருமன். “இந்தப் பகுதியில் உள்ள குரங்குக்குலத்திற்கு ஓர் அறைகூவலை அந்த சிறுநீர்த்துளி வழியாக விட்டுவிட்டுச் செல்கிறான். அவர்கள் போருக்கு அறைகூவுவார்கள்…” என்றான் பீமன். “ஒரு நாலைந்து உயிர்கள் போவதற்கு வழிவகுத்துவிட்டான்” என்று சொல்லி புன்னகையுடன் திரும்பி சூர்ணனை நோக்கியபடி “இளையோனே, அவன் ஒருநாள் இந்தக்குலத்தை வென்று இப்பகுதியை கைப்பற்றுவான்” என்றான் தருமன். பீமன் நகைத்து “ஆம், அவன் இப்போதே அரசனாக வளர்ந்துவருகிறான்” என்றான். “பிறரது இறப்பு அவனுக்கு ஆழ்ந்த உவகையை அளிக்கிறது. போரைத் தொடங்கிவிட்டு தான் சாகாமலிருக்கவும் இதற்குள் கற்றுக்கொண்டிருக்கிறான்.”

இருபக்கமும் வாழைக்கூட்டங்கள் செறிந்திருந்தன. தரையில் சருகுகள் மிதிபட்ட குழிவுகளில் ஈரம் ஊறி நிறைந்தது. “இளையோனே, இந்தக்காட்டுக்குள் மலைமக்களுக்கு உணவுக்கு வறுதியே இருக்க வாய்ப்பில்லை” என்று தருமன் சொன்னான். “ஆம், ஆகவேதான் இந்தக்காட்டை அவர்கள் இத்தனை இரக்கமில்லாமல் பாதுகாத்து வருகிறார்கள்” என்றான் அர்ஜுனன். “இதன் எல்லைகளுக்கு மிகச்சிறந்த காவலை ஏற்படுத்தியுள்ளனர். இதற்குள் நுழைபவர்கள் அனைவரையும் தேடிக்கொல்கின்றனர். இக்காடுபற்றிய அச்சம் இப்பகுதியில் எங்கும் தலைமுறை தலைமுறையாக நிலவுகிறது.” பீமன் “யார் கண்டது, சூதர்கள் இதற்கும் இங்கே வந்து பரிசு பெற்றுச் செல்கிறார்களோ என்னவோ! அச்சமே மிகச்சிறந்த காவலன் என்பார்கள்” என்றான்.

வாழைக்காட்டில் இருந்து ஒரு பெரிய குரங்கு மெல்ல வந்து அவர்களின் வழியில் நின்றது. இடும்பி கையை வாயில் வைத்து ஓர் ஓசையை எழுப்பியதும் அது மெல்ல பின்வாங்கி வாழைமேல் ஏறி மரக்கிளை ஒன்றில் அமர்ந்துகொண்டு முழவு போல ஒலியெழுப்பியது. அப்பால் பல இடங்களில் அந்த ஓசை மீண்டும் மீண்டும் கேட்டது. “நிறைய குரங்குகள் உள்ளன” என்றான் பீமன். “அவள் என்ன சொன்னாள்?” என்றான் தருமன். “அவர்களுக்கும் இக்குரங்குகளுக்கும் இடையே நல்லுறவு உள்ளது” என்றான் பீமன். “அவள் தன் குலத்தைச் சொன்னாள். அதை குரங்குகள் ஏற்றுக்கொள்கின்றன.”

“குரங்குகள் மட்டும் இவர்களின் உணவை உண்ணாதா என்ன? கேட்டுச்சொல்” என்றான் தர்மன் . பீமன் அதைக் கேட்டதும் இடும்பி திரும்பிப்பார்த்து “இங்குள்ள குரங்குகளே இத்தோட்டத்திற்குக் காவல். அவை பெருங்கூட்டமாக மரங்களின்மேல் அமர்ந்து தாக்குவதனால் இங்கே யானைகள் நுழைவதில்லை” என்றாள். தருமன் நகைத்து “ஆம், குரங்குகளுக்கு அடிமரத்தை உண்ணும் வழக்கம் இல்லை” என்றான். மீண்டும் சிரித்து “இன்னும் சற்று சீர்ப்படுத்தினால் இந்த வாழைக்காட்டை பயன்படுத்திக் கொள்வதற்காகவும் பாதுகாப்பு அளிப்பதற்காகவும் இடும்பர்கள் குரங்குகளிடம் வரி கொள்ளவும் முடியும்” என்றான். பீமன் நகைத்து “வால் வைத்திருப்பவர்களுக்கு வரி விதிக்கலாம். வாலை அறுத்துக்கொண்டால் வரி செலுத்தவேண்டிய தேவை இல்லை என்று கருணையுடன் ஒரு சலுகையும் அளிக்கலாம்” என்றான். தருமன் வெடித்துச்சிரித்தபடி இடையில் கைவைத்து நின்றுவிட்டான்.

