அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை “கேணி” கூட்டத்தில் தங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. தமிழ்த் தேசியம் தொடர்பாகவும் திராவிட அரசியல் தொடர்பாகவும் எனக்கு சில கேள்விகள் இருந்தன. அன்றைய சூழலில் கேட்க இயலவில்லை. இந்திய தேசியமும் தமிழ்த் தேசியமும் முரணானவை என்று நீங்கள் கருதுகிறீர்களா? மிகப் பொருத்தமான காலகட்டத்தில் எழுந்த தமிழ்த் தேசியம் குறித்த ஓர்மை, அதே சமத்தில் தோன்றிய திராவிட அரசியலால் சிதைந்து போனதா? வகுப்புவாதம் மற்றும் இனவெறுப்பை முன்னிறுத்தாமல் பண்டைய இலக்கியப் பரிச்சயங்களின் வழியாக வடித்த தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுடன் தமிழரசுக் கழகம் என்ற கட்சியை வழிநடத்திப் பிறகு அந்நிலைப்பாட்டிலிருந்து விலகிப் போன ம.பொ.சிவஞானம் பற்றி உங்களது கருத்து என்ன?
அன்புள்ள
தி.பரமேசுவரி
அன்புள்ள பரமேஸ்வரி அவர்களுக்கு
ம.பொ.சிவஞானம் அவர்களைப்பற்றி என் புரிதல் அல்லது மதிப்பீட்டை நான் விரிவாகவே எழுத வேண்டும். திராவிட இயக்கம் உருவாக்கிய பிளவுப்போக்குள்ள தமிழ் தேசியத்தை எதிர்கொள்ள காங்கிரஸ் தரப்பில் இருந்து உருவான ஒருமைப்பாட்டு நோக்கமுள்ள தமிழ் தேசியத்தை அவர் முன்வைத்தார் என்று எண்ணுகிறேன். அது முக்கியமான ஒரு தரப்பு. ஆனால் காங்கிரஸ் அவரை கைவிட்டது. அதற்கு பெரும்பாலும் காமராஜ் அவரக்ளே காரணம். அந்த தரப்பின் பண்பாட்டு முக்கியத்துவத்தை உணர காமராஜ் அவர்களால் இயலவில்லை.
இந்தியாவின் ஒட்டுமொத்த தேசிய அமைப்புக்குள் பல்வேறு மொழிவாரி உபதேசியங்கள் உள்ளன. அவை தனி நாடுகளாக தனித்தியங்க முடியாது. காரணம் இந்நாட்டின் விரிவான மக்கள் பரவல். விரிவான பண்பாட்டுப்பரவல். இந்நாடு ஒரு ஒற்றைப்பண்பாட்டு தேசியமாகவும் உள்ளது. இந்த மைய அமைப்புக்குள் ஒவ்வொரு கூறும் தன் தனித்தன்மையை தக்கவைத்துக்கொள்ளவும் வளர்க்கவும் வேணிய தேவை உள்ளது. அதற்கு பிளவுப்போக்கில்லாத, ஒருமைநோக்கு கொண்ட, ஆக்கபூர்வமான தேசிய உருவகம் தேவை. அதாவது தேசிய உருவகத்தை பாசிசமாக மாற்றும் பொக்குக்கு எதிரான நேர்நிலை தேசியம்
ஈ.எம்.எஸ் அவர்கள் கேரள தேசியம் குறித்து பேசும்போது அதைத்தான் பேசினார் என்பது என் எண்ணம். அதை ஈ.எம்.எஸ்ஸும் கேரள தேசியமும் என்ற கட்டுரையில் பேசியிருக்கிறேன். மபொசியின் அந்த தரப்பு வலுபெற்றிருந்தால் இன்றைய வெறுப்புத்தேசிய குரல்கள் இத்தனை எழுந்திருக்காது
ஒருமைப்பாட்டுக்கு, ஆக்கபூர்வமான தேசியத்திற்கு பண்பாட்டில் பயிற்சி தேவை. மொழியில் தேர்ச்சி தேவை. வெறுப்புக்கு, பாசிசத்துக்கு முசந்தியில் கூச்சலிடும் முரடர்களே போதும்
மபொசி தோற்கடிக்கப்பட்டது -நண்பர்களாலும் எதிரிகளாலும் அவரது தனிப்பட பலவீனங்களாலும்- ஒரு பெரிய இழப்பே
ஜெ