பகுதி பத்து : மீள்பிறப்பு – 2
ரதங்கள் கங்கைக்கரை படித்துறையை நெருங்கியபோது பீமன் மெல்லமெல்ல அவனுள் எப்போதுமிருக்கும் கசப்பை இழந்துவிட்டதை அர்ஜுனன் கண்டான். ஓடும் ரதத்தில் இருந்து மரக்கிளை ஒன்றைப்பற்றி மேலேறி மரக்கிளைகளை வளைத்தும் விழுதுகளில் ஆடியும் தலைக்குமேலேயே பறந்து வந்து மீண்டும் ரதத்தட்டில் குதித்து தோள்களில் அறைந்துகொண்டு நகைத்தான்.
“மூத்தவரே, அதை எப்படி செய்கிறீர்கள்? எப்படி அந்த விரைவு வருகிறது?” என்றான் அர்ஜுனன். “ஏனென்றால் நான் மாருதன். காற்றின் மைந்தன்” என்றான் பீமன். “என் மூத்தவனாகிய அனுமனின் அருள் என்னிடமிருக்கிறது. இளமையில் நான் குரங்குகளின் பாலைக்குடித்து வளர்ந்தேன் என்கிறார்கள்” என்றபின் உரக்க நகைத்து “பார்த்தா, நான் புராணமாக இருப்பதையே விரும்புகிறேன். குருதியும் எலும்புமாக இருப்பதை அல்ல” என்றான். அர்ஜுனன் “அதற்கு கூடுதலாக ஒரு வால் உங்களுக்குத்தேவையாகும்” என்றான்.
கங்கைக்கரையில் அவர்களுக்கான படகுகள் காத்திருந்தன. கனகன் வந்து பணிந்து “படகில் ஒரு இரவும் பகலும். இரவு சுருதகர்ணம் என்ற இடத்தில் தங்குகிறோம். காலையில் கிளம்பி ஒருபகல் சென்றால் மாலையில் வாரணவதத்தை அடையமுடியும்” என்றான். பீமன் “மெதுவாகவே செல்வோம், விரைந்துசெல்வதற்கு போர் ஏதுமில்லையே” என்றான். “மூத்த இளவரசர் முடிந்தவரை விரைவாகச் சென்று மீளவேண்டும் என்கிறார். எத்தனை நாளாகும் செல்ல என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார்” என்றான் கனகன். “அவரிடம் சொல்லுங்கள், அங்கே வாரணவதத்திலும் அரசியல் சதுரங்கக் களங்கள் உண்டு என்று” என்றான் பீமன்.
கனகன் புன்னகையுடன் வணங்கிவிட்டுச்சென்றான். “மூத்தவரே, நீங்கள் அமைச்சர்களிடமாவது இத்தகைய பேச்சுக்களை பேசாமலிருக்கலாம்” என்றான் அர்ஜுனன். “ஆம், அதுவே முறை. ஆனால் முறைசார்ந்த எதையும் செய்யலாகாது என்று என் குலதெய்வமான குரங்குக்கு வாக்களித்திருக்கிறேன்” என்ற பீமன் அங்கே நின்ற மரக்கிளை ஒன்றைப்பற்றிக்கொண்டு எழுந்து காட்டில் மறைந்தான்.
அரசப்படகில் குந்தியும் பாண்டவர்களும் ஏறிக்கொண்டனர். படகின் அடியில் அரசிக்கான துயிலறை இருந்தது. மேலே ஆண்களுக்கான மூன்று துயிலறைகள் இருந்தன. பின்னால் வந்த படகில் உணவுப்பொருட்களும் சமையல்காரர்களும் ஏறிக்கொண்டனர். முன்னும் பின்னும் இரு காவல்படகுகளில் படைக்கலம் ஏந்தியவீரர்கள் ஏறினர். கட்டுகள் அவிழ்ந்து முதல் படகு அசைந்து கிளம்பியபின்னரும் பீமன் வரவில்லை. “மூத்தவர் இன்னும் படகில் ஏறவில்லை” என்றான் நகுலன். “வருவான்… அவன் ஒரு குரங்கு” என்றான் தருமன் சலிப்புடன்.
மரக்கிளை ஒன்றில் இருந்து சமையல்படகில் குதித்த பீமன் அங்கிருந்தே உரக்க “இளையவனே, என் இடம் இங்குதான். உனக்கு வேண்டிய உணவை மட்டும் எனக்குத் தெரிவி. நான் சமைத்துக் கொடுத்தனுப்புகிறேன்” என்றான். நகுலன் “மூத்தவரே, எனக்கு களிமண்ணில் சுட்ட கங்கைமீன்” என்றான். சகதேவன் “சுட்ட நாரை” என்றான். “சற்றுநேரத்தில் தேடிவரும்” என்றான் பீமன். “உணவுகூட போராகத்தான் இருக்கவேண்டுமா? காய்கறிகளை உண்டால் என்ன?” என்றான் தருமன். “மூத்தவரே, அவர்கள் ஷத்ரியர்கள். ஊனுணவை விலக்க தங்களைப்போல அறச்செல்வர்கள் அல்ல” என்றான் பீமன் உரக்க. அவனுடைய படகு பின்னால் நகர்ந்துசென்றது.
அர்ஜுனன் கரையை நோக்கியபடி நின்றிருந்தான். கங்கையின் பயணம் சலிப்பதேயில்லை. அது காலத்தில் பயணம் செய்வதுபோல. கங்கையின் வடக்கே செல்லச்செல்ல காலம் பின்னகர்ந்துகொண்டே செல்லும். நகரங்கள் பழையவையாக சிறியவையாக ஆகும். சிற்றூர்கள் மேலும் சிற்றூர்களாகி பின் பழங்குடி கிராமங்களாகும். அதன்பின் தவக்குடில்கள். அதன்பின் அடர்காடு. பனிமலைகளின் அமைதி.
