பகுதி பத்து : மீள்பிறப்பு – 3
வாரணவதத்தின் மாளிகை அவர்கள் எண்ணியதைவிட பெரியதாக இருந்தது. தொலைவில் அதைப் பார்த்தபோதே குந்தியின் முகம் மலர்ந்துவிட்டது. விமலம் என்னும் மலைச்சரிவில் தேவதாரு மரங்கள் சூழ அது வெண்ணிறமாக தலை தூக்கி நின்றது. மாலையொளியில் அதன் வெண்ணிற குவைமுகடுகள் மின்னிக்கொண்டிருந்தன. அஸ்தினபுரியின் அமுதகலசக் கொடி நடுவே பறக்க வலப்பக்கம் குந்தியின் சிம்மக் கொடியும் இடப்பக்கம் தருமனின் நந்தமும் உபநந்தமும் பொறிக்கப்பட்ட கொடியும் பறந்தன.
குந்தி “இம்மாளிகையின் பெயர் என்ன?” என்றாள். புரோசனன் பணிந்து “தேஜோமயம் பேரரசி” என்றான். “வெண்ணிறமுள்ளதாகையால் உள்ளே எப்போதும் நல்ல ஒளி இருக்கும். ஆகவே சிற்பி இப்பெயரைச் சொன்னார். நானும் ஆம் என்றேன்.” குந்தி புன்னகையுடன் “ஆம், நல்லபெயர்” என்றாள். சிறுமியைப்போல கைகளை விரித்து “அகன்றது!” என்று சொல்லி திரும்பி தருமனிடம் “நாம் அறுவருமே இங்கே தங்கலாம்” என்றாள். தருமன் “ஆம், நமக்கு போதுமானதாக இருக்கும்” என்றான்.
அவர்களின் மகிழ்ச்சி அர்ஜுனனுக்குப் புரிந்தது. அது ஒருவகை நாடுகடத்தல் என்று அவர்கள் ஐயம் கொண்டிருந்தனர். அந்த மாபெரும் மாளிகை அந்த ஐயத்தைப் போக்கியது. அவர்களை திருதராஷ்டிரர் இளவரசர்களாகவும் பேரரசியாகவுமே எண்ணுகிறார் என்பதற்கான சான்று. குந்தி ஒரு சிறிய மரவீட்டை எதிர்பார்த்திருப்பாள் என நினைத்துக்கொண்டபோது அர்ஜுனன் புன்னகைத்தான். அக்கணமே பீமன் “தாங்கள் ஒரு மரக்குடிலை எதிர்பார்த்தீர்களோ அன்னையே?” என்றான். குந்தி திரும்பி சினம் மின்னிய விழிகளால் நோக்கிவிட்டு திரும்பிக்கொண்டாள்.
வாரணவதத்தின் கோட்டைவாயிலில் நுழைந்ததுமே குந்தி மகிழ்ச்சி கொள்ளத் தொடங்கிவிட்டாள். அவர்களை வரவேற்க ரதசாலை முழுக்க தோரணங்களும் வரவேற்பு வளைவுகளும் அமைக்கப்பட்டிருந்தன. இல்லங்களின் முகப்புகளில் மலர்மாலைகள் தொங்கின. இருபக்கமும் கூடி நின்றிருந்த மக்கள் அஸ்தினபுரியையும் அரசியையும் பட்டத்து இளவரசையும் வாழ்த்தி குரலெழுப்பினர். “வாரணவதம் நமது ஆட்சியில் உள்ளதா என்ன?” என்று குந்தி கேட்டாள். “இல்லை பேரரசி. இது சிருங்கபதம் என்னும் மலைநாட்டைச் சேர்ந்தது. நமக்குக் கப்பம் கட்டுபவர்கள்” என்றாள் மாலினி. மலைப்பகுதிகளுக்குரிய பெருமுழவுகளும் பானைமுழவுகளும் கொம்புகளும் முழங்கிக்கொண்டிருந்தன.
நகர் வாயிலிலேயே புரோசனன் தன் படைகளுடன் வந்து பணிந்து குந்தியை வரவேற்றான். மங்கலவாத்தியங்கள் முழங்க தாலப்பொலி ஏந்திய இளையோர் அணிவகுத்து நின்று குந்தியை வாழ்த்தி குரலெழுப்பினர். கொற்றவை ஆலயத்தின் முன் அமைக்கப்பட்டிருந்த சிறியமேடையில் குந்தி அமர்ந்திருக்க வாரணவதத்தின் குலத்தலைவர்கள் அவர்களின் கோல்களை அவள் பாதங்களில் வைத்துப் பணிந்து தேனும் கோரோசனையும் புனுகும் கையுறையாக அளித்தனர். குடிகள் அவளைக் காண முட்டி மோதினர். அவர்களில் பெரும்பாலானவர்கள் யாதவர்கள் என்பதை அர்ஜுனன் கண்டான்.
