அன்புள்ள ஜெ,
உயிர்மை இதழில் ஷாஜி இளையராஜாவைப்பற்றி எழுதிய் கட்டுரைக்கு உங்கள் பதிலை நான் மிகவும் எதிர்பார்த்தேன். இரண்டுமுறை சேட்டிலே வந்து கேட்டேன் நினைவிருக்கும். நீங்கள்தான் ஷாஜியின் கட்டுரைகளை அறிமுகப்படுத்தினீர்கள். உங்கள் வழியாகவே எனக்கு அவரை தெரியும். நீங்கள் ராஜாவுக்கு ஓரளவு நெருக்கமாக தெரிந்தவர். இசையைப்பற்றி ஒன்றுமே தெரியாது என்று நீங்கள் தப்பிவிடுவீர்கள். ஆனால் நான் கேட்பது அவரது தனிப்பட்ட விஷயங்களைப்பற்றி அக்கட்டுரை எழுதப்பட்டிருப்பதனால்தான்…நீங்கள் ஒன்றும் சொல்லாமல் இருப்பது தந்திரமாகவே எனக்கு தோன்றுகிறது மன்னிக்கவும். இந்தக்கட்டுரையைக் கவனித்தீர்கள் அல்லவா?
http://chandanaar.blogspot.com/2010/01/blog-post_22.html
போஸ்
அன்புள்ள போஸ்,
எனக்கு எப்படியும் ஒரு முப்பதுநாற்பதுபேர் எழுதியிருப்பார்கள். நான் ஏன் ஒன்றும் சொல்லவில்லை என்றால் நீங்கள் சொல்வதுபோல உண்மையிலேயே இசையைப்பற்றி எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது என்பதனாலேயே. எல்லா நல்ல பாடல்களையும் ரசிக்கக்கூடியவன் நான்.
மேலும் ஷாஜி என் நெருக்கமான நண்பர். அவரை நான் நன்கறிவேன். உணர்ச்சிகரமானவர். விமரிசனங்களால் அழமாக புண்படுபவர். ஆகவே ஒன்றும் சொல்லவேண்டியதில்லை என நினைத்தேன். ஆனால் கடிதங்களைப் பார்க்கையில் எது மனதில்பட்ட உண்மையோ அதை சொல்வதே நல்லதென்று பட்டது. நண்பர் என்ற முறையில் அவர் அதை புரிந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பதே ஒரே வழி
நான் அக்கட்டுரை வெளிவந்த சிலநாட்களிலேயே ஷாஜியிடம் என் கருத்தை தெளிவாகவே சொல்லிவிட்டேன். நான் அக்கட்டுரையை நிராகரிப்பது எந்த அபிமானத்தின் அடிப்படையிலும் அல்ல. அதில் பல அடிப்படைச் சிக்கல்கள் உள்ளன என்பதனால்தான். அதாவது அது சாரு நிவேதிதாவின் பாணியில், அத்தகைய வாசகர்களை உத்தேசித்து எழுதப்பட்ட கட்டுரை.
முதலாவதாக, ஷாஜியின் கட்டுரைவிமரிசன ஒழுங்கு இல்லாதது. இளையராஜாவின் இசையின் எல்லைகளை அல்லது சரிவுகளைப்பற்றி இதைவிட தீவிரமாகவேகூட எழுதலாம். ஆனால் இக்கட்டுரையில் ஷாஜி இசைவிமரிசகனின் எல்லைகளை மீறிச் செல்கிறார். அவரது ஆன்மீகம்,சமூக அக்கறை போன்றவற்றை இசைக்கு அளவுகோலாகக் கொள்கிறார் என்றால் இந்த அளவுகோலை எந்தவிதமாக இவர் அடைந்தார், இதற்கு முன் எப்படியெல்லாம் பயன்படுத்தினார் என்பதெல்லாம் முக்கியமான கேள்விகள்.
இளையராஜாவின் சமூகப்பங்களிப்பு குறித்தெல்லாம் சமூக விமரிசகன் எழுதலாம். உதாரணமாக என் பெருமதிப்புக்குரிய இதழாளரான ஞாநி கடுமையாகவேகூட எழுதியிருக்கிறார். அவர் சமூக விமரிசகராக தொடர்ந்து செயலாற்றுபவர். ஆகவே அவர் கருத்துக்களுக்கு ஒரு தர்க்கபூர்வமான நீட்சி உண்டு. அவரது ஆய்வுக்கருவிகள் நாம் அறிந்தவை. அவர் அனைவர்மேலும் அதை சீராக கையாள்கிறார்.
ஷாஜி இவ்விஷயங்களைப்பற்றி எழுதுவதற்கு அவருக்கு தமிழ்ச்சமூகச்சூழலைப்பற்றி என்ன தெரியும், அவரது அளவுகோல்கள் என்ன என்பதெல்லாம் நமக்குத்தெரியாது. அப்படி சமூகவியல்கோணத்தில் அவரைப்பற்றி எழுதுவதாக இருந்தால் தன்னுடைய ஆய்வுகளையும் அணுகுமுறையையும் தெளிவாக முன்வைத்து எழுதவேண்டும். நாம் அவற்றை பரிசீலிக்கலாம். தீர்ப்புகளை மட்டுமே எழுதிசெல்வது சரி அல்ல.
இரண்டாவதாக, ஷாஜி இப்படி ஒரு தனிப்பட்ட மதிப்பீடுகளை தொடுப்பதற்கு உரிய ஆதாரங்களை நேர்மையாக திரட்டிக்கொள்ளவில்லை. அவர் பெரும்பாலும் இதழ்களில் வெளிவந்த ஆதாரமில்லாத கட்டுரைகள் கிசுகிசுக்கள் செய்திகள் போன்றவற்றை நம்பி, அவற்றை உறுதிசெய்துகொள்ளக்கூட முயலாமல், எழுதுகிறார். அவர் அதில் ராஜா குறித்துச் சொன்ன பல விஷயங்கள் பிழையானவை.
