இந்தியப் பயணம் 13 – நாக்பூர் போபால்

தர்மபுரியிலிருந்து காலையில் கிளம்பி வெயில் வெள்ளியாகிக் கொண்டிருந்தபோது அடிலாபாத் போகும் வழியை விசாரித்தபடியே சென்றோம். இதற்குள் வழிகேட்பது எங்களுக்கு ஒரு கலையாகவே ஆகிவிட்டிருந்தது. வழிகேட்பது சுலபம்தான். ஊர்பெயரை கேள்வித்தொனியுடன் சொன்னால் போதும். என்ன சிக்கல் என்றால் நாம் ஓர் ஊர் பெயரைச் சொல்லும் உச்சரிப்பு அந்த ஊரில் அவ்ழக்கமே இருக்காது. மேலும் உள்ளூர்வாசிகள் பலர் வரலாற்று இடங்களைக் கேள்வியே பட்டிருக்க மாட்டார்கள். கிராமவாசிகள் பெரும்பாலும் பெரியநகரங்களுக்குச் செல்லும் வழியை அறிந்திருப்பதில்லை. அவர்களால் அருகே உள்ள ஒரு ஊரைத்தான் அடையாளம் கண்டு வழிகாட்டமுடியும்.

பாமினி சுதானாக இருந்த அடில்ஷாவின் பெயரால் அமைந்த நகரம் இது. அடிலாபாத் சந்திரகுப்த மௌரியர் காலத்திலேயே இருந்துள்ளது. முகலாயர் ஆட்சியிலும் சாளுக்கியர் சாதவாகனர் ஆட்சியிலும் அது முக்கியமான ஊராக இருதுள்ளது. அடில்ஷா அதை புதுப்பித்தபின் அவரது பெயராலேயே அறியப்பட்டது. அடிலாபாத்தை புயல்வேகத்தில் கடந்துசென்றோம். இந்த ஊரில் ஆந்திரப் பண்பாட்டு எல்லை வரம்பு இருப்பதாகத் தோன்றியது. மராத்தி பண்பாட்டுக்கூறுகள் கண்ணுக்குப்பட ஆரம்பித்தன. குறிப்பாக உணவில்தான் பண்பாட்டு மாற்றம் முதலில் கவனத்துக்கு வருகிறது.

ஆந்திராவில் நுழையும்போது தமிழக உணவையே உண்ணும் எண்ணம் இருக்கும். எண்ணையும் காரமும் மெல்லமெல்ல தூக்கலாகிக் கொண்டே வருகின்றன. அரிசி சன்னமாகவும் மென்மையாகவும் இருக்கிறது– சாதாரணமான ஓட்டலின் அளவுச்சாப்பாட்டிலேயேகூட. பழைய பயணங்கள் அளவுக்கு ஆந்திராவின் நல்ல உணவை நாங்கள் சாப்பிடவில்லை என்றே சொல்ல வேண்டும். ஆனாலும் நல்ல சாப்பாடுகள் சில அமைந்தன. தெலுங்கானாவில் நுழைந்தபோது ருசி மாறுபட ஆரம்பித்தது. கூட்டுகள் வடக்கத்தி சப்ஜி போல இருந்தன. மகாராஷ்டிர உணவு கோதுமையும் அரிசியும் சமமாகக் கலந்தது. உருளைக்கிழங்கு முக்கியமான இடத்தை அதில் வகிக்கிறது. அடிலாபாதுக்கு அப்பால் மகாராஷ்டிரா ஆரம்பமாகிறது. எங்கள் திட்டப்படி நாங்கள் மகாராஷ்டிரத்துக்குள் அதிகம் செல்வதில்லை. சிறிய ஒரு நிலப்பகுதியே மகாராஷ்டிரம் எங்கள் வழியில். நாக்பூர் தாண்டினால் மத்தியப்பிரதேசத்துக்குள் நுழைந்துவிடுவோம்.

”அப்பாடா ஆந்திரா தாண்டியாச்சு”என்றார் சிவா. ஆந்திரா மிகப்பெரிய மாநிலம். செல்லச்செல்ல வந்தபடியே இருந்தது நிலம். அதை மூன்று மாநிலங்களாக பிரித்தால்கூட தகும். ஆந்திரா முழுக்க நாங்கள் கவனித்த விஷயம் இரண்டு. ஒன்று மக்களின் மனம் நிறைந்த நட்பு, பணிவு. ஒரு விதிவிலக்கு கூட கிடையாது. இரண்டு, எல்லாமே அங்கே விலைகுறைவுதான். விடுதிகள், உணவு எல்லாமே மலிவு.”…ஆந்திராவை ரொம்பப் பிடிச்சு போச்சு சார்” என்றார் செந்தில். அதை எல்லாருமே ஒப்புக்கொண்டோம்.