சடங்குகளுக்குப்பின் அரண்மனைக்குச் செல்லும்போது தருமன் “நம் மீது பேரன்பு கொண்டிருக்கிறார்கள் இளையோனே” என்றான். பீமன் “ஆம், நமக்கு கப்பம் கட்டுபவர்கள் அல்லவா?” என்றான். தருமன் அவனை நோக்கியபின் “இந்த ஊரின் ஆலயத்தை பெரியதாகக் கட்டவேண்டும்… அதை குலத்தலைவர்களுக்கு நான் வாக்குறுதியளித்துள்ளேன்” என்றான். அர்ஜுனன் “அது நிகழட்டும்” என்றான். மாளிகையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது தருமன் முகமலர்ச்சியுடன் இருபக்கங்களையும் நோக்கியபடி வந்தான். தேவதாருக்கள் பச்சைநிறக் கோபுரங்கள் போல எழுந்து வான் தொட நின்றன. அவற்றின் உச்சிக்கிளைகள் பட்டு மேலே ஒழுகிச்சென்ற வெண்மேகம் கலைந்தது.
தேஜோமயத்தின் அத்தனை அறைகளும் புதியவையாக இருந்தன. “சேவகர்களும் பிறரும் தங்க மலைக்கு மறுபக்கம் குடில்கள் உள்ளன பேரரசி” என்றான் புரோசனன். “இங்கே நானும் என் சேவகனும் மட்டுமே தங்களுடன் தங்குவோம். வெளியே மலைச்சரிவில் காவலுக்கு படைகள் உண்டு. தாங்கள் இங்கே நோன்பிருக்கப்போவதனால் ஆலயத்தின் நோன்புணவை மட்டுமே அருந்தவேண்டும். நோன்புணவு அருந்தாதவர்கள் உங்களை தீண்டக்கூடாது. எனவே பிறரை அகற்றிவிட்டோம். நாங்களும் நோன்புணவு உண்பவர்களே…” என்றான்.
மஞ்சங்களும் இருக்கைகளும் குளியலறைகளும் அனைத்துமே பழுதில்லாமல் அமைக்கப்பட்டிருந்தன. நகுலன் “அழகிய இல்லம்… நம் அஸ்தினபுரியின் அரண்மனையை விடச் சிறப்பானது” என்றான். “இளையவனே, அது மாமன்னர் ஹஸ்தியின் காலம் முதல் இருந்து வரும் அரண்மனை” என்றான் தருமன். “அதைத்தானே சொன்னேன். அது பழையது… இதுதான் புதியதாக இருக்கிறது” என்றான் நகுலன். பீமன் நகைத்து “இது நகுலன் வந்து தங்கிய அரண்மனை என்று புகழ்பெறட்டும்… உன் வழித்தோன்றல்கள் அதற்காக எல்லா குறைகளையும் மறந்து இங்கே நெருக்கியடித்துக்கொண்டு வாழ்வார்கள்” என்றான்.
வாரணவதத்தின் சிவன்கோயில் இயற்கையாக அமைந்த ஒரு குகைக்குள் இருந்தது. மலையில் வெட்டப்பட்ட படிகளில் ஏறிச்சென்றபோது குகையின் சிறிய முகப்பு தெரிந்தது. உள்ளே கண்களை இல்லை என்றாக்கும் இருள். வெளியே பூசகரின் சிறிய இல்லமும் சேவகர்களின் நான்கு இல்லங்களும் இருந்தன. அவர்கள் அங்கே செல்லும்போது மழை ஓய்ந்து பிசிறுகளாக காற்றில் நீர்த்துளிகள் பறந்து இறங்கிக் கொண்டிருந்தன. வானில் மேகங்கள் சாம்பல்குவியல்கள் போல மூடியிருந்தன. அவ்வப்போது தெற்குத்திசை உறும அதைக் கேட்டு மலைமுடிகள் மறுமொழி எழுப்பின. அப்பால் மலையடுக்குகளின் மேல் மழை புகைத்திரை போல இறங்கியிருந்தது. மழைக்குள் ஏதோ பறவை குறுமுழவை விரலால் மீட்டியதுபோல ஒலியெழுப்பியது.
பனையோலைக்குடைகளைப் பிடித்தபடி சேவகர்கள் அவர்களுக்குப்பின்னால் வந்தனர். குந்தி மாலினி துணையுடன் மெல்ல காலெடுத்துவைத்து நடந்தாள். கரியபெரும்பாறை தொலைவில் இருள் என்றே தோன்றியது அருகே நெருங்கும்தோறும் அதன் பேருருவம் கண்களை நிறைத்து சித்தத்தை மலைக்கச்செய்தது. மழையில் நனைந்து சிலிர்த்த வானுருவ யானை. அது உருவாக்கும் மலைப்பு எதனால் என அர்ஜுனன் சிந்தித்தான். அது திசையை இல்லாமலாக்கிவிடுகிறது. திசை என்பது வானம், முடிவிலி. அந்தத் திட இருள் திசையில் சென்று நோக்கை முட்டிக்கொள்ளச் செய்கிறது. பிரக்ஞை அதை ஏற்காமல் தவிக்கிறது.
