ஜோர்ஜ் அதன் பின் ஏழுமாதம் என்னுடைய இணைபிரியாத நண்பனாக இருந்தான். ஒரு நிரந்தரச்சடங்குபோல் இருந்த பதிவு, சோதனை, சரிபார்ப்பு, விசாரணை எல்லாம் முடிந்தபின் அடையாள எண்ணும் அட்டையும் கொடுக்கப்பட்டு முகாமுக்கு அனுப்பப்பட்டோம். அங்கே ஏற்கனவே பதினேழு குடும்பங்கள் இருந்தன. முன்பு உப்புக்களஞ்சியமாக இருந்த பெரிய தகரக்கொட்டகையை பிய்ந்துபோன பனையோலைத்தட்டிகளால் மறைந்து பிரித்து அறைகளாக ஆக்கி குடியிருந்தனர். கூரைக்கு கீழே எண்பத்தெட்டு பேருடைய மொத்த உரையாடலும் ஒரு முழக்கமாக எதிரொலித்துக் கலந்திருந்தது. பெட்டிகளுடனும் குழந்தைகளுடனும் நாங்கள் உள்ளே சென்றபோது நட்போ வரவேற்போ தெரியாத முகங்கள் எங்களை ஆர்வமில்லாத கண்களுடன் பார்த்தன. குழந்தைகள் பெரிய கண்களுடன் வாயில் வைத்துக்கொண்டு நின்று வேடிக்கை பார்த்தன. எங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த தட்டிமறைப்பு அறைகளில் ஏற்கனவே குடியிருந்தவர்கள் வேறு முகாமுக்குச் சென்றிருந்தார்கள். அவர்கள் வாழ்ந்ததன் தடையங்களால் நிறைந்திருந்தன சுவர்களும் தரையும். எண்ணைப்பிசுக்கு, கறைகள், கரிப்படலம் பரவிய சுவர். சில பழைய காலண்டர்கள்…
முதலில் இங்கே எப்படி வாழமுடியும் என்ற திகைப்பே எழுந்தது. ஆனால் பெண்கள் சில கணங்களுக்குள் அந்த இடத்தில் இணைந்து விட்டார்கள். முதலில் அந்த இடம் அவர்கள் மனதுக்குள் அவர்களின் வாழ்விடமாக மாறியது. அந்தந்த இடங்களில் அந்தந்த பொருட்கள் கற்பனையில் அமர்ந்துகொண்டன. அதன்பின்னர் அவ்வாறு அந்த அறையை மாற்றுவதற்கான கடுமையான வேலை ஆரம்பித்தது. வேலைசெய்யும்போது ஏற்படும் உற்சாகம் நிறைந்தது, குழந்தைகளை அதட்டி கணவர்களை வேலை ஏவி பரபரப்பானார்கள். தூசிபெருக்கி சுவர்மூலைகளின் ஒட்டடைகளை அகற்றி பாத்திரங்களை அடுக்கி பொருட்களை உரிய இடங்களில் வைத்து குழந்தைகளை தொட்டில்கட்டி தூங்கவைத்து எட்டுகைகளுடன் வேலைசெய்துகொண்டிருந்தார்கள். ஆண்கள் மட்டும் மெல்ல வெளியே வந்து முகாமுக்கு முன்னால் நின்றிருந்த கருவேல மரத்திற்கு அடியில் சென்று தரையில் கிடந்த பாறாங்கற்களில் அமர்ந்தோம். அங்கே ஏற்கனவே இருந்தவர்கள் எங்களை சுருங்கிய கண்களுடன் பார்த்தார்கள். எங்கள் புன்னகைகளை திருப்பியளிக்கவில்லை. ஜோர்ஜ் “அண்ணை வணக்கம், பீடி இருக்கா?” என்றான். அவர்களில் வயதானவர் ஒருகணம் கூர்ந்து நோக்கிவிட்டு இரண்டு பீடிகளை எடுத்து ஒன்றை எனக்கும் நீட்டினார்.