நாக்பூர் மத்திய இந்தியாவின் மாபெரும்நகரம். அது ஒரு முக்கியமான பண்பாட்டு மையமும்கூட .இந்தியவரலாற்றில் நாக்பூருக்கும் கல்கத்தாவுக்கும் இடையே ஒரு விசித்திரமான உறவுண்டு. அவை தராசின் இரு தட்டுகள் போல. கல்கத்தா புதுமைமோகம், ஐரோப்பியமயமாதல் ஆகியவற்றுக்கான வேகம் கொண்டது. நாக்பூர் மரபுசார்ந்த நோக்கு, இந்தியத்தன்மைக்கான பிடிவாதம் ஆகியவை கொண்டது. ஆரம்பகால காங்கிரஸ்காரர்களில் வங்காளிகளில் மிதவாத நோக்குள்ள கனவான்கள் என்றால் திலகர் கடுமையான மரபுநோக்குள்ள போராளி. கல்கத்தா கம்யூனிசத்தை நோக்கிச் சென்றபோது நாக்பூர் இந்துமகாசபையையும், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தையும் உருவாக்கியது.ஆஎ எஸ் எஸ்சின் தலைமையகம் இங்குள்ளது. அம்பேத்கார் பௌத்தத்தை தழுவிய தீக்ஷா பூமியும் இங்குள்ளது. அங்கு நாடெங்குமிருந்து பௌத்தர்கள் வந்து வணங்குகிறார்கள்.

கன்ஹன் ஆற்றின் துணையாறான நாக் ஆறு ஓடுவதனால் இந்நகருக்கு இப்பெயர்.பழைய நாக்பூர் ஆற்றங்கரையில் இருக்கிறதாம். நாக்பூரின் சிறப்பு ஆரஞ்சுகளும் சப்போட்டாப்பழங்களும்தான். நாங்கள் சென்றகாலகட்டம் இரண்டுக்கும் சீசன் இல்லை. ஆகவே வேகமாக நாக்பூரைக் கடந்து மறுபக்கம்சென்றுவிட முடிவெடுத்தோம். இந்தியாவிலேயே அதிக வெப்பமுள்ள பகுதிகளில் ஒன்று நாக்பூர். கோடைகாலத்தில் நாக்பூர் உலை போல இருக்கும். ஏப்ரல் மாதத்தில் டெல்லி சென்னை ரயிலில் வந்தவர்கள் இரண்டாம் நாளில் மதியத்தில் நாக்பூர் வருவார்கள். அப்போது ரயில் கூரையைத் தொட்டால் தோசைக்கல் போலிருக்கும்

செப்டம்பரில் நாக்பூரில் மழைக்காலம். சூடே இல்லை. நாக்பூர் பசுமையும் அழகுமாக ஒரு அதிநவீன நகரம்போலிருந்தது. சொல்லப்போனால் கோவாவுக்குள் நுழைந்த உணர்வே உருவானது. பெரும்பாலான கட்டிடங்கள் புதிதாக அழகாக இருந்தன. சுத்தமான பெரிய சாலைகள். சாலைநடுவே அழகிய செடிவரிசை. நகரின் சுத்தத்துக்கு ஒரு காரணம் இருப்பதாக தோன்றியது. சுவரொட்டிகள் அனேகமாக இல்லை. முறைப்படுத்தப்பட்ட விளம்பரத்தட்டிகளே இருந்தன. நாக்பூருக்குள் நாங்கள் செல்வதற்கு முன்புதான் சற்றே மழை பெய்திருந்தது. ஈரமான சாலையில் சென்ற குளித்த கார்களையும் மழைத்துளி படிந்த முகம் கொண்ட அழகிய பெண்களையும் பார்த்துக் கொண்டு சென்றோம்.

