ஒரு நகரம் இரவில் எப்படி இருக்கிறதென்பது அதை மதிப்பிடுவதற்கு முக்கியமானது. சென்னை இரவில் பந்திப்பாய் சுருட்டப்பட்ட சாப்பாட்டுக்கூடம் போல இருக்கும். இரவில் சுத்தமாக இருக்கும் நகரங்கள்தான் சிறந்தபராமரிப்பு கொண்டவை. இரவில் பெண்கள் தனியாக சாதாரணமாக நடமாடும் நகரங்கள் பாதுகாப்பானவை. இரவில் போக்குவரத்து அதிகமாக இருக்கும் நகரங்கள் வணிக ரீதியாக சுறுசுறுப்பானவை. இரவில் கடைகள் திறந்திருக்கும் நகரங்களைச் சுற்றி ஏராளமான சிற்றூர்கள் அவற்றை நம்பி இருக்கின்றன.
கொலாலம்பூர் பரபரப்பான நகரம். ‘பன்னிரண்டு- ஏழு’என்று செல்லமாகச் சொல்லப்படும் கடைகள் பல அங்குண்டு. எப்போதும் திறந்திருக்கும் அவற்றில் எப்போதும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். திறந்தவெளிக்கடைகள்கூட சுத்தமாக இருப்பது இந்தியாவுக்கு வெளியே சாதாரணம். சாப்பிடுமிடம் சுத்தமாக இருக்கலாமென்ற தகவலை நோக்கி நாம் இன்னமும் பரிணாமம் வழியாகச் சென்று சேரவில்லை.
ஒரு கடையில் அமர்ந்து அது சீனக்கடையா மலாய்க்கடையா இல்லை தமிழ்க்கடையேதானா என்று நிதானிக்க முயன்றுகொண்டிருந்தேன். எல்லாவற்றையும் எல்லாரும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். மலாயா சாப்பாட்டில் உள்ள சில சிறப்பியல்புகள் புரிய ஒரு ஒருநாள் பிடிக்கும். போயி உட்கார்ந்ததுமே ‘தண்ணி’ என்ன வேண்டும் என்று கேட்பார்கள். அது பீர் முதல் வெறும் தண்ணீர் வரை எதுவுமாகலாம். பொதுவாக காபி. பாலில்லாத டீயை தேயோ என்கிறார்கள். டீயை கண்டுபிடித்தபோது அதை தெய்வீகமானது என்ற பொருளில் சீனாவில் அப்படிச் சொல்லியிருக்கிறார்கள். சம்ஸ்கிருதத்தின் தேவாவாக கூட இருக்கலாம்.
டீ குடித்தபின் சாப்பாடு. சாப்பிட்டபின் மீண்டும் டீ. இருபக்கமும் தோழிகள் மாதிரி டீயால் அணைத்து சாப்பாடு உள்ளே கொண்டுசெல்லப்படுகிறது. நான் இரவில் பழங்கள்தான். அவை அங்கே இல்லை. ஆகவே பழச்சாறு. ஆப்பிளைகூழாக்கி பனிக்கட்டி போட்டு கொடுத்தார்கள். நாஞ்சில் நாடன் அந்த ஊர் சாப்பாடு சாப்பிட ஆசைப்பட்டார். ”நாசி கந்தா” சாப்பிடலாம் என்று ஆலோசனை சொன்னார் மணா. ”நல்லா இருக்குமா?” என்றார் நாஞ்சில், ஆவலாக. ”நல்லாத்தான் இருக்கும், இந்த ஊர் தமிழாட்கள் பிச்சைக்காரன் சாப்பாடுன்னு சொல்லுவோம்” என்றார் மனோ.
நாசிகந்தா என்றால் தேங்காய்ப்பாலில் வேகவைத்த சோற்றில் கைக்கு அகப்பட்ட அத்தனை குழம்புகளையும் ஒன்றாகச் சேர்த்துப்போட்டு சாப்பிடுவது. இதில் தேன் சேர்த்து வைத்த குழம்பும் உண்டு. வற்றல்மிளகாய் குழம்பும் உண்டு. சிக்கன் மீன் இன்னபிறவும் உண்டு. நாஞ்சில் தண்ணீரி ல் குதிக்கப்போகிறவன் மாதிரி தயங்கினார். என்னைப்பார்த்து புன்னகை செய்து ”வயசு அறுபதாச்சு, இனிமே என்ன?’ என்ற பாவனையில் ஒரு புன்னகை. சாப்பிட ஆரம்பித்தார். ஒன்றும் நிகழவில்லை. இருபது நிமிடங்களுக்குப் பின் ”நல்லா இல்லைண்ணு சொல்லிட முடியாதுன்னு சொல்லலாம்தான்” என்றார்.