குந்தி திரும்பிப்பார்த்து “இங்கே எல்லோருமே மாறிவிட்டோம். இவன் இப்படி நகைத்து நான் பார்த்ததே இல்லை” என்றாள். பீமன் தருமனின் அதேகுரலில் “நூல்களில் நகைப்பு ஐந்து வகை என்று சொல்லப்பட்டிருக்கிறது மந்தா. ஒன்று சிரிப்பு வரும்போது சிரிப்பது. இன்னொன்று சிரிப்பு வராதபோது சிரிப்பது. மூன்று சிரிப்பதுபோல் சிரிப்பது. நான்கு சிரிப்பு போல அல்லாது சிரிப்பது. ஐந்து சிரிக்காமல் இருப்பது” என்று சொன்னான். தருமன் கண்களில் நீர் வரச் சிரித்து “போதும்… குரங்குகள் ஏற்கனவே என்னை வேடிக்கையானவனாக எண்ணுகின்றன” என்றான். அர்ஜுனன் “ஆம், நானும் கண்டேன். அந்த குட்டிக்குரங்கு ஏன் மூத்தவரை ஏளனம் செய்கிறது?” என்றான் . பீமன் “நான் அவனிடம் சொன்னேன், மூத்தவர் எங்கள் அரசர் என்று. அவனால் நம்பவே முடியவில்லை” என்றான்.

குந்தி இடும்பியை நோக்கி “இவள் வழி கண்டுபிடித்து செல்கிறாள். ஆனால் இங்கே தரையில் எங்குமே காலடிபட்ட தடமே இல்லை. இக்காட்டில் இதுவரை ஓர் ஒற்றையடிப்பாதையைக்கூட நான் கண்டதில்லை” என்றாள். “இவர்கள் தரையில் நடப்பவர்களே அல்ல அன்னையே. பெரும்பாலும் மரங்களின் மேல் விரைவாக தாவிச்செல்கிறார்கள். மரக்கிளைகளில் முழுமையாக மறைந்துகொள்ளும் கலையில் தேர்ச்சி பெற்றவர்கள். ஆகவேதான் இவர்களை பறப்பவர்கள் என்றும் காற்றில் கரையும்கலை அறிந்தவர்கள் என்றும் கங்கையின் மறுபக்கமுள்ளவர்கள் நினைக்கிறார்கள்” என்றான் பீமன். “இத்தகைய அடர்ந்தகாட்டில் தரை முழுக்க உடைந்த மரங்களாக இருக்கும். அவற்றின் மட்கிய பட்டைகளில் விரியன்பாம்புகள் நிறைந்திருக்கும். தரையில் விரைவாகச் செல்லமுடியாது. இறப்பும் நிகழும். ஆகவே இவர்கள் மரங்கள் வழியாகச் செல்வதை தேர்ந்திருக்கிறார்கள்.”

நாய்களின் பெருங்குரல் ஒலி கேட்கத்தொடங்கியது. அவ்வொலியைக் கேட்டதும் அதுவரை அவர்களைப் பின்தொடர்ந்து மரங்களுக்குமேல் வந்த குரங்குகள் பின்வாங்கிவிட்டன. நாய்களில் ஒன்று இடும்பியை உணர்ந்து முனகலாக ஒலி எழுப்ப மற்ற நாய்கள் மெல்ல அடங்கி சீரான குரலில் குரைக்கத் தொடங்கின. இடும்பி உரக்கக் குரலெழுப்பி அவளை அறிவித்ததும் நாய்கள் முனகியபடி தங்களுக்குள் பேசிக்கொண்டன. இடும்பி “எங்கள் ஊர்” என்றாள். “எங்கே?” என்றான் பீமன்.

இடும்பி கையை சுட்டிக்காட்டி “அங்கே” என்றாள். தருமன் நிலத்தில் ஒரு ஊரை எதிர்பார்த்து விழிதுழாவ அர்ஜுனன் பெருவியப்புடன் “மூத்தவரே, மரங்களின் மேல் பாருங்கள்” என்றான். வட்டவடிவ முற்றம் ஒன்றைச் சுற்றி கிளை விரித்து நின்றிருந்த பெருமரங்களின் கிளைகளில் இருந்து நூற்றுக்கணக்கான குடில்கள் ஊசல்கள் போலத் தொங்கிக்கிடந்தன. “தூக்கணாங்குருவியின் கூடுகள் போல!” என்றாள் குந்தி. மரக்கிளைகளில் கனத்த கொடிவடம் ஒன்றைக் கட்டி இறக்கி அதில் குடில்களைக் கட்டி தொங்கவிட்டிருந்தனர். “ஒற்றை வடத்தில் அந்தக்குடில் எப்படி நிற்கிறது?” அர்ஜுன்ன் “தூக்கணாங்குருவிக்கூடு எப்படி நிற்கிறதோ அப்படித்தான் என்று நினைக்கிறேன்” என்றான்.

