அன்புள்ள ஜெ.,
இந்தக் கடிதம் உங்கள் மீதான விமர்சனங்கள் குறித்தல்ல… (ஞாநி மற்றும் மனுஷ்யபுத்திரன்)… எங்கள் (வாசகர்கள் மீதான) விமர்சனம்… ஏதோ விசிலடிச்சான் குஞ்சுகள் போல எங்களை ஞானி கற்பனை செய்கிறார்… மனுஷ்யபுத்திரன் வெண்முரசு படித்துவிட்டு நாங்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ் படையில் சேர்ந்துவிடுவோம் என்று பயப்படுகிறார்… இதை எல்லாம் படிக்க மிகவும் வருத்தமாக உள்ளது…
பதில் 1) நாங்கள் வெண்முரசு படிப்பது உங்களுக்காகவே, படைப்பின் தரத்திற்காக அல்ல – என்று நேரடியாக வாசகர்களாகிய எங்களைத் தாக்குகிறார்.. கடும் கண்டனத்திற்குரிய கருத்து இது… மணிரத்னத்தின் வாசகர்களின் ரசனையை P.வாசு சந்தேகிப்பது போல் இருக்கிறது… ஒரு எழுத்தாளனுக்குரிய அதே திமிர் ஒரு வாசகனாக எனக்கும் உண்டு.. என்னை உடைத்து உள்ளே வருவதற்கு ஒரு தகுதி வேண்டும்… ஞாநி போன்றவர்களால் அதைக் கற்பனை கூட செய்ய முடியாது…
பதில் 2) பண்பாட்டு வேர்களை உதறுவதும் பாஜகவின் இந்துத்துவாவை மறுப்பதும் ஒன்று என்கிறார் மனுஷ்யபுத்திரன்… இரண்டும் வேறு வேறு என்பதற்கு, வெண்முரசு குறித்த இந்துக்கள் அல்லாத வாசகர் கடிதங்களே சாட்சி… சொல்லபோனால், பாஜகவின் இந்துத்துவா கொள்கைக்கு நேர் எதிர் நிலையையே வெண்முரசு வலுப்படுத்தும்…
நன்றி
ரத்தன்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
வெண்முரசு தொடர்ந்து வாசித்து வருகிறேன். உங்கள் படைப்பாற்றலின் உச்சத்திலிருக்கிறீர்கள். மண்ணின் மரபுகளும் வரலாறும் பல தலைமுறைகளுக்கு, மீள்சொல்லல் வாயிலாகவே முன்னெடுத்துச் செல்லப்படுவதைப் பார்க்கிறோம்.அவ்வகையில் ஒவ்வொரு தலைமுறைக்கு ஒரு முறையும் ஏதேனும் ஒரு வடிவில் மஹாபாரதம் சொல்லப்பட்டலும், நீங்கள் இப்போது சொல்லிக் கொண்டிருக்கும் மஹாபாரதம் தமிழ்க்குடும்பங்களில் இன்னும் பல தலைமுறைகளையும் தாண்டி நிற்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. மழலையில் பேசிக் கொண்டிருக்கும் என் மகனுக்கும், அவனுக்குப் பிறகுமான சந்ததிக்கான மஹாபாரதக் கதை இது என்று நினைக்கும் போது என் மனம் நன்றியில் நிலைக்கிறது. உங்களுக்கு என் வணக்கங்கள்.
சந்திரசேகரன்