செப்டெம்பர் 12 ஆம் தேதி காலை சாஞ்சியில் ஜெயஸ்வாலின் விடுதியில் தூங்கி எழுந்தோம். நல்ல களைப்பு இருந்தமையால் தூங்கியதே தெரியாத தூக்கம். அவசரமாகக் குளித்து தயாராகி சாஞ்சி குன்றுமீது ஏறிச்சென்றோம். வெள்ளிக்கிழமையாதலினால் அருங்காட்சியகம் திறக்கப்படாது என்றறிந்தோம். குன்றுக்கு மேலே வரை கார் செல்லும். காலையில் நாங்கள்தான் முதல் பார்வையாளர்கள்.
சாஞ்சி ஸ்தூபியை காரில் வரும்போதே வசந்தகுமார் பார்த்தார். ”சின்னதாக இருக்கிறதே ஜெயன், நான் பெரிசா இருக்கும்னு நெனைச்சேன்” என்றார். ”பெரிசுதான் வசந்தகுமார்” என்றேன். உள்ளே நுழையும்போதுகூட அதன் அளவு நமக்கு தெரியாது. நெருங்கிச்செல்லும்தோறும் அது எத்தனை பெரிது என்று தெரியும். பாடப்புத்தகங்களில் அதன் வடிவத்தை அனைவருமே கண்டிருப்பார்கள். மிகப்பெரிய கொட்டாங்கச்சி ஒன்றை கவிழ்த்துவைத்தது போன்ற வடிவம். மேலே ஒரு பீடம் அதன் மீது முக்குடை. பக்கவாட்டில் ஒரு சுற்று நடைபாதை. கீழே பெரிய நடைபாதை. அதை சுற்றிபோடப்பட்ட இரண்டுஆள் உயரமான கல்லால் ஆன வேலி. அவ்வேலியில் நான்கு பக்கமும் அலங்கார வாசல்கள்.
ஸ்தூபியின் மீது சுதைப்பூச்சு இருந்திருக்கிறது. அது கரைந்துபோய் பெரும்பாலும் வளைவாக அடுக்கப்பட்ட சிவந்த கல்லே தெரிகிறது. சுதை இருக்குமிடம் கிழக்குதிசை. அங்கே மழை மேற்குச் சரிவாகப் பெய்யும்போலும். சாஞ்சியின் அந்தக்குன்றின் மேல் இருபதுக்கும் மேற்பட்ட சிறிதும் பெரிதுமான ஸ்தூபிகள் இடிந்தும் இடியாமலும் உள்ளன. ஏராளமான சைத்யங்கள் மற்றும் விஹாரங்களின் அடித்தளங்கள் உள்ளன. சாஞ்சியின் குன்றுக்கு கிமு 3 ஆம் நூற்றாண்டுமுதல் வரலாறு உண்டு. புத்தர் இங்கே வந்திருக்கிறார். முதல் விஹாரம் கிமு இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கடைசி கட்டிடம் ஏழாம் நூற்றாண்டில். அதன் பின் கைவிடப்பட்டு அழிய ஆரம்பித்து பிரிட்டிஷாரால் மீட்கப்பட்டு பாதுகாக்கபப்ட்டது.
இந்தியாவின் பௌத்த சின்னங்கள் எல்லாம் அழியவிடப்பட்டிருந்தன. இப்போது ஜப்பான் மற்றும் பௌத்த நாடுகளின் நிதியுதவியால் அவை அனைத்துமே சிறப்பாக பேணப்படுகின்றன. அஜந்தா குகைகளுக்கு நான் 1985ல் முதலில் சென்றபோது ஓவியங்களை சுரண்டிப்பார்த்தார்கள் சுற்றுலாப்பயணிகள். சுரண்டிய காரை என்று சொல்லி பொட்டலம் கட்டி விற்றார்கள்– ஆண்மை விருத்திக்கு. குகைகளுக்குள் அமர்ந்து பொட்டலச்சோற்றை தின்றார்கள். மனம் கொதித்து நான் தி இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு ஒரு கடிதம் எழுதினேன்.
