செப்டம்பர் எட்டாம்தேதி மாலை வரங்கலுக்கு எட்டு கிமீ முன்பாக உள்ள ஹனுமகொண்டா என்ற ஊருக்கு வந்து சேர்ந்தோம். நினைத்ததைவிட தாமதம். வரும் வழியில் கடும்பசியில் ஓட்டல்கள் உண்டா என்று தேடியபடியே வந்தோம். ஒரு பனையேறும் தொழிலாளி கள்ளுடன் செல்வதைக் கண்டு வண்டியை நிறுத்தினோம். அவரிடம் கள் இல்லை. மீண்டும் கிளம்பி சற்று தூரம் சென்றபோது தோட்டத்துக்கு உள்ளே சிலர் பனைமரத்தடியில் கூடி கள் குடிப்பதை செந்தில் பாத்த்து சொன்னார். வண்டியை நிறுத்தி அவர்களை நோக்கிச் சென்றோம். போலீஸ் களையில் செந்திலும் வசந்தகுமாரும் வருவதைக் கண்டு அவர்கள் தயங்கினார்கள். கள் கேட்டபோது வாயெல்லாம் சிரிப்பு.
ஆந்திராவில் கள் எடுக்க அனுமதி உண்டு. கள்ளை எடுப்பவர்கள் மட்டுமே விற்க வேண்டும். அதற்கு உலோகத்தில் லைசன்ஸ் வில்லை கொடுக்கிறார்கள். போனதடவை நான்
வசந்தகுமார் யுவன் சந்திரசேகர் மற்றும் சண்முகம் அமராவதி அவ்ழியாக ஸ்ரீசைலம் வந்தபோது தூய கள்ளின் மணத்தை நான் அறிந்து கூவினேன். உடனே வண்டியை நிறுத்திவிட்டு பார்த்தபோது இருவர் காவடி கட்டி கள் டின்னை தூக்கிக் கொண்டு வந்துகொண்டிருந்தார்கள். ஆணழகர்கள் இருவரும். கள் வாங்கினோம். மூவரில் சண்முகம் மட்டுமே கள்ளை சிலமுறை குடித்திருக்கிறார். பிற இருவரும் கள்ளை பார்த்ததே இல்லை. நான் பனைபொருட்களில் பிறந்து வளர்ந்தவன். நானே பதமறிந்து நன்றாக கருப்பட்டி காய்ச்சுவேன். கள்ளை முகர்ந்து நோக்கி மிகச்சிறந்த கள் என்றேன்.
நல்ல பனங்கள் ஆல்ஹலால் மணமும் புளிப்பு மணமும் பதநீரின் இனிப்புமணமும் சரியானபடி கலந்திருக்கும். வாயில் ஜிர்ர் என்று ஒரு பிடிப்பு– நன்றாக புளித்த மோரில் அது உண்டு — இருக்கும். குடிக்கும்போது முதலில் புளிப்பும் பின்னர் மெல்லிய இனிப்பும் வரவேண்டும். கள்ளில் நீர் சேர்த்து வேறு கலவைகள் சேர்த்து மேலும் புளிக்க வைத்தால் அடிநாக்கில் குமட்டும். புளிப்பும் வாடையும் மிக அதிகமாக இருக்கும். நறுங்கள் ஒரு சிறந்த உணவு, நல்ல உணவென்பது நல்ல மருந்து. அது ஒரு மதுபானமே அல்ல. அது நம்மை அடிமையாக்காது. தலைகால் தெரியா போதைக்குக் கொண்டு செல்லாது. பல வருடங்கள் தினமும் குடித்தாலும் கல்லீரலை பாதிக்கவும் பாதிக்காது.
