கஜுராஹோவில் இருந்து நேராக காசிக்கு செல்வதாக எடுத்த முடிவு சிறந்தது அல்ல. எங்கள் பயணத்தில் ஆக மிக மோசமான சாலையை நாங்கள் கண்டது இந்தப் பயணத்தின்போதுதான். தேசிய நெடுஞ்சாலை 8 இது ஆனால் தார்பரப்பு கூட கண்ணில் படவில்லை. சல்லிக்கற்கள் மீது ஏறி இறங்கி ஏறி இறங்கி குலுங்கி அதிர்ந்து சென்றோம்.
மத்தியப்பிரதேசத்தின் இப்பகுதியில் பல ஆறுகள் குறுக்காக ஓடுகின்றன. எல்லா ஆறுகளுமே நீர் நிறைந்தவை. வேளாண்மை நடப்பதைக் காணமுடிந்தது. மேலும் மேய்ச்சலும் அதிகமென்பதை அவ்வப்போது கண்ணில் பட்ட பெரும் பசுக்கூட்டங்கள் காட்டின. ஆனால் நாங்கள் கொடிய வறுமையையே எங்கும் கண்டோம். புழுதிப்படலத்துக்குள் மனிதர்கள் அழுக்கே உருவாக திரிந்தார்கள். தகரக்கூரைக் குடிசைகளில் காற்றுக்குப் பறக்காமலிருக்க பெரிய கற்களை தூக்கி வைத்திருந்தார்கள். நம்மூர் குடிசைகளைக்கூட ஒரு தொழில்தெரிந்த கொத்தனார் கட்டியிருப்பார். சுவர்விளிம்புகள் கச்சிதமாக இருக்கும்.செங்கல் அடுக்கு நூல்வைத்து கட்டப்பட்டு நேர்த்தியாக இருக்கும். இங்கே உள்ள குடிசைகள் அவற்றில் குடியிருப்பவர்களாலேயே கைவந்த போக்கில் மண்ணை குழைத்து அள்ளி வைத்துக் கட்டப்பட்டவை.
இந்தியாவை இணைக்கும் பண்பாட்டுக்கூறுகள் பலவற்றை நாங்கள் இப்பயணத்தில் கண்டோம்,. மதம், வாழ்க்கைமுறை, கலைகள், மனநிலை என பல. ஆனால் இந்தியாமுழுக்க பரவியுள்ள ஒரு பழக்கம் அனைத்தையும்விட நாம் இந்தியர் என்ற உணர்வை உருவாக்கக் கூடியது. தாரமங்கலம் முதல் இந்த நாள் வரை தெருவோரங்களில் மலம் கழிப்பதைப் பார்த்துக்கொண்டுதான் பயணம் செய்திருக்கிறோம். தாரமங்கலம் காளிகோயிலைச்சுற்றி மலக்காடு. ஆந்திராவில் லெபாக்ஷி கோயிலைச் சுற்றியும் மலம். தெருக்கள் எல்லாம் மலம். தமிழகத்தைவிட ஆந்திரா மோசம். மத்தியப் பிரதேசத்துடன் ஒப்பிட்டால் ஆந்திரா எவ்வளவோ மேல்.
இங்கே பெரிய நகரங்களில் பேருந்து நிலையத்தை ஒட்டியே மலக்காடு. புண்டார்னே நகரில் காலையில் மையச்சாலையில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து மலம் கழிக்கிறார்கள். ஆணும் பெண்ணும் பேசிக்கொண்டே அமர்ந்து மலம் கழிக்கிறார்கள். அந்திகளில் சாலைகளில் கும்பல் கும்பலாக மலம் கழிப்பவர்கள் கலகலவென பேசிக்கொண்டு குவிந்திருந்தார்கள். எல்லார் கையிலும் அரைச்செம்பு அளவுள்ள தகர டப்பாவில் நீர்.
