வெண்முரசு விழா – பி.ஏ.கிருஷ்ணன் உரை

நண்பர்களே,

ஜெயமோகன் மகாபாரதத்தை மறுபடியும் எழுதப் போகிறேன் என்று அறிவித்தபோது அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில் இவ்வாறு
குறிப்பிட்டிருந்தேன்:

தினமும் எழுதுவது என்பது தவம். மகாபாரதக் கதையை மறுபடியும் எழுவது பெருந்தவம். உங்களால்தான் இது முடியும். என்னைப் பொறுத்தவரையில் நமது இதிகாசங்களை அப்படியே பார்க்க வேண்டும் என்றுதான் சொல்வேன். அவற்றை ஒப்பனையிட்டுப் பார்க்க வேண்டியதில்லை. உங்களைப் போல மிகத் திறமையான ஒப்பனையாளராக இருந்தாலும்!

ஜெயமோகனின் பதில் எனக்கு திருக்குறள் ஒன்றை நினைவிற்கு வரவழைத்தது.

சொல்லுக சொல்லைப் பிறிதொரு சொல் அச்சொல்லை
வெல்லும் சொல் இன்மை அறிந்து

என்றும் வெல்லும் சொல் அவருடையதாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவரது அசாதாரணமான தன்னம்பிக்கை என்னை மிகவும் மகிழ்வித்தது.

அவரது பதில்:

மகாபாரதத்தை நான் என்னளவில் மறுகண்டுபிடிப்பு செய்கிறேன் என்று சொல்லலாம். சமீபத்தில் நான் இமயமலைப் பயணம் செய்தேன். தொன்மையான அதே மலை. ஆனால் நான் பார்த்த மலை, என்னுடைய மலை. இது மகாபாரதம் அல்ல. நவீன நாவல்.

இதற்கு என்னால் என்ன பதில் சொல்ல முடியும்?

இந்தக் கடிதம் ஜனவரி 4ம் தேதி எழுதியது. பத்து மாதங்களுக்குள் நான்கு பாகங்கள்!

நான் அவ்வப்போது படித்துக் கொண்டிருந்தேன். ஜனவரி 16ம் தேதி ஒரு சிறிய கடிதம் எழுதினேன். ஆங்கிலத்தில்

Dear Jeyamohan,
Read the dialogue between Bheeshma and Amba. You are at the prime of your creative ability.
My blessings are always with you – if it helps!
Yours affectionately

இதற்கு அவரது பதில்:

தங்கள் ஆசிச்சொற்கள் எனக்கு அளித்த நிறைவு சாதாரணமல்ல. நான் தங்களை வைத்திருக்கும் இடம் தங்களுக்குத் தெரியும். நான் பெரியவர்கள் பற்றி மரபார்ந்த மனநிலையே எப்போதும் கொண்டிருக்கிறேன் என்றும். தங்கள் சொற்களை தங்கள் தந்தையின் ஆசியாகவும்தான் நான் கொள்வேன்.

தமிழுக்காகவே தன் வாழ்நாள் முழுவதையும் கழித்த என் தந்தையைப் பற்றி அவர் சொன்னது எனக்கு அசாதாரணமான நிறைவைத் தந்தது.
மறுபடியும் சொல்கிறேன் பத்து மாதங்களுக்குள் நான்கு பாகங்கள்!

இதற்கிடையில் சினிமா வசனம். ஊர் சுற்றல், அனாவசியமான சண்டைகள் போடுதல், அவற்றைப் பற்றி வரிந்து வரிந்து எழுதுதல்,மணிக்கணக்காக நண்பர்களிடம் பேசுதல் எல்லாவற்றிற்கும் மேலாக அருண்மொழியையும் குழந்தைகளையும் அதிகப் பதட்டம் அடையாமல் பார்த்துக் கொள்ளுதல்-இதெல்லாம் இவரால் எவ்வோறு முடிகிறது.

எங்காத்துக்காரரும் கோர்ட்டுக்கு போறார் என்று ஒரு கேஸ் கூட இல்லாத வக்கீலின் மனைவி சொல்வது போல என் மனைவியும் என் கணவரும் எழுத்தாளர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். எனக்கு ஒரு நாளைக்கு 500 வார்த்தைகள் எழுதுவதற்குள் மூச்சு முட்டி மாரடைப்பு வந்துவிடும் போல இருக்கிறது. இவரால் எப்படி முடிகிறது?

