இந்தியப்பயணம் 10 – பாணகிரி
பனகல் உள்பட ஆந்திராவின் முக்கியமான வரலாற்று, கலைச்சின்னங்களுக்கு உள்ள முக்கியமான ஓர் இயல்பு அவற்றைப் பற்றிய தகவல்களை நாம் எங்குமே பெற முடியாது என்பதே. பனகல் என்ற ஊர் இருப்பதை நாங்கள் நல்கொண்டா வந்தபின்னரே அறிந்தோம். பன்னகல் போனால் அங்கே எந்த தகவலும் ஆங்கிலத்தில் இல்லை. அருங்காட்சியகத்தில் எல்லாமே தெலுங்குதான். ஒரு வரைபடம் தெலுங்கில் இருந்தது. அந்த வாட்ச்மேனிடம் கிடைத்த தெலுங்கில் பேசிப்பேசி பிற இடங்களை தெரிந்துகொண்டோம். அதன்படி திட்டத்தை மாற்றிக் கொண்டு சூரியபெட் கிளம்பினோம்.
சூரியபெட் மிகமிக சிறிய ஊர். இன்னும் சொல்லப்போனால் அந்த ஊரின் இடிபாடுகளில் உருவாகிவந்த ஒரு சேரி என்று அதைச் சொல்லலாம். அங்கே முதலில் எர்ரகேஸ்வரலு [செந்நிறத்தோன்] ஆலயத்தைப் பார்த்தோம். எடுத்த எடுப்பிலேயே கண்ணைக்கவரும் அற்புதமான ஆலயம் அது. 12 ஆம் நூற்றாண்டில் காகதீய மன்னர் கணபதிதேவரின் அமைச்சனான மகாருத்ரன் கட்டிய கோயில். இரண்டாள் உயரமான அடித்தானம். அதன்மீது கோயில். கூம்புகள் சேர்ந்தது போன்ற கோபுரம். இந்த கோயிலும் இடிந்துதான் கிடக்கிறது. சிவந்த கல்லால் ஆன மையக்கோவில் சற்றே சேதமில்லாமல் எஞ்சியிருக்கிறது. கோயிலைச்சுற்றியிருக்கும் சிறு சன்னிதிகளும் கோபுரங்களும் கற்குவியல்கள்.
கோயிலின் அடித்தானத்தில் இங்கும் அற்புதமான முழுமை கொண்ட யானைவரிசை. கோயில் வாசலிலும் சுற்று வாசல்களிலும் கரிய கல்லில் செதுக்கப்பட்ட பேரழகான புஷ்பயட்சி, மதனிகை சிலைகள். உள்ளே முகம்ண்டபத்துத் தூண்கள் காகதீயத் தூண்களுக்கே உரிய பார்த்துப் பார்த்து தீராத கலையழகு கொண்டவை. கருவறையைச் சுற்றி நுழைவாயிலில் உள்ள கரியகல்லால் ஆன பூமரக்கிளைகள் பின்னிய அலங்காரக்கோலமும் நுண்ணியச் சிற்பங்களும் அந்த மண்டபத்தைப் போலவே அழகானவை. முகப்பில் உள்ள பிரம்மாண்டமான நந்தி பார்க்கப்பார்க்க பரவசமூட்டும் அளவுக்கு அழகானது.
திரும்பத் திரும்ப அழகு அழகு என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. ஒரு சிற்பம் உருவாக்கும் அனுபவத்தை எப்படிச் சொல்வது? அந்த சிற்பத்தில் உள்ள விஷயங்களைச் சொல்லப்போனால் அது வெற்றுத்தகவல்களாக ஆகிவிடும். அதன் அனுபவம் என்பது ஒரு குழ்ந்தையை ஓர் அழகியை பார்ப்பதன் மன எழுச்சிக்கு நிகரானது. அத்துடன் ஒரு செவ்வியல் இலக்கியத்தை படிக்கும் அனுபவமும் சேர்ந்துகொள்கிறது.