காற்றில் மெல்ல ஆடியபடி நின்றிருந்த குடில்களின் உள்ளே குழந்தைகள் அமர்ந்திருப்பதை காணமுடிந்தது. ஒரு குடிலை வேகமாக ஆட்டி அதிலிருந்து ஒரு சிறுவன் இன்னொரு குடிலுக்கு தாவிச்சென்றான். அருகே நெருங்கியபோதுதான் முந்நூறுக்கும் மேற்பட்ட தொங்கும் குடில்கள் இருப்பதை அர்ஜுனன் அறிந்தான். “எங்கும் எந்த படைக்கலமும் கண்ணுக்குத்தெரியவில்லை மூத்தவரே” என்றான் அர்ஜுனன். “இங்கே இவர்களுக்கு எதிரிகளே இல்லை. வழிதவறி வருபவர்களை உடனே கொன்றுவிடுவார்கள். இவர்களைப்பற்றிய அச்சமூட்டும் புராணங்களே இவர்களுக்கு அரணாக உள்ளன” என்றான் பீமன்.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

இடும்பி நரியின் ஊளை போன்ற ஓர் ஒலியை எழுப்பினாள். அதைக்கேட்டதும் அத்தனை குடில்களில் இருந்தும் குழந்தைகள் எட்டிப்பார்த்தன. மரக்கிளைகளின் இலைச்செறிவுக்குள் இருந்து நீரிலிருந்து மீன்கள் எழுவதுபோல மனிதர்கள் வந்துகொண்டே இருந்தனர். அனைவரும் உடலெங்கும் நீறுபூசி தோல் ஆடை அணிந்திருந்தனர். சிலகணங்களில் குரங்குப்படை போல மரக்கிளைகளிலேயே அவர்களைச்சூழ்ந்து கொண்டு இலையசையும் ஒலியுடன் கூடவந்தனர். அவர்களின் சிவந்த பெரிய விழிகள் அவர்களின் உடலசைவுகளுடன் சேர்ந்து அசைந்தன. அவர்களின் மூச்சொலிகளை கேட்க முடியும் என்று தோன்றியது. குழந்தைகளில் ஒன்று ஏதோ கேட்க நாலைந்து குழந்தைகள் அதை அடக்கின. நாய்கள் தலைதாழ்த்தி வலைபோல விரிந்து வால்களைத் தூக்கி நாசி நீட்டி காத்து நின்றன.

மரங்களில் இருந்து இழிந்து மண்ணில் நின்ற ஒரு முதியவர் “இடும்பி, இவர்கள் யார்? உணவுக்காகக் கொண்டுவந்தாய் என்றால் அவன் ஏன் படைக்கலம் வைத்திருக்கிறான்?” என்றார். “தந்தையே, இவர்கள் அஸ்தினபுரியின் இளவரசர்கள். படைவீரர்களிடமிருந்து தப்பி காட்டுக்குள் வந்திருக்கும் நல்லவர்கள். அந்த ஆற்றல் மிக்கவரை நான் என் கணவராக ஏற்றுக்கொண்டிருக்கிறேன்” என்றாள் இடும்பி. அவர்களில் பலர் அதிர்ச்சியடைந்தது போல அசைந்தனர். நாலைந்து முதியவர்கள் நீர்த்துளி உதிர்வதுபோல மண்ணில் குதித்து நிமிர்ந்து நின்றனர். முதியவர் “என்ன சொல்கிறாய்?” என்றார். “இது நம் குடியில் முற்றிலும் விலக்கப்பட்டுள்ளது என்று நீ அறியமாட்டாயா?”

பீமன் முன்னகர்ந்து “வணங்குகிறேன் தந்தையே. நான் இவளை என் துணைவியாக ஏற்றிருக்கிறேன். அதற்கு நீங்கள் முன்வைக்கும் அத்தனை தேர்வுகளையும் சந்திக்க சித்தமாக இருக்கிறேன். அனைத்து குலச்சடங்கு முறைகளுக்கும் முழுமையாக உடன்படுகிறேன்” என்றான். முதியவர் வெருண்டு “இவன் நமது மொழி பேசுகிறான்! நமது மொழியை எப்படி கற்றான்?” என்றார். “தந்தையே, வெளியே உள்ள காடுகளிலும் சிறிய மாற்றங்களுடன் நம் மொழியைத்தான் பேசுகிறார்கள் என்கிறார்” என்றாள் இடும்பி. “இவர் நம்மவராக ஆக விழைகிறார்.” முதியவர் “இவனா? இவன் பிளக்கப்பட்ட மரம் போன்ற நிறம் கொண்டிருக்கிறான். நாம் நமது முன்னோர்களான பாறைகளின் நிறம் கொண்டவர்கள்” என்றார் முதியவர்.