அப்பால் பலமடிப்புகளாக எழுந்து சென்ற மலைத் தொடரின் காலடியில் இருந்தது அந்தப்பாறை. அதன் நடுவே திறந்த வாய் போலிருந்தது குகை. பாறையின் அதன் விரிசல்களிலும் மடிப்புகளிலுமாக மழைநீர் வழிந்து சிறிய ஓடையாக மாறி கால்களை நனைத்துச் சென்றது. “இந்தப்பாறையை தமோவாரணம் என்கிறார்கள் பேரரசி. அக்காலத்தில் காளமுகம் என்ற பெரிய மேகம் வானை முழுமையாக மூடியிருந்தது. ஆகவே நூறு யுகங்களாக இங்கே சூரிய ஒளி படவேயில்லை. இங்கு தேங்கியிருந்த இருள் அப்படியே இறுகி ஒரு பாறையாக ஆகியது. மேலும் நூறு யுகங்கள் கடந்தபோது அது ஒரு யானையாக ஆகியது” என்றார் பூசாரி.
“அந்த யானை பிளிறியபடி தன் பெருங்கால்களை எடுத்துவைத்து மலையிறங்கத் தொடங்கியது. அதன் காலடிபட்டு பெரும்பாறைகள் உருண்டு சென்று கிராமங்கள் மேல் விழுந்தன. இடியோசை போல ஒலி எழுந்தது. மலையை ஏறிட்டு நோக்கிய அடிவாரத்து மக்கள் மேலிருந்து பெரும் இருள் இறங்கிவருவதைக் கண்டனர். அது ஓர் யானை என்று அறிந்தனர். அவர்கள் ஓடிச்சென்று மலையடிவாரத்தில் தவம் செய்துகொண்டிருந்த கபிலமுனிவரின் கால்களைப் பணிந்தனர்.”
“கபிலரின் கோரிக்கையை ஏற்று சிவபெருமான் இங்கே வந்தார். மலையிறங்கி வந்த மாபெரும் யானையை தன் இடக்கையால் தடுத்து நிறுத்தினார். அதை கிழித்துக்கொன்று அதன் கரிய தோலை உரித்துப்போர்த்துக்கொண்டு இங்கே அமர்ந்தார். இந்த மலைப்பாறைதான் அந்தத் தோல். உள்ளே சிவன் லிங்கவடிவாக எழுந்தருளியிருக்கிறார்” என்றார் பூசாரி. “உள்ளே சிவலிங்கத்துக்கு அன்னாபிஷேகம் செய்வோம். அபிஷேக அன்னத்தை உண்டு நாற்பத்தொருநாள் இங்கே நோன்பிருப்பது பெருங்கழுவாய் எனப்படுகிறது. அக இருள் அகலும் என்று நூல்கள் சொல்கின்றன.”
குகைக்குள் நீர்த்துளிகள் சொட்டிக்கொண்டே இருந்தன. ஊறிச்சொட்டிய நீர்த்துளிகள் கல்லாக ஆனதுபோல மேலே பாறைக்கூம்புகள் தொங்கின. கல்லால் ஆன ஓடைகள். கல்லருவிகள். கற்சுழிகள். கல்லலைகள். சிறிய நெய்விளக்கை ஏந்தி முன்னால் சென்ற பூசாரி “இந்தக்குகை முடிவற்றது. பாதாளம் வரை செல்லும் என்கிறார்கள். இவ்வழியாக அக்காலங்களில் வாசுகியும் கார்க்கோடகனும் வெளிவந்ததை முனிவர்கள் பார்த்திருக்கிறார்கள். இதற்கு ஏழு கிளைகள் என்பதனால் சப்தபிலம் என்று இது அழைக்கப்படுகிறது. ஏழுதலையுள்ள கரியநாகம் என்று இதை சூதர்கள் பாடுவதுண்டு” என்றார்.
குகைக்குள் ஒரு சிறிய குடைவுக்குள் மூன்றடி உயரமான லிங்கம் இருந்தது. “இது தானெழுந்த லிங்கம்.ஆகவே ஆவுடை இல்லை. ஆவுடை இப்புவியேதான். ஆகவே இதை பூலிங்கம் என்பதுண்டு” என்றார் பூசகர். “அமர்ந்துகொள்ளுங்கள் தேவி!” அவர்கள் ஈரத்தரையில் அமர்ந்துகொண்டார்கள். “இங்கே எப்போதும் நீர் சொட்டிக்கொண்டுதான் இருக்கும். லிங்கம் அக்னி ரூபமானது. இருளின் குருதி இந்த நீர்த்துளி. இது லிங்கத்தை குளிர்விக்கிறது என்பது புராணம். எரியும் சித்தங்களை இந்நீர்த்துளிகள் குளிர்விக்கும் என்கிறார்கள்.”