ராஷ்டிரகூட மன்னர்களின் முக்கியமான நகர்களில் ஒன்றாக விளங்கிய நாக்பூர் அவர்களுடைய தென்னக வாசலாகும். பின்னர் தேவகிரியின் யாதவமன்னர்களின் கீழ் இது விளங்கியது. மராட்டிய எழுச்சிக்குப் பின்னர் மராட்டிய அரசின் படைநகர்களில் ஒன்றாக பிரிட்டிஷ் அரசு உருவாகும்வரை விளங்கியது. மகாராஷ்டித்தின் வணிகைத்தலைநகர் மும்பை, பண்பாட்டுத்தலைநகர் பூனா, அரசியல்தலைநகர் நாக்பூர். ஆனால் நகரங்களில் எங்களுக்கு ஆர்வமிருக்கவில்லை. அம்பேத்காரின் துறவுநிலையத்தைப் பார்க்க எனக்கு ஆசையிருந்தது. ஆனால் நகருக்குள் நுழைந்து வெளியேற பலமணிநேரமாகிவிடும். ஆகவே நகரத்தை மேலோட்டமாகப்பார்த்தபடி கடந்து சென்றோம்.

மத்தியப்பிரதேசத்த்¢ல் ஓர் எல்லையில் இரவு ஒன்பதுக்கு மேல் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை, வனவிலங்கு நடமாட்டம் உண்டு என்று எழுதியிருந்தார்கள். ஆனால் அப்படிப்பட்ட நிலம் அல்ல அது. நக்சலைட்டுகளை அஞ்சித்தான் அப்படி எழுதி வைத்திருக்கிறார்களாம். அதன்பின் அங்குள்ள மக்களை அரசாங்கம் மாவோயிஸ்டுகளுக்கு கொடுத்திருக்கிறது. காட்டுக்குள் சென்று கொண்டிருந்த ஒரு கிழவரை நிறுத்தி பேசினோம். பரிதாபகரமான தோற்றம். தலையில் விறகு. வயது தொண்ணூறுகூட இருக்கலாம். பெயர் சென்னினெல்லி பீமாலு. காட்டுக்குள் கொஞ்சம் சோளம் நட்டிருக்கிறார். காட்டு வேளாண்மையில் பறவைகள் மிருகங்களை தடுப்பதென்பது மிகமிக கடுமையான உழைப்பு தேவைப்படும் வேலை. எந்நேரமும் ஒரு ஆள் அருகே இருந்தாக வேண்டும். பீமாலுவுக்கு என்ன கிடைக்கும் என்றே தெரியவில்லை.

மத்தியப்பிரதேசத்துக்குள் மதியம்தாண்டித்தான் நுழைந்தோம். பல இடங்களில் நின்று வேடிக்கைபார்த்துக் கொண்டு வந்தோம். மத்தியப்பிரதேசத்தின் நிலத்தின் சிறப்பியல்பு அதன் ஏற்ற இறக்கங்கள்தான் . பெரிய அலைகளாக பூமி பரந்து கிடக்கும். பதின்பருவத்துப்பெண் மார்பகங்கள் போன்ற சிறு குன்றுகள். வழக்கமாக கருகி கருமண் புகைந்து கிடக்கும் அந்நிலம் மழையில் பச்சை பொலிந்து மனதை பரவசப்படுத்தும் விரிநிலக்காட்சியாக மாறிவிட்டிருந்தது. இறங்கிப்பார்த்தால் எல்லாம் பார்த்தீனியச் செடிகள். ஆடுகள் இப்போது இச்செடிகளைத் தின்பதற்கு பழகிவிட்டிருந்தன.

நிலம் மாறிவிட்டதென முதலில் காட்டியவை மாடுகள். அதுவரை தெரிந்த குட்டைக்கொம்புள்ள– அல்லது கொம்பே இல்லாத- வெள்ளை மாடுகள் மாறி சிவப்பாக செம்மரி ஆடுகள்போல முன்பக்கம் சுருண்ட சப்பைக் கொம்புள்ள மாடுகள் கூட்டம் கூட்டமாகச் சென்றன. டீ மூன்றுரூபாயாகவே நீடித்தது. காந்திபாணி தொப்பிகள் பஞ்சக்கச்ச வேட்டிகள் வர ஆரம்பித்தன. ஆனால் சாலையில்செல்லும்போதுகூட நம்மை வேறு கிரகத்து மக்களைப் பார்ப்பதுபோல கண்களைச்சுருக்கி விசித்திரமாகப் பார்த்து சென்றார்கள்.