ஒருசாதாரண எழுத்தாளனாகிய என்னைப்பற்றி அச்சில், இணையத்தில் கிடைக்கும் தகவல்களை வைத்து ஒருவர் மதிப்பிட ஆரம்பித்தால் தமிழகத்தின் முதல்தர அயோக்கியர்களில், பொறுக்கிகளில் ஒருவன் நான் என எழுதிவிடமுடியும். நான் மறுக்காதவை எல்லாம் உண்மையே என்றும் ஒருவர் வாதிடலாம். ஆனால் எந்த ஒரு அறியப்பட்ட ஆளுமையும் தன்னைப்பற்றி எழுதப்படுவதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. சொன்னால் வேறு வேலையும் நடக்காது.
முன்தீர்மானத்துடனும் மனக்கசப்புடனும்தான் தகவல்களை அணுகினார் ஷாஜி. உதாரணமாக, பழசிராஜா பாடலில் இளையராஜா ஓ.என்.வி குறித்து என்ன சொன்னார் என்று அப்படத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டவன் என்ற முறையில் நானே அவரிடம் விளக்கினேன். ‘ஓஎன்வி அவருக்கு மெட்டு அனுப்பியும்கூட களநடைப்பாடலாக பாடல்வரிகளை எழுதிக்கொடுத்தார், நான் அதை புதிய மெட்டுக்கு மாற்றினேன்’ என்று சொல்லி அதை எனக்குப் பாடியும் காட்டியிருந்தார் ராஜா.
ராஜா அதைத்தான் பின்பு மேடையிலும் சொன்னார். எரிச்சலுடனோ, எதற்கும் விளக்கமாகவோ அல்ல. பொதுவாக பட ‘பிரமோ’க்களில் இதழாளர்கள் செய்திபோட வசதியாக இம்மாதிரி சில துணுக்குகளை கொடுப்பார்கள். அந்த நோக்கில், அந்த மனநிலையில். அதாவது இது ஒருவகை ‘வொர்க்கிங் ஸ்டில்’ மட்டுமே. பழசிராஜா பாடல்கள் ‘வெற்றியா’ என்ற கேள்வியே எழவில்லை.
மலையாள மனோரமாவின் சென்னைநிருபர் செய்தியைத் திரித்தார். அதற்கு ஓர் கேரள அமைச்சர் பதில்சொல்லப்போக அங்கே அலைகளை கிளப்பியது. ராஜா பேசியதன் வீடியோ கிளிப்பிங் வெளிவந்தபோது அலை அடங்கியது. அந்த கிளிப்பிங் யூடியூபில் கிடைக்கிறது. ஆனால் மனோரமாவின் பதிவே ஆதாரம் என்று ஷாஜி உறுதியாகச் சொன்னார். நான் நிறுத்திக்கொண்டேன்.
இளையராஜாவின் குணநலன்களைப் பற்றி ஷாஜி எழுதியதை அவதூறு என்று மட்டுமே சொல்லமுடியும். இத்தனை வருடங்கள் ஒரு பொதுவெளியில் செயல்பட்ட மனிதரைப்பற்றி கசப்புகள் இருக்கும்தான். மேலும் பொதுவாக படைப்பாளிகள் உள்சுருங்கியவர்கள். நிலையான உணர்வுகள் இல்லாதவர்கள். மிகையாக எதிர்வினையாற்றுபவர்கள். இதற்கு எவருமே விதிவிலக்கல்ல.
ஆனால் முப்பது வருடங்களுக்கும் மேலாக கனவு தவிர எந்த ஆதாரமும் இல்லாத ஆரம்ப இயக்குநர்கள், இளைஞர்கள் முழுநம்பிக்கையுடன் வெறும் கையுடன் சென்று நிற்கும் வாசலாக இளையராஜாவின் இசையலுவலகம் இருந்திருக்கிறது. அவர்களை ஆதரித்து, சர்வதேசத்தரம் கொண்ட இசையை அளித்து, மனம்சோரும் தருணங்களிலெல்லாம் ஆறுதலும் ஊக்கமும் அளித்து மேடையேற்றிவிட்டவர் ராஜா. அப்படி ஒரு பெரும்பட்டியலே உண்டு. அந்த கனிவும் பண்பும் கொண்ட இன்னொரு முன்னிலை கடந்த அரைநூற்றாண்டு தமிழ் சினிமாவில் இருந்ததில்லை
சந்தேகமிருந்தால் பாலாவிடம் ஷாஜி கேட்டுக்கொள்ளலாம். கண்ணீரில்லாமல் அதைப்பற்றிப் பேச பாலாவால் முடியாது. அப்படி ராஜாவை எண்ணும் குறைந்தது நூறு இயக்குநர்கள் தமிழில் உண்டு. அவர்கள்தான் தமிழின் நல்ல சினிமாவின் தூண்களும்கூட.
மேலும் கலைஞர்களை நல்ல மனிதர்களா, அன்பானவர்களா என்று பார்க்கும் பார்வையும் சரி; அதைவைத்து கலையை மதிப்பிடும் போக்கும் சரி மிக மிக ஆபத்தானவை. ஒரு கலைஞனின் கலையின் அந்தரங்கமான சில தளங்களை புரிந்துகொள்ள அவனது தனிவாழ்க்கை உதவும். புரிந்துகொள்ள மட்டுமே, மதிப்பிட அல்ல. அதற்குமேல் தனிவாழ்க்கையில் நுழைவதென்பது வெறும் வம்பு மட்டுமே.
