தமிழர்களுக்கு சிந்திக்கக் கற்றுக் கொடுத்த தாமசு என்ற வரைவைப் படித்தேன். 80களிலேயே திரு.தெய்வநாயகம் அவர்கள் திராவிட சமயம் இதழுடன் என்னை வந்து சந்தித்தார். அவருடைய நோக்கம் மதமாற்றம்தான் என்பதைப் புரிந்துகொண்டு அவருடன் தொடர்பை நான் ஊக்கவில்லை.
அடுத்துச் சில ஆண்டுகளில் மதுரை இறையியல் கல்லூரியிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. சங்க இலக்கியம் பற்றிய ஒரு கருத்தாடல் குறித்து என்று நினைவு. அதில் நிகழ்ச்சிக் குறிப்பில் தொல்காப்பியம் தோன்றிய காலம் கி.பி.எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் இருக்கக் கூடும் என்று ஓர் அடிக்குறிப்பு இருந்தது. நான் சென்றிருந்தேன். ″பரட்டை″ என்ற புனைபெயர் வைத்திருந்த கிறித்துவத் ″தந்தை″ தியாபலசு அப்பாவு அமர்வை நெறிப்படுத்தினார். எட்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் உள்ள சில சொற்கள் தொல்காப்பியத்தில் வருவதால் தொல்காப்பியம் அதற்குப் பின் தோன்றியிருக்கலாம் என்று ஒரு கருத்தை அவர் முன்வைத்தார். அதை மறுக்கவோ எந்த உணர்ச்சிகளையும் வெளிக்காட்டவோ இல்லை மற்றவர்கள். நான் அதே சொற்களை இன்றும் ஆவண எழுத்தர்கள் பயன்படுத்துகின்றனர் என்று சுட்டிக் காட்டி அவர்களது நோக்கத்தின் மீது ஐயம் கொண்டு கடுமையாகப் பேசினேன். அதுதான் அவர்கள் முதலும் முடிவுமாக என்னை அழைத்தது. அன்று என்னோடு கலந்து கொண்டவர்களில் பேரா.ஆ.சிவசுப்பிரமணியன், பேரா.அக்கினிபுத்திரன் – இப்போது கனல்மைந்தன், பேரா.க.ப.அறவாணன் – பின்னாள் துணைவேந்தர் ஆகியோரை நினைவிருக்கிறது. அனைவரும் இறையியல் கல்லூரியுடன் நீண்ட தொடர்புடையவர்களாகத் தோன்றினர். க.ப. அறவாணன் மிக உரிமையோடு வசதிகளைக் கேட்டுப் பெற்றார்.
அங்கிருக்கும் போது இளைஞரான ஒரு ″திருத்தந்தை″யுடன் பேசினேன். அவர்கள் அங்கு சீருடையில் இல்லை. ஏசு தன்னை சிலுவையில் அறைந்த பின் ″தந்தையே இவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்று அறியாமல் செய்கிறார்கள், அவர்களை மன்னித்தருளுங்கள்″ என்று கூறியதாக வரும் புதிய ஏற்பாட்டை எழுதியவர் அந்த நேரத்தில் ஏசுவுடன் இருந்தவரில்லை. அவரிடம் அப்போது இருந்தவர் இன்னொருவர். அவர் எழுதிய புதிய ஏற்பாட்டில் இந்தக் கூற்று இல்லை. இந்தக் கூற்று எப்படி உண்மையாக இருக்கும் என்று நான் கேட்ட போது புதிய ஏற்பாட்டை எழுதியவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கண்ணோட்டத்தைக் கொண்டவர்கள் என்று கூறி ஒப்பேற்றினர். நல்ல திறமையானவர்களைப் பொறுக்கி நன்றாகப் பயிற்றுவித்திருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.
1996இல் நாகர்கோவிலில் அலெக்சந்திரா அச்சகச் சாலையில் இருந்து மனித நேய மன்றம் என்ற அமைப்பின் பெயரில் கொடிக்கால் சேக் அப்துல்லா என்பவர் தொலைபேசியில் பேசினார். அதன்படி ″தமிழகத்தில் ஆரியமும் வகுப்புவாதமும்″ என்ற பொருள் பற்றிப் பேச அழைத்தனர். றா.சோகன்னா என்பவர் மடல் எழுதினார். பேரா.வே.தி.செல்லம் தலைமை. 24-3-96 அன்று கிறித்துவக் கல்லூரிச் சாலையும் தொலை பேசி நிலையத்திலிருந்து நகரவை அலுவலகம் செல்லும் சந்தும் சந்திக்கும் இடத்தில் தெற்கே கிழக்குப் பக்கம் இருக்கும் ஒரு கட்டட மாடியில் நிகழ்ச்சி நடந்தது.
″வரலாற்றில் ஆரிய இனம் என்ற ஒன்று இடம் பெற்றிருப்பது தவறானது. வேதங்களும் தொன்மங்களும் தமிழர்களுக்குரியவை. சாதிகளை உருவாக்கியவர்களும் தமிழர்களே. கற்பனையான ஆரியர்கள் மீது பழியைப் போட்டு நாம் தப்பித்துக் கொள்ள முடியாது. சாதிச் சிக்கலுக்கு நாம்தான் தீர்வு காண வேண்டும்″ என்று நான் பேசினேன். எடுத்துக்கொண்ட தலைப்பில் நான் பேசவில்லை என்று கூச்சல் போட்டார்கள். ஆரியம் பற்றிப் பேசச் சொன்னீர்கள் பேசினேன், வகுப்புவாதம் பற்றிப் பேசச் சொன்னீர்கள் பேசினேன்; வகுப்புவாதம் என்பது மதம் குறித்ததாக இருக்கலாம், சாதி குறித்ததாக இருக்கலாம், அல்லது பொருளியல் வகுப்புகள் குறித்தாக இருக்கலாம்; நான் சாதிகளை எடுத்துக்கொண்டு பேசினேன்; நீங்கள் நினைப்பதையே பேசவேண்டுமென்ற கட்டாயம் எனக்கில்லை என்று நான் கூறினேன். கூச்சல் குழப்பத்துடன் நிகழ்ச்சி முடிந்தது. அழைத்தவர்கள் ஒரு தேநீர் கூட எனக்குக் கொடுக்கவில்லை. இவர்களின் நோக்கமும் மதமாற்றம்தான்.
தமிழார்வலர்கள், தமிழ்த் தேசியர்கள் எனப்படுவோரின் அழைப்புகளுக்குச் சென்று பேசும்போது என் கருத்துகளை கூறத் தொடங்கியவுடனேயே சீட்டு வரும். என்னைப் பேசவிடவில்லை என்பதைக் கூட்டத்தாருக்குப் புரிய வைத்துவிட்டு இறங்குவேன்.
ஆக, இறையியல் கல்லூரியில் நடைபெற்ற அந்நிகழ்ச்சி ஒரு நீண்டகாலத் திட்டத்தின் முதல் அடி என்று தெரிகிறது.
நண்பர் செயமோகன் கட்டுரையில் என் பெயரும் இடம் பெற்றுள்ளதால் இச்செய்திகளை இங்கு குறிப்பிடுகிறேன்.
இனி கட்டுரை குறிப்பிடும் கிறித்துவத்தினுள் நுழைவோம்.
1970களில் ஐரோப்பாவிலுள்ள மிகப் பெரும்பாலான கன்னெய் வழங்கு நிலைகளும்(Petrol Bunks) அரேபியர்களின் கைகளில் இருந்தன. அங்கு வருவோருக்கு குரானின் மொழிபெயர்ப்புகளை வழங்கினர். அது 14கோடி எண்ணிக்கை என்று படித்த நினைவு. பொதுவாக குரானை மொழிபெயர்க்க வேதிய(வைதிக) முகம்மதியம் இசைவதில்லை. அகமதியா என்ற பிரிவினர் அதைச் செய்கின்றனர். அகமதியாப் பிரிவை வேதிய முகம்மதியர் ஏற்றுக்கொள்வதில்லை அகமதியாப் பிரிவினர்களது விளக்கம் என்னவென்றால் இறைவன் முதலில் அருளிய திருச்செய்தி அவரே விடுத்த பெருவெள்ளத்தில் அழிந்துவிட்டது. அதை நினைவில் வைத்திருந்தவர்கள் கூறியதுதான் எழுதி வைக்கப்பட்டுள்ளது, அதுவும் கிரேக்க மொழியில். இறைவன் கூறிய மூலமொழியான அராமியத்தில் அதன் மூல வடிவில் அது இல்லை. எனவே ஆண்டவன் இன்னொரு முறை முகம்மது நபிக்கு திருவாக்கருளினார். எழுதப் படிக்கத் தெரியாத நபி அவர்கள் அதைச் சொல்ல பிறர் எழுதி வைத்தனர் என்ற விளக்கத்தை இந்த அகமதியா குழுவினர் கூறுகின்றனர். ஏற்கனவே ஒரு முறை கடவுள் திருவாக்கருளியதை மீண்டும் ஒருமுறை முகம்மது நபிக்கு திருவாக்கு அருளியது ஏன் என்பதற்கான விடை இது.