இருளில் ஒரேயொரு சுடர் மட்டும் துணையிருக்க அமர்ந்திருக்கையில் அகம் கனவுக்குள் செல்வதை தவிர்க்கமுடியவில்லை. மெல்லிய சேறுபோல எண்ணங்கள் குழைந்து குமிழியிட்டன. குருதியின் வீச்சம் நாசியில் எழுவதுபோலிருந்தது. குமட்டுவதுபோலவும் தலைசுழல்வதுபோலவும் மூச்சுத்திணறுவதுபோலவும் தோன்றியது. ஆனால் அங்கிருந்து எழவும் முடியவில்லை. ஆம். குருதிதான். பச்சைக்குருதி. ஆனால் இங்கே அது எழக் காரணமே இல்லை. குகைக்குள் உள்ள கந்தக வாசனையா? இல்லை ஏதேனும் ஊனுண்ணி மிருகம் தன் இரையுடன் அமர்ந்திருக்கிறதா?
வெளியே வந்தபோதுதான் குந்தி அழுதுகொண்டிருப்பதை அர்ஜுனன் கண்டான். அவளுடைய மெல்லிய விசும்பல் கேட்டுக்கொண்டே இருந்ததை நினைவுகூர்ந்தான். அவளை நோக்கக் கூடாது என்று எண்ணிக்கொண்டான். தருமனின் விழிகளும் சிவந்து கலங்கியிருந்தன. அரண்மனைக்குச் செல்வது வரை அவர்கள் ஒன்றும் பேசவில்லை. குந்தி நேராக தன் அறைக்குள் சென்றுவிட்டாள். அர்ஜுனன் அரண்மனையின் முகப்புத்திண்ணையில் அமர்ந்து அப்பால் மலைச்சரிவில் தேவதாருக்களின் பசுஞ்செண்டுகள் மேல் படர்ந்து இறங்கிக்கொண்டிருந்த மேகங்களை நோக்கிக்கொண்டிருந்தான்.
இரவுணவுக்குப்பின் கூடத்தில் பேசிக்கொண்டிருக்கையில் குந்தி முழுமையாக மீண்டு வந்திருந்தாள். வெளியே குளிர்மேகம் இறங்கி சூழ்ந்து கொண்டிருந்தது. காவலர்களின் பந்தங்கள் நீருக்குள் போல மங்கலாக கரைந்து தெரிந்தன. “இளையவனே, இந்த இல்லம் எதனால் ஆனது?” என்றாள் குந்தி. “சுண்ணத்தாலும் மரத்தாலும் என எண்ணுகிறேன். சுண்ணவாசம் போகவில்லை” என்றான் பீமன். “ஆனால் ஒரு மர இல்லம் போல இது இல்லை. வெளியே நல்ல குளிர் இருக்கிறது. உள்ளே குளிரே தெரியவில்லை” என்றாள் குந்தி. “குளிர் நுழையாதபடி கட்டும் கலை அறிந்தவர்கள்” என்றான் தருமன். “மிக விரைவிலேயே கட்டியிருக்கிறார்கள். ஒரே மாதத்தில்” என்றான் பீமன்.
ஆனால் மறுநாள் ஆலயத்திற்குப் போய்விட்டு வரும்போது குந்தி மெல்லியகுரலில் “தருமா, நம் இல்லத்தை நாம் ஆராயவேண்டும்” என்றாள். “ஏன்?” என்றான் அவன். “நீ பார்த்திருக்க மாட்டாய். அங்கே ஒரு எறும்புகூட இல்லை. மரத்தாலான எந்த ஒரு கட்டடத்தையும் வண்டுகள் துளைக்கப்பார்க்கும். அவை வரவில்லை” என்றாள். “அத்துடன் பறவைகள் வந்து கூரைகளிலோ சாளரங்களிலோ அமரவில்லை. நேற்று ஒரு குதிரைவீரன் அணுகிவந்தான். நம் இல்லத்தைக் கண்டதும் குதிரை தயங்கி நின்றது. அஞ்சுவது போல!” பீமன் “அச்சம் அகத்தோற்றங்களை பெருக்குகிறது” என்றான். “இல்லை மந்தா. இன்று நீ நம் இல்லத்தின் சுவரை ஆராய்ந்து நோக்கு” என்றாள்.
திரும்பி வந்ததும் பீமன் தன் அறையின் சுவர்களை தட்டிப்பார்த்தான். மேலே ஏறி உத்தரங்களையும் மூங்கில்களையும் ஆராய்ந்தான். “அன்னையே, அரக்கும் மெழுகும் விட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது இது. மேலே மூங்கில்கள் எவையும் குழாய்களாக இல்லை. உள்ளே சுண்னமோ களிமண்ணோ போட்டு கெட்டிப்படுத்தியிருக்கிறார்கள்” என்றான். “இத்தகைய ஒரு கட்டுமானத்தைப்பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை” என்றாள் குந்தி. “இது ஏன் கட்டப்பட்டது? சேவகர்கள் எவருமின்றி நாம் மட்டும் ஏன் இங்கே தங்கியிருக்கிறோம்?”
சிந்தித்துக்கொண்டே அமர்ந்திருந்தபின் குந்தி “தருமா நீ கிளம்பும்போது விதுரர் என்ன சொன்னார்?” என்றாள். “அருகே சாரதி இருந்தமையால் மிலேச்சமொழியில் ஒரு விடுகதையை சொன்னார். அதன் பொருளென்ன என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்” என்றான் தருமன். “சொல் அதை” என்றாள் குந்தி.
