வெண்முரசு நூல் அறிமுக விழா நேற்று மாலை சிறப்பாக நிகழ்ந்து முடிந்தது. விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தின் விழாக்கள் அனைத்துமே எப்போதும் பிரம்மாண்டமானவையாகவும் அதேசமயம் முழுமையான இலக்கிய அனுபவம் அளிக்கும் விழாக்களாகவும் அமைவது வழக்கம். இவ்விழாவும் அப்படியே. நண்பர்கள் குழுமத்தின் சிறந்த எதிர்விமர்சகரான கிருஷ்ணன் ‘இதுவரை நிகழ்ந்த விழாக்களில் கிட்டத்தட்ட பிழையற்றது’ என்று பாராட்டினார். அதுவே விழாக்குழுவினருக்கு கிடைக்கச்சாத்தியமான அதிகபட்சப் பாராட்டு. நிறைவளிக்கும் விழா.
விழாவை நிகழ்த்தவேண்டும் என்ற எண்ணம் எழுந்தது நண்பர் பாலாவிடம். அவரே தலைமை ஒருங்கிணைப்பாளர். அவரும் அவர் மனைவி விஜியும் பலநாட்களாக தொடர்ந்து முயற்சி செய்து இவ்விழாவை சிறப்புற அமைத்தனர். துல்லியமான வேலைப்பகிர்வுடன் இப்பணிகள் நிகழ்ந்தன. அசோகமித்திரனை அழைத்தது முதல் திரும்பிக்கொண்டு சென்று இல்லத்தில் சேர்த்ததுவரை பரத்பிக்காஜி பொறுப்பேற்றுக்கொண்டார். அரங்க ஒருங்கிணைப்பை சிறில் அலெக்ஸ் நிகழ்த்தினார்.
காணொளிகள் எடுப்பதை நண்பர் கே.பி.வினோத் செய்ய சுரேஷ் வலையேற்றம் செய்தார். ஸ்ரீனிவாசன் சுதா தம்பதியினர் தொடர்புகளை பொறுப்பெடுத்துக்கொண்டனர். ராஜகோபாலன், செல்வேந்திரன் ஆகியோர் ஊடகத் தொடர்புகளை நிகழ்த்தினர். தங்கவேல், இளம்பரிதி, விஜய்ரெங்கன் ஆகியோர் அமைப்பில் உதவினார்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான வேணி அவர்களின் சேவை பெறப்பட்டது. அரங்க அமைப்பு அவர்களுடையது. நிகழ்ச்சி விஜய் டிவியில் வெளிவருமென்பதனால் அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப இவ்வரங்கு அமைக்கட்டது. என் நண்பர் சுகா இளையராஜாவை அழைத்துவந்தார்.
விஷ்ணுபுரம் நண்பர்கள் கோவை, ஈரோடு, திருச்சி, காரைக்குடி, மதுரை என பல ஊர்களில் இருந்து வந்திருந்தனர். ஒருநாள் முன்னதாகவே வந்து தங்கி நாளெல்லாம் பேசி நிகழ்ச்சிகளில் தன்னார்வலர்களாகப் பணியாற்றி விழாவைச் சிறப்பித்தனர். அனைத்து நண்பர்களுக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்
விழாவுக்கான அரங்கம் இலக்கியநிகழ்ச்சிகள் என்று பார்க்கையில் பெரியதென்றாலும் கமல், இளையராஜா கலந்துகொள்ளும் நிகழ்ச்சி என்ற நிலையில் சிறியதே. கணிசமானவர்கள் அரங்கில் நின்றுகொண்டிருக்க நேரிட்டது. ஓரளவு வருகையாளர்கள் திரும்பிச்செல்லவும் நேரிட்டது. அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்
இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தவர்கள் என் வணக்கத்திற்குரியவர்கள். இளையராஜா, அசோகமித்திரன், பி.ஏ.கிருஷ்ணன், நாஞ்சில்நாடன், பிரபஞ்சன் ஆகியோர் வந்திருந்து என் முயற்சியை வாழ்த்தியது ஊக்கமளிப்பது.
கமலுக்கும் எனக்கும் நீண்டகால தனிப்பட்ட முறையிலான நட்பு உண்டு. ஆகவே சம்பிரதாயமாக எதையும் சொல்லக்கூடாது. எனினும் வெண்முரசு நூல்வரிசை மேலும் பரவலாகச் சென்றடைய கமல் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்துக்கும் நன்றி தெரிவித்தாகவேண்டும். தொலைக்காட்சிகளில் கூட்டங்களில் அவர் அதைப்பற்றிச் சொல்லியிருந்தார்.
இன்றைய சூழலில் இத்தகைய முயற்சிகளுக்கு அரசோ, கல்வியமைப்புகளோ எவ்வித உதவியும் செய்வதில்லை . சொல்லப்போனால் முழுமையாகவே புறக்கணிக்கவே முயல்கின்றன. கமல் அளிக்கும் இந்த உதவி ஓர் அரசாங்கத்தின் உதவிக்கு நிகரானது என்று தோன்றியது.
இவ்விழாவின் நிறைவான அம்சம் மகாபாரதச் சொற்பொழிவாளர்களான இரா.வ.கமலக்கண்ணன், கிருஷ்ணமூர்த்தி, ஏ.கே.செல்வதுரை ஆற்றூ கூத்துக் கலைஞர்கள் தேவன், ராமலிங்கம் ஆகியோர் ஆகியோரையும் முழுமகாபாதத்தையும் மொழியாக்கம் செய்து வரும் அருட்செல்வப்பேரரசன் அவர்களையும் ஓவியர் ஷண்முகவேல் அவர்களையும் கௌரவித்தது. மகாபாரதப் பிரசங்கியார்களை தேர்வுசெய்து அறிமுகம் செய்த பேரா சீனிவாசன் அவர்களுக்கும் வந்திருந்து விழாவில் பங்குபெற்ற அக்கலைஞர்களுக்கும் நன்றி
அனைவருக்கும் மீண்டும் மீண்டும் நன்றி.