ஆனால் மீண்டும் குடும்பத்துடன் 2005ல் அஜந்தா சென்றபோது மிகச்சிறப்பாக பேணப்பட்டிருந்தன. ஜப்பானிய நேரடி கண்காணிப்பில். அழகிய புற ஊதா ஒளியால் ஓவியங்கள் வெளிச்சமிடப்பட்டிருந்தன. கடுமையான சூழல் பாதுகாப்பும் காவலும் இருந்தது. ஆனால் எல்லோரா கைவிடப்பட்ட நிலையிலேயே கிடந்தது. சில சம்ண குகைகளில் ஆட்கள் பகலில் வந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். சாஞ்சியும் அவ்வாறே முதலில் வந்தபோது அனாதரவாகக் கிடந்தது. இப்போது சர்வதேச பௌத்த சமூகத்தால் மிகச்சிறப்பாகப் பேணப்படுகிறது. நடைபாதைகள் போன்று இப்போது செய்யப்பட்டுள்ள எல்லா மராமத்துப் பணிகளும் சாஞ்சி ஸ்தூபி அமைந்துள்ள அதே சிவந்த கல்லால் தான் செய்யப்பட்டுள்ளன. அழகுணர்வுடன் எல்லா வேலைகளும் செய்யப்பட்டுள்ளன.
1986ல் நான் வந்தபோது போபாலில் இறங்கி மீட்டர்கேஜ் ரயிலில் ஏறி சாஞ்சிக்குச் சென்றேன். ஒரு சந்தையைத் தாண்டியபோது ஏராளமான குரங்குகள் வந்து ரயிலில் ஏறி பயணிகளுடன் கலந்து அமர்ந்துகொண்டன. பயணிகளில் பெரும்பாலானவர்கள் காட்டுக்கு விறகுபொறுக்கச் செல்பவர்கள். யாரும் டிக்கெட் எடுப்பதாகத் தெரியவில்லை. சாஞ்சிசெல்லும் வழி புதர்க்காடுகளினால் ஆனது. ஒரு வளைவில் குரங்குகள் படைபடையாக இறங்கிச் சென்றன. பயணம் முழுக்க என்னருகே ஒரு பெரியதாய்க்குரங்கு தன் புதல்வனை மடியில் வைத்தபடி சோகமாக அமர்ந்திர்ந்தது. அன்று சாஞ்சயில் கிட்டத்தட்ட யாருமே பார்க்காத தனிமை வெயிலில் எரிந்துகொண்டிருந்தது.
நான் சாஞ்சிக்கு வந்த அந்த நாளில் ஜெர்மனியிலிருந்து தன்னந்தனியாக இந்தியாவைப் பார்க்கவந்த ஆன்ட்ரியா என்ற பதினெட்டு வயதான இளம்பெண்ணைச் சந்தித்தேன். என்னைவிட உயரம். என்னை விடபருமன். கையில்லாத பனியனும் பைஜாமாவும் போட்டு தோளில் ஒரு மாபெரும் பையுடன் ஸ்தூபத்தின் அருகே இருந்தாள். ஆங்கிலமே அவளுக்கு தெரியாது. தண்ணீர் எங்கே கிடைக்கும் என்று கேட்க நான் என் முனைமழுங்கிய ஆங்கிலத்தில் பதில்சொல்ல நண்பர்கள் ஆனோம். நான் புத்தரைப்பற்றி அவளுக்குச் சொன்னேன். சேர்ந்து அஜந்தா எல்லோரா சென்று அங்கிருந்து குஷிநகரம் சென்றோம்.
நான் பழகிய முதல் வெள்ளைஇனத்துப்பெண். விசித்திரமாக மாறும் மனநிலைகளும், ஆக்ரமிக்கும் தன்மையும் கொண்டவள். தொடர்ந்து சிறு சண்டைகள் வந்தபடியே இருந்தன. எனக்கு பெண்களை, இளம்பெண்களை, அப்போது அதிகப் பழக்கம் கிடையாது. எப்படி பேசுவது என்ன பேசுவதென்று தெரியாது. போகிற போக்கில் நான் அவளுடைய குட்டைமுடியைப்பற்றிச் சொன்ன சொற்கள் அவளை புண்படுத்தி சினம் கொள்ளச் செய்தன. கடைசியில் குஷிநகரில் பிரிந்துவிட்டோம். அப்போது அவள் என்னிடம் சொன்ன சொற்களை வைத்து பல வருடம் கழித்தே அவளை தெளிவாகப் புரிந்துகொண்டேன். அவளுக்கு நான் காதலனாக அமைய முயலாததை அவளை அவமதிப்பதாகவே அவள் எடுத்துக் கொண்டாள். அவளுடைய தோற்றம் அல்லது அறிவுத்திறன் பற்றிய ஒரு உதாசீனம் என்னிடம் இருப்பதாக அவளே மிகைப்படுத்திக் கொண்டாள்.