இதற்கு மறுமொழி என்ன? சாக்கடல் சுவடிகள் (Dead Sea Scrolls) என்ற நூல் இதற்கு விடை தருகிறது. சோர்தான் ஆற்றின் கரையில் குன்றுகள் நிறைந்த பகுதியில் ஒரு குன்றில் ஓர் ஆள் உள் நுழையும் அளவுக்கு ஓட்டை, நிலமட்டத்திலிருந்து ஓர் ஆளளவு உயரத்தில். உள்ளே நுழைந்தால் சிறிது சிறிதாக அகன்று உள்ளே பரந்து விரிந்த ஒரு குகை உள்ளது. ஆடுமேய்க்கும் சிறுவர்கள் அதனுள் நுழைந்து கொள்கலன்கள் முதலிய பயன்பாட்டுப் பொருட்களை எடுத்து வருவார்களாம். இதைக் கண்ட தொல்லாய்வாளர்கள் உள்ளே நுழைந்து பார்த்தபோது அது ஒரு புத்த மடம் என்று கண்டார்களாம். அங்கே ஏசுவின் உடலைச் சுற்றி வைத்திருந்த துணியைக் கண்டனராம். அதில் அவரது திருவுருவத் தோற்றம் பதிந்திருந்ததாம். இந்தத் துணியைப் பற்றி ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன் தாளிகைகளில் செய்திகள் வந்தன. ஏசு இளமைக் காலத்தில் சில ஆண்டுகள் காணாமல் போயிருப்பார். அவர் இங்குதான் தங்கி இருந்தார் என்று தொல்லியலாளர்கள் முடிவு செய்தனர்.
அந்த மடத்துக்குள் துணிகளில் எழுதிய பழைய ஏற்பாட்டைக் கண்டெடுத்தனராம். அது அராமிய மொழியில் இருந்ததாம். அதில் இருந்தவற்றையும் இப்போதைய பழைய ஏற்பாட்டில் இருப்பவற்றையும் ஒப்புக்காட்டி நடப்பில் இருக்கும் பழைய ஏற்பாட்டில் பிழை ஏதுமில்லை என்று நிறுவ முயன்றுள்ளது அந்த நூல். ஆண்டவர் செய்ததாக முகம்மதியர்கள் முன்வைக்கும் மிகப் பெரிய ″பிழைதிருத்தம்″ இதுதான். அதாவது பழைய ஏற்பாட்டின்படி கடவுள் மரணமில்லாதவனாக மனிதனைப் படைத்தார். ஆனால் சாத்தன் அறிவுக் கனியைக் காட்டி மனிதனை உண்ணவைத்து அவனை மரணம் அடைபவனாக ஆக்கிவிட்டான். இந்த வகையில் கடவுள் பேயன் எனக் கிறித்துவத்தில் பொருள்படும் சாத்தனிடம் தோற்றுப் போனார் என்றாகிறதல்லவா? இதை மறுத்துத்தான் கடவுள் ″பிழை திருத்தி″ முகம்மது நபியிடம் திருவாக்கு அருளுகிறார், தான் மனிதனை மரணம் அடைபவனாகவே படைத்ததாக, அதாவது தான் பேயனிடம் தோற்கவில்லை என்று.
ஆக, எந்த புத்தம் தமிழர்களிடம் வளர்ச்சியுறாத, செயமோகன் குறிப்புப்படி பண்டிதர் தேவகலா கூறியுள்ள தமிழர்களின் ஆன்மவியலை அழித்த, கடவுளை உணரக்கூடிய ஞானம் இல்லாத, புத்தர்களிடம் இருந்துதான் தன் கொள்கைகளை ஏசு வடித்துக்கொண்டார் என்று சாக்கடல் சுவடிகள் கூறுகிறது.
மேற்கின் வரலாற்றிலும் புனைவு இலக்கியங்களிலும் கிழக்கின் ″ஆன்மவியல்″ ஆற்றியுள்ள பங்கு பற்றிய மேற்கத்திய பதிவுகள் முகாமையானவை. எகிப்திலிருந்து துரத்தப்பட்ட மோசே ″கிழக்கே″ சென்றுதான் தன் ″ஞானத்தை″ வளர்த்துத் தம் ″மக்களை″ மீட்க வந்தார் என்று பழைய ஏற்பாடு கூறுகிறது. ஏசு கிழக்கில் உள்ள புத்த மடத்திலிருந்துதான் தன்னுடைய ஞானத்தைப் பெற்றார் என்று சாக்கடல் சுவடிகள் குறிக்கிறது.
19 ஆம் நூற்றாண்டில் மேரி கரொல்லி என்ற இத்தாலியப் பெண் எழுத்தாளர் எழுதி ஆங்கிலத்தில் Vendetta(பழிக்குப்பழி) என்ற பெயரில் பெயர்க்கப்பட்ட புதினத்தின் கதைத் தலைவன் தனக்கு இரண்டகம் செய்த மனைவியையும் நண்பனையும் பழி வாங்குவதற்காகக் ″கிழக்கி″ல் சென்று மந்திரம், தந்திரம், மருத்துவம் கற்று வந்தான் என்று கூறப்பட்டுள்ளது. அதே போல் அலெக்சாண்டர் டூமா என்ற புகழ் பெற்ற பிரெஞ்சு புதின ஆசிரியர் எழுதிய Count – de- mont cristo(மாண்டு கிரித்தோவின் மன்னன்) புதினத்தின் கதைத் தலைவனும் தனக்குத் தீங்கிழைத்தவர்களைப் பழிவாங்குவதற்காகக் ″கிழக்கே″தான் செல்கிறான் மந்திரம், தந்திரம், மருத்துவம் கற்க. ஆக, மோசேயும் ஏசுவும் இந்தியர்களிடமிருந்து கற்ற மந்திரம், தந்திரம் போன்றவற்றை வைத்து இறும்பூதுகள்(அற்புதங்கள்) செய்து காட்டித்தான் இன்று கடவுள் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இராமலிங்க அடிகளார் வெண்கலத்தைத் தங்கமாக்கிக் காட்டி அதனைக் கிணற்றில் வீசிவிட்டு, அது வெறும் மாயை என்றாராம். அதாவது அது வெறும் செப்பிடு வித்தை அதாவது குறளி வித்தை. தெருவில் செய்து காட்டி நாம் வீசும் காசை வைத்து வயிறு வளர்க்கிறானே அதேதான். வள்ளலார் செய்ததும் அதுதான், இரமண ″மகரிசி″ செய்ததும் அதுதான். புட்டபிருத்தி சாயிபாபா செய்வது அதுகூட இல்லை, வெறும் கண்கட்டி வித்தை, அதாவது ″கைவேலை″, அதாவது தந்திரம்.
நமக்குத் தெரிய மோசேயோ ஏசுவோ அரிட்டாட்டில் போன்று மெய்யியல்(தத்துவம்) எதையும் கூறியதாகத் தெரியவில்லை. மோசே இறைவனின் ஆணைகளைச் சொல்லி மிரட்டுவார், கேட்காதவர் ஐயத்துக்குரிய வகையில் மாண்டு போவார். மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளைப் சட்ட வடிவில் வழங்கியுள்ளார். தொன்ம வடிவில் ஒரு வரலாற்றை எழுதியுள்ளனர். எகிப்து அரண்மனை நூலகத்தில் தான் படித்த நூல்களிலிருந்து அறிந்துகொண்டவற்றை வைத்து அவர் எழுதினார் என்று எரிக் வான் டெக்னிக்கன்(Eric Von Denicken) கூறுவார். ஏசு நிறைய கதை கூறியுள்ளார். அவற்றில் அவரது கோட்பாடுகள் மறைந்துள்ளன. இப்படிப்பட்ட ஒரு சூழலில் இருந்து வந்த தோமா, பெரும் கல்வியோ, மெய்யியல் சிந்தனையோ இல்லாத தோமா தன் வெற்று டப்பாவிலிருந்து நீர் ஊற்றித் தமிழர்களை ஆன்மவியலில் குளிப்பாட்டித் தூய்மை செய்தார் என்று சொல்வதற்கு நிறைய துணிவு வேண்டும், பாராட்டலாம். நெஞ்சழுத்தம், கொழுப்பு என்ற சொற்களை நாகரிகம் கருதித் தவிர்க்கிறோம்.
