வெண்முரசு விழா – மஹாபாரதக் கலைஞர்கள்

தொன்றுதொட்டு மகாபாரதக் கதையை நிகழ்த்துகலையாக நடத்தி வரும் ஐந்து மூத்த மகாபாரதப் பிரசங்கியர் வெண்முரசு புத்தக வெளியீட்டு விழா – 2014 -இல் கௌரவிக்கப்பட இருக்கிறார்கள். ஒரு இடையறாச் சங்கிலியின கண்ணிகளை கௌரவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

முனைவர் இரா. வ. கமலக்கண்ணன்

காஞ்சிபுரத்தில் வசித்துவரும் இவர் பள்ளியில் தலைமையாசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். ஆர்வத்தால் தாமே பாரதம், இராமாயணம் முதலிய இலக்கியங்களை ஆழமாகக் கற்றுத் தேறியவர். வைணவ ஈடுபாடு உடையவர். ஆழ்வார் பாடல்களில் உள்ள ஆழமான பயிற்சி காரணமாக நாலாயிர திவ்வியப் பிரபந்தத்திற்கு எளிய உரை எழுதியவர். பத்துக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தற்போது செவ்வைச்சூடுவார் பாகவதத்திற்கு உரை எழுதி முடித்துள்ளார். ஐம்பது ஆண்டுகளாக பாரதச் சொற்பொழிவு ஆற்றிவருகிறார். முதிர்ந்த கல்விச்செல்வத்தால் எதையும் ஆய்வு நோக்கில் அணுகுபவர்.

திரு. கமலக்கண்ணன்
திரு. கமலக்கண்ணன்

தொடர்புக்கு:

முனைவர் இரா. வ. கமலக்கண்ணன்
பாரதச் சொற்பொழிவாளர்
8 கபிலர் சாலை
அழகானந்தம் தெரு
செவிலிமேடு
காஞ்சிபுரம் – 631502

திரு வெ. கிருஷ்ணமூர்த்தி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் என்ற ஊருக்கு அருகில் வசித்து வருபவரான இவர் சுமார் நாற்பதாண்டு காலமாக பாரதச் சொற்பொழிவு நிகழ்த்திவருபவர். பாரதம் மட்டுமல்லாமல், இராமாயணம், கந்தபுரணம் முதலிய பல இலக்கியங்களையும் சொற்பொழிவு செய்துவருபவர். வளமான குரலும் நல்ல இசையும் வாய்க்கப் பெற்றவர். திருமுருக கிருபானந்த வாரியாரால் பாராட்டப்பெற்றவர். பாரத நூல்களில் விரிவான ஆழமான பயிற்சி பெற்றவர். நினைத்தவுடன் செய்யுள் இயற்றும் ஆற்றலுடையவர். இன்று வாழும் சிறந்த சொற்பொழிவாளர்களில் ஒருவர். பல விருதுகளும் பாராட்டுகளும் பெற்றவர்.

திரு வெ. கிருஷ்ணமூர்த்தி
திரு வெ. கிருஷ்ணமூர்த்தி

தொடர்புக்கு:

திரு வெ. கிருஷ்ணமூர்த்தி
பாரதச் சொற்பொழிவாளர்
286 பிரதான சாலை
மேல்பள்ளிப்பட்டு, செங்கம்,
திருவண்ணாமலை மாவட்டம்

திரு வ. தேவன்

காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள குண்டையார் தண்டலம் என்ற ஊரைச்சேர்ந்த இவர் வரதப்பா வாத்தியார் என்ற சிறந்த தெருக்கூத்து ஆசிரியரின் மகன். இவரது தந்தையிடமும், கலைமாமணி விருதுபெற்ற சித்தப்பா பாலகிருஷ்ணன் அவர்களிடமும், கலைமாமணி விருதுபெற்ற அண்ணன் தட்சிணாமூர்த்தி அவர்களிடமும் பயிற்சி பெற்றவர். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தெருக்கூத்து நிகழ்த்தி வருபவர். இன்று வாழும் கூத்தர்களில் மிகவும் புகழ்பெற்றவர். இவர்களின் குழுவில் முக்கிய வேடங்களை தரிக்கக் கூடியவர், பாரதம், இராமாயணம் முதலிய எல்லாக் கூத்துகளிலும் திறம்பட நிகழ்த்தக் கூடியவர். அருச்சுனன் தவம் கூத்தில் சிறந்த நிபுணத்துவம் பெற்றவர். கலைச்சுடர்மணி விருதும் பெற்றவர்.

திரு வ. தேவன்
திரு வ. தேவன்

திரு வ. தேவன்
கூத்துக்கலைஞர்
மென்னலூர் அஞ்சல்
குண்டையார் தண்டலம் – 631 702
செய்யாறு தாலுகா
திருவண்ணாமலை மாவட்டம்

திரு நா. இராமலிங்கம்

செய்யாறுக்கு அருகில் இருங்கூர் என்ற ஊரைச்சேர்ந்த கூத்து வாத்தியாரான இவர், புகழ் பெற்ற கூத்து வாத்தியாரான திரு நாராயணசாமி என்பவரின் மகன். இவரது மகனையும் கூத்துக்கலையில் நன்கு வளர்த்துவிட்டுள்ளார். சிறந்த கூத்தரான இவர் கண்ணன் வேடத்திற்கு பொருத்தமானவர். அருச்சுனன் தவம் என்ற கூத்தை மிகவும் சிறப்பாக நிகழ்த்துபவர். இரணியன், அபிமன்யு, துச்சாதனன் முதலிய வேடங்களில் சிறப்பாக வெளிப்படக் கூடியவர். இன்று வாழும் சிறந்த கூத்தர்களில் ஒருவர். தெருக்கூத்துக் கலைக்கு அவசியமான குரலும் அடவுகளும் நன்கு அமையப்பெற்றவர்.

திரு நா. இராமலிங்கம்
திரு நா. இராமலிங்கம்

தொடர்புக்கு:

திரு நா. இராமலிங்கம்
தட்டச்சேரி கிராமம்
இருங்கூர் அஞ்சல்
ஆற்காடு வட்டம்
வேலூர்மாவட்டம்

திரு. ஏ.கே. செல்வதுரை

காஞ்சிபுரத்தில் வாழ்ந்துவரும் இவர் சுமார் முப்பது ஆண்டுகளாகப் பாரதச் சொற்பொழிவுகளை நிகழ்த்திவருபவர். இராமாயணம், பெரியபுராணம் முதலிய கதைகளையும் சொற்பொழிவாற்றுபவர். சொற்பொழிவுடன் வில்லுப்பாட்டு, நாடகங்கள், கூத்து முதலிய துறைகளிலும் வல்லவர். கம்பீரமான குரல் வளம் கொண்டவர். பல விருதுகளையும் பெற்றவர். தொலைக்காட்சி, வானொலி முதலிய ஊடகங்களிலும் நிகழ்ச்சிகளை நடத்திவருபவர். நேர்முகவருணனை செய்துவருபவர். நாடகங்களையும் இசைப்பாடல்களையும் இயற்றும் ஆற்றல் கொண்டவர். நகைச்சுவையாக சொற்பொழிவு ஆற்றுபவர். பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை இயற்றியவர். சித்திரகுப்தர் என்ற மாத இதழை நடத்திவருகிறார்.

திரு. ஏ.கே. செல்வதுரை
திரு. ஏ.கே. செல்வதுரை

ஏ.கே. செல்வதுரை
பாரதச் சொற்பொழிவாளர்
17 D / 68 நரசிங்கராயர் தெரு
பெரிய காஞ்சிபுரம் – 631502

 

பின் குறிப்பு: இவர்கள் குறித்து மேலதிக தகவல் தேவைப்படுபவர்கள், பாலாவை 9840608169 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.

முந்தைய கட்டுரைவெண்முரசு வாசகர் வாழ்த்து
அடுத்த கட்டுரைவெண்முரசு நூல்கள் விழாவில்