மூன்றாவதாக, ஷாஜியின் கட்டுரைக்கு தனிப்பட்ட பின்னணி உண்டு. அதை அவர் கட்டுரையில் சொல்லியிருக்கிறார், ஆனால் முழுமையாகச் சொல்லவில்லை. பாடகி கல்யாணி ஷாஜிக்கு குடும்பநண்பர். அவருக்காக ஷாஜி பலவகைகளில் வாய்ப்புகளுக்காக முயல்வதுண்டு. விளம்பரப்பாடல்களில் அவரை பயன்படுத்துவதுண்டு. கஸ்தூரிமான் படம் ஆரம்பிக்கும்போது கல்யாணிக்காக இளையராஜாவின் சொல்லும்படி ஷாஜி லோகியை கட்டாயப்படுத்தினார். லோகி ராஜாவின் கல்யாணியை அறிமுகம் செய்தார்.
அந்த குரல்சோதனையின்போது கல்யாணி வித்யாசாகர் பாடிய பாடலைப் பாடியபோது ராஜா கோபம் கொண்டது உண்மை. ஆனால் கல்யாணி நிராகரிக்கப்பட்டதற்கு அது காரணம் அல்ல. லோகியிடம் நிதானமாகவே அதை ராஜா விளக்கினார். ‘நல்ல குரல், ஆனால் குரலில் புதுமை இல்லை’ என்றார். ‘அப்படியானால் குரல் இனிமையாக இருக்கவேண்டாமா’ என்று லோகி கேட்டதற்கு ‘தேவையே இல்லை’ என்று ராஜா சொன்னதாகவும் அதில் தனக்கு உடன்பாடே இல்லை என்றும் லோகி சொன்னார்.
இந்த நிராகரிப்பில் இருந்துதான் ஷாஜியின் இளையராஜா வெறுப்பு ஆரம்பமாகிறது. கடந்த இருவருடங்களில் அவர் எப்போதுமே ராஜாவை கடுமையாக நிராகரித்து மட்டுமே பேசி வந்தார் என்பதை நண்பர்கள் அறிவார்கள். அதற்கு முன் அப்படியல்ல என்பதையும் நண்பர்கள் அறிவார்கள். இக்கட்டுரையில் ஷாஜி விட்டுவிட்டது அவருக்கு இளையராஜாவை முன்னரே தெரியும் என்பதுதான்.
பலவருடங்களுக்கு முன்னர் சலீல் சௌதுரி ·பௌண்டேஷனின் செயலர் என்ற முறையில் சலீல் சௌதுரிக்கு ஒரு விழா எடுத்து அதில் இளையராஜாவை பங்குகொள்ளும்படி அழைத்தார். ராஜாவின் உச்ச நாட்கள் அவை. ராஜா அப்போது ஷாஜி யாரென்றே அறியாதவர். விழா மிகச்சிறிது. ஆனால் ராஜா அந்த நிகழ்ச்சிக்கு அவரே வந்தார், சலீல் சௌதுரி மீது இருந்த மதிப்பு காரணமாக மட்டும்.
சலீல் சௌதுரிக்கு வந்திருக்கும் அந்த மிகக் குறைவான கூட்டத்தைப்பற்றி மேடையில் மனக்குறைப்பட்டு பேசிய ராஜா சலீல் சௌதுரியின் இசையின் பல நுட்பங்களை தொட்டுக்காட்டி பேசினார். இசையின் ‘அரேஞ்ச்மெண்ட்’ குறித்து அவர் அன்று பேசியது மிக முக்கியமானது என்று ஷாஜி பலமுறை சொல்லியிருக்கிறார்.
சலீல் சௌதுரியின் பல பாடல்கள் மீது திருட்டுக்குற்றச்சாட்டு உண்டு. அதற்கு விளக்கமளித்து பேசிய ராஜா இசை என்பது எல்லைக்குட்பட்ட ஸ்வரங்களால் ஆனது என்னும்போது சாயல்கள் ஏற்படும். சிலசமயம் பிறிதொரு இசை மனத்தூண்டலாக அமையலாம். ஆனால் அந்த தொடக்கத்தில் இருந்து எப்படியெல்லாம் மேலே செல்லமுடிந்திருக்கிறது என்பதையே அளவாகக் கொள்ளவேண்டும் என்றார். இதுவும் ஷாஜி சொல்லி நான் அறிந்ததே. இச்செய்தியை மிகுந்த நெகிழ்ச்சியுடன் ஷாஜி சொல்லியிருக்கிறார்.
கடைசியாக, ஷாஜிக்கு இளையராஜாவின் இசையில் மையமான சில விஷயங்களை மதிப்பிடும் ஆற்றல் இல்லை. காரணம் அவருக்கும் கர்நாடக சங்கீதமோ, ராகங்களோ தெரியாது. மேலையிசையில் செவ்வியலிசை இலக்கணமும் தெரியாது. ராஜா அவரது முக்கியமான சோதனைகளையும் சாதனைகளையும் அந்த தளங்களில்தான் நிகழ்த்தியிருக்கிறார்.
அவ்விரு இசைமரபுகளையும் துல்லியமாக தெரியாமல் விமரிசிக்கக் கூடாதா என்றால் செய்யலாம் என்றே சொல்வேன். காரணம் சினிமாப்பாடல்கள் பொதுரசிகனுக்குரியவை. ஆனால் அந்த எல்லையை புரிந்துகொண்டு அதற்குள் தன்னை நிறுத்திக்கொண்டு செய்யவேண்டும். நான் எதிர்மறை விமரிசனத்தில் எனக்கு தெரியாத இடங்களைச் சுட்டிக்காட்டியபின்னரே பேச ஆரம்பிப்பேன்.