இடைச் சொருகலாக ஒரு செய்தி; என் தந்தை இளமையில் நண்பர்களோடு மருத்துவாழ் மலைக்குச் சென்றிருந்தாராம். அங்கும் நாம் மேலே கூறியது போல மலையில் ஓர் ஓட்டை இருந்ததாம். அவர் அதனுள் ஏறி நுழைந்தாராம். உள்ளே செல்லச் செல்ல ஓட்டை அகன்றதாம். அதற்குள் வெளியே இருந்த அவரது நண்பர்கள் அவரது காலைப் பிடித்து இழுத்து வெளியேற்றி விட்டனராம். நான் சிறுவனாக இருந்த போது அவர் எனக்குச் சொன்ன செய்தி இது. இப்போதும் மருத்துவாழ் மலையில் குகைகளுக்குள் சித்தர்கள் சாவில்லாத, பசி இல்லாத வாழ்வைத் தரும் பச்சிலைக்களை உண்டு வாழ்கின்றனர் என்று சிலருக்கு நம்பிக்கை உள்ளதே. இன்றிருக்கும் வசதிகளைப் பயன்படுத்தி அத்தகைய ஓட்டைகளுக்குள் மின்விளக்கையும் புகைப்படக் கருவியையும் செலுத்தி உள்ளே என்னதான் இருக்கிறது என்று பார்த்தால் என்ன?
சமணத்தையும் கொஞ்சம் பார்த்துவிடுவோம். அம்மணமாக ஊர் நடுவே சுற்றித் திரிந்த அநாகரிகர்களும் தங்கள் மயிரைத் தாங்களே பிடுங்கிக்கொண்ட மனநோயாளிகளுமான சமணர்களும்தாம் தமிழர்களுக்கு நாகரிகம் சொல்லித் தந்தார்கள் என்று ஐராவதம் மகாதேவன்களும் க.ப.அறவாணன், தொ.பரமசிவம் உட்பட இந்தியப் பல்கலைக் கழகக் கட்டமைப்பு மட்டுமல்ல இந்தியப் பனியா அரசும் நிறுவியே தீர்வது என்று வரிந்துகட்டிக்கொண்டு களத்திலுள்ளனர். அதற்காக அவர்கள் எதையும் செய்யத் துணிந்து நிற்கின்றனர். அந்த ஒரே நோக்கத்துடன் இந்திய வரலாற்றை ஆரியர் நுழைவு என்ற புனைகதைக்கேற்ப, கி.மு.2500க்கு அப்பாலும் தமிழக வரலாற்றை மகாவீரர் காலத்துக்குப் பின்னால் வருமாறு கி.மு.400க்கு அப்பாலும் போகவிடாமல் தடுத்துப் பார்க்கின்றனர். வெளிநாட்டு, உள்நாட்டுக் கழுகுகளுக்கும் வல்லூறுகளுக்கும் ஓநாய்களுக்கும் இன்று தமிழகமே ஒரே இலக்கு. இந்த உண்மையைப் புரிந்துகொண்டு வீணான தப்பெண்ணங்களையும் கவைக்குதவாத கற்பனைகளையும் உண்மை எனும் எரியும் நெருப்பில் வீசிச் சுட்டெரித்துவிட்டு அந்தக் கழுகுகளையும் வல்லூறுகளையும் ஓநாய்களையும் அடித்துத் துரத்தித் தமிழகத்தை மீட்க உண்மை நாட்டமும் தமிகத்தின் மீதும் தமிழ் மீதும் தமிழக மக்கள் மீதும் அன்பும் கொண்ட தோழர்களை அறைகூவி அழைக்க வேண்டிய காலம் இது.
இப்பொழுது நாம் நண்பர் செயமோகனிடம் கொஞ்சம் பேச வேண்டும். இந்திய ஆன்மவியலையும் மெய்யியல்களையும் பற்றி அவர் மிக அழுத்தமாகப் பேசுகிறார். மெய்யியல்கள் எனப்படுபவை, அதை முன்வைத்தவர்கள் காலத்துக் குமுக நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்காக அச்சூழலுக்கு ஏற்றவாறு இயற்கை, குமுகம், மனித சிந்தனை, கடவுள் ஆகியவை பற்றிய ஒரு விளக்கமாகும். எடுத்துக்காட்டாக பத்தி இயக்கக் காலத்தில் சிவன் தன்னை அங்கிருந்து அழைத்தான் இங்கிருந்து அழைத்தான் என்று கோயில்களை நிறுவி அங்கெல்லாம் எந்த சாதியினராக இருந்தாலும் பூசாரி ஆக்கி சிவப் பார்ப்பனர்களை உருவாக்கி மக்களையும் ஒருங்கிணைத்து புத்த, சமண சமயங்களால் பார்ப்பனியத்துக்கு வந்த அறைகூவலை எதிர்கொண்டாயிற்று. இறைவன் மெய்யியலுக்கு அடங்காதவன், அவனைத் தஞ்சமடைவதே அடியவனுக்கு உய்தி என்பது போல் அரசனது அதிகாரத்தைக் கேள்வி கேட்க முடியாது அவனுக்கு அடிபணிவதே நல்வாழ்வுக்கு வழி என்று ஆட்சியாளர்களின் துணையையும் பெற்றாயிற்று. இப்போது இந்த எழுச்சியில் மங்கிக் கிடந்த பழைய பார்ப்பனர்களை மீட்பிக்க வேண்டுமே. வந்தார் சங்கரர். ஞானம்தான் உய்திக்கு வழி, வேள்விப் பார்ப்பனர்கள்தான் உண்மையில் உயர்ந்தவர்கள் என்று சுமார்த்தப் பார்ப்பானை சிவப் பார்ப்பானுக்கும் மாலியப் பார்ப்பானுக்கும் மேலே தூக்கி வைத்துவிட்டுப் போய்விட்டார்.
எல்லோரும் ஒரே வகையான உயிராதன்களால் ஆனவர்கள். ஆனால் மனிதர்களிடையில் உள்ள வேறுபாடுகள் வெறும் மாயை, உருவெளித்தோற்றம். அதனால் சாதி, வருண வேறுபாடுகளைப் பற்றிக் கவலைகொள்ள வேண்டியதில்லை என்று சமத்துவமும் கூறி அதே சங்கரர் சாதியத்தையும் நிலைநிறுத்தியாயிற்று. இதுதானய்யா மெய்யியலில் உள்ள அரசியல். சங்கரரின் இந்த நுட்பத்தை அறியாமல் அல்லது அறிந்தும் அறியாதது போல் நடித்து சங்கரர் சாதிகளின் சமத்துவம் பேசினார் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள.
சான்றுக்கு இன்னொன்று:
கோயில் நிலங்களில் பயிரிட்டு வந்த உழுகுடிகளான பள்ளர்களும் பறையர்களும் வாரம் அளப்பதை நிறுத்தி நிலங்களைத் தங்கள் சொந்தமாக்கி இருந்தனர், 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்தது போல். மண்ணங்கட்டி, பரட்டை, பிச்சை என்று பெயர் வைக்க உரிமையானவர்களைத் தலைவன் தலைவியாக்கி தலைவனுக்கு அவ்வூர் தெய்வத்தின் பெயரையும் தலைவிக்கு அம்மனின் பெயரையும் வைத்து பள்ளுப் பாடல்களைப் பாடி கோயிலுக்கு வாரம் அளக்கும் சிறப்பை அழகுறப் பாடியும் பார்த்தனர். காரியம் ஒன்றும் நடக்கவில்லை. அவர்களை வழிக்குக் கொண்டுவர இராமானுசர் அவர்களுக்குத் திருக்குலத்தார் என்று பெயர் வைத்தார்(காந்தி வைத்த அரிசனங்கள் என்பதும் மும்மதியத்தில் லெப்பை என்பதும் இதே பொருள் கொண்டவைதாம் என்பதைக் கவனிக்க). அவர்களுக்கு சமற்கிருதமும் வேதங்களும் கற்பித்தார். பூணூல் கட்டி கோயில் கருவறைக்குள் நுழைய வைத்துப் பூசகர்களாக்கினார். நிலங்கள் மீண்டும் கோயில்களின் கட்டுப்பாட்டில் வந்தன.