நான் கழிப்பறைக்குச் சென்று மீண்டபோது நாஞ்சில் அங்கே சமையல் செய்யும் சீனச்சாயல் கொண்ட மலாய் தமிழரிடம் நாசிகந்தாவை எப்படி செய்வது என்று கேட்டு தீவிரமாகக் குறிப்புகள் எடுத்துக்கொண்டிருந்தார். கோவை வட்டாரத்தில் அம்மாதிரி துணிகர முயற்சிகளை எடுப்பது சரியா என்று எனக்கு குழப்பமாகவே இருக்கிறது.
காரிலேயே கொலாலம்பூரை சுற்றி வந்தோம். நகரமெங்கும் ஒளி நிறைந்திருந்தது. வண்ண விளக்குச்சரங்கள் தொங்கின. தைப்பூசத்திற்கு தேர் செல்வதற்காக ஒருசாலையை தனியாக அலங்காரம் செய்திருந்தார்கள். சாலையை கடக்கும் நடைபாதைப்பாலத்தை உயரம் கூட்டிக்குறைக்கும்படியாக வைத்திருந்தார்கள். அது டத்தோஸ்ரீ சாமிவேலு அவர்களின் பணி என்றார் சிவா.
கொலாலம்பூரின் இரட்டைக்கோபுரத்தைச் சென்று பார்த்தோம். இரவில் விளக்கொளியில் அவை இரு மாபெரும் தேர்கள் போல ஒளிவிட்டுக்கொண்டிருந்தன. கைகோர்த்துக்கொண்டிருப்பதைப்போல நடுவே அந்த இணைப்புப்பாலம். சில சமயம் விண்வெளியில் இருந்து ஏதோ விசித்திரமான பறக்கும் தட்டு [சரி பறக்கும் டம்ளர்] கள் வந்து நிற்பது போல.
காரிலேயே மல்லாந்தபடி அந்த கட்டிடங்களின் பிரம்மாண்டத்தை பார்த்துக்கொண்டிருந்தோம். தூரத்தில் இருக்கையில் பொம்மைகள் போல தெரிபவை நெருக்கத்தில் கண்களை நிறக்கும் பெருந்தோற்றம் கொள்கின்றன. சுவரில் சாய்ந்து நின்று அவற்றையே பார்த்துக்கொண்டிருந்தேன். பெட்ரோனாஸ் இரட்டைக்கோபுரங்கள் என்று சொல்லப்படும் இந்தக் கட்டிடங்கள் 1998ல் கட்டப்பட்டவை. அடுத்த ஆறுவருடங்கள் இவை உலகின் மிக உயரமான கட்டிடங்களாக இருந்தன.
நான் பார்த்த பெரிய கட்டிடங்களில் இக்கட்டிடங்கள்தான் அழகானவை என்பது என் எண்ணம். நியூயார்க்கின் எம்பயர் பில்டிங் எனக்கு ஏமாற்றத்தையே அளித்தது. அதற்குக் காரணம் இக்கட்டிடங்களின் அடுக்கமைப்பு என்பது வட இந்தியாவில் பிரபலமான நாகர பாணி கோபுரங்கள் போல உள்ளது என்பதே. கஜுராகோ கோபுரங்களுடன் இவற்றை ஒப்பிட்டால் அந்த ஒற்றுமை புரியும். மாபெரும் கட்டிடங்களில் வளைவும் கூம்புமே அழகாக இருக்கமுடியும். அதுவே பெண்மை. சதுரம் என்பது நெகிழ்வின்மையை, ஆண்மையை, அகங்காரத்தைக் காட்டுகிறது.
அர்ஜெண்டீன கலைஞர் சீசர் பெல்லியால் வடிவமைக்கப்பட்டது இக்கட்டிடம். நவீன கட்டிடங்கள் கட்டப்படும் முறைப்படி தனித்தனி உறுப்புகளாக கட்டப்பட்டு இணைக்கப்பட்ட இந்த அமைப்பு ஏழாண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. உலகின் கட்டிடங்களில் மிக ஆழமான அஸ்திவாரம் கொண்ட கட்டிடம் இதுவே. 120 மீட்டர் ஆழத்துக்கு கான்கிரீட்டால் அடித்தளம் போடப்பட்டிருக்கிறது. கான்கிரீட்டாலும் இரும்பாலும் அலுமினியத்தாலும் கட்டப்பட்ட மையக்கட்டுமானம் முழுக்கமுழுக்க கண்ணாடியால் வேயப்பட்டிருக்கிறது. 88 மாடிகள் கொண்டது இது. பெட்ரோனாஸ் எண்ணை நிறுவனத்தை இக்கட்டிடத்தின் உரிமையாளர்கள் என்று சொல்லலாம்.