நர்மதை நதியை மாலை மூன்றுமணியளவில் கண்டோம். மழைநீர் பெருகி இரண்டு கிலோமீட்டர் அகலத்துக்கு சென்று கொண்டிருந்தது. இரு நீளமான பாலங்கள். ஒன்று ரயிலுக்கு. கார் பாலத்தில் சில பிராமணர்கள் குடுமியுடன் காரிலிருந்து இறங்கி தேங்காய் உடைத்து பூஜை செய்து கும்பிட்டு மலர்களுடன் பாதி தேங்காயை கீழே விட்டார்கள். ”நல்ல விசயம் ஜெயன், நதியை கும்பிடுறது. இது ஒண்ணு இல்லேன்னா இங்க ஏது வாழ்க்கை?”என்றார் வசந்தகுமார். காரிலேயே இறங்கி ஒரு சிறு மீனவக்குப்பம் வழியாக நர்மதை நதிக்கரைக்கு வந்தோம். சிறு தகர– ஓட்டு வீடுகளில் பெரும்பாலானவற்றில் மீன்வலைகளை சரிசெய்து கொண்டிருந்தார்கள். நர்மதைமேல் மீன்பிடிபடகுகள் சென்றன. படித்துறை உடைந்திருந்தது.

நீரிலிறங்கி நீந்தி திளைத்து குளித்தோம். காரிலேயே இருந்த சலிப்பு களைப்பு எல்லாமே நீங்கியது. கரையோரம் ஆழமும் இழுப்பும் அதிகமில்லை. ஆகவே நீருக்குள் அடித்தரையில் மென்மையான சேறு இருந்தது. செந்திலின் இடுப்புத்துண்டை நர்மதை பிடுங்கிச்சென்றுவிட்டது. நல்ல விஷயம்தான், பாபநாசினிகளில் குளிக்கும்போது கடைசி துணியையும் விட்டுவிட்டு நிர்வணமாக கரையேற வேண்டும்’ என்றேன். உற்சாகமாக ஒரு மணி நேரம் குளித்தோம்.

இரவு ஒன்பது மணிக்கு புண்டார்னே என்ற ஊரை அடைந்தோம். போபாலுக்குச் சென்றுவிடலாமென எண்ணினாலும் முடியவில்லை. ஒரு விடுதியில் வாடகைக்கு அறை கேட்டோம். இந்தியும் யாருக்கும் தெரியாது. மத்தியப்பிரதேசத்தின் முதல் அனுபவம் எவருக்கும் அரிச்சுவடி அளவுக்குக் கூட ஆங்கிலம் தெரியாது என்பது. பாண்ட் சட்டைபோட்டு பைக்கில் செல்பவருக்குக் கூட ஆரம்பகட்ட ஆங்கில வார்த்தைகள் தெரியவில்லை. விடுதி ஆள் இரண்டு ஏஸி- இரட்டை அறையும் ஒரு ஒற்றை அறையும் இருக்கிறது என்றான். இரட்டை அறைக்கு ஐநூறு ரூபாய் வீதம் வாடகை. ஒற்றை அறைக்கு இருநூறு ரூபாய். நம் ஆட்கள் அறிவுபூர்வமாக பேசி ஒரு ஏஸி இரட்டை அறையும் ஒரு ஒற்றை அறையும் எழுநூற்று ஐம்பது ரூபாய்க்கு தர முடியுமா என்று பேரம் பேசினார்கள். அவன் உடனே அதிக படுக்கை போடக்கூடாது என்றான். மேலும் பேசினால் ஒரு குப்பை அறையைக் காட்டி அதில் தங்கும்படிச் சொன்னான். மோசடிசெய்வதே அவனுடைய நோக்கமாக இருந்தது.

வேறு அறை தேடினோம். இன்னொரு விடுதி பேருந்து நிலையம் அருகே இருந்தது. பெயர் கிடையாது, விடுதி அவ்வளவுதான். அங்கே முகப்பறையில் ஏழுபேர் கட்டிலில் அமர்ந்து சாராயம் குடித்துக் கொண்டிருந்தார்கள். அதன் வழியாக உள்ளே சென்று வழுக்கும் படிகளில் ஏறினால் உள்ளே இடுங்கலான சிறிய அறைகள். சுவர்களில் சிமிண்ட் பூச்சு இல்லை. தரை உடைந்த சிமிண்ட் பூச்சு. பொது கக்கூஸ். எங்களைப் பார்த்து பேராசையாக வாடகை கேட்க வேண்டும் என்று முடிவுசெய்து தலைக்கு முப்பது ரூபாய் என்றான். பத்து ரூபாய்க்கு குறைக்க முடியும். ஆனால் கக்கூஸைப்பார்த்து குலைநடுங்கிப் போய் வந்துவிட்டோம். பயங்கரமான நிழல் உலக கதைகளில் வருவதுபோன்ற இடம்.

