ஞாநி

சென்னைக்கு பிப்ரவரி 3 சனிக்கிழமை காலை வந்துசேர்ந்தேன். நண்பர்கள் ராஜகோபாலனும் தனசேகரும் வந்திருந்தார்கள். சிறப்பு அதிவேக ரயில் எல்லா இடத்திலும் நின்று அலுப்புடன் யப்பா முருகா என்னபப்னே என்றெல்லாம் முனகியபின் ஊர்ந்து கிளம்பி சென்னை வ்ந்துசேர்வதற்கு காலை எட்டரை ஆகிவிட்டிருந்தது. அவர்கள் என்னிடம் மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கும்படிச் சொல்லியிருந்தார்கள். மாம்பலம் வருவதற்கு முன்னாலேயே குப்பைமலைகள் நடுவே ரயில் நிற்க அதன் விலாவிலிருந்து ஜனங்கள் உதிர்ந்து ஊர்ந்து செல்வதைக் கண்டேன். கிளம்பிய ரயில் மாம்பலம் ரயில் நிலையத்தில் மட்டும் அதிவேகசிறப்புரயில் மாதிரியே பீரிட்டுச் சென்றது.

ரயில்நிலையத்தில் நின்ற ராஜகோபாலன் என்னை வாசலில் பார்த்துவிட்டார். எழும்பூருக்கு செல்கிறேன் என்றேன். அவர்கள் காரில் துரத்தி வந்தார்கள். நான் எழும்பூரில் இறங்கி ரயில்நிலைய முகப்பில் அமர்ந்தேன். அங்கே ஒரு வடக்கத்தி குடும்பம் சட்டி சப்பாத்திகளுடன் போர்வைகளை விரித்து அமர்ந்திருந்தது. அதிலிருந்த பெண் என் பார்வையை அடிக்கடி வந்து சந்தித்து கொண்டிருந்தாள். அவளைப் பார்ப்பது வரலாறு என்று பாவம் அவளுக்குத் தெரியவில்லை.

பத்துமணிசுமாருக்கு கே.கே.நகரில் ஞாநி வீட்டுக்குச் சென்றுவிட்டோம். நான் வழக்கமாக ஓட்டலில் தங்கவே விரும்புவேன். ஆனால் ஞாநியை பலகாலமாக அறிந்தும் நெருங்கிப்பழக வாய்க்கவில்லை. ஆகவே ஒரு சந்தர்ப்பமாக அமையட்டுமே என அவரது வீட்டிலேயே தங்க முடிவெடுத்தேன். கே.கே.நகரில் பெரிய வளாகம் கொண்ட அகலமான வீடு அவரது. அதிக மரச்சாமான்கள் இல்லாத கூடத்தை நாடக பயிற்சியறையாகவே வைத்திருக்கிறார் ஞாநி.

ஞாநியின் இல்லத்தில் பெங்களூரில் கணிப்பொறித்துறையில் வேலைபார்க்கும் அண்ணாமலையும் நாவலாசிரியரும் அரசியல்வாதியுமான இந்திராவும் இருந்தார்கள். இந்திரா இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் தேசிய செயலர்களில் ஒருவர். சித்திரகூடு என்ற அவரது நாவல் குமுதத்தில் தொடராக வந்தது. அண்ணாமலை இயக்குநர் கரு.பழனியப்பனின் தம்பி. பேச்சாளர் பழ.கருப்பையாவின் தம்பி மகன். ஞாநியின் முன்னாள் மனைவி பத்மா அவருக்கு உடல்நலமில்லை என்பதனால் வந்து தங்கி கவனித்துக்கொண்டிருந்தார்.

அங்கே கே.ஆர்.அதியமானைப் பார்த்தேன். ஞாநியுடன் இப்போது அவர்தான் நெருக்கமாக இருக்கிறார் என்று பட்டது. ஞாநியும் அவரும் கருத்தடிப்படையில் நேரெதிர் புள்ளிகள். அதியமான் தனியார்மயம்-வலதுசாரிப் பொருளியலின் பிரச்சாரத்துப்பாக்கி –பீரங்கியெல்லாம் ரொம்ப பெரிது. நடுவே சோதிடம் பற்றி என்னிடம் கேட்டார். நான் என் பிள்ளைகளுக்கு ஜாதகமே எழுதவில்லை என்றேன். ஏன் என்றார். எங்கள் குலத்தொழிலே ஜாதகம் எழுதுவது என்பதனால்தான் என்றேன்.

ஞாநியின் இல்லத்தில் உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தோம். ஞாநி உடல்நிலை தேறியிருக்கிறார். அஞ்சியோபிளாஸ்ட் பண்ணப்பட்ட எந்த ஒரு எழுத்தாளரையும் போல உற்சாகமாக அதைப்பற்றிப் பேசினார். அது தன் உடலை நுட்பமானதோர் இயந்திரமாகப் பார்க்கும் பரபரப்பை அவருக்கு அளித்திருக்கிறது என்று தோன்றியது. நன்றாகவே மெலிந்திருந்தார். பலவகையான நோய்கள் வழியாக கடந்துவந்திருந்தார். குடலில் காசநோய் தாக்கி கடுமையான மருந்துகள் வழியாக நலம் மேம்பட்டபோதுதாந் இதய அடைப்பு கண்டடையப்பட்டது.

ஞாநி நான் பார்த்தபோதெல்லாம் சோடாப்புட்டிக் கண்ணாடிதான் போட்டிருந்தார். அவருக்கு ஒரு கோபக்கார இளைஞர் அல்லது இளம்முதியவரின் தோற்றத்தை அது அளித்திருந்தது. இப்போது அந்தக் கண்ணாடி இல்லை. கண்ணில் காடராக்ட் வந்து அறுவை சிகிழ்ச்சை செய்த போது பழைய இயற்கை விழியாடிகளை தூக்கிக் கடாசிவிட்டு புதிய அளவான ஆடிகளை வைத்தார்களாம். ஆச்சரியமாக இருந்தது.