பீடியை பற்றவைத்து இழுத்துவிட்டு காத்திருந்தோம். அவர்கள் பேச ஆரம்பிக்கவில்லை. சிலநிமிடங்களுக்குப் பின் ஜோர்ஜ் “நல்ல வெப்பம்” என்றான். அவர்களில் ஒருவர் “ம்” என்றார். மீண்டும் கொஞ்ச நேரம் மௌனமாக இருந்துவிட்டு ஜோர்ஜ் “இங்க மழை உண்டா?” என்றான். அவர்களில் ஒருவர் “தம்பிக்கு ஊரிலே எங்க?” என்றார். இறுக்கம் மெல்ல தளர்ந்தது. அதன் பின்னர் மெல்ல பேசிக்கொள்ள ஆரம்பித்தோம். பொதுவான வசதிகள் சிக்கல்கள் போன்றவற்றை. அவர்களில் மூத்தவரான ஜெபத்துரை “தம்பி நீங்கள் எந்த ஆக்கள்?” என்றார். நான் என் சாதியை மாற்றிச்சொன்னேன். சாதிக்குப் பின் ஊர், ஊருக்குப்பின் உறவினர்கள்.
ஆனால் ஒரு சொல் கூட அரசியல் பேசவில்லை. போர்நிலவரத்தைக்கூட பேசிக்கொள்ளவில்லை. முகாமில் எவரும் பொதுவாக அரசியலே பேசுவதில்லை. பிறருடைய அரசியல் என்ன என்பது எப்போதுமே ரகசியமானது. யாரையுமே நம்பக்கூடாதென்பதே இந்தப் போர் எங்கள் சமூகத்துக்குக் கற்றுக்கொடுத்த முதல்பாடம். நாக்கின் மீது இரட்டைத்தாழ் போடாத ஒரு ஈழத்தவரை நீங்கள் சந்திக்க முடியாது. நம்மிடம் ஒருவர் பேசும்போது அவரது கண்கள் சம்பந்தமில்லாமல் நம்மை வேவுபார்ப்பதைக் காணலாம். கண்கள் சந்தித்துக்கொண்டால் உடனே எதிர்முனைக் காந்தமுட்கள் போல விலகிக்கொள்ளும். ஒருபோதும் அவர் தன்னைப்பற்றிய முழு விவரங்களையும் சொல்வதில்லை, நம்மிடம் கேட்பதுமில்லை. பேச்சு நகர்ந்து நகர்ந்து ஓர் எல்லைக்குச் சென்றதும் நிறுத்திக்கொள்ளவேண்டிய இடம் இருவருக்குமே தெரிந்து கச்சிதமாகப் பின்வாங்கி விடுவோம்.
அன்றிரவு வீட்டுச்சாப்பாடு சாப்பிட்டோம். சோறு நீரில் வெந்து தளதளத்து எம்பிக் குதிக்கும் மணமே பசியைக் கிளப்பி உடலைப் பதறச்செய்தது. குழம்பு ஏதும் இல்லை. கருவாட்டை லேசாக தீயில் வாட்டிக் கடித்துக்கொண்டு புளிநீர் விட்ட சூடான சோற்றை அள்ளி அள்ளித் தின்றபோது உணவுடன் உயிருக்குள்ள உறவென்ன என்று புரிந்தது. படுத்துக்கொள்வதற்கு பாய் ஏதும் இல்லை. நான் சேவியர் என்பவரின் மைத்துனனாக பதிவுசெய்யப்பட்டிருந்தேன். அவரது மனைவி பக்கத்து வீட்டுக்குப் போய் இரு பாலிதீன் தாள்களை வாங்கி வந்தார். அதுதான் அங்கே படுப்பதற்கு. பெண்களும் குழந்தைகளும் மட்டும்தான் முகாமுக்குள் படுப்பார்கள். அங்குள்ள புழுக்கத்தில் ஆண்கள் படுத்துக்கொள்ள முடியாது. வெளியே கடற்காற்று கொஞ்சம் மணலுடன் வீசிக்கொண்டிருந்தது. தாளைப்பரப்பி படுத்துக்கொண்டேன். ஜோர்ஜ் வந்து என்னருகே படுத்தான். கருவேலமரத்தில் காற்று சீறிச்சென்று கொண்டிருந்தது. முகாமின் தகரக்கூரையில் மென்மையாக மழை பெய்வதுபோல அதன் சத்தம். மணல்காற்றுக்கு முகத்தின்மீது மெல்லிய துணியைப் போட்டுக்கொண்டுதான் தூங்க வேண்டும். தூரத்தில் கடல் இரைந்துகொண்டிருந்தது. கலங்கரை விளக்கின் ஒளி பறவை போல வானில் சுழன்று சென்றது.