தருமன் வந்து “இளையோனே, உன்னை அன்னை அழைக்கிறாள்” என்றான். அர்ஜுனன் குந்தியின் அறைக்குச் சென்றான். மான்தோல் விரிக்கப்பட்ட மஞ்சத்தில் குந்தி அமர்ந்திருந்தாள். தாழ்ந்த அறையாதலால் மேலே திறந்திருந்த சாளரம் வழியாக அலைத்துமிகள் அவ்வப்போது உள்ளே வந்தன. நீரின் ஓசை கேட்டுக்கொண்டே இருந்தது, மாபெரும் பசு ஒன்று நாவொலிக்க அசைபோடுவது போல. குந்தி மெல்லிய குரலில் முறையாக கையைக் காட்டி “அமர்க இளையோனே!” என்றாள். அர்ஜுனன் அமர்ந்துகொண்டதும் “அனைத்துப் பயண ஏற்பாடுகளும் முறையாக உள்ளன என நினைக்கிறேன்’ என்றாள். அர்ஜுனன் “ஆம் அன்னையே” என்றான். தருமன் “கனகன் பொறுப்பேற்றிருக்கிறான்” என்றான். அவள் அவனைவிட்டு பார்வையை சற்று விலக்கி ஆர்வமின்றி கேட்பவள் போல “யாதவன் ஏன் மதுரையை மீண்டும் தலைநகராக்கவில்லை? மகதத்தை அஞ்சுகிறானா?” என்றாள்.
“மதுரையை வசுதேவரே ஆளப்போகிறார் என்றான்” அர்ஜுனன் சொன்னான். “அங்கே கூர்ஜரத்தின் தெற்கே கோமதி ஆற்றின் இருமருங்கும் மிகவிரிந்த புல்வெளிகள் உள்ளன. காட்டுப்பசுக்கள் அங்கே மலிந்திருக்கின்றன. முன்னர் அங்கு கடலோரமாக அனர்த்தர்களின் குசஸ்தலி என்னும் சிறிய நகர் இருந்திருக்கிறது. அங்கிருந்து புல்லால் ஆன பாய்களும் பிறபொருட்களும் யவனநாடுவரை சென்றதனால் அதற்கு அப்பெயர் வந்தது என்கிறார்கள். அயோத்தியின் இக்ஷுவாகுக்கள் பாரதவர்ஷத்தை ஆண்ட காலகட்டத்தில் குசஸ்தலி முழுமையாகவே அழிந்தது. அப்பகுதி சதுப்பாகியது. அனர்த்தர்கள் இப்போது கூர்ஜரத்தின் சமந்தர்களாக வடபுலத்தில் குசமண்டலி என்னும் ஊரை அமைத்திருக்கிறார்கள். தலைமுறை தலைமுறையாக அந்நிலம் முழுமையாகவே கைவிடப்பட்டிருக்கிறது.”
“கைவிடப்பட்ட நிலத்தில் குடியேறலாகாது என்பது நூல்கள் வகுக்கும் நெறியல்லவா?” என்றான் தருமன். “அதற்கு அப்பால் கடல் நெடுந்தொலைவுக்கு இறங்கிச்சென்று பல நிலங்கள் வெளிவந்துள்ளன. பெரும்பாறைகள் கடலோரமாக எழுந்து நின்றிருக்கின்றன. அங்கே ஓர் ஊரை அவன் அமைக்கவிருக்கிறான்” என்றான் அர்ஜுனன். குந்தி திகைப்புடன் “சதுப்பிலா? அங்கே கன்றுகளும் வாழமுடியாதே?” என்றாள். “புல்வெளிகளில் ஊர்களை அமைப்பதல்லவா யாதவர்களின் வழக்கம்? மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கன்றுகளைப் பகிர்ந்துகொண்டு ஊரையும் அதனடிப்படையில் அமைக்கவேண்டும். தொன்மையான குலமுறைகள் உள்ளன அதற்கு” என்றாள்.
“அன்னையே, இளைய யாதவன் அமைக்க எண்ணுவது வழக்கமான ஒரு யாதவக்குடியிருப்பு அல்ல” என்றான் அர்ஜுனன். “அவன் அமைக்கவிருப்பது ஒரு நகரம். அதை அவனே முற்றதிகாரத்துடன் ஆளப்போகிறான். குலமுறை அதிகாரங்கள் சடங்குகள் அனைத்தையும் முழுமையாகவே நிறுத்திவிடுவான்.” குந்தி “நகரமா?” என்றாள். “ஆம், குலமுறை அரசுகளின் காலம் முடிந்துவிட்டது என்று அவன் எண்ணுகிறான். குலச்சபைகளால் ஆளப்படும் சிறிய அரசுகள் எல்லாமே வருங்காலத்தில் பெரும்போர்வீரனாலும் அவனால் நடத்தப்படும் படையாலும் ஆளப்படும் முற்றதிகார அரசுகளால் உண்ணப்பட்டுவிடும் என்கிறான்.”
அர்ஜுனன் குரலில் ஏறிய விரைவுடன் “அவன் சொன்னவை அனைத்தும் முழுமையான உண்மைகள். இனி பேரரசுகளின் காலம். ஒருங்கிணைந்த பெரும் படைகளைக் கொண்ட அரசுகளே இனி பாரதவர்ஷத்தை ஆளும். அவை பாரதப்பெருநிலத்தின் கருவில் உருவாகிக்கொண்டிருக்கின்றன. அது அஸ்தினபுரியா மகதமா கலிங்கமா என்பது ஊழின் கையில் உள்ளது. ஆனால் ஆரியவர்த்தத்தை முழுமையாகவே அடக்கி ஆளும் பேரரசு ஒன்று எழவிருக்கிறது. அது இன்றிருக்கும் நூற்றுக்கணக்கான சிறிய அரசுகள் அனைத்தையும் அழித்து தன்னுள் சேர்த்துக்கொள்ளும். இன்றைய பாரதவர்ஷம் ஒன்றோடொன்று முட்டி மண்டையை உடைத்துக்கொள்ளும் ஆட்டுப்பட்டி போலிருக்கிறது. யானைக்கொட்டகையாக அது மாறும். உள்ளே ஒரு வேழம் மட்டுமே இருக்கும்.”
