செப்டெம்பர் ஏழாம் தேதி காலையில் நாங்கள் ஸ்ரீ சைலம் ரெட்டி சத்திரத்தில் விழித்தெழுந்தோம். சுற்றிலும் மலைகள் பச்சைக்குவியல்களாகச் சூழ நின்ற காட்சியைக் கண்டபடி மொட்டை மாடியில் நின்று பல் தேய்த்தோம். இரவில் மழை விழுந்திருந்தமையால் இத்மான குளிர். அதி காலையிலேயே ஊர் விழித்தெழுந்துவிட்டிருந்தது
ஆந்திராவில் அமைந்துள்ள நல்லமலா குன்றுவரிசையை சேடனின் பூதவுடலாகச் சொல்வார்கள். திருப்பதி அதன் தலை. அகோபிலம் உடல்மையம். ஸ்ரீசைலம் அதன் வால். கிருஷ்ணா நதிக்கரையில் கர்நூல் மாவட்டத்தில் உள்ளது இந்த கோயில்நகரம். அகோபிலத்தில் இருந்து மதியம்தான் எங்களால் கிளம்ப முடிந்தது. நந்தியால் வழியாக ஆறாம்தேதி இரவு ஸ்ரீசைலம் வந்து சேர்ந்தோம்.
சிவன் [மல்லிகார்ஜுன தேவர்] இங்கே கோயில்கொண்டிருக்கிறார். உமாதேவிக்கு பிரம்மாரம்பா என்று பெயர். இந்தியாவில் உள்ள ஜோதிர்லிங்கங்களில் ஒன்று இது. புராதனமான ஆலயம் இது என்பதற்கு மொழியாதாரங்களே உள்ளன. ஸ்காந்தபுராணத்தில் இக்கோயிலைப்பற்றி ஸ்ரீசைலகாண்டம் என்ற ஒரு அத்தியாயமே உள்ளது. சைவநாயன்மார்கள் இத்தலத்தைப் பாடியிருக்கிறார்கள். ஆதிசங்கரர் இக்கோயிலுக்கு வந்ததாகவும் இங்குதான் அவர் சிவானந்தலஹரி நூலை பாடியதாகவும் சொல்லப்படுகிறது. ஸ்ரீசைலமலையைப்பற்றி மகாபாரதக்குறிப்பே உள்ளது என்று இங்குள்ள அறிவிப்பு சொல்கிறது. தலவரலாற்றின்படி நந்திதேவர் தவம்செய்தபோது சிவனும் பார்வதியும் மல்லிகார்ஜுனராகவும் பிரம்மரம்பாவாகவும் தோன்றி அருள்புரிந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஸ்ரீசைலம் என்றால் அருள்மிகுமலை என்று பொருள். மகாபாரதத்தில் ஸ்ரீபர்வதம் என்று இது குறிப்பிடப்படுகிறதாம். புராதனமான கோயில் இஸ்லாமிய ஆட்சிக்காலத்தில் இடிக்கப்பட்டபின் இப்போதுள்ள கோயில் விஜயநகர ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது.
ஸ்ரீசைலத்துக்கு நாங்கள் ஏற்கனவே வந்திருக்கிறோம். நான், சண்முகம், யுவன் சந்திரசேகர் நால்வரும். இருபது வருடங்களுக்கு முன்னர் வசந்தகுமார் அசைட் நிருபராக பணியாற்றிய காலத்தில் இங்கே வந்திருக்கிறார். அப்போது ஏராளமான ஆலமரங்கள் இங்கே இருந்ததாகவும் இடிந்த கல்மண்டபங்களில் அவை விழுதுகள் பிணைத்து இறுக்கி உடைத்து நின்றகாட்சி தன்னை பிரமிக்கச் செய்ததாகவும் சொன்னார். கிட்டத்தட்ட ஆங்கோர்வாட் ஆலயத்தை நினைவுபடுத்தியதாம். ஆனால் இப்போது விரிவாக பழுதுபார்க்கப்பட்ட கோயில் சுற்றுப்புறம் புதியதாக இருக்கிறது. சுத்தமாகவும்.