இராமானுசரின் கோட்பாட்டுக்குப் பூனைக் கோட்பாடு என்று பெயர். பூனை தன் குட்டியைத் தூக்கிச் சென்று பாதுகாப்பது போல் இறைவன் உண்மையான அடியவரை அணைத்துக் கொள்வான் என்பது. எவனொருவன் இறைவன் மீது அன்பு செலுத்துகிறானோ அவனை இறைவன் சாதி வேறுபாடின்றித் தன்னுடன் சேர்த்துக்கொள்வான் என்பது அவரது நெறி.
கோயில்களுக்கு வந்த சிக்கல் தீர்ந்தது. அடுத்து வேதாந்த தேசிகர் வந்தார். அவர் ஒரு குரங்குக் கோட்பாட்டை முன்வைத்தார். குரங்குக் குட்டி தாயை இறுகப் பற்றிக்கொள்வது போல் அடியவர் இறைவனைப் பற்றிக்கொள்ள வேண்டும். எந்த சாதியைச் சேர்ந்த அடியவரையும் பார்ப்பனனாகப் பிறப்பித்தே இறைவன் தன்னிடம் சேர்த்துக்கொள்வார் என்றார். இவர் வடித்த கோட்பாட்டின்படி பழைய பார்ப்பனர் வடகலை. புதிய பார்ப்பனர்கள் தென்கலை.
இன்னும் ஒன்று, இருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்தது:
சிவன் கோயில் சொத்தை ஏமாற்றி உண்பவரது குலமே அழிந்துபோகும் என்று மாலியர்கள் ஒரு பரப்பல் நிகழ்த்தினர். அத்துடன் தன்மான இயக்கத்தின் கடவுள் மீதான தாக்குதல் வேறு. இதை எதிர்கொள்ள ஊரெல்லாம் சைவ சபைகளை வலுவாக்கினர் சிவனிய வேளாளர்கள். புலால் உண்ணாதவர் அனைவருமே சிவனியர்தாம் என்று எல்லாச் சாதியினரையும் இழுத்துப்போட்டுக் கொண்டனர். அப்புறம் தன்மான இயக்கம் தளர்வுற்றது. ஒதுக்கீடு போன்ற சூழ்நிலைகளால் பார்ப்பனர்களுடன் வேளாளர்களின் உறவு நெருக்கமானது. அதாவது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அச்சுறுத்திய நெருக்கடி விலகிப்போய்விட்டது. இப்போது திடீரென்று 1980களில் மரபுவழியில் புலால் உண்ணாதவரே உண்மையான சிவனியர் என்று அந்தத் தலைமுறையில் புலால் உண்ணாதவர்களாயிருந்து உறுப்பினர்களானவர்களை வெளியேற்றினர். வெளியேறியவர்கள் சைவ சித்தாந்த சபை என்று தொடங்கினர். ஆனால் அது நிலைக்கவில்லை. தேவை நிறைவேறிவிட்டதால் சைவ சபையும் முன்போல் ஊக்கமாகச் செயற்படவில்லை.
இனி தமிழர்கள் குமரிக் கண்டத்தில் வடித்த மெய்யியலைப் பார்ப்போம். அதுதான் மூல புத்தக் கோட்பாடு. புத்தம் என்றால் புதியது என்று பொருள்படும். அறிவு ஒவ்வொன்றும் புதியதுதானே. அதனால் அறிவு புத்தம் என்றும் புத்தி என்றும் கூறப்படும். புத்தனை அறிவன் என்கிறோம்.
மூலப் புத்த மெய்யியல் மார்க்சிய இயங்கியலை ஒத்தது.
1. இயற்கை, மனிதன் என்ற அனைத்தும் அழியத் தக்கது – மாயத்தக்கது அதனால் மாயை எனப்படும். அது பொய்த் தோற்றமல்ல, மாற்றம். மாற்றம் என்பது ஒன்று அழிந்து இன்னொன்று தோன்றுவது. இடைவிடாத மாற்றம் எப்போதும் நிகழ்கிறது.
2. ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. அதை வினைப்பயன் என்கிறோம். முன்பு செய்த செயல்களுக்கான விளைவுகளைப் பின்னால் நுகர வேண்டும். எனவே சரியான செயல்களை, அதாவது தீய விளைவுகளைத் தராத, நல்ல விளைவுகளையே தரும் செயல்களைச் செய்ய வேண்டும்.
3. நாம் விரும்பும் விளைவுகளை எய்த வேண்டுமென்றால் சரி எது, தவறு எது என்று புரிந்து கொண்டு அதைச் செய்ய வேண்டும். அவ்வாறு புரிந்து கொள்ளுவதற்கான கோட்பாடு அறிதல் கோட்பாடாகும். அறிதல் என்பது ஐம்பூதங்கள், ஐம்பொறிகள், ஐம்புலன்கள் வழியாக அறியப்பட்டு மனதில் பகுத்தாயப்பட்டு உய்ததறிவையும் பயன்படுத்தி உண்மைகளை அடைவது; உண்மைகளைப் பிழை இல்லாமல் அடைய விருப்பு, வெறுப்பு, ஐயம், திரிபு ஆகியவற்றை அகற்ற வேண்டும் என்பனவாகும்.
4. ஆன்மா என்ற ஒன்று கிடையாது.
கெளதம புத்தருக்கும் இந்த மெய்யியலுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தோன்றவில்லை. ஆசையை ஒழிக்க வேண்டும் என்ற பெயரில் திருவோட்டை எடுத்து சங்க உறுப்பினர்கள் கையில் கொடுத்து இரத்தலே ஒரு மதிப்பு மிக்க செயல்பாடு என்ற இழிந்த கருத்தியலை உருவாக்கியவர் கெளதம புத்தர் என்பது எம் கருத்து. பாரதியார் கூட அவ்வாறே கருதியதாகத் தெரிகிறது.
புத்தத்தின் வினை – விளைவுக் கோட்பாடு தனி மனிதர்களுக்கு எப்போதும் பொருந்தும் என்று கூற முடியாது. ஒருவர் செய்வதன் விளைவு இன்னொருவருக்கும் சென்று சேரக்கூடும். ஏற்றத்தாழ்வுள்ள ஒரு குமுகத்தில் கீழ் நிலையிலுள்ளோரது உழைப்பின் பயன் மேல்நிலையில் உள்ளோரை அடையும். மேல் நிலையில் உள்ளோரின் கொடுஞ்செயல்களின் விளைவுகள் கீழ் நிலையில் உள்ளோரை அடையும். அதே வேளையில் ஒட்டுமொத்தமான நற்செயல்கள் அல்லது தவறுகளுக்கான விளைவுகள் வரும் தலைமுறைகளைச் சென்றடையும், இன்றைய புவி வெப்பமாதல் போல். இங்கு ஆன்மா தேவையில்லை. வரும் தலைமுறைகள் இப்போதைய மனிதர்களின் மறுபிறவிதானே! அவர்கள் வானத்திலிருந்து குதித்துவிடவில்லையே! முன் தலைமுறையினரின் உயிரின், உடலின் தொடர்ச்சிதானே!
புத்தத்தைத் தொடர்ந்து வந்த கபிலனின் சாங்கிய மெய்யியல் ஒரு பேராதனையும்(பரமான்மா) எண்ணற்ற ஆதன்களையும் படைத்தது. ஆதன்கள் ஐம்பூதங்களால் கவரப்பட்டு உயிர்களாகின்றன. அவற்றின் வினைகளாகிய செயல்களால் ஆதன்கள் கறைப்படுகின்றன. அக்கறையைப் போக்கிக்கொள்ள அவை மீண்டும் மீண்டும் பிறக்கின்றன. நன்மை செய்தாலும் தீமைசெய்தாலும் மறுபிறவி தவிர்க்க முடியாது. தவிர்க்க வேண்டுமாயின் உணர்வு, உணர்ச்சியற்ற மனிதப் பிறவியாகப் பிறக்க வேண்டும். தப்பளையன், பித்துக்குளி என்றெல்லாம் கூறுகிறோமே அவர்கள்தாம் கறைகள் நீங்கிப் பேராதனை அடையத்தக்க மிக உயர்ந்த பிறவிகள். இந்த பித்தர் நிலையைப் பயிற்சியாலும் எய்த முடியும். அதற்கு யோகம் என்று பெயர். ஏதோவொன்றின் மீது, கடவுள் என்று வைத்துக் கொள்ளுங்களேன், கவனத்தை ஒருமுகப்படுத்தினால் செயலற்ற நிலையை நீங்கள் எய்த முடியும். அதன் மூலம் நீங்கள் கடவுள் நிலைக்கு உயர்ந்துவிடலாம் என்று கூறுகிறது சாங்கிய மெய்யியல். ″இந்து″ சமயத்தின் சாபக்கேடான வருண அமைப்புக்கு வழிகோலியவன் இந்தக் கபிலனே. நான்கு நிறங்கள் உள்ளவர்களாக மக்களின் வாழ்நிலைக்கேற்ப அமைந்த உடல் நிறங்களைக் கொண்டு மனிதர்களை வகுத்தவன் அவனே.