“ஆம், அதை பேரரசி சத்யவதிதேவி சொல்லக்கேட்டிருக்கிறேன். அந்தப் பேரரசாக அஸ்தினபுரி அமையவேண்டுமென்று அவர் கனவு கண்டார்” என்றாள் குந்தி. “அத்தனை அரசர்களும் அந்தக்கனவையே காண்கிறார்கள். ஆகவே ஒரு பெரும்போர் நிகழும் என்று யாதவன் சொல்கிறான். அதை காட்டுத்தீ என்கிறான். அந்த நெருப்புக்குப்பின்னர் பெருமழை பொழியும். அதில் புதிய காடு முளைக்கும். அந்தப் பெருமழையின் மழைப்பறவை அவன் என்று சொன்னான்” என்றான் அர்ஜுனன்.
“வேசரத்தில் சாதகர்ணிகளின் பேரரசு உருவாகும் என்று இளைய யாதவன் சொல்கிறான்” என்றான் அர்ஜுனன். “ஆரியவர்த்தத்தில் சமநிலை ஒவ்வொருநாளும் மாறிக்கொண்டிருக்கிறது. அதில் தமது தரப்பை வலுப்படுத்துவது மட்டுமே இன்று ஒவ்வொரு அரசகுலத்துக்கும் உரிய அறைகூவல்.” குந்தி பெருமூச்சுடன் “ஆம்” என்றாள். “இங்குள்ள தொல்குடிகள் அவர்களின் குலச்சபைகளின் அதிகாரத்தை கடக்கமுடியாதவர்களாக இருக்கிறார்கள். ஏனென்றால் அவை சடங்குகளாலும் நம்பிக்கைகளாலும் ஆனவை. ஷத்ரியர்களோ தங்கள் தொன்மையான பகைமைகளையும் தன்முனைப்புகளையும் விட்டு ஒருங்கிணைய முடியாதவர்களாக தேங்கிப்போயிருக்கிறார்கள். யாதவர்களுக்கு காலம் ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது என்கிறான் கிருஷ்ணன்.”
அர்ஜுனன் சொன்னான் “யாதவர்கள் தங்கள் குலச்சபை அதிகாரங்களை முற்றாக உதறி போர்ச்சமூகமாக ஆகவேண்டும். அன்னையே, மான்களுக்கு தலைமை இருப்பதில்லை. ஆனால் வேட்டைச்செந்நாய்களோ தலைவனையே மையமாகக் கொண்டவை. அவன் யாதவர்கள் என்னும் மந்தையை செந்நாய்க்கூட்டமாக ஆக்க விழைகிறான். அதற்குத்தான் அவனே ஒரு நகரை உருவாக்க திட்டமிடுகிறான்.” குந்தி புன்னகையுடன் “அவனிடம் அதற்கான செல்வமிருக்கிறதா?” என்றாள்.
“அவனுக்கு பேரரசியாகிய அத்தை ஒருத்தி இருக்கிறாள். அவன் சொல்லை அவளால் மீறமுடியாது என்றான் அர்ஜுனன். குந்தி சிரித்து “திருடன்…” என்றாள். “அத்துடன் கூர்ஜரத்தின் தெற்கே அனர்த்தர்களின் அந்தக் காவல் மையத்தை அவன் அதற்காகத்தான் குறிவைத்திருந்திருக்கிறான். அன்னையே, விசாகவர்மனின் காலம் முதலே ஒரு பெரும் வணிகமையம். அதன் மறைவுக்கருவூலங்களில் குவியல்குவியலாக பொன் இருந்தது. அதை அவன் குதிரைகளில் கட்டிச் சுமந்துகொண்டு சென்றான்.”
“நகரத்தை அமைக்கும் திட்டங்கள் போட்டு வைத்திருப்பானே?” என்றாள் குந்தி. “ஆம். நகரை முழுமையாகவே சூத்ராகிகளைக்கொண்டு வரைந்து அவ்வரைபடத்தை மனப்பாடம் செய்திருக்கிறான். எனக்கு வரைந்து காட்டினான். அவன் அமைக்கவிருப்பது ஒரு கடல்துறைமுக நகரம். பழைய குசஸ்தலிக்கு அப்பால் கோமதி ஆறு கடலுடன் கலக்கும் இடத்தில் கடலுக்குள் நீண்டு நின்றிருக்கும் ஒரு தீபமுக நிலத்தில் அந்நகரம் அமையும். உறுதியான பாறைகளால் ஆன நிலம் அது. ஆகவே பல அடுக்குகளாக அதில் கட்டடங்களை அமைக்க முடியும்.”
“அன்னையே, அந்நிலம் உண்மையில் கடலுக்குள் புகுந்து நிற்கும் ஒரு மலைச்சிகரம். ஆகவே கடலுக்குள் நெடுந்தொலைவுக்கு அப்பால் அது தெரியும். அங்கே அவன் ஒரு மாபெரும் நுழைவாயிலை அமைக்கப்போகிறான்” என்றான் அர்ஜுனன். “கோட்டை கட்டாமல் வாயில் கட்டப்போகிறானா என்ன? வாயிலுக்குள் நுழைய முதலில் ஒரு பெரும்பாதை தேவை அல்லவா?” என்றான் தருமன். “மூத்தவரே, அவன் அமைக்கவிருக்கும் நுழைவாயில் கடலை நோக்கி அமைந்திருக்கும்” என்றான் அர்ஜுனன்.
“கடலைநோக்கிய வாயிலா?” என்றபின் குந்தி சிரித்துவிட்டாள். “மூடச்சிறுவன், விளையாடுகிறானா என்ன?” அர்ஜுனன் “அன்னையே, அவன் விளையாடுகிறான் என்பதும் உண்மை. ஆனால் அவன் அதை கட்டவே எண்ணுகிறான்” என்றான். “கோட்டையின் அளவை வைத்துத்தானே நுழைவாயிலை கணக்கிடமுடியும்?” என்றான் தருமன். “இல்லை மூத்தவரே, அது தனியாக நிற்கும் ஒரு சிற்பம் மட்டும்தான். அது நூறு வாரை உயரம் கொண்டதாக இருக்கும்” என்றான் அர்ஜுனன்.