இளையராஜா இசையில் என்ன செய்தார் என்று தெரியாத நிலையில் ஷாஜி அவரது ‘வெற்றி’களை கொண்டே அவரை மதிப்பிடுகிறார். மேலைநாட்டு பரப்பிசையைப் பற்றிப் பேசும்போது அவர் எப்போதுமே வணிக வெற்றியையே அளவுகோலாகக் கொள்கிறார். அப்பாடல்களின் நயம் குறித்து ஏதும் சொல்வதில்லை. அப்படியானால் வெகுஜன வெற்றிதான் இசையை அளக்க அளவுகோலா என்றால் அவர் மதன்மோகன் போன்ற ‘தோல்வி’ அடைந்த இசைமேதைகளைப்பற்றிச் சொன்னது இடையூறாக இருக்கிறது.
வணிக வெற்றியை அளவுகோலாகக் கொண்டால் ராஜா தொண்ணூறுகள் வரை முப்பது வருடம் ஈடிணையில்லாத புகழுடன்தான் இருந்தார். ஷாஜி அவர் முதல் பத்து வருடங்களுடன் தீர்ந்துவிட்டார் என்கிறார். இசையின் தரம் அல்லது நுட்பத்தை வைத்து அளவிடுகிறார் என்றால் அதற்கான அவரது அளவுகோல்கள் சொல்லப்பட்டாக வேண்டும். அதைச் சொல்ல அவரது தகுதி வெளிப்பட்டாக வேண்டும்.
ஆக, வெறுமே ஒரு மனக்கசப்பில் இருந்து ஆரம்பித்து வம்புகளைக்கொண்டு நிரப்பி ஷாஜி தன் கட்டுரையை எழுதியிருக்கிறார். நானறிந்த ஷாஜி சிறந்த நகைச்சுவை உணர்ச்சியும், ஆழமான நல்லியல்புகளும், நுட்பமான ரசனையும் கொண்ட நல்ல நண்பர். இந்தக் கசப்பு அவரது சமநிலையை இல்லாமல் செய்துவிட்டது. அதை அவர் உணர்ந்தாரென்றால் இந்த மனநிலையைப் பற்றி கவனமாக இருக்க முடியும். அது அவரது நம்பகத்தன்மைக்கு நல்லது.
மாறாக, எவரை வசைபாடினாலும் உடனே வந்து ஆதரவு தெரிவிக்கும் ஒரு கூட்டத்தின் கைத்தட்டலையோ அல்லது வம்புகளை எழுதிவாங்குவதில் குறியாக இருக்கும் இதழாசிரியரின் தூண்டுதலையோ ஆதாரமாகக் கொள்வாரென்றால் அது அவரை இன்னொரு சாரு நிவேதிதாவாகவே ஆக்கும். அதை ஷாஜி எந்த அளவுக்கு வெறுப்பார் என்பதை அவர் அறிவார்.
ஒருவரை பாராட்டும்போது சமநிலைகுலையலாம், எதிர்க்கும்போது நம் சமநிலையைப்பற்றி மேலும் மேலும் கவனம் கொள்ளவேண்டும். அம்மாதிரி சமநிலை இல்லாமல் நானும் பலவற்றை ஆரம்பகாலத்தில் எழுதி பின்னர் வருத்தப்பட்டிருக்கிறேன். இதை நான் என் ஆத்மாவுக்கு மிக நெருக்கமாக உணரும் நண்பராகிய ஷாஜியிடம் வெளிப்படையாகவே சொல்லிக்கொள்கிறேன்.
*
சிலமாதங்கள் முன்பு நானும் ஷாஜியும் தனிப்பட்டமுறையில் ராஜாபற்றி பேசினோம். அப்போது இக்கட்டுரையில் உள்ள ‘ராஜா ஒன்றுமே செய்யவில்லை’ என்ற வரியை ஷாஜி வேறுவகையில் சொன்னார். ராஜா அவர் சொன்ன எதுவும் நடக்கும் என்ற நிலை இருந்தபோது தமிழ்சினிமாவுக்காக ஒன்றுமே செய்யவில்லை என்றார் ஷாஜி.
நான் அதை திட்டவட்டமாக ஆதாரங்களுடன் மறுத்தேன். ஷாஜிக்கு தமிழ்சினிமா வரலாறே தெரியவில்லை என்றேன். அதன் பின் அவர் தன் கட்டுரையில் அந்த குற்றச்சாட்டு இல்லாமல் எழுதியிருக்கிறார். மாறாக ‘ சமூகத்துக்கு’ ஒன்றும் செய்யவில்லை என்கிறார். செய்தாரா என ராஜா விளம்பரப்படுத்த வேண்டுமா என்ன?
தமிழின் நல்ல சினிமாவுக்காக இளையராஜா அளவுக்குப் பங்காற்றிய இன்னொரு ஆளுமையே கிடையாது. இன்னும்கூட பதிவுபெறாத ஒரு மகத்தான பக்கம் அது. 1976ல் ராஜா திரையுலகுக்கு வந்தார். எம்.ஜி.ஆர்-சிவாஜி யுகம் முடிந்து எழுபதுகளில் உருவான யதார்த்தவாத அலைக்குக் காரணமாக அமைந்ததே ராஜாவின் வருகைதான். இன்றுவரை தமிழ்சினிமாவின் பொற்காலமாக திகழ்வது அதுவே. இப்போதுவரும் யதார்த்தவாதபடங்களின் இலக்கணம் அமைந்ததும் அப்போதே.
அந்த அலையின் ஒரு பகுதியாக இளையராஜா திகழவில்லை. மாறாக அவர்தான் அந்த அலையை வழிநடத்திய சக்தி. பாரதிராஜா படவுலகில் நுழைய முனைந்தபோது எஸ்.ஏ.ராஜ்கண்ணு போட்ட ஒரேநிபந்தனை இளையராஜா இசையமைப்பாரா என்பதே. அந்த உறுதியை வாங்கியபிறகே பாரதிராஜாவால் படம் தொடங்க முடிந்தது.