அதைவிட சற்றே பரவாயில்லை வகையிலான விடுதி ஒன்று கிடைத்தது. தலைக்கு நாற்பது ரூபாய் கணக்கு. இடுங்கலான அறையில் மூன்று கட்டில்கள். மழைபெய்ததனால் புழுக்கம் இல்லை. கோடையில் என்ன செய்வார்கள் என்றே தெரியவில்லை. தேசிய நெடுஞ்சாலையோரம் மாடியில் ஒரு ஓட்டலுக்கு உள்ளே போய் அறைகளுக்குச் செல்ல வேண்டும். 30 ரூபாய்க்கு வயிறு நிறைய சப்பாத்தி சாப்பிட்டார்கள். நான் பழம் வாங்கப்போனேன். எட்டரை மணிக்கு ஊரடங்கிவிட்டிருந்தது. பேருந்து நிலையம் முன் ஒருவனிடம் ஆப்பிள் வாங்கினேன். நான் எந்த ஆப்பிளை எடுத்துக் கொடுத்தாலும் அதை எடை பொருந்தவில்லை என்று வைத்துவிட்டு ஓர் அழுகலை எடுத்து வைப்பான். அவனிடம் பேசி சண்டை போட்டு ஆப்பிள் வாங்கி வந்தால் இரண்டு ஆப்பிள் அழுகல்.

ஓட்டல் ஊழியர்கள் இரவு 12 மணிக்கு சப்பாத்தி சாப்பிடுவதைக் கண்டேன். அதன் பின் அவர்கள் இரும்புக்கட்டில்களை விரித்துப்போட்டு படுத்துக் கொண்டார்கள். நான் அறையில் சட்டை பாண்ட் துவைத்து காயப்போட்டுவிட்டு படுத்து தூங்கிவிட்டேன். காலையில் 5 மணிக்கெ எழுந்து அவசர அவசரமாக கழிபப்றைக்கு ஓடினோம். இரண்டு கழிபப்றைகள். ஆனால் அங்கே முப்பது பேர் இருந்தார்கள். டீ குடிக்கலாமென பேருந்துநிலையம் வரை சென்றேன். ஊரே அடங்கிகிடந்தது. மாவா என்ற புகையிலைப்பொடி விற்கும் கடைமட்டுமே திறந்திருந்தது. பேருந்து நிலையத்தில் எட்டு பேருந்துகள் மட்டுமே. எங்குமே டீ இல்லை.

மீண்டும் ஒருமணி நேரம் கழித்து டீ குடிக்கச் சென்றபோது வாழைப்பழம் கிடைத்தது. அங்கும் அதே உத்தி. நாம் எதைக் காட்டினாலும் என்ன சொன்னாலும் விற்பனையாளன் சர்வ சகஜமாக நாம் சொல்வதையே செய்வதுபோல அழுகல் பழங்களை மட்டுமே எடுப்பான். பொறுமை பறந்து விட்டது. வழக்கம்போல நாலு பழம் அழுகல்.

ஏழரை மணிக்கு போபாலுக்குக் கிளம்பினோம். சாலையோரத்துப் பசும்புல் படர்ந்த குன்றுகள் வால்பாறை மலையுச்சி புல்வெளிகள் பொலிருந்தன. இறங்கி பார்த்துக் கொண்டிருந்தபோது திருச்சிக்காரரான சுரேஷ் பைக்கை நிறுத்தி பேசினார். தமிழ்நாட்டு பதிவெண் பார்த்தாராம். அங்கே ஆழ்துளைக்கிணறு போடும் வேலை செய்கிறார். நாக்பூருக்கு சாமான் வாங்க பைக்கில் செல்கிறாராம். பைக்கிலேயே திருச்சிக்குப் போவதுதான் வழக்கம் என்றார். சாகஸக்காரர். விரைவிலேயே பணம் சம்பாதித்துவிடுபவராக தெரிந்தார். உற்சாகமாக மத்தியப்பிரதேசம் பற்றிப் பேசினோம். ‘நல்ல வேளையில் வந்திருக்கீங்க. ஏப்ரலில் இதெல்லாம் காய்ஞ்சு பாலைவனமா கிடக்கும்’ என்றார். அங்கே ஆழ்துளைக் கிணறு முழுக்க முழுக்க தமிழர்கள்தான் போடுகிறார்களாம். செந்தில் அவரது பைக்கை வாங்கி ஒருசுற்று ஓட்டிவிட்டு அடித்து திருப்பிக் கொடுத்தார். சுரேஷ் நட்புடன் பேசி விடைபெற்றார்.

