இந்தியப் பயணம் 12 – கரீம் நகர், தர்மபுரி

வரங்கல்லை பார்த்து முடிக்க மிகவும் தாமதமாகியது. இந்தப்பயணத்தில் இடங்களை அதிவேகமாகப் பார்வையிடுவது என்ற விதியை வைத்திருந்தோம். இருபதுநாளில் இந்தியா என்பது ஒருசோற்றுப்பதம்தான். பெரும்பாலான இந்திய நகரங்கள் ஆழமான வரலாற்றுப் பின்னணி கொண்டவை. சிற்றூர்களில்கூட பெரும் நகரங்கள் பண்பாடுகள் இருந்து மறைந்திருக்கும். உதாரணமாக இப்போது நாங்கள் இன்னும் ஆந்திர எல்லையை தாண்டவில்லை. ஆனால் மூன்று பேரரசுகளின் ஆட்சிநிலங்களைத்தாண்டி வந்திருக்கிறோம். ஹொய்ச்சள, விஜயநகர, காகதீய பேரரசுகளின் நிலங்கள். ஆகவே தொட்டுத் தொட்டுச் செல்லவேண்டியிருக்கிறது. அத்துடன் நகரங்களை பார்ப்பதென்பது எளிய விஷயமல்ல. என்னதார் கார் இருந்தாலும் வெகுதூரம் நடக்கவேண்டியிருக்கிறது. நிழலே இல்லாமல் வெறும்கல் இளவெயிலில் வெறித்துக்கிடந்த வரங்கல் கோட்டைமீது ஏறி இறங்குவதற்குள் மூச்சுவாங்கியது. இத்தனைக்கும் தக்காணத்துக்கு மேலே எப்போதும் மழைமேகங்கள் கறுத்து நிற்கும் மாதம் இது. அடிக்கடி மழைத்தூறல்கள் உண்டு. மேமாதத்தில் வந்திருந்தால் இங்கே தீயே வெயிலாகக் கொட்டிக்கொண்டிருக்கும்.

இந்த பெரும் திறந்த நிலத்தைப்பார்க்கையில் ஓர் எண்ணம் ஏற்படும். இந்த நிலத்தில் ஏன் இத்தனை படைநகர்வுகள் நடந்தன, ஏன் இத்தனை கோட்டைகள் அமைந்தன? இன்றைய சூழலை வைத்து அக்காலகட்டத்தை அளவிடக்கூடாது. உண்மையில் மிதமான மழைபெறும் நிலங்களே அக்காலகட்டத்தில் முக்கியமானவை. மக்கள் தொகை குறைவாக இருந்த அந்நாட்களில் அங்கே ஒருபோக வேளாண்மை செய்தும் ஆடுமாடுகள் மேய்த்தும் மக்கள் வாழ்ந்தார்கள். மழை அதிகமான பகுதிகள் அடர்ந்த காடுகளாக இருந்தன. நவீன காடழிப்புமுறைகள் இல்லாத அக்காலகட்டத்தில் காடுகள் பாலைவனங்களைப்போலவே உயிர்வாழத்தகுதியற்றவையாக இருந்தன. மேலும் காடுகள் வழியாக பெரும்படைகள் நகர முடியாது. ஆகவே தென்னிந்தியாவை நோக்கி வந்த எல்லா படையெடுப்புகளும் இந்த திறந்த நிலம் வழியாகவே நடந்தன. இந்த திறந்த நிலத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அக்கால ஆட்சியாளர்களுக்கு இருந்த சிறந்த வழிமுறை என்பது அவ்வெளியின் நடுவே ஓங்கிய கோட்டை ஒன்றைக் கட்டுவதுதான்.