அவனைத் தொடர்ந்தவன் பதஞ்சலி. யோக சூத்திரம் என்ற நூலை யாத்து பல்வேறு வகையான யோகப் பயிற்சிகளையும் தன்னிலை மறப்பு அல்லது மெய்ம்மறைப்புகளையும் வகுத்தளித்தான். மெய்ம்மறப்புகளுக்கு எளிய வழி ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு உங்கள் மூச்சை மட்டும் கவனமாக எண்ணுங்கள் போதும். உண்மையில் மெய்ம்மறப்புப் பயிற்சி கடினமானது. இதற்கு மூல ஆசிரியர்கள் கபிலனோ பதஞ்சலியோ அல்லர். உண்மையில் மூலக் குடிகளின் பூசாரிகளும் குழுத் தலைவர்களுமான சாமன்களே இவர்கள். இவர்கள் மெய்ம்மறப்பை எய்த கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டனர். நம் தொன்மங்களில் கூறப்படும் முனிவர்கள் தவம் இயற்றுவதற்கு மேற்கொண்டவையாகக் கூறப்படும் வழிமுறைகள் இந்தச் சாமன்கள் கடைப்பிடித்தவையே. உண்மையில் இந்தச் சாமன்கள்தாம் அந்த முனிவர்கள். உயிர் பிரிவது போன்ற கடும்பயிற்சிக்குப் பின் ஒரு சாமனுக்குரிய தகுதிகளைப் பெற்று மீள்வது மறுபிறப்பு போன்றது என்று மாந்தநூலார் கூறுகின்றனர். பார்ப்பனர்களை இருபிறப்பாளர் என்று கூறுவது இந்த சாமன்களின் எய்தல்களை அடையாமலே அவர்கள் செய்த ஓர் ஏமாற்றாகும்.
இந்தப் பயிற்சிகளின் விளைவாக அவர்கள் பிற மனிதர்களின் உள்மனதில் தங்கள் உள்மனதை ஊடுருவி அவர்களது சிந்தனைகளையும் செயல்களையும் தம் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.
இப்னாட்டிசம் எனப்படும் மெய்ம்மறப்பியத்தைப் பயன்படுத்தி அவர்களது நோய்களைக் குணப்படுத்தவும் முடியும். நோய்களையோ வேறு தீங்குகளையோ உண்டாக்கவும் முடியும். உண்மையான மருத்துவமும் அவர்கள் கற்றிருந்தார்கள். நாம் கூறும் சித்தர்கள் போன்றவர்கள் இவர்கள் என்று கூறலாம். அவர்களைக் கண்டு மக்கள் அஞ்சி கட்டுப்பட்டு இருந்தார்கள். இவர்களைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொண்டால் நம் தொன்மங்களில் புதைந்து கிடக்கும் எண்ணற்ற வரலாற்றுச் சுவடுகளைத் தோண்டி எடுக்க முடியும்.
கழக(சங்க)ப் பாடல் ஒன்றில் ″பாணர், துடியர், பறையர், கடம்பர் அன்றி வேறு குடிகள் இல்லை″ என்று வருகிறது. குமரிக்கண்ட மக்கள் இன்றைய தமிழகத்தில் குடியேறிய போது இங்கு இருந்த நான்கு வகை மக்களின் தலைவர்களாகிய சாமன் பூசாரிகளே இவர்கள். சாமன்களின் ஓர் அடையாளம் அவர்களிடம் ஓர் இசைக் கருவி இருப்பதுதான். தாங்கள் மெய்ம்மறக்கவும் எதிராளியை மெய்ம்மறக்கச் செய்யவும் இந்த இசைக்கருவிகள் பயன்படுகின்றன. இன்றும் குறி சொல்வோரும் குறளிவித்தை செய்வோரும் உடுக்கு, மேளம் போன்றவற்றைப் பயன்படுத்துவதைக் காணலாம். இங்கு யாழ், துடி(உடுக்கை), பறை முதலியவற்றை இனம்காண முடிகிறது. கடம்பர்களின் இசைக் கருவி யாதென்று தெரியவில்லை.
இப்படிப்பட்டவர்களிடம் இருந்து மெய்ம்மறைப்புக் கலையைக் கற்றுக்கொண்ட மோசேயும் ஏசுவும் மேற்குலகில் கடவுள்களாகப் பிறப்பெடுத்துள்ளார்கள் என்பது உறுதி. சாமன்களைப் பற்றிய செய்திகளுக்கு Masks of Gods vol.I, Primitive mythology by Joseph Campbell என்ற நூலைப் படிக்கலாம்.
இவ்வாறு ஒரு முழுமையான ஒட்டுண்ணி மெய்யியலை உருவாக்கிய கபிலனைப் பின்பற்றி, மனம் ஒருநிலைப்படுவதற்கு,
சிவனை வைத்துக் கொண்டால் அது சிவனியம்
மாலை வைத்துக் கொண்டால் அது மாலியம்
சத்தியைக் வைத்துக் கொண்டால் அது சாத்தம்
குமரனை வைத்துக்கொண்டால் அது குமாரம்
பிள்ளையாரை வைத்துக்கொண்டால் அது கணபதியம்
பேய்களை வைத்துக் கொண்டால் அது பைசாசம்
தனி மனிதர்களைச் சார்ந்ததாக புத்தத்தை விளக்கிய போது ஆன்மாவும் மறுபிறப்பும் இல்லாமல் விளக்க முடியாமல் போனதால் புத்தர் 500க்கு மேல் பிறவிகள் எடுத்து உழல வேண்டியதாயிற்று.
இனி, மத நம்பிக்கைகளைப் பரப்புவதைப் பற்றிப் பார்ப்போம். மதங்களின் உருவாக்கம் ஏதோவொரு மக்கள் குழுவின் நலனுக்காகத்தான் நடைபெறுகிறது. சமணத்தின் பெயரில் அயல் வாணிகர்கள் தமிழகத்தைச் சுரண்டியதை எதிர்த்து தமிழ்நாட்டு வாணிகர்களின் பின்னணியில் எழுந்தது சிவனிய எழுச்சி. இது முற்போக்கானது. குத்தகை உழவர்களை மயக்கி ஏமாற்றி அவர்களின் உழைப்பைச் சுரண்டுவதற்காக உருவானது இராமானுசரின் இயக்கம். இது பிற்போக்குத் தன்மையானது. ஒடுக்கப்பட்ட மக்களைக் கோயிலினுள் கொண்டு சென்றது பெயரளவில் முற்போக்கானது. இந்த இரு நேர்வுகளிலும் கூட சில காலம் சென்று அதிலுள்ள முற்போக்குக் கூறுகளை அகற்றியதைப் பார்த்தோம். அதைப் போலத்தான் புத்தம், சமணம் போன்றவற்றிலும் மாற்றங்கள் ஏற்பட்டன.
இந்தியாவில் தோன்றிய புத்தம் இன்று பொருளியல் வல்லரசு சப்பான், அதற்கு அடுத்த வல்லரசாகிய சீனம் ஆகியவற்றின் ஒற்றமைப்பாக இந்தியாவிலுள்ள சாதி முரண்பாடுகளைப் பயன்படுத்திக்கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களை அந்த அரசுகள் தம் பால் இழுக்கப் பயன்பட்டு வருகிறது. சிங்களரின் புத்தமும்தான்.