அங்கே ஒரு பெண் பிச்சைக்காரத்தோற்றத்துடன் பின்னால் வந்து வழிகாட்டியாக பேச ஆரம்பித்தாள்– தெலுங்கில். நாங்கள் ஒரு சொல்லும் தெலுங்கில் எங்களுக்கு தெரியாது என்றோம். அவள் விடவில்லை. மண்டபத்தின் அற்புதமான நுண்சிற்பங்கள் செறிந்த தூணைக்காட்டி இதில் ஒவ்வொரு தூணிலும் சப்த ஸ்வரம் வரும் என்றாள். தட்டிக்காட்ட ஒரு கல்லை மடியில் வைத்திருந்தாள். தட்டாதே என்று சொல்லி அதட்டினேன்.
மகாபலிபுரம் யானையைப்பார்த்தால் எத்தனை அம்மி தேறும் என்று கணக்கு போடும் மனது என்று ஒரு கட்டுரையில் சுந்தர ராமசாமி சொல்கிறார். நம்முடைய ஆட்களில் பாதிப்பேரின் மனம் அப்படிப்பட்டது. அவர்களுக்கு எந்தக் கலையும் எவ்வகையிலும் அனுபவமாவதில்லை. பக்தி காரணமாக கோயில்களுக்குச் செல்கிறார்கள். அங்கே உள்ள மாபெரும் தூண்களைப் பார்க்கையில் என்ன காரணத்துக்காக அப்படி செதுக்கி அடுக்கியிருக்கிறார்கள் என்று புரிவதில்லை. ஆனால் முன்னோர்கள் மகான்கள் ஆதலால் காரணமில்லாமல் செய்ய மாட்டார்கள் என்று ஒரு நம்பிக்கை.
இந்த அசடுகளின் பொருட்டு சில அர்ச்சகர்களும் வழிகாட்டிகளும் உருவாக்கிய முட்டாள்தனமான கதைதான் சப்த ஸ்வர தூண் என்பது. இந்தக்கதை அபப்டியே பயணக்குறிப்புகள் கையேடுகளிலும் இடம் பிடிக்கிறது. உண்மையில் எந்த ஒரு தூணிலும் அப்படி இசை நாதம் கேட்பதில்லை. அதே சமயம் வெவ்வேறு அளவுள்ள தூண்களில் எப்போதும் வெவ்வேறு சத்தம்தான் கேட்கும். நமது மாபெரும் கலைச்செல்வங்களான தூண்களை எல்லாம் இப்படி தட்டி தட்டியே முட்டாள்கள் உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். சில அதிமுட்டாள்களுக்கு வீணை நாதம் வரவில்லையே என்ற ஆதங்கம் எழும். தாங்களே மணிக்கணக்காக தட்டிக் கொண்டிருப்பார்கள்.
ஆனால் அந்தப்பெண்ணிடம் இருந்துதான் அங்கே இன்னொரு முக்கியமான கோயில் இருக்கும் தகவலை தெரிந்துகொண்டோம். நாமேஸ்வரர் மையமாக கோயில் கொண்டிருக்கும் இந்த ஆலயம் திரிபுடேஸ்வர மூர்த்தம் என்று பெயர் கொண்டது. கணபதிதேவர் காலத்தில் அவரது அமைச்சர் மகாருத்ரனால் கட்டப்பட்டது. மூன்று சன்னிதிகள் கொண்ட சிவன் கோயில். ஒவ்வொரு துளியும் சிற்பங்களால் நிரப்பப்பட்ட அழகான முக மண்டபம். சிவந்த கல்லால் ஆன கோயில்.
முன்னாலே சென்ற வசந்த குமார் உள்ளே மல்லாந்து படுத்து மண்டபத்து மேற்கூரையில் செறிந்திருந்த சிற்பங்களை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். கூடவே இன்னொருவரும் படுத்திருக்கக் கண்ட்டோம். அது வம்சி. 13 வயதான வம்சியின் அம்மாதான் கோயிலில் பூசாரி. அவனுக்கு மூளைவளர்ச்சி சற்றே குறைவு. ஆனால் பச்சைக்கண்கள் கொண்ட அழகிய பையன். அந்த அம்மாள் நன்றாகவே மந்திரம் சொல்லி ஆரத்தி காட்டினாள். வம்சி பின்னாலேயே வந்து பத்து ரூபாயும் எங்கள் கையிலிருந்த பொரிப் பொட்டலத்தையும் வாங்கிக் கொண்டான்.