இப்பகுதியின் வீடுகளுக்குள் போகும்காரிலிருந்தே எட்டிப்பார்த்துக் கொண்டு வந்தேன். குழந்தைகள் விளையாடுகின்றன. பெரிசுகள் அமர்ந்திருக்கின்றன மண்பானைகள் குமுட்டி அடுப்புகள் சட்டிகள் தென்படுகின்றன. முக்காடு போட்ட பெண்கள் வேலைசெய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் மிகப்பெரும்பாலான வீடுகளில் மின் இணைப்பு இல்லை. நம்மூரின் குடிசைகள்கூட அஸ்திவாரம் எழுப்பி அதன்மீது கட்டப்பட்டிருக்கும். ஆகவே திண்ணை இருக்கும். இங்கே அப்படி இல்லை. நேராக தரையிலேயே கட்டியிருக்கிறார்கள். நடந்து நடந்து குழிவிழுந்து தரை பள்ளமாக இருக்கிறது. மழை பெய்தால் நீர் வீட்டுக்குள் ஊறிவந்துவிடும். ஆகவே தரையில் படுப்பதில்லை, தொய்வான கயிற்றுக்கட்டில்கள்தான். வீட்டுக்குள் சேறு மிதிபடுகிறது, தொழுவங்கள் போல.
வரணாசி செல்லும் பாதையில் மத்தியபிரதேச – உத்தரபிரதேச எல்லையில் மாவோயிஸ்டு குழுக்களின் கொள்ளையும் பிற திருடர்கூட்டங்களும் உண்டு என்றார்கள். வரைபடத்தைப் பார்த்து ஒன்பது மணிக்குள் வரணாசி போய்விடலாமென எண்ணியிருந்தோம். சாலை என்ற புழுதித்தடத்தில் ஊர்ந்து ஊர்ந்துதான் செல்ல முடிந்தது. நள்ளிரவாகிவிடுமென்று தோன்றியது. ஆனாலும் நிற்காமல் போய்விடுவதென முடிவுசெய்தோம்.
வழியில் நிறைய ஆறுகள் ஊடறுத்துச் சென்றன. எல்லாவற்றிலும் நன்றாகவே நீர் பெருகி ஓடியது. பீனா நதியைக் கண்டதும் இறங்கி குளிக்கலாமென எண்ணி நிறுத்தும்படி சொன்னேன். ஆனால் நேரமாகிவிட்டது என்றார் கிருஷ்ணன். அடுத்ததாக சத்னா என்ற ஆறு நீர் பெருகி ஓட தன் கரையில் ஒரு பழைய கோட்டை தென்பட்டது. காரை நிறுத்திவிட்டு இறங்கி போய் கோட்டைக்குள் பார்த்தோம். திறந்து கிடந்தது. இடிந்த அரண்மனைகள் லாயங்கள். மாலைவெயிலில் அவை முழுக்க மரணத்தின் புன்னகை போல ஓர் அமைதி.
சத்னா கோட்டை சத்ரசால் மன்னர்களால் ஆளப்பட்டது 16 ஆம் நூற்றாண்டு வரை செயலுடன் இருந்திருக்கிறது. அவர்கள் ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்தவர்கள். முகலாய பாதுஷாக்களின் குறுநிலமன்னர்கள். இறந்துபோன மன்னர்களுக்குக் கட்டப்பட்ட சமாதிகளில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து மண்டபம் கட்டியிருக்கிறார்கள். ஏராளமான மண்டபங்கள் பரவிய ஒரு திறந்த வெளி கோட்டை அருகே இருந்தது. ஒரு மண்டபத்தின் உட்பகுதியில் ந்ல்ல சுவரோவியங்கள் இருந்தன.
திரும்பி வந்தால் ரஃபீக் அவரது காரை சத்னா நதியில் இறக்கிவிட்டிருந்தார். அவர் கிட்டத்தட்ட ஒரு யானைப்பாகன். அவருக்கு காரின் நலன் தான் வாழ்க்கையில் முக்கியம். நீரைக்கண்டால் அதுவே இறங்கிவிடும். ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் ஓடும் எங்கள் கார் எப்போதும் பளபளப்பாகத்தான் இருக்கும். நாங்களும் சத்னாவில் குளிக்க முடிவெடுத்தோம்.
