வெண்முரசு இருகடிதங்கள்

Ellora - Mahabhatara
[மகாபாரதம்- வாழ்க்கையளவே பெரிய போர்- எல்லோரா]

அன்புள்ள ஜெ,

நலமாக இருக்கிறீர்களா?

உண்மையில் பெருமகிழ்வுடன் இதை எழுதுகிறேன். சிறுவயதில் மகாபாரத கதைகளைப் படிக்கும்போது பல சந்தேகங்கள் எழும். வியூகங்கள் எப்படி இருக்கும். , ஹஸ்தினபுரியின் அமைப்பு, கதைமாந்தர்கள் எப்படிப் பேசியிருப்பார்கள், குருகுலங்களில் எவ்வாறு கல்வி கற்பித்திருப்பார்கள் என பலவாறு கேள்விகள். பிறகு கற்பனையில் மூழ்கி அதில் கிடைக்கும் அரைகுறை பதில்களை வைத்து சற்று ஆறுதல் கொள்வேன். ஆனால் என் வாழ்நாளில் மகாபாரதத்தை இவ்வளவு விரிவாக – முக்கியமாக எல்லையற்ற வாசின்பத்துடன் வாசிப்பேன் என கனவிலும் நினைத்ததில்லை. பெரும் பரவசத்துடனும் மனநிறைவுடனும் வாசித்துவருகிறேன். ஒவ்வொரு பகுதியும் ஒன்றையொன்று மிஞ்சி வருகிறது. தத்துவத்தில் ஆர்வம் கொண்ட வாசகனுக்கு கல்வி கற்பிக்கும் பகுதிகள் குறிப்பாக வண்ணக்கடலில் துரோணர் அர்ஜுனனுக்கு கற்பிக்கும் இடம், கிருபர் – அர்ஜுனன் உரையாடல், உச்சகட்டமாக இளநாகன் சமணத் துறவியிடம் துடுக்குரைத்து பின்னர் அவர் சொல்லும் அறவுரையை கேட்பது – என வாசிப்பது பெரும் ஆனந்தத்தை அளித்தது. உண்மையில் இப்படி சில இடங்களை மட்டும் சுட்டிக் காட்டுவது சரியானதல்ல என்றாலும் , ஒரு பதின்பருவ வாசகனாக இவ்விடங்கள் என்னை மிகவும் கவர்ந்தவை.

ஆனால், மிக முக்கியமாக நான் கருதுவது, உள்ளும் புறமும் முடிவற்ற தூரம் செல்லும் தங்களின் எழுத்தே. பாண்டுவின் கனவிலிருந்து, நிஷாத நாட்டின் பெரும் சிற்பங்கள் வரை.. , மகாபாரத்தின் உட்சிக்கல்கள் , விதி முகூர்த்தங்கள் என கடலை கடலளவுக்கே கொள்வது போல் வெண்முரசை உருவாக்குகிறீர். பேரன்புடைய ஒரு தந்தை தனது அறிவுத்தாகம் கொண்ட பிள்ளைகளுக்கு கதை சொல்வது போலவே ஒவ்வொரு முறையும் வாசிக்கும் போது உணர்கிறேன். ஒரு நிமித்தம் போல இந்நிகழ்வைச் சாத்தியமாக்கிய சைதன்யாவிற்கு வணக்கங்கள் பல. தமிழுலகு – குறிப்பாக மூளைத்திராணியுள்ள இளம் வாசகர்கள் கொண்ட தமிழுலகு இதற்காக அவருக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது .

பொருளற்ற ஒரு இயந்திர வாழ்க்கையில் சிக்கிக் கொண்டு அல்லல்பட்டுக் கொண்டிருந்த வேளையில் ஒரு மீட்பாகவே வெண்முரசைக் காண்கிறேன். இந்த வாசிப்பின் பெருங்களியாட்டத்தில் இருந்து சற்று இறங்கிய பிறகே விரிவாக விமர்சன கண்ணோட்டத்தில் எழுத வேண்டும்.

இ.ஆர்.சங்கரன்

136973-004-E93CD713

அன்புள்ள ஜெ சார்

நான் நீலம் வாசிக்கவில்லை. அந்த மொழியும் அதிலுள்ள பித்துநிலையும் என்னால் ஃபாலோ பண்ணக்கூடியதாக இல்லை. வண்ணக்கடல் முடிய வாசித்தேன். அதன்பிறகு மீண்டும் பிரயாகை ஆரம்பித்துவிட்டேன். பிரயாகை மிகச்சிறப்பாக இருக்கிறது. அதன் கதையின் வேகமும் நுட்பமும் மனசைக்கவர்க்கின்றன. சிக்கவீர ராஜேந்திரன் மாதிரி ஒரு சமநிலையான சித்தரிப்பு. கூடவே போர்க்களக்காட்சிகளில் ஒருவேகம்.

இன்றைய அத்தியாயம் சிறப்பு. மூன்றுபேருடைய [அர்ஜுனன் தர்மன் பீமன்] குணச்சித்திரங்களின் வித்தியாசத்தை அற்புதமாகத் தீட்டிக்காட்டியிருக்கிறீர்கள். அவர்கள் டீன் ஏஜ் க்கே உரிய கொந்தளிப்பும் மோதலும் கொண்டு பேசிக்கொள்கிறார்கள். அதன்பிறகு அவர்கள் போகும் இடம் முக்கியமானது. ஒருவன் தாசி வீட்டுக்கு ஒருவன் காட்டுக்கு ஒருவன் சதிரங்கம் விளையாடப்போகிறார்கள்.

அவர்கள் பேசிப்பேசி சிக்கலாக ஆக்கிவைத்திருக்கும் விஷயத்தை விதுரர் வந்து ஒரே நிமிடத்தில் பல தனிப்பிரச்சினைகளகாப்பிரித்து எளிமையாக்கி ஒன்றுமே இல்லாமலாக்கிவிடும் இடம் அற்புதம். என் முதலாளியின் அப்பா எப்போது ஆபீஸ் வந்தாலும் இதுதான் நடக்கும். பெரியவருக்கு எண்பது வயது ஆகிறது

நான் வாழ்க்கையில் காணும் ஒவ்வொரு விஷயத்தையும் நீலம் தவிர்த்த மற்ற மகாபாரத நாவல்களில் காணமுடிகிறது. நான் அறிந்த வாழ்க்கையை வைத்து மகாபாரதத்தை விளங்கிக்கொள்கிறேன். மகாபாரதம் [வெண்முரசு]ஐ வைத்து என் வாழ்க்கையை விளக்கிக்கொள்கிறேன்

மிக்க நன்றி

ராஜேந்திரன் சின்னச்சாமி

மறுபிரசுரம்- முதற்பிரசுரம் Nov 2, 2014 at 00:02

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

முந்தைய கட்டுரைராஜாம்பாள்
அடுத்த கட்டுரைமீரா- கடிதங்கள்