குந்தி நகைத்து “குழந்தைக்கற்பனை போலுள்ளது. நூறு வாரை என்றால் கிட்டத்தட்ட ஐநூறு அடி. சராசரி மானுடனை விட எழுபது மடங்கு உயரம்… அத்தனை உயரமுள்ள கட்டுமானம் ஏதும் பாரதவர்ஷத்தில் இல்லை. அதைக்கட்டும் ஆற்றலும் நம் சிற்பிகளிடம் இல்லை” என்றாள். “அன்னையே, அப்பகுதியின் கடல்பாறைகளைக் கொண்டே அதைக் கட்டப்போகிறான். கடல்பாறைகள் கடல்காற்றால் அரிக்கப்படுவதில்லை. அவற்றை நீருக்குள் இருந்து வெட்டி எடுப்பதனால் மிக எளிதாக மேலே கொண்டுவர முடியும்…”
தருமன் “அவற்றை எப்படி மேலேற்றுவான்? எப்படி மேலும் மேலும் அடுக்குவான்? எத்தனை யானைகளை அங்கே கொண்டுசெல்வான்? காந்தாரத்தில் ஆயிரம் யானைகள் சேர்ந்து கட்டும் கோட்டையின் பணி இருபதாண்டுகளாகியும் இன்னமும் முடியவில்லை தெரியுமா?” என்றான். அர்ஜுனன் “அதை நான் அவனிடம் கேட்டேன். எதிர்க்காற்றில் விரிந்த நூறு பாய்கள் கொண்ட ஒரு மரக்கலம் நூறு யானைகளுக்கு நிகரானது என்றான். கற்களை வடங்களால் பிணைத்து மரக்கலங்களுடன் இணைப்பார்கள். அவை பாய்விரித்து கடலுக்குள் செல்கையில் கற்கள் இழுபட்டு மேலெழுமாம்…” என்றான். சிரித்தபடி “காற்றே மண்ணில் வல்லமை வாய்ந்தது. நான் எனக்காக காற்றில் சிறகு விரிக்கும் பெரும்பருந்துகளை பணியமர்த்தப் போகிறேன் என்கிறான் யாதவன்” என்றான். தருமன் “வியப்பூட்டுகிறது. ஆனால் அவனால் முடியுமென்றும் தோன்றுகிறது” என்றான்.
அர்ஜுனன் சிரித்து “ஒவ்வொன்றுக்கும் தீர்வு வைத்திருக்கிறான். மரத்தால் ஆன சாரங்களுக்கு பதில் பாலைவன மணலை நெடுந்தூரம் சரிவாகப் போட்டு சாரம் அமைக்கப் போகிறான். அதில் மாபெரும் கற்களை எளிதில் உருட்டி மேலே கொண்டுசெல்ல முடியும். யானைகளையே மேலே கொண்டுசெல்லமுடியும். கல்லால் ஆன சக்கரங்களை அவற்றுக்குக் கொடுத்தால் மேலும் பலமடங்கு பெரிய கற்களை ஏற்ற முடியும். பாய்மரக்கப்பல்களுக்கு அதில் பாறைக்கற்களை மேலேற்றுவது மிக எளிய பணி” என்றான். காற்றில் கையால் கோடு போட்டு விளக்கினான். “கட்டப்படும் பெருவாயில் அவ்வப்போதே மண்போட்டு மூடப்பட்டுவிடும். உச்சிப்பாறை வைக்கப்பட்டு அனைத்துக் கட்டுமானமும் இறுக்கப்பட்டபின் மணலை விலக்கினால் குழந்தை பிறந்துவருவதுபோல பெருவாயில் வெளிவரும்.”
“இதை எங்காவது எவரேனும் செய்திருக்கிறார்களா?” என்றான் தருமன். “ஆம் மூத்தவரே, சோனகநாட்டில் காப்பிரிகளின் ஓர் ஊர் உள்ளது. காப்பிடர்கள் என்று அம்மக்களை சொல்கிறார்கள். அங்கே பெருமுக்கோண வடிவில் நூறு வாரை உயரத்துக்கு கட்டுமானங்களை அமைத்திருக்கிறார்கள். அதை அவன் வணிகர்களிடமிருந்து அறிந்திருக்கிறான். அதைக் கட்டிய சிற்பிகளையே சந்தித்திருக்கிறான். அவர்களில் சிலரை வரவழைக்கவும் எண்ணியிருக்கிறான்.”
“வீண்வேலை” என்றாள் குந்தி. “குழந்தைகளின் பகற்கனவு… அவன் இன்னமும் வளராத மைந்தன்தான்.” அர்ஜுனன் “இல்லை அன்னையே, அவன் ஒவ்வொன்றையும் எண்ணியிருக்கிறான். நதிவணிகத்தின் யுகம் முடிந்துவிட்டது என்கிறான். நதிக்கரைகளில் செறிந்து அமைந்த நாடுகள் மெல்ல வலுவிழக்குமாம். இனி கடல்வணிகத்தின் யுகம். கூர்ஜரத்தின் தேவபாலபுரி இன்று பாரதவர்ஷத்தின் பெருந்துறைமுகம். கலிங்கம் அதன் துறைமுகங்களாலேயே வலுப்பெற்று வருகிறது. தாம்ரலிப்தியை எவர் ஆள்கிறார்களோ அவர்கள்தான் இனி கங்கைநிலத்தின் தலைவர்கள். அவன் தேவபாலபுரிக்கு நிகரான ஒரு துறைமுகத்தை உருவாக்க எண்ணுகிறான்” என்றான்.