சாய்குன்ரா என்ற கிராமத்தில் ஒரு டீக்கடையில் டீ சாப்பிட்டோம். ஓரு அறுபது வயது அம்மாள் டீ கொடுத்தார். இளமையில் மிக அழகாக இருந்திருக்க வேண்டும். சகுந்தலா என்று பெயர். ”சின்ன வயசில் அவர் அழகை விரும்பிய பலரை மோகிப்பித்திருப்பார்.யாவர் அழகை பொருட்படுத்தாத ஒருசிலரிடம் மோகம் கொண்டு துயரமும் சிறுமையும் பட்டிருப்பார்..”என்றார் கல்பற்றா நாராயணன். ”அழகிகளின் விதி அது” நானும் அதை கவனித்திருக்கிறேன் என்றேன். அழகிகளின் பார்வை அவர்கள் அழகை பொருட்படுத்தாதவர்களையே பொருட்படுத்துகிறது. அந்த சவாலை எதிர்கொள்ள அவர்களின் அகங்காரம் துடிக்கிறது. சாகசம் ஊடல் சரணாகதி என அந்த முயற்சி முடிவ்க்கு வருகிறது.

போபால் வரும் வழியில் மதியம் ஒரு தாபாவில் சாப்பிட்டோம். நல்ல சப்பாத்தி,பருப்புக்கறி எல்லாம்தான். ஆனால் விலை கேட்காமல் சாப்பிட்டுவிட்டோம். போட்டு தீட்டிவிட்டான், 350 ரூபாய். அதற்கு பலவித பாவலாக்கள் செய்தான். மாலையில் போபாலுக்குள் நுழைந்தோம். தூசுக்குள் இருந்தது போபால் சாலையில் செல்லும் பெண்கள் எல்லாம் முகத்தை முழுக்க மூடி கைகளுக்கும் உறைகள் போட்டுசெல்லும் அளவுக்கு கரி தூசு. சாலைகள் எல்லாமே மண்குவியல்கள், குழிகள். மொத்த நகரமே ஒரு பெரும் குப்பை மேடு.

போபால் மத்தியபிரதேசத்தின் தலைநகரம். இந்தூரை விட்டால் மத்யபிரதேசத்தின் பெரிய நகரம் இது. பார்மார மன்னராகிய போஜரால் ஆயிரம்வருடம் முன்பு உருவாக்கபப்ட்ட நகரம் போபால். பீஜ்பால் என்றுதான் இதன் உண்மையானபெயர். போஜ மன்னர் வெட்டிய இரு பெரிய ஏரிகள் இந்நகர்த்தின் அடிப்படையாக இன்றும் உள்ளன. ம்ஆனால் அந்த நகரம் சற்றுதள்ளி இருந்ததாம். இப்போதுள்ள நகரம் ஆப்கானிய சுல்தான்களின் படைத்தலைவர்களில் ஒருவரான தோஸ்த் முகமது கான் 1707ல் உருவாக்கியது. போபால் நெடுங்காலம் ஒரு முஸ்லீம் சமஸ்தானமாக இருந்திருக்கிறது.

இந்த சமஸ்தானத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. 1829 முதல் 1926 வரை தொடர்ச்சியாக இதை அரசிகள், பேகம்கள், ஆண்டிருக்கிறார்கள். குதிஷா பேகம் முதல் அரசி. ஜஹான் பேகம் கடைசி அரசி. அதன் பின்னர் அவரது மகன் ஆட்சிக்குவந்தார். இந்த இயல்பு திருவிதாங்கூருக்கும் உண்டு. இங்கும் பல அரசிகள் ஆண்டிருக்கிறார்கள். பொதுவாக இந்த விஷயத்தை இந்தியவரலாற்றில் நாம் கவனிக்கலாம். அரசிகள் ஆளும் நாடுகள் ஒப்புநோக்க நலம்நாடும் அரசுகளாக இருந்துள்ளன. ராணிமங்கம்மாள், காகதீய அரசி ருத்ராம்பாள், ரஸியா சுல்தான் போன்றவர்களை உதாரணமாகச் சொல்லலாம்.திருவிதாங்கூரின் ராணி சேதுலட்சுமிபாயும் நான் அறிந்த சிறந்த உதாரணம்.

