கடற்கேரளம் – 2

நெய்யாற்றின்கரை தாண்டி வரும்போது சாலையோரமாக வரிசையாக நின்றிருந்த லாரிகளை பார்த்தேன். அசிங்கமான வண்ணங்களில் செய்யபப்ட்ட மாபெரும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பொம்மைகள் நின்றிருந்த லாரிகள். துர்க்கை, சிவன்,பிள்ளையார் பொம்மைகள் மதியவெயிலில் கண்கள் மீது ஆசியன்பெயிண்ட் டப்பாக்களை திறந்து ஊற்றியது மாதிரி நின்றிருந்தன. முந்தையநாள் அவற்றை தெருவிலே பார்த்தேன். லாரிகள் வரிசையாக தேசியநெடுஞ்சாலையை மறித்து நிற்க நாகர்கோயில்வரை நீண்ட பேருந்துகள்  அலறி அலறி அணுவணுவாக நகர்ந்தன.

                                                                 கொல்லம்

கொடூரமான பொம்மைகள். சிவன் நீலநிறமாக சிவப்பு உதடுகளும் கரிய சடையுமாக ஆபாசமான பிரம்மாண்டத்துடன் நிற்க அவரது கழுத்தில் இருந்த பாம்பு நெளிந்து நெளிந்து உஸ் உஸ் என்றது. துர்க்கையால் கொல்லப்பட்ட அரக்கன் தலையையும் காலையும் அசைத்து பயங்கரமான உறுமினான். சிங்கங்கள் தலையை இயந்திரகதியில் அசைத்து கர்ஜனைசெய்தன. வண்டிகளின் இயந்திரங்கள் உறும பின்னால் ஒரு மின்னுற்பத்தி இயந்திரம் பிளிறியது. குழல்விளக்குகள் ஒளியைச் செலுத்த, சாலையில் போகும் மனிதர்கள் வாய் பிளந்து வேடிக்கை பார்த்தார்கள். அந்தப் பொம்மைகளைப் பார்க்கும் எந்த ஒரு நாகரீக மனிதரும் அருவருப்பை அடையாமலிருக்க முடியாது.

கேரளத்தின் இஸ்லாமிய அலையின் மறுபக்கமாக அருவருப்பூட்டும் ஒரு இந்துபக்தி அலை எழுந்திருக்கிறது. இந்துமதத்தின் அத்தனை மூடநம்பிக்கைகளையும் அது தோண்டி எடுத்து வீதிகளில் பரப்புகிறது. அத்துடன் ஆகக்கீழ்த்தரமான பரப்பியப் போக்கை வழிபாட்டுமுறைகளிலும் சிற்ப-கட்டிடக் கலைகளிலும் கலந்து சீரழிக்கிறது.

கேரளத்தின் சாலையோரங்களில் கோயில்களின் தோரணவாயில்கள் நிற்கின்றன. சிமிட்டியால் எந்தவிதமான கலைநயமும் இல்லாமல் கட்டப்பட்டு கண்கூசும் வண்ணங்கள் பூசப்பட்ட பொம்மைகளுடன் அவை குப்பைக்குவியல்கள் போல கண்ணில் அறைகின்றன. ஒரு வளைவின்மீது நாலடி உயரமுள்ள சிவனின் தலை. வெட்டி கொண்டு வைக்கப்பட்டது போல நிறுவப்பட்டிருந்தது. நெஞ்சைக்கிழித்து இறைச்சிக்குள் இருக்கும் வெட்டப்பட்ட ராமன் தலையைக் காட்டும் அனுமன்கள்… கொடூரம்!

 

                                                                             வற்கலை

கேரளத்துக் கோயில்கள் இரு வகை. அம்பலங்கள், காவுகள் என்று அவற்றைச் சொல்வார்கள். அம்பலங்கள் பெரிய கட்டிடங்கள் கொண்ட கோயில்கள். காவுகள் என்பவை மரநிழல்களில் அமைந்த சிறிய ஆலயங்கள். கேரளத்து காவுகள் மனதைக் கவரும் அழகு கொண்டவை. சாஸ்தா, பகவதி,யட்சி ஆகியோருக்குத்தான் காவுகள் வழக்கம்.  பழைய சமணமரபில் இருந்து உருவான கோயில்கள் அவை . அனேகமாக வட்டவடிவமானவை. கூம்புக்கோபுரம் கொண்டவை. சுற்றிலும் விரிந்த பூங்கா இருக்கும். கணிசமான காவுகளில் கட்டிடங்களே இருக்காது.

