பயணம்:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

ஏறக்குறைய நாங்களும் உங்கள் குழுவோடு பயணம் செய்த அனுபவம் கிடைத்தது. நாகர்ஜுனன் சொன்னது போல, வாசகர்களுக்கு உங்கள் கண்கள் வழியே காட்சிகளை காணும்படியான ஒரு virtual travel எனலாம். பயண தாகம் (wander lust ) உள்ளவர்களுக்கு இம்மாதிரியான எழுத்தைப் படிக்க தமிழில் வாய்ப்புகள் அதிகமில்லாத குறை எப்போதுமுண்டு.

புகழ் பெற்ற பயண வழிகாட்டி புத்தகமான ‘Lonely Planet ‘ இன் வலை தளத்தில் ‘Thorn Tree’ என்ற ஒரு அறிவிப்புபலகை ( message board) உண்டு.
http://www.lonelyplanet.com/thorntree/index.jspa
இங்கு உலகின் பல பாகங்களில் பயணம் செய்து கொண்டிருப்பவர் – அநேகமாக அனைவரும் – தங்கள் பயணக்குறிப்புகள் , அனுபவங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் அந்த நாட்டு நிலவரங்களை அங்கங்குள்ள net cafe இல் பதிவு செய்ய்துகொண்டேயிருப்பார்கள். சிலவருடங்களுக்கு முன் வரை நான் இந்த வலை தளத்தில் பழியாய்க் கிடந்து பல பதிவுகளைப்ப் படித்துக் கொண்டிருந்ததுண்டு. தற்போது இந்த தளம் படிக்க அதிகம் ஏதுமில்லாத , சுவராசியமற்ற ஒன்றகிவிட்டது. முன்பு சிலர் தொடர்ந்து மிக சுவராசியமாக எழுதி வந்தார்கள். இலங்கையில், கொழும்பில் பயணி ஒருவர் பதிவு செய்துகொண்டிருக்கும் போதே சன்னல் வழியாக எதிர் கட்டடம் குண்டுவெடிப்புக்கு ஆளானதைப் பார்த்த அதிர்சியில் அதை அப்படியே – – பதிவு செய்து கொண்டிருக்க – படித்த அனுபவம் நினைவுக்கு வருகிறது.

சொல்லப்போனால், எனக்குத்தெரிந்தவரை, இம்மாதிரியான விரிவான, முழு அனுபவங்களை கட்டுரைகளாக பயணம் செய்துகொண்டே – ஏற்க்குறைய real time இல – படிக்க யாரும் தந்ததில்லை – அதுவும் அழகான புகைப்படங்களுடன்.
புரதான சிற்பக்கலை மீது பலரின் ஆர்வத்தை தூண்டிவிட்டிருக்கிறீர்கள் என்பதும் உண்மை.
மிக்க நன்றி – – உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும்.

வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆனந்த்

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். நானும் எனது நண்பர் கோகுல் அவர்களும் http://kulambiyagam.blogspot.com என்ற வலைப்பதிவை நடத்தி வருகிறோம். தங்களின் வலைப்பதிவை கடந்த ஆறு மாதங்களாக படித்து வருகிறோம். தற்போது தாங்கள் எழுதி வரும் பயணக்கட்டுரைகளை சுவாரசியமாகவும் அதே சமயம் informative ஆகவும் உள்ளன. தங்களின் மத்திய பிரதேச கட்டுரையை படித்த பின் என் நண்பர் கோகுல் கீழ்கண்ட கருத்துக்களை எங்கள் வலைப்பதிவில் பதிவு செய்துள்ளார். இது குறித்த தங்களின் எண்ணங்களை அறிய விரும்புகிறோம்