“அன்னையே, அந்தப் பெருவாயில் ஓர் அழைப்பு. அங்கே அவன் பெருங்கலங்களுக்கு சுங்கம் கேட்கப்போவதில்லை.” குந்தி “நல்ல கதை, சுங்கமின்றி எப்படி நகருக்கு செல்வம் வரும்?” என்றாள். “அக்கலங்களுக்கு பொருள் கொண்டு விற்பவர்களிடமிருந்து சுங்கம் வாங்கமுடியும்… ஆனால் அதுவும் உடனடியாக அல்ல. பெருநாவாய்கள் வந்து அங்கே வணிகம் வலுத்து அங்கு அவர்கள் வந்துதான் ஆகவேண்டுமென்ற நிலை வந்தபின்னர் அவன் கோரும் சுங்கத்தை அவர்கள் அளித்துத்தான் ஆகவேண்டும். அதன்பின் கருவூலம் நிறைந்தபடியே இருக்கும்.”
“கணக்குகள் துல்லியமாகத்தான் இருக்கின்றன. ஆனால் தேவபாலபுரி மிக அருகிலேயே இருக்கிறது. ஏன் நாவாய்கள் இங்கே வரவேண்டும்?” என்று தருமன் கேட்டான். “மூத்தவரே, தேவபாலபுரத்தின் வணிகம் முழுமையாகவே சிந்துவை நம்பியிருக்கிறது. காந்தாரம், மாத்ரநாடு, பால்ஹிகநாடு, சௌவீரம், சப்தசிந்துவின் சிறிய பழங்குடி அரசுகள் என வடக்கே இருக்கும் நாடுகளுக்கான கடல்முகம் அது. அவை பெரும்பாலும் பாலைவன நாடுகள், அல்லது பழங்குடிநாடுகள். அவற்றில் பெரும்பாலானவற்றில் நிலம் வருடத்தில் மூன்றுமாதம் பனி மூடிக்கிடப்பதும் கூட. அவற்றின் வணிகத்திற்கு ஓர் எல்லை உண்டு. அந்த எல்லை எட்டப்பட்டுவிட்டது” என்றான் அர்ஜுனன்.
“அன்னையே, சிந்துவுக்கும் பாரதவர்ஷத்தின் விரிந்த மையநிலத்துக்குமான பாதை பெரும்பாலைநிலத்தால் தடுக்கப்பட்டுள்ளது. மாளவமும் விதர்பமும் விந்தியமலைக்கு அப்பால் உருவாகி வந்துள்ள நாடுகளும் இன்று மகாநதி வழியாக மட்டுமே கடலுக்குச் சென்றாகவேண்டிய நிலையில் உள்ளன. காடுகளையும் நான்கு நாடுகளையும் கடந்து பல கப்பங்களை அளித்து அங்கே செல்லவேண்டும். தென்கூர்ஜரத்தில் உருவாகிவரும் யாதவனின் துறைமுகம் அவர்களுக்கு மிக அண்மையில் உள்ளது. பாரதவர்ஷத்தில் வரும் வருடங்களில் பெரும் வல்லமையுடன் எழப்போகும் நாடுகள் கங்காபதத்துக்கு தெற்கே விந்தியனைச் சுற்றியுள்ள நிலத்திலேயே அமையும் என்று யாதவன் சொல்கிறான்.”
அர்ஜுனன் அக எழுச்சியுடன் சிறுவனைப்போல உரத்த குரலில் சொன்னான் “அந்தப் பெருவாயில் ஓர் அடையாளம். அன்னையே, இன்றுவரை பாரதவர்ஷத்தின் எந்த அரசனும் கடல்வணிகத்தை பொருட்டாக எண்ணியதில்லை. அவர்களுக்கு எந்த உதவியும் செய்ததில்லை. அவர்களிடம் சுங்கமென்றபேரில் கொள்ளையடிக்கவே அவர்கள் முயன்றிருக்கிறார்கள். கொள்ளையடிக்கும் குழுக்களை வளர்த்துவிட்டு அவர்களிடமும் கப்பம் கொள்கிறார்கள். அவனது நகரின் முகத்தோரணமான அந்தப் பெருவாயில் ஓர் அழைப்பு. ஒரு நகரத்தின் புன்னகை அது என்றான் கிருஷ்ணன். பெருவாயில்புரம் என்றே அந்நகரம் அழைக்கப்படும் என்றான். அச்சொல்லே ஒரு செய்தியாக உலகமெங்கும் செல்லும். யவனர்களும் சோனகர்களும் பீதர்களும் அங்கே வருவதற்கு அச்சொல்லே போதுமான உறுதியை அளிக்கும்.”
“துவாரகை…” என்று குந்தி மெல்ல சொல்லிக்கொண்டாள். புன்னகையுடன் திரும்பி “துவராகை, பெருவாயில்கொண்டவள். மகத்தான பெயர்… இந்தப்பெயரை அவன் எப்படி அடைந்தான்?” என்றாள். அர்ஜுனன் “அவன் இந்தக் கனவுகளை எல்லாம் கோகுலத்தில் கன்றுமேய்த்துக் கொண்டிருக்கையிலேயே அடைந்துவிட்டான். அவன் தோழர்கள் சொன்னார்கள். அவன் ஏழுவயதானவனாக இருந்தபோது மலைச்சரிவில் அவர்களை அமரச்செய்து இக்கனவுகளை சொல்வானாம். அவை அவர்களுக்கு வெறும் கதைகளாக இருந்தன. ஒவ்வொன்றாக அவை நிறைவேறுவதைக் கண்டு அவர்கள் அவனை விண்ணளக்கும் பெருமாளின் மானுட வடிவமென்றே எண்ணுகிறார்கள்.”
“துவாரகை…” என்று மெல்லிய குரலில் சொன்ன குந்தி “அவன் அகம் இப்பெயரில் உள்ளது இளையவனே. தன் நகரை ஒரு பெண்ணாக எண்ணுகிறான்” என்றபின் முகம்சிவந்து கைகளால் வாயை மூடிக்கொண்டு சிரித்தாள். அர்ஜுனன் “அழகிய இளம்பெண்ணாக… அன்னையே, அவள் உடலின் ஒவ்வொரு உறுப்பையும் அவன் கண்ணில் கண்டுவிட்டான்” என்றான். தருமன் “ஆனால் அரசு என்பது படைபலத்தால் ஆனது. அவன் ஒரு பெரிய படையை திரட்டியாகவேண்டும்…” என்றான்.