இந்தியபெப்ண்களை ‘நாகரீகமில்லாத காபிநிற பெண்நாய்கள்’ என்று திட்டினாள். ஆனால் அவளுக்கு இந்தியப்பெண்களின் கண்கள் மிக அழகானவை என்ற எண்ணம் இருந்தது. என்னையும் ஜெர்மனிய மொழியில் சரளமாக வசைபாடினாள். ஆனால் கிளம்பிச் செல்லும்போது மீண்டும் மீண்டும் தயங்கினாள். நான் அவளிடம் அன்பாக சில சொற்களைச் சொல்லியிருக்கலாம். ஒரு முத்தமாவது கொடுத்திருக்கலாம். ‘நீ ஒருமுறைகூட என்னைப்பற்றி நல்ல சொற்களைச் சொல்லவில்லை’ என்று அவள் சொன்னதை பிற்பாடு எண்ணிக்கொண்டேன். நானல்ல, எல்லா இந்திய இளைஞர்களும் இவ்விஷயத்தில் ‘பேக்கு’களாகவே இருக்கிறார்கள். பெண்களிடம் நாம் அவர்கள் விரும்பும் சொற்களைச் சொல்வதேயில்லை. அன்று எனக்கு ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை என்பதுடன் அப்படியெல்லாம் நினைக்கலாமென்பதே கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. மேலும் அவள் சருமத்தின் தவிட்டுப்புள்ளிகள் அடர்ந்த வெளிர் நிறம் எனக்கு கொஞ்சம்கூட கவர்ச்சியாக இருக்கவில்லை. பிறகு அவளை மறந்துவிட்டேன். பெயர்கூட நினைவில் இல்லை.சாஞ்சி அவள் நினைவுகளைக் கிளறியது. முகம் துல்லியமாக நினைவுக்கு வந்தது. குரல்கூட. ஆனால் பெயர் அதுதானா என்ற ஐயம் மிஞ்சுகிறது.
காலையின் மஞ்சள் ஒளியில் சாஞ்சி ஸ்தூபி மனத்தை வணங்கச்செய்தது. அருகே செல்லும்தோறும் அது பெருகி வந்து நம் தலைக்குமேலெழுந்து நிற்பது ஒரு பெரும் அனுபவம். தோரணவாயிலை நெருங்கி கண் மலர்ந்து அண்ணாஅந்து நின்றோம். புத்தர் வந்து தன் பேருரைகளை ஆற்றிய இடத்தில் ஞானவெற்றிக்கான ஸ்தூபங்களை நடுவது பௌத்த மரபு. பழங்காலத்தில் அறிஞர்கள் தங்கள் கையிலிருக்கும் கோலை [ஞான தண்டம். அல்லது யோக தண்டம். சங்கராச்சாரியாரின் கையில் இப்போது இதைப்பார்க்கலாம்] ஒரு இடத்தில் நட்டு அதனருகே நிற்பார்கள். அது ஓர் அறைகூவல். அப்பகுதியின் அறிஞர்கள் வந்து அவரை வாதத்தில் வெல்ல வேண்டும். அதற்கு முடியாவிட்டால் அவரது ஞானம் அங்கே நிலைநாட்டப்பட்டுவிட்டதாக பொருள் [நிலைநாட்டுதலென்ற சொல்லே இதுதானோ?] புத்தர் அப்படி நாட்டிய ஞானதண்டம் பிற்பாடு கல்லில் செய்து நாட்டப்பட்டு அதன்பின் அழியாத ஸ்தூபமாக ஆக்கப்பட்டது
இந்தியாவின் தொன்மையான ஸ்தூபங்கள் நான்கு என்பார்க்ள். கயா, சாரநாத், சாஞ்சி, அமராவதி. அமராவதியில் இப்போது ஸ்தூபம் இல்லை. ஆந்திராவில் இருக்கும் அமராவதி மிக அழகிய ஸ்தூபமாக இருந்திருக்கலாம். காரணம் அது பளிங்குக் கற்களால் கட்டப்பட்டது. அதன் எஞ்சிய பகுதிகளை அமராவதியில் காணலாம். சென்றவருடம் நானும் வசந்தகுமாரும், யுவன் சந்திரசேகரும், சண்முகமும் அமராவதிக்குச் சென்றிருந்தோம். அமராவதியின் முக்கியமான சிற்பங்கள் சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளன. கயாவை தவிர்த்தால் சாஞ்சிதான் மிகப்பழைய பௌத்ததலம்
