அன்புள்ள ஜெ,
நேற்று இன்டர்ஸ்டெல்லார் படம் பார்த்தேன். முழுக்க முழுக்க அறிவியல் பின்னணியில் மானுட நாடகம் ஒன்றை மிகச் சிறப்பாக எடுத்துள்ளனர். கதை விண்ணியற்பியலின் மிகக் குழப்பமான, மிக நுட்பமான கோட்பாடுகளை பின்னணியாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது.
இதுபோன்ற தளங்களில் கதை சொல்லப்படும்போது ஒட்டு மொத்த மனித சமூகம் ஒரு உயிரினமாக (Species) பொருள்கொள்ளப்படுகிறது. இந்தப் படத்தில் அது மிகத் தெளிவாக சொல்லப்படுகிறது. வேறெந்த அடையாளமும் அர்த்தமிழந்துபோகிறது. படத்தில் மருந்துக்கும் கூட மதம் இல்லை. அதன் தத்துவங்கள் அனைத்தும் அறிவியலின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது. ‘அன்பு’ குறித்த ஒரு விவாதமும் கூட அப்படியே அமைந்திருந்தது.
அண்மைக் காலங்களில் தத்துவத்துறையை அறிவியலாளர்கள் கையெடுத்துள்ளார்கள். அவர்கள் மதங்களையும் மற்ற வேறெந்த தத்துவ விளக்கங்களையும் ஏற்பதில்லை. நீங்கள்கூட வறட்டு அறிவியல் என்று சில இடங்களில் குறிப்பிட்டிருக்கிறீர்கள் என்று நியாபகம். ஆனால் இவர்கள் நிச்சயம் வெற்றிபெற்றுகொண்டிருக்கிறார்கள். ஸ்டிபன் ஹாகின்ஸ், ரிச்சர்ட் டாக்கின்ஸ், நம் வி. எஸ். ராமச்சந்திரன், ஜாரெட் டைமென்ட், நீல் டெகிராஸ் டைசன் என தத்தம் துறைகளில் அறிவியல் வல்லுநர்களாகவும் அதன் வழியே இதுவரை தத்துவவியல் பதில் சொல்லிவந்த கேள்விகளுக்கு பதில் சொல்லும் தத்துவ அறிஞர்களாகவுமே இவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ஒரே குரலில் தத்துவவாதிகள் இறந்துவிட்டார்கள் என அறிவிக்கவும் செய்கிறார்கள் (Arm chair philosopher is dead).
உண்மையில் இந்த புதிய தத்துவத்தின் மொழியைக் கண்டடையாதவன், அதை தொட்டு நோக்காதவன் ஏதோவகையில் காலாவதியாகிவிட்டான் என்றே தோன்றுகிறது. இந்தியாவில் நாம் இன்னும் இதை நோக்கி திரும்பவேயில்ல்லை என்றே தோன்றுகிறது. நமது இலக்கியம் தனிமனித சிக்கல்களை இன்னும் பேசித் தீர்க்கவில்லை, நாம் நம்மை பிளவுபடுத்தி பிளவுபடுத்தி ஒரு பெரிய ஜிக் ஸா புதிரில் தத்தம் இடங்களை தேடிக்கொள்ள தத்தளித்துக்கொண்டிருக்கிறோம். இதைக் கடந்து நாம் ஒட்டுமொத்த மானுடத்தை குறித்து சிந்திப்பதுவும் செயல்படுவதும் எப்போது? அப்படி இன்றே செய்யத் துவங்கியிருப்பவன் நம்மை விட பல காலங்கள் முன்னேறிச் சென்றுவிட்டான் இல்லையா?
இந்த உலகை பூடகமான மொழிகளில் அல்லாமல் நேரடியான மொழி ஒன்றில் மனிதன் அறியத் துவங்கியிருக்கிறான். இதை நாம் எப்போது செய்யத் துவங்குவோம்?