கட்டிடத்தின் முன்னால் நின்று படங்கள் எடுத்துக்கொண்டோம். வரலாற்றில் பதிவுசெய்யவேண்டுமே. த.ராமலிங்கம் ஓடி ஓடி படமெடுத்தார். நாஞ்சில்நாடன் ஏகப்பட்ட அருமையான போஸ்கள் கொடுத்தார் — மூன்றாம் நாள் அந்த காமிரா தொலைந்து போகப்போவது தெரியாமல். திரும்பும்போது பிற கட்டிடங்களை பார்த்துக்கொண்டே வந்தோம். பொதுவாக இத்தகைய கட்டிடங்கள் பிற கட்டிடங்களை எவருமே பார்க்க முடியாதபடி செய்கின்றன. அருகே உள்ள பல கட்டிடங்கள் அந்த இரவொளியில் பொற்படிக்கட்டுகள் போல ஜொலித்துக்கொண்டிருந்தன.
கொலாலம்பூர் தெருக்களில் இரவில் இரவுப்பெண்டிர் லிப்ஸ்டிக்கும் குட்டைப்பாவாடையுமாக எதிர்காலத்துக்காகக் காத்திருந்தார்கள். அவர்கள் அருகே கார்கள் தயங்கிந. திரையரங்கு ஒன்றில் ஆயிரத்தில் ஒருவன். நகரின் புராதனமான தியேட்டர் என்றார் மனோ. அங்கே அவர் எம்ஜியார் படங்களைப் பார்த்திருக்கிறார். மனோ ஓர் எம்ஜியார் ரசிகர். அதிகமான லிப்ஸ்டிக் போட்டிருந்தவர்கள் ஆண்கள் என்று தகவலறிந்தவர்களால் தெரிவிக்கப்பட்டேன்.
அங்கே ஒரு விடுதியில் ‘நடனம்’ இருப்பதாகச் சொன்னார்கள். வித்தியாசம் என்னவென்றால் அங்கே தமிழ் நங்கைகள் நற்றமிழ் பாட்டுக்கு ஆடுவார்கள் என்பதுதான். த.ராமலிங்கம் உறுதியாக மறுத்துவிட்டார். பட்டிமன்றத்தில் அவருக்கு எதிரணியில் நின்று பேச வாய்ப்புள்ள முத்தையாவை கூடவே கூட்டிக்கொண்டு போக அவர் தயங்கியது நியாயமானதே.
”ராமலிங்கம் போட்டிருக்கிற சட்டையெல்லாம் அவரோட பையனோடது…அதான் அவர் தயங்கிறார். அவர் அங்கே போனா கிட்டத்தட்ட அவரோட பையனே போனதுமாதிரித்தானே’ என்றார் முத்தையா.
அறைக்குத் திரும்பும்போது பதினொரு மணி ஆகிவிட்டது. நான் உள்ளே நுழைந்ததுமே பாய்ந்து கழிப்பறைக்குள் சென்றேன். நாஞ்சில் ‘விருத்தியாய்’ கழிப்பறை சென்று மீள்வதற்குள் நான் ஒரு நல்ல தூக்கமே போட்டுவிடலாம். நாஞ்சில் வழக்கம்போல பெட்டியை திறந்து ஒவ்வொரு பொருளாக பதனமாக எடுத்து வெளியே வைக்க ஆரம்பித்தார். பூஜைப்பொருட்களைத்தான் அப்படி மென்மையாக எடுப்பதை பார்த்திருக்கிறேன்.