வண்டிகிளம்பும்போது பார்த்தால் வசந்தகுமாரைக் காணவில்லை. அவரை உள்ளே வைத்து பூட்டிவிட்டார்கள். மேலே ஏறி குதிக்க முடியுமா என்று மதில்மேல் நின்று பார்த்துக் கொண்டிருந்தார். அந்த அம்மையாரை கூப்பிட்டு கதவை திறக்கச் செய்தோம். எல்லாருக்கும் சிரிப்பு. ”இந்த ஊரில் இனி கொஞ்ச நாள் இது ஒரு பேச்சாக இருக்கும்” என்றார் கல்பற்றா நாராயணன்.
இந்த ஊரே எவராலும் பொருட்படுத்தப்படவில்லை என்று பட்டது. சிறப்பாக இருந்த ஒரு காகதீய நகரம் இது. பதிமூன்றாம் நூற்றாண்டில் மாலிக் காபூரால் அழிக்கப்பட்டபின் தலையெடுக்கவேயில்லை. அப்படியே கைவிடப்பட்டு மறைந்த்திருக்கிறது. பின்னர் ஆங்கில ஆட்சியாளர் காலத்தில் சற்று பராமரிப்பு வேலைகள் செய்யபப்ட்ட போது வந்து குடியேறிய கூலிக்காரர்கள் உருவாக்கிய கிராமம். இவர்கள் இன்று கோயிலின் அழிவுக்கும் காரணமாக இருக்கிறார்கள். இவ்விரு கோயில்களும் பெரும் கலைச்சின்னங்கள். எந்தவிதமான கவனமும் இல்லாமல் அழியவிடப்பட்டிருக்கின்றன. பூசாரியோ காவலரோ கூட ஒழுங்காக இல்லை.
பனகல் அருங்காட்சியகத்தில் திருமலகிரி என்ற ஊரின் அருகே உள்ள பௌத்த ஸ்தலம் பற்றி சொல்லபப்ட்டிருந்தது. ஆனால் அது வெகுவாக தள்ளி இருக்கும் ஃபாணகிரி என்ற ஊர்தான். S வடிவில் உள்ள ஒரு குன்று. ஃபாணம் என்றால் பாம்பு. அங்கே புராதனமான பௌத்த பல்கலை கழகம் இருந்திருக்கிறது. அதன் அக்காலத்துப்பெயர் தர்ம சக்ர புரி. இந்த தகவல் எல்லாம் அங்கே போய் தெரிந்து கொண்டது. எங்கும் எந்த தகவலும் இல்லை.
ஃபாணகிரியை நெருங்கி அங்கே பிள்ளையார் பூஜையில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது ஒருவர் தன்னை அந்த புதைபொருளாய்வுநிலத்துக் காவலர் என்று அறிமுகம் செய்து கூட்டிவந்தார். உற்சாகமாக தகவல்களைச் சொன்னார். நடந்து சென்று குன்றேறினோம். சரிவில் இடிந்து கைவிடப்பட்ட ஒரு விஷ்ணு ஆலயம் இருக்கிறது. ஆஞ்சநேயர் சிலை தள்ளி மல்லாந்து கிடந்தது. கோயிலின் கருவறை குகைக்கோயில். அங்கே ராமானுஜரின் சிலையும் ஓர் அரசரின் சிலையும் பாறையில் புடைப்புச் சிலைகளாக இருக்கிறது.
நீர் வழிந்த கறைகளால் அழகிய செவ்வரிகள் போடப்பட்ட வழவழப்பான பெரிய பாறை. மேலேறினால் சுற்றிலும் பசுமை. இரு குளங்கள் ஒரு ஏரி. மேலே புத்த பல்கலையின் இடிபாடுகள். புத்தர் வந்த இடமாகையால் ஒரு மாபெரும் ஸ்தூபி கட்டியிருக்கிறார்கள். அதன் செங்கல் அடித்தளம் மட்டுமே உள்ளது. சிறிய ஸ்தூபிகள் ஏராளமாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அவையெல்லாம் அந்த பல்கலையின் தலைவர்களாக இருந்த பிட்சுக்களின் சமாதியிடங்கள். விஹார அறைகள் சைத்யங்கள் போன்றவற்றின் செங்கல்லால் ஆன அடித்தளங்கள் நிறைய இருந்தன. சலவைக்கல்லால் ஆன ஒரு சிறிய ஸ்தூபி ஒரு சைத்யத்தின் உள்ளே இருந்த்ருக்கிறது. அதன் உதிரி துண்டுகளைக் கண்டோம்
”புத்தர் நடந்த மண்ணு சார்…நெனைக்கவே ஒருமாதிரி இருக்கு….உடம்பெல்லாம் சிலுக்குது”என்றார் செந்தில். அந்த இடத்தில் ஒரு அபூர்வமான மன எழுச்சியை உணர முடிந்தது. அந்தச் சூழல், அங்கே நாம் உணரும் கற்பனைக்கு அப்பாற்பட்ட பழங்காலம் எல்லாம் சேர்ந்து நம்மில் உருவாக்கும் மனநிலை அது. அங்கேயே மௌனத்தால் அனைத்தையும் உள்வாங்கியபடி நடந்தோம். வானம் முழுக்க மழைமேகங்கள். குளிரான காற்று.