சிறில் அலெக்ஸ்
அன்புள்ள சிறில்,
ஒருவசதிக்காக அறிதலை இரு வகைகளாக பிரித்துப்பார்போம். இவ்விருவகைச் சிந்தனைப்போக்குகளும் எப்போதும் உலகசிந்தனையில் இருந்து வந்துள்ளன. அவை ஒன்றுடன் ஒன்று முரண்பட்டே இயங்கிவருகின்றன.
ஒன்று தொகுத்து அறிதல். ஒட்டுமொத்தமாகப் பார்த்தல். அது மனிதனை சாராம்சப்படுத்தி அறிய முயல்கிறது. அவனை இயற்கையின் பிரம்மாண்டமான அமைப்பின் ஒரு பகுதியாக, ஓர் உயிரியல் கட்டுமானமாக ஆராய்கிறது. ஒரு நரம்புத்தொகையாக அணுகுகிறது. பிரபஞ்சவெளியில் நிகழ்ந்த ஒரு தற்செயலாக பார்க்கிறது.
ரிச்சர்ட் டாக்கின்ஸ், நம் வி. எஸ். ராமச்சந்திரன், ஜாரெட் டைமென்ட் போன்றவர்கள் இந்த சாராம்சப்படுத்தும் பார்வைக்கு மிகச்சிறந்த உதாரணங்கள். இவை நமக்கு மிகப்பெரிய திறப்புகளை அளித்துள்ளன என்பதை மறக்கவில்லை. ஆனால் இவை அடிப்படையில் ஒரு குறைத்தல்வாதமாகவும் சுருங்கிவிடுகின்றன.
ஜரேட் டைமண்டைப் பார்க்கையில் மானுட வரலாறே புவியலால் அமைக்கப்பட்டது என்று தோன்றும். நான் அந்தக்கோணத்தில் இந்தியவரலாற்றை வருடக்கணக்காக எண்ணிப்பார்த்திருக்கிறேன். ராமச்சந்திரனை வாசித்தபின் மானுட நாகரீகமென்பதே மூளையின் நரம்புப்பின்னலின் புறவயப்பிரதிபலிப்பே என்று தோன்றும். அக்காலத்தில் சொல்புதிதில் அதீத உற்சாகம் கொண்டு அதைச்சார்ந்த கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறோம்.
அந்த சுருங்குதலை உடைப்பவை என்று பகுத்து அறியும் நோக்கைச் சொல்லலாம். அவை மானுடனை துளிகளாகச் சிதறடித்துப் பார்க்கின்றன. மனிதனின் கூறுகளை ஆராய்கின்றன
நீங்கள் சொல்லும் அறிவியலாளர்களின் அளவுக்கே மானுடவியல், சமூகவியல், மொழியியல் முதலிய பண்பாட்டு ஆய்வுகளிலும் முதன்மையான அறிஞர்கள் இருக்கிறார்கள். முற்றிலும் மாறாக அவர்கள் மனித நாகரீகத்தின் சிறிய துளிகளை எடுத்துக்கொண்டு ஆராய்கிறார்கள்.
அதாவது மனித நாகரீகம் என்பது என்ன என்ற வினா அளவுக்கே முக்கியமானது என்ன காரணத்துக்காக மனிதன் உலகமெங்கும் பெருங்கற்களை நாட்டிவைத்தான் என்பதும்.
மானுடன் என்ற உயிரை, மூளைக்கட்டுமானத்தை அறியும் அளவுக்கே முக்கியமானது ஏன் அவனுடைய இயல்பு எப்போதும் சேர்த்துக்குவிப்பதாகவே இருக்கிறது, ஏன் பகிர்ந்துகொள்ளும் உணர்வுகளை அவனுடைய அந்த இயல்பு எப்போதும் வெல்கிறது என்ற வினா. இன்றைய உலகப்பொருளியலே சில ஆயிரம்பேரின் செல்வத்தால் கட்டுப்படுத்தப்படுவதைப் புரிந்துகொள்ள அதுதான் உதவும்
இந்த இருவகைச் சிந்தனைகளும் ஒன்றை ஒன்று நிரப்புபவை என்றே நான் புரிந்துகொள்கிறேன்.இவற்றின் உரையாடல் மூலமே நாம் புரிதலை தெளிவாக்கிக்கொண்டு செல்லமுடியும்
ஹாலிவுட் சினிமா இந்த மாபெரும் பொதுமைநோக்கிச் செல்வதில் ஒரு அடிப்படைக் காரணம் உள்ளது என்பதை கவனியுங்கள். அவர்களின் சந்தை உலகளாவியது. ரசிகர்கள் ‘உலக மனிதர்கள்’ . ஆகவே அவர்கள் எந்த ஒரு பண்பாட்டு நுட்பத்தையும், அந்தரங்க வாழ்க்கையையும் நோக்கிச் செல்லமுடியாது. அவர்கள் உலகளாவிய கருக்களைப் பேசியாகவேண்டும்.
