மலையாளியும் தமிழ்நாடும் :கடிதம்

   அன்புள்ள ஜெ,

இந்தக் கடிதத்தை தனிப்பட்டமுறையில் எழுதுகிறேன். இங்கே நான் பணியாற்றும் இடத்தில் உள்ள நண்பர்களை புண்படுத்த விரும்பவில்லை என்பதனால் என் பெயரை பிரசுரிக்கவேண்டியதில்லை. நான் நன்றாகவே தமிழில் எழுதுவேன். ஆனால் அலுவலகத்தில் தமிழில் எழுத முடியாது. தமிழ் மென்பொருட்களில் எனக்குப் பழக்கமும் இல்லை. ஆகவே ஆங்கிலத்திலே எழுதுகிறேன்.

உங்கள் இணையதளத்தில் மலையாளிகளை நாய்கள் [பட்டிகள்] என்று சொல்லி ஒரு கடிதம் வந்திருந்தது. நீங்களும் அதை பிரசுரித்திருந்தீர்கள். ஒருநாள் தாண்டியும் அது எடிட் செய்யப்படவில்லை. அதனால் நான் புண்படுகிறேன் என்றும் உடனே எடிட் செய்யுங்கள் என்றும் நான் சொல்ல வரவில்லை. அந்த நண்பரின் மனநிலையை நான் புரிந்துகொள்கிறேன். அந்தமனநிலை உள்ளவர்கள் எங்கேயும் இருப்பார்கள் என்று சொல்லவே அதை சுட்டிக்காட்டினேன்.

நான் ஈழவ சமூகத்தைச் சேர்ந்தவன். என் தாத்தா  பாலக்காட்டில் இருந்து சிறுவயதில் சென்னைக்கு ஓடிப்போய் அங்கே ஒரு பேக்கரியில் வேலைபார்த்தார்.அப்போது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. சென்னைதான் மலபார் பகுதி கேரளத்துக்கும் தலைநகரம். ஆகவே ஏராளமான மலையாளிகள் சென்னையிலே தொழில்களும் வேலையும் பார்த்தார்கள். மொழிவழியாக பார்க்க ஆரம்பிக்கவில்லை.

என் தாத்தா 1952 முதல் ஒரு பேக்கரியைச் சொந்தமாக நடத்தினார். பேக்கரி மிக நன்றாக நடந்துகொண்டிருந்தது. என் அப்பாவின் சகோதரிகள் கல்லூரிக்கு காரிலே போய்ப் படித்தார்கள். அப்போது 1971  என்று நினைக்கிறேன், முதல்முறையாக கலைஞர் ஆட்சிக்கு வந்தார். அவர் மலையாளிகளுக்கு எதிராக கடுமையாக வெளிப்படையாக பேசினார். அந்தப்பேச்சை தினமணி போன்ற பத்திரிகைகளும் காமராஜரும் கடுமையாகவே கண்டித்தார்கள். ஆனால் திமுகவினரால் சென்னையில் உள்ள மலையாளிக் கடைகள் குறி வைத்துத் தாக்கப்பட்டன.

சென்னையில் அப்போது மலையாளிகள் நடத்திவந்த இரண்டாயிரத்துக்குமேல் டீக்கடைகள் இருந்தன. அவற்றில் பெரும்பாலான கடைகள் அப்போது மூடப்பட்டன. சொந்தமாக இடம் வைத்திருந்த சிலர் மட்டும்தான் தப்பித்தார்கள். மற்றவர்கள் கிடைத்த விலைக்கு கடைகளை விற்றுக்கொண்டு ஓடினார்கள். சென்னையில் மலையாளி டீக்கடைகளின் ஆதிக்கம் அங்கே முடிவடைந்தது. என் தாத்தா கடையை மூடிவிட்டு பாலக்காட்டுக்குச் சென்றார்.

