வெண்முரசு விழா பற்றி டி செ தமிழன்

நலம். நாடுவதும் அதுவே.

உங்களின் ‘வெண்முரசு வெளியீடு’ இனிதாக அமைய என் வாழ்த்தும் அன்பும்.
…….
உங்களின் ‘வெண்முரசு விழா?’ ஏன் என்ற கட்டுரையை வாசித்தபின் என் முகநூலில் எழுதியது கீழே…

ஜெயமோகனின் ‘வெண்முரசு’ விழா பற்றி பல்வேறுவகையான விமர்சனம் வந்திருக்கின்றன போலும். இப்போது அவர் எழுதிய ‘வெண்முரசு விழா ஏன்?’ என்பது குறித்து வெளிப்படையாக தன் கருத்துக்களை முன்வைத்திருப்பதை வாசித்தேன். ‘வெண்முரசு விழா’ பற்றி பிறரால் வைக்கப்பட்டிருக்கும் விமர்சனங்களைத் தவறவிட்டதைப் போலவே, அந்த விழாவை முன்னிட்டு வெளியிடப்படும் விடீயோக்களையும் பார்க்க விரும்பவில்லை. ஒரு படைப்பு இவ்வாறான இடாம்பீகங்கள் இல்லாது சத்தமின்றி தன்னை முன்னிறுத்தும் என நம்புகின்றவர்களின் ஒருவன் என்பதால், இந்த ஆரவாரங்களில் எனக்கு எந்த உடன்பாடுமில்லை.

ஆனால் என் விருப்பு அப்படியிருக்கிறதென்பதற்காய், ஜெயமோகனின் ‘வெண்முரசு விழா’ இவ்வாறான ஆடம்பரங்களுடன் நடைபெறப்போகின்றதென்பதற்காய் நிராகரிக்கப் போவதில்லை. ‘வெண்முரசை தொடர்ச்சியாக வெளியிடுவதில் வரக்கூடிய சிக்கல்களையும், பரவலான வாசகர்களை அடையவேண்டும் என்ற ஜெமோ விரும்புவதை யாரும் தவறெனச் சொல்லவும் முடியாது. இத்தனைக்கும் வெண்முரசு வரிசை நூல் வெளியீட்டுக்களால் தான் ‘எந்தப் பைசாவும் பெறவில்லை என்பதையும் இவ்விழாவிற்காய் என்றும் செலவழிக்கும் போவதில்லை’ என்றும் ஜெமோ கூறுகின்றார். அவரது வாசகர்கள் இப்படியொரு விழாவை நடாத்துகின்றார்கள் என்றால் நாம் அவரை வைவதில் எந்த நியாயமுமில்லை.

தமிழ்ச்சூழலில் ஒருபடைப்பாளி எழுதுவதை விட தன் படைப்புகளுக்கான பதிப்பகம் தேடுவது என்பது எவ்வளவு கடினமானது என்பதற்கு எம்மிடம் எண்ணற்ற கதைகள் இருக்கின்றன. அதுபோலவே தங்கள் நண்பர்களுக்காகவோ அல்லது படைப்புக்களின் வசீகரத்திற்காகவோ பதிப்பகம் தொடங்கிய எத்தனையோ பேர் இடைநடுவில் நொடிந்து போய் பதிப்பகங்களைக் கைவிட்டும் இருக்கின்றனர் என்பதையும் நாமறிவோம். ஜெயமோகன் போன்றவர்களே நாளை தம் நூல்கள் வெளியிடுவதற்குப் பதிப்பகங்கள் இருக்குமா என அஞ்சுகின்ற சூழ்நிலையில் புதிய படைப்பாளிகளின் நிலைகளைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.

ஜெயமோகனின் படைப்புக்களை வாசிப்பதற்கு என்று எப்போதும் ஒரு தீவிர வாசகர் கூட்டம் இருக்கும்.இன்னொரு புறத்தில் ஜெமோவை எப்படித் திட்டித்தீர்க்கலாம் என கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு இருக்கும் என்னைப் போன்றவர்களும் ஜெயமோகனை தொடர்ந்து வாசிக்கத்தான் போகின்றோம். ஆனால் அந்த எண்ணிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு பதிப்பகம் நஷ்டமின்றி நூற்களை விற்றுவிடவும் முடியாது. எனவே வாசிப்பவர்களின் எண்ணிக்கையை இவ்வாறான சில நிகழ்வுகளால்தான் இன்னும் விரிவாக்கமுடியும் என்று ஒருவர் நம்பினால் அதைத் தவறெனச் சொல்லமுடியாது.