பின்னால் நின்றிருந்த இன்னொரு முதியவர் “இவன் புழுக்களை போலிருக்கிறான்… அந்தப்பெண் கனிந்த பழம்போலிருக்கிறாள். இத்தகைய நிறமுள்ள அனைத்தையுமே நாம் உணவாகவே உண்டு வருகிறோம்” என்றபின் கரிய பற்களைக் காட்டி புன்னகைத்து “இவர்களையும் உண்போம்… நீ இவர்களை ஏமாற்றி இங்கே கொண்டுவந்திருக்கிறாய் என நினைக்கிறேன். அஞ்சாதே. இனிமேல் இவர்கள் இங்கிருந்து தப்பமுடியாது” என்றார்.

இடும்பி நெஞ்சில் அறைந்து உரத்தகுரலில் “தந்தையே, இவர் என் கணவர். இவர்கள் என் உறவினர். இவர்களை கொல்லமுயல்பவரை அக்கணமே நான் கொல்வேன்” என்று கூவினாள். அவர்கள் அந்தக் குரலை எதிர்பார்க்காதவர்கள் போல திகைத்து வாய் திறந்தனர். இன்னொரு முதியவர் “நீ எண்ணுவது ஒருபோதும் நிகழாது. உன் தமையன் இக்குடியின் அரசன். அவன் இவர்களை ஏற்கப்போவதில்லை. அதை நீ அறிவாய்” என்றார். “ஆம், ஆனால் நான் இவரை நம் குடியின் முன் நிறுத்தப்போகிறேன். இவர் நம் குடியை அறைகூவுவார். இவரை எவரேனும் தனிப்போரில் கொல்ல முடிந்தால் இவர்களை நாம் கொன்று உண்ணலாம்” என்றாள் இடும்பி.

அவர்கள் சுருங்கிய விழிகளுடன் அவளையே நோக்கி அசைவற்று நின்றனர். பின்னர் ஒருவர் பற்களைக்காட்டி சிரித்து “இவனது உடலைவைத்து நீ பிழையாக மதிப்பிடுகிறாய் மகளே. இவன் எத்தனை ஆற்றல் கொண்டவனாக இருந்தாலும் நமது மாயங்களை அறிந்தவனல்ல. மேலும் இடும்பனை வெல்ல எந்த மானுடனாலும் முடியாது” என்றார். “நான் என் தமையனுடன் பலமுறை போரிட்டிருக்கிறேன். நான் அறிவேன் அவரை. இவர் என்னை வென்றவர்” என்றாள் இடும்பி. “என்னை வென்ற ஒருவரையே நான் ஏற்றாகவேண்டும்.”

மரக்கிளைகளுக்குப் பின்னாலிருந்து மேலும் இடும்பியின் குடிகள் வந்துகொண்டே இருந்தனர். முலைகள் சுருங்கித் தொங்கிய முதுமகள் ஒருத்தி முன்னால் வந்து கைகளை நீட்டி “மகளே, நீ சொல்வதற்கு நம் குலமுறைகளின் ஒப்புதல் உண்டு. இவனை நமது குலத்தின் நெறிகளின்படி போரில் வெல்வதே முறை” என்றபடி அவளைப் பிடித்து முன்னால் அழைத்துச் சென்றாள். இடும்பி திரும்பி பீமனை புன்னகையால் அழைத்துவிட்டு அவர்களுடன் நடந்தாள். பீமன் அவள் பின்னால் செல்ல அவன் பின்னால் பிறர் நடந்தனர்.

சினத்துடன் கீழ்வாயை முன்னால் நீட்டிய முதியவர் “ஆனால் நம் எல்லைக்குள் அயலவன் படைக்கலம் ஏந்தக்கூடாது. இவன் வில்லை உதறவேண்டும்” என்றார். தன் வளைந்த விரல்களால் அர்ஜுனனைச் சுட்டி “அவன் கண்களைப் பார்க்கிறேன். அவை மிகக்கூரியவை. அவனால் குறிதவறாமல் அம்புகளை செலுத்தமுடியும்.” பீமன் திரும்பி அதை அர்ஜுனனிடம் சொல்ல அவன் “மூத்தவரே…” என ஏதோ சொல்லத் தொடங்கினான். தருமன் “நமக்கு வேறுவழி இல்லை பார்த்தா. பீமனை எவரும் வெல்லமுடியாது” என்றான். அர்ஜுனன் வில்லையும் அம்புகளையும் நிலத்தில் வீசினான்.

அந்தக் குடில்களின் நடுவே இருந்த வட்டவடிவமான புல்வெளியில் அவர்கள் அமரவைக்கப்பட்டனர். அங்கே மண்ணுக்கு அடியில் பெரிய பாறை இருப்பதனால்தான் மரங்கள் முளைக்கவில்லை என்று பீமன் எண்ணினான். காட்டில் அங்குமட்டும்தான் வெயில் விழுந்தது. படிகத்தாலான ஒரு கோபுரம் போல வெயில் அங்கே எழுந்து நிற்பதாகத் தோன்றியது. மறு எல்லையில் நீண்ட பெருங்கல் ஒன்று கிடைமட்டமாக வைக்கப்பட்டு அதன் மேல் நிறுத்தப்பட்டிருந்த உருளைக்கல் முன்னால் காலையில் சுடப்பட்ட ஊனுணவு படைக்கப்பட்டிருந்தது. “இவர்களுக்கும் தெய்வங்கள் உள்ளன” என்றான் தருமன். “மூதாதையர் இல்லாத குடிகள் உண்டா?” என்றான் அர்ஜுனன்.