சத்னாவில் நீர் நீலநிறமாக சுத்தமாக ஓடியது. நீந்திக்குளித்தோம். ஒரு சிறுவர் கும்பல் பிள்ளையாரைக் கரைக்க வந்தது ”கணபதி பாபா மோரியா மங்கல மூர்த்தி மோரியா’ என்று கீச்சுக்குரல் ஒலிகள். கணபதிக்கு உலர்ந்த சப்பாத்தியை படைத்திருந்தார்கள். குளித்துவிட்டு கரையிலேயே இருந்த டீக்கடையில் டீ குடித்தோம். சத்னா ஊரே சாக்கடையாலும் மலத்தாலும் நாறிக்கிடந்தது.
புழுதி வழியாகப்பயணம்செய்து ரீவா என்ற நதியின் கரையை அடைந்தபோது காரின் பீம் விளக்கு ஃபியூஸ் ஆகிவிட்டது என்று ரஃபீக் சொன்னார். ஆகவே அதை அங்கே ஒரு கடையில் பழுது பார்த்தார். நாங்கள் இறங்கி நடந்தோம். ரீவா ஒரு அணையால் தடுக்கப்பட்டு அருவிபோல எம்பி நுரைத்து வழிந்துகொண்டிருந்தது. மாலைநேரம் ஊரே கலகலப்பாக இருந்தது. ஆனால் நல்ல உடையணிந்த மனிதர்கள் சிலரே. பெரும்பாலும் அழுக்குக் கந்தல்கள். தமிழ்நாட்டின் ஒரு சிற்றூரில்கூட பெரும்பாலானவர்கள் சுத்தமான நல்ல உடைகளையே அணிந்திருப்பார்கள் என்பதை அங்கேதான் நினைவுகூர்ந்தோம்.
முட்டையை வேகவைத்து உப்பு போட்டு கொடுத்தான் ஒரு பையன். அதை வாங்கிச் சாப்பிட்டோம். செந்திலும் சிவாவும் கிருஷ்ணனும் ஒரு தனியார் வளாகத்துக்குள் சென்று அப்பால் இருந்த கோயில் ஒன்றுக்குச் சென்று மீண்டார்கள். நானும் வசந்த குமாரும் ஊருக்குள்ளேயே ஒரு சிறிய நடை நடந்தோம்.
கார் கிளம்பியது. மத்தியபிரதேசத்தை உத்த்ரபிரதேசத்துடன் இணைக்கும் இந்த தேசிய நெடுஞ்சாலையில் கண்முன் மஞ்சள்நிற திரை போல தூசி. தூசிக்காகவே வைப்பர் போடவேண்டியிருந்தது. எதிரே வண்டி வந்தால் அதன் விளக்கொளியில் தூசி ஒளிவிட்டு முழுமையாகவே கண்களை மறைத்தது. கண்களை அந்த ஒளி கூச வைத்தது. மத்தியப்பிரதேசம் பாரதிய ஜனதாவின் கோட்டை. அங்கே பிரச்சாரத்துக்கு வந்த அத்வானி அந்த தூசியில் ஒளி சுடர்விட்டதைக் கண்டிருக்க வேண்டும். இந்தியா ஒளிர்கிறது என்ற கோஷத்தை அவர் உருவாக்கியது அப்படித்தான்போலும்.