தருமன் “ஏழு வரிகள்” என்றான். “சுவர்களை அறியாதவன் விடுதலையை அறியான். குருதியை அறியாத மிருகமே மிகப்பெரிய ஊனுண்ணி. யானைகள் அஞ்சுவதை வளையில் வாழும் எலிகள் அஞ்சுவதில்லை. முகர்ந்து பார்க்காமல் உண்ணும் மிருகம் ஏதுமில்லை. மண்ணின் பாதைகளனைத்தும் விண்ணிலுள்ளன. குருதியால்தான் உறுதியான முடிச்சுகள் போடப்படுகின்றன. புலன்களை உள்ளிழுக்கத்தெரிந்த ஆமையே நெடுநாள் வாழ்கிறது.”
குந்தி “தருமா, இச்சொற்களை நீ புரிந்துகொள்ளவில்லையா? அனைத்தையும் இந்த மாளிகையை வைத்தே புரிந்துகொள்ளப்பார். தத்துவார்த்தமாக சிந்தித்ததே நீ செய்த பிழை” என்றாள். “இம்மாளிகையின் சுவர்களை அறிந்துகொள் என்கிறார் முதல்வரியில். குருதியை அறியாத கொலைமிருகம் என்ன? நெருப்பு. அதை யானைகள் அஞ்சுகின்றன, எலிகள் அஞ்சுவதில்லை.” பீமன் எழுந்து “ஆம்” என்றான். எழுந்துசென்று சுவரை தன் கையால் ஓங்கி அறைந்தான். இருமுறை அறைந்தபோது சுண்ணம் உதிர்ந்து பலகை சிம்புகளாக உடைந்தது. உள்ளே அரக்கு உறைந்திருந்தது. “அரக்கும் மெழுகும்” என்றான் பீமன். “கணநேரத்தில் இந்த மாளிகை எரிந்து அழியும்… அருமையான சிதை அமைத்திருக்கிறான் புரோசனன்.”
அர்ஜுனன் தன் வாளை உருவியபடி எழுந்தான். “பொறு பார்த்தா” என்றாள் குந்தி. “முகர்ந்து பார்க்காமல் உண்ணும் மிருகம் ஏதுமில்லை. நமக்கு நஞ்சுணவு ஊட்டப்படலாமென்று விதுரர் அஞ்சுகிறார். நாம் இங்கிருந்து தப்பி விண்மீன்களை துணைகொண்டு விலகிச்செல்லவேண்டும் என்கிறார் அடுத்த வரியில்.” கைகளை உரசியபடி எழுந்த பீமன் “அன்னையே, நாம் இப்போதே கிளம்புவோம்” என்றான். குந்தி “இல்லை, அடுத்த வரி என்ன? புலன்களை உள்ளிழுக்கத்தெரிந்த ஆமையே நெடுநாள் வாழ்கிறது என்கிறார் விதுரர். பொறுத்திருக்கச் சொல்கிறார். இவர்களின் நோக்கமென்ன என்று அறிவோம்.”
“நாம் இப்போதே கிளம்பினால் என்ன?” என்றான் பீமன். “மைந்தா, அரசர்கள் எப்போதும் ஒரேயொரு கொலைத்திட்டத்தை மட்டும் வைத்திருக்க மாட்டார்கள். அதில் எப்படியேனும் இரை தப்பிப்பிழைக்குமென்றால் கொல்வதற்கு மேலும் இரு அடுத்தகட்டதிட்டங்களை வைத்திருப்பார்கள். அதைத்தான் ஒன்று தவறினால் மூன்று என்று சொல்கிறார்கள். நாம் இங்கிருந்து தப்பினால் இதைவிட பெரிய ஆபத்தை சந்திப்போம். இவர்களை ஏமாற்றித்தான் நாம் தப்பிச்செல்லவேண்டும்” என்றாள் குந்தி. “கனகனை அழைத்து புரோசனனின் திட்டத்தை அறியச் சொல்வோம்.”
“எப்படி?” என்றான் தருமன். “இவர்கள் கொள்கைக்காகவோ குலத்துக்காகவோ இதைச் செய்யவில்லை. செல்வத்துக்காக செய்கிறார்கள். ஆகவே இவர்கள் அனைவருக்குமே செல்வத்தின் மேல் பேராசை உண்டு. புரோசனன் பெற்றதைவிட அதிக செல்வத்தை நாம் அளிப்போம். அவர்களில் ஒருவன் காட்டிக்கொடுப்பான்” என்றாள் குந்தி. அர்ஜுனன் அவளை நோக்கிக்கொண்டிருந்தான். அவள் மீண்டும் பழைய குந்தியாக ஆகிவிட்டாள் என்று தெரிந்தது. இனிமேல் குகைக்குள் இருளில் இருந்தால் கண்ணீர் விடமாட்டாள்.