நான் கைகளை தலைக்கு வைத்துக்கொண்டு மல்லாந்து படுத்திருந்தேன். ஜோர்ஜ் இருளுக்குள் என்னை நோக்கி நடந்துவந்து ”அண்ணை” என்று என்னை அடையாளம் கண்டபின்னர் என்னருகே தாளை விரித்தான். “இங்க கொசுத்தொல்லை உண்டு… மண்ணெண்ணையிலே வேப்பெண்ணைய கலந்து வெளக்கு வைக்கிறது வழக்கமாம். கொசு போயிடும்…” என்றான். படுத்துக்கொண்டு “வெளியே கொசு வராது, காத்து அடிக்குதே?” என்றான். நான் ஒன்றும் சொல்லவில்லை. என் திட்டப்படி நான் ஜார்ஜை நட்பாக்கிக் கொள்ளவேண்டும். ஆனால் நான் அவனை அறிய விரும்பினேன். அவனை நம்புவதற்கான முகாந்திரமேதும் எனக்குக் கிடைக்கவில்லை.
ஜோர்ஜ் ”நிம்மதியா தூங்கணும் எண்டு நினைக்கிறேன் அண்ணை… ஆனா நிம்மதியும் இல்லை தூக்கமும் இல்லை” என்றான் நான் உம் கொட்டினேன். அவன் பெருமூச்சுகளுடன் புரண்டுகொண்டே இருந்தான். கொஞ்சநேரத்திலேயே கரடுமுரடான தரை உடலை உறுத்த ஆரம்பித்தது. ஆனாலும் களைப்பில் நான் சீக்கிரமே தூங்கிவிட்டேன். நள்ளிரவில் புரண்டுபடுத்தபோது ஜோர்ஜ் மெல்ல “அண்ணை” என்றான். நான் “ம்ம்” என்றேன். அவன் ஆழமான மெல்லிய குரலில் “திரும்பி அந்த மண்ணை மிதிப்பமா?” என்றான். நான் அரைக்கணம் கழித்து “எதுக்கு?” என்றேன். அவன் பேசாமல் படுத்திருந்தான். ”அங்க என்ன மிச்சமிருக்கு?” என்றேன் மீண்டும். அவன் பெருமூச்சு விட்டான். “பீடி இருக்கா?” என்றான். “இல்லை” அவன் மீண்டும் பெருமூச்சு விட்டான். “எங்கடை வீடு காங்கேசந்துறையிலதான் அண்ணை…” என்றான். பின்னர் சடசடவென மழை கொட்டுவது போல தன்னைப்பற்றி எல்லாவற்றையும் சொல்ல ஆரம்பித்தான்.
அவன் இலங்கையில் அழிக்கப்பட்டுவிட்ட இயக்கமொன்றின் உறுப்பினராக இருந்திருக்கிறான். ஆனால் அதில் அவன் இருந்தது யாருக்கும் தெரியாது. பத்தாம் வகுப்பு தேறியபின் கொழும்புக்கு படிக்கச்சென்றவன் அந்த இயக்கத்தின் இரண்டரை வருடப் பயிற்சிக்காக இந்தியா வந்தான். திரும்ப அங்கே சென்று சேர்வதற்குள் அந்த இயக்கம் அழிக்கப்பட்டுவிட்டது. ஆகவே பேசாமல் கொழும்பில் ஒருவருடம் தங்கியிருந்துவிட்டு ஊருக்குச் சென்று சேர்ந்தான். அங்கே இயக்கத்தில் இருந்து அவனைக் கூப்பிட்டு பலமுறை விசாரித்தார்கள். அவனுடைய மாமா கத்தோலிக்க பாதிரியாராக இருந்ததனால் அவன் தப்ப முடிந்தது. அவன் மேலும் அங்கே தங்கமுடியாதென்பதனால் அவர்தான் அவனை அகதியாகக் கிளம்பச் சொன்னார்.
“உனக்கு என்ன வயதாகிறது?” என்றேன். “இருபத்துமூணு அண்ணை” என்றான். மிகவும் சிறுவன். “ரெஜீனாவுக்கு என்னைவிட நாலுவயசு அதிகம்…” என்றான். அந்தக் கத்தோலிக்கபாதிரியாரின் தம்பி மகள். அவளை மணம் முடித்த ஒரே காரணத்தால்தான் அவனால் தப்பமுடிந்தது. சொந்தமாக இருந்த மீன்பிடிப்படகை விற்று பணம்சேர்த்து இயக்கத்தின் கீழ்மட்டங்களுக்கு லஞ்சம் கொடுத்து படகுக்கான பணத்தையும் சேர்த்து குழந்தையுடனும் அம்மாவுடனும் கிளம்பியிருந்தான். ஜோர்ஜ் என்னை ஒருமாதம் முன்னரே கவனித்துவிட்டிருந்தான். தொடர்ச்சியாக என்னை கண்காணித்துக்கொண்டே இருந்திருக்கிறான். என்னிடம் பேச இந்த நாட்டுமண்ணை மிதிப்பது வரை காத்திருந்திருக்கிறான்.