கதாசரித் சாகரம் என்ற வடமொழி நூலின் ஆசிரியர் சோமதேவர். அது குணாட்டியர் என்பவரால் பைசாச மொழியில் முதலில் எழுதப்பட்டது. குணாட்டியார் கதையை எவ்வாறு எழுதினார் என்பது கதாசரித் சாகரத்திலேயே சொல்லப்படுகிறது.

சிவன் ஒரு நாள் பார்வதியிடம் கேட்டார். ‘உன்னை மகிழ்விக்க நான் என்ன செய்ய வேண்டும்’? அதற்கு அவர் சொன்ன பதில்: “எனக்கு கதைகள் சொல்லுங்கள். புதிதாக யாரும் இதுவரை கேட்காததாக இருக்க வேண்டும்” சிவன் கதை சொல்ல ஆரம்பித்தார்.

அதே சமயத்தில் புஷ்பதந்தன் என்ற சிவகணம் அவரைப் பார்க்க வந்தார்.நந்திதேவர் தடுத்தும் அவர் தனது மகிமையால் அரூபமாக உள்ளே நுழைந்தார். அவரும் கதைகளைக் கேட்டார். அவ்வளவு பிரமாதமான கதைகளைக் கேட்டவுடன் யாரிடமாவது சொல்லவேண்டும் என்று தோன்றியது. தனது மனைவி ஜெயாவிடம் சொன்னார். மனைவி பார்வதி உறைவிடத்தின் காவலர். அவர் கதைகளை பார்வதிக்கு சொன்னார்.

பார்வதிக்கு ஒரே கோபம்! சிவனிடம் வந்து என்ன கதைகள் சொன்னீர்கள். நமது ஜெயாவிற்குக் கூடத் தெரிந்திருக்கிறதே என்று கேட்டதும். சிவன் தன் ஞானக் கண்ணால் என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொண்டார். உடனே புஷ்பதந்தனை அழைத்து நடந்ததை பார்வதிக்கு விளக்கினார். பார்வதி புஷ்பதந்தனையும் அவனுக்கு பரிந்து பேச முயன்ற மால்வயன் என்ற மற்றொரு சிவகணத்தையும் பூமியில் பிறந்து இந்தக் கதைகளை மனிதர்களுக்குச் சொல்வாயாக என்று சாபம் இட்டார். புஷ்பதந்தன் வாருசியாகவும், மால்யவான் குணாட்யராகவும் பூமியில் பிறக்கிறார்கள். வாருசி சொல்லிய கதைகளைத்தான் குணாட்யர் எழுதுகிறார். ஏழு லட்சம் சுலோகங்களில்.

ஜெயமோகனின் வேகத்தைப் பார்த்தால் அவரும் வாருசி, குணாட்யர் போன்ற ஒரு பிறவியோ என்ற சந்தேகம் வருகிறது. இவரது வேகம் மனித வேகமா? எனக்கு சந்தேகமாக இருக்கிறது.ஜெயமோகன் சொன்னதைப் போல ஒவ்வொருவருடைய மகாபாரதமும் அவர்களுடையது தான். எனக்குள்ளும் என்னுடைய மகாபாரதம் இருக்கிறது. அது என்ன என்பதை சில மாதங்களுக்கு முன்னால் நான் எழுதியிருந்தேன்:

நான் சிறுவனாக இருக்கும் போது ராஜாஜியின் ‘வியாசர் விருந்து’ வெளிவந்தது. 1957 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். தின இதழ்கள் அச்சடிக்கப்படும் தாளில் வந்த அந்தப் புத்தகத்தின் விலை ஒரு ரூபாய் மட்டுமே. வந்த சில நாட்களில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையாயின.எனது தந்தை கும்பகோணம் பதிப்பை-மகாபாரதத்தின் முழுப்பதிப்பு அது- கரைத்துக் குடித்தவர். அவர் வியாசர் விருந்தை முழுமூச்சில் படித்து முடித்து விட்டு “வியாசர் சொன்னதின் சாரத்தை ராஜாஜி கொண்டு வந்து விட்டார்” என்று சொன்னது எனக்கு நினைவில் இருக்கிறது.

பாரதத்தின் சாரம் என்றால் என்ன?