அசோகச் சக்ரவர்த்தி சாஞ்சி ஸ்தூபியை எழுப்பினார் என்பது வரலாறு. இந்தியாவில் கிடைக்கும் மிகப்பழைய கட்டிடம் சாஞ்சிதான் என்று சொல்லபப்டுவதுண்டு. ஸ்தூபிக்குள் புத்தரின் பூதவுடலின் எச்சங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். அருகே மேலும் இரண்டு சி¢றிய ஸ்தூபங்கள் உள்ளன. அவற்றில் போதிசத்வர்களின் உடலெச்சங்கள் இருந்தன என்று சொல்லபப்டுகிறது.
இந்தியச் சிற்பக்கலையின் ஆதிகாலத்து மிகச்சிறந்த மாதிரிகளில் ஒன்றாக சாஞ்சியின் தோரண வாயில்கள் குறிப்பிடப்படுகின்றன. மங்கலான மணல்பாறையால் ஆனவை. மரத்தைச் செதுக்குவதுபோல அதை நுட்பமாகச் செதுக்கியிருக்கிறார்கள். சற்று தள்ளி நின்று நோக்கினால் அவை மரத்தாலானவை என்று தோன்றலாம். காலை ஒளியில் நோக்கினால் செம்பால்செய்தவை போல அவை மிளிரும். சாஞ்சியின் சிற்பங்கள் நாங்கள் அதுவரை கண்டுவந்த சிற்பங்களின் முன்னோடி வடிவங்கள். முக்கியமான வேறுபாடு இவை மெல்லிய புடைப்புச் சிற்பங்கள் என்பதே. கிட்டத்தட்ட ஒரு நாணயத்தில் உள்ள சிற்பங்களுக்கு நிகரானவை. ஆனால் உடைகள் முகபாவனைகள் நகைகள் உடல்மொழி போன்றவை மிக நுட்பமாகச் செதுக்கப்பட்டுள்ளன. அந்த நேர்த்தி நோக்க நோக்க பிரமிக்கச் செய்வது
புத்தஜாதகக் கதைகளில் உள்ள பல்வேறு கதைகள் இந்தச் செதுக்கல்களில் உள்ளன. புத்தர் கடவுளாக மாறாத [ அவரது பருவுடல் மகாதர்மமாக அல்லது தர்மகாயபுத்தராக வழிபடப்படாத] ஆரம்பகாலத்து ஸ்தூபி இது. ஆகவே இங்கே புத்தரின் நேரடியான தெய்வச்சிற்பங்கள் ஏதுமில்லை. நுண்ணிய நூற்றுக்கணக்கான சிற்பங்களில் ஹீனயானிகள் அல்லது தேரவாதிகளினால் வழிபடப்பட்ட சிறு ஸ்தூபமே உள்ளது. அதை பிக்குகள் தேவர்கள் மன்னர்கள் வணிகர்கள் வணங்கி நிற்கும் காட்சிகள். ”விலங்குகளுக்கும் புத்தர் இறைவனே என்று செதுக்கப்பட்டிருப்பதைத்தான் சிறப்பானதாகச் சொல்ல வேண்டும்” என்றார் கல்பற்றா நாராயணன். யானை,சிம்மம், போதிமரம் போன்று பலவிதமான குறியீடுகளால் புத்தர் தான் சுட்டப்பட்டிருக்கிறார் என்று கலை ஆராய்ச்சியாளர்கள்சொல்கிறார்கள். இச்சிற்பங்களில் நம்மைக் கவர்வது யானையின் பல்வேறு உடல்நிலைகளின் பேரழகுதான். முழங்காலிடும் யானை ஏற முயலும் யானை குறுகி நிற்கும் யானை திரும்பி நிற்கும் யானை சந்தேகப்படும் யானை….