நட்சத்திரங்கள் இல்லாமல், நாடகத்தன்மை இல்லாமல், மிகச்சிறிய யதார்த்தப் படங்கள் வணிகவெற்றி பெறமுடியும் என்ற நிலையை உருவாக்கியது இளையராஜாவின் துடிப்பான இசைதான். புதியவர்களின் சிறு முதலீட்டுப் படங்கள் வென்றால்தான் திரைக்கலையில் மாற்றம் வரும். இளையராஜா அக்காலத்தில் புதிய தயாரிப்பாளர்களின் படங்களுக்கு துணிந்து இசையமைத்தார். மிகத்தரமாக. அதற்கு மிகமிகக் குறைவான ஊதியம் பெற்றுக்கொண்டார். அவரது பங்களிப்பு இல்லாமல் அந்தப் படங்கள் உருவாகியிருக்க முடியாது, வெற்றி பெற்றிருக்கவும் முடியாது என்பது வரலாறு. அவையே தமிழ்சினிமாவை மாற்றியமைத்தன.
மலையாள சினிமாவும் ஏறத்தாழ இதே காலகட்டத்தில்தான் யதார்த்தவாதம் நோக்கி வந்தது. பரதன், பத்மராஜன், ஐ.வி.சசி போன்றவர்கள் உள்ளே வந்தார்கள். புதுநடிகர்கள் அறிமுகமானார்கள். ஆனால் மலையாள சினிமா அந்த மாற்றத்தைக் கொண்டுவர பாலுணர்ச்சியை நம்பியிருந்தது. துணிச்சலான செக்ஸ்படங்கள் வழியாகவே மலையாள சினிமாவில் சிறு படங்கள் வென்றன. மலையாளசினிமா உலகம் அதன்வழியாகவே தன் அமைப்பு, சூழல் எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டது. அதாவது அங்கே செக்ஸ் செய்ததை இங்கே ராஜா செய்தார்.
பாரதிராஜா, தேவராஜ் மோகன், மகேந்திரன், துரை, ருத்ரையா,பாக்யராஜ் என ஆரம்பித்து மணிரத்தினம், பாலா வரை தமிழில் தீவிரமான இலக்குகளோடு நுழைந்த அத்தனை இயக்குநர்களும் ராஜாவிடம்தான் முதலில் சென்றிருக்கிறார்கள். அவர்கள் அவரால் முன்னிறுத்தப்பட்டிருக்கிறார்கள். அவரால் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். ஐ.வி.சசி, பரதன்,பாசில் முதலிய தரமான மலையாள இயக்குநர்கள் தமிழுக்கு வந்தபோது அவர்களின் வருகையை மிகச்சிறந்த இசையால் கௌரவித்திருக்கிறார் ராஜா.
ஓர் இளம் இயக்குநருக்கு எந்த வித நிபந்தனையும் இல்லாமல் மிகச்சிறந்த இசையை அளிப்பதென்ற ராஜாவின் கொள்கையை தொடர்ச்சியாக முப்பது வருடம் தமிழில் நாம் காணமுடிகிறது. ராஜாவின் மகத்தான பாடல்கள் பல புது இயக்குநர்களின் படங்களில் அமைந்தவை என்பதை பலர் நினைப்பதில்லை. தமிழில் புதிய விஷயங்கள் வருவதற்கு அமைப்புக்கு உள்ளே இருந்து வரும் ஒரே ஆதரவுக்கரம் இளையராஜாவுடையதாகவே இருந்திருக்கிறது என்பது வரலாறு.
பலசமயம் அந்த முதல்படங்கள் காணாமல் போயிருக்கின்றன, இசையால் மட்டுமே அறியப்படுகின்றன. சிலசமயம் நல்ல படங்கள்கூட. ச்சிறந்த உதாரணம், சின்னத்தாயி. திருநெல்வேலியின் ஆத்மா பதிவான ஒரு நல்ல படம் அது. மிகமிகக் குறைவான செலவில் எடுக்கப்பட்டது. அனேகமாக ராஜாவுக்கு சில ஆயிரங்கள் அளிக்கப்பட்டிருக்கலாம், அதைக்கூட முழுமையாகக் கொடுத்தார்களா என்பது ஐயத்திற்குரியது. அற்புதமான இசையால், நெல்லை நாட்டுப்புறத்தன்மை அதற்கே உரிய வாத்தியங்களுடன் வெளிப்பட்ட பாடல்களால் அந்தப்படம் அழுத்தம் பெற்றிருந்தது. துரதிருஷ்டவசமாக அது வெற்றி பெறவில்லை. அதன் இயக்குநர் இளமையில் இறந்தும் விட்டார் என்றார்கள். அப்படி எத்தனை படங்கள்.
சிந்தித்துப் பார்த்தால் இது எவ்வளவு பெரிய ஓர் வாய்ப்பு என்பது தெரியும். இன்று நல்ல படம் எடுக்க முனையும் இயக்குநர்களுக்கு இருக்கும் சிக்கலே இசைதான். தரமான இசை தேவை என்றால் அது படத்துக்கான செலவில் மூன்றில் ஒருபங்கை சாப்பிடும். செலவைக்குறைத்தால் இசை வெளிறிக் கிடக்கும். சமீபகாலத்தில் வெற்றிபெற்ற சின்னப்படங்களின் இசையைக் கவனித்தால் இது தெரியும்.
ராஜா அவரது இசையை அது மிகமிக விரும்பப்பட்ட நாட்களில்கூட வியாபாரப் பொருள் ஆக்கவில்லை. அதனால் அவர் கோடிகளை இழந்திருக்கக் கூடும். ஆனால் தரமான ஒரு திரை இயக்கத்தின் பகுதியாக தன் இசை இருக்கவேண்டுமென்பதில் அவர் குறியாக இருந்தார். வேறெந்த திரைச் சாதனையாளரும் ராஜா அளவுக்கு நல்ல சினிமா மீது இத்தனை பற்றுடன் இருந்ததில்லை.