வரங்கல்லில் இருந்து மதியம் கிளம்பினோம். அந்திச்சிவப்பில் ஒளிர்ந்த விரிநிலத்தில் தூரத்தில் தெரிந்த குன்றுகளில் கோட்டைகள் சிறிதாகத்தெரிவதைப் பார்த்துக்கொண்டே சென்றோம். கரீம் நகரை பின்மாலையில் சென்றடைந்தோம். தெலுங்கானாபகுதியின் வடக்கே இருக்கும் கரீம்நகர் அடிக்கடி நாம் செய்திகளில் கேள்விபப்டும் இடம், நக்சலைட் பிரச்சினைகளுக்காக. கரீம்நகரை மிக வரண்ட நிலமாக நெடுநாள் முன் பார்த்த நினைவு. இப்போது கண் ஏமாற்றியது. அடர்பசுமைநிறமான வயல்கள் எங்கும் பரந்துகிடந்தன. சோளம், மக்காச்சோளம், கரும்பு அவற்றில் தழைத்து காற்றில் அலையடித்தன. உண்மையில் இந்தப்பயணத்தில் எங்களுடன் வரும் ஒர் அன்னியநாட்டவர் இந்தியா பசுமை தழைக்கும் ஒரு பூமி என்றே எண்ணுவார். காரணம் இது வடகிழக்குப் பருவமழை முடியப்போகும் நேரம். ஈரோட்டிலிருந்தே மழை. வரண்டு கிடக்கும் தருமபுரி மாவட்டம் பச்சப்ப்பசேலென்றிருந்தது. ஏன் ராயலசீமாகூட பச்சைப்பசேலென பொலிந்தது. இந்த நிமிடம் வரை எங்கள் தலைக்குமேல் எப்போதுமே கார்மேகவானமே பரவியிருக்கிறது. பயணம் முழுக்க இளம்குளிர்காற்றும் பசுமையை மேலும் துலங்கச்செய்யும் மங்கலான ஒளியும்தான்.

பல இடங்களில் மழையைக் கடந்து வந்தோம். இது ஒரு முக்கியமான அனுபவம். மேகம் திரண்ட வான்சரிவை நோக்கி எங்கள் கார் ஓடுகிறது. காற்றில் குளிர் அதிகரிக்கிறது. சிறுதுளிகள் மேலே தெறிக்கின்றன. தூரத்தில் நிலவெளியில் மேகங்களில் இருந்து கரிய விழுதுகள் போல அம்ழை இறங்கி அசையாமல் நிற்பதைக் காண்கிறோம். காரில் புகும் காற்று அருவிநீர் போல உக்கிரம் பெறுகிறது. சட்டென்று மழைக்குள் புகுகிறோம். அருவிக்குள் கார் நுழைவதைப்போல. கார்கதவுகளை மூடிக்கொள்கிறோம். காருக்குள் ஒன்றுமே தெரிவதில்லை.த்துடைப்பான்கள் ஆவேசமாக ஆடும் முன் கண்ணாடிக்கு அப்பால் எதிரே வரும் வண்டிகளின் நீரில் கரைந்த முகவிளக்கொளி. கார் செல்கிறதா நிற்கிறதா என்றே ஐயம் வரும். பின்பு சட்டென்று அருவிக்கு அப்பால் சென்றுவிடுகிறோம். கொஞ்ச நேரம் ஈரம். பின்னர் மழையா பெய்ததா என்றே கேட்கவைக்கும் உலர்ந்த சாலை, உலர்ந்த கூரைகள்…. ஒரு மழை அதிகபட்சம் பத்து கிலோமீட்டர் பரப்புதான் இருக்கிறது. நாங்கள் இருபது நிமிடங்களில் அதைக் கடந்துவிடுவோம்!

மழைதிரளும் சூழலில் இருபக்கமும் குன்றுகளையும் பச்சை நிலத்தையும் பார்த்துக்கொண்டு காரில்செல்வது உற்சாகமான அனுபவமாக இருந்தது. ராமப்பா ஏரியின் கரையில் இறங்கி நின்று நீரை பார்த்தோம். அடர்த்தியான புளிமரங்கள் தழைத்து நின்றன. இளம்புளி பறித்து தின்றோம். எங்கள் பயண திட்டங்களில் முக்கியமான மூன்று விஷயங்கள். ஒன்று முடிந்தவரை உள்ளூர்க்காரர்களுடன் பேசுவது, இரண்டு அவ்வப்போது இறங்கி உள்ளே நடந்துசெல்வது. மூன்று நீர் உள்ள இடங்களில் குளிப்பது. போகும் இடத்து வாழ்க்கையில் ஒரு துளியை அள்ளிவந்த அனுபவம் அதன்மூலம் கிடைக்கிறது.