ஜோர்ஜ் அன்று விடிவது வரை பேசிக்கொண்டே இருந்தான். பேசப்பேச அவனுக்கு விஷயங்கள் வந்துகொண்டே இருந்தன. அவனுடைய சிறுவயதுக் கனவுகள் அவன் மயிரிழையில் தப்பிப்பிழைத்த தருணங்கள். இந்த இரண்டு விஷயங்களைப்பற்றித்தான் அத்தனைபேரும் பேசுவார்கள். அந்தப்பேச்சில் எத்தனை சதவீதம் உண்மை என்று எவராலும் சொல்லமுடியாது. பல விஷயங்கள் கற்பனையாக இருக்கும். பலமுறை உக்கிரமாக கற்பனையில் அனுபவிக்கப்பட்ட அனுபவங்கள் அவை. உண்மையான அனுபவங்களை விடவும் ஒரு வகையில் நுட்பமானவை, விரிவானவை. நான் எண்ணிக்கொள்வதுண்டு, ஒருவர் சொல்லும் அனுபவம் மிகமிக உண்மையாகத் தோன்றினால் அனேகமாக அது பொய்தான் என்று. இந்தச்சூழலில் ஒரு மனிதன் மகிழ்ச்சி அடைவதற்கு இரண்டு காரணங்கள்தான் உள்ளன. ஒன்று இளமைநினைவுகள், அக்காலத்து கனவுகள். இரண்டு, இத்தனைக்குப் பிறகும் உயிர்வாழ முடிதல். அந்த இரு உணர்ச்சிகள்தான் இப்படி வெளியாகின்றன. ஜோர்ஜ் இன்னமும் முதிர்ச்சி அடையாத இளைஞன்.
அந்த இரவில் ஏன் அப்படிப் பேசினான்? விடியற்காலையில் மனம் மிக நெகிழ்ந்திருக்கிறது. நான் ஒருபோதும் விடிகாலையில் எவரிடமும் உரையாடுவதில்லை. அப்போது உணர்ச்சிகள் நம் கையில் நிற்காது. ஆனால் அதைவிட முக்கியமாக அவன் இந்த புதிய மண்ணில் புதிதாக தன்னை உருவாக்கிக்கொண்டு ஒரு தொடக்கத்தை நிகழ்த்த விரும்பினான். புதிதாகத் தொடங்கியிருக்கிறோம் என்பதை நம் மனம் நம்பவேண்டுமென்றால் நாம் ஏதாவது செய்தாகவேண்டும். நம்மை நாமே நம்பவைப்பது மட்டும்தான் அங்கே பிரச்சினை. அவன் பேசியது அதற்காகவே. அவன் தன்னை பேசிப் பேசி உருவாக்கிக் கொண்டான். கடைசியில் அவன் குடங்களில் நீர் நிறைவடையும்போது ஓசை மாறுபடுவதுபோல உணர்ச்சிகள் நிறைவடைந்து மெதுவாக அமைதியானான்.
ஏன் அத்தனைதூரம் பேசினோம் என்று அவன் எண்ணுகிறான் என்று உணர்ந்தேன். அந்த உணர்ச்சிப்பெருக்குக்கு எதிராக நான் மிகவும் கவனமாக பேசியதைப்பற்றி நினைத்துக்கொள்கிறான். அவன் என்ன செய்வான் என என்னால் ஊகிக்க முடியவில்லை. என் மீது தேவைக்குமீறிய சந்தேகம் கொள்வதற்கான வாய்ப்பே அதிகம். ஆனால் அவன் பேசியபோது அவன் இன்னமும் சிறுவன் தான் என்பது உறுதியாகியது. “அண்ணை நீங்கள் எனக்கு சொந்த சகோதரன் மாதிரி…” என்று ஆரம்பித்து நெகிழ்ந்துகொண்டே சென்று சட்டென்று விசும்பி அழ ஆரம்பித்தான். நான் உள்ளுக்குள் புன்னகை செய்தேன் என்றாலும் கைநீட்டி அவன் கைகளைப் பிடித்துக்கொண்டேன். அவன் என்கைகள் மீது தன் கைகளை வைத்தான். அவை சூடாக ஈரமாக இருந்தன.