கடைசியாக ஒன்று.பாலுமகேந்திரா தனிப்பேச்சில் சொன்னது இது. ராஜா தமிழில் அறிமுகமானபோது தமிழ்சினிமாவின் திரைமொழி மிகப்பழமையாக இருந்தது. காரணம் அது அனைவருக்கும் புரிந்தாகவேண்டும் என்ற கட்டாயம். திரைக்கதையில் ஒவ்வொரு காட்சிக்கு முடிவிலும் அடுத்த காட்சிக்கான குறிப்பு இருக்கும். ‘எங்கே அந்த சண்முகம், வாங்க போய் பாப்போம்’ என்பது போன்ற வசனங்கள். அல்லது காட்சி அடையாளங்கள். ஏன், பாடலிலேயே அடுத்த காட்சிக்கான தொடக்கம் அவ்வப்போது எட்டிப்பார்க்கும். இல்லாவிட்டால் தொடர்ச்சியை அன்றைய ரசிகன் உணர முடியாது.
அதேபோல காட்சி மாறும்போது ‘ர்ரீங்’ என்பது போல ஒரு சத்தம் இருக்கும். கதை பின்னுக்கு நகர்ந்தால் அது தெளிவாகவே காட்டப்படும். ஆரம்பத்தில் கொசுவத்திச் சுருள். பிற்காலத்தில் பிம்பம் மீது பிம்பம் ஏறுவது, அணைந்து மீள்வது போன்ற காட்சிகள். கதாபாத்திரம் ஓர் அறைவிட்டு இன்னொரு அறைக்குப் போகவேண்டுமென்றால்கூட அதைக் காட்டியாக வேண்டும். ஒரு கதாபாத்திரம் நல்லவிஷயம் சொல்லப்போகிறதா கெட்ட விஷயம் சொல்லப்போகிறதா என்பதை தனித்தனி அண்மைக்காட்சிகள் மூலம் காட்ட வேண்டும். வசனத்தில்கூடச் சொல்ல வேண்டும். கதாபாத்திர மனநிலைகளை தெளிவாக வசனம் மூலம் காட்டியாகவேண்டும்.
ஏன், நடிப்புக்கே இந்தச் சிக்கல்கள் இருந்தன. அக்கால நடிப்பு ஏன் செயற்கையாக இருந்தது என்றால் திரையில் உணர்ச்சிகள் தெளிவாக புரியவேண்டும் என்ற கட்டாயம் இருந்தது என்பதனால்தான். திடுக்கிடுவது, அதிர்ச்சி அடைவது, துயரப்படுவது எல்லாவற்றையும் முகத்தசைகள் உடலசைவுகள் மூலம் காட்டியே ஆகவேண்டியிருந்தது. தமிழ் ரசிகனின் எல்லை அது.
இந்த எல்லையைப் புரிந்துகொண்டு, நவீன சினிமாவின் சாத்தியங்களையும் தெரிந்துகொண்டு பின்னணி இசையமைக்க இளையராஜா முன்வந்த ஒரே காரணத்தால்தான் தமிழ் சினிமாவின் காட்சிமொழியை துணிந்து மாற்ற முடிந்தது. இளையராஜா எழுபதுகளின் கன்னடநவசினிமா அலையில் இருந்து நவீனக் காட்சிமொழியின் சாத்தியங்களை நன்றாகப் புரிந்துகொண்டு உள்ளே வந்தவர் என்பதே அதற்குக் காரணம்.
ராஜாவின் பின்னணி இசையை இந்த வரலாற்றுச்சூழலை புரிந்துகொள்ளாமல் எவரும் மதிப்பிட்டுவிடமுடியாது. ராஜாவுக்கு முன்னால் பின்னணி இசையில் இசையமைப்பாளர்கள் கவனம் செலுத்தியதில்லை. அவற்றை அனேகமாக அவர்களின் உதவியாளர்களே அமைபப்பாகள். அவை ‘இ·பக்ட்’ என்ற அளவிலேயே இருக்கும். கதையைப்புரிந்துகொண்டு தொடர்ச்சியான இசை அமைக்கப்படுவதில்லை. மாறாக தனிக்காட்சிகளுக்கே இசை அமைக்கப்படும்.
ராஜா முழுப்படத்துக்கும் மொத்தமாக இசையமைத்தார். படத்துக்கு அதன் சாரம்புரிந்து தீம் இசையை உருவாக்கினார். உதாரணமாக மகேந்திரனின் ‘உதிரிப்பூக்கள்’ படம் ஒரு குடும்பத்தின் கதைதான். ராஜா தன் தீம் இசை மூலம் அதை அக்குழந்தைகளின் கதையாக அழுத்தம் கொடுப்பதைக் காணலாம். உதிரிப்பூக்கள் தொடர்ச்சியே இல்லாத தனிச்சம்பவங்களால் ஆன படம். பின்னணி இசையே அதை கோர்வையாக கொண்டுசெல்கிறது.
படத்துக்கு ராஜா இசைமூலம் தொடர்ச்சியை உருவாக்கினார். அழுத்திக் காட்டவேண்டியதை அழுத்திக்காட்டினார். உணர்ச்சிகளை திட்டவட்டமாக அடையாளப்படுத்தினார். கதாபாத்திரங்களுக்குக் கூட தனியான இசை அடையாளங்களை உருவாக்கினார். பல படங்களில் இயக்குநர் சொல்ல வருவதைக்கூட இசை விளக்கியது. ‘நிறம் மாறாத பூக்களில்’ கதை முன்னும்பின்னும் நகர்வதை இசைதான் காட்டியது
இந்த வசதியைக் கொண்டுதான் இயக்குநர்கள் திரைமொழியை மாற்றியமைத்தார்கள். மிதமான நடிப்பு போதும் என்ற நிலை வந்தது. செயற்கையான காட்சிமாற்றமும் ‘க்ளூ’ கொடுக்கும் வசனமும் தேவையில்லை என்றாகியது. தன்னுடைய ‘மூடுபனி’ படத்தில் சாதாரணமான ஆரம்பக் காட்சியிலேயே அதை ‘சைக்கோ திரில்லர்’ என ராஜா காட்டிவிட்டார் என்றார் பாலு. இல்லாவிட்டால் அதற்கு நான்கு காட்சிகளை ‘சமைக்க’ வேண்டியிருந்திருக்கும் என்றார்.