ஆகவே அவர்கள் ‘மனிதன்’ ‘உலகம்’ என்ற கருப்பொருளை எப்போதும் எடுத்துக்கொள்கிறார்கள். ஜேம்ஸ்பாண்ட் காப்பாற்றுவது எப்போதுமே உலகத்தைத்தான்.
அந்த கோணத்தில் சாராம்சமான மானுடப்பிரச்சினைகளைப் பேசும் பல வலுவான படங்கள் ஹாலிவுட்டின் தொடக்க காலம் முதலே வந்துள்ளன. என்னைப்பொறுத்தவரை ஜெர்மானிய படமான Metropolis [ 1927ல் வெளிவந்தது] ஒரு மிகப்பெரிய திறப்பு. அது உருவாக்கும் பிரமிப்பை இன்றும் கடந்துசெல்லமுடியவில்லை. அவ்வரிசையில் பல படங்களை வைத்திருக்கிறேன். முக்கியமாக மட்ரிக்ஸ் வரிசையின் இரு படங்கள்.
ஆனால் மிகமிக இந்தியப் பண்பாட்டுக்குள் ஊறி, இந்திய உளவியலின் அடுக்குகளில் ஊடுருவிச்செல்லும் ரிதுபர்ணகோஷின் ‘சித்ராங்கதா’ எனக்கு இவற்றுக்கு நிகரான, இவற்றை மறு எல்லையில் சமன் செய்கிற மாபெரும் படைப்பே. அதில் மகாபாரதத் தொன்மத்தைக் கையாண்டிருக்கும் விதம் அளிக்கும் கற்பனையின் வீச்சும் எட்டும் பண்பாட்டு ஆழமும் பிரமிப்பூட்டுவதே.
பொதுவாக தீவிர உலகசினிமா ரசிகர்கள் – என் மகன் அஜிதன் ஒவ்வொருநாளும் நான் எதிர்கொள்ளும் உதாரணம் – ஃப்ரிட்ஸ் லாங்கையோ நோலனையோ ஒரு பொருட்டாகக் கொள்வதில்லை. அவர்களுக்கு வெர்னர் ஹெர்சாக் , டெரன்ஸ் மாலிக் ஆகியோர்தான் கலைஞர்கள். அதாவது பொதுமைகள் கலைஞனின் இடமே அல்ல, அவை அறிவியலாளர்களுக்குரியவை என்பார்கள். பண்பாட்டிலும் மானுட அகத்திலும் நுண்மைகளை தேடிச்செல்வதே கலைஞனின் பணி என்பார்கள். நான் இருதரப்பும் கலையின் இரு வழிகள் என நினைப்பவன்.