பொதுவாக இந்த அம்சத்தை கவனிக்கலாம். தென்னகத்தில் தமிழ்நாட்டில் மட்டுமே கோயில்கள் சரியாகப் பேணப்படாமல் இடிபாடுகளாகவும் தூசுக்குவைகளாகவும் காணப்படுகின்றன. தமிழ்நாட்டின் கோயில் சொத்துக்கள் முழுமையாகவே கடந்த ஐம்பதாண்டுக்காலத்தில் சூறையாடப்பட்டுவிட்டன. தமிழகக் கோயில்கள் எண்ணிக்கையில் அதிகம், பெரியவையும்கூட. அவற்றை முறையாக பராமரிக்குமளவுக்கு ஊழியர்கள் எங்கும் வேலைக்கு நியமிக்கப்படுவதில்லை. போதிய நிதி ஒதுக்கீடும் இருப்பதில்லை. மேலும் தமிழகத்தில் கோயிலுக்கு வருபவர்கள் கோயில் சுத்தம் பற்றிக் கவலையே படுவதில்லை.
ஸ்ரீசைலம் அசப்பில் ஒரு தமிழகக் கோயில்போலவே இருக்கிறது. கண்ணைமூடினால் தமிழ் காதில் விழுந்துகொண்டே இருக்கும். மேலும் இங்கே காணபப்டும் சைவத்துறவிகளின் எண்ணிக்கை மிக அதிகம். சென்றமுறை நாங்கள் வந்தபோது சாலையெங்கும் துறவிகள் படுத்துக்கிடந்தார்கள். அவர்களில் பலர் தமிழில் பேசிக்கொண்டிருந்தார்கள். துறவியர்களுக்கு வழிவழியாகவே ஒரு சில கோயில்கள்தான் முக்கியமானவை. பல புகழ்பெற்ற கோயில்களுக்கு அவர்கள் வருவதில்லை. தமிழகத்தில் திருவண்ணாமலை அளவுக்கு துறவியர் வரும் கோயில் பிறிதில்லை. திருவண்ணாமலையில் இருந்து நேராக ஸ்ரீசைலம் வரவேண்டும் என்பது துறவின் நெறி. விதவிதமான துறவியரைப் பார்த்தோம். சடாமுடிதரித்தவர்கள், பித்துக்களை கொண்டவர்கள்….
ஆந்திராவின் முக்கியமான புண்ணியதலங்களில் ஒன்றாகையால் இங்கே தினமும் பயணிகள் வந்து குவிகிறார்கள். ஆகவே கடைவீதிகள் அதிகம். இருந்தாலும் நெரிசலும் குப்பையும் இல்லாமல் மனம்கவரும் விதமாக இருக்கிறது. காலை எழுந்ததும் கோயிலுக்குச் சென்றோம். நல்ல கூட்டம். சிவாவும் செந்திலும் தரிசனம் செய்ய ஆசைபப்ட்டார்கள். எனக்கு அப்படி பெரிய ஆர்வம் இல்லை. ஆகவே அவர்கள் இருவரையும் சிறப்புக் கட்டணத்தில் உள்ளே அனுப்பிவிட்டு நாங்கள் சுற்று நடைக்குச் சென்றோம்.
கோயிலின் சுவர்களில் உள்ள சிறிய புடைப்புச் சிற்பங்கள் மிக முக்கியமானவை. அன்றாட வாழ்க்கைக் காட்சிகள், கண்ணப்பநாயனார் கதை போன்ற நிகழ்ச்சிகள், சிவ்புராண நிகழ்ச்சிகள் ஆகியவற்றுடன் ஏராள்மான அன்றாட வாழ்க்கைச் சித்திரங்களும் இங்கே உள்ள்ன. சென்ற முறை இங்கே வந்தபோது வசந்த குமார் ஒரு படம் எடுத்தார். அது வில் எய்யும் வேட்டுவப்பெண்ணின் சிலை. அதுதான் ராஜ் கௌதமனின் ‘பாட்டும் தொகையும் தமிழ் ப்ண்பாட்டு உருவாக்கமும்’ என்ற நூலின் அட்டையாக உள்ளது. செஞ்சு பெண்ணாக இருக்க வேண்டும்.