குருஷேத்திரப்போரில் தருமர் நெறி தவறி நடந்தார் என்பது நமக்குத் தெரிந்ததே. “அஸ்வத்தாமன் இறந்து விட்டான்” என்று அவர் சொன்னார். Avyaktam abravid rajan hatah kunjara ityuta பின்னால் “அஸ்வத்தாமன் என்ற யானை” என்று அவர் கூறியதை கிருஷ்ணனின் சங்கொலி ஆழ்த்திவிட்டது என்ற கதையும் நமக்குத் தெரியும். இருந்தாலும், இந்தக் கீழ்த்தரமான விளையாட்டினால் தரையில் பதியாமல் ஓடிக் கொண்டிருந்த அவரது ரதம் தரை தொட்டு ஓடத்தொடங்கியது. ஓரிரு சிறிய பொய்களைச் சொல்லிக் கொண்டிருக்கும் மனிதர்களிடமிருந்து வேறுபட்டிருந்த தருமபுத்திரர், இப்போது மனிதராகி விட்டார். அவரைச் சுற்றியிருப்பவர்களிடமிருந்து அவரை வேறுபடுத்த முடியாது.

ஒரு வேளை வியாசர் சொல்வது இதுவாக இருக்கலாம்: மிகத் தூய்மையானவர்களும் – அவர்கள் பெருங்கடவுள்களாக இருந்தாலும் சரி, புதுமைப்பித்தன் சொல்வது போல எட்டியிருந்து வரம் கொடுப்பவர்களாக இருந்தாலும் சரி, தரையில் இறங்கி வந்தால் கறைப்பட்டுப் போவார்கள். வாழ்க்கையின் சேறுகளிலிருந்து அவர்களால் தப்பவே முடியாது.

மகாபாரத்தின் சாரம் வாழ்க்கையின் அழுக்குகளைப் பற்றியதா? மகாபாரதம் ஆரஞ்சு மாதுளை போன்ற பழம் அன்று. அதன் சாரம், இல்லை சாரங்கள், மாறிக் கொண்டே இருக்கின்றன. யார் படித்தாலும் அவர்களது வாழ்க்கையின் சாரத்தைப் பற்றி அது பேசுகிறது என்று தோன்றும். எந்தக் காலத்தில் படித்தாலும் அவ்வாறே தோன்றும். படிப்பவர் காதுகளில் உங்களது தீராத பிரச்சினைக்கும் தீர்வு இருக்கிறது படித்துப் பாருங்கள் என்று சொல்லிக் கொண்டே இருக்கும். தீர்வு முடிவில் கிடைக்காமல் போகலாம். அனேகமாக் கிடைக்காது. ஆனால் தீர்வைத் தேடிப் பயணம் செய்வதையே முழு வாழ்க்கை வாழ விரும்புபவன் செய்ய விரும்புவான்.

மகாபாரதத்தின் மற்றொரு கதை ராஜாஜியின் புத்தகத்தைப் படித்ததிலிருந்து பசுமையாக இருக்கிறது. இப்போது ஆங்கிலத்தில் முழுமையான மொழிபெயர்ப்பில் திரும்பப்படிக்கும் போது கதையின் பரிமாணங்கள் என்னை வியப்பில் ஆழ்த்தின. நெருப்புக் கடவுள், கிருஷ்ணன் மற்றும் அர்ஜூனன் உதவியோடு காண்டவ வனத்தை முற்றிலும் எரித்துச் சாம்பலாக்குகிறான். பிழைத்த மிகச் சிலவற்றில் சாரங்கப் பறவையின் குஞ்சுகளும் அடங்கும். இவை சாதாரணக் குஞ்சுகள் அல்ல. மிகவும் புத்திசாலிகள். பேசிக்கொண்டே இருக்கின்றன. அக்கினித்தேவனை பலவாறாகப் புகழ்ந்து அவனது மனதை மாற்ற முயல்கின்றன.

ஆனால் அவை தப்பிப் பிழைத்ததன் காரணம் அவற்றின் தந்தை அக்னி தேவனிடமிருந்து பெற்ற வரம். காண்டவ வன எரிப்புப் பர்வதத்தில் இப்பறவைகளின் கதை பல உபகதைகளால் சூழப்பட்டிருக்கிறது. தந்தை மந்தபால மகரிஷி தாயான ஜரிதையைக் கைவிட்டு மற்றொரு மனைவியான லோபிதையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பல வருடங்கள் முதல் மனைவியையும் குழந்தைகளையும் அவர் பார்க்க வரவில்லை. மகரிஷிக்கும் அவரது மனைவிக்கும் இடையே நடக்கும் உரையாடல் மிகவும் சுவாரசியமானது.

ஜரிதை: அந்த சிரித்துக் கொண்டே இருக்கும் அரும்புப் பல்லழகி லோபிதையிடம் திரும்பிச் செல்லுங்கள். நான் எதற்கும் உபயோகம் இல்லாத கிழவி என்பதால் தானே என்னைவிட்டுச் சென்றீர்கள்.

மந்தபாலர்: பெண்களைப் பொறுத்தவரை அவர்கள் மகிழ்ச்சியை அழிப்பதில் இரண்டாம் மனைவிக்கோ அல்லது ரகசியக் காதலிக்கோ நிகர் யாரும் இல்லை. இவர்களைப் போன்று அவர்களது கோபத்தீயை கிளறவோ அல்லது அவர்களை பதட்டப்பட வைக்கவோ யாராலும் முடியாது!

சாரங்கப் பறவைகள் தப்பித்தன் காரணம் என்ன? அக்னி ஏன் அவற்றை எரிக்கவில்லை? உள்ளத்தைக் குலுக்கும் இந்தப் பேரழிவிற்குப் பின்னால் நமக்குத் தென்படாத சூத்திரதாரி ஒருவர் செயல் புரிகிறாரோ? இதிகாசத்தைப் படிக்க படிக்க இதைப்போன்று பல கேள்விகளின் வித்துக்கள் ஊன்றப்பட்டு பெரியதொரு காடாக மனதில் உருவெடுக்கின்றன. பெருநதி போன்று பல கரைகளைத் தொட்டு, அடர்ந்த காடுகளை உருவாக்கிக் கொண்டு செல்லும் இந்தப் புத்தகத்தில் கேள்விக்கு உள்ளாக்கப் படாததே கிடையாது எனலாம். காலம் காலமாக நம்மை அது கவர்ந்து கொண்டு வருவதன் காரணமும் அதுதான்.

சில சமயங்களில் மகாபாரதம் நம்மை மிகுந்த கோபமடைய வைக்கிறது. கதையின் மகத்தான பாத்திரங்களில் ஒருவன் கடோத்கஜன். இடும்பிக்கும் பீமனுக்கும் பிறந்த இவனைச் சாகாவரம் பெற வைத்தது நாம் எல்லோருக்கும் பிடித்த மாயாபஜார் திரைப்படம், ஆனால் கதையில் அவன் கர்ணன் கையால் சாகிறான். கிருஷ்ணன் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறான். “இவன் பிராமணர்களை வெறுத்தவன். யாகங்களை அழித்தவன். பெரும் பாவம் செய்தவன். தர்மத்தின் எதிரி. அதனால் தான் நான் அவனைக் கொல்லச் செய்தேன்”.

“இந்தச் சம்பவத்தைப் பற்றி படித்தவுடன் நான் மிகவும் கோபமடைந்தேன். அப்போது எனக்கு பதினாறு வயது இருக்கும். என் தந்தையிடம் ஓடிச் சென்று இது எந்த வகையில் நியாயம் என்று கேட்டேன். கிருஷ்ணன் சொன்னது சிறுவனான எனக்கே அநியாயம் என்று பட்டால் அர்ஜூனனுக்கும் மற்ற பாண்டவர்களுக்கும் எப்படி நியாயம் என்று தோன்றும் என்றும் கேட்டேன்.

அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்: “இந்தக் கேள்வியை யாரிடமும் கேட்கக்கூடாது. கடோத்கஜனிடம் கேட்க வேண்டும். கிருஷ்ணன் அவன் மீது கடுஞ் சொற்களால் வசை மாரி புரிந்தால் முதலில் மகிழ்ச்சியடைபவன் அவனாகத்தான் இருப்பான். கிருஷ்ணன் அவனைக் கொல்லத் திட்டமிட்டான் என்பதே அவனுக்கு நிறைவை அளித்திருக்கும். பாண்டவர்களுக்கும் புரிந்திருக்கும். கடவுள்கள் உன்னைச் சமாதனப்படுத்த தேவையில்லை. அவர்கள் நடத்திக் காட்டுபவர்கள். இங்கு பேசுவது கிருஷ்ணன் இல்லை. இங்கு வியாசர் கடவுளால் ஏற்பட்ட இடிபாடுகளை சீர்படுத்த முயல்கிறார்.”

சில சமயங்களில் மகாபாரதம் உலக நடப்பை உணர்ந்து பேசுகிறது. அஜகர பர்வத்தில் பாண்டவர்களில் நால்வரைப் பிடித்து வைத்துக் கொண்டுள்ள மலைப்பாம்பு தருமபுத்திரரிடம் சில கேள்விகளைக் கேட்கிறது:

யார் பிராமணர்?
யார் நல்ல ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்கிறார்களோ அவரே பிராமணர்!

பிராமணர் என்பவர் பிறப்பால் இல்லையா?
தருமர் சொல்கிறார், இல்லவே இல்லை. ஆண் பெண்ணுடன் சேர்ந்தால் குழந்தை பிறக்கிறது. எல்லா வர்ணப் பெண்களுடனும் ஆண்கள் சேர்கிறார்கள். பேச்சு, உடலுறவு, பிறப்பு இறப்பு இவை அனைத்திலும் எல்லா ஆண்களும் சமம்.

பின்னால் யக்ஷன் தருமனிடம் கேட்ட கேள்விகளில் இது ஒன்று:
“உலகத்தின் மிகப் பெரிய அதிசயம் எது?”

தருமனின் பதில், நாம் தினமும் சாவைப் பார்க்கிறோம். ஆனால் நாம் மட்டும் இறக்காமல் இங்கேயே இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

இவ்வளவு தெளிவான பதிலை அளித்த தருமன் தானும், தனது மனைவியும், சகோதரகளும் மேலும் சில ஆண்டுகள் இவ்வுலகில் வாழ வேண்டும் என்பதற்காக தனது குடும்பத்தின் மற்றைய அனைவரையும் நண்பர்களையும், பல்லாயிரக்கணக்கான் சாதாரண வீரர்களையும் பலி கொடுக்கத் தயங்கவில்லை.

மகாபாரதம் முழுவதையும் இத்தகைய முரண்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. வாழ்க்கையின் இனிமைகளையும், குரூரங்களையும் அநீதிகளையும், அழகுகளையும் மகாபாரதம் நம்மிடம் சொல்லிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு தலைமுறையும் அதைத் தேடிச் சென்று சில சமயங்களில் ஏமாற்றத்துடனும் சில சமயங்களில் மகிழ்ச்சியுடனும் திரும்புகிறது.

இந்த உலகப் பெருஞ்சொத்தை தமிழில் நாவல் வடிவமாகத் தருவது அதுவும் இத்தனை பாகங்களில் தருவது, நடக்க முடியாத, ஆனால் நடந்து கொண்டிருக்கும் அதிசங்களில் ஒன்று.

வீரசோழியத்தின் பாயிரம் இவ்வாறு சொல்கிறது: அகத்தியன் படைத்த தமிழுக்கு இலக்கணம் படைக்க உனக்கு என்ன அருகதை இருக்கிறது என்று என்னிடம் கேட்கப்படுகிறது. பரந்த வானத்தில் பருந்து பறக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அதில் ஈயும் பறக்கலாம் அல்லவா?

வியாசர் பறந்த வானத்தை, பருந்து பறந்த வானமாகத்தான் பல பெரும் படைப்பாளிகள் நினைத்தார்கள். அவருடைய கதையிலிருந்து சில சில சம்பவங்களையே எடுத்து மறுபிறப்புச் செய்ய வைத்தார்கள்.

காளிதாசனின் சாகுந்தலமும் பாரவியின் கிராதார்ஜூனியமும், பாசனின் ஊருபங்கமும், பஞ்சராத்ரமும், தூத கடோத்கஜமும் கர்ணபாரமும் மகாபாரதத்தின் எச்சங்கள்தான். இலக்கிய உச்சத்தில் இருந்த இந்தப் படைப்பாளிகள் அனைவரும் தங்களை ஈக்களாகத்தான் நினைத்தார்கள்.

ஆனால் நமது ஜெயமோகனோ வியாசர் பறந்த வானத்தில் ஈயாக அல்ல, மற்றொரு பருந்தாகப் பறக்கத் தொடங்கியிருக்கிறார்.

அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

முந்தைய கட்டுரைகுரு நித்யா வரைந்த ஓவியம்
அடுத்த கட்டுரைகமல்- முடிவிலா முகங்கள்