உ.ரா.வரதராஜன்

அன்புள்ள ஜெயமோகன்,

உ.ரா.வரதராஜனின் மரணத்தைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது பிரகாஷ் காராத் நடத்திய கொலை என்றே சொல்ல வேண்டும் என நான் நினைக்கிறேன். உங்கள் கருத்தை மழுப்பாமல் சொல்வீர்கள் என நினைக்கிறேன். மலையாள பாசம் தடுக்காது என்று நம்புகிறேன்.

செல்வ அமுதன்

 Comrade. W. R. Varadarajan by പ്രതീഷ് പ്രകാശ്.

அன்புள்ள செல்வ அமுதன்,

நம்பிக்கைக்கு நன்றி.

நான் இம்மாதிரி விஷயங்களில் எப்போதுமே உடனடியாக கருத்துச் சொல்ல விரும்புவதில்லை. அதற்கான காரணங்களில் முக்கியமானது உடனடியாகக் கருத்துச் சொல்ல பெரும்பாலும் என்னிடம் ஏதும் இருப்பதில்லை என்பதே. நான் அரசியல் சிந்தனையாளனோ இதழாளனோ அல்ல. உடனடியாகக் கருத்துச் சொல்லவேண்டும் என்ற கட்டாயத்தை வைத்துக்கொண்டிருக்கும் எழுத்தாளன் பாறாங்கல்லைச் சுமக்க ஆரம்பிக்கிறான். மேலும் பலவிஷயங்களில் என்னிடம் சற்று நிதானமாக யோசிக்கும்போது மட்டுமே விவாதிக்கவேண்டிய கருத்துக்கள் மட்டுமே உள்ளன.

இந்த விஷயத்தில் என் கருத்தைச் சொல்லவேண்டியிருக்கிறதா என்றால் இல்லை என்றே நினைக்கிறேன். இதில் உள்ள ஒரு மிரட்டலைச் சுட்டிக்காட்டவே இதை எழுதுகிறேன் என்று சொல்லவேண்டும். நான் தமிழில் எழுதுபவன், தாய்மொழியாக மலையாளத்தைக் கொண்டவன். என் பூர்வீகநிலம் அன்று கேரளத்துடனும் இன்று தமிழ்நாட்டுடனும் இருப்பதன் விளைவு இது. மேலும் நான் மலையாளத்தை தமிழ்ச்செவ்வியல் மரபின் ஒரு நீட்சி என்றும் ஆகவே கேரளமும் பண்பாட்டுத்தளத்தில் தமிழகமே என்றும் நம்புகிறவன்.

இந்நிலையில் எந்த ஒரு கேரள,தமிழ்நாட்டுப் பிரச்சினை வந்தாலும் உடனே சிலர் கிளம்பி வந்து என் ‘விசுவாசத்தை’ சோதனை செய்து பார்ப்பதைக் காண்கிறேன். நான் உடனடியாக தமிழ் ஆதரவு நிலைப்பாடு எடுக்கவேண்டுமென்று கோருகிறார்கள். இல்லையேல் தமிழ்த்துரோகி பட்டம் அளிக்கப்படும் என்ற மிரட்டல்தான் அது.

அதேபோல தமிழ்ப்பண்பாட்டின், அரசியலின் எல்லா அம்சங்களையும் நான் புகழ்ந்துகொண்டே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். நான் இங்கே ‘விருந்தாளி’ அல்லவா? ஓர் எழுத்தாளனாக நான் வைக்கும் எந்தவிமரிசனத்தையும் உடனடியாக தமிழ்விரோதம் என்று முத்திரை குத்துகிறார்கள்.

திட்டவட்டமாகவே இதற்கு மீண்டும் பதிலளிக்கிறேன், முத்திரை குத்துங்கள், பிரச்சினையே இல்லை. உங்கள் முத்திரைகளுக்குப் பயந்து நான் சம்பிரதாய வாய் உபச்சாரங்களைப் பேச ஆரம்பித்தால் பின்னர் நான் எழுத்தாளனே அல்ல. எனக்கு ஒரு வாசகர்கூட இல்லாமல் போனால்கூட எந்தப்பிரச்சினையும் இல்லை.

இனி பிரகாஷ் காராத் விஷயம். பிரகாஷ் காராத் இந்திய மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மாபெரும் சுமை என்பதில் ஐயமில்லை. சென்ற இருபதாண்டுகளில் அக்கட்சியை ஜனநாயகவிரோதமான சமையலறை அரசியலுக்குள் கொண்டுசென்றவர் அவர். நீங்கள் ஒரு உ.ரா.வரதராஜனைத்தான் அறிவீர்கள். கேரளத்தில் கே.ஆர்.கௌரி முதல் பி.கோவிந்தப்பிள்ளை வரை கட்சிக்காக வாழ்க்கையையே அர்ப்பணித்த மாமனிதர்கள் பலரை குப்பையைக் கூட்டுவது போல அவமானப்படுத்தி கட்சியை விட்டு தூக்கி எறிந்தவர் காராத். இந்திய மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் முடிவுரையை அவர் எழுதக்கூடும் என நான் அஞ்சுகிறேன்.