இக்கோயிலின் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்று இங்கே பக்தர்களே கருவறைக்குள் சென்று தாங்களே லிங்கத்தைத் தொட்டு வழிபடலாம் என்பதுதான். தமிழகத்திலோ கேரளத்திலோ எந்த ஆலயத்திலும் இந்த முறை இல்லை. தொன்மையான வழிபாட்டுமுறை இதுவாக இருக்கலாம். மூர்த்தியை பக்தரிடமிருந்து தள்ளி வைப்பதென்பது தாந்த்ரீக முறையில் இருந்து ஆகமமுறைக்கு வந்த வழக்கம் என்றுபடுகிறது. மேலும் இது செஞ்சுக்களின் புராதன கோயில். அவர்களை லிங்கத்திலிருந்து பிரிக்க முடியாதல்லவா?
கோயிலைச் சுற்றிசெஞ்சுக்களின் குடிசைகள். பெரும்பாலான குடிசைகள் மரப்பட்டைத்தட்டிகள் மீது மண்பூசி உருவான சுவர்களினால் ஆனவை. மேலே புல்கூரை. வசந்தகுமார் முகங்களை படமெடுத்தார். பல இடங்களில் ஸ்ரீசைலம் கோயிலுக்கு முந்திய புராதனமான மண்டபங்கள் உள்ளன. அவை எந்தவகையான சிற்பத்தேர்ச்சியும் இல்லாமல் கல்லடுக்கிக் கட்டப்பட்டவை. இடிந்து சரிந்தவை. பல மண்டபங்களை துறவிகள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பெரிய ஆலமர நிழலுக்கு கீழே குளிர்ந்த கல்மண்டபங்களில் துறவிகள் தங்கியிருக்கும் காவிக்கொடிகள் பறந்துகொண்டிருப்பதைக் கண்டேன். அவர்கள் இரைதேட கோயில் பக்கமாகச் சென்றிருப்பார்கள்.
ஒரு துறவி மடத்துக்கு கீழே அமர்ந்து துறவைப்பற்றிப் பேசிக் கொண்டோம். துறவு என்றால் சுதந்திரம். உறவுகள் காமம் எதிர்காலப்பயம் ஆகிய அனைத்தில் இருந்தும் முழுமையான விடுதலை. விடுதலை பெற்றவனாலேயே மெய்யை அறிய முடியும் என்பது நம்முடைய மரபு. வசந்தகுமார் 20 வருடம் முன்பு கண்ட மண்டபத்தை கண்டுபிடித்தோம். அந்த ஆலமரம் மண்டபத்தை கற்குவியலாகச் சரித்து ஒரு பக்க சுவரை அப்படியே அள்ளி தன்னுள் வைத்து மேலெழுந்துவிட்டிருந்தது. என்ன இருந்தாலும் அது உயிர். மண்ணில் உள்ள எந்த ஜடத்தை விடவும் பிராணன் வலிமை மிக்கது என்று யோகம் சொல்கிறது.
ஸ்ரீசைலத்தின் அருகே பெருநதியாகிய கிருஷ்ணா நீலநீர் பெருகிச் செல்கிறது. ஸ்ரீசைலத்தில் இருந்து கிருஷ்ணாவை நோக்கி இறங்குவதற்கு கயிற்றுவண்டி வசதி உள்ளது. கீழே சென்று கிருஷ்ணாவின் நீரில் படகில் பயணம் செய்யலாம் என்று எண்ணினோம். ஆனால் கடும் வெயில். கிருஷ்ணாவை சுற்றித்தான் நல்கொண்டா செல்லவேண்டும். 12 மணிக்கு எங்கள் ரெட்டி சத்திரத்தில் இலவச உணவு உண்டு. அதை உண்டுவிட்டு கிளம்ப வேண்டும் என்று காத்திருக்கிறோம் இப்போது.
கைவிடப்பட்ட ஒரு கோயில் ஸ்ரீ சைலம்
ஸ்ரீ சைலம் கோயில் சுற்றுச்சுவர், பல்லாயிரம் சிறிய சிற்பங்களின் பெரும் பரப்பு…
சிவனடியர்… கையில் யோக த்ண்டம். அது மறஞானம் கையால் அதற்கு உறை
டீக்கடை பெண், செஞ்சுப்பெண்களில் பாதிப்பேர் பேரழகிகள். மீதிப்பேர் அழகிகள்.
செஞ்சு குடில்களில் ஒன்றின் முன் காலை வெயில் காயும் தாத்தா…. அருகே பேத்தி. பேத்திக்கே வயது நாற்பது இருக்கும்.