பாலக்காட்டில் தாத்தா ஒருபேக்கரி வைத்தார். அது சரியாக போகவில்லை. அப்போது பாலக்காடு சின்ன ஊர். விவசாயமும் நன்றாக நடக்கவில்லை. ஆகவே கொஞ்சம் கொஞ்சமாக வறுமை வந்து நோய் வந்து இறந்தார். என் அப்பா பிடெக் படித்துவிட்டு 1975ல் கோயம்புத்தூரில் ஒரு மில்லில் வேலைக்குச் சேர்ந்தார். தீவிரமான தொழிற்சங்கவாதியாக இருந்தார். ஆகவே வேலையை இழந்து ஒரு சிறிய துணிக்கடை நடத்திவந்தார். கடைசிவரை தீவிரமான கம்யூனிஸ்டாகவே இருந்தார். சென்றவருடம் இறந்து போனார்.

நாங்கள் நான்குபேர். நான்குபேருமே நன்றாகப் படித்து வேலையில் இருக்கிறோம். நான் இப்போது சிங்கப்பூரில் ஒரு கெமிக்கல் நிறுவனத்தில் வேலைபார்க்கிறேன். இது என் குடும்பத்தின் கதை. நான் பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாமே தமிழ்நாட்டிலேதான்.

என் சிறுவயது முதல் நான் எப்போதுமே மலையாளி என்பதற்காக அவமானப்படுத்தப்பட்டே வந்திருக்கிறேன். என்னை எல்லாருமே மலையாளத்தான் என்றுதான் அழைப்பார்கள். தமிழ் சினிமாவில் மலையாளப்பெண்கள் ஒழுக்கம் இல்லாதவர்கள் என்றுதான் காட்டுவார்கள். என்னுடைய சகோதரிகளைப் பற்றி என்னிடமே கேவலமாக பேசுவார்கள். பல நண்பர்களே கூட பேசியிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மலையாளி என்றாலே டீக்கடை நாயர்தான். நான் நாயர் இல்லை. என் அப்பா டீக்கடையும் வைக்கவில்லை. ஆனால் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் கூட ‘நாயர் சூடா ஒரு சாயா எடு’ என்று என்னைச் சொல்லி கிண்டல் செய்வார்கள். நான் வகுப்பில் முதலிடம் பெறும் மாணவன். ஆனால் தமிழ்நாட்டில் ஒரு ஆசிரியர் கூட என்னை மதிப்பாக நடத்தியதில்லை. ஏதாவது சின்ன தப்பு நடந்தால்கூட ‘பேசாமல் கேரளத்துக்கு போடா’ என்றுதான் சொல்வார்கள்.

நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது நண்பர்களுடன் சேர்ந்து சின்ன தப்புசெய்தேன். ஆசிரியர் ஒருவர் வகுப்பில் ஓரமாக நின்று நான் அரைமணிநேரம் டீ ஆற்ற வேண்டும் என்று சொன்னார். நான் கண்ணீர் விட்டுக்கொண்டு அரைமணிநேரம் வெறும்கையால் டீ ஆற்றினேன். சுருக்கமாகச் சொல்கிறேனே, என்னை பிராமணர் அல்லாத ஒரு தமிழ்நாட்டுக்காரர்கூட மதிப்பாக நடத்தியதில்லை. கஞ்சி என்றுதான் கூப்பிடுவார்கள். என்ன சோகம் என்றால் எனக்கு மலையாளம் பேசவோ எழுதவோ தெரியாது.

ஒரு நண்பர் கேரளத்திலே அவருக்கு வந்த பிரச்சினை பற்றி எழுதியிருந்தார். எனக்கு அதைவிட பெரிய பிரச்சினை வந்தது. எனக்கு நெட்டிவிட்டி சர்டிபிகெட்டை தர மாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். ஆகவே பாஸ்போர்ட் கிடைக்கவில்லை.  துபாய்க்கு போவதற்கான ஒருவேலையும் இந்தோனேஷியா போவதற்கான வேலையும் இதனால் தவறிப்போயிற்று. நான் எல்லா சர்ட்டிபிகெட்டுகளையும் கொடுத்தாலும் தூக்கி கீழே போட்டுவிட்டு ‘மலையாளத்தானுங்க வந்திருவானுக போங்கடா’ என்று சொல்வார்கள். எத்தனை நிகழ்ச்சிகள். நான் பல இரவுகளில் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன்.