ஒரு மாபெரும் கட்சியின் தலைமைப்பொறுப்பில் இருப்பவர் எப்படி அங்கே வருவார்? திமுகவை அல்லது அதிமுகவை எடுத்துக்கொள்வோம். அதன் தலைவர்கள் அங்கே எப்படி வந்தார்கள், எப்படி அங்கே நீடிக்கிறார்கள்? மக்கள் ஆதரவினால் மட்டும்தான். ஆனால் பிரகாஷ் காராத்தை மக்களில் எத்தனைபேருக்கு தெரியும்? எப்படி அவர் அங்கே சென்று அமர்ந்தார்?

அங்கே இருக்கிறது கம்யூனிஸ்டுக் கட்சியின் ரகசியம். அதன் தலைமை இந்தியாவில் தீர்மானிக்கப்படுவதில்லை, சீனாவில் இருக்கிறது உண்மையான அதிகார மையம். கேரளத்தின் சாதாரணக்குடும்பத்தில் பிறந்த பிரகாஷ் காராத் லண்டனில் படிக்கசென்று மீண்டதுமே சரசரவென கட்சித்தலைமை நோக்கி கொண்டுசெல்லப்பட்டார்.  மக்களாஇச் சந்திக்கவில்லை, களப்பணி ஆற்றவில்லை. அவர் அறிந்ததெல்லாமே அலுலவக நிவாகம். ‘லேப்டாப் கம்யூனிசம்’. அரைநூற்றாண்டுக்காலம் தொழிற்சங்கத்திலும் மக்கள்பணியிலும் வாழ்க்கையைச் செலவிட்ட தலைவர்கள் அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய நேர்ந்தது.

உ.ரா.வரதராஜனின் மரணம் குறித்த செய்திகள் சோர்வுறச் செய்கின்றன. உடல்நலக்குறைவுகாரணமாக தமிழக மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைமைப்பொறுப்பில் இருந்து என்.வரதராஜன் விலகியபோது அடுத்ததாக உ.ரா.வரதராஜன் அந்த இடத்துக்கு வரக்கூடிய நிலை இருந்தது. தொழிற்சங்க ஆதரவு கொண்டவராதலால் அவரை தவிர்ப்பதும் முடியாதென்ற நிலை. அவர் வருவதை தமிழக மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் சர்வ வல்லமை படைத்த ஒரே சக்திமையமான என்.ராம் [தி ஹிண்டு] விரும்பவில்லை என்கிறார்கள்.

ஆகவே அவரது டைப்பிஸ்டுடன் அவருக்கு கள்ள உறவு இருக்கிறது என்ற புகார் உருவாக்கப்பட்டது. அவரது மனைவியே அவர் மீது புகார் சொல்லும்படிச் செய்யப்பட்டார். சில மனவேறுபாடுகள் காரணமாக ஏற்கனவே அவரது மனைவிக்கு ஆவ்ருடன் நல்லுறவில்லை என்கிறார்கள். தமிழ் அய்யரான வரதராஜன் தலித் சமூகத்தைச் சேர்ந்த விதவையான சரஸ்வதியை காதலித்து மணந்தவர். ஏற்கனவே சரஸ்வதிக்கு ஒரு மகன் உண்டு. முதல் மகனின் நடத்தை காரணமாக உருவான மனக்கசப்பு என்றார்கள்.

வரதராஜனின் மனைவியின் புகாரை ஒட்டி வரதராஜனை கட்சிப்பொறுப்பில் இருந்து நீக்கும்படி கட்சியின் மாநிலத்தலைமை மத்தியத்தலைமையைக் கோரியது. அதன்பின் வழக்கமான நாடகம். கல்கத்தாவுக்கு அழைக்கப்பட்ட உ.ரா.வரதராஜன் விசாரிக்கப்பட்டார். அவருக்கு என்ன நடக்குமென தெரியுமென்பதால் பெரும்பாலும் பேசாமலேயே இருந்திருக்கிறார். ஆனால் பெண்விஷயமாக நடவடிக்கை எடுத்து தன்னை சிறுமைப்படுத்தக்கூடாது என்று மீண்டும் மீண்டும் தனிப்பட்டமுறையில் கோரியிருக்கிறார். அவரை அது ஆழமாக புண்படுத்தியிருக்கிறது. ஆகவே தான் அந்த முடிவு.