இவ்வாறு நூற்களை வாசகர்களிடம் பரவலாக்கம் செய்வதற்கு, சாதாரண மக்கள் நிறைய வாசிக்கும் விகடன், குமுதம், குங்குமம் போன்றவ இதழ்கள் படைப்பாளிகளை அறிமுகஞ்செய்து உதவலாம்.. ஆனால் அவற்றின் ஒவ்வொரு இதழும் சினிமாச் சிறப்பிதழ் போலவே வந்துகொண்டிருக்கின்றன. சினிமாவிற்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாதென்றல்ல இதன் அர்த்தம். அதேயளவிற்கு நூற்களையோ ஓவியம், சிற்பம் போன்ற நுண்கலைகளையோ அறிமுகஞ்செய்யலாம். எத்தனை முக்கியமாய் நூல்கள் தமிழில் வந்துகொண்டிருக்கின்றன. ஏன் இந்த வார இதழ்களால் ஓரிரு பக்கங்கள் கூட அவற்றுக்காய் ஒவ்வொரு இதழிலும் ஒதுக்க முடியாதிருக்கின்றது? சினிமா என்றால் தமிழ்ச் சினிமா மட்டுமின்றி இந்தி, இன்னமும் வெளிவராத ஹலிவூட் போன்ற படங்களைப் பற்றிக்கூட இந்த இதழ்களில் பக்கம் பக்கமாய் எழுதுகின்றார்கள். ஆனால் ஒரு புதிய புத்தகம் பற்றி அறிமுகத்தைப் பார்க்கத் தேடவேண்டியிருக்கின்றது அல்லது செய்ய நாலைந்து வரிகளோடு முடித்துவிடுகின்றார்கள்.

ஆக, சினிமாவையே எல்லாவற்றிலும் கலக்க விரும்பும் வெகுசன இதழ்களிற்கிடையில் ஒரு படைப்பாளி இப்படி விரும்பியோ/விரும்பாமலோ தன்னை விளம்பரப்படுத்த வேண்டியிருக்கின்றது. இளையராஜாவோ, கமல்ஹசனோ நிகழ்விற்குப் போவதால் அவர்களால் நிறையப் பேர் புத்தகங்களை வாசிக்கப்போகின்றார்கள் என்றெல்லாம் கற்பனை செய்யத் தேவையில்லை. எஸ்.ராமகிருஷ்ணனின் இயல் விருது பாராட்டு விழாவிற்கு ரஜினி வந்தவுடன், எஸ்ராவின் நூற்கள் விற்பனையில் ஆர்முடுகள் எடுத்துப் பாய்ந்ததா என்று தெரியவில்லை. ஆனால் இந்த சினிமா முகங்கள் வருவதால் தினசரிப் பத்திரிகைகள்/வார இதழ்கள் கட்டம்போட்டு செய்திகளைக் கட்டாயம் பிரசுரிப்பார்கள். ஆகக்குறைந்தது அதை வாசிக்கும் ஒருவர், என்னைப் போல ஒருகாலத்தில் பாலகுமாரனையோ/லக்‌ஷ்மியோ வாசித்தவர்கள் இத்தகையவர்களைத் தேடிப்போய் வாசிக்கக் கூடும்.

பி.ஏ.கிருஷ்ணன் (பெரியாரைப் பிடிக்காதென்பதற்காய் காழ்ப்புணர்வாய் எழுதும் அவரின் அந்தத் திமிரை இப்போது விடுவோம்) புலிநகக்கொன்றையோ மற்ற நாவலோ வந்தபோதோ கவனிக்காத இந்த வாரவிதழ்கள் கமலை அழைத்து அவர் தன் ஓவியர்கள் பற்றியெழுதிய தன் நூலை வெளியிட்டவுடன் மூன்று பக்கங்களுக்கு கட்டுரை எழுதியதை நினைவுபடுத்திக்கொள்ள்லாம்..

ஆக, அந்தவகையில் ஜெயமோகன் நூற்கள் பரவலான வாசகர்களைப் போய்ச் சேர்ந்து, அவர் தன் முழு வெண்முரசை எழுத பொருளாதாரச் சிக்கல் இல்லாது பதிப்பகம் ஒன்றினூடாக வெளிக்கொண்டு வர விரும்புவதை- நானும் எழுதுகின்றவன் என்றவகையில், ஆனால் இந்த வழி எனக்குவப்பான பாதையல்ல என்றாலும்- ஆதரிக்கவே செய்கின்றேன்.

ஜெயமோகனுக்கு என் வாழ்த்தும் அன்பும்.

டி செ தமிழன்

முந்தைய கட்டுரைஇந்திரா பார்த்தசாரதி: வெண்முரசு
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 19