வெயிலை நேராக நோக்க கண்கூசியது. அதனுள் விழுந்த சருகுகள் பளபளத்தபடி கீழிறங்கின. பீமன் அந்தக்குடில்களை ஏறிட்டுப்பார்த்தான். அவை கனத்த மூங்கில்களை கொடிபோல வளைத்து கட்டப்பட்டிருந்தன. அவன் பார்ப்பதைக் கண்ட தருமன் “நான் அப்போதே அதை பார்த்துவிட்டேன் இளையோனே. மூங்கில்களையும் பிரம்புகளையும் இளமையிலேயே வேண்டிய வடிவில் வளைத்து வளர்க்கிறார்கள். அவற்றைக்கொண்டு குடில்களைக் கட்டியிருக்கிறார்கள். உள்ளே நன்றாக முதுகை நீட்டிப்படுப்பதற்கான இடமிருக்கிறது. புல்அடுக்கி மேலே தோல் வேய்ந்து சிறந்த படுக்கைகளை செய்திருக்கிறார்கள். இவர்கள் குடில்கள் படுப்பதற்கான இடம் மட்டுமே” என்றான்.

“ஏன் இப்படி கட்டவேண்டும்? உறுதியான இந்த நிலத்தில் கட்டியிருக்கலாமே. இவர்கள் விலங்குகளுக்கு அஞ்சுபவர்களா என்ன?” என்றாள் குந்தி. “பாம்புகளுக்கு அஞ்சி முற்காலத்தில் இப்படி கட்டியிருப்பார்கள். பின்னர் அதுவே பழகிவிட்டிருக்கும். அசையாத குடிலில் அவர்களுக்கு துயில் வராது என நினைக்கிறேன்” என்றான் தருமன். பீமன் இடும்பியிடம் “உன் தமையனார் எங்கிருக்கிறார்?” என்றான். அவள் “நாள்தோறும் அவர் காட்டைச்சுற்றிவருவார்” என்றாள். “இவர்களின் குலப்பெயர் என்ன?” என்றாள் குந்தி. “இடும்பர்கள். இவர்கள் அனைவருமே இடும்பர்களும் இடும்பிகளும்தான்… தனித்தனியாகப் பெயரிடும் வழக்கம் இங்கில்லை” என்றான் பீமன்.

நாய்கள் அவர்களைச் சூழ்ந்து வியூகம் அமைத்து அமர்ந்திருந்தன. அசையாமல் சிறிய பழுப்புநிறப் பாறைகள் போல. குந்தி “அவை நம்மை காவல் காக்கின்றன” என்றாள். “தலைவன் பீமனை மட்டுமே பொருட்படுத்துகிறான்” என்றான் தருமன். “இவர்கள் மனித இறைச்சியை நாய்களுக்கு அளித்து வளர்க்கிறார்கள். பீமன் அவர்களில் ஆவலை கிளப்புகிறான்.” குந்தி “என்ன பேச்சு இது” என்று சொல்ல தருமன் நகைத்தான்.முதலில் அந்தத் தருணத்தின் இறுக்கத்தைக் கடப்பதற்காக அவர்கள் செயற்கையாக எளிய உரையாடலை நிகழ்த்தினர். பின்னர் அந்த உரையாடலே அவர்களை இயல்பாக்கியது. அனைவர் முகத்திலும் புன்னகை ஏற்பட்டது.

“இங்கே இவர்கள் சமையலறை எதையும் வைத்திருப்பதாகத் தெரியவில்லை இளையவனே. நீ தோற்றால் நம்மை பச்சையாகவா உண்பார்கள்?” என்றான் தருமன். பீமன் “அங்கே மலைச்சரிவில் அடுமனைகளை வைத்திருக்கிறார்களாம். இவர்கள் ஊனுணவை அங்குள்ள பெரிய கற்கள் மேல் போட்டு கற்களைச் சுற்றி தீவளர்க்கிறார்கள். கல்லின் சீரான வெம்மையில் ஊன் வேகிறது” என்றான். “இவர்கள் கருகியதை உண்பதில்லை.” தருமன் “சிறந்த முறை. அரசகுடியினருக்கு ஏற்றது” என்று சொல்லி சிரித்தான். குந்தி “வாயை மூடு…என்ன கீழ்மைப் பேச்சு?” என்று சினந்தாள். “அன்னை அஞ்சுகிறார்கள்” என்றான் நகுலன். “இந்த மூடர்கள் பேசுவது என் மைந்தர்களைப்பற்றி…” என்றாள் குந்தி.