‘மயிர் நீப்பின் வாழா கவரிமான்’ போல இருக்க விரும்புவதாக, மானமே பெரிதென நினைப்பதாக, வரதராஜன் எழுதியிருக்கும் கடிதம் அவரது மனநிலையைக் காட்டுகிறது. நான் விசாரித்தவரை 65 வயதான வரதராஜனின் நடத்தைமேல் எந்தப்பழுதும் இல்லை. ஒழுக்கம்,நேர்மை இரண்டிலும் முன்னுதாரணமான கட்சி ஊழியராகவே இருந்திருக்கிறார். அதிகார ஆட்டத்தில் நழுவி விழநேரிட்டது, அவ்வளவுதான்.

ஐம்பதுவருடம் கட்சிக்காக வாழ்ந்த கே.ஆர்.கௌரியம்மா நிதிமோசடிக்குற்றச்சுமையுடன் வெளியேறினார். பி.கோவிந்தப்பிள்ளை எதிர்கட்சியுடன் ரகசிய உறவு வைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டார். தள்ளாத வயதில் பொறுப்பில்லாது செயல்பட்டமைக்காக நிருபன் சக்ரவர்த்தி அவமானபப்டுத்தப்பட்டு கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டு பின்பு மன்னிப்புகேட்டு சிறுமை அடைந்து கட்சி உறுப்பினராகி இறந்தார்.  இவையனைத்துமே பிரகாஷ் காராத்தின் வழியாக நடந்தேறியவை. அதுவே வரதராஜனுக்கும் நிகழ்ந்திருக்கிறது.

வரதராஜன் தற்கொலை செய்துகொண்டது தலைமையால் எதிர்பார்க்கப்படாத ஒன்று. ஆனால் தற்கொலைசெய்துகொண்டமையால்தான் அவர் அவதூறுகளில் இருந்து தப்பினார். கட்சி அலுவலகத்தில் ஒரு செங்கொடி போர்த்தப்படும் கௌரவத்தையாவது அடைந்தார்.

இந்தியாவின் இடதுசாரி அரசியல் தரப்பு என்பது இன்று மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சியே. இடதுசாரித்தரப்பு வலுவாக இல்லாத ஒரு தேசம் அதன் மக்கள்நல நோக்கை இழக்கும் என்பதே வரலாறு. ஆகவே இடதுசாரிக்கட்சிகளை இந்திய ஜனநாயகத்தின் இதயம் என்று சொல்வேன்.

இன்று ‘லேப்டாப்’ தலைவர்களால் வெளிநாட்டு தொடர்புகள் மூலம் கையகப்படுத்தப்பட்டிருக்கும் அதன் தலைமை மீட்டெடுக்கப்படவேண்டும் என்பதையே உ.ரா.வரதராஜன் போன்ற ஒரு களப்பணியாளர் தலைவர் கேவலமான மரணத்துக்குத் தள்ளப்பட்டிருப்பது காட்டுகிறது. இன்று வேறெந்தக் கட்சியிலும் அவரைப்போன்ற மாணிக்கங்கள் இல்லை.  அவர்கள் இந்த தேசத்தின் மாபெரும் சொத்துக்கள். அவர்களின் கோட்பாடுகளையும் நம்பிக்கைகளையும் முழுக்க நிராகரிக்கையிலும்கூட அதைச் சொல்லவேண்டியிருக்கிறது. அவர்களைஎ ண்ணி தலைவணங்கவும் பெருமிதம்கொள்ளவும் வேண்டியிருக்கிறது.

மாணிக்கங்களை கட்டிட ஜல்லிகளாகப் பயன்படுத்தும் சர்வாதிகார மனநிலையில் இருந்து கட்சி இனிமேலாவது வெளிவரவேண்டும். தலைமை என்பது பூடகமான சதிவேலைகளால் ஆன அதிகார மையமாக இருக்கும் காலகட்டம் ஒழிந்துவிட்டது என்பதை அதன் தொண்டர்கள் உணரவேண்டும்.

கே.கே.எம் அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்படும் காட்சியை ‘பின் தொடரும் நிழலின் குரல்’ நாவலில் எழுதியபோது நான் கண்ணீர் சிந்தினேன். இன்றும்கூட அவரது அந்தக்கடைசிக் கடிதத்தை மனம் நெகிழாமல் நான் வாசிக்கக்கூடுவதில்லை. தோழரின் மரணச்செய்திவாசிக்கநேர்ந்தபோது நெஞ்சு இறுக்கம் தாளாமல் வலித்தது.

மன்னித்துவிடுங்கள் தோழர். வரலாறு என்றுமே நன்றிகெட்டது, மறதி மிக்கது. அதை எங்கோ ஆழத்தில் நீங்களும் அறிந்திருப்பீர்கள்.

http://truetamilans.blogspot.com/2010/02/blog-post_24.html

முந்தைய கட்டுரைஉலோகம் – 12
அடுத்த கட்டுரைநஞ்சுபுரம்