மலைக்குக் கீழே ஒரு ராமர் கோயில் உள்ளது. அதைக்கட்டிய காரத் மந்துடு என்ற குறுநில மன்னனின் சிலை புடைப்புச்சிற்பமாக உள்ளது. அது ஒரு குகைக்கோயில். அதை ஒட்டி கற்கோயில் எழுப்பப்பட்டிருக்கிறது. எங்கும் அனுமார் சிலைகள். அங்கிருந்த கிணற்றில் நல்ல குடிநீர் இருந்தது. அதன் முற்றத்தில் பையன்கள் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தார்கள். ஒரு இளைஞன் மண்டபத்தில் அமர்ந்து வார இதழ் படித்துக் கொண்டிருந்தான். பெயர் சந்திர மௌலி என்றான். அரசியல்விஞ்ஞானத்தில் முதுகலை படிக்கிறானாம். ஆனால் ஒரு சொல் ஆங்கிலம் தெரியவில்லை. குத்துமதிப்பாக சில தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைப் பற்றிச் சொன்னான்.
வசந்தகுமார் போகுமிடமெல்லாம் சிரஞ்சீவி ஆட்சிக்கு வருவாரா என்று கேட்டுக்கொண்டிருந்தார். சிரஞ்சீவி அந்திராவில் அதிக எண்ணிக்கை இல்லாத [பலிஜா] காப்பு ஜாதியைச் சேர்ந்தவர். அவர்களுக்கு அதிகாரமும் இல்லை. ஆனால் அவருக்கு ஆந்திராவில் 30 சதவீத எண்ணிக்கை உள்ள தலித் மக்களின் ஏகோபித்த ஆதரவு இருக்கிறது. சந்திர மௌலி சிரஞ்சீவி கண்டிப்பாக முதல்வர் ஆவார் என்றான். நாயிடுவெல்லாம் அவ்வளவுதான், போச்சு என்று சிரித்தா. பிறகுதான் குட்டு வெளிப்பட்டது. அவன் முந்நூறு காப்பு என்ற சாதி. சிரஞ்சீவி அந்த சாதிதானாம். விஜயகாந்தும் அந்த சாதிதான். தமிழ்நாட்டில் அதை பலிஜா நாயிடு என்கிறார்கள்.
திரும்பிவரும் வழியில் மழை பிடித்துக் கொண்டது. ஒரு சிறு வீட்டு முகப்பில் இருந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரைக்கு முன் ஒதுங்கினோம். மணி நான்கு. சாப்பிடவில்லை. கடுமையான மழை. அந்த வீட்டில் ஒரு சிறுவன் மட்டும்தான் இருந்தான். வீடு இரண்டே அறைகள் கொண்டது. சமையலறை, படுக்கை அறை. படுக்கை அறையில் பாதிக்கு உளுந்து கொட்டி வைத்து ஒரு கட்டிலும் போட்டிருந்தார்கள். பையனிடம் சாப்பிட ஏதாவது இருக்குமா என்று செந்தில் கேட்டே விட்டார். ஒன்றுமே இல்லை. சரி ஆவக்காய் ஊறுகாய் இருக்கிறதா என்றார். அவன் கொண்டுவந்து கொடுத்தான். அதை அனல் பறக்க பஞ்சைப்பராரி போல நக்கிச் சாப்பிட்டார்கள் — நானும்தான்.
மழைவிட்டபின் கிளம்பினோம். வரங்கல் செல்வதற்காக.
பனகல் கோயில்
வம்சி
ஸ்தூபியின் அடித்தளம் ஃபானகிரி