வாசு சாமி

அன்புள்ள வாசு சாமி,

தங்கள் இணையதளத்துக்குச் சென்று அக்கட்டுரையை வாசித்தேன். நீங்கள் சொல்லியிருக்கும் விஷயங்கள் ஏறத்தாழ நானும் சொன்னவையே. வடமாநிலங்கள் ஒப்புநோக்க நம்மைவிட வளமானவை. ஆனாலும் வளர்ச்சி ஏன் இல்லை என்றால் அடிபப்டையான கல்வி இல்லை என்பதே. தமிழ்நாட்டில் காமராஜ் காலத்தில் அடிப்படைக்கல்வியில் ஒரு பெரும் புரட்சி நிகழ்ந்தது. தனியாரையும் பங்கெடுக்க வைத்துக்கொண்டு கிராமங்கள்தோறும் கல்விக்கூடங்கள் உருவாக்கப்பட்டன.இன்றைய தமிழ்நாட்டின் நடுத்தரவற்க்கம் உருவானது அக்கல்விப்புரட்சி மூலமே. நம் குடும்பங்களில் முதல்தலைமுறையினர் கல்வி பயின்றது அதன்மூலமே. அதற்கு வழிகோலிய நெ,து.சுந்தரவடிவேலு போன்ற கல்வியாளர்களை நாம் மறந்தும் விட்டோம். அந்த மனிதவளமே நம்முடைய பெரும் பலம். நாம் பெற்ற ஆங்கிலக்கல்வி நம்மை எங்கும் சென்று பிழைக்கும் தன்மை கொண்டவர்களாக ஆக்கியிருக்கிறது என்பதை இந்தியாவெங்கும் உள்ள தமிழர்களைக் கண்டு அறியமுடிகிறது. ஆனால் சராசரி வடைந்தியன் போஜ்புரி அல்லது மைதிலி தவிர பேசத்தெரியாதவனாக தன் கிராம எல்லைகளைக் கூட மீற முடியாதவனாக இருக்கிறான்.

இரண்டாவதாக அதிகமானபேருக்கு வேலையளிக்கும் பல தொழில்பிராந்தியங்கள் தமிழகத்தில் உருவாக காமராஜ் ஆட்சிக்காலத்தில் வழிகோலப்பட்டது. சிவகாசி [தீப்பெட்டி பட்டாசு] திருப்பூர் [பின்னல்] கோவை [நெசவு] ஓசூர் [உருக்கு] போன்ற பல தொழில் பிராந்தியங்கள் அப்போது உருவானவை.  வேளாண்மையிலிருந்து கணிசமான மக்களை அவை வெளியே இழுத்தன. அதன் மூலம் நம் கிராமப்புறங்களில் ஓர் அசைவை அவை உருவாக்கின.நடுத்தர வற்கம் வலுவாக உருவாக வழியமைத்தன. ஆர்.வெங்கட் ராமன் போன்றவர்களை நாம் அதற்காக நினைவுகூரவேண்டும்

மூன்றாவதாகச் சொல்லப்படவேண்டியதும் காமராஜ் ஆட்சிக்காலத்தையே. தமிழகத்தை வேளாண்மையில் அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோன மாபெரும் நீர்ப்பாசனத்திட்டங்கள் பறம்பிக்குளம்-ஆளியாறு, மேல்பவானி, அமராவதி, வைகை அணை போன்றவை கணிசமான அளவுக்கு தரிசுநிலங்களை வேளாண்மைக்குக் கொண்டுவந்தன. ஏராளமான மேய்ச்சல்நிலங்கள் விவசாய நிலங்களாக ஆகி வேளான் சமூகம் வலுவாக உருவானது.  இரு குற்றச்சாட்டுகள் வழக்கமாகச் சொல்லப்படுவதுண்டு. ஒன்று பசுமைப்புரட்சிக்கு வித்திட்ட சி.சுப்ரமணியம் தன்னுடைய கொங்கு மண்டலத்துக்கே முன்னுரிமை அளித்தார் என்பது முதல் குற்றச்சாட்டு. கடுமையான காடழிவுக்குக் காரணமாக இருந்தார் என்பது இன்னொன்று. ஆனாலும் அந்தச் சாதனை தமிழகத்தின் பொருளியல் வளர்ச்சிக்கு  வலுவான அடித்தளமிட்டது என்பதை மறுக்கமுடியாது. ஆனால் இன்று கொங்குமண்டலத்தில்கூட சி.சுப்ரமணியம் நினைக்கப்படுவதில்லை.

எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பிளஸ்டூ படிப்புமுறை தமிழகத்தின் இன்றைய வளர்ச்சிக்கும் முக்கியமான காரணம் என்று எண்ணுகிறேன். உயர்தர அறிவியல் கல்வியை சட்டென்று கிராமப்புற மாணவர்களுக்கு கொண்டுசென்றது அது. பதினைந்து வருடம் கழித்து இப்போதுதான் இது கேரளத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்தக்கல்விமுறையை ஒட்டி தமிழகத்தில் முளைத்த பல்லாயிரம் தனியார் ஆங்கிலப்பள்ளிகள் ஓர் இயக்கமாகவே ஆங்கிலக்கல்வியை பரவலாக்கினார்கள்.தமிழகத்துக்கு இந்த ஆங்கில/ அறிவியல் கல்வி ஒரு முன்னிலையை உருவாக்கியளிக்கிறது. இன்று கர்நாடகாவும் ஆந்திரமும் தமிழகத்தைப் பின்பற்றி நெருங்கி வந்துகொண்டிருக்கின்றன. பின்னால் மகாராஷ்டிரம் உள்ளது. இந்தக் கல்விமுறைக்கு நாம் அன்றைய கல்வியமைச்சர் அரங்கநாயகம், மால்கம் ஆதிசேஷய்யா மற்றும் வா.செ.குழந்தைச்சாமி போன்ற கல்வியாளர்களுக்கு கடமைபப்ட்டுள்ளோம்.

வட இந்தியாவில் உள்ள தேக்கநிலை என்பது முழுமையாகவே சமூக ,அரசியல் காரணங்களினால் ஆனது. மனிதவளம் பயன்படுத்தபடவில்லை. உள்கட்டமைப்பு மேம்படவில்லை. ஆகவே கிராமங்கள் நூற்றாண்டுக்கால தூக்கத்திலேயே உள்ளன. இதுவே என் மனப்பதிவு

ஜெ

**********

அன்புள்ள ஜெயமோகனாருக்கு, வணக்கம்.

தங்கள் தளத்தை தொடர்ந்து வாசித்து வருகிறேன். தங்கள் பயணத்தின் சக பயணியாக உணர்கிறேன். பயணத்தின் ஒரே சிறு குறை 20 நாட்கள் என்பதுதான் – தங்கள் அளவுக்கு ஓரிடத்தை ஆழமாக அனுபவிப்பதற்கு இந்த வேகம் அனுமதிக்காதோ என்று நினைக்கிறேன்.ஆனால் இதுவே தான் திட்டம் என்பதால் அதுவும் ஒரு சுவையாய்தானிருக்கிறது.

ஒரிசாவில் நான் இரண்டு மாதங்கள் இருந்திருக்கிறேன். பொதுவாக ஒரிசா என்றால் யாருக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருப்பதில்லை அங்கே என்ன இருந்துவிடப்போகிறது என்று நினைப்பது இயல்பு. நானும் அவ்வாறு நினைத்தே அங்கு சென்றேன் ஆனால் கண்டது வேறு. அளவிடற்கரிய கலைச்செல்வங்கள் நிறைந்திருக்கிறது அங்கே. கொனார்க், புபனேஸ்வர் ஆகிய இரண்டு ஊர்களில் உள்ள கோவில்கள் மெய்மறக்கச் செய்பவை.

அங்கே இன்னொரு விஷயத்தை கண்டேன். தங்களைப் பற்றியும் தங்கள் பெருமை பற்றியும் அறியாத ஒரு சமுதாயம் எவ்வளவு கீழாக சென்றுவிடுகிறது என்று. ஹிந்தி மொழிக்கு தமது மொழியையும் கலையையும் அடகு வைத்துவிட்டார்கள் அவர்கள். தன் மொழி ஒடியா என்று சொல்ல விரும்பாத இளைஞர்கள், ஹிந்தி திரைப்படம், பாடல்கள் மட்டுமே பாடும் எப்.எம் வானொலிகள் (நம்ம சன் டிவியின் எஸ் எப்.எம் தான் அந்த சீரிய பணியை அங்கேயும் முன்னின்று நடத்துகிறது!), தாஜ்மஹால் தவிர இந்திய கட்டிடக்கலைக்கு உதாரணம் கூற முடியாத கல்லூரி மாணவர்கள், ஒரிய மொழியில் பட்டிக்காட்டான்கள் மட்டுமே பேசும் நிலை என்று சகலத்திலும் மீளமுடியாத அளவு தமது அடையாளங்களை தொலைத்து விட்டனர் – கலைகளின் நிலையை கேட்கவே வேண்டாம். பழகுவதற்கு மிகச்சிறந்த மக்கள் – வெகுளிகள் அதனால் தானோ என்னவோ அவர்கள் தங்கள் கலாச்சாரம் மிகவும் கீழானது என்று நினைப்பர் போலும்.