அத்தனை தூரம் நெருங்கியபின்னர் அவனால் என்னை விட்டுவிட முடியாது. மேலும் மேலும் நெருங்கித்தான் ஆகவேண்டும். மறுநாள்முதல் அவன் எனக்குக் குற்றேவல் புரிந்தான். நாங்கள் இருவரும் எந்நேரமும் அந்த கருவேலமரத்தடி கல்லில் அமர்ந்துகொண்டு மெல்லிய குரலில் பேசிக்கொண்டே இருந்தோம். அவனுடைய மனைவிக்கு எங்கள் பேச்சு சிலநாட்களிலேயே ஐயத்தை உருவாக்கியது. தீவிரமான எந்த விஷயமும் ஆபத்தே என்று எண்ணும் மனநிலைக்கு எங்களூர் பெண்கள் வந்துவிட்டிருக்கிறார்கள். அவள் அவனிடம் என்னை தவிர்க்கும்படிச் சொல்லியிருப்பாள் என்று நினைக்கிறேன். அவன் பொருட்படுத்தியிருக்கவில்லை. நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது வெறுப்பால் சுளித்த முகத்துடன் அவள் அவ்வழியாக அடிக்கடி நடந்துசெல்வாள். நான் தனியாக எதிரே வந்தால் காறி தரையில் துப்புவாள். அவளை நான் ஏறிட்டே பார்ப்பதில்லை. கருமையான நிறமும் சுருண்ட கூந்தலும் கொண்ட கன்னங்கள் ஒட்டிய பெண். அவள் வயதை விட அதிகமான வயது தெரியும். ஒரே முறை என் காதுபட ஏதோ சொன்னாள். பிள்ளைகுட்டி உள்ளவர்களின் வாழ்க்கையுடன் விளையாடவேண்டாம் என்று சொன்னதுபோல இருந்தது.
முகாமில் வெறுப்பே எப்போதும் ஒலித்துக்கொண்டிருந்தது. எந்த மனிதரானாலும் அங்கே சகமனிதர்களை வெறுக்காமலிருக்க முடியாது. முதற்பிரச்சினை இடம்தான். மனிதர்கள் ஒருவர்தோளை ஒருவர் இடித்துக்கொண்டு ஒருவர் துப்பும் எச்சில் ஒருவர் மீது தெறிக்கும்படி நெருக்கிக்கொண்டு வாழ்வதென்பதுதான் நரகம் என்பது. அதன்பின் எல்லாமே பிரச்சினைகள்தான். முகாமின் ஒரே அடிபம்பில் உப்புகலந்த நீர்தான் வரும். அதுதான் துணிதுவைக்கவும் குளிக்கவும் எல்லாம். அந்த நீரில் குளித்தால் சோப்பு போடக்கூடாது. சோப்பு அழுக்குடன் சேர்ந்து ஒருவகை பிசினாக தோல்மீது திரிதிரியாக உருளும். குடிநீர் இரண்டுநாட்களுக்கு ஒருமுறை ஒரு லாரியில் ஏற்றப்பட்ட கரிய பிளாஸ்டிக் தொட்டியில் கொண்டுவரப்பட்டு வினியோகம் செய்யப்படும். குடும்பத்திற்கு நான்கு குடம் என்று கணக்கு. கழிப்பறைகள் என்பது தட்டி வைத்து மறைக்கப்பட்ட குழிகள். அவற்றின்மீது பலகைகள் போடப்பட்டிருக்கும் கீழே நாற்றமடிக்கும் பலநாள் மலம் நொதித்துப் புழுத்துஅசைந்துகொண்டிருக்கும். எப்போதும் வெயிலில் காயும் சிறுநீரின் வாடை. திரும்பத்திரும்ப இந்த முகாமின் முள்கம்பிவேலிக்குள்ளேயே சுற்றி வரவேண்டும். வெளியே போக காவலர் அனுமதி வேண்டும். வந்தபின் குறைந்தது மூன்றுமாதம் தாண்டாமல் அனுமதி கொடுக்கமாட்டார்கள்.