இப்போது அவற்றையெல்லாம் எந்தக் கலைநயமும் இல்லாமல் சிமிட்டியால் திரும்பக் கட்டியிருக்கிறார்கள். 

கேரளம் முழுக்க சுவரொட்டிகளில் நூற்றுக்கணக்கான கோயில்களின் விளம்பரச் சுவரொட்டிகள். கோயில்களை அதைச்சுற்றியுள்ள வணிகர்கள் பணம்போட்டு ‘பிரமோட்’ செய்வது மிக அதிகமாக இருக்கிறது. எழுபதுகளில்கூட ஆற்றுகால் பகவதி கோயில் சிறிய வழிபாட்டு இடம் மட்டும்தான். வருடத்துக்கு ஒருமுறை பொங்கல் நாளில் மட்டும் கூட்டம் வரும். இன்று அது ஒரு மாபெரும் மத-சுற்றுலா-வணிக மையம்.

அதைப்பார்த்து தொண்ணூறுகளில் ஒரு சிறு கோயிலாக இருந்த சக்குளத்து பகவதியை விளம்பரப்படுத்த ஆரம்பித்தனர்.  இருபது வணிகர்கள் கொண்ட குழு அதை செய்தகாக தகவல். சக்குளத்து அம்மையை சேவிக்க பரிந்துரை செய்யும் சோதிடர்களுக்கு கமிஷன் அளிக்கப்பட்டது. அங்கே வந்துசெல்லும் எல்லா ஆட்டோ ரிக்ஷாக்களுக்கும் ‘படி’ அளிக்கப்பட்டது. இன்று அது ஒரு மாபெரும் மையம்.

இதன்விளைவாக இப்போது சுவரெல்லாம் அம்மன்கள் அழைக்கிறார்கள். வண்ணச்சுவரொட்டிகள். பதாகைகள். இதைத்தவிர பல்வேறு ஹோமங்கள் யாகங்களுக்கான அழைப்புகள். விதவிதமான சாமியார்கள். பூஜைகள் தோஷ பரிகாரங்கள். எல்லாமே பெரும் பணச்செலவில் செய்யப்படும் விளம்பரங்கள்.

சாலையோரம் முழுக்க குப்பைமலைகளும் கட்டிடம்கட்டும்போது மிஞ்சும் பொருட்களும் குவிக்கப்பட்டிருந்தன. உடைந்த கண்ணாடிகள் பிய்ந்த சோபாக்கள் தரைத்தகடுச் சில்லுகள்.  கேரளத்தின் வளர்ச்சியை பல வகைகளில் காணமுடிந்தது. சாலையோரம் ஒன்றுடன் ஒன்று இணைந்து நாகர்கோயில்முதல் ஒரே கடைவீதியாக ஆகியிருந்தது. கடைகள் கடைகள் கடைகள். சாலைக்குமேல் மீண்டும் மீண்டும் நெளியும் வளையும் நகைக்டை விளம்பரப்பெண்கள் . இந்த தட்டிகளின் நிழலில்தான் கேரளமே வாழ்கிறது..

சாலையோரங்கள் முழுக்க பிரம்மாண்ட வீடுகள். அரண்மனைகள் என்று சொல்லவேண்டும். முட்டாள்தனமான கட்டுமானங்கள். கேரளத்தின் தட்பவெப்பம் குறித்த பிரக்ஞையோ சூழல் குறித்த உணர்வோ இல்லாது உருவாக்கப்பட்டவை. பசியதென்னைமரங்கள் நடுவே பச்சை சிவப்பு நீல நிறங்களில் பெரிய தூண்களும் பலவகையான பால்கனிகளுமாக அவை துருத்தி நின்றன.

இக்கட்டிடங்கள் கேரளத்தின்மழைக்கும் வெப்பத்திற்கு தாக்குபிடிக்காமல் கறுக்கின்றன. ஆகவே இப்போது ஏசியன்பெயிண்ட் ·பங்கஸ் ·ப்ரீ என்று சொல்லி வெளியிட்டுள்ள கண்கூசும் கிளிப்பச்சை , ஒளிர்சிவப்பு, ஊதா நிற வண்ணங்களை பூசியிருக்கிறார்கள். பலர் மொத்த கட்டிடத்துக்கே மாபெரும் தகரக்கூரை போட்டு பாதுகாப்பாக நிறுத்தியிருக்கிறார்கள். பழைய கேரளவீடுகள் சுவரில் நீர்வழியாத அமைப்புடன் இருக்கும். ஆனால் அம்மாதிரி வீடுகள் ‘பேஷன்’ இல்லையாம்! அபத்தத்தின் உச்சம்.