அன்றுகுடித்த கள் எங்கள் நால்வரையும் மிகமிக கவர்ந்துவிட்டது. நல்ல குடிகாரரான சண்முகமே மகிழ்ந்துவிட்டார். அதன் பின் ஆந்திரா என்றாலே கள் என்று வசந்தகுமார் எகிறுவது வழக்கம். இந்தக்கள்ளும் அற்புதமாக இருந்தது. ரஃபீக் குடிக்கவில்லை. கிருஷ்ணன் குடித்துவிட்டு பிடிக்கவில்லை என்று சொன்னார். பிற ஐவரும் வயிறு முட்டக் குடித்தோம். இரண்டு லிட்டர் குப்பிக்கு 30 ரூபாய். பயணம் தொடங்கியபோது பெரிதாக ஒன்றும் தள்ளவில்லை. எனக்கு பொதுவாக நல்லகள் போதை ஏற்றுவதில்லை. வேறு எந்த மதுபானமும் நான் குடித்ததில்லை, ஒரேஒரு முறை பீர் குடித்திருக்கிறேன். சிவா கொஞ்சம் கண்ணசந்து மீண்டார். காருக்குள் ஒரு மகிழ்ச்சி நிலை நிலவியது.
ஐந்துமணிக்குதான் ஓட்டலைக் கண்டுபிடித்துச் சாப்பிட்டோம். காரசாரமான ஆந்திரச் சாப்பாடு. அதன் பின் நீண்ட பயணம்தான். இரவு இருட்டும்வரை இருபக்கமும் விரிந்த பெரும் கற்குவியல் மலைகளையும் சோளமும் நெல்லும் பச்சைசெறிந்து நின்ற வயல்களையும் பார்த்துக்கொண்டே வந்தோம். இது தெலுங்கானா பகுதி. நக்சலைட் ஆதிக்கம் இருந்த இடம். பல இடங்களில் சி.பி.எம்.எல் அமைப்பினரின் சிவந்த நினைவுச்சின்னங்கள் சாலையோரம் தெரிந்தன. சாலை ஓரத்துக் கல்லறைகளில்கூட சில கல்லறைகளில் சிவப்பு.
இரவு அனுமன் கொண்டாவில் தங்கினோம். ஒரு பழைய விடுதி. முந்நூறு ரூபாய் வீதம் இரு அறைகள். நான் அமர்ந்து பயணக்குறிப்புகள் எழுதி நேர் எதிரில் இருந்த இணைய மையத்தில் சென்று இணைய ஏற்றம் செய்தேன். நல்ல தூக்கம். கள்ளின் விளைவாகக்கூட இருக்கலாம்.
செப்டம்பர் ஒன்பதாம் தேதி காலை எழுந்து நேராக அனுமகொண்டாவின் ஆயிரம்தூண் கோயிலுக்குச் சென்றொம். மூன்று ஆயதனங்கள் [தனிக்கோயில்கள்] கொண்ட கோயில் அது. 1163 ல் முதலாம் ருத்ரனால் கட்டப்பட்டது. மூன்று கருவறைகளில் ஒன்றில் மட்டுமே சிவலிங்கம் இருக்கிறது.
உள்ளே பிள்ளையார் வைத்து பூஜைசெய்திருந்தார்கள். காலைநேரத்தில் ஒரு நாதஸ்வர வித்வான் அழகாக வாசித்துக் கொண்டிருந்தார். எனக்கு தெரிந்த சில ராகங்களில் ஒன்று– சிந்து பைரவி. கோயில் முன்பிருந்த நந்தியை வியந்து வியந்து நோக்கிக் கொண்டிருந்தோம். காகதீயர்களின் கன்னங்கருமை பளபளக்கும் கோயில்தான் அதுவும். அடிப்படையில் இது சாளுக்கியக் கட்டிடக்கலையின் பாணியில் அமைந்தது. ஆனால் தூண் அமைப்புகளில் காகதீய முத்திரை உள்ளது. நட்சத்திர வடிவிலான மூன்று கருவறைகள் கொண்ட கோயில் இது. இக்கோயிலின் கல்யாண மண்டபத்துக்கு அடியில் சமீபத்தில் ஒரு கிணறு கண்டடையப்பட்டுள்ளது. பெரியதோர் ஊற்றின்மீது இக்கோயில் அமைக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.