அர்ஜுனன் நகைத்து “அதற்குத்தான் அஸ்தினபுரி இருக்கிறதே என்கிறான்” என்றான். தருமன் சினத்துடன் “அஸ்தினபுரி என்ன அவன் விளையாட்டரங்கு என எண்ணினானா?” என்றான். “மூத்தவரே, இதையே நான் கேட்டேன். இல்லை, அஸ்தினபுரி என் படைக்கலம் மட்டுமே. பாரதவர்ஷம் என் களம் என்றான்.” சீண்டப்பட்டவனாக “அப்படியென்றால் நாமெல்லாம்?” என்று தருமன் கேட்டான்.
“சதுரங்கக் காய்கள்… வேறென்ன?” என்றபடி குந்தி எழுந்து கொண்டாள். “இன்று முழுக்க என் அகம் எரிந்துகொண்டிருந்தது பார்த்தா. யாதவர்களுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பாகவே இந்தப் பயணத்தை எண்ணினேன். என் அகத்தின் வெம்மை அவன் பெயர் கேட்டால் சற்று குளிரக்கூடும் என்று எண்ணினேன். அது பிழையாகவில்லை. இன்று இமயமுடியில் நின்று பாரதவர்ஷத்தைப் பார்க்கிறேன். அஸ்தினபுரியும் மகதமும் கலிங்கமும் என் காலடியில் கிடக்கின்றன” என்றாள். “துவாரகை… அச்சொல்லை உச்சரித்தபடியே நான் இன்னும் ஒருமண்டலம் இனிது உறங்கமுடியும்.”
அர்ஜுனன் தானும் அச்சொல்லை உச்சரித்தபடியே இருப்பதை அலைகளை நோக்கியவண்ணம் படகின் விளிம்பில் நின்றிருக்கையில் உணர்ந்தான். கங்கையின் காற்று அவனை பறவையென உணரச்செய்தது. தருமன் அவனருகே வந்து நின்றுகொண்டு “அன்னை தன்னை மேலும் மேலும் யாதவப்பெண் என்று காட்டிக்கொள்கிறாள். அது அவளுக்கு உகந்தது அல்ல” என்றான். “மூத்தவரே, இன்று நீங்களும் உங்களை யாதவ அரசன் என்று காட்டிக்கொண்டீர்கள்” என்றான் அர்ஜுனன். தருமன் கண்களில் சினத்துடன் நோக்கிவிட்டு திரும்பிச்சென்றான்.
பகல்முழுக்க நூல்கட்டிய அம்புகளை எய்து மீன்களையும் நாரைகளையும் பிடித்தும் இரவில் விண்மீன்களை நோக்கியபடி படகின் அமரத்தில் மல்லாந்து படுத்தும் அர்ஜுனன் பயணம் செய்தான். யாதவர்கள் அங்கே கூர்ஜர நிலத்தில் குடில்களை கட்டியிருப்பார்கள். யவனச்சிற்பிகளையும் கலிங்கச்சிற்பிகளையும் கொண்டுவர யாதவனின் தூதர்கள் சென்றிருப்பார்கள். முதலில் அந்தப் பெருவாயில்தான் கட்டப்படும், அதன் பின்னரே அரண்மனை என்று கிருஷ்ணன் சொல்லியிருந்தான்.
“அது அமைந்தபின்னர்தான் தாங்கள் கன்றுமேய்க்கும் மக்கள் அல்ல, நாடாள்பவர்கள் என என் குலத்தவர் நம்புவார்கள். ஒவ்வொரு நாளும் அவர்களின் கண்முன் அது வளரும். அவர்களின் கனவில் அது குடியேறும். அவர்களின் புராணமாக அது ஆகும். அவர்களை அது முழுமையாகவே மாற்றியமைக்கும்” அவன் சொன்னான். “முதலில் அதைக் கட்டி அதனடிப்படையிலேயே பிற கட்டடங்களை வடிவமைக்கமுடியும்.”
கிருஷ்ணனுடன் இருந்திருக்கலாம் என்று அர்ஜுனன் எண்ணிக்கொண்டான். அவன் உணரும் தனிமை அவனுடன் இருக்கையில் மட்டும் முழுமையாக மறைந்துவிடுகிறது. அவனுடைய ஒவ்வொரு சொல்லும், அவனுடைய அனைத்து உடலசைவுகளும் மகிழ்வூட்டின. அவனுடன் இருக்கையில் ஒருகணம்கூட கண்ணையும் செவியையும் அகற்றமுடியவில்லை. அத்தனை முழுமையான அகக்குவிப்பு பிறகெப்போதும் நிகழ்ந்ததில்லை. துரோணரிடம் இருந்த நாட்களில் அவன் அகம் ஒவ்வொரு சொல்லுக்கும் குவிந்திருந்தது. ஆனால் அதை அவன் யோகம் எனப் பயின்றான். கிருஷ்ணனிடம் இருக்கையில் அவன் அகத்தை விலக்க எண்ணினாலும் முடியவில்லை.
என்னதான் செய்கிறான்? அவன் கற்பிப்பதில்லை. மகிழ்ச்சியடைய வைக்க முயல்வதில்லை. சொல்லப்போனால் அவனுக்காக எதையுமே செய்வதில்லை. அவன் தன்னை அறிகிறானா என்றுகூட ஐயம் வருவதுண்டு. எவரையாவது அறிகிறானா என்றே எண்ணி வியந்திருக்கிறான். முற்றிலும் தன்னுள் நிறைந்து ததும்பிக்கொண்டே இருப்பவன். அவன் பேசுவதும் செயல்படுவதும் எல்லாம் அவனுக்காக மட்டுமே. அவன் உடலசைவுகள் தீபச்சுடர்போல இயல்பானவை. சொற்கள் அதன் ஒளிபோல. அவன் அவனிலிருந்து முற்றிலும் தன்னியல்பாக வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறான். இருக்குமிடத்தை முழுமையாக நிறைத்துவிடுகிறான். அவனைப்போல முழுத்தனிமையில் இருப்பவர்களை அவன் கண்டதில்லை.