ஆந்திராவில் கிராமங்கள் மிக மிக சிதறி தனித்துக் கிடக்கின்றன. ஆகவே இங்கே பொதுப்போக்குவரத்து லாபகரமாக இல்லை போல. சாலைகளில் பேருந்துகளைப் பார்ப்பது மிகமிக அபூர்வம். போக்குவரத்துக்கு மும்மியமான வாகனமாக இருப்பது பைக்கின் டீசல் எஞ்சின் உள்ள பெரிய ஆட்டோ ரிக்ஷாக்கள். அவற்றில் ஒன்றில் சாதாரணமாக இருபதுபேர் செல்கிறார்கள். ஆணும்பெண்ணும் குழந்தைகளும். ஆந்திர கிராமங்களில் கடுமையான வறுமை உள்ளது. காட்டுக்கிளைகளை முடைந்து செய்யப்பட்ட தட்டிமீது செம்மண் குழைத்துப்பூசி சுவர்கள் கட்டி புல்கூரை வேய்ந்த சிறு குடிசைகள். சிலசமயம் வட்டவடிவிலும் எண்கோண வடிவிலும் கூட குடிசைகள் இருந்தன. ஓட்டுவீடுகள் இன்னும் பரிதாபகரமானவை. மூங்கில் பரப்பு மீது குழாய்வடிவ நாட்டு ஓடுகளை அடுக்கிக் கட்டப்பட்ட தாழ்வான குடிசைகள் அவை. மக்கள் கிழிசல்கள் உடுத்து மெலிந்து கன்னங்கள் ஒட்டி பஞ்சை விழிகளுடன் போகும் வாகனங்களைப் பார்த்து அமர்ந்திருக்கிறார்கள். தெலுங்கானா ராயல சீமாவை விடவும் வறுமையானது.

கைவிடப்பட்ட கிராமங்களைக் கண்டு செல்லும்போது இங்கே வன்முறை உருவாவதில் ஆச்சரியமேதும் இல்லை என்ற எண்ணம் ஏற்பட்டது. கரீம்நகர் மானையார் ஆற்றின் கரையில் உள்ளது. இது கோதாவ்ரியின் கிளை ஆறு. இப்பகுதியை ஆட்சி செய்த சையது கரிமுல்லா ஷா சாகேப் குவாத்ரி என்பவரின் பெயரிலிருந்து பெறப்பட்ட பெயர். கரீம் நகர் பொதுவாக பழங்குடிகளின் மண். இப்பகுதிகளின் வரண்ட குறுங்காடுகளில் அவர்கள் வேட்டைச்சமூகங்களாகவும் மேய்ச்சல்குழுக்களாகவும் சிதறி வாழ்கிறர்கள். கோண்டுகக்ள், கோயர்கள் செஞ்சுக்கள் என்று முப்பதுக்கும் மேற்பட்ட பழங்குடிகளும் முண்டா மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த நாலைந்து சிறுமொழிகளும் இங்கே இவர்களால் பேசபப்டுகின்றன.

இப்பயணத்தில் நாங்கள் உணர்ந்த ஒரு விஷயம் ஆந்திரா எத்தனை பெரிய மாநிலம் என்பதே. தெலுங்கு பேசும் மக்கள் எண்ணிக்கையில் மிக அதிகம். தமிழ்நாடு கர்நாடக பகுதிகளில் வாழ்பவர்களையும் சேர்த்துக்கொண்டால் இன்னும் அதிகம் மத்திய இந்தியாவெங்கும் பரந்துகிடக்கும் இந்த மாபெரும் நிலப்பரப்பை சமமாக ஆள்வது கடினமே. குறிப்பாக வளம்மிக்க கிருஷ்ணா படுகையில் உள்ள கம்மா, காப்பு இன வேளாண் குடிகள் செல்வத்தையும் அதிகாரத்தையும் கைகளில் வைத்துக் கொண்டு இந்நிலத்தை ஆண்டுவருகிறார்கள். அதிகாரப்பரவல் இல்லாத காரணத்தால் தெலுங்கானா முழுமையாகவே கைவிடப்பட்ட நிலையில்தான் உள்ளது. அதனாலேயே இங்கே கிளர்ச்சிகள் உருவாயின. 1951ல் தெலுங்கானாக்கிளர்ச்சி எனப்படும் இடதுசாரிப்புரட்சி வெடித்தது. தெலுங்கானா தனி நாடுபோலவே துண்டிக்கப்பட்டது. அந்தப்போராட்டம் சர்தார் வல்லபாய் பட்டேலால் நசுக்கப்பட்டது. ”வீரத்தெலுங்கானா” என்ற பி.சுந்தரரய்யாவின் பெரும் நூல் தமிழாக்கத்தில் கிடைக்கிறது. இப்போராட்டத்தைப்பற்றிய மிகச்சிறந்த ஆவணம் அது.