ஒரு அம்மா இட்லி சுட்டு விற்றார்கள். மிளகாய்பொடி இருந்தது. சாப்பிட்டுவிட்டு அறைக்கு வந்து காரை கிளப்பி வரங்கல் சென்றோம். நாமெல்லாம் வாரங்கல் என்றுதான் படித்திருப்போம். ஆனால் அங்குள்ளவர்கள் வரங்கல் என்று சொல்கிறார்கள். ஒருகல்லு என்ற சொல்லின் மரூ அது. அதாவது ஒற்றைக்கல். ஏகசிலா நகரம் என்று அதற்கு சம்ஸ்கிருதப் பெயர் உண்டு. ஆந்திராவின் நான்காவது பெரியநகரம். வடக்குசெல்லும் முக்கியமான ரயில் நிலையத்தில் வரங்கல் உள்ளது. பலர் இவ்வழியாக ரயிலில் சென்றிருப்பார்கள். வரங்கலில் அதிகமாக விளைவது பாறைதான். அதையே அறுவடை செய்கிறார்கள். இன்று வரங்கல் அதன் கிரானைட் குவாரிகளுக்காக புகழ்பெற்றுள்ளது.
வரங்கல் காகதீயப் பேரரசின் தலைநகரம். தெலுங்கானா பகுதியை கிட்டத்தட்ட பன்னிரண்டாம் நூற்றாண்டு முதல் இருநூறு வருடம் ஆண்ட காகதீயப்பேரரசு மத்திய இந்திய வரலாற்றில் முக்கியமான பங்களிப்பு கொண்டது. குறிப்பாக சிற்பக்கலையில் காகதீயபாணி ஒன்று உருவானது. இந்த பேரரசர்களின் குலதெய்வம் காகதி அல்லது துர்க்கை. ஆகவே அவர்களுக்கு காகதீயர்கள் என்ற பெயர் உருவாயிற்று. ஆரம்பகால தலைநகரம் ஹனுமன்கொண்டா. அங்கிருந்து தலைநகரம் வரங்கலுக்கு மாற்றப்பட்டது. இதன் முக்கியமான அரசர் ராஜா கணபதி தேவர். இவர் வடக்கே வங்காளவிரிகுடா முதல் தெற்கே காஞ்சீபுரம் வரையில் தன் பேரரசை பரப்பினார்.
அவருக்குப் பின்னர் அவரது மகளான ருத்ராம்பா வலுவான ராணியாக ஆட்சி செலுத்தினார். புகழ்பெற்ற பயணியான மார்க்கோபோலோ ருத்ரம்மா தேவியின் காலகட்டத்தில் காகதீய அரசு எவ்வாறு பல நிதிசார் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு திறம்ப்பட ஆளப்பட்டது என்று எழுதியிருக்கிறார். நாட்டை 72 பாளையங்களாக பிரிக்கும் பாணி ருத்ராம்பாவால் உருவாக்கபப்ட்டது. பின்னர் விஜய நகரிலும் அதன் பின் மதுரை நாயக்கர் ஆட்சியிலும் அம்முறை நீடித்தது
காகதீய அரசின் நிர்வாக மையங்களாக விளங்கியவை கோயில்களே. ருத்ராம்பாவின் ஆட்சி கிட்டத்தட்ட மதுரை நாயக்கர் அரசி ராணி மங்கம்மாளின் ஆட்சிக்கு நிகரானது. அவரே ஆந்திராவின் புகழ்பெற்ற ஏரிகளையும் சாலைகளையும் அமைத்தவர். அவரது பேரன் பிரதாபருத்ரன் 1295ல் ஆட்சிக்குவந்தார். 1323ல் அவர் டெல்லிசுல்தான் படைகளுடன் போரிட்டு உயிர்துறந்தார். அத்துடன் காகதீயப்பேரரசு அழிந்தது.
காகதீயபேரரசு அதன் கட்டிடகலைச் சாதனைகளுக்காக இன்று நினைக்கப்படுகிறது. சாளுக்கிய கட்டிடக்கலையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசென்றார்கள் என்று காகதீயர்களைச் சொல்லலாம். காகதீயச் சிற்பக்கலையின் சிறப்பம்சம் என்னவென்றால் வட இந்தியாவைச் சேர்ந்த வேசர பாணி கட்டிடக்கலையும் தென்னகத்தின் தட்சிண பாணி கட்டிடக்கலையும் உரையாடிக்கொள்ளும் முனையாக இந்த நிலம் இருந்தது என்பதே. பொதுவாக காகதீயர் ஆண்ட இருநூறு வருடம், அதிலும் ருத்ராம்பாவின் ஆட்சிக்காலம், ஆந்திர வரலாற்றின் பொற்காலம் என்று ஆய்வாளர்களால் சொல்லப்படுகிறது/ ராமப்பா ஏரி பட்கல் ஏரி போன்ற பெரும் ஏரிகள் இக்காலத்தில் உருவாக்கப்பட்டன. வட ஆந்திராவின் பல ஊர்கள் இக்காலத்தில் பிறவி கொண்டவையே.
வரங்கல்லை சுல்தான்கள் வென்று சூறையாடிச்சென்றபின் அவர்கள் விட்டுசென்ற படைப்பிரிவுகளை தோற்கடித்து முசுனூரி நாயக்கர்கள் என்றபேரில் எழுபது சிறிய படைத்தலைவர்கள் ஒருங்கிணைந்து வரங்கலைக் கைப்பற்றி ஐம்பதுவருடம் ஆண்டார்கள். அவர்களுக்கு இடையே நிகழ்ந்த பூசல்களினால் அந்த ஆட்சி வீழ்ச்சியடைந்தது. 1370ல் பாமினி சுல்தான்கள் வரங்கலைக் கைப்பற்றிக் கொண்டார்கள். ஔரங்கசீப் வரங்கலைக் கைப்பற்றியபின் சுதந்திரம் கிடைக்கும்வரை அது ஹைதராபாத் நிஜாம் ஆட்சியிலேயே இருந்தது
இன்று வரங்கல் கோட்டை பல இடங்களில் முற்றாகவே அழிந்து இடிபாடுகளாகக் கிடக்கிறது. இடிந்த கற்பாளங்கள் மீது நிகழ்காலத்தின் கூசவைக்கும் வெயில் பரவிக்கிடப்பதைக் கண்டோம். மூன்று அடுக்குகளாக இதற்கு பாதுகாப்பு இருந்திருக்கிறது. முதல் சுற்று மண்ணாலான இருபதடி உயரமான சுவர். அடுத்த சுற்று வலுவான கருங்கல் சுவர். அதற்குள் இப்போதும் ஊர் உள்ளது. இது பழைய வரங்கல் என்று சொல்லபப்டும் சிற்றூர்.
வரங்கல்லில் உள்ளே சிற்பப் பூங்கா ஒன்று தொல்பொருள்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. அங்கே பழைய காகதீய காலகட்டத்து உடைந்த சிற்பங்களும் கட்டிட மிச்சங்களும் வைக்கபப்ட்டுள்ளன. அந்த இடிபாடுகள் மனதை பெரிதும் சங்கடப்படுத்தின. அங்குள்ள மிகச்சிறந்த காட்சி அன்று வரங்கல்லின் நான்கு திசைகளிலும் இருந்த முப்பதடி உயரமான பெரும் கல்நுழைவாயில்கள் இன்றும் உள்ளன. இவை ஒற்றைக்கல்லால் செதுக்கபப்ட்டவை. கன்னங்கரிய பளபளப்பான கற்கள்.அற்புதமான நுண்ணிய கோலச்செதுக்கல்கள் கொண்டவை. அவை கீர்த்தி தோரணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. குமிழ்கள் மலர்கள் தொங்கும் அலங்காரங்களுக்கு இருபக்கமும் அழகிய அன்னப்பறவைகள். ஒவ்வொரு சிறு இடத்திலும் சிற்பங்கள். இந்த வாசல்களுக்கு இணையான இன்னொரு சிற்ப வாசல் இந்தியாவில் இல்லை.இந்த கீர்த்தி தோரணங்கள் ஆந்திராவின் சுற்றுலாத்துறையின் சின்னங்களாக புகழ்பெற்றுள்ளன
சிவபெருமான் கோயில்கொண்டுள்ள சுயம்புலிங்க ஆலயம் இங்கே உள்ளது. காகதீய பாணிக் கட்டிடக்கலைக்கு சிறந்த உதாரணம் இது. கருவறைக்குமேலேயே மணிமகுடம்போல எழுந்த குட்டையான சதுரவடிவ கல்கோபுரமும் கருவறைக்கு முன்னர் நீட்டி நிற்கும் அர்த்தமண்டபமும் இதன் சிறப்பியல்புகள். அறுபட்டைத்தூண்களில் அதிகமாகச் சிற்பங்கள் கிடையாது. வழக்கம்போல மகத்தான நந்தி சிலை.