அவனுக்கு அத்தனை மனிதர்களும் முற்றிலும் நிகரானவர்கள்தான். குதிரைச்சூதனையும் சமையற்காரனையும் படைவீரர்களையும் ஒரே முகமலர்ச்சியுடன் தழுவிக்கொள்கிறான். அவன் அறியாத எவருமே இல்லை. பெயர்கள் உறவுமுறைகள் அனைத்தையும் அறிந்திருக்கிறான். ஒவ்வொருவரும் அவனே தன் அணுக்கத்தோழன் என்று எண்ணுகிறார்கள். அவன் அருகே வருகையில் முகம் மலர்கிறார்கள். அவன் ஒரு கூட்டத்தைக் கடந்துசெல்லும்போதே தீபம் கடந்துசெல்லும் உலோகப்பரப்புகள் போல அவர்களின் முகங்கள் ஒளிகொள்கின்றன. அவர்களில் ஒருவனே தானும் என அர்ஜுனன் அறிந்திருந்தான். ஆனால் அத்தனை அணுக்கமாகவும் அவனிருந்தான், அவனறியாத எதுவுமே தன்னிடமில்லை என்பதுபோல.
அவனிடம் கவர்வது அதுதான். குளிர்ந்த பெருநதி போன்றவன் அவன். அவனில் குதித்து நீராடமுடிகிறது. முடிவின்றி அள்ளிக்கொள்ள முடிகிறது. வியந்து சொல்லிழந்து நின்ற மறுகணமே அள்ளி முகத்தில் விட்டுக்கொள்ள முடிகிறது. ஆகவே அவன் ஒரு கணம்கூட சலிப்பூட்டுவதில்லை. துரோணருக்கும் அவனுக்குமான வேறுபாடே அதுதான். துரோணர் அவரது ஞானத்தை அவனுக்களித்துக்கொண்டிருந்தார். அவன் தன்னையே முழுமையாக அளித்துக்கொண்டிருந்தான். ஒருதடையும் இல்லாமல்.
அவனை “யாதவ மூடா… இதென்ன செய்கிறாய்? உனக்கென்ன அறிவுகெட்டுவிட்டதா?” என்று அவன் படைகளின் முன்னால் வைத்து கைநீட்டி கூவியிருக்கிறான். அவன் படைகளில் மிகக்கடையவன் கூட அதையே சொல்லமுடியும் அவனிடம். “உணவு நன்று அல்ல என்றால் அது ஏன் என்று சொல்லவேண்டும். பாதியை அப்படியே தட்டில் வைத்தால் என்ன பொருள்? அப்படியே எடுத்து தலையில் கொட்டிவிடுவேன்” என்று உணவு பரிமாறும் பரிசாரகன் அவனை நோக்கி கையை ஓங்குவான். “பேசாதே, இதுதான் இப்போது சிறந்த குதிரை… இதன் கோணல் பாலைவனத்துக்கு ஒரு பொருட்டல்ல… மெல்லிய திசைமாற்றத்தால் ஒன்றும் ஆகிவிடாது. ஆனால் ஓடவேண்டும் என்ற துடிப்புடன் இருக்கிறது. இதை நீ எடுத்துக்கொண்டால் போதும்… நான் சொல்கிறேன்” என்று குதிரைக்காரன் அவனை அதட்டுவான்.
ஒவ்வொருவனுக்கும் மைந்தனாக இளையோனாக தோழனாக அவர்களின் இல்லங்களில் வளர்பவனாக இருந்தான். சாளரம் வழியாகத் தெரியும் மலைமுடி போல மிகத்தொலைவில் விண்துழாவி நின்றாலும் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு தருணத்திலும் வீட்டுப்பொருள் போல விழிக்கு தட்டுப்பட்டுக்கொண்டே இருப்பான். “நீ அரசனா? விளையாட்டுச் சிறுவனா? அதை முதலில் முடிவுசெய். மூடா, உன்னிடம் விளையாட எனக்கு நேரமில்லை” என்று அவன் தளபதி சுண்டு கூவுவான். சிரித்துக்கொண்டு “மூத்தவரே, தாங்களறியாததா? நான் இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுகிறேன்” என்று அவன் தோளைத்தழுவி அவன் கன்னத்தில் தன் கன்னத்தை வைத்து உரசுவான். “விடு… உன்னிடம் பணியாற்றுவதை விட குரங்குக்கு பேன் பார்க்கலாம்…” என்று சுண்டு திரும்பிச்செல்வான்.
ஆனால் அவன் யாரென அவர்களனைவருமே அறிந்திருந்தார்கள். “அது யார் சொன்னது? இளையவனா? அப்படியெனில் அது சரியானதே. அவன் பிழையாக ஒன்றைச் சொல்லி நான் அறிந்ததே இல்லை” என்று சுண்டு ஒருமுறை சொன்னான். அர்ஜுனன் “இல்லை… பாலைநிலத்தில் அத்தனை தொலைவுக்கு ஒரே நாளில் செல்லமுடியாது. மணல் கொப்பளிப்பதனால் குதிரைகளின் கால்கள் களைக்கும்” என்றான்.
அர்ஜுனனிடம் “இளவரசே, இளையோன் சொன்னபின்னரும் எதற்கு ஐயம்?” என்றான் இன்னொரு படைத்தலைவனாகிய சக்ரசேனன். அர்ஜுனன் “பார்ப்போம்” என்றான். ஆனால் குதிரைகள் கிளம்பியதுமே அர்ஜுனனுக்குத் தெரிந்துவிட்டது. முந்தையநாள் பெய்த பனியால் பாலைமண் அழுந்திப்படிந்திருந்தது. அதன்மேல் சென்ற குதிரைகள் முன்னால் சென்ற குதிரையின் குளம்புச்சுவடுகளிலேயே கால் வைத்து நடந்தன. மணல் கொதிக்கத் தொடங்கும்போது அவர்கள் இலக்கை அடைந்துவிட்டிருந்தனர்.