ஒடுக்கப்பட்ட அந்த கிளர்ச்சியின் சினமே இடதுசாரி தீவிரவாதமாக வடிவம் கொண்டது. இப்போது அது தெலுங்கானா என்ற தனிமாநிலக் கோரிக்கையாக வடிவம் கொண்டுள்ளது. தெலுங்கானா தனி மாநிலமாகப்பிரிவது அதன் வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்ற எண்ணம் இப்பகுதி வழியாகச் செல்லும்போது வலுவாகவே உருவாகிறது. ஆனால் ஆந்திராவின் அதிகார ஜாதிகள் அதை அனுமதிப்பார்களா என்பது ஐயமே. சந்திரசேகர ராவ் போன்ற தெலுங்கானாக் கிளர்ச்சியாளர்கள் அதிகார அரசியலுக்குள் விழுந்துவிட்டார்கள். விஜயசாந்தி போன்றவர்கள் அதை கோமாளிக்கூத்தாக மாற்றிவிட்டார்கள். தர்மபுரியில் இரவு தங்கினால் என்ன என்பதே திட்டமாக இருந்தது. ஆனால் கரீம்நகரில் தங்குவதே சிறந்தது என்றார்கள். அப்பகுதியில் மாவோ கிளர்ச்சியாளர்கள் வண்டிகளை மறிப்பதுண்டாம்.

ஆனால் நாங்கள் இருட்டுவதற்குள் தர்மபுரிக்கு வந்துசேர்ந்தோம். வரும் வழியில் ஒரு சாமியார் பைக்கில் சென்றார். அகோரி மரபைச் சேர்ந்தவர். கரிய உடை அணிந்திருந்தார். நாங்கள் சந்த்த்ததிலெயே நல்ல ஆங்கிலம் பேசியவர் அவர்தான். இனிமையாகப்பேசி அவ்ழி சொன்னார். வசந்தகுமார் ஃபோட்டோ எடுத்த போது புன்னகையுடன் ஒரு கணம் நின்றார். வாழ்த்தி விடைபெற்றார்

தருமபுரியில் நரசிம்ம மூர்த்திக்கு கட்டப்பட்டுள்ள ஆலயம் தொன்மையானது. சிரப்பும் வாய்ந்தது. தர்மபுரி ஒருகாலத்தில் வைதீகபிராமணர்களின் மிகப்பெரிய மையமாக இருந்துள்ளது. தொன்மையான சம்ஸ்கிருதப்பள்ளி இப்போதும் செயல்பட்டுவருகிறது. இங்கே கோதாவரி ஓடுகிறது. வழக்கமாக ஆந்திர நதிகள் கிழக்குநோக்கி ஓடும்போது இங்கே கோதாவரி தெற்கு நோக்கி ஓடுவதனால் அதை தட்சிணவாஹினி என்கிறார்கள். இப்பகுதியை ஆண்ட தர்மவர்மன் என்ற மனன்ரின் பெயரால் இந்த ஊர் இவ்வாறு அழைக்கபப்டுகிறது. சிவனும் விஷ்ணுவும் ஒரே ஊரில் இருபப்தனால் இதை ஹரிஹர ஷேத்ரம் என்றும் சொல்வார்கள். காகதீய ஆட்சிக்காலம் வரை தர்மபுரி செழித்திருந்தது. பின்னர் பாமினி சுல்தான்களின் ஆட்சிக்கு போய்விட்டது.