உரோமைப் பேரரசின் மேலாளுமையை எதிர்த்துத் தன் பொதுவாழ்வைத் தொடங்கிய ஏசு உள்நாட்டு முரண்பாடுகளுள் சிக்கி தன் தேசத்தாராலேயே தண்டனை அடைந்தார். அங்கிருந்து வெளியேறி உரோமில் நிலைபெற்று விட்ட அந்தச் சமயம் நான்கு நூற்றாண்டுகளுக்குப் பின் உரோமைப் பேரரசால் அரச மதமாக ஏற்கப்பட்டது. அந்த அரசு ஏசுவைக் கொன்றவர்கள் என்று குற்றம் சாட்டி யூதர்கள் மேல் அவர் பெயரில் அமைந்த சமயத்தின் பெயரால் படையெடுத்து எந்த யூத குல மக்களுக்காக ஏசு தன் இன்னுயிரை இழந்தாரோ அதே யூத குடிகளைப் பதினாறு நூற்றாண்டுகள் நாடற்றவர்களாக உலகெல்லாம் பரந்து எந்த மக்கள் குழுவும் பட்டறியாத இன்னல்களைத் தூய்க்கக் வைத்தது. இவை எல்லாம் சமயம் என்பதன் நூற்றுக்கு நூறு அரசியல் தன்மையைக் காட்டுகிறது.
மதம் என்ற சொல் மதித்தல் என்ற பொருளில் மெய்யியலை – கோட்பாட்டைக் குறிக்கும். சமயம் என்பது ஒரு அரசியல் கட்டமைப்பு ஆகும். அதற்கும் கடவுளுக்கும் எந்த உறவும் கிடையாது. மனிதர்களையும் சமயங்களையும் படைத்த கடவுள் ஒரேயொருவர்தான் என்றால் மதங்கள் கடவுளின் படைப்புகள் என்றால் மதங்களுக்குள் இந்த மெய்யியல் வேறுபாடுகள் ஏன்?
உலகில் இன்று வரை அரசியலின் பெயரால் நடைபெற்ற போர்களில் பாய்ந்த குருதியை விட சமயப் போர்களாலும் மதக் கலவரங்களாலும் பாய்ந்தோடிய குருதி பல மடங்கு அல்லவா? அது ஏன்? கடவுளா காரணம்? மதங்கள் கடவுளின் படைப்பாக இருந்திருந்தால் இது போன்ற குருதி வெள்ளம் ஓடியிருக்காதே! எனவே சமயப் பரப்பல் பற்றி நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குற்றமற்ற மெய்யியல் கோட்பாடு என்றோ நம்பிக்கைகளின் வெறும் தொகுப்பு என்றோ மெத்தனமாக இருந்துவிடக் கூடாது. அயல் மதங்களின் நுழைவு எப்போதுமே அதன் பின்னால் அயல் ஆட்சியைக் கொண்டுவரும் என்பது பன்னூறு ஆண்டுகால இந்தியப் பட்டறிவு. இது பற்றிய தெளிவு தொல்காப்பியத்தில் காணப்படுகிறது. தொல்காப்பியம் பல்வேறு காலகட்டங்களில் உள்ள நிலைமைகளை ஒன்றன் மீது ஒன்றாகக் கொண்டுள்ள ஒரு படைப்பு. பொருளதிகாரத்தில் வருணன், இந்திரன், திருமால், முருகன், கொற்றவை ஆகிய ஐந்து தெய்வங்களைக் கொண்ட(ஐந்து தெய்வங்கள் ″மேவிய″) ஐந்து நிலப்பகுதிகளை அவ்வவற்றுக்குரிய தலைவர்கள் ஆண்டு வந்த, பூசாரியராட்சி(Theocracy)க் காலத்துக்கு உரியதாக இனம்காணத்தக்க ஒரு நூற்பா உள்ளது.
மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய
முல்லை முதலாச் சொல்லிய முறையாற்
பிழைத்தது பிழையா தாகல் வேண்டியும்
இழைத்த ஒண்பொருள் முடியவும் பிரிவே …… தொல்.பொருள், 3
இதற்குப் பொழிப்புரையாக, தேவரது பூசை முதலாயினவும் மக்களும் முறைமை தப்பியவழி தப்பாது அறம் நிறுத்தல் காரணமாகவும் பொருளாக்குதல் காரணமாகவும் பிரிவு உளதாம் என்றவாறு:
– (இளம்பூரணம்,கழக வெளியீடு எண் 629, 1967 பக். 31-32)
இதில் கூறப்படுவது அரசு சார்ந்தோர் உள்நாட்டு மக்களிடை ″சமய ஒழுங்கை″ நிலைநாட்டவும் வரி தண்டுவதற்காகவும் தம் இருப்பிடத்திலிருந்து நீங்கும் பிரிவுகள் அதாவது செலவுகள்(பயணங்கள்) பற்றி.
அத்தகைய நிலப்பகுதிகளில் எங்காவது அயல் வழிபாடு நுழைவதாகத் தெரிந்தால் ஆட்சித் தலைவனும் அவனைச் சார்ந்தவர்களும் உடனடியாகச் சென்று அதனைச் சீர்செய்து வந்தனர் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
எண்ணத் தொலையாத பழங்காலத்தில் நம் முன்னோர்கள் தங்கள் எல்லைப் பாதுகாப்பு பற்றியும் வழிபடும் தெய்வம் குறித்த அரசியல் பற்றியும் எவ்வளவு தெளிவாகவும் விழிப்பாகவும் இருந்திருக்கிறார்கள் என்று அறியும் போது ஒரு புறம் பெருமையாகவும் இன்று தமிழகத்து மீனவர்களில் 400 பேருக்கு மேல் இலங்கை அரசு சுட்டு வீழ்த்தியும் இந்திய அரசு அதைக் கண்டிக்காமல் அதற்குத் துணை போவதுடன் தன் பங்குக்குத் தானும் சிலரைச் சுட்டுக் கொன்றுள்ளதைக் கண்டு இன்னொரு புறம் வெட்கமாகவும் இருக்கிறது. அதே போல் கிறித்துவத் துறவி சவேரியார் தமிழகக் கடற்கரையில் மதமாற்றம் செய்த போது அவ்வாறு மதம் மாறியவர்கள் ″போர்த்துக்கீசிய மன்னனுடைய குடிமக்களாக மாறி, அவனுடைய ஆணைக்கு உட்பட வேண்டுமென்றும் இவர்கள் அப்படி உட்படுவார்களாயின் முசுலீம் கொடுமைகளினின்றும் இவர்களைத் தாம் பாதுகாத்து வருவதாயும் கூறிப் பாதிரிகள் இவர்களுக்கு ஆசை காட்டினார்கள்″ . எவ்வளவு இழிவு? இங்கு யாரைக் குற்றம் சொல்வது? கடற்கரை மக்களைக் கொடுமைப்படுத்திய முகம்மதியர்களையா? அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறேன் என மதமாற்ற வந்த அயலவனையா? அல்லது இந்த நாட்டை, அதன் எல்லையை, அங்குள்ள மக்களைப் பாதுகாக்கத் துப்பில்லாத நம் ஆட்சியாளர்களையா? அல்லது அந்த ஆட்சியாளரை அண்டி வாழ்ந்து தத்தம் குழுக்களுக்கு மக்களை முற்றிலும் அடிமையாக வைத்திருப்பதற்காகத் தங்கள் ஆட்சியாளர்களைத் தங்கள் விருப்பம்போல் மாற்றிக்கொள்ளத் தயங்காத தாய் மதத்து உயர்குடியினரையா? இந்த நிகழ்வில் வெளிப்படுவது மெய்யியல்களின் மோதலா? மத நம்பிக்கைகளின் போட்டியா? இது பச்சையான அரசியல் இல்லையா?
மாலிக் காபூருடன் வீரபாண்டியன் போரிட்ட களத்தில் அவன் படையில் இருந்த 20,000 முகமதியப் படை வீரர்கள் நடுவில் எதிரிகள் பக்கம் ஓடி வீரபாண்டியனைத் தோற்கடித்தது நம்பிக்கைகளின் மோதலா அல்லது தாய்மண்ணுக்கு எதிராகச் செய்த நம்பிக்கை இரண்டக அரசியலா? அதே போல் விசயநகரப் பேரரசு இராமராயன் தலைமையில் ஐந்து சுல்தான்களுக்கு எதிராகப் போரிட்ட போது அவன் படைத்தலைவர்களாயிருந்த இரு முகம்மதியர்கள் தங்கள் கீழ்ப் பணியாற்றிய எண்பதினாயிரம் படை வீரர்களுடன் கட்சி மாறியது கடவுள் நம்பிக்கையா? மத நம்பிக்கையா? அரசியலா? என்னவென்று அழைப்பது?
அந்த ஐந்து சுல்தான்களில் இரண்டு பேர் பார்ப்பனர்களாக இருந்து மதம் மாறியோர் என்பது உங்களுக்குத் தெரியுமா?
