அன்புள்ள ஜெ,
வெண்முரசில், பாரதத்தின் அனைவருக்கும் தெரிந்த சுருக்கமான கதைவடிவில் இல்லாத பாத்திரங்கள் கொள்ளும் விரிவையும், கதையோட்டத்தில் அவற்றின் பங்களிப்பையும் நாம் முதற்கனலிலிருந்தே கண்டு வருகிறோம். அத்தகைய பாத்திரங்களைப் பற்றி தனியாகவே எழுதலாம். விதுரனின் தாய் சிவையின் பெயரையறிந்தவர்களே மிகக் குறைவு. அவரின் மனைவியைப் பற்றி தெரிந்தவர்கள் எத்தனை பேர் என்று தெரியவில்லை. ஆனால் மழைப்பாடலின் தனிப்புரவி நூலின் மூன்று அத்தியாயங்களும் அவரகளைப் பற்றிய துல்லியமான சித்தரிப்பை நல்கின.
அந்த அத்தியாயங்களில் வரும் இளவிதுரன் தன் மனதிற்கிணைந்த துணைவி அல்ல தனக்கு வாய்த்திருப்பது என்ற எண்ணம் கொண்டவன். அவன் விழைந்தது காவியங்கள் சொல்லும் ஓர் சக்கரவர்த்தினியை. அவன் விரும்பியது போலவே அமைந்தவள் குந்தி. குந்திக்கும் விதுரனுக்கும் உள்ள உறவென்பது காதல் என்றே பல முறை நினைத்திருந்தேன். இதுவரை நடந்த நிகழ்வுகளும் அவ்வண்ணமே காட்டியிருந்தன. ஒருவகையில் அவன் சுருதை என்ற பெயரை மனதில் ஏற்றுவதே அப்பெயர் ‘பிருதை’ என குந்தியின் பெயரை நினைவுபடுத்துவதால் தான். அதை சத்தியவதி அறிந்துவிடலாகாது என்றும் பதட்டமடைகிறான்.
அவன் சுருதையை ஓர் அடைக்கலம் வந்த ஒரு பெண்ணாக, அவளுக்காக இரங்கி வரும் பாவனையில் தான் அணுகுகிறான். அவர்கள் மண நாள் இரவில் சிவையின் அந்த அழுகைதான் அவனை உலுக்கியிருக்கும். மீண்டும் தான் யாரென்பதையும், தன் இடம் என்ன என்பதையும் அவனுக்கு உணர்த்தியிருக்கும். உண்மையில் அன்று சிவை அழுதது யாருக்காக? அவள் இழந்து விட்டதாகக் கூறுவது எதை?
சுருதையும் சிவையைப் போல ஆகியிருக்க வேண்டியவள் தான். விதுரன் நிச்சயமாக சிவையை எந்த இடத்தில் வைத்திருந்தானோ, அதே இடத்தில் தான் சுருதையையும் வைத்திருப்பான். அதைத்தான் சிவை சொல்லி அரற்றுகிறாள். ஆனால் சுருதை சிவையை அள்ளியெடுத்துச் சென்று உறங்க வைக்கிறாள். சிவை வருவதற்கு முன்பு வரை நாணமும், அச்சமுமாக இருந்தவள் அந்த தருணத்தில் விதுரனின் குடும்பத்தில் விதுரனை விட ஒரு பெரிய ஆளுமையாக உயர்கிறாள். விதுரன் மனதிலிருந்த அந்த காவியப் பெண்ணை ஓர் உலுக்கு உலுக்குகிறாள்.
இந்த இடத்தில் ஜெ, பாண்டு விதுரனுக்குக் கொடுத்த அஸ்வதத்தம் என்ற வைரத்தைப் பற்றி எழுதுகிறார். சுருதை வரும் நாள் வரையிலும் அவ்வைரத்தை எடுத்துப் பார்க்கும் விதுரன், அதன் பிறகு அவ்வைரம் அங்கு இருக்கிறது என்ற நினைப்பிலேயே மகிழ்கிறான் என்கிறார். அந்த நிகழ்ச்சி வரை அவன் மனதிலிருந்த குந்தி தான் அவ்வைரம். ஆனால் அதன் பிறகு… விதுரன் சுருதையிடம் அவள் மனம் வருந்தும் படி எதுவும் செய்ய மாட்டேன் என வாக்களிப்பதுடன் தனிப்புரவி பகுதி முடிகிறது.
அதன் பிறகு விதுரனின் தனி வாழ்க்கை எங்குமே வரவில்லை. பூநாகத்தின் முதல் அத்தியாயம் வரையிலும் கூட விதுரன் தன் சுய வாழ்வில் ஓர் ஆர்வமற்ற, கடனே என இல்லறத்தில் இருக்கும் ஒருவனாகத் தான் பார்க்கிறோம். ஆனால் விதுரனும் சுருதையும் மனமொத்தவர்களாக வாழ்ந்து வருவதைப் பார்க்கையில் மனது இன்னதென்று அறியாத ஓர் உவகை கொண்டது.
விதுரன் சுருதையைப் பார்த்த உடன் அவளின் நரையை வெட்டி விடச் சொல்கிறான். அவளின் சிரிப்பில் அவளின் இளவயது சுருதையைப் பார்க்கிறான். அவளிடம் அனைத்து அரசியல் சிக்கல்களையும் சொல்லி வழி கேட்கிறான். பேதைப் பெண்ணாக வந்த சுருதை அரசு சூழ்தலில் விதுரனுக்கே யோசனை சொல்லும் விவேகியாக பரிணமித்திருக்கிறாள். அங்கே ராணிக்குரிய விவேகத்துடன் வந்த குந்தி எளிய பேதையாக மாறிவிட்டிருக்கிறாள். முரண்நகை தான்.
விதுரனை அணு அணுவாகப் புரிந்து வைத்திருக்கிறாள் சுருதை. அவனின் குந்தி மீதான தனி பிரியத்தைக் கூட தெரிந்து வைத்திருக்கிறாள். குந்தியின் உத்தரவு ஒன்றை செல்லாக் காசாக மாற்றச் சொல்லும் இடத்தில் விதுரனின் ஓர் அரைக்கண பார்வையிலேயே தான் குந்தியின் மீதுள்ள பொறாமையால் அந்த உபாயத்தைச் சொல்லவில்லை என்கிறாள். அவளுக்குத் தெரிந்தே அந்த நாடகம் நடக்கட்டும் என்று விதுனையும் மலர்ச்சி கொள்ளச் செய்கிறாள்.
ஒரு காவியம் என்று வரும் போது அதில் வரும் பாத்திரங்கள் முழுமை பெற்றிருக்க வேண்டும், சிறிய, மிகச் சிறிய பாத்திரங்கள் கூட. அவ்வகையில் வெண்முரசில் அனைத்து சிறு பாத்திரங்களுக்கும் தெளிவான வருகையும், தெளிவான விடைபெறுதலும் என சரியான முழுமையை அளிக்க ஜெ தவறவில்லை. படகோட்டி நிருதனில் துவங்கி சுருதை வரை ஒவ்வொரு பாத்திரமும் முழுமையானவை. அவற்றை நாயக, நாயகியராக வைது தனிக் கதைகளே எழுதலாம். சுருதை பல வகையிலும் ஓர் சிறந்த பாத்திரம்.
அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம், நெதர்லாந்து
வெண்முரசு அனைத்து விவாதங்களும்
மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக