ஜெ
இணையத்தில் வாசிக்க நேர்ந்த செய்தி இது. வெண்முரசு போல உரைநடையில் மகாபாரதத்தை பல பகுதிகளாக எழுதுவதை இந்தியில் நரேந்திர கோலி போன்றவர்கள் மகாபாரதத்தை முழுமையாகவே நாவல்களாக எழுதியிருக்கிறார்கள் என்றும் ஆகவே தாங்கள் செய்துகொண்டிருப்பது ஒன்றும் புதியவிஷயம் அல்ல என்றும் வீணாக தாங்கள் தற்பெருமை அடித்துக்கொள்வதாகவும் சொல்லப்பட்டிருந்தது. தங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்
ஜெய்ராம்
அன்புள்ள ஜெய்ராம்,
நான் என்னுடைய நாவல் முயற்சி முதல் முயற்சி என்று எங்கும் சொன்னதில்லை. அத்தகைய அடையாளங்களில் எனக்கு ஆர்வம் இல்லை. ‘வெண்முரசு’ அதனடிப்படையில் நிற்கப்போகும் ஆக்கமும் அல்ல.
நான் வாசித்த முதன்மையான மகாபாரத மறு ஆக்க நாவல்கள் மகாபாரதத்தை ஏதேனும் ஒரு கோணத்தில் அணுகுபவை. அது மகாபாரதத்தின் வீச்சை பெருமளவு குறைக்கிறது. அது அளிக்கும் ஒட்டுமொத்த தரிசனத்தை அளிப்பதில்லை. ஆகவே முழுமையாக எழுதிவிடவேண்டுமென எண்ணினேன். அதுவே என் இலக்கு– இதுவே நான் சொன்னது.
மகாபாரதம் இந்த மண்ணில் மீண்டும் மீண்டும் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கிறது என்றும் எழுதப்படும் என்றும்தான் நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். பேராசிரியர் இந்திரநாத் சௌத்ரி இந்திய மகாபாரத நாவல்கள் குறித்து ஆற்றிய பேருரை ஒன்றில் இருந்தே நான் என் ஊக்கத்தை அடைந்தேன்.
மகாபாரதம் பலவகைகளில் உரைநடையில் எழுதப்பட்டுள்ளது.வித்வான் பிரகாசம் அதை மலையாளத்தில் உரைநடை மொழியாக்கம் செய்தார். அதற்கு முன்னர் கொடுங்கல்லூர் குஞ்சுகுட்டன் தம்புரான் எளிய செய்யுளில் மொழியாக்கம் செய்தார். கன்னடத்தில் குமாரவியாசர் முழுமையாக மொழியாக்கம் செய்திருக்கிறார். தமிழில் ராமானுஜாச்சாரியாரின் மொழியாக்கம் உள்ளது. அதன்பின் அ.லெ.நடராஜன் பெரும்பாலும் முழுமையாக மொழியாக்கம் செய்திருக்கிறார்
‘
இம்முன்னோடிகளைச் சுட்டிக்காட்டி அவர்களின் பணியின் இன்றைய நீட்சி இம்முயற்சி என்று சொல்லாமல் ஓருமுறையும் நான் இருந்ததில்லை. இந்திய மகாபாரத நாவல்களில் மொழியாக்கம் மூலம் நமக்குக் கிடைப்பவற்றை எல்லாம் தமிழில் தொடர்ந்து கவனப்படுத்தி வந்தவனும் நானே
வேண்டுமென்றால் மகாபாரத மறு ஆக்கங்களை ஒட்டுமொத்தமாக ஒரு genre என்று வைத்துக்கொள்ளலாம். அதில் பல தளங்கள் உள்ளன. யதார்த்தமாக மகாபாரதத்தை எழுதும் பர்வ முதல் மாயத்தன்மை நிறைந்த நாவல்கள் வரை. வெண்முரசு அந்த வகைமாதிரியில் ஒரு பெரிய முயற்சி.
மகாசமர் என்ற பேரில் நரேந்திர கோலி எழுதிய மகாபாரத நாவல் வரிசை ஏறத்தாழ 4000 பக்கம் கொண்டது. இந்தியில் மிகச்சிறப்பான ஆக்கமாகக் கொண்டாடப்படுவது. அது மொழியாக்கம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது
நானறிந்தவரை கோலி மகாபாரதத்தை ‘சித்தரித்திருக்கிறார்’ நாவலின் வடிவில் அது உள்ளது. அது ஒரு மகத்தான முயற்சிதான் என்றே தோன்றுகிறது. அத்தகைய அத்தனை முயற்சிகளும் வெண்முரசுக்கு முன்னோடிகளே.
வெண்முரசு மகாபாரதத்தை உரைநடையில் மொழியாக்கம் செய்யவில்லை. வெண்முரசு மகாபாரதத்தை நாவலாகச் சித்தரிப்பதும் அல்ல. அது மகாபாரதத்தை ஒட்டிய ஒரு நவீன நாவல். மகாபாரதத்தின் படிமக்களஞ்சியத்தையும் வாழ்க்கைத்தருணங்களையும் பயன்படுத்திக்கொள்கிறது. நாட்டார் பாரதக் கதைகளையும் பிற புராணங்களையும் அது ஊடே பின்னுகிறது.
மகாபாரதத்தின் புராண அழகியலை விரிவாகவும் சிக்கலாகவும் நவீன வாழ்க்கையுடன் இணைத்து கையாள்கிறது வெண்முரசு. அதிலுள்ள அனைத்துப்புராணக்கதைகளும் மறுஆக்கம் செய்யப்பட்டவை. புதியபுராணங்களும் அதில் ஏராளமாக உள்ளன.
வெண்முரசு மகாபாரதத்தை முன்வைத்து எழுப்பிக்கொள்ளும் அடிப்படைவினாக்களும் அதையொட்டி விரியும் புனைவு வெளியும்தான் அதன் சிறப்பியல்பு. அந்த அடிப்படை வினாக்கள் இன்றைய வாழ்க்கையில் நின்று எரிபவை. ஆகவேதான் வெண்முரசு ஒரு சமகால நாவல், நவீன நாவல். இந்த வேறுபாட்டை வாசிப்பவர்கள் உணரலாம்
இந்நாவலை எழுத ஆரம்பித்த பின் நான் சந்திக்கும் பெரும் சவால் இதை வாசிக்காதவர்கள், வாசிக்கும் திறனற்றவர்கள் எழுப்பும் சில்லறைப்பேச்சுக்கள்தான். குருஷேத்ரப்போரை விட கடினமானது இந்த காழ்ப்புகளுடன் போரிடுவது
இவை புதுவாசகர்களை விலக்கும் புகைமறையாக ஆகிவிடலாகாதென்பதற்காக இதை எழுதுகிறேன்
ஜெ