வணக்கம்,
நான் விழியன். சென்னையில் வசிக்கிறேன். உங்களின் அறிமுகம் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் நண்பர்கள் மூலம் கிடைத்தது. உங்களின் அனேக புத்தகங்களை வாங்கி வைத்துள்ளேன். குறுநாவல் தொகுப்பில் சில படைப்புகளை மட்டும் படிக்க முடிந்தது. அதன் பின்னர் ஏனோ உங்கள் எழுத்துக்குள் செல்ல முடியவில்லை. பல முறை முயன்றேன். புதுமைபித்தனின் எழுத்துக்களும் அப்படி தான் இருந்தது. ஏழு வருடங்கள் முன்னர் அவர் படைப்புகளை எடுத்தேன் உள்ளே நுழைய முடியவில்லை. கால் உடைந்து கட்டிலில் படுத்த நாட்களில் வெகு அழகாய் உள்நுழைந்து ஆட்டி எடுத்தார். அதனால் உங்கள் எழுத்துக்களும் என்றேனும் உள்புகும் என்ற நம்பிக்கையில் இருந்தேன்.
கேணி கூட்டத்தின் ஓர் ஓரத்தில் இருந்து உங்களின் ஆளுமையினை கண்டேன். ஒவ்வொரு நிமிடமும் பிரம்மாண்ட உருவம் கொண்டு வளர்ந்தீர்கள். உங்களின் கூர்மையான பார்வை, தர்க்கம், ஆழமான ஆளுமை மெய்சிலிர்க்க வைத்தது. உங்களில் கட்டுரைகளை அங்கும் இங்கும் கண்டிருக்கின்றேன், ஆனால் ஈர்க்கப்படவில்லை. ஆனால் உங்கள் பேச்சிற்கு பிறகு எல்லாம் தகர்ந்து போனது.
கடந்த இரண்டு நாட்கள் முழுதும் உங்கள் தளத்தில் உலவித்திகழ்ந்தேன். ஆஹா என்ன இன்பம் இது. இணைத்தின் இன்பத்தினை இன்றே வியந்தேன், ரசித்தேன். அனைத்தையும் ஒருங்கே கிட்டும் வாய்ப்பு இங்கே உள்ளது.
சித்தார்த் (குவைத்) உங்களின் எழுத்துக்களை சிலாகித்து பேசிவான், பொறாமையாக இருக்கும், நானும் உன் கூட்டாளி ஆகிவிட்டேன் டா என்று நேற்று மடலிட்டு விட்டேன் :).
ஜெமோ, எனக்கு ஒரு ஐயம். தப்பாக நினைக்க கூடாது. கேணி கூட்டத்தில் நீங்கள் நேர ஆளுமையினை பற்றி பேசினீர்கள். அதில் ஒன்றாக எனக்கு பரிந்துரைக்கப்படாத புத்தகத்தினை நான் படிக்க மாட்டேன் என்றீர்கள். அப்படியானால் யாரேனும் முதல் முதலாக ஒரு புத்தகத்தினை படித்து தானே ஆகவேண்டும், அப்படி படிப்பவர்கள் நேர விரயம் செய்பவர்கள் ஆகிவிடுவார்களா? இந்த சந்தேகம் இரண்டு நாளாக வாட்டி எடுக்கின்றது. இதற்கு மட்டும் மடலிடுங்கள்.
உலோகம் தொடர் சிறப்பாக ஆரம்பித்துள்ளீர்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள். ஒரு தொடரை எழுதும் போதே வாசிக்கும் அனுபவம் இதுவே முதல் முறை. நானும் எங்கே அகதி முகாமில் சுற்றி அலைபவனாக உணர்கின்றேன்.