மூன்று மாதங்களுக்குள் ஜோர்ஜ் என்னை அவனுடைய அண்ணனாகவே வரித்துக்கொண்டிருந்தான். அவன் மனைவியின் வெறுப்பு மெல்லமெல்ல உறைந்த வெற்றுப்பார்வையாக மாறியது. முகாமிலுள்ள அத்தனை குழந்தைகளுக்கும் விரலிடுக்குகளில் சொறி வந்தது. இரண்டுவாரம் திரும்பத்திரும்ப புகார்கொடுத்து மன்றாடியபின் ஒரு வயோதிகடாக்டர் வந்து நீலநிறமான ஒரு மையை கொடுத்தார். அதைபோட்டபோது குழந்தைகள் கதறி அழுது கால்களை உதைத்து திமிறின. பலவாரங்கள் அந்த மையின் கந்தக வாசனையே முகாமில் நிறைந்திருந்தது. நிறைய கரியரிசியும் உமியும் கலந்த அரிசியும் சிறியசிவந்த பருப்பும் சீனியும் அளித்தார்கள். மற்ற பொருட்களை முகாமில் இருந்து சிலர் அனுமதிபெற்று வெளியே போய் வாங்கிக்கொண்டு வரவேண்டும். மீன் மட்டும் கடற்கரையிலிருந்து நேராகவே கொண்டுவந்து விற்பார்கள்.
எண்பதாவது நாள் வெளியே போகும் அனுமதி பெற்று நானும் ஜோர்ஜும் முகாமைவிட்டுக் கிளம்பினோம். எனக்கு புதிய ஊரின் நிலம் ஒருவிதமான பதைப்பையே கொடுத்துக்கொண்டிருந்தது. தென்னைமரங்கள் குறைவு. பெரும்பாலும் உடைமுள்கூட்டங்கள் நடுவே புதிய டிஸ்டெம்பர் அடிக்கப்பட்ட மஞ்சள் நிறமான கட்டிடங்கள். எங்குபார்த்தாலும் செல்போன் விளம்பரங்கள். சிமிண்ட் விளம்பரங்களும் துணிக்கடை விளம்பரங்களும் சுவர்களில் கண்ணில் அறையும்படி வரையப்பட்டிருந்தன. டீக்கடைகளில் ஜனங்கள் எந்தவிதமான அவசரமும் இல்லாமல் பேப்பர் வாசித்துக்கொண்டு டீ குடித்தார்கள்.
வழியெங்கும் ஏதேதோ நடந்துகொண்டிருந்தது. தகரப்பொருட்களை பிரித்துப்போட்டு டங் டங் என்று அடித்துக்கொண்டிருந்தார்கள். டயர் வல்கனைசிங் செய்தார்கள். ஏதோ மோட்டார் இயந்திரபாகத்தை ஒரு சிறுவன் துணிபோட்டு கொளுத்தி எரியவிட்டுக்கொண்டிருந்தான். எத்தனை தொழில்கள், எத்தனை வாழ்க்கைகள்… ஆச்சரியமாகவே இருந்தது. சுடிதார் போட்ட பெண்கள் புத்தகங்களுடன் காத்திருந்தார்கள். இருசக்கரவாகனங்களில் பையன்கள் வளைந்து நெளிந்து சென்றார்கள். ஆட்டோக்களில் பத்துபேர் வரை ஏறி சிரித்துப்பேசிக்கொண்டு புகைகக்கியபடிச் சென்றார்கள்.
முதலில் சுகுணா முனியாண்டிவிலாஸ் என்ற ஓட்டலில் நுழைந்து பரோட்டாவும் சிக்கனும் சாப்பிட்டோம். ஜோர்ஜிடம் கொஞ்சம் பணம் இருந்தது. முகாமில் கொடுக்கப்பட்ட உதவித்தொகையும் இருந்தது. என்னிடம் பணமே இருக்கவில்லை. ஆனால் ஜோர்ஜ் எனக்காக எதையும் செல்வழிப்பவனாக இருந்தான். சாப்பிட்டபின் நகரத்தெருவில் சுற்றினோம். ஜோர்ஜ் அவனுடைய கைவிளக்குக்கு இரு பாட்டரிகளும் குழந்தைக்கு சில மருந்துகளும் வாங்கிக்கொண்டான். மனைவிக்கு பௌடரும் ஸ்டிக்கர்பொட்டும். நான் பேசாமல் கூடவே நின்றேன். “அண்ணை உங்களுக்கு என்ன வேனும்?” என்றான். நான் தலையசைத்தேன்.
அதன்பின் இருவரும் சந்தை நெரிசல் வழியாக குவிக்கப்பட்ட முள்ளங்கி, பெரிய வெங்காயம், பூண்டு வழியாக கூச்சல்களையும் குனிந்து வாங்கும் பெண்களின் பின்பக்கங்களையும் தாண்டிச்சென்றோம். உரச்சாக்குகளால் ஆன பைகள் தொங்கும் கடைகள் கருவாடுகள் குவிக்கப்பட்ட சாலையோர கடைகள். அப்பால் ஒரு திரையரங்கில் டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். ‘தூள்’ என்ற தமிழ் சினிமா. எனக்கு படம் சில நிமிடங்களிலேயே சலித்து விட்டது. கால்களை நீட்டிக்கொண்டு நன்றாக சாய்ந்தமர்ந்து அக்கறை இல்லாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் ஜோர்ஜுக்கு படம் மிகவும் பிடித்திருந்தது. சிரித்தும் அடிக்கடி இருக்கையில் துள்ளியும் கைதட்டியும் ஒன்றிப்போய் ரசித்துக்கொண்டிருந்தான்.