ஏனென்றால் அரசிகள் போர்வெறி இல்லாதவர்களாகவே இருந்திருக்கிறார்கள். பழங்காலத்தில் போர்வெறி இல்லாத ஒரு தேசம் இயல்பாகவே நாகரீக வளர்ச்சிபெற்றுவிடும். பேகம்கள் வணிகமுக்கியத்துவமும் அதிகாரக் குவிப்பும் இல்லாத போபாலை ஒரு முக்கியமான நகரமாக வளர்த்தெடுத்தார்கள். போபால் மிக வரண்ட நிலத்தில் உள்ளது. பேகம்களினால் வெட்டப்பட்ட ஏராளமான சிறு ஏரிகளினால்தான் அது நகரமாக மாற முடிந்தது. அவர்கள் உருவாக்கிய பல்வேறு சந்தைகளும் நகரத்தை அப்பகுதியின் மையமாக ஆக்கின என்கிறார்கள். பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக வந்த சிந்திகள் பெருவாரியாக போபாலில் குடியேறினார்கள். அவர்கள் இந்நகரத்தை ஒரு வணிகத்தலைநகரமாக ஆக்கினார்கள்.

போபாலில் நின்றுபார்க்கும்படி ஏதுமில்லை. ஆனால் எல்லா நகரங்களுமே சில்நாள் வாழ்ந்து பார்க்க ஏற்றவைதான். வெறுமே நகரத்தைப் பார்த்தபடி கடந்துசென்றோம். நவீன இந்தியநகரங்களுக்கே உரிய பிரம்மாண்டமான செல்போன் விளம்பரங்கள். புதிய கார்கள். புதிய ஷோரூம்கள். வேகவேகமாகச் செல்லும் நடுத்தரவற்க மனிதர்கள். இருபத்திரண்டு வருடம் முன்பு நான் போபாலுக்கு வந்திருக்கிறேன். அப்போதும் இதுவேகமான வணிகநகரமாகவே இருந்தது. கநாசுவின் கவிதை ஒன்று உண்டு, ‘கஞ்சன்ஜங்கா’ என்று. முப்பதுவருடம் முன்பு கஞ்சன்ஜங்காவைப் பார்த்தென், இப்போதும் பார்க்கிறேன்.அப்படியேதான் இருக்கிறது, என் கண்கள் மட்டும் சற்று மங்கிவிட்டன என்று.

சாஞ்சிக்கு மாலை ஆறு மணிக்கு வந்துசேர்ந்தோம். அரசு விடுதிக்குச் சென்று அறை கேட்டோம். நான்குபேர் படுக்கும் அடுக்குப்படுக்கை அறை மட்டுமே இருந்தது. மேலும் மூவர் படுக்க தலைக்கு நூறு ரூபாய் கேட்டான் அங்கிருந்த ஆபீசர். அவருக்கு ஒரு சொல் ஆங்கிலம் புரியாது. பியூன் வந்து நூறு ரூபாய் என்றதும் இவனும் நூறு என்றான். வேண்டாம் என்று வந்துவிட்டோம். ஜெயஸ்வால் விடுதி என்ற விடுதிக்கு வந்தோம். இது விடுதியே அல்ல. ஜெயஸ்வால் தன் வீட்டு மாடியில் நான்கு அறை கட்டி வாடகைக்கு விட்டு சாப்பாடும் போடுகிறார்.. நல்ல அறைகள். தலைக்கு நூறு ரூபாய். இரு அறைகளில் ஆறு படுக்கைகள்தான். ஆனால் எழுநூறு ரூபாய் தரவேண்டும். ஜெயஸ்வாலிடம் அதைப்பற்றி விவாதிக்க முடியாது. எப்போதும் எவரையும் ஏமாற்ற தயராக இருக்கும் வணிகர்கள் மத்தியப்பிரதேசத்தின் ஓர் இயல்பு போலும்.

Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic

முந்தைய கட்டுரைஇந்தியப் பயணம் 12 – கரீம் நகர், தர்மபுரி
அடுத்த கட்டுரைஇந்தியப் பயணம் 14 – சாஞ்சி