திருவனந்தபுரம் வழியாக பீமாப்பள்ளி கடற்கரைக்கு வந்தோம். இது இஸ்லாமியர்களின் ‘பாதுகாக்கப்பட்ட’ பகுதி. சாலைமுழுக்க இருபக்கமும் நூற்றுக்கணக்கான கள்ளக்கடத்தல் பொருட்கள், போலிப்பொருட்கள் விற்கும் கடைகள். கேரளத்தில் தடைசெய்யப்பட்ட எதுவும் இங்கே கிடைக்கும். போலீஸ் இங்கே நுழைய பீமாப்பள்ளி ஜமாத் அனுமதிப்பதில்லை. பீமாப்பள்ளீ ஜமாத் மிகப்பிரபலமானது. சிலவருடங்களுக்கு முன்பு ஒரு இஸ்லாமிய விதவைக்கு பச்சைமட்டையில் நூறு அடிகொடுக்க அது தீர்ப்பளித்தது விவாதத்தை உருவாக்கியது. 

சமீபமாக கேரளப்படங்கள் தொடர்ந்து படுதோல்வி அடைவதனால் அரசுதிருட்டு டிவிடி விற்பனையை மிகக் கடுமையாக ஒடுக்கிவருகிறது. ஆகவே பீமாப்பள்ளி முழுக்க திருட்டு டிவிடி கடைகளில் பரபரப்பான கூட்டம். எங்கே பார்த்தாலும் பைக்குகள், கார்கள். நாங்கள் ஒரு பெரிய திருட்டு டிவிடி கடையில் நுழைந்து பார்த்தோம். குவியல் குவியலாக திருட்டு டிவிடி. ‘அசல்’ ‘தீராத விளையாட்டுப்பிள்ளை’உட்பட எல்லா தமிழ்ப்படங்களுக்கும் டிவிடிகள் இருந்தன. அவை பத்து பத்து கட்டுகளாக கட்டி வைக்கப்பட்டிருந்தன. அங்கே சிறுவணிகர்கள்தான் வாங்குகிறார்கள்.

அரசு பீமாப்பள்ளி ஜமாத்திடம் பேசி மலையாளப்படங்களின் திருட்டு டிவிடிக்களை விற்பதை தடுக்க கோரியுள்ளது என்றார் ஓட்டுநர். பீமாப்பள்ளி ஜமாத் அதற்கு சம்மதித்திருக்கிறதாம். கைவசமுள்ள ஸ்டாக்குகள் விற்கப்பட்டபின் அவர்கள் மேலும் விற்க மாட்டார்கள் என்றார். ‘கள்ளத்தனமாக விற்றால் என்ன செய்வார்கள்?’ என்றேன். ‘அதெல்லாம் விற்கமாட்டார்கள். சொன்னால் சொன்ன சொல்லை காப்பாற்றுவார்கள்’ என்றார்.

பீமாப்பள்ளியிலேயே சாப்பிடலாமே என்றார் நண்பர். பசியும் நன்றாக எரிந்தது. இருந்தாலும் நல்ல ஓட்டலுக்குப் போய் சாப்பிடலாமே என்று திருவனந்தபுரம் சென்றோம். ‘இங்கே இதுதான் சார் நல்ல ஓட்டல்’ என்று டிரைவர் ஓர் ஓட்டலுக்குக் கொண்டு சென்றார். நான் மீன்கறியும் சோறும் சாப்பிட்டேன்.

இந்தப்பயணம் முழுக்க ஒரே ஒருவேளை கண்ணனூரில் மட்டும்தான் சகித்துக்கொள்ளும்படியான உணவைச் சாப்பிட்டேன். கேரள ஓட்டல்கள் போல பொறுப்பில்லாத நிறுவனங்கள் இருக்குமா என்பதே ஐயம்தான். எந்தவிதமான அக்கறையும் இல்லாமல் மனம்போனபடி சமைக்கப்பட்ட உணவு. ஆறிப்போன கூட்டு பொரியல். வாழைக்காய் நீளவாக்கில் வெட்டிபோடப்பட்ட சாம்பார். கத்தரிககய் முழுக்காம்புடன் கிடந்தது. செதில்கூட களையப்படாமல் பொரிக்கப்பட்ட அயிலைமீன். அதற்குள் அப்படியே குடல் கெட்டியாக இருந்தது.

