கலைஞர்களை வழிபடலாமா?

அன்புள்ள ஜெ,

கடுமையான கட்டுரைகள் சமநிலையுடன் வந்தாலும், அதை ஜீரணிக்கும் சக்தி ராஜாவின் பெரும்பாலான ரசிகர்களுக்கு இல்லை என்றே தோன்றுகிறது. சமநிலையோடு எடுத்துக் கொள்வார்களா என்பது பெரிய கேள்விக்குறிதான். இதில் உங்களுக்கு கருத்து வேறுபாடு இருக்குமானால், நீங்களே அந்தக் கட்டுரையை ஆரம்பித்து வையுங்கள். அப்புறம் பாருங்கள் உங்கள் நிலைமை என்னவென்று? இது இணைய விவாதங்களில் நான் கண்ட உண்மை

வெங்கிராம்

***

அன்புள்ள வெங்கிராம்

நீங்கள் சொல்வது உண்மை, இளையராஜாவுக்கு ரசிகர்களும் உண்டு, பக்தர்களும் உண்டு. ஆனால் அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. அது உலகம் முழுக்க உள்ள ஒரு நிகழ்வு. ஒரு கலைமேதை  அத்தகைய ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தாவிட்டால் மட்டுமே அது ஆச்சரியம். அந்த உணர்வுத்தீவிரங்களை  அந்தக்கலைமேதை பற்றிய விவாதத்தின் இயல்பான ஒரு தரப்பாக மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும். அவர்களையும் உள்ளிட்டே விவாதங்கள் நிகழமுடியும்.  அவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதில்லை. எந்த விவாதமும் ஒரு முரணியக்கமாகத்தானே இருக்க முடியும்?

இளையராஜாவைப்பற்றி இத்தனை சொல்லும் ஷாஜி சலீல் சௌதுரியை சலில்தா என்றே சொல்வார். எந்த சிறு விமரிசனமும் இல்லாத பெரும் பற்று, கண்மூடித்தனமான பக்தி அவருடையது. அவர் சலீல் குறித்த மெல்லிய விமரிசனங்களைக்கூட ஏற்க மாட்டார். சலீல் அவர்களை சாதாரணமாக விமரிசனம் செய்தால்கூட அவர்களை அவர் தீவிரமாக வெறுப்பார். அந்தப்பற்று மிக இளம் வயதிலேயே உருவாகி ஆளுமையின் ஒரு பகுதியாகவே ஆகிவிட்ட ஒன்று.

பெரும் ஆக்கங்களை உருவாக்கிய கலைஞர்களுக்கு அப்படிப்பட்ட ரசிகர்கள் உருவாவது அந்தக்கலையின் வல்லமைக்கே சான்று. சிலசமயம் எனக்குத் தோன்றுவதுண்டு, இருவகை நோக்குக்குமே அதற்கான சாத்தியங்கள் உண்டு என.  கொஞ்சம் விலக்கம் கொண்டு ஆய்வுமனநிலையுடன் ஓரு கலைமேதையை அணுகும்பார்வை நல்லது. அது நமக்கு அவரை புறவயமான ஓரு தளத்தில் வைத்து அணுகி தெளிவாக மதிப்பிட உதவக்கூடியது.  எல்லாரும் இதைத்தான் உயர்வானது என்றும் சொல்வார்கள்

ஆனால் அதிதீவிரமான பற்றுடன் ஒரு கலைஞனை அணுகுபவர்கள் நிதானமாக அணுகுபவர்களைவிட ஆழமான அறிதல்களை அடைகிறார்கள் என்ற எண்ணம் சமீப காலமாக ஏற்பட்டு வருகிறது. எனக்கு தல்ஸ்தோய் அளவுக்கு எவர் மேலும் பற்று இல்லை. அவரை அறிந்த அளவுக்கு எவரையும் அறிந்ததில்லை.

ஏனென்றால் கலை அறிவார்ந்தது அல்ல, ஆழ்மனம் சார்ந்தது என்பதே. பற்றின்றி ‘நடுநிலையுடன்’ கலைப்படைப்புக்குள் செல்பவன், கலைஞனை அணுகுபவன் தன் தர்க்கபுத்தியை அக்கலைஞனைநோக்கி திறந்து வைக்கிறான். பெரும்பற்றுடன் செல்பவன் தன் ஆழ்மனதை திறந்து வைக்கிறான். அக்கலைஞனின் ஒவ்வொரு மன அசைவும் தெரியும் இடத்துக்குச் சென்றுவிடுகிறான். அது ஒரு சிறந்த வழிதான் என்று நினைத்துக்கொள்கிறேன்

இங்கே குரு என்ற நிலையில் அந்தக் கலைஞன் வந்து விடுகிறான். குருவை களங்கமில்லா பெரும் பக்தியுடன் வழிபட்டாலொழிய கலை கைவராது என்ற நம்பிக்கை நம் மரபில் உண்டு. காரணம் அந்தப் பெரும் ஈடுபாடு காரணமாகவே நாம் குருவை அதிகவனத்துடன் ஒவ்வொரு கணமும் கூர்ந்து கவனிக்க முடியும்

நித்யாபற்றி என்னிடம் விமரிசன அணுகுமுறை இருக்கிறதா பக்தி இருக்கிறதா என்றுகேட்டால் பக்தி என்றே என்னால் சொல்ல முடியும். உக்கிரமான காதலன் போல அவரை ஒவ்வொரு நாளும் , நாள்முழுக்க நினைத்துக்கொண்டிருந்திருக்கிறேன். இன்றும் அவரை நினைக்காமல் ஒருநாள் கூட தாண்டிப்போனதில்லை. என் கனவில் மிக அதிகமாக வந்த மனிதர் அவரே.

அந்தப்பெரும் காதல் இருந்தமையால்தான் மிகச்சிக்கலான அவரது தத்துவ நூல்களைக்கூட மிக எளிதாக என்னால் கடந்து செல்ல முடிந்தது. அவர் அளித்தவற்றை சிந்தாமல் பெற்றுக்கொள்ளவும் முடிந்தது.

ஜெ

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Feb 11, 2010

முந்தைய கட்டுரைபுத்தகக் கண்காட்சியில் ஒரு புதியபெண்
அடுத்த கட்டுரைமின்நூல்களாக என் படைப்புக்கள்