ஒரு கலைவடிவம் என்பது அது உருவான சமூக,பண்பாட்டுச்சூழலை ஒட்டி அதன் இடைவெளிகளை நிரப்பியபடி வளர்வது. உலகமெங்கும் முதிர்ச்சி உள்ள விமரிசகர்கள் கலையை அப்படித்தான் மதிப்பிட்டிருக்கிறார்கள். அதற்கு கலையின் நுட்பங்களையும் அதன் வரலாற்றுப் பரிணாமத்தையும் கூர்ந்து அவதானிக்கும் விரிவான ஆய்வுமனநிலை தேவை. இங்கே பொத்தாம் பொதுவாக ‘அமெரிக்காவிலே வேறமாதிரி தெரியுமா?’ என்றவகை எழுத்துக்களே விமரிசனமாக முன்வைக்கப்படுகின்றன. எல்லா தளத்திலும். நம் துரதிருஷ்டம் இது.
அதிலும் குறிப்பாக வெகுஜனக்கலை என்பது அது எதிர்கொள்ளும் சமூகத்துடனான உரையாடல் வழியாகவே உருவாகக்கூடியது. அச்சமூகத்தின் போதாமைகள நிரப்பிக்கொண்டு உச்சங்களை உள்வாங்கிக்கொண்டு அது முன்னகரும். எந்த இடத்தில் அது கலைஞனின் வெளிப்பாடு எந்த இடத்தில் சமூகத்தின் விழைவின் வெளிப்பாடு என்று கண்டுபிடிப்பது எளிதல்ல. அண்டோனியோ கிராம்ஷி முதல் டில்யூஸ் கத்தாரி வரை பற்பல கோணங்களில் விவாதிக்கப்பட்ட பொருள் இது. அக்கப்போர் தளத்தில் இதை அணுகும் பார்வைகள் அபத்தமான விளைவுகளையே உருவாக்குகின்றன.
படத்துக்குப் படம் ராஜா மாறிக்கொள்வதைப் பார்க்கும் எவரும் அவர் எந்த அளவுக்கு இயக்குநருக்கு தன்னை அளிக்கிறார் என்ற வியப்பை அடைவார்கள். ‘புதியவார்ப்பு’களில் உள்ள இசைக்கும் ‘அவள் அப்படித்தா’னில் உள்ள இசைக்கும் உள்ள வேறுபாடுகளையே பார்த்தால் போதும். இரண்டும் முற்றிலும் வேறுபட்ட படங்கள். புதியவார்ப்புகளில் பின்னணி இசை பாடிக்கொண்டே இருக்கிறது. அவள் அபப்டித்தானில் அது வெறுமே முனகுகிறது.
திரைமொழி வளர்ந்தபோது காலப்போக்கில் இளையராஜா இசையில் காட்சிகளுக்கு பரஸ்பரத் தொடர்பு கொடுப்பது விளக்குவது போன்றவற்றில் இருந்து முன்னகர்ந்து மேலும் நுட்பமான பல விஷயங்களைச் செய்திருக்கிறார். என்னைப்போன்ற எளிய ரசிகனே உணரும் நுட்பங்கள். பல படங்களில் பின்னணி இசை ஒரு ஆழ்ந்த வேறு பொருளையும் காட்சிக்கு சேர்ப்பதைக் காணலாம்.
இன்றைய யதார்த்த தமிழ் சினிமாவுக்கு ராஜாவின் பங்களிப்பு என்ன என்பதைப்பற்றி இன்றுவரை விஷயமறிந்த எவரும் எழுதியதில்லை. தகவலறிவுடன், சமநிலையுடன் எழுத நம்மிடம் ஆட்கள் இல்லை. தெரிந்தவர்கள் எழுதுவதும் இல்லை. ஆகவேதான் என்ன ஏது என்றறியாமல் எழுதும் எழுத்துக்களையும், அசட்டு பீற்றல்களையும் நாம் சகித்துக்கொண்டிருக்கவேண்டியிருக்கிறது.