கிழக்கு தோரணவாயிலில் புத்தர் உலகவாழ்க்கையை துறந்து தவம்செய்யச்செல்லும் இளமைப்பருவக் காட்சியை சித்தரிக்கின்ற சிலைகள் உள்ளன. மரத்தூண்களில் உள்ளவை போன்ற சிறிய சிலைகள். மேற்கு வாயிலில் புத்தரின் ஏழு அவதாரத் தோற்றங்கள் உள்ளன. வடக்கு வாயிலில் புத்தர் அறவாழி அந்தணனாக தர்மசக்கரவடிவில் அமர்ந்திருக்கிறார். தெற்குத் தோரணவாயிலில் புத்தரின் பிறப்புக் காட்சி செதுக்கபப்ட்டுள்ளது.
சாஞ்சியின் புடைப்புச்சிற்பங்களில் யானை போதிற்றம் ஆகியவை உச்சகட்ட அழகுடன் உள்ளன. குறிப்பாக போதிமரத்தடியில் யானை நிற்கும் காட்சிகள் மிகச்சிறப்பானவை. சாஞ்சி தோரண வாயில் சிறிது என்ற மனப்பிம்பம் நமக்கெல்லாம் இருக்கும். அதன் செதுக்கலின் நுட்பம் அதைச் சிறிய ஒரு நகை போல நம் மனதில் எண்ணச்செய்கிறது. அருகே சென்றால் ஓங்கி நிற்கும் பெரு வாதில் அது. வரங்கல்லின் தோரணவாயில் கன்னங்கரேலென ஒரு அழகு என்றால் இது செங்கசிவப்புடன் இன்னொரு அழகு. அவற்றின் விளிம்பில் வளைந்து மேல்பகுதியை தாங்கி நிற்கும் யட்சிகளின் சிலைகள். அவர்களின் முலைகள் வளைந்து தெரியும்படி, அவரக்ள் வானத்தில் பறப்பதைப் பார்க்கும் கோணத்தில் அமைக்கப்பட்டுள்ளன அவை.
சுற்றுத்தூண்களின் மையங்களில் நாணயங்கள் போன்ற வட்டத்துக்குள் வட்டத்தின் பரப்பை முழுக்க நிறைத்து பரவியிருக்கும் நுண்ணிய சிற்பங்களை பலமுறை தொடர்ந்து பார்த்தால்தான் முழுமையாக உள் வாங்கிக் கொள்ள முடியும். சிற்பங்களை பார்த்தபடியே நடப்பது ஒருவகையான தியானநிலையை மட்டுமே உருவாக்குகிறது. ஆனால் எங்கள் பயணத்தின் நோக்கம் ஒரு ஒட்டுமொத்த இந்திய தரிசனம்தான். உதாரணமாக இதற்குள் நாங்கள் முற்றிலும் வேறுபட்ட நான்கு சிற்ப பாரம்பரியங்களை கடந்து வந்திருக்கிறோம். சாஞ்சி அதில் ஆகபப்ழையதும் முன்னோடியுமாகும். இந்தச் சிற்பங்களில் ஒரு மெல்லிய எகிப்து பாணி இருப்பதைக் காணமுடிந்தது– குறிப்பாக புடைப்புச் சிற்பங்களில். இந்தியச் சிற்பமுறை என்பது எப்படி ஒன்றில் இருந்து ஒன்றாக முளைத்து வந்தது என்பதை கண்கூடாகவே பார்ப்பதே எங்கள் முக்கிய அனுபவம்
மைய ஸ்தூபத்தின் அருகே அசோகர் காலகட்டத்து தூண் ஒன்று கிடக்கிறது. அதில் புகழ்பெற்ற அசோகரின் அரசாணை ஒன்று பிராமி லிபிகளில் காணப்படுகிறது. பௌத்த மரபுக்குள் நுழைந்து விட்ட சீர்கேடுகளைக் கண்டித்து எச்சரிக்கும் குறிப்பு அது. இரண்டாவது ச்தூபியின் மேலே உள்ள குடைபோன்ற அமைப்பு சிறக்கலைசார்ந்து முக்கியமானது என்று சொல்கிறார்கள். அந்த அமைப்பு பிற்கால பௌத்த கட்டிடக்கலையில் விரிவாக்கம்பெற்றது. மூன்றாம் ஸ்தூபியில் சாரிபுத்தர் போன்ற புத்தரின் ஆரம்பகால சீடர்களின் உடலெச்சங்கள் இருந்திருக்கின்றன. அக்காலத்தில் உணவு வழங்குவதற்காக குடைந்து உருவாக்கப்பட்ட கல்தொட்டிகள் இரண்டு சாஞ்சியில் கவனத்தை மிகவும் கவர்கிறது. அது பிட்சைத்தொட்டி என்றும் சொல்கிறார்கள். பிக்குகளுக்குக் கொடுக்கவேண்டிய பொருட்களை மக்கள் அந்த தொட்டியில்போடுவார்கள்.