இந்தியாவில் ஆண்ட பாதுசாக்களும் சுல்தான்களும் தங்கள் அரசுகளை ஏற்றுக்கொள்ளக் கேட்டு வெவ்வேறு காலங்களில் ஆப்கானித்தான், ஈரான், அரேபிய அல்லது துருக்கியின் முகம்மதிய மன்னர்களின் வாயில்களில் பரிசுப் பொருட்களுடன் விடுத்த தூதுவர்கள் காத்துக்கிடந்தது அரசியல் இல்லையா? இந்த இழிவைப் பொறுத்துக்கொள்ள முடியாத அக்பர் வழிபாட்டுக்காக அயல்நாடு செல்வதைத் தடுக்கும் நோக்குடன் மெக்கா செல்வதற்குத் தடை விதித்ததுடன் உள்நாட்டுச் சமயம் ஒன்று வேண்டும் என்று தீன் இலாகி என்று ஒரு சமயத்தை வடித்ததும் அரசியல்தானே!
சப்பானியர்கள் அயலவரை எப்போதுமே ஐயக் கண்கொண்டு பார்ப்பவர்கள். அங்கும் முதலில் போர்ச்சுக்கீசியர்களே மதமாற்றத்துக்காகச் சென்றனர். 1545 இல் சவேரியார் இரண்டு துணைவர்(சேசு சபையினர்)களுடன் சென்று 1000 பேரை மதமாற்றியுள்ளார். ஒரு தலைமுறையில் சபையினரின் எண்ணிக்கை 70 ஆகவும் மதம் மாறியவர்களின எண்ணிக்கை 1½ இலக்கமாகவும் உயர்ந்துள்ளது. மதம் மாறியவர்கள் சப்பானியப் பேரரசுக்கு எதிராகப் போப்புக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாகசாகியின் உள்ளூர் தலைவனைக் கொண்டு புத்தக் குருக்களை விரட்டி கோயில்களை அழித்துள்ளனர். 1597இல் இடையோசி எனும் சப்பானிய ஆளுனன் 20 நாட்கள் எச்சரிக்கை கொடுத்து அனைத்து விடையூழிய(மிசனரி) நடவடிக்கைகளையும் தடைசெய்துள்ளான்.
அடுத்து பதவிக்கு வந்த இயெயேசு 1614இல் கிறித்துவர்களுக்கு நாட்டை விட்டு வெளியேறும் படி அல்லது தாய் மதத்துக்கு திரும்பும் படி ஆணையிட்டான். 1616இல் அவன் இறந்ததும் கிறித்துவர்கள் தாக்கப்பட்டனர், சிமாபிரா என்ற தீவக்குறைக்கு(தீபகற்பம்)த் தப்பிச் சென்று கோட்டை கட்டி வாழ்ந்த 37,000 பேரில் 105 பேர் தவிர அனைவரையும் 1638இல் அவனது பேரன் இயெமெட்சு கொன்றான்.
இதில் எதுவுமே கடவுள் அல்லது மெய்யியல் குறித்த நிகழ்வு இல்லை. முழுக்க முழுக்க அரசியலே. முதலில் மதம் பரப்பலுக்காகச் செல்வோம். அடுத்து வாணிகம் செய்வோம். மூன்றாவதாக நாட்டைப் பிடிப்போம் என்ற ஒரு போர்த்துக்கீசிய மாலுமியின் கூற்றை வில் டூரான்று பதிவு செய்துள்ளார்.
தமிழகத்திலும் கிறித்துவர்கள் தொடக்க காலங்களில் தாய்மதக் கோயில்களை இடித்து, கொள்ளையடித்து வெறியாடியுள்ளனர். அரசர்களும் அவர்களை அடக்கியுள்ளனர். ஆனால் பார்ப்பனர்களுக்கும் அரசர்களுக்கும் நடைபெற்ற இடையறாக மேலாளுமைப் போட்டியால் அரசர்கள் பிற சமயத்தாரை ஊக்கியே வந்துள்ளனர். பிற சமயங்களால் ஆதாயம் இருக்கும், அதிகாரம் கிடைக்கும் என்றிருந்தால் பார்ப்பனர்களும் மதம் மாறியிருக்கின்றனர். நாகூர் தர்காவில் பூசகர்களாக இருப்பவர்கள் முகம்மதியத்துக்கு மாறிய ஐயங்கார்களின் வழி வந்தவர்கள் என்று மீனாட்சிபுரம் மதம் மாற்றக் காலத்தில் ஒரு முகம்மதிய நண்பர் எனக்குக் கூறினார். அவர்கள் தங்கள் பழைய தொடர்புகளை இன்றும் தொடர்கின்றனர் என்றார். தம் சொத்துகளைக் காத்துக் கொள்வதற்காக சிவனிய வெள்ளாளர்கள் பெருமளவில் முகமதியத்துக்கு மாறியுள்ளனர். தங்கள் பக்கத்துக்கு வலிமை சேர்ப்பதற்காகவே தாழ்த்தப்பட்ட மக்களைப் பின்னர் இவர்கள் மதம் மாற்றியுள்ளனர். அங்கும் அவர்கள் இந்நிலக்கிழார்களுக்கு அடிமைகளாகவே உள்ளனர்.
இடங்கைச் சாதியினராக ஒடுக்கப்பட்ட கைவினைஞர்களும் வாணிகர்களும் நெசவாளர்களும் பெருமளவில் முகம்மதியத்துக்கு மாறியுள்ளனர்.
குமுக ஒடுக்குமுறை மட்டும் மதமாற்றத்தை ஊக்கவில்லை. வறுமையும்தான். குமுக ஒடுக்கல் என்பதே குமுகச் செல்வத்தில் அம்மக்களுக்குரிய பங்கை மறுப்பதை நோக்கமாகக் கொண்டதுதானே? நம் சமயக் கட்டமைப்பும் நடைமுறைகளும் மேலடுக்கினரின் தேவைகளுக்குப் போக எஞ்சியவற்றை அழிப்பதாகவே உள்ளன. ஆகமக் கோயில்களில் அழிமதியாகும், மக்களுக்கு இன்றியமையாத உணவுப் பொருட்களின் பட்டியலைப் பார்த்தாலே தெரியும். அத்துடன் ஆகமக் கோயில்கள் பார்ப்பனர்களுக்கும் தேவரடியார்க்கும் கருவறை, அரசர், அதிகாரிகள், உள்ளூர் ஆட்சியாளர் ஆகியோருக்கு மண்டபங்கள், வாணிகர்களுக்கு உள்சுற்று, உழவர், உழைப்பாளர்களுக்கு வெளிச்சுற்று, அவர்கள் கருவறையைப் பார்க்க முடியாதபடி ( நந்தி, கருடன் போன்ற)கடவுளின் ஊர்தி, கொடிமரம், பலிபீடம் ஆகியவை மறைக்கும். இந்த மக்களின் உழைப்பில் கிடைக்கும் பொருட்களைத்தான் கோயில்களில் அழிக்கிறார்கள்.
இன்று ஊர்ப்புறங்களில் ஆண்டுக்கு இரண்டு முறை ஆளுக்கு ஆயிரம் உரூபாய்கள் வரை கட்டாயமாக வரி தண்டி கோயில் கொடை நடத்துகிறோம் என்ற பெயரில் கேளிக்கை நடத்துகிறார்கள் ஊரிலுள்ள இளைஞர்கள். வறிய மக்கள் எதிர்த்துப் பேசினால் ஊரை விட்டு விலக்கி வைத்துவிடுவதாக மிரட்டுகிறார்கள். இவ்வாறு ஓரம் கட்டப்பட்ட மக்கள் மதமாற்றக்காரர்களின் எதிர்ப்பில்லா இலக்காகிவிடுகிறார்கள்.