கேரளத்துக்குப் போய் நேட்டிவிட்டி சர்டிபிகெட்டுக்கு முயற்சி செய்தேன். அங்கே நிலம் வீடு எதுவுமே இல்லை. ஆகவே தரமாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். இரண்டு வருடம் முயற்சி செய்தபிறகு புதிதாக வந்த ஒரு பிராமண அதிகாரி எனக்கு நேட்டிவிட்டி சர்ட்டிபிகெட் தந்தார். சிங்கப்பூர் வந்துவிட்டேன். சிங்கப்பூர் வருவதற்காக விமானநிலையத்தில் நின்றபோதும்கூட என்னை இரண்டு தமிழ் ஆபீசர்கள் கூட்டிக்கொண்டு போய் கடுமையாக அவமானம் செய்து விசாரித்தார்கள். ‘மலையாளத்தானுங்க கோயம்புத்தூர் அட்ரஸ்ல போலி பாஸ்போர்ட் எடுக்கிறானுங்க’ என்று சொன்னார்கள். ‘அங்கே என்ன சாயா போட போகிறாயா?” என்று ஒரு அதிகாரி கேட்டார்.

இங்கே நான் ஒரு தமிழ்ப்பெண்ணைத்தான் திருமணம் செய்துகொண்டிருக்கிறேன். ஸ்ரீலங்காவைச் சேர்ந்தவர். என் அலுவலகத்தில் உள்ள நண்பர்கள் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். இங்கே அந்த பிரச்சினை இல்லை. ஏனென்றால் எல்லாருமே ‘வந்தேறிகள்’ தான். இங்கே சிங்கப்பூரிலே பிறந்து வளர்ந்த தமிழர்கள் வேலைக்கு வந்த தமிழர்களை கேவலமாக பார்ப்பார்கள். அதைப்பற்றிச் சொல்லி எல்லாரும் ரத்தக் கொதிப்புடன் பேசிக்கொள்வார்கள்.

இதுதான் மனிதர்களின் மனநிலை. எல்லா இடத்திலும் இதுதான் நடக்கிறது. இன்று பத்துலட்சம் தமிழர்கள் கேரளத்தில் நிரந்தரமாகக் குடியேறியிருக்கிறார்கள். 1990 களில்  தமிழ்நாட்டில் வரட்சி வந்தபோது இருந்து பிழைப்பு இல்லாமல் கூலிவேலைக்கும் வீட்டுவேலைக்கும் போய் குடியேறியவர்கள். எர்ணாகுளம் போன்ற இடங்களில் இந்த தமிழர்கள் பல பஞ்சாயத்துகளில் பெரும்பான்மையினராக இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் ரேஷன் கார்டுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அரைலட்சம்பேருக்கு அரசாங்க வீடுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல மலைப்பகுதிகளில் பத்துலட்சம் தோட்டத்தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.

அங்கே இன்றுவரை எந்த  பொறுப்பான அரசியல்வாதியும் அவர்களை இழிவாகவோ ஊரைவிட்டு துரத்த வேண்டும் என்றோ பேசியதில்லை. ஒரு கம்யூனிஸ்டுத் தலைவர் அப்படி பேசுவார் என்று நினைக்கிறீர்களா? முல்லைப்பெரியார் போன்ற பிரச்சினைகள் வந்து தமிழ்நாட்டிலே கேரள வண்டிகள் தடுக்கப்பட்டபோதுகூட அப்படி ஒரு உணர்ச்சி அங்கே வந்ததில்லை. அங்கே சென்று குடியேறிய தமிழர்கள் அடித்தள மக்கள். அவர்களில் பலருக்கு படிப்பறிவு இல்லை.  ஆகவே அவர்களை கிண்டல்செய்யக்கூடிய ஒரு மனநிலை அங்கே உண்டு. அது தவறுதான். ஜெயராம் போன்ற முட்டாள்கள் அத்துமீறி பேசுவது அராஜகம்தான். ஆனால் இங்கே தமிழ்நாட்டில் சேட்டுகளை எப்படியெல்லாம் கிண்டல் செய்கிறார்கள். மக்கள் டிவியிலே சேட்டுகளை கிண்டல்செய்து ஒரு நிகழ்ச்சியே வருகிறதே. யாராவது கண்டிருத்திருக்கிறார்களா?