திடீரென்று இந்த்தகைய அமைதியான உற்சாகமான ஒரு இடத்தில் நான் இருப்பதைப்பற்றி எனக்கே ஆச்சரியம் ஏற்பட்டது. ஒவ்வொரு முகங்களாகப் பார்த்தேன். எல்லமே பற்களைக் காட்டியபடி பரவசநிலையில் ஒளியசைந்துகொண்டிருந்தன. அந்த அரங்கிலேயே நான் மட்டும் தனித்திருக்கிறேன் என்று தோன்றியது. அமைதியான நிம்மதியான அந்தச்சூழலில் என் நரம்புகள் பதற்றமடைந்து நிலைகொள்ளாமல் என்னை அசையச்செய்தன. நிமிர்ந்தும் தளர்ந்தும் கால்களை நீட்டியும் மடித்தும் அமர்ந்தேன். ஓயாமல் நான் அசைந்துகொண்டிருப்பதை யாராவது கவனிக்கிறார்களா என்று எண்ணி அசையாமலிருந்தால் இறுக்கம் தாளாமல் சில நிமிடங்களிலேயே என் தசைகள் களைத்தன.
இடைவேளைவிட்டபோது அப்பாடா என்றிருந்தாலும் இன்னும் பாதிநேரம் மிச்சமிருக்கிறதே என்றும் இருந்தது. டீகுடித்துக்கொண்டிருக்கும்போது ஜோர்ஜ் ஜோதிகாவைப்பற்றி பரவசமாகப் பேசினான். என்ன ஒரு கண் இல்லையா என்று வியந்தான். இனிமேல் இரண்டுவாரங்களுக்கு ஒருமுறையாவது நாம் படம்பார்த்துவிடவேண்டும் என்று சொன்னான். நான் புன்னகைசெய்தேன். என்னைச்சூழ்ந்திருந்த அந்த கடற்கரை இளைஞர்கள் ஏன் அத்தனை கத்துகிறார்கள் எதற்காக உரக்கப்பேசுகிறார்கள் என்றே புரியவில்லை. சலிப்பூட்டுகிற வாழ்க்கையை கத்திக் கத்தி உற்சாகமாக ஆக்கிக்கொள்கிறார்களா என்ன?
மீண்டும் சினிமா. நான் அப்போதுதான் ஒன்றை நினைத்துக்கொண்டேன். குண்டுகள் வெடிக்கும் போர்முனைகளில் நான் நிதானமாகவே இருந்திருக்கிறேன். தோழர்கள் குண்டுபட்டு விழும்போதுகூட என் மனம் சமநிலையில் தான் இருந்திருக்கிறது. எல்லா புலன்களும் உச்சகட்ட விழிப்புநிலையில் இருப்பதனால் ஒரு நடுக்கம் இருந்துகொண்டிருக்கும். ஆனால் நான் நிலைகொள்ளாமல் இருந்ததில்லை. அங்கே என்னுடைய எல்லா கருவிகளும் செயல்பட்டுக்கொண்டிருந்தன, ஆகவே என்னிடம் எதுவும் மிச்சமில்லை. ஆனால் இந்த திரையரங்கில் நான் பெரும்பகுதி மிச்சமிருக்கிறேன். செயலற்று, பொருளற்று. அந்த எஞ்சும் ஆற்றல்தான் என்னை பதற்றம் கொள்ளச் செய்கிறது. நிலைகொள்ளாமலாக்குகிறது. இந்த இளைஞர்களுக்கு கொஞ்சம்போரின் சுவையை யாராவது காட்டிவிட்டால்போதும் அதன்பின் இவர்களை எவராலும் கட்டுப்படுத்த முடியாது. இந்த திரையரங்குகள் இருக்காது. கட்டிடங்கள் தெருக்கள் மரங்கள் எதுவுமே எஞ்சாது. இடிபாடுகள் கருகிய தாவரங்கள் மட்டும்தான். நான் புன்னகைசெய்தேன்.
சினிமா முடிந்து திரும்பும்போது ஜோர்ஜ் இரு மசாலாபால் வாங்கி எனக்கும் ஒன்று கொடுத்தான். ஏதோ கொட்டை அரைத்துப்போட்டிருந்தார்கள். அந்தப்பால் ஆண்மையைப் பெருக்கும் என்று சொல்லி ஜோர்ஜ் புன்னகைசெய்தான். நானும் புன்னகைசெய்தேன். ”அண்ணை இண்டைக்கு நான் சந்தோசமா இருக்கேன்… ரொம்ப சந்தோசமா இருக்கேன்” என்று சொன்னான் ஜோர்ஜ். அவனுடைய பரவசத்தை விசித்திரமாக பார்த்துக்கொண்டு பேருந்து நிலையம் சென்றேன். கடற்கரைப்பையன்கள் அங்கும் கத்திக்கொண்டிருந்தார்கள். ஜோர்ஜ் அவர்களைப்போல ஆகவேண்டுமென்று பலவருடமாக கனவுகண்டுகொண்டிருந்தவன். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஜோர்ஜின் அனுபவங்களைக் கேட்டால் மயிர்கூச்செறிந்து அதுவல்லவா வாழ்க்கை என்பார்கள்.
பேருந்தில் நல்ல கூட்டம். எலலம் கடற்கரை பையன்கள். ‘பாட்டுபோடுரா’ என்று கத்தினார்கள். நான் எதிர்பாராதபடி சட்டென்று இளையராஜா இசையில் ‘முதல்முதலாக காதல்டூயட் பாட வந்தேனே’ என்ற பாட்டு போட்டார்கள். அந்த நிமிடம் வரை நெரிசலும் தூக்கக் கலக்கமுமாக இருந்த அந்தப் பயணம் சட்டென்று ஒரு கனவுத்தன்மையை அடைந்தது. நினைவுகளில் என்னென்னவோ எழுந்து வந்தன. யாழ்ப்பாணத்து அரங்கில் நான் என் கல்லூரி நண்பர்களுடன் அந்தப்படத்தைப்பார்த்தேன். என்ன படம் என்று யோசித்து யோசித்து தேடினேன். ராதிகாவும் சுதாகரும் நடித்தது. குளுமையான ஒளிப்பதிவு. ஊட்டியின் காட்சி… அந்தப்பயணத்தின் குளிர்ந்த காற்றும் அவ்வப்போது நடத்துநர் அடித்த விசிலும் எல்லாமே இனிமையாக ஆகிவிட்டன. அடுத்தபாட்டு ’ஆயிரம் மலர்களே மலருங்கள்’ ஆம், நிறம் மாறாத பூக்கள்.
கடற்கரை நிறுத்ததில் இறங்கி புதர்கள் மண்டிய பாதை வழியாக முகாம் நோக்கிச் சென்றோம். “ஜோர்ஜ், அண்ணை அந்தப்பாட்டு பிடிச்சிருந்ததோ?” என்றான். “ம்ம்” என்றேன். “பழையபாட்டு… ஸ்கூலிலே படிக்கிறப்ப பாத்தம்.” நான் பெருமூச்சு விட்டேன். அப்பகுதியில் பாம்புகள் உண்டு என்பதனால் கால்களை திம் திம் என்று வைத்துச்செல்லவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். ஜோர்ஜ் என்னிடம் ஏதோ சொல்ல வருவது போலிருந்தது. தயங்கி மீண்டும் முயன்று மீண்டும் தயங்கியபின் அவன் மெல்ல “அண்ணை எங்கிட்ட அட்றஸ் ஒண்டு இருக்கு” என்றான். “என்ன அட்றஸ்?” என்றேன். என் மூளைக்குள் எல்லாம் விழித்துக் கொண்டன. ஆனால் குரலில் ஆர்வமோ பரபரப்போ இல்லை.
ஜோர்ஜ் மெல்ல “எங்கட இயக்கத்திண்ட போன் நம்பர் இருக்கு அண்ணை… மனப்பாடம் செயது வச்சிருக்கேன்… போயிப்பாத்தா எனக்கு இஞ்ச ஒரு வேலை ஏற்பாடு செய்து தருவினம்..” நான் “யோசிச்சு செய்யணும்…” என்றேன். “இவனுகளுக்கு தெரிஞ்சா…” “தெரியாம செய்யலாம் அண்ணை…” நான் “சரி” என்றேன். “அண்ணையைப்பற்றியும் நான் சொல்லுறன்.” நான் “ம்ம்” என்றேன். முதல் திறப்பு அப்படித்தான் ஏற்பட்டது.
[மேலும்]