நம் மக்களிடம் திரளும் பணம் மூலதனமாக மாறி நம் நாட்டின் பொருளியல் வளர்ச்சியை ஊக்குவிப்பது அரசால் எண்ணற்ற வழிகளில் திட்டமிட்டுத் தடுக்கப்படுகிறது. பனியாக்கள் ஆகிய மார்வாரிகளும் குசராத்திகளும் பார்சிகளும் மட்டுமே தொழில்களில் முதலிட முடிகிறது. ஆட்சியாளர்கள் இந்த 60 ஆண்டுக் காலத்தில் அள்ளிக் குவித்த ஊழல் கள்ளப்பணம் ″நேரடி அயல் முதலீடாக″ இங்கு பாய்கிறது. உள்நாட்டு மக்கள் நேர்மையாக ஈட்டிய பணம் வரம்புமீறிய வருமான வரியின் மிரட்டுதலுக்கு அஞ்சி கருப்புப் பணம் என்னும் பொல்லாப் பெயர் பெற்றுப் பதுங்கிக் கிடக்கிறது. பரவலான வளர்ச்சி தடுக்கப்பட்டுள்ளதால் மக்களிடம் தேங்கிக் கிடக்கும் இந்தப் பணம் தங்களுக்குப் போட்டியாக, தங்களைக் கேள்வி கேட்கும் அரசியலாக வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே மதப் பூசல்கள் உருவாக்கப்படுகின்றன. அயல் பணத்துடன் கிறித்துவ, முகம்மதிய சமயம் செயல்படுகிறதென்றால் பனியாக்களின் பணம் இரா.சே.ச. – தேசிய தற்பணி மன்றம் – ஆர்.எசு.எசு.ஐயும் பிற இந்துவெறி அமைப்புகளையும் வளர்த்துவிட்டுள்ளது. இதனால் பெருமளவு மக்களின் பணம் கோயில் கட்டுவதிலும் கொடை விழாக்கள் நடத்துவதிலும் போட்டி போட்டு வீணாக்கப்படுகிறது.
இவ்வாறு குமுகப் பணம் வீணாகிப் போகும் சூழலில் வறுமையுற்றுவிட்ட மக்களின் முன் பணத்துடன் நுழையும் கிறித்துவம் முன்வைக்கும் திரு. தெய்வநாயகம் உருவாக்கிய வரலாற்றை அம்மக்கள் கேள்வி முறையின்றி ஏற்றுக்கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை.
இதை எதிர்கொள்ள வேண்டுமாயின் இரு வழிகளில் நாம் செயற்பட வேண்டும். தாய் மதத்தை, அதன் அடிப்படையை மாற்றியமைக்க வேண்டும். கோயிலில் அனைத்து மக்களும் சமமான மதிப்பு கிடைக்குமாறு அதன் வடிவமைப்பை மாற்ற வேண்டும். அதாவது இன்றைய கோயில்களின் வடிவமைப்பையே மாற்றி அமைக்க வேண்டும். வருணமுறையை மனிதநேயமற்ற ஒன்று என்று ஒதுக்க வேண்டும்.
19ஆம் நூற்றாண்டில் கிறித்துவத்திலிருந்து தாய் மதத்தைக் காப்பதற்காக இந்து சீர்திருத்த அமைப்புகள் வலுவாகச் செயற்பட்டன. அதைக் கண்டு நடுங்கிப் போயிருந்தனர் சாதிவெறியினர். அந்த நேரத்தில் அமெரிக்காவிலிருந்து வந்தனர் ஆல்காட்டும் பிளாவட்கியும் இறையியல் கழகத்துடன் சென்னைக்கு, வருணங்கள் மனிதனின் உயர்ந்த குமுக அமைப்பு என்ற முழக்கத்துடன். சாதிவெறியர்கள் அங்கு சென்று மொய்த்துக் கொண்டனர். சீர்திருத்தர்கள் களத்தில் இல்லாமல் போயினர். இதற்கு அடிப்படை அமைப்பதற்கென்றே அனைத்துச் சமய மாநாட்டைக் கூட்டி அரசன் சேதுபதியை அமெரிக்கா அழைத்தது. அவர் விவேகானந்தரை விடுத்துவைத்தார்.
இறையியல் கழகத்தில் நடந்த மறைமுக அமெரிக்க அரசியலைக் கண்டுதான் அங்கு உறுப்பினராக இருந்து வெளியேறிய ஆங்கிலரான இயூம் இந்தியத் தேசியப் பேரவைக் கட்சியை உருவாக்கினார் என்றொரு ஐயம் எமக்கு உண்டு. அதன் பின்னர் ஆங்கிலரான அன்னி பெசன்று இறையியல் கழகத்தைக் கைப்பற்றிக்கொண்டு வீரார்ப்பாக தன்னாட்சி கோட்பாட்டை வகுத்து முனைப்பிய(தீவிரவாத)த் தலைவர்களைக் களத்திலிருந்து அகற்றியது போன்றனவெல்லாம் நடைபெற்றது. இன்றும் அந்த இறையியல் கழகம் சாதி வெறியர்களின் புகலிடமாக விளங்குகிறது.
எனவே தாய் மதத்தைக் காக்க வேண்டும், அயல் மதங்களின் பெயரால் ஊடுருவும் அயல் விசைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் தாய்மதச் சீர்த்திருத்தத்தில் முனைப்பாக ஈடுபட்டு வெற்றி ஈட்டியாக வேண்டும். நம்மிடையில் இன்று வேர்கொண்டிருக்கும் அயல் மதங்கள் நம் குமுகக் கோட்பாடுகளின் போதாமைகளால், அவற்றால் நமக்கு ஏற்பட்ட இயலாமைகளால் நம் குமுகத்தின் உடலில் ஏற்பட்ட சீழ் வடியும் புண்கள் என்ற உணர்வுடனும் அது இன்னொரு முறை நிகழ்ந்துவிடாமல் விழிப்புடனும் நாம் செயற்பட வேண்டும்.
அயல் நாட்டுப் பணம், அது உதவியாக வந்தாலும் சரி, முதலீடாக வந்தாலும் சரி நிறுத்தப்பட வேண்டும். உள்நாட்டு மக்கள் அனைவரும் தங்களிடமுள்ள பணம், அறிவு, உழைப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி தங்கள் பொருளியல் வலிமையை, நாட்டின் பொருளியலை, வளத்தை வளர்க்க கட்டுப்பாடில்லாத உரிமையைப் பெறப் பாடுபடவேண்டும். அவற்றின் பலன்கள் எக்காரணத்தாலும் நம் நாட்டை விட்டு வெளியேறிவிடாமல் நாம் கவனத்துடன் இருக்க வேண்டும். இந்தக் குறிக்கோள்களுக்கு எதிர்நிற்கும் தடைகளை எதிர்த்துப் போராட வேண்டும். இணக்கம் என்பதின்றிப் போரிட வேண்டும். அவ்வாறு தற்சார்பு கொண்டால்தான், நாட்டின் பொதுவான செல்வ நிலையும் மக்களின் தனிப்பட்ட வாழ்நிலையும் மேம்பட்டால்தான் தெய்வநாயகம் போன்றோரின் ஏமாற்றுகளுக்கு இடம் கொடுக்காத, வெளிநாட்டுப் பணத்துக்கு மயங்காத மனநிலையை நம் மக்கள் பெறுவார்கள்.
எந்தச் சமயம் உண்மையான மனித நேயத்தை, மக்களுக்குள்ள பொருளியல் சம உரிமையைப் போற்றிப் பாதுகாக்கிறதோ அதுதான் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும். ஒரு குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட ஒரு குழந்தையைக் கண்டு, எடுத்து வளர்க்க விரும்பும் எந்த ″இந்து″வும் அது எந்த சாதியோ என்று குழம்பி வாளா இருக்கிறான். ஒரு கிறித்துவச் சாமியார் கண்டால் அதை எடுத்து கோயிலின் பராமரிப்பில் கிறித்துவக் குழந்தையாக வளர்க்கிறார். இது உண்மையில் பாளையங்கோட்டையில் நடந்த நிகழ்ச்சி. முகம்மதியர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒன்றோ பலவோ ஆளற்ற, ஏழ்மையிலுள்ள குழந்தைகளைத் தத்தெடுத்து ஒன்றன்பின் ஒன்றாக ஆளாளுக்கும் வளர்த்துத் தங்கள் பக்கத்துக்கு வலுவைச் சேர்த்துக்கொள்கிறார்கள். இவர்கள் அனைவரும் இன்றோ நேற்றோ நம் தாய் மதத்திலிருந்து சென்றவர்கள் தாமே! அவர்களால் முடிவது ஏன் நம்மால் முடியாமல் போயிற்று? இதனால்தான் இன்று இந்து சமயம் அழிவை நோக்கி நிற்கும் உலகச் சமயங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது நம் தாய்மதத் தலைவர்களுக்கு, தலைவர்கள் கூடத் தங்கள் சொந்த ஆதாயங்களுக்காக மக்களை ஏமாற்றுவது தொடர்ந்து வரும் நிகழ்வு, எனவே நேர்மையும் நாணயமும் நாட்டுப்பற்றும் கொண்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஓர் எச்சரிக்கை!
குமரிமைந்தன்
kumari mainthan