அவனிலிருந்து வெளிப்படும் எல்லையற்ற ஒன்றை அவர்களனைவரும் முன்னரே கண்டிருந்தனர். அவன் சக்கரம் ஏழாகப்பிரிந்து மின்னலாகச் சுழன்று தலைகளை வெட்டித்தள்ளிக்கொண்டிருக்க ஒன்று நூறு ஆயிரமெனப் பெருகி அவன் களத்தை நிறைத்தபோது அவர்களின் விழிகள் இமைப்பிழந்து அவனை நோக்கியிருந்தன. அப்பேருருவம் முடிந்த மறுகணமே துணைத்தளபதியான பிரகதன் “அந்த மூடனிடம் என்ன செய்வதென்று கேளுங்கள் இளவரசே… அத்தனைபேரும் அவனை வேடிக்கை பார்க்கிறார்கள். அவன் என்ன நடனமா ஆடிக்காட்டுகிறான்?” என்றான். கிருஷ்ணன் திரும்பி புன்னகையுடன் “பிரகதரே, இனி நாம் வாணவேடிக்கையை தொடங்கவிருக்கிறோம்” என்றான். யாதவ வீரர்கள் நகைத்தனர். அவனுடைய பேருருத் தோற்றத்தை உடனே மறக்கவும் கையிலிருக்கும் களிப்பாவையாக அவனை மீண்டும் காணவும் அவர்கள் ஒவ்வொருவரும் விழைந்தனர்.
அர்ஜுனன் புன்னகையுடன் நின்றிருக்க அருகே வந்த தருமன் “நீ இளைய யாதவனை எண்ணிக்கொண்டிருக்கிறாய் அல்லவா?” என்றான். “ஆம்…” என்றான் அர்ஜுனன். “இளையோனே, நீ பெருங்காதல் கொண்டவன் போலிருக்கிறாய்!” அர்ஜுனன் சிரித்து “மூத்தவரே, எந்த ஆண்மகனுக்காவது ஒரு பெண்ணிடம் இத்தனை பெருங்காதல் எழுமா என்ன?” என்றான். அந்த வினாவின் நேரடித்தன்மையில் திகைத்த தருமன் “ஆம். பெண்கள் வேறு… அவர்கள் ஆர்வத்தை மட்டுமே அளிக்கிறார்கள். அணைத்துக் கொள்கிறார்கள். கரைத்துக்கொள்வதில்லை” என்றான். சிரித்தபடி “அவர்களின் பெண்மையால் நாம் கவரப்படுகிறோம். ஆனால் பெண்மை என்பது மிக எளிதாக மறுகரையைச் சென்றடையும் சிறு சுனைதான்…” என்றபின் “யாதவன் கடல்” என்றான் அர்ஜுனன்.
தருமன் தலையசைத்து “ஆம்” என்றான். “அவனையே எண்ணிக்கொண்டிருக்கிறேன் இளையோனே. அவன் என் முன் வந்த கணம் முதல் என் சிந்தனை முற்றிலும் அவனுக்கு அடிமையாகிவிட்டது. அவன் சொல்வதற்கு அப்பால் ஒரு சொல்லைக்கூட என் உள்ளம் அடைவதில்லை. அவன் செய்வனவற்றின் மேல் சிறு ஐயம் கூட எழுவதில்லை. அவன் உள்ளங்களை வெல்லும் கலையை ரிஷிகளிடம் கற்றிருக்கிறான்…”
அர்ஜுனன் புன்னகை செய்து “ஆம், உங்கள் முன்னால் அவன் விதுரரை அச்சுறுத்தியபோது நீங்கள் விழிமயங்கி வெறுமனே நின்றீர்கள்” என்றான். தருமன் தலைகுனிந்து “ஆம், அவன் அவர் ஆணவத்தை உடைத்தான். அது என் ஆணவமும் கூட. மதியூகிகள் அனைவருக்குமே உள்ள தன்னுணர்வு அது. அவர்களால் அனைத்தையும் செய்யமுடியும் என. ஒரு பெருவீரன் தன் வாளால் அவர்களின் அத்தனை சதுரங்கக் காய்களையும் தட்டித் தெறிக்கச்செய்ய முடியும்… அவன் சொன்னது அதையே” என்றான்.
பெருமூச்சுடன் தருமன் “இத்தருணத்தில் அவன் நம்முடன் இருந்திருக்கலாம்… ஏதோ நிகழவிருக்கிறது என்று என் உள்ளுணர்வு சொல்கிறது. ஆனால் சித்தம் செயலற்றிருக்கிறது” என்றான். அர்ஜுனன் “அது நம் உளமயக்காக இருக்கலாம் மூத்தவரே” என்றான். “இருந்தால் நல்லது… இப்போது நம் மீது அன்புள்ள யாதவன் இங்கிருந்தால்…” என்றான் தருமன். “மூத்தவரே, அவன் அன்புள்ளவன் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?” என்றான் அர்ஜுனன். தருமன் திகைப்புடன் பார்த்தான். “அவனிடம் அன்பே இல்லை என்று தோன்றும். ஒவ்வொரு கணமும் அன்பு அவனிடமிருந்து வருவதையும் உணரமுடியும்” என்றான் அர்ஜுனன்.
தருமன் நகைத்து “இறைவனுக்குரிய எல்லா அடையாளங்களையும் அவனுக்கு அளித்துவிட்டாய்….” என்றபின் “ஆம், அவன் ஒரு பெரும் புதிர். அன்னைகூட அவனை அன்பானவன் என்பதில்லை. அன்புக்குரியவன் என்றே சொல்கிறாள்” என்றான்.
வெண்முரசு அனைத்து விவாதங்களும்
மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக
வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்