இளையராஜாவின் இசையின் இன்னொரு பக்கம் என்பது அவர் கர்நாடக இசையின் அமைப்பில் செய்த சோதனைகள். அவற்றை அத்துறை சார்ந்தவர்களே சொல்லமுடியும். பத்து வருடம்முன்பு ‘சொல்புதிது’ இதழுக்காக தமிழிசை அறிஞர் நா.மம்முதுவை நான் பேட்டி எடுத்தேன். அப்போது அபூர்வமான ராகங்களுக்கான, ராகங்களை பயன்படுத்துவதில் உள்ள அழகியல்சாத்தியங்களுக்கான நுட்பமான உதாரணமாக அவர் சுட்டிக்காட்டிய எல்லா பாடல்களும் இளையராஜாவின் சினிமாப்பாடல்கள். இளையராஜா தேங்கி அழிந்துவிட்டார் என்று ஷாஜி ‘அறிவித்த’ பிற்காலப் பத்து வருடங்களைச் சேர்ந்த பாடல்கள் அவை. அந்தப்பேட்டி என் ‘இலக்கிய உரையாடல்கள்’ என்ற நூலில் உள்ளது [எனி இண்டியன் பிரசுரம்]
அதன்பின் நான் முக்கியமான பல மரபிசை நிபுணர்களிடம் பேசியிருக்கிறேன். ராஜாவின் மிகச்சிறந்த,நுட்பமான இசைப்பின்னல்களுடன் சோதனைநோக்குடன் அமைந்த, படைப்புகள் என அவர்கள் சொன்னபல பாடல்கள் அவர் பிற்காலத்தில் அமைத்தவை. அவர்கள் சொன்ன பல விஷயங்கள் எனக்குப் புரிந்ததில்லை. ஆனால் அந்தப்பாடல்கள் வெகுஜன அளவில் பெரிதும் ரசிக்கப்பட்டவை என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
உதாரணமாக திருவாரூரைச் சேர்ந்த ஒரு வயதான நாதஸ்வரக் கலைஞர் ஒரு ராகத்தின் அழகை காட்டும் பாடலாக ‘ஆட்டமா தேரோட்டமா’ என்ற பாட்டை சுட்டிக்காட்டினார். தாளம் மூலம் அந்த ராகத்தின் காலக்கட்டுமானத்தை எப்படியெல்லாம் மாற்றலாம், ஆலாபனையை எப்படி விசித்திரமாக உடைத்து செய்யலாம் என்பதற்கான அற்புதமான உதாரணமாக அதை அவர் சுட்டிக்காட்டி பேசிக் கொண்டே இருந்தார்.
இளையராஜாவின் இந்த தளத்தில் உள்ள சாதனைகளை இந்த தளத்தில் பயிற்சியும் ரசனையும் உடையவர்களே சொல்லமுடியும். மற்றவர்கள் கருத்துச் சொல்லும்போது தங்களுடைய எல்லைகளை உணர்ந்து அதற்குள் நின்று பேசுவதே கௌரவமான விஷயமாகும். வெறும் வம்புதான் நோக்கம் என எண்ணுபவர்களுக்கு எதையும் சொல்லும் உரிமை உண்டு. ஆனால் இசைவிமரிசகனுக்கு அவன் பேசுதளம் சார்ந்த புரிதல் இருக்க வேண்டும்.
அனைத்துக்கும் அப்பால் மேதைகளைப் பற்றிப் பேசும்போது நம் எளிய தீர்ப்புகளை அவர்கள் மேல் போடக்கூடாது என்ற அடக்கம் எந்த விமரிசகனுக்கும் தேவை. சாதாரணர்களின் விதிகளுக்கு உட்பட்டவர்கள் அல்ல மேதைகள். உதாரணமாக நா.மம்முது இளையராஜாவின் அதிநுட்பமான பாடல்கள் என்று சுட்டிக்காட்டிய பாடல்களை போட்ட காலத்தில் அவர் வருடத்திற்கு ஐம்பது படங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருந்தார். ஒரு நாளுக்கு இரண்டுபாடல்களைக்கூட போட்டிருந்தார். இதை புரிந்துகொள்வதுதான் விமரிசகனின் வேலையே ஒழிய கலைஞனுக்கு ஆலோசனை சொல்வதல்ல.
தன்வாழ்நாளில் தல்ஸ்தோய் எழுதியது ஒரு குட்டி நூலகம் அளவுக்கு! டாக்டர் சிவராம காரந்த் எழுதிய மொத்த பக்கங்கள் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம்! அவற்றில் இரு முழு கலைக்களஞ்சியத்தொகுதிகளும் அடக்கம். இத்தனையும் எழுதிவிட்டு அவர் யட்சகான நடனமும் கற்றுக்கொண்டு மேடையில் ஆடினார். சிற்பக்கலை குறித்து புகைப்பட நூல்களை வெளியிட்டார். சுற்றுச்சூழலுக்காக கிட்டத்தட்ட நூறு வழக்குகளை நடத்தினார். மிச்ச நேரத்தில் இந்திய சட்டநூல்களை கன்னடத்தில் மொழியாக்கம் செய்தார். விதிகளை யார் சொல்வது, விமரிசகனா?
வாழ்நாள் முழுக்க பிற எழுத்துக்களை வாசித்த இலக்கிய மேதைகள் உண்டு. தன் சொந்த எழுத்துக்களை அல்லாமல் எதையுமே வாசிக்காத மேதைகளும் உண்டு. வாழ்நாள் முழுக்க அலைந்து திரிந்து அனுபவங்களில் திளைத்த மேதைகள் உண்டு, அறையை விட்டு வெளியே செல்லாதவர்களும் உண்டு. ‘நான் பயணங்களை அறவே வெறுக்கிறேன்’ என்றார் போர்ஹெஸ். வாழ்நாள் முழுக்க பயணங்களை பற்றி எழுதிக்கொண்டுமிருந்தார்.இலக்கியத்தில் என்றல்ல, எந்த துறையிலும் இம்மாதிரி எளிமைப்படுத்தல்களுக்கு இடமில்லை. கலையின் பித்தெடுத்த இயக்க விதிகளை அறிந்த ஒருவன் கலைஞன் எப்படி இயங்கியிருக்க வேண்டும் என சொல்ல துணிவானா? எங்கோ ஒரு இடத்தில் அவனது அகம் கூச வேண்டாமா?
கடைசியாக மீண்டும், இளையராஜாவை மிகக் கடுமையாக கறாராக விமரிசனம் செய்யும் தரமான கட்டுரைகள் இன்னமும் தமிழில் வரவேண்டும் என்றே சொல்ல விரும்புகிறேன். அவருக்கு பாடலின் கவித்துவம் மீதிருக்கும் உதாசீனம் பற்றி எனக்கே கடுமையான விமரிசனம் உண்டு. ஆனால் அந்த விமரிசனங்கள் தங்கள் எல்லையை உணர்ந்த விமரிசகர்களால் சமநிலையுடன் செய்யப்படாவிட்டால் எந்த மதிப்பும் இல்லை.