காட்டுக்குள் மெல்லிய முழவொலி எழுந்தது. இடும்பி “தமையன்!” என்றாள். ஒருவர் “எழுந்து நில்லுங்கள்! அரசர் வருகிறார்!” என்றான். பீமன் எழுந்து நிற்க பிறரும் எழுந்து நின்றனர். முழவொலி மேலும் வலுத்தது. மரங்களில் இருந்து பல இளம் இடும்பர்கள் குதித்தனர். இறுதியாக கன்னங்கரிய பேருடலுடன் அரசன் இடும்பன் கிளையில் ஆடி மண்ணில் இறங்கி நின்று இடையில் கைவைத்து அவர்களை நோக்கினான். நுரைபோலச் சுருண்ட முடியை நீட்டி சடைத்திரிகளாக ஆக்கி தோளில் விட்டிருந்தான். தாடியும் மீசையும் முகத்தில் சிறிய சுருள்களாகப் பரவியிருந்தன. கழுத்தில் எலும்புகளைக் கடைந்துசெய்த வெண்மணிகளால் ஆன மாலையை அணிந்திருந்தான். அவன் முன்னரே அனைத்தையும் அறிந்திருந்தான் என்று தெரிந்தது. தருமன் மெல்லிய குரலில் “மூத்த தந்தையே விழியுடன் எழுந்து வந்தது போலிருக்கிறான்” என்றான்.

சிவந்த விழிகளால் அவர்கள் ஒவ்வொருவரையும் நோக்கியபின் “நான் வந்த்து இவர்களைக் கொல்லவே” என்று தங்கையிடம் சொன்னான். “இந்தக்காட்டில் நாம் ஒருபோதும் அயலவரை நுழையவிடக்கூடாது. இது நம் மூதாதை தெய்வங்கள் நமக்கு இட்ட ஆணை.” இடும்பி “மூத்தவரே, நான் இவரை என் கணவராக ஏற்றுக்கொண்டுவிட்டேன். அதை நான் மாற்றிக்கொள்ளப் போவதில்லை. நீங்கள் செய்யக்கூடுவது ஒன்றே, என்னையும் இவரையும் கொல்லவேண்டும். கொல்லுங்கள் என அறைகூவுகிறோம்” என்றாள். “நம் குலமுறைப்படி நீங்கள் அறைகூவும் தனிமனிதனை தனியாகவே எதிர்கொள்ளவேண்டும். மூதாதையர் சான்று நிற்கட்டும்!”

இடும்பனின் பெரிய உதடுகள் விரிந்து நடுவே இடைவெளி விழுந்த அகன்ற வெண்பற்கள் தெரிந்தன. அவன் குரல் தழைந்தது. “நீ என் தங்கை. என் கைகளைப்பிடித்து காட்டை அறிந்தவள். இந்தக்காட்டுக்கு அப்பால் உனக்கு எதுவும் தெரியாது. நான் இங்கிருந்தாலும் வெளியுலகை ஒவ்வொருநாளும் அறிந்துகொண்டிருக்கிறேன். பலமுறை மாறுவேடங்களில் அங்கே சென்று பார்த்தும் வந்திருக்கிறேன்” என்றான். இரு கைகளையும் விரித்து இடும்பியை நோக்கி “நான் உன் மூத்தவன், உன் குருதி. நான் சொல்வதைக் கேள்” என்றான். இடும்பி “நான் உங்கள் தங்கை மட்டும் அல்ல, பெண்ணும்கூட” என்றாள்.

“நீ அரசியும்கூட” என்றான் இடும்பன் சினத்துடன். “ஏன் இக்காட்டுக்குள் அயலவர் வரக்கூடாது, வந்தவர் திரும்பக்கூடாது என நம் முன்னோர் வகுத்தனர் என்று புரிந்துகொள். நாம் வாழும் இக்காட்டைப்போல பலநூறு காடுகள் இந்த கங்கைச்சமவெளியெங்கும் இருந்தன. அவையனைத்திலும் நம்மைப்போன்ற தொல்குடிகள் வாழ்ந்தனர். அக்காடுகள் அனைத்தும் இன்று அழிந்து ஊர்களாக நகரங்களாக ஆகிவிட்டன. அங்கே கோட்டைகளும் துறைகளும் சந்தைகளும் வந்துவிட்டன. அங்கெல்லாம் பலவண்ணங்களை உடலில் தாங்கிய மக்கள் வந்து மொய்த்து நிறைந்துவிட்டார்கள். அழுகிய ஊனில் புழுக்கள் போல அவ்வூர்களில் அவர்கள் நெரிபடுகிறார்கள். அங்கு வாழ்ந்த மக்கள் துரத்தப்பட்டு மலைகள் மேல் ஏறிச்சென்று மறைந்தனர். எஞ்சியவர்கள் அவ்வூர்களில் அடிமைகளாக வாழ்கிறார்கள்.”