மறுநாளே கனகன் செய்தியுடன் வந்துவிட்டான். அவன் விழிகள் மாறியிருந்தன. அச்சத்துடன் அமர்ந்து இருபக்கமும் நோக்கியபின் தருமனிடம் “இளவரசே, நாம் அளித்த வைரங்களைப் பெற்றுக்கொண்டு புரோசனனின் உதவியாளனாகிய பிரமதன் அனைத்தையும் சொல்லிவிட்டான். உங்களை எரித்தழிக்கவே அவன் இந்த இல்லத்தை கட்டியிருக்கிறான்” என்றான். குந்தி விழிகளில் கூர்மையுடன் “உம்” என்றாள். “நீங்கள் அவனை நம்பி அச்சமும் காவலுமின்றி உறங்கத் தொடங்கியபின் இல்லத்தை மூடி தீவைத்துவிட்டு தப்பிச்செல்ல எண்ணியிருக்கிறான்.” பீமன் உரக்க உறுமியபடி கைகளை உரசிக்கொண்டான்.
“இளவரசே, அவன் இதன் அடியில் ஒரு சுரங்கத்தை வெட்டியிருக்கிறான். இல்லம் தீப்பற்றி எரியும்போது அந்தச் சுரங்கம் வழியாக அவன் மட்டும் தப்பிச்சென்று சௌவீர நாட்டை அடைய திட்டமிட்டிருக்கிறான். இங்கே எஞ்சும் எலும்புகளைக்கொண்டு அவனும் எரிந்தழிந்துவிட்டான் என்று அனைவரும் எண்ணுவார்கள். இதைக்கட்டியவன் புரோசனன். ஆகவே அவனும் இந்தத் தீயில் எரிந்தழிந்தால்தான் இது ஒரு விபத்து என்று அஸ்தினபுரியின் மக்கள் நம்புவார்கள். அவன் அணியும் மோதிரத்தையும் கல்மாலையையும் உதவியாளனாகிய கல்மாஷனுக்கு அணிவித்துவிட்டுச் செல்ல அவன் எண்ணியிருக்கிறான்” என்றான்.
“கனகரே, நீர் நாளையே திரும்பிச் செல்லும். விதுரரிடம் நான் சொன்னதாக நான்கு வரிகளைச் சொல்லும்!” என்றாள் குந்தி. “விதைகள் ஈர நிலத்திலேயே விழுந்தன. யானையைத் தாங்க எலியால் முடியும். நெய் எப்போதும் நெருப்பை தேடிக்கொண்டிருக்கிறது. புயல்வருவதை குளிர்காற்று அறிவிக்கும்” என்றாள். “ஆணை” என்றான் கனகன். “நம்மிடம் விதுரர் நேரடியாகவே சொல்லியிருக்கலாமே” என்றான் அர்ஜுனன். “அவருக்கு உறுதியாக ஒன்றும் தெரியவில்லை. அவரது கணிப்புகளைத்தான் சொல்லியிருக்கிறார்” என்றாள் குந்தி.
அன்றிரவு குந்தி “பீமா, அந்தச் சுரங்கவழியை கண்டடைந்து சொல்” என்றாள். அதன்பின் அந்த இல்லத்தில் துயிலமுடியாது என்பதை அர்ஜுனன் உணர்ந்தான். அதுவரை திடமான இல்லமாக இருந்தது தழல்கொழுந்துகளாக மாறி சூழ்ந்திருந்தது. சுவர்களின் பார்வையை, சுவர்கள் வன்மத்துடன் பற்களைக் கடிக்கும் ஒலியை, சுவர்களின் மூச்சின் குளிர்த்தொடுகையை உணரமுடிந்தது. பீமன் வீடுமுழுக்க அலைந்து பின் திரும்பி வந்து “அன்னையே கண்டுபிடித்துவிட்டேன். கனத்த கற்பாளம் ஒன்றால் அது மூடப்பட்டிருக்கிறது. இந்த இல்லம் எரிந்தாலும் குகைக்குள் அனல் வரமுடியாதபடி அமைக்கப்பட்டுள்ளது” என்றான். ”புரோசனனின் அறைக்கு மிக அருகே உள்ளது அது” என்றான். “இங்குள்ள எந்தச்சுவரையும் உடைக்கமுடியாது. உள்ளே கனமான இரும்புக்கம்பிகள் உள்ளன…”
மறுநாள் வாரணவத மூர்த்தியை வணங்கி பிராமணர்களுக்கு அன்னமிட்டு திரும்பும்போது குந்தியின் கண்கள் கனத்திருந்தன. எவருமே துயின்றிருக்கவில்லை என்று தெரிந்தது. அவர்கள் ஒரு சொல்கூட பேசிக்கொள்ளவில்லை. அரண்மனையை அடைந்து உணவுண்டபின் குந்தி தன் அறைக்குச் சென்றாள். அவள் ஒய்வெடுக்கவில்லை, அறைக்குள் சுற்றி நடந்துகொண்டிருக்கிறாள் என்றான் நகுலன். பின்பு வெளியே வந்து “பீமா, நாம் அணிவதற்குரிய கனத்த கம்பளி ஆடைகளை எவரும் அறியாமல் வாங்கி வை” என்றவள் திரும்பி பின்முற்றத்தில் நின்றிருந்த ஒரு பெண்ணை நோக்கி “அவள் யார்?” என்றாள்.