என்ன சிக்கல் என்று கேட்டபோது கேரள நண்பர் விளக்கினார். கேரளத்தில் ஓட்டல் தொழில் வளரவில்லை. மொத்தக் கேரளத்திலும் ஐம்பது தரமான ஓட்டல்கள் இருந்தால் அதிகம். மலையாளிகள் ஓட்டலில் சாப்பிடுவதை விரும்புவதில்லை. குறிப்பாக பெண்கள். ஆகவே தரமான ஓட்டல்களுக்கான முயற்சிகள் எப்போதுமே தோல்வி அடைகின்றன. தரமற்ற ஆனால் விலை அதிகமான மட்டரக ஓட்டல்கள் மட்டுமே நீடிக்க முடிகிறது. மலையாளிகள் மாலையில் பார்களில் குடித்துக்கொண்டு சாப்பிட விரும்புவார்கள். நல்ல உணவு கிடைக்கும் பார்கள் ஏராளமாக உண்டு. சைவ உணவு என்பது கேரள மண்ணில் ஒரு மோசடி என்றே சொல்லவேண்டும்.

சாப்பிட்டபின் வாயில் எஞ்சிய கெட்டசுவையை வெல்ல ஒரு சாக்லேட் வாங்கிக்கொண்டேன். காரில் ஏறியபோது இனம்புரியாத எரிச்சலில் மனம் குமைந்தபடியே இருந்தது. காரில் ஓட்டல் சாப்பாட்டைப்பற்றிப் பேசியபடியே சென்றோம். நான் ஆந்திராவில் பயணாம்செய்தபோதெல்லாம் நல்ல உணவையே சாப்பிட்டிருக்கிறேன். தமிழகத்திலும் அனேகமாக நல்ல உணவு தான் எங்கும் கிடைக்கிறது.

மூன்றரை மணிக்கு வற்கலை கடற்கரைக்குச் சென்றோம். வற்கலை அழகான கடற்கரை. செங்குத்தாக கீழிறங்கும் நிலம் நூறடி ஆழத்தில் கடற்கரையை தொடுகிறது. கடற்கரை சுத்தமாக வெண்மணல் விரிந்து ஒளியுடன் இருந்தது. ஏராளமான வெள்ளைச் சுற்றுலாப்பயணிகள். மேட்டில் இருந்து கிளைடரில் குதித்து காற்றில் கடல்மீது சுற்றிப்பறப்பது இங்கே ஒரு முக்கியமான விளையாட்டு. கடலுக்குள் நீர்ச்சறுக்குவிளையாட்டுகளுக்கும் வசதி உண்டு. ஒரு வெள்ளை நங்கை எங்கள் தலைமேல் ஒரு பெரிய வெண்பறவைபோல வட்டமிட்டுக்கொண்டே இருந்தாள்.

வற்கலையில் இருந்து கொல்லம் நோக்கிச் சென்றோம். இரவிபுரம் முதல் கொல்லம் வரையிலான கடலோரச் சாலை இனிய பயண அனுபவம். இடதுபக்கம் கடல் நெளிந்துகொண்டே இருந்தது. கொல்லம் கடற்கரை ஓர் விரிந்த வெண்மணல் வெளி. கொல்லத்தின் முக்கியமான பொழுதுபோக்கு மையமே அதுதான் என்று கூட்டத்தைப் பார்த்தபோது தெரிந்தது. ஆனால் சுத்தமாக இருந்தது. அதனாலேயே மனதைக் கவர்வதாகவும்.

கொல்லம் கடற்கரையில் ஒரு பெரிய கடற்கன்னி சிலை இருந்தது. கான்கிரீட்டால்செய்யபப்ட்டது.  எனக்கு பொதுவாகவே கான்கிரீட் சிலைகள் மேல் ஆர்வம் இல்லை. அவை கட்டிடத்தை சிலையாகச் செய்தவை போல தோன்றுகின்றன.

கொல்லத்தில் இருந்து சவறா கடற்கரை. அங்கே அஸ்தமனத்தைப் பார்த்தோம். செங்குழம்பாக அரபிக்கடற்கரையில் சூரியன் அணைந்துகொண்டிருந்தது. கேரளக்கடற்கரையில் அஸ்தமனம் தான் தெரியும். கோடைகாலத்தில் மேகமில்லா வானம் விரைவிலேயே அணைந்துவிட்டது.

[மேலும்]

முந்தைய கட்டுரைஉலோகம் – 10
அடுத்த கட்டுரைஉலோகம் – 11