“அங்கே ஊர்களில் வண்ணம்கொண்டவர்கள் தவளைகள் போல பெருகிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பேராசை அதைவிடப் பெரியதாக வளர்கிறது. பெரும்பசி கொண்ட நெருப்பு போன்றவர்கள் அவர்கள். உண்ணும்தோறும் பசி பெருகும் தீயூழ் கொண்டவர்கள். அவர்களுக்கு பெருங்காடுகள்கூட கையளவான காய்கள் போலத்தான். அயலவர் இங்கு வரமுடியும் என்றால் விரைவிலேயே இங்கு அவர்களின் படைகள் நுழையும். அவர்கள் முடிவில்லாமல் பெருகிவருவார்கள். நாம் அறியாத படைக்கலங்களை வைத்திருப்பார்கள். யானைகளையும் குதிரைகளையும் பழக்கி அவர்களுக்காக போரிடச்செய்வார்கள். நெருப்பு அவர்களின் தெய்வம். காட்டுக்கு நெருப்பு எதிரி என்று நீ அறிவாய். ஆகவே நமக்கும் நெருப்பு எதிரியே. தீயை ஏவி இக்காட்டை அவர்களால் முழுமையாகவே அழிக்கமுடியும். நமது ஆற்றலும் மாயங்களும் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.”

“குலத்துடன் அழிந்த கானகர்கள் செய்த பிழையே அயலவர்களை நம்பி அவர்களைத் தங்களுடன் பழக விட்டதுதான். சிறிய பொருட்களுக்கு ஆசைப்பட்டும் வெளியுலகில் இருந்து அவர்கள் கொண்டுவந்து காட்டும் பகட்டுகளில் மயங்கியும் அவர்கள் தங்கள் இல்லங்களை தாங்களே கொளுத்திக்கொள்ளும் பெரும்பிழை செய்தார்கள்… தங்கள் மைந்தர்களை அடிமைகளாக்கினார்கள்.நாம் ஒருபோதும் அப்பிழையை செய்யக்கூடாது” என்றான் இடும்பன். பீமன் அவனுடைய திரண்டபெருந்தோள்களையும் சிறிய அசைவுகளிலேயே இறுகி நெளியும் தசைகளையும் நோக்கியபடி நின்றிருந்தான். இடும்பி “மூத்தவரே, நான் இனி என் உள்ளத்தை மாற்றிக்கொள்ளமுடியாது. நான் இவர் துணைவி” என்றாள்.

தருமன் “அவன் சொன்னதை என்னிடம் சொல்” என்றான். பீமன் சொன்னதும் தருமன் இடும்பனிடம் “அரசே, நான் இன்னமும் அஸ்தினபுரியின் இளவரசனே. அந்நிலையில் இந்த வாக்குறுதியை அளிக்கிறேன். உங்கள் தங்கை அஸ்தினபுரியின் முதல் அரசியாகவே மதிக்கப்படுவாள். உங்களை எங்கள் அரசுடன் மணவுறவு கொண்ட குலமாகவே அஸ்தினபுரி கருதும். உங்கள் தனியுரிமைகளை ஒருபோதும் மீறமாட்டோம். பிறர் மீற முயன்றால் அஸ்தினபுரியின் அரசும் இருபெருவீர்ர்களின் ஆற்றலும் உங்களுக்குத் துணையாக இருக்கும்” என்றான்.

பீமன் அதைச் சொன்னதும் இடும்பன் கையை வீசி கடும் சினத்துடன் “வண்ணமக்களை நம்பக்கூடாது. அவர்களின் ஒரு சொல்லையும் செவிகொள்ளக்கூடாது. அவர்கள் நம் முன்னாலிருந்து உயிருடன் மீளக்கூடாது. என் முந்தையோரின் மூன்று ஆணைகள் இவை” என்றான். அவன் குடியினர் கைதூக்கி “ஆம்! ஆம்!” என்றனர். பீமன் மீண்டும் அவனிடம் பேசப்போக “பேசாதே!” என்று இடும்பன் கூவினான். “உன் ஒரு சொல்லைக்கூட நான் கேட்கப்போவதில்லை.”

இடும்பி ஏதோ சொல்வதுபோல அசைய “நீயும் இனிமேல் பேசவேண்டியதில்லை…” என்று இடும்பன் கூவினான். “பேசுவது வண்ணமக்களின் வழி. பேச்சைப்போல நாம் வெறுக்கவேண்டிய பிறிதொன்றில்லை.” இடும்பி “அப்படியென்றால் நீங்கள் விழைவதைச் செய்யலாம். இவரையும் என்னையும் கொல்லலாம்…” என்றாள். இடும்பன் நிமிர “மூதாதையர் வகுத்த முறைப்படி அதைச்செய்க” என்றாள் இடும்பி.