வரங்கல்லில் இருந்து மாலை கிளம்பி பாலாம்பேட் என்ற கிராமத்தில் இருக்கும் ராமப்பா ஏரிக்கு அருகே உள்ள ராமப்பா கோயில் சென்றோம். வரங்கல்லில் இருந்து எழுபது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இது. சின்னஞ்சிறு கிராமம் இது. வழிகேட்டு வழிகேட்டுச் சென்றோம். ருத்ராம்பா உருவாக்கிய ராமப்பா ஏரி கடல்போல வரவேற்றது. வழியெங்கும் கூட்டம் கூட்டமாக எருமைகளை மேய்ச்சலுக்குக் கொண்டு சென்றார்கள்.
ராமப்பா கோயில் எனப்படும் கோயில் ரேச்சால ருத்ரன் என்ற சிற்றரசனால் கட்டப்பட்டது. இவன் முதலாம் கணபதி தேவருக்கு கீழே இருந்தவன். அக்கோயிலில் உள்ள சிவன் பெயர் ராமலிங்க சுவாமி. ராமேஸ்வரத்து தெய்வம்தான். ”நம்ம ஊர் ராமேஸ்வரமா சார்?” என்றார் கிருஷ்ணன். நமக்கு காசி எப்படியோ அபப்டித்தான் வடக்கே ராமேஸ்வரம்” என்றேன்.
இந்த பயணத்தில் இதுவரை பார்த்த சிற்பங்களில் உச்சம் என்பது ராமலிங்கசாமி கோயில்தான். என் நோக்கில் இந்தியாவின் முதன்மையான சிற்ப அற்புதம் என்றால் இந்த கோயிலின் முக மண்டபம்தான். அடுத்தபடியாக பேலூர்-ஹளபீடு சிற்பங்களைச் சொல்லலாம். கன்னங்கரிய கல்லில் செதுக்கப்பட்டுள்ள இந்த மண்டபம் ஒரு மாபெரும் நகை. ஒரு கைவிரல் நுனிகூட விடப்படாமல் சிற்பங்கள். வழக்கமாக இத்தகைய பேனல் சிற்பங்கள் தனித்தனியாக முழுமை கூடாமல் இருக்கும். ஆனால் இங்கே ஒவ்வொரு சிற்பமும் ஒரு தனி கலைச்சாதனை என்று சொல்லத்தக்க அளவுக்கு அதிநுண்மை கொண்டது. இந்த ஒரு மண்டபத்திலேயே பற்பல ஆயிரம் சிற்பங்கள் உள்ளன.
இடம் மாறி இடம் மாறி மல்லாந்து படுத்து அந்தச் சிற்பங்களை பார்த்து பார்த்து திகட்டி சலித்து மீண்டும் தாகம் கொண்டு மீண்டும் பார்த்து அது ஒரு மீளமுடியாத அவஸ்தை. அந்த ஒரு மண்டபத்தை சாதாரணமாக ரசிக்கவே ஒரு நாள் முழுக்க போதாது. சிவபெருமானின் நடன நிலைகள். அவரைச் சூழ்ந்து பிற தெய்வங்கள். நடன மங்கையர். இசைக்கலைஞர்கள். அந்த மண்டபமே தெய்வங்களும் தேவர்களும் மானுடரும் சேர்ந்து கொண்டாடும் ஒரு பெரும் கலைத்திருவிழாபோல் இருந்த்து.