“இங்குள்ள மலைக்குடிப் பெண். திரியை என்று பெயர். அவளும் அவள் ஐந்து மைந்தர்களும் புரோசனனுக்கு அரக்கும் மெழுகும் கொண்டு கொடுத்து வந்தவர்கள்” என்றான் தருமன். குந்தி “ஐந்து மைந்தர்களும் வந்திருக்கிறார்களா?” என்றாள். “ஆம் அன்னையே. அவர்கள் மலைமேல் இருந்து தோலும் புலிநகங்களும் கொண்டு வந்திருக்கிறார்கள்” என்றான் தருமன். “அவர்களை இன்றிரவு இங்கேயே தங்கவை. இன்று அவர்கள் இங்கே சிறப்பான உணவு அருந்தட்டும்” என்றபின் விழிகளை நோக்காமல் குந்தி திரும்பிச்சென்றாள். தருமன் அர்ஜுனனை நோக்கினான். பீமன் “கம்பளியாடைகள் இன்றிரவே தேவைப்படும்” என்றான்.
மாலையில் திரியையும் அவள் ஐந்து மைந்தர்களும் அரண்மனையில் புரோசனனுடன் அமர்ந்து உணவருந்தினார்கள். பீமன் அவர்களுக்கு நெய்யன்னத்தை அள்ளி அள்ளி வைத்தான். திரியையின் மைந்தர்கள் மஞ்சள்நிறமான பெரிய உடலுடன் சிறிய கண்களும் அழுந்திய மூக்கும் மஞ்சள்நிறப் பற்களுமாக பீதர்களைப்போல் இருந்தனர். மலைகளில் சுமைதூக்கி அலைந்த வலுவான உடல்கள். உணவை அள்ளிய கைகளிலும் வாயிலும் நெடுந்தூரம் சுமைதூக்கி வந்த பசி தெரிந்தது. திரியை முதியவள். அவள் முகம் நிறைய சிறிய மருக்களுடன் காய்ந்த சுனையின் சேற்றுப்படுகை போல சுருக்கங்கள் அடர்ந்து தெரிந்தது. உணவைக் கண்டு அவள் சிரித்தபோது சுருக்கங்கள் இழுபட்டு கண்கள் முழுமையாகவே மூடிக்கொண்டன.
குந்தி சால்வையைப் போர்த்தியபடி உணவறைக்குள் வந்தபோது அவர்கள் அவளை நோக்கி சிரித்தனர். குந்தி “நாம் யவன மது கொண்டுவந்திருக்கிறோம் அல்லவா, அவர்களுக்குக் கொடு” என்றாள். பீமன் தலையசைத்தான். புரோசனன் “அரசியாரின் கருணை அடியவர்களுக்கும் தேவை” என்றான். “உங்களுக்கும்தான்” என்றாள் குந்தி. “இந்த இடம் என் அகத்தை எளிதாக்கிவிட்டது புரோசனரே. உங்களுக்கு நான் நன்றி சொல்லியாகவேண்டும்” என்றாள். புரோசனன் “ஏன் அச்சொற்கள் அரசி. நான் தங்கள் சேவகன் அல்லவா?” என்றான்.
அறைக்குள் வந்ததும் குந்தி “இன்றிரவு நாம் கிளம்புகிறோம்” என்றாள். அர்ஜுனன் “எதற்கு அவர்கள்?” என்றான். “நாம் இறந்துவிட்டதாக அஸ்தினபுரியினர் நம்பவேண்டும்… நாம் பிறர் அறியாமல் சிலகாலம் வாழவேண்டியிருக்கிறது” என்றாள் குந்தி. தருமன் “அன்னையே, இவர்கள் எளிய மக்கள்…” என்று சொல்லப்போக குந்தி “எளியமக்களின் உயிர்களை எண்ணுபவன் நாடாளமுடியாது. இவர்கள் இறப்பதனால் இவர்களைவிட எளிய பல்லாயிரம்பேர் காக்கப்படுவார்கள் என்றால் அதில் பிழையில்லை” என்றாள்.
தருமன் பெருமூச்சு விட்டான். குந்தி “உன் அறவுணர்வால் உன் மக்கள் தன் அரசனை இழக்கலாகாது. இவர்கள் புரோசனனின் ஆட்கள். இந்த அரக்குமாளிகையைக் கட்டியதில் தெரிந்தோ தெரியாமலோ பங்குகொண்டிருக்கிறார்கள்” என்றாள் குந்தி. தருமன் “நியாயங்கள் பல சொல்லலாம் அன்னையே. நாம் போர்களில் வீரர்களை பலிகொடுப்பதுபோல இவர்களை பலிகொடுக்கப்போகிறோம்” என்றான். “ஆம், அவ்வாறுதான். இறப்பில்லாமல் அரசியல் இல்லை” என்றாள் குந்தி.