நைஜாம் ஆட்சிக்காலத்தில் தர்மபுரியை புரந்துவந்த பொருளியல் கட்டமைப்பு தகர்ந்தது. அப்பகுதியில் இருந்த எல்லா கோயில்களும் இடிக்கபப்ட்டு கைவிடப்பட்டு மறைந்தன. ஆனால் தருமபுரி பிராமணர்கள் பிடிவாதமாக அந்த நகரத்தை தக்கவைத்தனர். மழைமாசங்களான சாதுர்மாஸ்யம் தவிர பிற மாதங்கள் அவர்கள் ஊர் ஊராகச் சென்று தானம்பெற்று அந்தசெல்வத்தை தங்கமாக மாற்றி பற்களாகக் கட்டிக் கொண்டும் விழுங்கி குடலுக்குள் வைத்துக்கொண்டும் திரும்பி வந்து சேர்வார்களாம். தமிழ்நாடு வரைகூட வந்து தானம்பெற்றிருக்கிறார்கள். வறுமை மற்றும் கைவிட்டுவிட்டுச் செல்லும் வாழ்க்கைகாரணமாக தர்மபுரி பிராமணர்களுக்கு பெண்கள் கிடைப்பது கஷ்டமாம். ஆகவே அவர்கள் பெரும்பாலும் பெண்களை தானமாகப்பெறுவார்கள். நற்பெயரின்மை உடலூனம் நோய் காரணமாக மணமாகாதுள்ள பெண்களை அவர்கள் விரும்பி பெற்றுக் கொண்டிருக்கிறார்கல். அப்பெண்களை அவர்கள் அங்கே கொண்டுவந்துசேர்ப்பதும் எளிது. ஊனமுற்ற பெண்ணை தருமபுரிக்கு தள்ளிவிடுவது என்ற சொல்லாட்சி உண்டாம். அவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து பெண்ணெடுப்பதும் வழக்கமாம். அங்குள்ள தர்மபுரி என்று எண்ணி அவர்களும் பெண் கொடுப்பார்களாம். சாதுர்மாஸ்யத்தில் நாலைந்து விருந்துகள் நடத்தி நன்றாக சாப்பிட்டு ஆசையை தீர்த்துக் கொள்வார்கள்

இப்போது தர்மபுரி மீண்டும் வைதிக முக்கியத்துவம் கொண்ட ஊராக உள்ளது. கோதாவரியில் நீராடுவது முக்கியமான சடங்காகையால் நிறைய யாத்ரீகர்கள் வருகிறார்கள். நாங்கள் சென்றது மழைக்காலமாதலால் கூட்டமில்லை. நேராக ஊருக்குள்சென்றோம். பழைய பாணியிலான வீடுகள் நிறைய இருந்தன. வளையோடுகள் போடப்பட்ட சிறிய ஆனால் அழகிய வீடுகள். மழைபெய்து ஊரே சொதசொதவென்றிருந்தது. கோயிலுக்குச் சொந்தமான விடுதியில் தங்கினோம். இரு இரட்டை அறைகள் ரூ 120 வீதம். வசதியான அறைகள்தான். நான் துணிகளை துவைத்துப் போட்டேன். இரவு ஒரு மணி வரை நிகழ்ச்சிகளை எழுதினேன்

மற்ற நண்பர்கள் சாப்பிடச்சென்றார்கள். மதுரைக்காரரான ராமர் சாலையோர உணவுக்கடை போட்டிருந்தார். தட்டி போட்டு சிறு கூரை. இட்டிலி தோசை எல்லாம் கொடுத்தார் என்றார்கள். எனக்கு வாழைப்பழம் வாங்கி வந்தார்கள். ராமரின் அப்பா இங்கே வந்து சாலையோர உணவுவணிகம் செய்தபவர் பையன்களை எல்லாம் கொண்டுவந்தாராம். எல்லாருமே இங்குள்ள ஊர்களில் இதே தொழில்தான் செய்கிறார்கள். இதை நாங்கள் கவனித்தோம். ஆந்திரா முழுக்க தமிழர்கள் தொழில் வணிகங்களில் ஈடுபடாத சிற்றூர் கூட இல்லை. பெரும்பாலானவர்கள் மதுரை சிவகாசி விருது நகர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். வரண்டநிலம் அது. அங்கே பிழைப்புக்கு வழியில்லாமல் இடம்பெயர்ந்தவர்கள். வந்த இடங்களில் செட்டும் சிக்கனமுமாக வணிகம் செய்து சற்று நல்ல நிலையில்தான் இருக்கிறார்கள்.