இடும்பன் கடும் சினத்துடன் தன் தோளில் ஓங்கி அறைந்தான். “இவர்கள் என் குடிகள் அல்ல. இக்காட்டில் வாழும் விலங்குகளும் அல்ல. இவர்கள் வண்ணமக்கள். நம்மை அழிக்க வந்தவர்கள். இவர்களிடம் எந்தக் குலமுறையும் கடைப்பிடிக்கப்படவேண்டியதில்லை என்பதே தொல்நெறி… இல்லையேல் தந்தையர் சொல்லட்டும்…” என்று முதியவர்களை நோக்கி திரும்பினான்.முதியவர்கள் பேசுவதற்கு முன்பு “ஆனால் நம் குலத்துப்பெண் அவனை ஏற்றுக்கொண்டிருக்கிறாள்” என்று ஒரு முதியவள் சொன்னாள். “அவளிடம் நாம் குலநெறிபேணவேண்டும் அல்லவா?”

ஒரு முதியவர் “வண்ணமக்கள் முழுமையாக ஒழிக்கப்படவேண்டும். அவர்களிடம் எந்த நெறியும் பேணப்படவேண்டியதில்லை. அவர்களை மறைந்திருந்து கொல்லலாம். நஞ்சூட்டியும் நீரிலும் நெருப்பிலும் தள்ளியும் அழிக்கலாம். அவர்களை நாம் பார்த்த கணம் முதல் எத்தனை விரைவாக அழிக்கிறோமோ அத்தனை நன்று. மூதாதையர் நெறி அதுவே” என்றார். அனைத்து கிழவர்களும் கைகளைத் தூக்கி “ஆம்” “ஆம்” என்றனர். “நம் குலத்துப்பெண் நம் ஆணையை ஏற்கவேண்டும். இல்லையேல் அவளும் கொல்லப்படவேண்டியவளே” என்றார் இன்னொருவர். “ஆம்… அவள் விலகிச்செல்லட்டும்… இது என் ஆணை” என்றான் இடும்பன்.

“நான் என் கணவனுக்காக உயிர்துறக்கவே விழைகிறேன்!” என்றாள் இடும்பி. சினத்துடன் பற்களைக் கடித்து “கொல்லுங்கள்!” என்று இடும்பன் கூவியதும் அத்தனை இடும்பர் இடும்பிகளும் கைகளைத் தூக்கி பேரொலி எழுப்பியபடி அவர்களைச் சூழ்ந்தனர். இடும்பி தன் நெஞ்சில் ஓங்கி அறைந்து கூவியபடி பீமனின் முன்னால் வந்து நின்றாள். அர்ஜுனன் இடையில் கைவைத்து இமைகூட அசையாமல் அவர்களை நோக்கி நின்றான். பீமன் உரக்க “விலகு… உன் தமையனின் அச்சத்தை நான் புரிந்துகொள்கிறேன்” என்றான்.

இடும்பன் கைகாட்டி மற்றவர்களை நிறுத்திவிட்டு “அச்சமா? உன்னிடமா?” என்றான். “ஆம், இப்போது நீ சொன்னவை அனைத்தும் என் மீது நீ கொண்ட அச்சத்தாலேயே” என்றான் பீமன். “அச்சமில்லை என்றால் என்னுடன் போருக்கு வா!” இடும்பன் இதழ்கோணி நகைத்து “உன்னைக்கொல்ல எனக்கு ஒரு கைகூட தேவையில்லை” என்றான். பீமன் திரும்பி மூதாதையராக நிறுவப்பட்டிருந்த கல்லை நோக்கி “இதோ உங்கள் குலத்தின் தலைவனை நான் அறைகூவுகிறேன். அவன் ஆண்மகன் என்றால் அச்சமற்றவன் என்றால் இவன் என்னிடம் தனிப்போர் புரியட்டும். அவனுக்கு உகந்த இடத்தில் உகந்த முறையில் அந்தப்போர் நிகழட்டும்… இல்லையேல் அவனும் அவன் மூதாதையரான நீங்களும் வெறும் கோழைகள் என்றே பொருள்” என்று கூவினான்.

இடும்பர்கள் சினத்துடன் கைகளால் உடலை அறைந்துகொண்டு உறுமினார்கள். இருவர் பீமனை நோக்கி கைகளை விரித்துக்கொண்டு வந்தனர். அவர்களை கையசைத்து நிறுத்திய இடும்பன் “நீ விட்ட அறைகூவலை ஏற்கிறேன். நாம் போர்புரிவோம்…” என்றான். “நான் உன்னை வென்றால் எனக்கு என்ன கிடைக்கும்?” என்றான் பீமன். “நீ உயிருடன் இருக்கப்போவதில்லை” என்றான் இடும்பன். “சொல், நான் வென்றால் எதை அடைவேன்?” இடும்பன் இடும்பியை நோக்கியபின் “என் தங்கையை எடுத்துக்கொள். உன்னை இக்குடி ஏற்றுக்கொள்ளும்” என்றான். “ஆம், நாம் போர் புரிவோம்” என்று பீமன் சொன்னான்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

முந்தைய கட்டுரைஅரதி
அடுத்த கட்டுரைமுன்விலை- கடிதம்