சாஞ்சியில் இருந்து கிளம்பி காலையுணவு உண்டுவிட்டு விதிஷாவுக்கு அரைமணிநேரத்தில் வந்துவிட்டோம். விதிஷாவுக்கு வேசாலி என்றும் [பாலியில் பேசாலா] பெயர் உண்டு. பள்ளிக்கூட பாடங்களில் இந்நகரை ஒரு முக்கியமான வினாவுக்கு விடையாக படித்து மனப்பாடம்செய்திருப்போம். புத்தர் மறைவுக்குப் பின்னர் மகாகாசியபரின் தலைமையில் இங்குதான் பௌத்தசங்கங்கள் ஒன்றுகூடி முதல் பௌத்த மாநாட்டை நிகழ்த்தின. அப்போது உருவான கருத்துவேற்றுமையின் விளைவாக பௌத்தம் ஹீனயானம் மகாயானம் என்ற இரு பிரிவுகளாகப் பிரிந்தது.
பேத்வா நதியின் கரையில் இருக்கிறது இந்நகரம். பேத்வா நதிக்கரையில் சிறுவர்கள் துழாவி நீராடிக் கொண்டிருந்தார்கள். சிறிய ஆலயங்கள் ஏராளமாக இருந்தன. இன்று விதிஷா ஒரு மாவட்டத் தலைநகரம். பலவகையிலும் விரிந்துவிட்டது. பழங்கால விதிஷா உதயகிரி என்ற ஒரு சிறு குன்றின்மீது இடிபாடுகளாக உள்ளது. கிட்டத்தட்ட 18 கோயில்கல் இங்கே உள்ளன. சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் உரிய ஆலயங்கள். அந்தக் குன்றுக்கு என்று பெயர். அங்கு நிறைய குகைக்கோயில்கள். முதல் கோயில் சமணக் குகை. அதில் ஆதிநாதரின் சிலை இருட்டுக்குள் நின்றுகொண்டிருக்க வெளியே வெறித்த நிலம் முழுக்க வெயில் ததும்பியது. அப்பகுதியெங்கும் நம்பமுடியாத அளவுக்கு வறுமை வாய்ப்பட்ட எளிய மக்களின் குடிசைகள். சில குடிசைகள் இடுப்புவரை மட்டுமே உயரம். பெண்கள் கையில் சிறு லோட்டாவில் தண்ணீருடன் சிற்பக்கோயில்கள் நடுவே காலைக்கடன் கழிக்கச் சென்று கொண்டிருந்தார்கள்.
இங்கே உள்ள முக்கியமான சிற்பம் என்பது வராகமூர்த்தியின் பெரிய சிற்பம்தான். மூன்றாள் உயரமான புடைப்புச் சிற்பம். அவர் வாசுகி மேல் காலை வைத்து பூமிதேவியை தன் கொம்புகளால் நெம்பி எடுக்கும் சிற்பம் அது. அந்த குன்றெங்கும் அலைந்து திரிந்து வெயிலின் தீயில் எரிந்தோம்.