நாஞ்சில் கண்ணாடிச் சன்னலருகே நின்று வெளியே ஒளிவெள்ளத்தில் மின்னிக்கொண்டிருந்த கொலாலம்பூரைப் பார்த்தார். ”என்னமோ செய்யிது” என்றார். முகத்தில் மிக அபூர்வமாக அவரிடம் வரும் ஒரு வகைச் சிவப்பு. அப்போது அவர் இன்னொருவராக இருப்பார் என்பதைக் கவனித்திருக்கிறேன். ”ஒருமாதிரி இருக்கு ஜெயமோகன்”
இரட்டைக்கோபுரங்கள் இருண்ட வானின் பின்னணியில் மணப்பெண்கள் போல நின்றிருந்தன. ”எவ்ளவு இடங்கள் இந்த உலகத்திலே…எவ்ளவு ஜனங்கள். எவ்ளவு வாழ்க்கை…என்னென்னமோ செஞ்சு உழைச்சு எதையெல்லாமோ கட்டி எழுப்பி வச்சிருக்காங்க. எவ்ளவு செல்வம், எவ்ளவு அழகு..எல்லாத்துக்கும் மனுஷனோட உழைப்பும் ஒத்துமையும் காரணமா இருந்திருக்கு…நாம என்னத்த கண்டோம். எறும்புமாதிரி கையளவு மண்ணுக்குள்ள முட்டி மோதி வாழ்ந்துகிட்டு அதிலே கிடைக்கிற சில்லறை விஷயங்களை வச்சு ஊதி ஊதிப் பேசிட்டு கிடக்கோம்… மனுஷன் ஒண்ணாச் சேர்ந்தான்னா அவன் ரொம்ப பெரியவன். ஒருத்தன்னு பார்த்தா ஒண்ணுமே இல்லை…
எவ்ளவு அழகு பாத்தேளா? எங்கிணயெல்லாம் இருக்கான் மனுஷன்… சட்டுன்னு எல்லாத்தையும் பாத்து மனுஷன்னு நெனைச்சுக்கிடறப்ப நெஞ்சை அடைக்குது… எல்லா மனுஷனும் நாமல்லியா…நாம தானே எல்லாத்தையும் செஞ்சோம். எவ்ளவு அற்புதமா எல்லாத்தையும் செஞ்சிருக்கோம்… எந்த இனமானா என்ன, எந்த வற்க்கமானா என்ன? எல்லாம் ஒண்ணுதான். மனுடம்னு சுமமவா சொன்னான்..
எவ்ளவோ இருக்கு…எங்கெல்லாம் மனுஷ நாகரீகம் வளந்து செழிச்சிருக்கு… ஒரு மயிரும் புரியாம எனமுண்ணும் குலமுண்ண்டும் பெனாத்திட்டு அலையுதானுக மனசு வளராத தாயோளிங்க… அவனுக கையிலே அதிகாரத்த குடுத்தாச்சு. நாட்டோட தலையெழுத்தையே குடுத்தாச்சு…இங்கெல்லாம் வரமாட்டானுகளா… இதையெல்லாம் பாக்க மாட்டானுகளா? எவ்ளவு பிரம்மாண்டமா மனுஷ வாழ்க்கை விரிஞ்சு கிடக்கு… நேத்துவரைக்கும் மரத்துமேலே இருந்த மக்கள்…இப்ப எங்க இருக்காங்க. நாம செய்றதுக்கு எவ்ளவு இருக்கு. எவ்ளது தூரம் போக வாய்ப்பிருக்கு… ஒண்ணுமே இவனுக நெனைக்க மாட்டானுகளா?
”செரி, யாரா இருந்தா என்ன? மனுஷன் எல்லாத்தையும் செஞ்சிருக்கான். இந்தமாதிரி எத்தனை எடம் இருக்கும் இந்த உலகத்திலே. பெரிய நகரங்கள்.. இல்லியா? எல்லாத்தையும் செஞ்சது மனுஷன் தானே…நம்மள மாதிரி சாதாரண மனுஷன்… பாக்கப்பாக்க கண்ண எடுக்க முடியல்லை…என்ன ஒரு பிரம்மாண்டம்…நல்ல நிலாவிலே பார்த்தா அது வேற மாதிரி இருக்கும்னு நெனைக்கேன்…”
ஒருகணத்தில் கலைஞன் காலத்தின் முன் மானுடத்தின் முன் நிற்கிறான். அவன் வாழ்நாள் முழுக்க சேர்த்து வைத்துப் பழகிய மொழி அவனை பரிபூரணமாகக் கைவிடுகிறது. பிதற்ற ஆரம்பித்துவிடுகிறான். ஆனால் அதுதான் கலைஞனின் பொற்கணம் என்பது. நாஞ்சில் கண்ணாடிச் சன்னலுக்கு வெளியே பார்த்தபடி நின்றுகொண்டிருந்தார். புன்னகையுடன் அவரையே பார்த்துக்கொண்டிருந்தபின் எப்போதோ தூங்கிவிட்டேன்.