பயணம்:ஒரு கடிதம்

திரு ஜயமோகன் அவர்களுக்கு,
 
இந்தியப்பயணம் குறித்த தங்கள் கட்டுரைகளை படித்து வருகிறேன். நானும் இதுபோல ஒரு சிறு தென்னிந்தியப் பயணம் மேற்கொண்டிருக்கிறேன். ஆந்திராவில் கிட்டத்தட்ட அனைத்து (மேதக் கரீம்நகர் தவிர) மாவட்டங்களையும் பைக்கில் சுற்றித்திரிந்திருக்கிறேன். பெரும்பாலான காடுகள் அப்போது பழக்கமானவையே. புராதனச் சின்னங்கள் அல்லது பழம்பெருமை வாய்ந்த கலாசார மையங்கள் என்று வகுத்துக்கொள்வதை விட கிராமங்கள், மக்கள் என்றே எனது பயணங்களை அமைத்துக்கொள்வேன். பெரும்பாலும் எனது பயணங்கள் ஏதாவது ஒரு நண்பனிடமிருந்து கடன் வாங்கிய பைக்கிலேயே இருந்திருக்கிறது. பைக் பின்னால் ஒரு சிறு டெண்ட், ஒரு back-pack பை என எனது வாரக்கடைசிகளை மனிதர்களை கவனிப்பதில் செலவிட்டிருந்திருக்கிறேன். ஆந்திராவின் கிரமங்களில் கிடைத்த இடத்தில் சோறு, ஏதாவது ஒரு மரத்தடியில் டெண்டில் தூக்கம். கையில் சில புத்தகம் அவ்வளவே.
 
ஸ்ரீசைலம் குறித்த தங்கள் கட்டுரை எனது பழைய நினைவுகளை கிளறிவிட்டது. ஸ்ரீசைலத்திற்கு இதுவரை ஒரு இருபது முறையாவது போயிருப்பேன். நீங்கள் ரெட்டி சத்திரம் என்றால் நான் கரிகால வேளம்மா சத்திரம் அவ்வளவே :) . ஸ்ரீ சைலம் என்று சொல்வதை விட அதை சுற்றியிருக்கும் காடுகள் எனக்கு மிகவும் பிடித்ததனால் அந்தப்பக்கம் அலைவதற்காக மட்டுமே போய் வருவேன். அந்தக் காடுகள் பழக்கமானதால், சிலசமயம் எனது அலுவலக நண்பர்கள் என்னை வழிகாட்டியாக கூட்டிக்கொண்டு ட்ரெக்கிங் செல்வதும் நடந்திருக்கிறது. நான் முதல்முறை போனபோது காட்டில் வழி தவறி ஒரு பள்ளத்தாக்கில் ஓடை அருகே தனியாக ஒரு இரவைக்கழித்த அனுபவமும் வாய்த்திருக்கிறது. ( ஓடைகள் அருகே இரவு தங்கக்கூடாது என்று பின்னர் தெரிந்துகொண்டேன்.)  இஷ்டகாமேஸ்வரி எனும் ஒரு சிறு கோவிலலொன்று காட்டிடையில் இருக்கிறது. அதற்கும் நடந்து சென்று வருவோம்.(15 KM) காட்டு வழியில் பாறைகளின் மேல் ஜீப் பயனம் சாகசமாய் ஓட்டுவார்கள்.  நடந்து வர ஒரு 4 கிமி குறுக்கு வழியும் இருக்கிறது (இதில் தான் நான் வழிதவறினேன். இப்போது பழகிவிட்டது)
 
உஷத்கால பூஜைக்கு மஹாராஷ்ட்ராவிலிருந்து வரும் பக்தர்கள் காலை 3 மணிக்கு, சில்லிடும் க்ருஷ்ணாவில் குளித்து, குங்குமம் அப்பி, குடிமியுடன், அங்கவஸ்திரம் மட்டும் போர்த்தி, சங்கம் சங்கம் முழங்க கோவிலுக்கு வரும் அழகே தனி.
 
ஸ்ரீ சைலத்திலிருந்து திண்டி எனும் ஊர் வரும் வழியில் மல்லெலதீர்த்தம் என்ற ஒரு சிறு அருவி உள்ளது. மக்கள் அங்கு பெரும்பாலும் செல்வதில்லை. பிரதான சாலையில் இருந்து ஒரு 8 கிலோமீட்டர் மண் சாலையில் செல்லவேண்டும். இரவு அங்கே தங்குவது மிகவும் ஒரு ரம்மியமான ஒரு அனுபவம். ஆளில்லாத காட்டின் அமைதியில், அருவியின் அருகில் பாறை மீது டெண்ட் அமைத்து.. ஓ… இங்கே நான் தங்கிய ஒரு இரவில்,  சிறிய எமர்ஜன்ஸி லைட் வெளிச்சத்தில்தான் உங்கள் காடு புத்தகத்தை முதல் முறை படித்தேன். புத்தகங்கள் படிப்பதற்காகவே அங்கு அடிக்கடி செல்வதுண்டு. இந்த வனம் தாருகா(??? தவறு என்று நினைக்கிறேன். பெயர் சரியாக நினைவில் இல்லை) வனம் என்று நமது புராணங்களில் குறிப்பிடப்படுகிறது.
 
கட்டுரையில் ஒரு சிறு திருத்தம். அங்கிருக்கும் கடவுளர்களின் பெயர், ப்ரமராம்பா (பிரம்மாரம்பா அல்ல) சமேத மல்லிகார்ஜுனா. ப்ரமரம் என்றால் வண்டு என்று பொருள். அங்குள்ள சிரோமண்டபம் குறித்தும், வசுமதி குறித்தும் எழுதுவீர்கள் என்று நினைத்திருந்தேன்.
 
உங்கள் கட்டுரை மீண்டும் என்னை அங்கு செல்லத்தூண்டுகிறது. வரும் மாதம் முதல்வாரம் வங்காள விரிகுடாவில் இருந்து அரபிக்கடல் பயணம் நண்பர்களுடன் செல்கிறேன். ( சென்னை- பெங்களூர்-ஹாசந்-பேளூர்-ஹளபீடு-கலஸா- குதிரேமுகா- ஹொரநாடு-தர்மஸ்தலா-மங்களூர்- உடுப்பி- குக்கே-ஷகலேஷ்பூர்-பெங்களூர்-சென்னை) என்று இப்போதைய திட்டம். போய் வந்ததும் ஸ்ரீ சைலம் ப்ளான் போடனும்.. பாப்போம்.

-ராம்

முந்தைய கட்டுரைஇந்தியப் பயணம் 16 – பீனா, சத்னா, ரேவா.
அடுத்த கட்டுரைஇந்தியப் பயணம் 17 – வாரணாசி