தொல்பழங்காலத்தில் மத்திய இந்தியாவின் மிகப்பெரிய வணிகத்தலமாக இது விளங்கியிருக்கிறது. பௌத்த வரலாற்றில் இந்த அம்சத்தை நாம் கவனிக்கலாம். பௌத்தம் பெரிதும் வணிகர்களின் மதம். வேதமத அதிகாரத்தை கையில் வைத்திருந்த பிராமணர்கள் மற்றும் ஷத்திரியர்களுக்கு எதிராக உருவானது அது. கிமு ஐந்தாம் நூற்றாண்டு முதல் இந்தியாவில் புதிய நிலப்பகுதிகள் மையப்பண்பாட்டின் தொடர்புக்கு வந்தன. ஏராளமான பாதைகள் உருவாயின. தொலைதூரக் காடுகளிலெல்லாம் குடியேற்றங்கள் அமைந்தன. இந்திய நிலப்பரப்பு பெருமளவில் நாகரீகப்படுத்தப்பட்ட காலம் இது.
இதன் விளைவாக வணிகம் பெருகி வணிகர்கள் ஒரு பெரும்சக்தியாக உருவாகி வந்தனர்.அவர்களுக்கும் ஆதிக்கத்தில் இருந்தவர்களுக்கும் இடையே உரசல்கள் உருவாயின. அந்த வரலாற்றுத்தருணம் பௌத்தத்தின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தது. பௌத்த வரலாற்றில் பாடலிபுத்திரம் வேசாலி போன்ற பெரிய வணிகநகரங்களின் பங்கு மிக முக்கியமானது. இன்னும் ஒன்றையும் கவனிக்கலாம், இந்த வணிகநகரங்கள் இயல்பாக பரத்தமையின் மையங்களும் கூட. பௌத்த கதைகளில் பரத்தையர் முக்கியமான இடம்பெறுவதற்கான காரணமும் இதுவே.
தொன்மையான நகரமாகிய விதிஷா கைவிடப்பட்டு மீண்டும் மால்வா மன்னர்களால் மீட்டமைக்கப்பட்டது. இப்பகுதியில் உள்ள ஒரு புதைபொருள் சின்னம் கட்டிடக்கலை சார்ந்து முக முக்கியமானது. இங்கே இருந்த விஷ்ணு ஆலயமொன்றின் செங்கல்லால் ஆன அடித்தளம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. அது சுண்ணத்தை களிமண்ணில் சேர்த்து அரைத்த கலவையால் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒருவகை சிமெண்ட். அக்கட்டிடம் கிமு இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது
விதிஷாவில் பெரும்பாலும் இடிபாடுகளே இன்று உள்ளன. இங்குள்ள பெரும் தூண்கள் முக்கியமான தொல்பொருள் தடையங்கள். அவற்றில் ஒன்று இப்போதும் உறுதியாக நிற்கிறது. அதை கம்ப பாபா என்கிறார்கள். ஒற்றைக்கல்லால் ஆனது அது. அதில் உள்ள கல்வெட்டு அந்தத் தூண் கருடனுக்கானது என்று குறிப்பிடுகிறது. தட்சசீலத்தை [இன்றைய பாகிஸ்தான்] சேர்ந்த கிரேக்க வீரனாகிய ஹெலியோடோரெஸ் வாசுதேவருக்காக நாட்டிய தூண் அது என்று குறிப்பு சொல்கிறது. அவர் அலக்ஸாண்டரின் நீட்சியாக இந்திய நிலப்பகுதியை ஆண்ட கிரேக்க அட்சியாளரான ஆண்டியால்கிடாஸின் தூதராக விதிஷாவின் மன்னர் பாகபத்ரரின் அரச சபைக்கு அனுப்பப்பட்டவர். அந்த கல்வெட்டில் அது கிமு 140 ஐ சேர்ந்தது என்று சொல்லப்பட்டிருக்கிறது. பஞ்சாபில் அன்று கிரேக்கர் ஆட்சி நிலவியமைக்கும் கிரேக்கர்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையே நல்லுறவு நிலவியமைக்கும் சான்றாக உள்ள முக்கியமான வரலாற்று ஆவணமாக அது கருதபப்டுகிறது
விதிஷா வழியாக வெளியேறி கஜுராஹோ கிளம்பினோம்.