மலையாளப்படங்களில் அவ்வப்போது தமிழ்நாட்டை கிண்டல்செய்து காட்சிகள் வரும். அதேபோல தமிழ்சினிமாவிலும் மலையாளிகளை கிண்டல் செய்கிறார்கள். ஆனால் ‘கறுத்தபட்சிகள்’ என்று ஒரு படம் வந்தது. கமல் இயக்கியது. அதில் மம்மூட்டி தெருவில் அயர்ன் செய்யும் தமிழ்நாட்டுத் தொழிலாளராக வந்தார். தமிழ் மக்களைப் பாராட்டி சகோதர உணர்ச்சியுடன் நெகிழ்ச்சியாக எடுக்கப்பட்ட படம் அது. அவர்களை அன்னியர்களாக நினைக்கும் சிலருக்கு எதிரான படம் . அது மட்டும் ஏன் நம் கண்ணுக்கு படுவதில்லை?

எங்கும் சாமானிய மனிதர்களுக்கு பிற மனிதர்களை வெறுக்கும் மனநிலை இருக்கும். இங்கே நான் வேலைபார்க்கும் இடத்தில் ஒரே ஒருவர்தான் தாழ்த்தப்பட்ட தமிழர். அவரைப்பற்றி மற்றவர்கள் இழிவாகவே பேசுவார்கள். தங்களுக்குள்ளேயே மற்றவர்களை இப்படி நடத்துபவர்கள் வெளியே இருந்து வந்த ஒருவரை தாழ்வாக நடத்துவது மிகவும் சாதாரணமான செயல்தான். அதைவைத்து நாம் ஒரு மொழியையோ இனத்தையோ வெறுத்தால் அதுதான் தப்பானது

என் மன உறுத்தல் ஒன்றை சொல்கிறேன். சின்ன வயதிலேயே எனக்கு கம்யூனிஸ்டு தலைவர்களான கெ.டி.கெ. தங்கமணி, கிருஷ்ணன், வி.பி.சிந்தன் முதலியவர்களை தெரியும். தமிழ்நாட்டுக்கு வந்து இங்குள்ள ஏழை தொழிலாள மக்களுக்காக வாழ்க்கையே அர்ப்பணம் செய்த கேரள கம்யூனிஸ்டுகள் பலர் உண்டு. சொந்தமாக எதையுமே அடையாத தியாகிகள் அவர்கள். அவர்கள் ஒருவரைப்பற்றிக்கூட ஒரு வாழ்க்கைக் குறிப்பு தமிழ்நாட்டிலே எழுதப்பட்டதில்லை. காரணம் அவர்கள் மலையாளிகள் என்ற வெறுப்பு. அவர்களின் சேவையால் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட தொழிலாளர்கள்கூட அவர்களை வெறுக்கிறார்கள். இதுதான் நடைமுறை.

யாரோ எதையோ சொன்னார்கள் என்பதற்காக வெறுப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டாம் என்பதற்காகவே இந்த நீண்ட கடிதத்தை எழுதுகிறேன். வெறுப்பதற்காக எதையாவது காரணமும் கண்டுகொள்ளவேண்டாம். படித்தவர்கள் வெறுப்புக்கு எதிராகத்தான் போராட வேண்டும்.

அன்புடன்

பி

[சுருக்கம்/மொழியாக்கம்]

முந்தைய கட்டுரைஏன் எல்லாவற்றையும் பேசுகிறீர்கள்?
அடுத்த கட்டுரைஏ.ஆர்.ரஹ்மான்