ராமப்பா கோயிலின் வெளியே மேல்கூரை வளைவுக்கு அடியில் உள்ள கரியகல் மோகினி நாகினி சிலைகள் ஒவ்வொன்றும் பெரும் கலைப்படைப்புகள். இதற்கு அப்பால் ஒரு க்லையே இந்தியாவில் இல்லை என்ற பெரும் பிரமிப்பை உருவாக்குபவை. நண்பர்கள் ஒவ்வொருவரும் அரற்றியபடியே இருந்தார்கள். பித்து பிடிக்க வைக்கும் ஒரு அபூர்வமான காட்சிப்பெருவிருந்து இந்த ஆலயம். இந்திய நாட்டில் ஒரே ஒரு கலைச்சின்னம் மட்டும் எஞ்சினால் போதுமென்றால் இதை மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் வழக்கம்போல கைவிடப்பட்டு கிடக்கிறது இந்த இடம். சிற்பங்களை பயணிகள் உடைத்துப்போட்டால்கூட கேட்க யாருமில்லை
வெளியே ஒரு மண்டபத்தில் பெரிய கருங்கல் நந்தி ஒன்று கழுத்தில் வடங்களும் ஆரங்களும் மணிகளும் அணிந்து அழகிய கண்களுடன் தலைதூக்கிக் கிடந்தது. ”இந்த பயணமே ஒரு நந்தி பயணம். இதுவரை மீண்டும் மீண்டும் நந்திகளைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என்றார் கல்பற்றா நாராயணன். ராமப்பா கோயில் நந்திதான் அவற்றில் உச்சம். பெரும் பரவசத்துடன் அதனருகிலேயே நெடுநேரம் நின்றோம்.
ராமப்பா கோயிலுக்கு வசந்தகுமார் 23 வருடம் முன்பு வரும்போது அங்கே மனித நடமாட்டமே இல்லை என்றார். இப்போது குடிசைக்கடைகள் வரிசையாக முளைத்துவிட்டிருந்தன. சீக்கிரமே கோயிலை அங்குள்ள அந்த வணிகர்களே சிதைப்பார்கள் என்பதே இந்திய அனுபவம்.
திரும்பும் வழியில் ஒரு புல்வேய்ந்த டீக்கடையில் கரீம்நகருக்கு வழிகேட்டோம். வசந்தகுமார் வரை படத்தை எடுத்து விரிக்க அந்தக் கடைக்காரரின் பெண் சிரித்தாள், கரீம் நகருக்குப் போக மேப்பா என்று. நாங்கள் கன்யாகுமரியில் இருந்து வருகிறோம் என்றோம். அழகான பெண். குட்டையான தலைமுடியும் கூரிய முகமுமாக இருந்தாள். என்ன படிக்கிறாய் என்றார் செந்தில் அவள் புகுமுக வகுப்பு என்றாள். என்ன சப்ஜெக்ட் என்றேன். சிரித்தபடி படித்தது 8 வருடம் முன்பு என்றாள். ஆறுவயதில் அவளுக்கு மகன் இருக்கிறான். கணவர் வளைகுடா நாட்டில் இருக்கிறார். ஆச்சரியமாக இருந்தது. வயதே தெரியவில்லை.
கரீம் நகருக்கு செல்லும் வழியில் சாப்பிட்டோம். காரில் செல்லும்போது மீண்டும் கள்! இம்முறை காரில் போகும் வேகத்திலேயே ஆளைப்பிடித்துவிட்டோம். முந்தைய நாளை விட அருமையான கள் இது. ஆனால் ஏற்கனவே சாப்பிட்டுவிடிருந்தமையால் வயிறு நிறைய குடிக்க முடியவில்லை.
lake on the way
கள் விற்றவர்கள்
டீக்கடைப்பெண். மாணவி அல்ல அன்னை
ராமப்பா கோயில் தூண்
வரங்கல்… வரவேற்பு வளைவுகள்
ராமப்பா கோயில்