(பின் குறிப்பு : புத்தக்த்தின் பால் எனக்கு ஈர்ப்பு அதிகம். புகைப்படம் எடுப்பதில் அலாதி இன்பம். சிறுவர்களுக்காக எழுத ஆரம்பித்துள்ளேன். சென்ற வருடம் சிறுவர் நாவல் வெளிவந்தது. 2005 ஆம் வருடம் ‘தோழியே உன்னை தேடுகிறேன்’ (கற்பனை தோழிக்கு எழுதும் சமூக அக்கறை கொண்ட கடிதங்கள் – காதலை தவிர்த்து) புத்தகம் வெளிவந்தது. பயணங்களில் திளைப்பவன். மக்களை சந்திப்பதில் ஆனந்தம் கொள்பவன். அவ்வளவே)–
விழியன்
http://vizhiyan.wordpress.com
அன்புள்ள விழியன்
நலம். நலம்தானே
பயணத்தில் இருப்பதனால் நீண்ட பதில் போடமுடியா நிலை
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. ஞாநி கூட்டம் மிகச் சிறப்பாக நடந்தது. கருத்து வேற்றுமைகளுடன் உரையாடுவதென்பதே ஒரு அறிவியக்கத்தின் ஆரோக்கியமான நிலை
அந்தக் கூட்டத்தில் பேசியவர்கள் பலர் என்னைப் போலவே சமகாலத்தில் எழுதி வருபவரக்ள். ஆகவே அவர்களின் தரப்பும் வலுவாகவே இருக்கும். இரு சாராரும் கருத்துக்களைச் சொல்லி முடிக்கும்போது விவாதம் நிறைவு பெற்று விடுகிறது
நான் சொன்னது எழுத்தாளர்களுக்கு. முழுநேர வாசகரக்ளைப் போல எழுத்தாளன் வாசிக்க முடியாது. அவன் நேரம் எல்லைக்குட்ப் பட்டது. ஆகவே ஒரு இரண்டாம் கருத்தைக் கேட்டுக் கொள்ளலாம். இன்றைய பிரச்சார யுகத்தில் அது தேவை. துறைசார் நூல்கள் என்றால் துறைசார் ஆலோசனைகளைக் கேட்கலாம். நான் செய்வது அதையே என்றேன். ஆனால் அது இப்போது. இருபது வருடம் முன்பு நான் கையில் கிடைத்த எதையும் வாசித்து விடுவேன்
ஜெ
அன்புள்ள ஜெயமோகன் சார் ..,
எனக்கு ரொம்பவும் பிடிச்சிருந்துது சார் இந்த நிகழ்ச்சி . நினைத்து நினைத்து அடர்த்தி ஆக்கி கொண்டு வருகிறேன். .உங்கள் சமநிலை இழக்காமல் தயாராக எல்லாவற்றுக்கும் வந்த பதில்கள் சூப்பர்.., ஒரு சின்ன ஏமாற்றம், நான் இன்னும் படிக்காத உங்கள் முக்கியமான நாவல்களை,குறு நாவல்கள் பற்றி கேள்விகள்,விவாதங்கள் வரும் என்று எதிர்பார்த்தேன். உங்களிடம் பேசி இருக்கலாம் ஆனால் இயல்பான மன நிலையை உருவாக்கி கொண்டு உங்களிடம் பேச கொஞ்சம் முதிர்ச்சி தேவை . எனக்கு அது இல்லை சாத்தியப்படாது என்றும் நினைகிறேன். இனி நீங்கள் எங்காவது பேசுவது மாதிரி ப்ரோக்ராம் இருந்தால் ஓடி வந்துவிடவேண்டும் என்று ஆசையை கிளப்பி விட்டது இந்த நிகழ்ச்சி ..திரு.ஞாநி அவர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த சந்திப்பு அவர் மேல் இன்னும் அதிகமான மதிப்பை ஏற்படுத்தி விட்டது. அவருக்கும் உங்களுக்கும் என் நன்றிகள் .
அன்புள்ள தினேஷ்
Regards
dineshnallasivam
நீங்கள் பேசியிருந்திருக்கலாம். பெங்களூரில் இருந்து வந்திருந்தீர்கள். பொதுவாக இத்தகைய விவாதங்கள் ஏற்கனவே பேசிக் கொண்டிருப்பவர்களின் குரல்கள் ஒலிப்பவையாக ஆகிவிடும் என்பது ஒரு வழக்கம்.
மீண்டும் சந்திப்போம்
ஜெ