நாற்காலித் தத்துவவாதி என ஒருவன் உண்மையில் உண்டா என்ன? அச்சொல்லுக்குப் பொருள் எந்த புறவய அறிவுத்தளத்தையும் சாராமல் முற்றிலும் தன் மூளையாலேயே கொள்கைகளை உருவாக்குபவன் என்று இல்லையா? போலி தத்துவவாதிகள் உண்டு.பழையதத்துவங்களில் வாழ்பவர்கள் உண்டு. ஆனால் புறவய அறிவுடன் நேரடித் தொடர்பற்ற தத்துவவாதி எவரும் இல்லை
ஒவ்வொரு காலகட்டத்திலும் மேலோங்கியிருக்கும் புறவய அறிவுத்துறைகளை நெருக்கமாக அறிந்து அதன் கருவிகளைப் பயன்படுத்திக்கொண்டுதான் தத்துவவாதிகள் செயல்பட்டிருக்கிறார்கள். இந்திய தத்துவ மரபுக்கு ஆயுர்வேதம், ரசவாதம் முதலியவற்றுடன் நெருக்கமான உறவிருந்தது. பல கலைச்சொற்கள் அங்கிருந்து வந்தவை
பின்னர் கணிதம் தத்துவவாதிகளின் அறிவுத்துறையாக இருந்தது. பின் மொழியியல் இருந்தது. பின்னர் மானுடவியல் வந்தது. அப்படி இயற்பியலும் நரம்பியலும் இன்று இருக்கிறது. நாளை இன்னொரு துறை இருக்கலாம்
தத்துவம் என்பது ஊகங்களின் சாத்தியங்களையும் தர்க்கமுறைமைகளையும் ஆராயும் ஓர் அறிவுத்துறை என்று வகுத்துக்கொள்ளலாம். எந்தத் துறையிலானாலும் முதல் ஊகங்களை நிகழ்த்துவதற்கே துணிச்சலான கற்பனையும் கூரிய தர்க்கமும் தேவைப்படுகிறது. அதையே தத்துவம் அளிக்கிறது.
ஆகவே தத்துவவாதி எப்போதும் இருப்பான். அவன் அன்றைய புறவயச் சிந்தனைகளில் இருந்து தூயதர்க்கத்தைப் பிரித்து எடுத்து அதைக்கொண்டு ஊகங்களை நிகழ்த்திக்கொண்டே இருப்பான். அந்த ஊகங்களில் முக்கால்பங்கு அசட்டுத்தனமானவையாக நிரூபிக்கப்படும். எஞ்சியவை சிந்தனையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்லும். இது ஒரு அழியாத முன்னகர்வாகவே இருக்கும் என்று தோன்றுகிறது.
இலக்கியம் செயல்படும் தளமே வேறு. அதன் ஆயுதம் தர்க்கம் அல்ல. அது கற்பனையில் நிகழ்கிறது . தர்க்கத்தின் திட்டவட்டத்தன்மையை அது எப்போதுமே மீறிச்செல்லும். ஆகவே அது எப்போதுமே மங்கலான பகுதிகளை, எல்லைக்கோடுகளின் மீறலை கூர்ந்து கவனிக்கும்.
இருவகை அறிதல்களில் இருந்தும் அது தனக்கான மூலங்களை எடுத்துக்கொள்ளும். கற்பனைகளை அதனடிப்படையில் விரிவாக்கம் செய்துகொண்டிருக்கும். ஒருபக்கம் பிரபஞ்ச யதார்த்தத்தையும் மறுபக்கம் தனிமனித அகச்சிக்கல்களையும் அது பேசிக்கொண்டிருக்கும்.
மேற்கு மேலே சொன்ன இரு வகை அறிதல்களிலும் பெரிய பாய்ச்சல்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது என்பதில் நான் உடன்படுகிறேன். நவீனத் தத்துவத்திலும் அறிவியலிலும் நாம் எதையுமே அடையவில்லை. நாம் அவர்கள் சொல்வதை மேலோட்டமாக மொழியாக்கம் செய்வதையே அதிகம் செய்துகொண்டிருக்கிறோம்.
அதற்கான விடைகளை நாம் நம்முடைய கல்வித்துறையிலேயே தேடவேண்டும். அசலான சிந்தனைகளை உருவாக்குவதற்குரிய கல்வியே நம்மிடம் இல்லை. கொள்கைகளை கருதுகோள்களை புரிந்துகொள்ளும் வழக்கமே நம்மிடம் இல்லை. ‘பயில்வது’ மட்டுமே இங்கே இருக்கிறது.
ஆகவே நீங்கள் சொல்வது உண்மை. நாம் செல்லவேண்டிய தூரம் அதிகம்.
ஜெ