ஒருவேளை ஹிந்தி இங்கேயும் வந்திருந்தால் நமது ஊரும் இப்படி ஆகி இருக்குமோ என்று அச்சமாயிருக்கிறது.அதுபற்றி உங்கள் அனுபவத்தை எழுதுவீர்கள் என்று நம்புகிறேன் – மற்றபடி சிற்பங்கள் பற்றியும் கலை பற்றியும் சொல்லாமல் விடுவீர்களா என்ன!

புபனேஸ்வரில் கராவேல் நகரில் (ஆங்கிலத்தில் Kharvel nagar) பிரியா ஹோட்டலில் உண்ண மறந்து விடாதீர்கள் மிகச்சுவையான தமிழக உணவு கிடைக்கும். திரும்பி வரும் போது சிலிக்கா ஏரி சென்று வாருங்கள். கட்டக்கில் மகாநதியில் குளிப்பது ஒரு இனிய அனுபவம்.

தாங்கள் இனிமேல் தான் திட்டமிடப்போகிறீர்கள் என்றால் ஒரிய சுற்றுலாத்துறையின் ஒரிசா guide என்ற புத்தகத்தை அங்கு சென்று வாங்குங்கள் (நான் ரயில் நிலையத்தில் வாங்கினேன்). மிகச்சிறப்பாக தொகுக்கப்பட்ட புத்தகம் அது. பயண திட்டத்திற்கு மிக உதவியாய் இருக்கும்.

நீங்கள் எந்த எதிர்பார்ப்பும் இன்றி ஒரிசா சிற்பங்களை பார்ப்பதற்கு இடைஞ்சலாய் இருக்கலாம் என்பதால் நான் கோவில்களையும் சிற்பங்களையும் பற்றி எழுதவில்லை. உங்கள் மொழியில் நான் ரசித்த இடங்களைக்காண ஆவலுடன் இருக்கிறேன்.

அன்புடன்
கோமேதகராஜா

அன்புள்ள கோமேதக ராஜா அவர்களுக்கு
தங்கள் கடிதம் மகிழ்ச்சி அளித்தது. தங்கள் பெயரும் பிடித்திருந்தது. தனித்தன்மை உள்ள பெயர்.
ஒரிஸாவுக்குச் சென்றபோதும் விரிவாகப் பார்க்க முடியவில்லை. முக்கியமான காரணம் நாங்கள் பயணத்திட்டத்தை மிக நெருக்கமாக வைத்திருந்தோம். மேலும் ஒரிஸாவரும்போது நண்பர்களுக்கு வீடுதிரும்பும் மனநிலைவந்துவிட்டது. பூரி, புவனேஸ்வர் கொனார்க் மட்டும் பார்த்துவிட்டு திரும்பிவிட்டோம். தங்கள் கடிதத்தில் சொல்லியிருக்கும் விஷயங்கள் உண்மை. ஒரிய மக்கள் தங்கள் தனித்துவம் குறித்த பிரக்ஞை இல்லாதவர்களாக உள்லனர். கோயில்கள் அழியவிடப்பட்டுள்ளன- கொனார்க் தவிர.
ஜெ

முந்தைய கட்டுரைஇந்தியப் பயணம் 19 ,போத் கயா
அடுத்த கட்டுரைஇந்தியப்பயணம் 20, ராஜகிருஹம், நாளந்தா