இது ஒரு முக்கியமான விஷயம். அறுபதுகளில் மலையாளிகளுக்கு உருவான கட்டாயம் இப்போது இவர்களுக்கு உருவாகியிருக்கிறது. இங்கு ஆந்திராவில் உள்ள ஏழைகள் பிற இந்திய கிராமத்தவர் போல தங்கள் சிறிய வாழ்க்கைக்குள் மன அளவில் பொருந்தி கனவுகள் இல்லாமல் திட்டங்கள் இல்லாமல் வாழ்கிறார்கள். சராசரி கிராமத்து தமிழருக்கு நடுத்தர வற்கத்துக்குரிய கனவுகள் வந்துவிட்டன. பிள்ளைகளை ஆங்கிலம் படிக்க வைக்க வேண்டும், பணம் சேர்க்கவேண்டும், நல்ல எதிர்காலம் வேண்டும் என்ற கனவுகள். ஆகவே அவர்கள் புது வாய்ப்புகளை தேடி இடம்பெயர்கிறார்கள். டெல்லி மும்பை கல்கத்தா பெங்களூர் ஹைதராபாத் என பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை.

ஆகவே ஒரு அகில இந்திய கண்ணோட்டமும் அதற்கேற்ற அரசியல் நிலைபாடுகளும் நம்முடைய அரசியல் வாதிகளுக்கு தேவைப்படுகிறது. இந்தியாவில் ஒருபோதும் பிரிவினைவாதம் பேசகூடாதவர்கள் தமிழர்களே. அது பிற மாநிலங்களில் வாழும் லட்சக்கணக்கான தமிழர்களைஅடகு வைத்துச் செய்யபப்டும் அதிகாரச் சூதாட்டம். காவேரி பிரச்சினையை அதிகார மட்டத்தில் தீர்க்க பற்பல வழிகள் இருந்தும் தெருவுக்குக் கொண்டுவந்த தமிழ் அரசியல்வாதிகள் கர்நாடகத்தின் நிலம் வாங்கி வாழ்ந்த பல்லாயிரம் தமிழ்ர்களை மூன்று தலைமுறை உழைப்பை இல்லாமலாக்கி அனாதையாக்கினார்கள். அந்த நிலை பிற மாநிலத் தமிழர்களுக்காவது வராமலிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் சிறிய பிழைப்பு அரசியல்வாதிகளும் நடிகர்களும் போடும் எளிய கூச்சல்கள் கூட பாரதூரமான விளைவுகளை உருவாக்கும். உள்ளூரில் பிழைக்கவும் வழியில்லை போகிற இடத்திலும் பிழைக்க விடமாட்டார்கள் அரசியல்வாதிகள் என்றால் எவ்வளவு கொடுமை. இப்போது இங்குள்ள தமிழர்கள் இங்குள்ள மக்களுடன் இரண்டறக் கலந்து வாழ்கிறார்கள்.

காலையில் தர்மபுரி கோயிலுக்குச் சென்றோம். மிகச்சாதாரணமான சமீபத்திய கோயில். ஆனால் ஒரு மண்டபம் மட்டும் மிகத்தொன்மையானது–சிவப்புக்கல்லால் காகதீய பாணியில் கட்டப்பட்டது. அதுகூட எடுத்துக்கட்டப்பட்டதுதான். தூண்கள் அளவுக்கு கூரை பழைமையானதல்ல. சீக்கிரமே கிளம்பிவிட்டோம். குடிநீர் வாங்குவதற்கு ராமர் ஏற்பாடு செய்தார். நாக்பூர் வழியில் ஒரு சிற்றூரில் ராமரின் உறவினர் நடத்தும் கடைக்குச் சென்றபோது அவர் ஒரு பையனை அனுப்பி சுத்தநீர் தொழிற்சாலையில் இருந்தே வாங்கிக் கொடுத்தார். இருபது ரூபாய்க்கு இருபது லிட்டர். அவரது மனைவிக்கு எங்களைப் பார்த்ததில் பெரு மகிழ்ச்சி.

Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைஇந்தியப் பயணம் 13 – நாக்பூர் போபால்