அர்ஜுனன் “அன்னையே, நாம் யாரை அஞ்சுகிறோம்?” என்றான். குந்தி “உங்கள் பெரிய தந்தையை..” என்றாள். தருமன் “அன்னையே. இது…” என்று ஏதோ சொல்லத்தொடங்க “நன்றாக எண்ணிப்பார். நம்மை இங்கு அனுப்பியவர் யார்? அனுப்புகையில் அவர் சொன்ன சொற்கள் என்ன?” என்றாள் குந்தி. தருமன் நினைவுகூர்ந்து “இங்கே நமக்கு மிகச்சிறந்த மாளிகை அமைக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார். இம்மாளிகையில் நம்மை ஒளி சூழ்ந்துகொள்ளட்டும் என்றார். களிறுகொண்டானின் பாதங்களில் நமக்கு நிறைவு கிடைக்கட்டும் என வாழ்த்தினார்” என்றான். “ஆம், அவரது அகம் அச்சொற்களில் அறியாமல் வெளிவந்துவிட்டது. நம்மை நெருப்புசூழும் என்றும் நாம் இறந்து அமைதிகொள்வோம் என்றும்தான் சொல்லியிருக்கிறார்” என்றாள் குந்தி.
“அன்னையே” என்றபின் அர்ஜுனன் நிறுத்திக்கொண்டான். “அதுவேதான்.. எனக்கு ஐயமே இல்லை. இது அரசரின் சதி. சகுனியும் கணிகரும் துரியோதனனும் அவரை சூழ்ந்திருக்கிறார்கள்” என்று குந்தி பற்களைக் கடித்துக்கொண்டு சொன்னாள். “அவர்கள் நம்மைக் கொல்ல முடிவெடுத்துவிட்டார்கள். கொலைமுயற்சியில் தப்பிய எதிரியை எவ்விலை கொடுத்தும் உடனே கொன்றாக வேண்டும் என்பது அரசநீதி. அவர்கள் நம்மை விடமாட்டார்கள். விஷம் வைக்கலாம். துயிலில் எரிக்கலாம். நம் பணியாளர்கள் அனைவருமே அரசருக்குக் கட்டுப்பட்ட குடிமக்கள் என்பதை நாம் மறக்கவேண்டியதில்லை.”
“விதுரர் சொன்னது அதையே” என்றாள் குந்தி. “விண்மீன்களை நோக்கி வழிகண்டுபிடித்து தப்பச் சொல்கிறார். அடுத்த வரி முதன்மையானது தருமா. குருதியால்தான் உறுதியான முடிச்சுகள் போடப்படுகின்றன என்பதன் பொருள் ஒன்றுதான். நாம் வலுவான உறவுகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும் நீங்கள் ஷத்ரியர்குலங்களில் பெண்கொள்ளவேண்டும். நமக்குப்பின்னால் நம்முடையதேயான படை ஒன்று நின்றிருக்க வேண்டும் . அஸ்தினபுரியின் படை நம்முடையதல்ல என்று உணருங்கள். அங்குள்ள யாதவர்கள் எவரும் போர்வீரர்களுமல்ல.”
“அதுவரை நாம் இறந்தவர்களாகவே இருப்போம்… நம்மை இவர்கள் தேடலாகாது. நாம் இறந்துவிட்டோம் என எண்ணி அஸ்தினபுரியில் துரியோதனன் முடிசூடட்டும். நாம் இல்லை என்று எண்ணி அவர்கள் ஆணவம் கொள்வார்கள். கர்ணனின் வில்லை நம்பி துரியோதனன் பாரதவர்ஷத்தை வெல்லும் கனவுகளை வளர்க்கத் தொடங்குவான். ஏனென்றால் சகுனி இருபத்தாறாண்டுகளாக அங்கே அமர்ந்திருப்பது அஸ்தினபுரியின் மணிமுடிக்காக அல்ல, பாரதவர்ஷத்தை ஆளும் செங்கோலுக்காக” என்றாள் குந்தி. “அந்த ஆணவம் அவர்களுக்கு எதிரிகளை உருவாக்கும். அவ்வெதிரிகளே நமக்குப் பின்பலமாக அமைபவர்கள்.”
“விதுரருக்கு நீங்கள் சொன்னது அதைத்தானா?” என்றான் தருமன். குந்தி தலையசைத்தாள் “யானையைத் தாங்க எலியால் முடியும். யானை தன் எடையாலேயே கட்டுண்டது. எலிகள் மண்ணுக்கு அடியில் கட்டின்றி பெருகிப்பரவும். வெளிவருகையில் அவை பெரும்படையாக இருக்கும். நெய் நெருப்பை தேருவது போல நம் குருதி உரிய உறவுகளைத் தேடுகிறது. நாம் சித்தமாகும்போது புயலை அறிவிக்கும் குளிர்காற்று போல செய்திகள் இயல்பாகவே அவரைத் தேடிவரும்” என்றாள் குந்தி. தருமன் பெருமூச்சுடன் “இன்றிரவுக்குப்பின் நாம் நாடோடிகள்” என்றான். “எலிகள்” என்றான் அர்ஜுனன். “எலிகளைப்போல வளையினூடாக தப்பிச் செல்லப்போகிறோம்.”
வெண்முரசு அனைத்து விவாதங்களும்
மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக
வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்