ஆனால் ஞாநி அவருக்கு வழக்கமான அதி உற்சாகத்துடன்தான் இருந்தார். தொட்டுத்தொட்டு அரசியல் இலக்கியம் இலக்கியஅரசியல் என்று பேசிக்கொண்டிருந்தோம். ஞாநி தன்னைப்பற்றிய வம்புகளைப் பேசுவதில்லை என்பதை இரண்டுநாட்களில் கூர்ந்து கவனித்தேன்.இறந்தகாலம் குறித்தும் அதிகமாகப் பேசுவதில்லை. பரீக்ஷாவின் கடந்தகாலம் குறித்தும் மிக அபூர்வமாகவே பேச்சு எழுந்தது. அவருக்கு வெவ்வேறு சமகாலப் பிரச்சினைகளிலேயே தீவிர ஆர்வம் இருந்தது.

மதியம் ஒருமணிவாக்கில் பத்மா சமைத்த விஜிடபிள்பிரியாணியையும் தயிர்சாதத்தையும் வட்டமாக தரையில் அமர்ந்து சாப்பிட்டோம். தனக்கு பொதுவாக தரையில் அமர்வதும் படுப்பதுமே பிடிக்கும் என்றார் ஞாநி. கட்டில்கூட உடல்நலம் மோசமானபிறகு வந்ததுதான். அவரிடமிருந்த ஒரு மரபெஞ்சுக்கு அவருடைய வயதே ஆகிவிட்டது என்றார் – ஆரோக்கியமாக இருந்தது.

சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது யுவன் சந்திரசேகரும் சிவராமனும் வந்தார்கள். யுவன் அவனது நாவலை எனக்கு அளித்தான். ‘வெளீயேற்றம்’ கனமான நாவல். உயிர்மை வெளியீடு. மாற்று மெய்மையைப்பற்றியது — வேறு எதைப்பற்றி எழுதப்போகிறான். இரண்டரை மணிக்கு நான் ஒரு சினிமாப்புள்ளியைச் சந்திக்க தனசேகர் காரில் கிரீன்பார்க் ஓட்டலுக்குச் சென்றேன். அங்கே இளம்பெண்கள் பேரழகுடன் இருப்பதாக தனசேகர் மகிழ்ச்சி தெரிவித்தார். பெரும்பாலும் தெலுங்குப் பெண்கள் என்பதை நானும் கதைப்பேச்சு நடுவே கவனித்திருந்தேன். பொதுவாக மதுரைப்பக்கத்து ஆட்களுக்கு தெலுங்குப் பெண்களைப் பிடித்திருக்கிறது. வரலாற்றுக்காரணங்கள்.

நான்குமணிவாக்கில் திரும்பிவந்தபோது ஞாநியின் பரீக்ஷா நண்பர்கள் ஒவ்வொருவராக வந்தார்கள். பெரும்பாலும் எல்லாரும் இளைஞர்கள்.ஞாநிக்கு தலைமுறை தலைமுறையாக நாடகநண்பர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். கல்பற்றா நாராயணன் கவிதை ஞாபகம் வந்தது, குழந்தைகள் எல்லாரும் ஜெயித்துப்போகிறார்கள், சரசம்மா டீச்சர் இப்போதும் ரெண்டாம்கிளாஸில்தான்.

ராஜகோபாலும் நானும் உள்ளறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது என் நண்பரும் மத்திய உளவுத்துறையின் உயரதிகாரியுமான நண்பர் வந்தார். தனசேகர் ஞாநியின் நாடகக்குழு ஆளும்கூட. நானும் நண்பரும் அதியமானும் ராஜகோபாலின் வீட்டுக்குச் சென்று பேசிக்கொண்டிருந்தோம். ராஜகோபாலின் மனைவி உப்புமா செய்து அவர்களுக்குக் கொடுத்தார். நான் பழத்துண்டுகளும் பிஸ்கட்டும் மட்டும் சாப்பிட்டேன்.

திரும்பவந்தபோது எல்லாரும் சென்றுவிட்டிருந்தார்கள். ஞாநி உங்களை தேடினார் என்றார் பத்மா. உலகிலேயே மனைவியால் ஞானியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரே மனிதர் இவர்தான் என்று நான் சொன்னேன். இல்லல்ல நான் சங்கர்னுதான் சொல்லுவேன். இப்ப அடையாளம் தெரியணும்கிறதுக்காக ஞானீன்னு சொல்றேன் என்றார் பத்மா.

ஞாநி எங்களிடம் சாப்பிட்டாயிற்றா என்றார். தனசேகரும் பிறரும் கிளம்பிச் சென்றார்கள். நான் ஞாநியுடனும் பிறருடனும் ன் இரவு ஒன்றரை மணிவரை பேசிக்கொண்டிருந்தேன். சமகால அரசியல். சமகாலத்தின் பெரும்பண்பாடு என்பது எப்படியோ ஏதோ வழிகளில் சமசரம் செய்துகொள்வதாக ஆகிவிட்டிருப்பதை ஞாநி மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டினார். சமரசமின்மையின் தோல்வி மீதான கவற்சி சமகால இளைஞர்களில் குறைந்துவிட்டது என்றார். பின்னர் கண்ணயரும்போது பத்மாவும் இந்திராவும் பேசிக்கொண்டிருந்த ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது.

முந்தைய கட்டுரைஉலோகம் – 3
அடுத்த கட்டுரைஉலோகம் – 4