பின்னர் இரவு முழுக்க கார் பயணம்தான். திருடர் பயம் கொஞ்ச நேரம் உற்சாகம் அளித்தது. சாலையில் சென்ற பலர் கைகளில் துப்பாக்கிகள் இருந்தன. அதைவைத்து திகிலாக கதைகளை புனைந்து கொண்டோம். பின்னர் எல்லாருமே தூங்கிவிட்டார்கள். நானும் கிருஷ்ணனும் மட்டும் விழித்திருந்தோம். மணி பன்னிரண்டு தாண்டிவிட்டது. ரஃபீக் தூங்குவாரோ என்ற ஐயம் ஏற்பட்டதும் நான் அவரது பீபி மற்றும் பிள்ளைகளைப்பற்றி விரிவாகப் பேச ஆரம்பித்தேன்.
ஒருமணி தாண்டி வரணாசியை அடைந்தோம். ஆனால் புயல் வேகத்தில் கங்கைப்பாலத்தை தாண்டி மறு கரைசென்றுவிட்டோம். கங்கை இருளுக்குள் மெல்லிய நீர் மினுக்கத்துடன் அரைசந்திர வடிவிலான படிக்கட்டுகளில் விளக்கொளிகள் பெரும் நெக்லஸ் போல ஜொலிக்க விரிந்து கிடந்தது. வெகுதூரம் சென்றபின்னர்தான் வரணாசியை தாண்டிவிட்டோம் என்று புரிந்தது. ஆகவே வழிகேட்டு மீண்டும் திரும்பி வந்தோம்
சுற்றிச் சுற்றி நகருக்குள் அலைந்தோம். நகரில் கடுமையான காவல் போட்டிருந்தார்கள். 2006 ல் காசியை உலுக்கிய குண்டுவெடிப்புகள்தான் காரணம். காசிக்கு மீண்டும் தீவிரவாத மிரட்டல் இருக்கிறது. பின்னிரவுநேரத்திலும் போலீஸ்காரர்கள் விழித்திருந்தார்கள். அவர்களிடம் வழிகேட்டு ஜங்கம்பாடி மடத்துக்குச் சென்றோம். சிவாவின் உறவினர் ஒருவர் காசிக்கு பயணங்களை ஒழுங்குசெய்பவர். அவரிடம் சொல்லி ஜங்கம்பாடி மடத்தில் அறை ஏற்பாடு செய்திருந்தோம்.
ஜங்கம்பாடி மடத்தைஅடைந்து அதன் பொறுப்பாளரான குடுமிக்காரரை எழுப்பினால் எழுந்து வெகுநேரமாகியும் அவர் விழித்துக் கொள்ளவில்லை. எங்கள் பெயர்களை தவறாக எழுதி வைத்திருந்தார். அவருக்கு இந்தி தவிர வேறு மொழிகள் தெரியாது. அவரை சொல்லிப்புரியவைக்க முயன்று தோற்றபின் எங்களுக்கு அறை ஏற்பாடுசெய்தவரின் உள்ளூர் ஏஜெண்டை ஃபோனில் அழைத்தோம். அவர் எடுத்தது நல்லூழ்தான். அவர் இவரிடம் பேசியபின் ஒருவழியாக அறை கிடைத்தது. நல்ல அறைகள்தான். புதிதாகக் கட்டப்பட்ட இணைப்புக் கட்டிடத்தில்
ஜங்கம்பாடி மடம் கன்னட ஜங்கம ஜாதியினருக்கு உரியது. இவர்கள் வெலமர் என்ற சாதிக்குரிய புரோகிதர்கள். விளமர்கள் கன்னட சத்ரியர்கள், தமிழ்நாட்டிலும் வாழ்கிறார்கள். பெரிய மடம். நிறைய தூண்கள் கொண்ட நூற்றாண்டு பழக்கமுள்ள பெரிய கட்டிடங்கள். தினமும் பலநூறு பயணிகள் வந்து திண்ணைகள் முழுக்க பரவி கிடந்து தூங்கி குளித்துச் சென்றார்கள்.
நாங்கள் சென்ற உடனேயே படுத்துவிட்டோம். மணி மூன்று அப்போது. காலை ஒன்பதுக்கு எழுந்தால் போதும் என்று திட்டம்.